மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 9

வ்வளவு கோவில்கள்... எத்தனை சிறப்புக்கள்... வாசிக்கும் போதுதான் தெரிகிறது சிவகங்கைச் சீமையில் இத்தனை சிறப்புடைய கோயில்கள் இருப்பது... எல்லாமே வரலாற்றுடன் தொடர்புடைய கோவில்கள்... சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் கோவில்களுக்குள் இத்தனை சிறப்பா என்று யோசித்துக் கொண்டும் வியந்து கொண்டுமிருக்கிறேன்.

சனி, 13 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 8

தினம் ஒரு கோவிலுக்கான தேடல் பத்து நாளில் முடிந்து விடவில்லை. இன்னும் தொடரத்தான் செய்கிறது. ஒன்பது நகரக்கோயில்கள் என்பது எங்க மாவட்டத்தில் சிறப்பு. அதில் பிள்ளையார்பட்டி ஒன்றை மட்டுமே எழுதியிருக்கிறேன். மாத்தூரில் எல்லாம் எத்தனை அற்புதமான சிற்பங்கள்... எல்லாம் எழுதும் எண்ணமிருக்கிறது. பார்க்கலாம்... தொடர முடிகிறதாவென.

வெள்ளி, 12 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 7

தினம் ஒரு கோயில் பதிவென முகநூலுக்கு எழுதும் போது எங்கள் மாவட்டக் கோவில்கள்தான் என்பது தீர்க்கமான முடிவாக இருந்தது. இந்தத் தொடருக்கு அழைத்த நண்பர் சத்யா, திருமயம் கோவிலைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னார் என்றாலும் சிவகங்கை மாவட்டத்தின் அருகில் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் கோவிலாததால் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னேன். நேற்று அந்தக் கோவில் குறித்த வரலாறுகளை வாசிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அந்த மலையைக் கடந்து எத்தனையோ முறை பயணித்திருந்தும் ஒருமுறை கூட கோவிலுக்குச் சென்றதில்லை. இவ்வளவுக்கும் திருமயம் மலை மீது ரெண்டொரு முறை ஏறியிருக்கிறேன். விரைவில் முகநூலில் எழுதுவேன். அதன் பின் இங்கும் பகிர்வேன்.

வியாழன், 11 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 6

கோவில்களின் தேடலில் ஒன்றைக் கண்டு கொள்ள முடிந்தது. அது என்னன்னு முதல் கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். அதாவது ஒரு ஆண் தெய்வத்தின் கோவிலில் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆண் தெய்வத்தின் பெயர் மங்கி, பெண் தெய்வத்தின் பெயர் பிரதானமாகிறது. அப்படியான ஒரு கோவில்தான் இன்று பார்க்கப் போகும் கோவில்.

புதன், 10 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 5

கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் நாம் அடிக்கடி செல்லும் கோவிலாக இருந்தாலும், மக்கள் வழி வழியாகச் சொல்லும் கோவிலின் வரலாறு, சிறப்புக்களைக் கேட்டிருந்தாலும் விரிவான வாசிப்பில்தான் புராணக்கதை, வரலாறு சொல்லும் கதை என எல்லாமும் அறிய முடிந்தது.

செவ்வாய், 9 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 4

கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில் என்ற தேடலில் முதல் பதிவை விட இரண்டாவது பதிவு... அதைவிட மூன்றாவதென ஒவ்வொன்றும் விரிவாகப் போக ஆரம்பிக்கக் காரணம் இன்னும் வேறேனும் செய்திகள் இருக்கா என்ற தேடல்தான் என்பதை உணரமுடிகிறது.

திங்கள், 8 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 3

நேற்றுடன் முகநூலில் பத்துக் கோவில்களைப் பகிர்ந்து முடித்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து தொடர்ந்து அங்கு பகிரும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அங்கு பகிர்ந்தால் இங்கும்தான் தொடரும்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 2

முகநூலில் தொடரும் பத்து நாள் பத்துக் கோவில் தொடரை இன்றுடன் முடிக்க இருந்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து எழுதலாம் என்ற எண்ணம் மனசுக்குள் இருக்கிறது. இது குறித்தான தேடலில்தான் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. பெரும்பாலான கோவில்களுக்கு உண்மையான வரலாறு ஒன்றிருக்க, சாதிக்கொன்றாய் வரலாறுகளும் காணப்படுதல் அபத்தம்... இவர்கள் வரலாறுகளைத் திரித்து எழுதி பிற்காலத்தில் எந்த ஒரு உண்மையான வரலாறும் மக்களுக்குக் கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்பதே உண்மை.

சனி, 6 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 1

நான் முகநூலில் பெரும்பாலும் அதிகம் எழுதுவதில்லை... நிறைய வாசிப்பேன்... வெட்டியாய் பொழுது போக்குவதென்பது அங்கு ரொம்பக் குறைவுதான். எழுதவோ படிக்கவோ செய்யும் போது பெரும்பாலும் இளையராஜா, சமீபத்தில் தேவா இசையில் எஸ்.பி.பி. பாடிய மூன்று மணி நேரத் தொகுப்பு, நாடக நடிகர் முத்துச்சிற்பி, கிராமியப் பாடகர்கள் இளையராஜா, அபிராமியின் பாடல்களுடன் ஐக்கியமாகி விடுவதுண்டு. முகநூல் சில நேரங்களில் நமக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கவும் செய்யும். அப்படித்தான் நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான சத்யா தொடரச் சொன்ன பத்து நாள் பத்துக் கோவில் குறித்த விபரங்களைச் சொல்லும் தினம் ஒரு கோவில் அமைந்தது.

ஞாயிறு, 18 மார்ச், 2018

கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)

கல் மின்னிதழ் பங்குனி மாத மின்னிதழில் எனது ஆன்மீகக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. என்னிடம் நீங்க இதை எழுதுங்க என உரிமையுடன் கேட்டு வாங்கிப் போடும் (அட நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் வரிகள்) நண்பர் சத்யாவுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அகல் நட்புக்களுக்கும் நன்றி.
****


Picture
தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன்
தேவகோட்டைக்கு மிக அருகில் சிறுவாச்சி, வெங்களூர் சாலை பிரியும் இடத்தில் தாழையூர் கண்மாய்க்குள் இருக்கிறது இந்தக் கோவில். எங்கள் ஊருக்கு மிக அருகில், எங்கள் ஊர் வயல்களின் வழியாக... தாழையூர் கண்மாய்க்குள் போனால் கோவிலை அடைந்து சாமி கும்பிட்டுத் திரும்பலாம். எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் கோவில் தெரியும். இப்போது கருவைகள் வளர்ந்து நிற்பதால் கோவில் தெரிவதில்லை. பள்ளி படிக்கும் காலத்தில் இரவு நாடகம் (கூத்து) பார்க்கவும் வயல் வழி பாதையில்தான் பயணப்பட்டிருக்கிறோம். கல்லூரி காலத்தில் சைக்கிளில் ரோட்டு வழியாகச் செல்வோம். கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் என்று நீட்டி முழங்குவதெல்லாம் இல்லை எங்கள் பகுதி மக்கள்... எங்களுக்கு அவள் கூத்தாடிச்சியம்மன்தான். கூத்தாடிச்சி நீ இருந்தாக் கேளு என்று முடியும் சண்டைகள் ஏராளம். அவள் எல்லாரையும் காக்கும் தெய்வம் என்பதால் நீ இருந்தாக் கேளு என்ற வாசகத்தை தன் புன்னகைக்குள் அடக்கிக் கொள்வாள்.

தாழையூர் கண்மாய்... இப்படி எழுதுவது கூட ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்கு ஏன்னா பரியன்வயல் அப்படிங்கிற எங்க ஊரையே பரியமயல் என்றும் தேவகோட்டையை தேவட்டை என்றும் கண்டதேவியை கண்டேவி என்றும் சொல்லிப் பழக்கப்பட்ட பயலுக நாங்க.. அட்சர சுத்தமா எழுதுறதெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை எனவே நம்ம பேச்சு வழக்குக்கு மாறிக்கிறேங்க. தேவ கோட்டையை ஒட்டிய தாழக்கம்மாயின் நுனிப் பகுதியில் ஒரு மேடு அமைத்து அக்காலத்தில் கோவில் கட்டியிருக்கிறார்கள். அந்த மேட்டுப் பகுதிக்கு வாரியான கம்மாய்ப் பகுதியைத் தாண்டித்தான் போக வேண்டும் என்பதால் சிறியதாய் ஒரு பாலமும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். தற்போது கோவிலுக்குப் பிரியும் ரோட்டில் கோவில் பெயரில் ஒரு வளைவு வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் இடதுபுறமாக சீர்படுத்தப்பட்ட கண்மாய்க் கரையில் உள்ள ஆலமரத்தின் அடியில் முனீஸ்வரர் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டு அம்மனைக் காணச் செல்வோரும் உண்டு... அம்மனைக் கண்டு விட்டு அவரை வணங்க வருவோரும் உண்டு.

கோவில் என்றால் அதற்கென்று ஊரணி ஒன்று இருக்க வேண்டும் இல்லையா... அதனால் தாழக்கண்மாய்க்குள் இருக்கும் கோவிலின் கிழக்குப் பகுதியில் சிறியதாய் இரு ஊரணி... அதற்கு கல் படிக்கட்டு... இரண்டு படித்துறைகள்... ஒன்று கோவிலுக்கு முன்னே... மற்றொன்றோ ஐயனார் சன்னதிக்கு எதிரே... கோவிலுக்கு முன்னே இருக்கும் படித்துறையில் இறங்கி கால் கழுவி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதையே பக்தர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்.

அரச மரத்துப் பிள்ளையாரை வணங்கிப் பின்னரே அம்மனையும் அதன் பின் ஐயனாரையும் வணங்குவதை முறையாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாக் கோவிலிலும் முதல் வணக்கம் முதல்வனுக்குத்தானே. இது ஒரு கிராமத்துக் கோவில் என்றாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல வரலாறு இருப்பது போல் இந்தக் கோவிலுக்கும் வரலாறு உண்டு.

இக்கோவில் உசுலாவுடைய ஐயனார் கோவிலாகத்தான் இருந்திருக்கிறது. ஐயனார் தனது துணைவிகளுடன் கிழக்குப் பார்க்க அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் கோவில்கள் எல்லாமே கிழக்கு முகமாகத்தான் இருக்கின்றன இல்லையா?  

Picture
(சப்த கன்னிமார் எழுவர்)
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியான ஒரு திருவிழா நாளில் கூத்தாட வந்த இளம்பெண்தான் பெரியநாயகி. அவளின் அண்ணனும் நடிகர்தான். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கூத்துக் கொட்டகையில் இருந்து கம்மாய்க்குள் போயிருக்கிறாள். போனவளைக் காணவில்லை எனத் தேடிய அண்ணன்காரன், அவள் திரும்பி வந்தபோது அவசரப்பட்டு சந்தேகத்தில் எங்கே போனாய்? யாருடன் போனாய்? என வார்த்தைகளை விட, பெண் பிள்ளை அல்லவா சொல் பொறுக்கவில்லை.

தன் மீது சந்தேக விதை விழுந்த பின்னர் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில் கோபத்திலும் வேகத்திலும் கம்மாய்க்குள் நின்ற ஒரம்பா மரத்தில் தூக்கில் தொங்கினார், கூத்தாட வந்த இடத்தில் சந்தேகத் தீயால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தெய்வமாக்கிவிட்டார்கள் அப்பகுதி மக்கள்.

பெரிய கருவறைக்குள் இரண்டு சிறிய கருவறைகள் ஒன்றில் ஐயனார் கிழக்குப் பார்க்க இருக்க, மற்றொன்றில் அம்மன் தெற்கு நோக்கி இருக்கிறாள். அம்மனின் பார்வையே பிரதான வாசலாய் மாறிப் போய்விட்டது. ஐயனார் கோவிலென்றாலும் அம்மன் பெயர்தான் வழங்குகிறது. புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே அபிஷேகம்... மற்ற விஷேச தினங்களிலும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஐயனாருக்கே... ஐயனாருக்கு அபிஷேகம் முடிந்த பின்னர் அம்மனுக்கும் ஐயனாருக்கும் தீபாராதனை நடைபெறும். ஐயனார் கற்சிலை அம்மனோ மரத்தினால் செய்யப்பட்டவள். இடது புறம் தலை சாய்ந்து கூத்தாடும் நிலையில் இருக்கும் அம்மனின் கழுத்தில் சுருக்குக் கயிறும் இருப்பதாய் சிலை வடித்திருக்கிறார்கள். அலங்காரம் இல்லாது இருக்கும் அம்மனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டினால் இதைப் பார்க்கலாம். மரத்தினாலான சிலை என்பதால் அம்மனுக்கு சந்தனக் காப்பு மட்டுமே. அபிஷேகம் எல்லாம் ஐயனாருக்கே.

இப்போது கோவில் மண்டபங்கள் எழுப்பப்பட்டு அரசமர பிள்ளையார் கூட மண்டபத்துக்குள் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். தற்போது அம்மனுக்கும் ஐயனாருக்கும் தனித்தனியே இராஜகோபுரம் கட்டுகிறார்கள்.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது படிக்கும் இடம் இந்தக் கோவில்தான். அப்போது மண்டபங்கள் எல்லாம் இல்லை. டானாப்பட ஒரு கட்டிடம் இருக்கும். அதில் சப்த கன்னிகள் சிலைகள் இருக்கும். அங்குதான் அமர்ந்து படிப்பது வழக்கம். பகல் நேரத்தில் அமைதியாய், எந்தத் தொந்தரவும் இல்லாமல் படிக்கச் சிறந்த இடம். கல்லூரியில் படிக்கும் போது நானும் எனது நண்பர்கள் சேவியரும் அண்ணாத்துரையும் படித்தது இங்குதான்.   

Picture

புதன், சனி மாலை வேளைகளில் பரபரப்பாக இருக்கும் இக்கோவில் மற்ற நாட்களில் ஒரு கிராமத்துக் கோவிலுக்கே உரிய அமைதியைத் தாங்கி இருக்கும். காவல் தெய்வங்களான பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், காளி, சன்னாசி, இடும்பன் என நிறையத் தெய்வங்கள் உண்டு. காளி சுவரில் புடைப்புச் சிற்பமாக இருந்து பின்னாளில் கற்சிலையாக மாற்றப்பட்டிருக்க, இப்பவும் கற்சிலைக்குப் பின்னே புடைப்புச் சிற்பம் இருக்கிறது. தேவகோட்டையில் இருந்து நடந்தே போய் வரும் தூரம்தான்... புதன், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் சைக்கிள், வண்டிகள், கார்களிலும் இக்கோவிலுக்கு வருவார்கள். 5.30 மணிக்கு நடக்கும் அபிஷேகமும் அதன் பின்னான தீப ஆராதனையும் காணவே கூட்டம் வரும். அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் அந்த நாட்களில் நின்று செல்லும். தேவகோட்டையில் சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் தவறாது இந்த இரண்டு நாட்களும் கோவிலுக்கு வருவார்கள்.

இந்தக் கோவிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய பொட்டலில் நாடகமேடை கட்டியிருக்கிறார்கள். கோவிலில் எப்போது நாடகம் வைத்தாலும் முதலில் அம்மனின் வம்சாவழியினரான கம்ப நாட்டிலிருந்து ஒருவர் வந்து மேடை ஏறி அம்மனைப் பற்றி பாடி ஆடிய பிறகே நாடகம் தொடரும்.

இந்தக் கோவிலில் நேர்த்திக்கடனாக மாடுகள் விடப்படும். கிட்டத்தட்ட முன்னூறு நானூறு மாடுகள். அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் மாடுகள் கூட்டமாய் விருப்பப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கின்றன. எப்போதேனும் கோவில் பக்கம் வருவதுண்டு. இந்த மாடுகளால் எங்கள் பகுதி விவசாயம் அழிந்த கதையை என் மனசு தளத்தில் எழுதியிருக்கிறேன். ஒருமுறை கண்டதேவி ஆட்கள் மாடுகளை விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அதன் பின் அவர்கள் விவசாயம் செய்த இரண்டு கம்மாய்ப் பாசன நிலங்களில் விளைச்சல் இல்லை என்பதை எங்கள் பகுதி கண்கூடாகப் பார்த்தது. இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்னே இருக்கும் ஈச்ச மரத்தில் நம் எண்ணம் ஈடேற முடிச்சிப் போட்டு வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். சில விஷயங்களில் நானும் கண்டிருக்கிறேன். நம் எண்ணம் நிறைவேறிய பின்னர் ஏதேனும் ஒரு முடிச்சை அவிழ்த்து விட்டால் போதும். சிவராத்திரிக்கு கருப்பர் பூ இறங்குதல், காவடிகள் என மதியம் மூன்று மணி வரை கோவிலில் கூட்டம் அலைமோதும். நாட்டார்கள் மேற்பார்வையில் இருக்கும் கோவில் இது. இப்பகுதியில் இருக்கும் பலருக்கு இக்கோவில் குலதெய்வம். மனிதர்களை தெய்வமாக்கிப் பார்த்து வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று. இதேபோல் சமீபத்தில் உதயமாகி, மிகப் பிரபலமான இடையங்காளி கோவிலும் மனிதரை தெய்வமாக்கி வழிபடும் கோவில்தான். கூத்தாடிச்சியைப் பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி ஈர்ப்பதை உணரலாம்.

Picture

ஒரு காலத்தில் படிக்கிறேன் என கிடையாகக் கிடந்த கோவில். இப்போது ஊருக்குப் போகும் போது தவறாமல் அம்மன் தரிசனம் செய்து விடுவது வழக்கம். முன்பு இடிந்த நிலையில் மண் மூடிய பழைய கோவிலும் அப்படியே இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி கோவிலுக்கான இடத்தை அகலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியில்தான் தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற அருணகிரிப்பட்டினம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இருக்கிறது.
 
தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் இக்கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து வாருங்கள்.

(அம்மன் படம் மனைவி வாட்ஸ்-அப்பில் அனுப்பியது மற்ற படங்கள் தேனக்காவின் சும்மா தளத்தில் சுட்டவை - நன்றி) 
*************  

முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை 'தோஷம்' பிரசுரமாகியிருக்கிறது. முடிந்தவர்கள் முத்துக்கமலத்தில் வாசியுங்கள். கதைக்கான இணைப்பு கீழே.

-'பரிவை' சே.குமார்.

புதன், 13 ஏப்ரல், 2016

அகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு (தொடர்ச்சி)

முதல் பகுதி வாசிக்காதவர்கள் கீழிருக்கும் சுட்டியைச் சொடுக்கி வாசியுங்கள்...


கட்டுரையை அகலில் வாசிக்க...    ஆன்மீகம்

***
(தெப்பக்குளம் பக்கமிருந்து எடுக்கப்பட்ட காளீஸ்வரர் கோவில் கோபுரம்)
கோவிலின் சொத்துக்கள் சுவர்ணகாளீஸ்வரர் பெயரில் இருப்பதாவும் திருவிழாக் காலங்களில் சோமேசுஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மூர்த்திகள் திருவீதி உலா வருவதாகவும் நெய்வேத்தியம் படையல் எல்லாம் சுந்தரேஸ்வரருக்கு செய்யப்படுவதாகவும் கோவில் குறித்தான செய்திகளில் காணமுடிகிறது. இங்கு பிறப்பதும் இறப்பதும் முக்தி என்று சொல்லப்படுகிறது. மேலும் காளீஸ்வரரை வணங்கினால் நம் முந்தைய வினைகள் எல்லாம் விலகும் என்றும் சொல்கிறார்கள். இங்கு சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) உள்ளது. இதன் காரணமாக இங்கு தரிசனம் செய்தால் ஆயிரம் சிவாலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறது வரலாறு. இந்தக் கோவிலில் தங்கத்தாலான பள்ளியறை இருக்கிறது. தேவாரம் பாடப்பெற்ற 274 சிவதலங்களில் இது 200வது தலமாகும். கோவிலின் உள்ளே முத்து வடுகநாத சேதுபதி மற்றும் மருது சகோதர்களுக்கு சிலைகள் இருக்கின்றன.

இந்தக் கோவிலின் இராஜகோபுரத்தில் ஏறிப் பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். இதன் காரணமாகவே 'மருதைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வர்றதைப் பாருங்கடி..' என்ற நாட்டுப்பாடல் இருக்கிறது. இது சிவகங்கை சீமை என்ற படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல் எங்கள் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் இராஜகோபுரத்தில் ஏறிப்பார்த்தால் காளையார்கோவில் காளீஸ்வரரின் இராஜகோபுரம் தெரியும். இது அந்தக்கால கட்டிடக் கலைக்கு சான்றாகும். இப்போது தெரியுமா என்று கேட்டால் ஏறிப் பார்த்தால் தெரியலாம்... ஆனால் இப்போது எல்லாரையும் ஏற விடுவதில்லை. சிறுவயதில் கண்டதேவி கோவில் கோபுரத்தில் ஏறி இருக்கிறோம். கல்லூரியில் படிக்கும் போது என்.எஸ்.எஸ் பணிக்காக காளையார்கோவில் சென்றபோது பாதி வரை ஏறியதாகவும் அதற்குள் ஆசிரியர் சத்தமிட்டு இறங்கி வரச் சொன்னதாகவும் நண்பர்கள் சொன்னார்கள்.

இனிக் கொஞ்சம் கோவிலுடன் சம்பந்தப்பட்ட வீர வரலாற்றையும் பார்போமே... வெள்ளையரைப் பார்த்து 'யாரைக் கேட்கிறாய் வரி..' என கட்டப்பொம்மன் சொல்வதற்கு முன்னர் 'வரி என்று கேட்டால் வாய் கிழிக்கப்படும்...' என்று சொன்னவர்தான் சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாத சேதுபதி, அவரின் மனைவிதான் ஜான்சிராணிக்கு முன்னரே வெள்ளையரை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரப்பெண்மணி ராணி வேலு நாச்சியார். இவர்களின் படைத் தளபதிகளாய் இருந்து முத்துவடுகருக்குப் பிறகு ராணி வேலுநாச்சியாரின் ஆட்சியில் அவருக்கு உறுதுணையாய் இருந்து வெள்ளையரை ஆட்டம் காண வைத்தவர்கள்தான் வீரம் செறிந்த மருது சகோதரர்கள்.

(மன்னர் முத்து வடுகநாத சேதுபதி மற்றும் ராணி கௌரி நாச்சியார் அடக்கம் செய்யப்பட்ட இடம்)
காளீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது முத்துவடுகரும் அவரது இரண்டாவது மனைவி கெளரி நாச்சியாரும் ஆங்கிலேயரால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். அஞ்சி ஒளியாமல் ஆக்ரோஷமாய் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட முத்து வடுகரை வெள்ளையர் தளபதி பான்சோர் என்பவன் ஒளிந்திருந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட. அதைப் பார்த்த ராணி கௌரி நாச்சியார் மன்னரைக் காக்கும் விதமாக குறுக்கே பாய குண்டு அவர் மீது பாய்ந்து மண்ணில் சாய்க்க, அடுத்த குண்டில் மன்னரையும் மண்ணில் சாய்த்து விடுகிறான். செம்மண் பூமியான சிவகங்கை சீமை அவர்கள் இருவரின் ரத்தத்தால் இன்னும் சிவப்பானது என்கிறது வரலாறு.

அதேபோல் வெள்ளையரின் சூழ்ச்சியில் சிக்குண்டு தாங்கள் உயிரோடு இருந்தால்தான் போராட்டத்தில் வெல்ல முடியும் என சிவகங்கை காடுகளில் (அப்போது மிகப்பெரிய அளவில் காடு பறந்து விரிந்து கிடந்திருக்கிறது) மருதிருவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வராவிட்டால் காளையார்கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என ஆங்கிலேயர்கள் மிரட்டஎங்கள் உயிரை இழப்போமே ஒழிய, எங்கள் கோவிலை ஒருபோதும் இடிக்க விடமாட்டோம் என வெளியில் வந்து சரணடைந்தார்களாம். ஆங்கிலேயர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருதிருவரையும் தூக்கிலிட்டு இருக்கிறார்கள். பெரிய மருதுவை தூக்கிலிட்ட போது பலமுறை கயிறு அறுந்தாகச் சொல்கிறார்கள். வேகமும் விவேகமும் நிறைந்த சின்ன மருதுவோ 'என்னை தூக்கிலிட நீ யார்..? எனக்கு நானே இட்டுக் கொள்கிறேன்...' எனச் சொல்லி தனக்குத்தானே தூக்கிட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இறந்தபின் தங்களை காளீஸ்வரர் சன்னதிக்கு நேரே  புதைக்க வேண்டும் என்ற அவர்களின் இறுதி ஆசையின்படி தலையை மட்டும் வெட்டி எடுத்து வந்து சின்னக் கோபுரத்திற்கு நேர் எதிரே புதைத்த வெள்ளையர், உடம்பை திருப்பத்தூரில் புதைத்தார்களாம்.

காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் கொல்லங்குடி வெட்டுடைய காளி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலு நாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான்... தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார். ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை வெட்டு உடைய காளியாக அந்தப் பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தனர். கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது.
(மருது சகோதரர்கள்)

மேலும் மறவர்படை தங்க வைக்கப்பட்டிருந்த இடம்தான் காளையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் மறவர் மங்களம் (இப்போது மறவமங்களம்) என்ற ஊர். வெள்ளையருக்கு எதிரான போரில் இந்த ஊரில் இருந்த வீரர்கள் நிறையப் பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் நினைவாக இந்த ஊரில் ஒரு ஊரணி வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊரணிக்குப் பெயர் 'குழு மாண்ட ஊரணி' என்பதாகும். இன்றும் அந்த ஊரணி வரலாற்றின் சாட்சியாக மறவமங்களத்தில் இருக்கிறது.


இதேபோல் கொல்லங்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் குறுக்கத்திகாளையார் கோவிலுக்கு மருது சகோதரர்கள் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்தியபோது தேர் ஓடவில்லையாம். எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை என்றபோது என்ன பிரச்சினை இதை எப்படி சரி செய்வது என்று மருது சகோதரர்கள் ஆலோசனை செய்த நேரத்தில் கொல்லங்குடி காட்டுக்குள்ளே இருக்கும் குறுக்கத்தி கண்மாயில் வீரமுத்து ஆனந்தசாமி என்ற சித்தர் இருக்கிறார் என்றும் அவர் வந்தால் சரி செய்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்து வந்த சித்தர் என்பவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மனிதர்தான்அந்தச் சித்தரும் தேர்ச் சக்கரத்தில் இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து நீக்கி, அங்கு ஒரு கவியும் பாடியிருக்கிறார். அதன் பின்னரே தேர் ஓடியிருக்கிறது. 

ஓடாமல் நின்ற தேர் ஓடிய மகிழ்ச்சியில் பெரியமருது என்ன வேண்டும் கேள் என்று சித்தரிடம் கேட்டதற்கு இப்போது நாங்கள் இருக்கும் குறுக்கத்தி கண்மாய்ப் பகுதியை எனக்கு எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுக்க, குறுக்கத்தி கிராமம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர் சில காலம் வாழ்ந்த அந்த சித்தர் தம் மக்களிடம் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதனால் இன்று வரை அந்தக் கிராமத்தில் எந்தக் கோவிலும் இல்லை என்பதை அந்தக் கிராமத்தில்... அந்த சித்தரின் பரம்பரையில் பிறந்த... எனக்கு மிகவும் தெரிந்த அண்ணன் ஒருவர் சொன்ன போது நம் மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமமா என்று ஆச்சர்யமாக இருந்தது. அது என்ன குறுக்கத்தி என்றால் குறுக்கத்தி என்பது ஒருவகைப் பூவாம்... சங்க காலத்தில் இருந்திருக்கிறது... இந்தப் பூ குறித்து புறநானூற்றில் பாடல் இருப்பதாகவும் அவர் சொன்னார்.


இப்படி அரண்மனைச் சிறுவயல், தேவகோட்டையில் இருக்கும் சங்கரபதிக்கோட்டை என இன்னும் நிறைய ஊர்கள் இந்த வரலாற்றோடு தொடர்பில் இருந்திருக்கின்றன. மற்ற வரலாறுகள் பலவும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு இந்த வீரவரலாறு கொண்டு செல்லப்படாததன் காரணம் தெரியவில்லை. இப்போதுதான் பலர் வேலுநாச்சியார் குறித்தும் மருது சகோதரர்கள் குறித்தும் நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வரலாற்றைப் பேசினால் இன்னும் போய்க் கொண்டே இருக்கும் அப்புறம் இது ஆன்மீகப் பதிவாக அல்லாமல் வரலாற்றுப் பதிவாக மாறிவிடும்.

முத்து வடுகநாத சேதுபதியும் மருது சகோதரர்களுமே இந்தக் கோவிலை செப்பனிட்டுக் காத்தார்கள் என்றும் மருது சகோதரர்கள்தான் இரண்டு கோபுரங்களையும் கட்டியவர்கள் என்றும் ஆரியர்களின் வரவுக்குப் பின்னர் பல கோவில்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டன என்றும் அப்படித்தான் காளையார்கோவிலின் வரலாறும் மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டது என்றும் கொல்லங்குடி காளியின் வரலாறு கூட மாற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றும் மருதுபாண்டியர் குறித்த ஆய்வில் இருக்கும் குறுக்கத்தியைச் சேர்ந்த அண்ணன் கூடுதல் விவரங்களோடு சொன்னார்.

எது எப்படியோ வரலாறுகள் மாற்றி மாற்றிச் சொன்னாலும் சிவகங்கை மண்ணில் பிறந்த நாங்கள் அறிந்த வரலாற்றின்படி ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரம் செறிந்த மறவர்கள் வாழ்ந்த பூமியில் விண்ணைத் தொடும் இராஜகோபுரத்துடன் மூன்று சிவன்களை தன்னுள்ளே வைத்து வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் வீரத்தை இன்றுவரை நமக்கெல்லாம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திருக்கானாப்பேர் என்னும் காளையார்கோவில். இக்கோவில் சைவ மதத்தின் அடையாளமாக மட்டுமில்லாமல் ஒரு வீரம் செறிந்த தமிழினத்தின் போராட்ட வரலாற்றைத் தாங்கி உயர்ந்து நிற்கிறது. இன்றைய தமிழர்களாகிய நாம் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க தவறி வருகிறோம்... பல சின்னங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன... வீர வரலாறுகளை எல்லாம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களிலாவது பண்டைய வரலாற்றுச் சின்னங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முயற்சிப்போம்.


கதை, கவிதை என்றால் என்னால் எப்படி வேண்டுமானாலும் கிறுக்க முடியும் ஆனால் ஆன்மீகம் என்னும் போது... அதுவும் இதுவே எனது முதல் ஆன்மீகக் கட்டுரை என்பதால் வரலாற்றுப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இருந்தால் மன்னியுங்கள். நான் அறிந்த செய்திகளுடன் இணையத்தில் வாசித்த செய்திகளை வைத்து ஆரம்பித்து மருதுபாண்டியர் குறித்த வரலாற்றை மிக விரிவாக எழுதும் பொருட்டு அதற்கான முயற்சியில் இருக்கும் அண்ணனிடம் போனில் நீண்ட நேரம் பேசி... பேசி என்பதைவிட அவரை தொந்தரவு செய்து பெற்ற செய்திகளைக் கொண்டு என்னால் முடிந்தளவுக்கு எழுதியிருக்கிறேன். இதுவும் நண்பர் சத்யாவின் வேண்டுகோளுக்காக எழுதியதுதான் இது. ஆனாலும் இதற்கான தேடல் எனக்கு நிறைய ஆச்சர்யங்களைக் கொடுத்தது. இன்னும் இதுபோன்ற கோவில்கள் குறித்து அறியும் ஆர்வத்தையும் கொடுத்ததிருக்கிறது என்பதே உண்மை. 


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு

அகல் மின்னிதழ் நண்பர் சத்யா கேட்டதற்கு இணங்க எழுதிய முதல் ஆன்மீகக் கட்டுரை. அவர் கேட்டபோது தயக்கமாக இருந்தாலும் எங்கள் மாவட்டத்தில் வீர வரலாற்றைச் சுமந்து நிற்கும் கோவில் குறித்து என்றதும் முயற்சிக்கலாம் என்று எழுதியதுதான் இது. கொஞ்சமாய் ஆன்மீகமும் நிறைய வரலாறும் கலந்து எழுதிய கட்டுரை இது. இன்னும் நிறைய எழுத நினைத்து ஏழு பக்கத்துக்கு மேலாகிவிட்டதால் தேவையில்லாதவற்றை நீக்கி அவருக்கு அனுப்பினேன். ஏப்ரல் மாத அகல் தமிழ்ப் புத்தாண்டு இதழில் வெளிவந்திருக்கிறது. இதுவரை எட்டிப் பார்க்காத ஒரு களம்,.. தவறுகள், பிழைகள் இருக்கலாம்... இருந்தால் சொல்லுங்கள் என்னைத் திருத்திக் கொள்ள உதவும்...
************
அகலில் மின்னிதழை முழுவதும் வாசிக்க...


அகலில் என் கட்டுரையை தனியாக வாசிக்க...


நன்றி சத்யா...

-------------------------------------------

இனி பதிவுக்குள் செல்வோமா...


வீர வரலாற்றைச் சுமந்து நிற்கும் காளையார் கோவில்

செம்மண் பூமியான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களில் முதன்மையானது காளையார் கோவில். சிவகங்கை சமஸ்தானத்தை சசிவர்ணத்தேவர் ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு இரண்டாவது மன்னராக அரியணை ஏறியவர் வெள்ளையரை எதிர்த்துக் குரல் கொடுத்த முத்துவடுகநாத சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் மிகப்பெரிய சந்தையாக இருந்திருக்கிறது. இங்குதான் தொண்டி மார்க்கமாக கொண்டு வரப்படும் குதிரைகள் உள்பட ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரிய வீர வரலாற்றை தன்னுள்ளே வைத்திருக்கும் காளையார் கோவிலைச் சுற்றிலும் விவசாயத்தை நம்பி வாழும் கிராமங்கள் நிறைந்திருப்பதால் இந்த ஊர் இன்று வரை நகரத்தின் தன்மையை  இன்னும் முழுமையாக உள்வாங்காமல் நகரமும் கிராமமும் கலந்த கலவையாகத்தான் இருக்கிறது.
 
கோவில் நகரம் என்றால் அது கும்பகோணம்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தளவுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களைக் கொண்ட நகரம் அது என்றபோதிலும் நம் தமிழகத்தில் கோவில்கள் இல்லாத நகரம் இல்லவே இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேபோல் உலகச் சிறப்புமிக்க, வரலாற்று சிறப்பு மிக்க பல கோவில்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்றன என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றில் குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், குன்றக்குடி முருகன், நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள், தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி பெருமாள், கொல்லங்குடி காளி, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள், சிங்கப்புணரி சேவுகப்பெருமாள், தேவகோட்டை சங்கரப்பதி  முனீஸ்வரர் என நீளும் இந்தப் பட்டியலில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இளையாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இன்னும் பல கோயில்களைச் சேர்க்கலாம். 

காளையார் கோவில்: சிவகங்கைக்கு கிழக்கே 16 கி.மீ தூரத்திலும் தேவகோட்டைக்கு மேற்கே 35 கி.மீ தூரத்திலும் மதுரைக்கு தென்கிழக்கே (மதுரை - தொண்டி சாலையில்) 66 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக இராமேஸ்வரம் செல்லும் இரயில் பாதையில் இருக்கும் நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 ப்கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தொண்டி, இளையாங்குடி, பரமக்குடி, மதுரை என எல்லா இடத்திலும் இருந்து பேருந்து வசதி இருக்கிறது.

சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் இருக்கும் காளீஸ்வரர் கோவில், தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய கட்டளையின் பேரில் தினமும் ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவகங்கை சமஸ்தானத்தில் மிகப்பெரிய கோபுரமாக இருக்க வேண்டும், அதிலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரிய வேண்டுமென மருது சகோதரர்கள் பார்த்துப் பார்த்து கட்டிய இராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் 157 அடி உயரத்தில் பிரமாண்டமாய் நிற்கிறது. இதற்காகவே நிறைய இடங்களில் மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து எதுவும் சரியில்லாத நிலையில் மானாமதுரைக்கு அருகிலுள்ள கருமலையில் மண்ணெடுத்து செங்கல் சுட்டுப் பார்த்து, அது உறுதியானதாக இருக்கவே அதை வைத்துக் கட்டினார்கள் என்பது வரலாறு. இன்றும் எங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை செங்கலுக்கு மதிப்பு கூடுதல். பெரிய கோபுரத்து அருகில் ஐந்து நிலை கொண்ட சிறிய கோபுரம் ஒன்றும் இருக்கிறது. சிறிய கோபுரத்தின் நேரேதான் மூலவர் காளீஸ்வரரின் சன்னதி அமைந்திருக்கிறது. இரண்டு கோபுரங்களும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

Worship Timings of Kalayarkoil Temple

சிறிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியன் கட்டினார் என்று சொன்னாலும் இரண்டு கோபுரங்களுமே மருது சகோதரர்களால் கட்டப்பட்டவையே என்றும் ஒரு சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ நாலு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் இக்கோவிலின் உள்ளே உட்பிரகாரம், வெளிபிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன. இங்கிருக்கும் மூன்று சந்நதிகளில் முறையே சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லித் தாயார், சோமேஸ்வரர் - சௌந்தரநாயகி, சுந்தரேஸ்வரர் - மீனாட்சி  ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சிவன் மூன்று கோலத்தில் வீற்றிருப்பது உலகில் வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாத அற்புதம். மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் தேவாரப் பாடல் பாடப்பெற்ற மூலவர், சுயம்புவாய்த் தோன்றிய சொர்ணகாளீஸ்வரர். அவருக்கு வலது பக்க சன்னிதியில் சோமேஸ்வரரும் இடது பக்க சன்னிதியில் சுந்தரேஸ்வரரும் இருக்கிறார்கள். இந்த மூன்று சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அன்னை சொர்ணவல்லியின் சந்நிதி சுந்தரேஸ்வரருக்கு இடது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை சௌந்தரநாயகி மற்றும் அன்னை மீனாட்சி இருவரும் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்கள். கொக்கு மந்தாரை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியில் வந்து தங்கியிருந்திருக்கிறார். அவர் எப்பவும் போல் இறைவனை வழிபட்டுவிட்டு படுக்க, கனவில் காளை உருவம் கொண்டு கையில் பொற்செண்டு தாங்கியும் திருமுடியில் சுழி அணிந்தும் காட்சி தந்த இறைவன் ‘யாம் இருப்பது திருக்கானப்பேர்’ எனக்கூறி மறைந்துவிட்டராம். திடுக்கிட்டு விழித்த சுந்தரர், சேரமானுடன் திருக்கானப்பேர் வந்து இறைவனைக் கண்டு பரவசப்பட்டு பதிகம் பாடினார் என்பது ஸ்தல வரலாறு. ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே' எனப் பாடியிருக்கிறார்.

இங்குள்ள சிவகங்கை தீர்த்தம், காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். சண்டாசுரனை வதம் செய்த பின்னர் காளி இங்கு வந்து இந்தத் தீர்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி சிவனை வழிபட்டு அதன் வாயிலாக அசுரனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்று கரிய உருவம் கொண்டு காளீஸ்வரரை மணம் புரிந்து சொர்ணவல்லித் தாயாராக அருள்பாலிக்கிறார் என்பதும் வரலாறு.

இதேபோல் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை மகரிஷி ஒருவர் கொடுத்த பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்ததால் பெற்ற சாபத்தை நீக்குவதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு தன் தந்தத்தால் பூமியைக் கீறி தீர்த்தம் உண்டாக்கி அதில் குளித்து தன் பாவத்தைப் போக்கிக் கொண்டது என்றும் அதுதான் ஆனைமடு தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆனைமடு தீர்த்தம் என்பது யானைகளைக் குளிப்பாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளமே என்று மருதுபாண்டியர்களின் வரலாற்றை விரிவாக தெரிந்து வைத்திருக்கும் பலர் சொல்லியிருக்கிறார்கள். கஜபுஷ்கரணி என்றும் அழைக்கப்படும் இந்த தீர்த்தக்குளம் எப்போதும் வற்றுவதில்லை எனவும் சொல்கிறார்கள்.  இந்தக் குளத்தின் நடுவே நீராழி மண்டபம் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் இருக்கின்றன.

Maruthu Brothers Statue located inside the Kalayarkoil Temple


இந்த ஊருக்கு தக்ஷிணகாளிபுரம், சோதிவனம், மந்தாரவனம், மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், வேதாருவனம், பூலோககைலாயம், மகாகாளபுரம் என்ற பெயர்களும் உண்டு என்றாலும் இறைவன் சொன்ன திருக்கானப்பேரே வரலாற்றில் நிற்கிறது. சுந்தரர் காளைக்கு பதியம் பாடிய பின்னர் காளீஸ்வரர் கோவிலாகி அதுவே மருவி இன்று காளையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் மூன்று சந்நிதிகளில் இருப்பதை வைத்து இப்பகுதியில் 'காளைதேட... சோமர் அழிக்க... சொக்கர் சுகிக்க...' என்ற பழமொழி வழக்கத்தில் இருக்கிறது.

படங்கள் இணையத்திலிருந்து இந்த பதிவிற்காக எடுத்துச் சேர்த்தது... நன்றி இணையம்.

தொடர்ச்சி நாளை பகிரப்படும்...
-'பரிவை' சே.குமார்.