மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 28 நவம்பர், 2018

மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது

கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன்றி.


காலம் மாறிடுச்சு என்ற எஸ்.ரா.வின் கட்டுரை ஒன்றை வாசித்தேன்... மாடுகள் குறித்தும் கிராமங்களில் காணாமல் போன வாழ்க்கை குறித்தும் எழுதியிருந்தார். ஆம்... அதுதான் உண்மை. இன்றைய கிராமங்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது அதன் சுயம் இழந்து வெற்றிடமாய் நிற்கிறது.

கிராமம் என்றாலே மாடு, ஆடு, கோழி, விவசாயம் என்பதாய் தான் நம் கண் முன்னே விரியும்... சிறிய கிராமம் என்றில்லை பெரும்பாலான கிராமங்களில் இன்று இவை எதுவுமே இல்லை... ஏன் பெரியவர்கள் தவிர இன்றைய தலைமுறையில் 80% பேர் கிராமங்களில் இல்லை என்பதே உண்மை. சினிமாவில் காட்டப்படும் கிராமங்கள் சில இடங்களில் இருக்கலாம்... கிராமங்கள் தன் தனித்தன்மை இழந்து விட்டன என்பதே உண்மை.

எங்க ஊரையே எடுத்துக்கலாம்...

மிகச் சிறிய ஊர்... நாலு பங்காளிகள் என்றாலும் எல்லாருமே உறவுதான்... சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் நீண்ட நாள் நீடிப்பதில்லை... மொறப்பாடு என்பதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது... அப்படியான வீடுகளுக்குள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை... சாப்பிடுவதில்லை என்றாலும் பேச்சு இருக்கும்.

அப்போது எல்லாருடைய வீட்டிலும் பசு அல்லது எருமை மாடுகள் இருக்கும்... மாடு இல்லாத வீடு என்பது அரிது. கசாலைகளும், மாட்டுக் கொட்டில்களும், கூட்டு வண்டி மொட்டை வண்டிகளும் பெரும்பாலான வீட்டில் இருக்கும்.

எங்கள் வீட்டில் கூட எனக்குத் தெரிய காளை மாடுகள் இருந்தன... எருமை மாடுகளும் இருந்தன... எங்க அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டிலேயே பிறந்த நரை எருமையும் அதன் வாரிசுகளும் எங்க வீட்டில் இருந்தன. அதில் ஒன்று வெள்ளை நிறத்திலான எருமை... மனிதர்களில் வெள்ளையாய் பிறந்தால் குறைபாடு என்பார்கள்... அப்படி எங்க ஊருக்கு அருகே இருக்கும் ஊரில் அக்கா, தம்பி இருவரும் பிறந்திருந்தார்கள். மனிதரைப் போல மாட்டிலும் குறைபாடோ என்னவோ... அது வெள்ளை எருமைதான்... எங்களுக்கு ‘வெள்ளச்சி'. வெள்ளச்சி எனக் குரல் கொடுத்தால் எங்கிருந்தாலும் 'ம்மா' என்ற எதிர் குரலோடு நம்மை நோக்கி வரும். அதை விற்கும் போதெல்லாம் நாங்க அழுத அழுகை இருக்கே... மாடும் எங்களில் ஒன்றுதான்.

எங்க வீட்டின் பின்னே மாட்டுக் கசாலை... வைக்கோல் வைத்திருக்கும் வைக்கோல் படப்புக்கள் ஊரணிக்கு அருகே இருக்கும். மாலை நேரங்களில் வைக்கோல் அள்ள படப்புக்குப் போக வேண்டும். விடுமுறை தினங்களில் மாடு மேய்த்தல் என்பது விரும்பிச் செல்லும் வேலையாக இருக்கும். அதுவும் கதிர் அறுப்புக்குப் பின்னர் என்றால் சிதறிய நெல் கதிரைப் பொறுக்கி துண்டில் போட்டு கல்லால் இடித்து உமி ஊதித் தின்பதும், கூட்டாஞ்சோறு சமைப்பதும் என இப்போது நினைத்தாலும் மனசு குதியாட்டம் போடும் நிகழ்வுகள் அவை.... அதையெல்லாம் மறக்க முடியுமா..?

கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த போது வீட்டில் எருமைகளை வைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கிறது... ஒரு ஆள் தேவைப்படுது மேய்ப்பதற்கு... தினமும் ஒருவரிடம் சொல்லி விட முடியாது... காணாமல் போனால் தேடிப்பிடிப்பது சிரமமாக இருக்கிறது என அம்மா சொல்ல ஆரம்பிக்க, எருமைகள் வாழ்ந்த கசாலைக்குள் பசுக்கள் குடிபுகுந்தன.

கோழிகளைப் பொறுத்தவரை எல்லார் வீட்டிலும் கோழிக்கூடு இருக்கும்... அதில் நிறைய நாட்டுக்கோழிகளும் இருக்கும். எங்க வீட்டில் நூறு கோழிகளுக்கும் மேல் இருந்தது. எங்க அண்ணனின் திருமண வீடியோவில் ஆரம்பமே எங்களது இரட்டைச் சேவல்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருப்பதில்தான் ஆரம்பிக்கும்... இரண்டும் மயில் போல் இருக்கும் அவ்வளவு அழகாய்... கோழிகள் குஞ்சு பொறித்து இருக்கும் போது கரையானுக்காக வயல்களுக்குள் காய்ந்த சாணிகளைத் தேடி சென்ற நாட்கள் இன்னும் இளமையாய்.

கோழிகளுக்கு சீக்கு வராமல் இருக்க சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் மாட்டாஸ்பத்திரியில் போய் ஊசி போட்டு வருவோம்... அப்படியும் சீக்கில் அள்ளிக் கொடுத்து விடுவோம். அப்போது இப்ப போல விலை இல்லை... பெரும்பாலும் விற்பதும் இல்லை. விருந்தினர் வந்தால், திருமணமான அக்கா வந்தால், திருவிழா... பண்டிகைகள் என்றால் எல்லாவற்றுக்கும் நாட்டுக்கோழி ரசம்தான். இப்ப வளர்ப்பவர்கள் எல்லாம் விற்பனையையே பிரதானமாக்கி விட்டார்கள். அடிச்சு சாப்பிடுவதைவிட அஞ்சு காசு பாக்கலாம் என்பதாய்! இன்று நாட்டுக் கோழிகளின் விலை மிக அதிகமாய்...

பசு மாடுகள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. ஊருக்குள் பெரும்பாலான வீடுகளுக்கு வர ஆரம்பித்துவிட்டன. எருமைகள் மெல்ல ஒழிந்தன. பசுவ மாட்டை வயலில் ஓரிடத்தில் கட்டிப் போட்டும் மேய்க்கலாம் என்றாலும் சில காலங்களுக்குப் பிறகு அதையும் பார்க்க முடியவில்லை என்ற புலம்பல் மெல்ல எழ ஆரம்பித்தது. காரணம் வயோதிகம். எல்லாரும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியில் செல்ல ஆரம்பித்ததும்தான்... அம்மா மட்டுமே வீட்டில் என்றாகிப் போனதே முக்கியமானதாய்! எங்க வீட்டில் பசு மாடுகளும் இல்லை என்றானது. கசாலையும், மாடுகள் தண்ணி குடித்த கல் குலுதாளியும் (தொட்டி) காட்சிப் பொருளாகிப் போனது.

இடையிடையே வெள்ளாடுகள் வளர்க்கப்படும். பின் வயலில் இருக்கிற மரங்களை எல்லாம் ஒடித்து ஆட்டுக்குப் போடுகிறார்கள் எனச் சண்டை வரும். அதன் பின் ஊர் கூட்டம். ஆடு வளர்க்கக் கூடாதென முடிவு... பின் கொஞ்ச நாள் ஆடுகள் ஒழிக்கப்படும். மீண்டும் யாரோ ஒருவர் ஒரு குட்டியைக் கொண்டு வருவார்... பின் அவன் மட்டும்தான் வளர்ப்பானா என மெல்ல மெல்ல ஊருக்குள் பல்கிப் பெருகும்... மீண்டும் பிரச்சினை... ஊர் கூட்டம்... கட்டுப்பாடு.... இப்படியாய் தான் நகரும்.

வீட்டுக்கு ஒன்று இரண்டென நாய்கள் இருக்கும். அவை எல்லாம் சில நேரங்களில் கோவிலின் அருகே சண்டை போடும். மனிதர்களைப் போல குழுவாய்ச் சேர்ந்து மல்லு கட்டும். அப்பிராணியாய் மாட்டும் நாய் அன்னைக்குச் சட்னிதான். வேடிக்கை பார்க்கும் எங்கள் கூட்டத்தில் இருந்து நாய்கள் மீது கற்கள் பறக்கும். அடிபட்டு 'வீல்' என கத்தியோட சண்டை முடிவுக்கு வரும். எங்க வீட்டில் ராஜா என்பவன் ஆள்களைக் கடிக்கிறான் என தொன்றிக்கட்டை போட்டு வளர்த்தோம். அதையும் வாயில் கடித்துக் கொண்டு ஆட்களை விரட்டியிருக்கிறான். கடித்தும் இருக்கிறான். ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா மகனின் தூக்குக் கயிற்றுக்கு இரையாகும் வரை அவனின் ஆட்டம்தான். அதன் பின் நாய் வளர்ப்பதில்லை. இப்ப என் மகன் ரோஸி என்று ஒருத்தியை வளர்த்து வருகிறான்.

ஆடு, மாடு, கோழி, நாய் என இல்லாத கிராமத்து வாழ்க்கை சுவைப்பதில்லை. அதேபோல் விவசாய காலத்து மடை மாற்றிய சண்டைகள், மாடு இறங்கிய சண்டைகள் இல்லாத கிராமத்து வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. மாலை நேரங்களில் கூ... கூவென அதக்குடிக்கி.... இதக்குடிக்கி என கிராமத்துக்கே உரிய கெட்டவார்த்தைப் பிரயோகங்களுடன் நடக்கும் சண்டைகளைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்று விவசாயமும் இல்லை... மாடுகளும் இல்லை... அந்தச் சண்டைகளும் இல்லை... குறிப்பாக அந்த மனிதர்களில் பெரும்பாலானோர் இல்லை.

மாலை நேரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் கூடுமிடம் எங்க ஊர் மாரியம்மன் கோவில். அப்போது கோவில் திண்ணை எல்லாரும் ஆட்டம் போடும் இடமாக... அங்குதான் ஆட்டம், பாட்டம், கபடி, பம்பரம், கோலிக்குண்டு, கிட்டி, நொண்டி,அடிதடி எல்லாமே நிகழும்.வீட்டிலிருந்து 'டேய் சாப்பிட வாடா' என்றும் 'வாரியா... வரவா...' என்றும் 'கூப்பிடுறது கேக்குதா இல்லையா வந்தேன் வெளக்குமாறு பிஞ்சிரும்' என்றும் குரல்கள் வந்தால்தான் ‘கண்டு பிடிச்சி விளையாடும்’ விளையாட்டு முடிவுக்கு வந்து வீடு செல்வது வழக்கம். இன்று அம்மன் கோவில் திண்ணை அடைப்புக்குள்... விளையாட பசங்க இல்லை... எல்லாமே வெறுமையாய்...

கம்மாயில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலே மணிக் கணக்கில் குளிப்போம். இன்று ஒரு ஆள் மட்டம் தண்ணீர் இருந்தாக்கூட சிலரே குளிக்கிறார்கள். பலருக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை. நான் உள்பட! என் குழந்தைகள் அதில் இறங்குவதேயில்லை.

பொதிக் கணக்கில் விளைந்த வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில். ‘ஊடு வரப்பை நல்லாக் கட்டுப்பா தண்ணியும் வெளிய போகக்கூடாது. அடுத்த வயக்காரன் நடந்து போக வேண்டாமா’ என்று வரப்பு வெட்டும் போது சொல்வார்கள். இன்று ஊடு வரப்பு மட்டுமல்ல சைக்கிளே போகலாம் என்றிருந்த முக்கியமான வரப்புகள் கூட இருந்த இடம் தெரியவில்லை.

வீட்டின் முன்னே கொட்டகை போட்டு பத்து பதினைந்து நாட்களாய் ஊராரும் உற்றாரும் வேலை பார்த்து திருமணம் முடிந்தும் சில நாட்கள் உறவுகள் எல்லாம் ஒன்றாய் இருந்து மகிழ்ந்தது என்னும் கிராமத்து திருமணங்கள் இப்போதெல்லாம் கிடைப்பதே இல்லை. ஆம் எல்லாமே நகரத்து மண்டபங்களுக்குள் அமிழ்ந்து விட்டன. காலக்கெடுவுக்குள் காரியத்தை முடித்து வெறுமையைச் சுமந்து வீடு செல்லும் காலமாகிவிட்டது.

தீபாவளி என்பது எல்லாரும் கூடிக் கொண்டாடி, கோவிலைச் சுற்றி ஒரே வெடிப் பேப்பர்களாகக் கிடக்க, மறுநாள் கூட்டிக் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் போட்டு பற்ற வைத்து ‘டப்... டப்...’ என வெடித்து சந்தோஷித்த நாட்கள் எல்லாமே மாறிவிட்டது. இந்த மாற்றத்தை கிராமங்களுக்குள் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் அன்று கொண்டு வந்தன. இன்றோ ஆட்களற்ற ஊரில் வெடிப்பேப்பர்களுக்கு எங்கே போவது? வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும்! வயல் வெளியிலும் கண்மாயிலும் சில வீட்டுச் சுவர்களிலும்!

பெரும்பாலானோர் ஊருக்கு வருவதில்லை. வந்தாலும் விருந்தாளி போல் தான் வந்து செல்கிறார்கள். பல வீடுகள் பூட்டித்தான் கிடக்கின்றன. சில வீடுகளில் பெரியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சில ஊரில் மருந்துக்குக் கூட ஆடு, மாடு, கோழிகள் இல்லை. அந்த வகையில் எங்க ஊரில் இருக்கும் சிலரிடம் இவை இருக்கின்றன.

பழமை போற்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் நகர வாழ்க்கை தின்ற மனிதர்கள் கிராமத்தைத் தள்ளியே வைப்போம். காவல் தெய்வங்கள் கூட காணமல் போகும் காலம் விரைவில் என்பதே நிஜம்.

கேலியும் கிண்டலுமாய்... வயலும் மாடுகளுமாய்... வாழ்ந்த தலைமுறையில் பெரும்பாலானோர் மண்ணுக்குள் போயாச்சு.... இருக்கும் சிலரும் இன்றைய வாழ்க்கை முறையை வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ளப் பழகியாச்சு.

ஊர்க்கூட்டங்களில்தான் எத்தனை சுவராஸ்யங்கள்... இப்ப திருவிழாவுக்கு மட்டுமே கூட்டம்... அதுவும் சுவராஸ்யம் இழந்து அரசியலும்... அடுத்தவன் கதையும் பேசும் இடமாகி விட்டது.

ஊருக்குள் வந்த சேலை விற்பவன், பாத்திரம் விற்பவன், பழைய சாமானுக்கு ஈயம் பூசுறவன், ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் கொடுப்பவன், கொடை ரிப்பேர்காரன், அம்மி ஆட்டுக்கல் கொத்துறவன், பாத்திரங்களுக்கு பேர் வெட்டுபவன், ரிக்கார்ட் டான்ஸ் போட வண்டியில் குடும்பத்துடன் வருபவன், பஞ்சாரம் விற்க வருபவன், ஏலம் விட வருபவன், உப்பு விற்க வருபவன், ஐஸ் வண்டிக்காரன் என எவனுமே இப்போது எட்டிப் பார்ப்பதில்லை. எங்க ஊர்ப் பக்கம் மட்டுமல்ல பெரும்பாலான கிராமங்களின் பக்கம்! காரணம் மனிதர்கள் இல்லாத ஊரில் வியாபாரம் எப்படி நடக்கும் என்பதே.

இன்னும் திருவிழாக்கள் மட்டும் உயிர்ப்புடன் இருக்கு. அன்றைய நாளில் எங்கள் ஊர் மீண்டும் தன் இளமையைப் புதுப்பித்து சந்தோஷப்படும். அடுத்த இரண்டு நாளில் மீண்டும் மயான அமைதிக்குள் ஆட்கொள்ளப்படுவோம் என்பதை அறியாமல்!

ஊருக்குள் வீடு வேண்டும் என்பதால் நாங்கள் ஊரிலும் வீடு கட்டியிருக்கிறோம். நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடத்தில் தம்பியின் புது வீடு முளைத்திருக்கிறது. எல்லாம் மாறி வருகிறது.

இதையெல்லாம் ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆம்... அது காலம் மாறிவிட்டது என்பதாய்!

உள்ளங்கைக்குள் உலகம் என சந்தோஷிக்கும் நாம் நமது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உலகத்தை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த உலகின் சிறப்புகளைச் சொல்லாமலே கிராமங்களை மெல்ல மெல்ல அஸ்தமிக்க வைத்துவிட்டோம்.

திருவிழாவுக்கு வரும் பலூன் வியாபாரி, ‘விக்கவே இல்லை சாமி இப்ப எவனும் வாங்குறதில்லை’ என்ற புலம்பலோடு கடந்து போகும் போது காற்றில் ஆடும் பலூனைப் போல கிராமங்கள் சுயம் இழந்து தவிக்கின்றன.

தலைமுறைகள் மாற்றம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது... இன்னும் சாதி, மதங்களை மட்டும் சுமந்து கொண்டு!

கிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய? முன்னாள்!?  கிராமத்தானாய் வருந்தவே முடிகிறது.

“காலம் மாறிவிட்டதுங்க”    
- 'பரிவை' சே. குமார்.