மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 18 மார்ச், 2018

கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)

கல் மின்னிதழ் பங்குனி மாத மின்னிதழில் எனது ஆன்மீகக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. என்னிடம் நீங்க இதை எழுதுங்க என உரிமையுடன் கேட்டு வாங்கிப் போடும் (அட நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் வரிகள்) நண்பர் சத்யாவுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அகல் நட்புக்களுக்கும் நன்றி.
****


Picture
தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன்
தேவகோட்டைக்கு மிக அருகில் சிறுவாச்சி, வெங்களூர் சாலை பிரியும் இடத்தில் தாழையூர் கண்மாய்க்குள் இருக்கிறது இந்தக் கோவில். எங்கள் ஊருக்கு மிக அருகில், எங்கள் ஊர் வயல்களின் வழியாக... தாழையூர் கண்மாய்க்குள் போனால் கோவிலை அடைந்து சாமி கும்பிட்டுத் திரும்பலாம். எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் கோவில் தெரியும். இப்போது கருவைகள் வளர்ந்து நிற்பதால் கோவில் தெரிவதில்லை. பள்ளி படிக்கும் காலத்தில் இரவு நாடகம் (கூத்து) பார்க்கவும் வயல் வழி பாதையில்தான் பயணப்பட்டிருக்கிறோம். கல்லூரி காலத்தில் சைக்கிளில் ரோட்டு வழியாகச் செல்வோம். கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் என்று நீட்டி முழங்குவதெல்லாம் இல்லை எங்கள் பகுதி மக்கள்... எங்களுக்கு அவள் கூத்தாடிச்சியம்மன்தான். கூத்தாடிச்சி நீ இருந்தாக் கேளு என்று முடியும் சண்டைகள் ஏராளம். அவள் எல்லாரையும் காக்கும் தெய்வம் என்பதால் நீ இருந்தாக் கேளு என்ற வாசகத்தை தன் புன்னகைக்குள் அடக்கிக் கொள்வாள்.

தாழையூர் கண்மாய்... இப்படி எழுதுவது கூட ரொம்பக் கஷ்டமாத்தாங்க இருக்கு ஏன்னா பரியன்வயல் அப்படிங்கிற எங்க ஊரையே பரியமயல் என்றும் தேவகோட்டையை தேவட்டை என்றும் கண்டதேவியை கண்டேவி என்றும் சொல்லிப் பழக்கப்பட்ட பயலுக நாங்க.. அட்சர சுத்தமா எழுதுறதெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை எனவே நம்ம பேச்சு வழக்குக்கு மாறிக்கிறேங்க. தேவ கோட்டையை ஒட்டிய தாழக்கம்மாயின் நுனிப் பகுதியில் ஒரு மேடு அமைத்து அக்காலத்தில் கோவில் கட்டியிருக்கிறார்கள். அந்த மேட்டுப் பகுதிக்கு வாரியான கம்மாய்ப் பகுதியைத் தாண்டித்தான் போக வேண்டும் என்பதால் சிறியதாய் ஒரு பாலமும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். தற்போது கோவிலுக்குப் பிரியும் ரோட்டில் கோவில் பெயரில் ஒரு வளைவு வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் இடதுபுறமாக சீர்படுத்தப்பட்ட கண்மாய்க் கரையில் உள்ள ஆலமரத்தின் அடியில் முனீஸ்வரர் இருக்கிறார். அவரை வணங்கிவிட்டு அம்மனைக் காணச் செல்வோரும் உண்டு... அம்மனைக் கண்டு விட்டு அவரை வணங்க வருவோரும் உண்டு.

கோவில் என்றால் அதற்கென்று ஊரணி ஒன்று இருக்க வேண்டும் இல்லையா... அதனால் தாழக்கண்மாய்க்குள் இருக்கும் கோவிலின் கிழக்குப் பகுதியில் சிறியதாய் இரு ஊரணி... அதற்கு கல் படிக்கட்டு... இரண்டு படித்துறைகள்... ஒன்று கோவிலுக்கு முன்னே... மற்றொன்றோ ஐயனார் சன்னதிக்கு எதிரே... கோவிலுக்கு முன்னே இருக்கும் படித்துறையில் இறங்கி கால் கழுவி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதையே பக்தர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்.

அரச மரத்துப் பிள்ளையாரை வணங்கிப் பின்னரே அம்மனையும் அதன் பின் ஐயனாரையும் வணங்குவதை முறையாக்கி வைத்திருக்கிறார்கள். எல்லாக் கோவிலிலும் முதல் வணக்கம் முதல்வனுக்குத்தானே. இது ஒரு கிராமத்துக் கோவில் என்றாலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஸ்தல வரலாறு இருப்பது போல் இந்தக் கோவிலுக்கும் வரலாறு உண்டு.

இக்கோவில் உசுலாவுடைய ஐயனார் கோவிலாகத்தான் இருந்திருக்கிறது. ஐயனார் தனது துணைவிகளுடன் கிழக்குப் பார்க்க அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் கோவில்கள் எல்லாமே கிழக்கு முகமாகத்தான் இருக்கின்றன இல்லையா?  

Picture
(சப்த கன்னிமார் எழுவர்)
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியான ஒரு திருவிழா நாளில் கூத்தாட வந்த இளம்பெண்தான் பெரியநாயகி. அவளின் அண்ணனும் நடிகர்தான். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கூத்துக் கொட்டகையில் இருந்து கம்மாய்க்குள் போயிருக்கிறாள். போனவளைக் காணவில்லை எனத் தேடிய அண்ணன்காரன், அவள் திரும்பி வந்தபோது அவசரப்பட்டு சந்தேகத்தில் எங்கே போனாய்? யாருடன் போனாய்? என வார்த்தைகளை விட, பெண் பிள்ளை அல்லவா சொல் பொறுக்கவில்லை.

தன் மீது சந்தேக விதை விழுந்த பின்னர் உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்ற நினைப்பில் கோபத்திலும் வேகத்திலும் கம்மாய்க்குள் நின்ற ஒரம்பா மரத்தில் தூக்கில் தொங்கினார், கூத்தாட வந்த இடத்தில் சந்தேகத் தீயால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைத் தெய்வமாக்கிவிட்டார்கள் அப்பகுதி மக்கள்.

பெரிய கருவறைக்குள் இரண்டு சிறிய கருவறைகள் ஒன்றில் ஐயனார் கிழக்குப் பார்க்க இருக்க, மற்றொன்றில் அம்மன் தெற்கு நோக்கி இருக்கிறாள். அம்மனின் பார்வையே பிரதான வாசலாய் மாறிப் போய்விட்டது. ஐயனார் கோவிலென்றாலும் அம்மன் பெயர்தான் வழங்குகிறது. புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே அபிஷேகம்... மற்ற விஷேச தினங்களிலும் நடப்பதுண்டு. அபிஷேகம் ஐயனாருக்கே... ஐயனாருக்கு அபிஷேகம் முடிந்த பின்னர் அம்மனுக்கும் ஐயனாருக்கும் தீபாராதனை நடைபெறும். ஐயனார் கற்சிலை அம்மனோ மரத்தினால் செய்யப்பட்டவள். இடது புறம் தலை சாய்ந்து கூத்தாடும் நிலையில் இருக்கும் அம்மனின் கழுத்தில் சுருக்குக் கயிறும் இருப்பதாய் சிலை வடித்திருக்கிறார்கள். அலங்காரம் இல்லாது இருக்கும் அம்மனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டினால் இதைப் பார்க்கலாம். மரத்தினாலான சிலை என்பதால் அம்மனுக்கு சந்தனக் காப்பு மட்டுமே. அபிஷேகம் எல்லாம் ஐயனாருக்கே.

இப்போது கோவில் மண்டபங்கள் எழுப்பப்பட்டு அரசமர பிள்ளையார் கூட மண்டபத்துக்குள் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். தற்போது அம்மனுக்கும் ஐயனாருக்கும் தனித்தனியே இராஜகோபுரம் கட்டுகிறார்கள்.

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது படிக்கும் இடம் இந்தக் கோவில்தான். அப்போது மண்டபங்கள் எல்லாம் இல்லை. டானாப்பட ஒரு கட்டிடம் இருக்கும். அதில் சப்த கன்னிகள் சிலைகள் இருக்கும். அங்குதான் அமர்ந்து படிப்பது வழக்கம். பகல் நேரத்தில் அமைதியாய், எந்தத் தொந்தரவும் இல்லாமல் படிக்கச் சிறந்த இடம். கல்லூரியில் படிக்கும் போது நானும் எனது நண்பர்கள் சேவியரும் அண்ணாத்துரையும் படித்தது இங்குதான்.   

Picture

புதன், சனி மாலை வேளைகளில் பரபரப்பாக இருக்கும் இக்கோவில் மற்ற நாட்களில் ஒரு கிராமத்துக் கோவிலுக்கே உரிய அமைதியைத் தாங்கி இருக்கும். காவல் தெய்வங்களான பெரிய கருப்பன், சின்னக் கருப்பன், காளி, சன்னாசி, இடும்பன் என நிறையத் தெய்வங்கள் உண்டு. காளி சுவரில் புடைப்புச் சிற்பமாக இருந்து பின்னாளில் கற்சிலையாக மாற்றப்பட்டிருக்க, இப்பவும் கற்சிலைக்குப் பின்னே புடைப்புச் சிற்பம் இருக்கிறது. தேவகோட்டையில் இருந்து நடந்தே போய் வரும் தூரம்தான்... புதன், சனிக் கிழமைகளில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் சைக்கிள், வண்டிகள், கார்களிலும் இக்கோவிலுக்கு வருவார்கள். 5.30 மணிக்கு நடக்கும் அபிஷேகமும் அதன் பின்னான தீப ஆராதனையும் காணவே கூட்டம் வரும். அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் அந்த நாட்களில் நின்று செல்லும். தேவகோட்டையில் சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் தவறாது இந்த இரண்டு நாட்களும் கோவிலுக்கு வருவார்கள்.

இந்தக் கோவிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய பொட்டலில் நாடகமேடை கட்டியிருக்கிறார்கள். கோவிலில் எப்போது நாடகம் வைத்தாலும் முதலில் அம்மனின் வம்சாவழியினரான கம்ப நாட்டிலிருந்து ஒருவர் வந்து மேடை ஏறி அம்மனைப் பற்றி பாடி ஆடிய பிறகே நாடகம் தொடரும்.

இந்தக் கோவிலில் நேர்த்திக்கடனாக மாடுகள் விடப்படும். கிட்டத்தட்ட முன்னூறு நானூறு மாடுகள். அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல் மாடுகள் கூட்டமாய் விருப்பப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கின்றன. எப்போதேனும் கோவில் பக்கம் வருவதுண்டு. இந்த மாடுகளால் எங்கள் பகுதி விவசாயம் அழிந்த கதையை என் மனசு தளத்தில் எழுதியிருக்கிறேன். ஒருமுறை கண்டதேவி ஆட்கள் மாடுகளை விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அதன் பின் அவர்கள் விவசாயம் செய்த இரண்டு கம்மாய்ப் பாசன நிலங்களில் விளைச்சல் இல்லை என்பதை எங்கள் பகுதி கண்கூடாகப் பார்த்தது. இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கோவிலில் அம்மன் சன்னதிக்குப் பின்னே இருக்கும் ஈச்ச மரத்தில் நம் எண்ணம் ஈடேற முடிச்சிப் போட்டு வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது ஐதீகம். சில விஷயங்களில் நானும் கண்டிருக்கிறேன். நம் எண்ணம் நிறைவேறிய பின்னர் ஏதேனும் ஒரு முடிச்சை அவிழ்த்து விட்டால் போதும். சிவராத்திரிக்கு கருப்பர் பூ இறங்குதல், காவடிகள் என மதியம் மூன்று மணி வரை கோவிலில் கூட்டம் அலைமோதும். நாட்டார்கள் மேற்பார்வையில் இருக்கும் கோவில் இது. இப்பகுதியில் இருக்கும் பலருக்கு இக்கோவில் குலதெய்வம். மனிதர்களை தெய்வமாக்கிப் பார்த்து வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்று. இதேபோல் சமீபத்தில் உதயமாகி, மிகப் பிரபலமான இடையங்காளி கோவிலும் மனிதரை தெய்வமாக்கி வழிபடும் கோவில்தான். கூத்தாடிச்சியைப் பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி ஈர்ப்பதை உணரலாம்.

Picture

ஒரு காலத்தில் படிக்கிறேன் என கிடையாகக் கிடந்த கோவில். இப்போது ஊருக்குப் போகும் போது தவறாமல் அம்மன் தரிசனம் செய்து விடுவது வழக்கம். முன்பு இடிந்த நிலையில் மண் மூடிய பழைய கோவிலும் அப்படியே இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி கோவிலுக்கான இடத்தை அகலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழியில்தான் தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற அருணகிரிப்பட்டினம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் இருக்கிறது.
 
தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் இருப்பவர்கள் ஒரு முறையேனும் இக்கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து வாருங்கள்.

(அம்மன் படம் மனைவி வாட்ஸ்-அப்பில் அனுப்பியது மற்ற படங்கள் தேனக்காவின் சும்மா தளத்தில் சுட்டவை - நன்றி) 
*************  

முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை 'தோஷம்' பிரசுரமாகியிருக்கிறது. முடிந்தவர்கள் முத்துக்கமலத்தில் வாசியுங்கள். கதைக்கான இணைப்பு கீழே.

-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஸ்ரீராமின் வரிகளை நினைவு கூரும் நீங்கள் நான் கேட்டால்தான் அவ்போது கதை தருகிறீர்கள்! அவ்வப்போது ஒரு இடைவெளியில் ஒரு கதை கொடுங்கள் குமார்.

:)))

ஸ்ரீராம். சொன்னது…

வத்திராயிருப்பு என்கிற ஊரில் நான் பணிபுரிந்தேன். அதை வத்ராப் என்று அழைப்பார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் பணிபுரிந்திருக்கிறேன். அதை சில்டூர் என்பார்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

பெரும்பாலும் காவல் தெய்வங்களின் வரலாறு இப்படித்தான். நல்லதங்காள் கோவில் மகாராஜபுரம் அருகில் இருக்கிறது. இந்தப் பக்கம் வந்தால் தரிசிக்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கோயிலின் சிறப்பை அறிந்தேன்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஒவ்வொரு ஊர் காவல் தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கிறது இப்படித்தான் பெரும்பாலும் என்றே தோன்றுகிறது. ஊரைக் காத்த வீரர் அல்லது ஏதேனும் நலல்து செய்யதவர்கள் என்று வீரமாக இருந்து ஊரையே வழிநடத்தியவர் என்று இப்படி...எல்லையைக் காத்த தெய்வம். ஊர் தெய்வம்..ஐயனார், காத்தவராயன், கருப்பு, முனி என்ற ஒவ்வொரு தெய்வத்திற்கும். ஒரு கதை...எங்கள் ஊரிலும் சுடலைமாடன் என்ற காவல் தெய்வம் உண்டு. அவருக்கும் கதை சொல்லப்படுவதுண்டு..

கோயிலைப் பற்றிய விவரங்கள், சிறப்பு எல்லாம் அருமை குமார்.

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

கிராம தெய்வங்கள் என்றும் பெருமைக்குரியவை..

நல்லதொரு கட்டுரை.. மகிழ்ச்சி..
வாழ்க நலம்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பார்த்திராத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். நன்றி.

கோமதி அரசு சொன்னது…

அம்மன் கதை அருமை.
காவல் தெய்வத்தைப் பார்க்க ஆவல்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே! கோயில் பற்றிய தகவல்கள் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது! நன்றி!

Unknown சொன்னது…

என் தாய் ஸ்ரீ கூத்தாடி முத்துப்பெரியவள்..
எங்கள் குலத்தை காக்கும் குல தெய்வம்..
நம்பியவர்களை கைவிடமாட்டாள் கூத்தாடிச்சியம்மன்

Unknown சொன்னது…

என் தாய் ஸ்ரீ கூத்தாடி முத்துப்பெரியவள்
எங்கள் குலத்தை காக்கும் குல தெய்வம்
நம்பியவர்களை கைவிடமாட்டாள் கூத்தாடிச்சியம்மன்
தாயே உன் வாசலுக்கு வந்து உன் முகம் பார்த்து உன் காலடியில் உறங்கவேண்டும்