மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 டிசம்பர், 2010

கதை சொன்ன நாளைய இயக்குநர்கள்...

நம்ம நண்பர்கள் சில நடிகர்களை அணுகி கதை சொன்னால் எப்படியிருக்கும் என்ற சின்ன கற்பனையே... கதை சொன்னவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான். படிக்கும் போது யாரென்று கண்டு கொள்ளுங்கள்.

'வணக்கம் தளபதி... படத்தோட கதை என்னன்னா வழக்கமான வெட்டுக்குத்துத்தான். நீங்க கெட்டப்ப மாத்தி ரெண்டு கதாபாத்திரத்துல வாறீங்க..'

'அட்ரா சக்க... அட்ரா சக்க... எப்பவும் போல தலைமுடியில கெட்டப் சேஞ் பண்ணினா போதுங்களாண்ணா...'

'நான் ஒண்ணுதான் வச்சிருக்கேன்... நீங்க ரெண்டு தடவை சொல்றீங்க...'

'நீங்க தானே டபுள் ரோல்ன்னு சொன்னீங்கண்ணா'

'அட்ரா சக்க... அட்ரா சக்க...'

'நீங்களும் ரெண்டு தடவை சொல்றீங்கண்ணா'

'இது சந்தோஷம். கதைக்கு வருவோம்'

'என்னய வச்சு படம் எடுங்கண்ணா... சுத்தமா போயிடும்'

'என்னது சந்தோஷமா...'

'ஐயோ... இல்லீங்கண்ணா... உங்க தோஷம்ன்னு சொன்னேன்..'

'ஓபனிங்ல நீங்க கடலுக்குள்ள இருந்து எந்திரிச்சு வாறீங்க...அப்ப...'

'சாங்காண்ணா... முன்னாடியே பண்ணியாச்சிண்ணா... கொஞ்சம் மாத்துங்கண்ணா...'

'அந்தக் கண்றாவிய பாத்துட்டுத்தான் பல நாள் தூக்கமில்ல... இது வேற... அப்ப கரையில உங்கம்மா சோகத்துல உக்காந்து இருக்காங்க... அப்படியே கதைய மலேசியா கொண்டு போறோம்.'

'சாந்தோம் பீச்ல அம்மா செண்டிமென்ட்ட ஆரம்பிச்சி மலேசியாவுக்கு எதுக்கு போகணும்... புரியலீங்களேண்ணா...'

'இப்ப வார உம்படம் எது புரியுது... விடு... சென்னையில அன்னைக்கிட்ட இருக்க உம் பேரு கண்ணன்... மலேசியாவில மல்டி மில்லினரா வாற உன்னோட இன்னொரு கேரக்டர் பேரு ராசா... அவருக்கு ஜோடி மணிமொழியா த்ரிஷா'

'மல்டி மில்லினருக்கு வேற பேரு வைக்கலாமே... இந்த பேரு வேண்டாம்...'

'அதை அப்புறம் பாத்துக்கலாம்... கதைக்கு வருவோம்...'

'அம்மா வீட்டு வரைக்கும் போக வேண்டியிருக்கு... கண்டிப்பா பண்ணுவோம்... கதையில நான் சொல்ற மாதிரி மாத்திக்கிட்டு நாளைக்கு வாங்கண்ணா...'

'சுத்தம் உனக்கு கதை சொல்ல வந்ததுக்கு ரெண்டு பதிவு போட்டிருந்த குத்து வாங்கி நம்பர் ஒண்ண தக்க வச்சிருக்கலாம். சரி... நாளைக்கும் வாரேன்... ஆனா முதல்ல இருந்து கதை கேக்கக்கூடாது.'

'நான் கதை கேக்கலை... உங்க படத்துக்கு நீங்களே விரிவான விமர்சனம் கவுண்டரை வச்சி எழுதக்கூடாது... சரியா? இனி கவுண்டரை கூப்பிட்டிங்க பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணாகிட்ட சொல்லிடுவேன்.
***

'படத்தோட டைட்டிலே மதியோடையில் நனைவோமா... ஒரு அழகான கிராமத்துக் காதல் கதை... அருமையான ஸ்கிரிப்ட்... எனக்குள்ள பீறிட்டுக்கிட்டிருக்க கதையை உங்களை வச்சு பண்ணனும்ன்னுதான் வெயிட்டிங்...'

'கிராமமா... அங்க நான் கார் ஓட்ட முடியாதே... ஓபனிங்ல ரெண்டு வீல்ல காரை ஓட்டிக்கிட்டு நான் வர்ற மாதிரி சீனை வச்சி பேக்ரவுண்ட்ல தலக்கிணை யாருங்கிற மாதிரி சாங்க் வச்சா...'

'தறுதலை... '

'என்ன சொன்னீங்க... இப்ப என்னமோ சொன்னீங்க...'

'ஒண்ணுமில்ல கார் ஓட்ற சீனெல்லாம் நீங்க பட்டணத்துக்கு வந்தப்புறம் வச்சிக்கலாம்... கிராமத்துல கிட்டிப்புள்ளு விளையாடுற நீங்க இன்டர்வெல்லுக்கு அப்புறம் பட்டணத்துல அறுவாவால தலையெடுத்து விளையாடுறீங்க... இடையில அஞ்சலி கூட டான்செல்லாம் ஆடுறீங்க'

'ம்... நல்லாயிருக்கே... டபுள் ஆக்ட் விட்டா நல்லாயிருக்கும்...'

'நீ எப்பவும் ரெண்டு ஆக்ட்தான் விடுவே... அப்பத்தானே கதைய ஈசியா நகர்த்தலாம். இதுல ஒத்தக் காரெக்டர்தான்... மத்த காரெக்டரையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி அமச்சிருக்கோம்...'

'எனக்கு வரலாறு மாதிரி மறுபடிக்கும் பண்ணனும்... அதுமாதிரி ஸ்கிரிப்ட் இருக்கா..'

'இந்தப் படம் பண்ணுங்க... இதுவே உங்களுக்கு ஒரு வரலாறுதான்'

'அப்படியா... சந்தோஷமாயிருக்கு...இருங்க பிரியாணி போடுறேன் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'

'பிரியாணி போட்டுத்தான் மங்காத்தா ஆடுவோமா வேண்டாமான்னு யோசிக்க வச்சிட்டே.. எனக்கும் பிரியாணியா நான் நனைவோமாவுல்ல தீவிரமா இருக்கேன். பிரியாணிய நீயே சாப்பிட்டுட்டு பிரியா இருக்கும் போது சொல்லு... இப்ப நான் கிளம்புறேன்.'

***


'இந்தக் கதையில கிராமத்து விவசாயி, அரசாங்கத்தை எதிர்க்கிற கலெக்டர்ன்னு ரெண்டு காரெக்டர்...'

'கலெக்டரை போலீஸா மாத்திட்டிங்கன்னா நல்லாயிருக்கும்.'

'நீதான் ஸ்காட்லாந்து போலீஸ் வரைக்கும் போட்டுத் தாக்கிட்டியே... இன்னும் ஆசை அடங்கலையா... இதுல கலெக்டர்தான்...'

'சரி வசனங்களெல்லான் சும்மா பச்சக் பச்சக்குன்னு மனசில பதியணும் ஆங்க்...'

'அதெல்லாம் நான் தத்துப்பித்துவங்களை அள்ளிவிட்டாலும் கேப்டனுக்கு கதை பண்றப்போ சும்மா புகுந்து விளையாடமாட்டேன்.'

'ஓபனிங் சாங்கல பின்னால ஆடுறவங்களுக்கெல்லாம் நம்ம கம்பெனி டிரஸ்தான் போட்டு விடணும்.'

'அப்புடியே முரசு கொட்டணுமின்னு வேற சொல்லுவியே...'

'டேய் பிரபாகரா...'

'என்ன மரியாதை தேயுது... கதைதானே சொல்ல வந்தேன்... புடிக்கலைன்னா போகச் சொல்ல வேண்டியதுதானே...'

'ஐய்யோ... தப்பாயிடுச்சு... மூத்தவனைக் கூப்பிட்டேன்...' அப்போது மகன் வர, 'தம்பி இவருகிட்ட கதைய கேளு... அப்பாவுக்கு தகுந்த மாதிரி கதையான்னு பாரு... நான் கட்சி விசயமா வெளிய போறேன்... நாயகிக்கு ஓவியா சரிவருமான்னு பாருங்க'

'ம்க்கும் உனக்கு கதை சொல்ல வந்தா இவங்கிட்ட சொல்லணுமா... வெளங்கிடும் கனவுக்கன்னிகளை பாத்து கதை சொல்லியிருக்கலாம்.'

***


'யாரங்கே தரைதப்பட்டைகள் முழங்கட்டும்...'

'இன்னும் நீங்க அதுல இருந்து வெளிய வரலையா...'

'அடடே வாங்க அமைச்சரே... உங்க பிரண்டோட தீப்பெட்டிய கொடுக்காம என்ன சின்னப்பிள்ளத்தனமா இருக்கு...'

'ஐய்யோ அது வேற கதை நான் இப்ப உங்ககிட்ட கதை சொல்ல வந்திருக்கேன்.'

'கதையா... அடங்கொய்யாலே... என்ன மாதிரி கதை... '

'படத்துல நீங்கதான் ஹீரோ... இதுல ரெண்டு பெரிய ஹீரோங்க சைடுல வந்திட்டுப் போறாங்க... உங்களுக்கு ஜோடி தமன்னா...'

'அட அந்த சிவத்தப்புள்ளயா... அது சரி... வ்வ்வ்வ்வ்... கதையே கேக்க வேணாம் படத்தை ஆரம்பிங்க...'

'இருங்க... கதைய சொன்னா அதுக்கு நீங்க பிரிப்பேராக கரெக்டா இருக்குமில்லையா...'

'என்ன பிரிப்பேரு... பிரிப்பேரு பண்ண என்ன இருக்கு... கழுத சும்மா நடிக்க வேண்டியதுதானே...'

'நீங்க கிராமத்துல இருந்து நகரத்து வாறீங்க...'

'வந்து கண்டவன்கிட்டயும் ஏமாறேனாக்கும்... பத்தாததுக்கு பயபுள்ளைங்க சின்னபிள்ளைங்கிட்டயெல்லாம் ஏமாந்து அடி வாங்கிறமாதிரியெல்லாம் வச்சி... முடியலை... வேற மாதிரி கதை வையி... சும்மா... பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக்குனெல்லாம் வைக்கப்படாது...'

'இதுல நீங்க மனுசங்ககிட்ட அடி வாங்கலை... படம் பூராம் ஆடு, மாடு, கோழின்னு உங்களை ஏமாத்துற விதமே வித்தியாசமான கதையா சொல்றோம்...'

'அடப்பாவி புள்ளங்க அடிச்சி... இப்ப நாம அடிச்சு சாப்பிடுறதெல்லாம் நம்மளை அடிக்கிதா... என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..'

'நீங்க காமெடிப் பீசுதானே உங்களை வச்சு காமெடி பண்ணாம எந்திரனா பண்ண முடியும்... கதைக்கு வாங்க...'

'சரி வராது தம்பி... நீங்க சிவகெங்கை கருப்ப போயி பாருங்க... நான் இனி அடிவாங்க திராணியில்ல... போங்க சாமி... நல்லாயிருப்பீங்க... கதையோட வாங்கடான்னா.. அடிவாங்க வைக்கிற கதையாவே கொன்டு வாராங்க... என்ன ஒரு கொலை வெறி...'

***

'ம்... சொல்லுங்க... அப்புறம்...'

'கஜினி மாதிரி படையெடுத்து ஐசை பிடிச்சாச்சு... இதுல அதைவிட ஜில்லுன்னு அனுஷ்காவை ஜோடியா போடுறோம். நீங்க இதுல ரேடியோ 'ஜாக்கி'யா வாறீங்க...'

'யூத்புல்லான்னா கதை ... ஓகே... பென்டாஸ்டிக்... இதுல நான் நடிக்கிறதைவிட தல மட்டும் நடிச்சா இன்னும் நல்லாயிருக்கும்.'

'உங்க தலைய மட்டும் நடிக்க வைக்க முடியாது. முழு உடம்பும் நடிச்சாத்தான் நல்லாயிருக்கும். கதைப்படி உங்களுக்கு இருபத்தைந்சு வயசு... சும்மா சில்லுன்னு இருக்கீங்க... ஒரு பங்ஷன்ல வச்சி அனுஷ்காவை மீட் பண்றீங்க... அப்ப பேக்ரவுண்ட்ல ஒரு பழைய பாட்டை ரீ மிக்ஸ் பண்றோம்...'

'என்ன பாட்டு... நல்லா இருக்குமா?'

'ம்... பிருந்தாவனமும் நொந்த... சாரி நந்தகுமாரனும்...'

'என்ன நீங்க பாட்டுக்கும் சிச்சுவேசனுக்கும் சரியா வரலையே... நல்ல யூத்புல்லான பாட்டா போட்டா நல்லாயிருக்குமே...'

'எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதனாலதான்..'

'கதை நல்லாயிருக்கு... பாட்டெல்லாம் மாத்திக்கலாம்... சூப்பரா பண்ணிடலாம்... இந்தாங்க சாண்ட்விச் சாப்பிடுங்க... '

'இல்ல சார் நான் ஞாயித்துக்கிழமையும் புதங்கிழமையும்தான் சாப்பிடுவேன்... மத்த நாள் சாண்ட்விச் எனக்கு சாப்பிடப்பிடிக்காது. '

'சரி அதுல அம்மா கதாபாத்திரம் வருதுன்னு சொன்னீங்கள்ல... நம்ம மீனாவ கேட்டுப்பாருங்க...'

'அடங்கொன்னியா... மகளா, மருமகளா, காதலியா, மனைவியா நடிச்சு... இப்ப அம்மாவா... ஆத்தாடியோவ்'

'என்ன தம்பி சொல்றீங்க...'

'ஒண்ணுமில்லைங்க'

'சரி... தம்பி பாக்கலாம்... பேரங்களோட ஆனை ஆனை விளையாடணும்... கிளம்புறீங்களா?'

***

'நம்மளோட அம்பு எப்படி பாயுதுன்னு ஒங்களைக் கேட்டாத்தான் தெரியும்... '

'அதுக்கென்ன... நல்லாத்தான் போகுது... அடுத்த படத்தையும் ரவிக்குமாருக்கே பண்ணாம எனக்கு ஒரு படம் பண்ணனும்.'

'நான் கொஞ்சம் காஸ்ட்லி... உங்களுக்கு ஒத்து வருமா?'

'நானும் ஒரு பெரிய புரடியூசரை கையில வச்சிருக்கேன்... அவருக்கு கேபிள் போட்டு ஸ்ட்ராங்கா பிடிச்சு வச்சிருக்கேன்.'

'சங்கரா... '

'நான் பக்கத்துலதான் இருக்கேன்.'

'ஐயோ நான் உங்களை சொல்லலை... அவனை...' மேலே கை காட்டுகிறார்.

'கண்ணோடு கண் கலந்ததென்றால்..'

'அதெல்லாம் கலந்து ரொம்ப நாளாச்சு... கதைக்கு வாங்க... இதுல நீங்க புரபஸரா நடிக்கிறீங்க...'

'கெட்டப் சேஞ் இருக்கா?'

'புரபஸ்ருக்கு என்ன கெட்டப் வேண்டியிருக்கு... வேணுமின்னா பங்க் வச்சு... தாடி வையுங்க... இல்ல மொட்டயடிச்சி மீசை வையுங்க... அதுவா முக்கியம். கதைப்படி நீங்க பிஸிக்ஸ் புரபஸர். உங்க மாணவியா ஐஸ் வாராங்க... லேப்ல எக்ஸ்பரிமண்ட் பண்ற உங்க திறமையப் பாத்து அவங்க ஒரு காதல் கவிதையை லெமன் ட்ரீக்கு முன்னால உக்காந்து எழுதுறாங்க... அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் ஒரு சாங்க் வருது...'

'வாவ் சூப்பர்... ஐஸ் கூட சாங்கா... முத்தம் இருக்கா...'

'அவங்க ஒத்துக்கிட்டா வச்சிக்கலாம்... அப்புறம் வில்லன் என்ட்ரி... உங்க பிரதான் ஹீரோக்கள் ரமேஷ் அரவிந்த், மாதவன் ரெண்டு பேரும் உங்க கூட புரபஸரா வாராங்க... ஐஸ் வர்ற சீன்ல எல்லாம் அவங்களை திட்டமிட்டே உள்ள வராம பாத்துக்கிறோம்... இதுல சலங்கை ஒலி மாதிரி நல்ல டான்ஸ் பண்றீங்க....'

'சூப்பர்... நல்லாயிருக்கு... கதையில சின்ன மாற்றம் பண்ணுங்க... அப்புறம் ஐந்து பாட்டு வைக்கலாம் நால நானே எழுதித்தாரேன்... முடிஞ்சா எல்லாத்தையும் நானே பாடுறேன்... இல்லேன்னா ரெண்டாவது பாடணும் இதுக்கெல்லாம் நீங்க ஓகேன்னா நான் ரெடி...'

'அதுக்கென்ன... நல்லா பண்ணலாம்...'


கதை சொல்லிய களைப்பில் பனகல் பார்க்கில் கூடிய நாளைய இயக்குநர்கள் பேசாம மைனா, அங்காடி தெரு மாதிரி புதுக் ஹீரோக்களை போட்டு படமெடுத்தால் நம்மளோட ஒரிஜினாலிட்டிய நிரூபிக்கலாம். பெரிய ஹீரோவுக்காக கதைய மாத்தி கவுந்து போகாம இருக்கலாம்.

'அண்ணே... புதுமுகங்களை வச்சி படம் எடுக்கப் போறீங்களா?'

'ஆமா... யாரு நீயி.. தேவையில்லாம ஆஜராகிறே... உன்னய இந்தப் பக்கம் பாத்ததில்லையே... நீயும் கதை வச்சிருக்கியா...'

'ஐய்யோ... நமக்கு அதெல்லாம் தெரியாது மனசுல பட்டதை எழுதுவேன்... சும்மா கிறுக்கிக்கிட்டு இருக்கவன்... அம்புட்டுத்தான்... நீங்க பேசுறதைக் கேட்டேன்... அதான்...'

'வெத்துப்பீஸா...'

'இல்லண்ணே... டைம்பீஸ்...'

'என்னது... எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல்ல வந்தேன். நம்ம மனசுக்குப் பட்டதை சொல்லலாமுன்னுதான்... உங்க படத்துக்கு பாட்டெழுத...'

'நீ பாட்டெழுதுவியா...'

'ஆரம்பத்துலயே சொன்னேன்... நம்மளை அந்த மாதிரி எல்லாம் நினைக்காதீங்க... நம்ம நண்பர்கள் தமிழ்காதலன், தமிழ்க்கவிதைகள் மோகனன் ரெண்டு பேரும் நல்லா கவிதை எழுதுவாங்க உங்க படத்துல வாய்ப்பு கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.'

'அது சரி... உனக்கு எதாவது வாய்ப்பு கேட்காம...'

'நாங்கள்ளாம் திறமைக்கு மதிப்பு கொடுக்குறவங்க...'

'ஐயா... படம் எடுக்கும்போது பார்ப்போம். இப்ப போ..'


டிஸ்கி 1: இங்கு கதை சொன்னவர்கள் எல்லாருமே நாளைய இயக்குநர்கள்தான்... பதிவர்கள் என்று நினைத்து படித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல...

டிஸ்கி 2: யாருமே முழுசா கதை சொல்லலைன்னு கேக்கக்கூடாது... அதெல்லாம் சினிமா ரகசியம் வெளிய சொல்ல முடியாது.

டிஸ்கி 3: நாயகர்கள் கதை கேக்க மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கம்பெனி விளம்பரத்துக்காக நாயகிகள் போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் கொந்தளித்தால் போலீஸ் கொண்டு அடக்கப்படுவார்கள் என்பது மன தைரியத்துடன் தெரிவிக்கப்படுகிறது.

டிஸ்கி 4: தமிழ் நாட்டில் இருந்து கல் எறிய முடியாது என்பதால் தைரியமாக கதை சொல்லியிருக்கிறோம். இன்னும் சிலர் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவைத் தொடர்ந்து தொடரலாம். ஆதரவைவிட அடி அதிகமாக விழுந்தால் முன்னறிவிப்பு இன்றி கதை சொல்லும் கதை மூடப்படும். எல்லாம் உங்க கையிலதான் இருக்கு.

டிஸ்கி 5: என்ன அட்ரா சக்க அட்ரா சக்கன்னு எத்தனை டிஸ்கி, நாங்களும் போடுவோமுல்ல... ஹா... ஹா...ஹா... (ஈரோட்டுல ரகசிய ஆலோசனை நடக்குதாம்... நம்ம மேல தாக்குதல் நடத்த... வாங்க பேசிக்கலாம்... நோ பேட் வேர்ட்ஸ்.. நோ வன்முறை...)

டிஸ்கி 6: அட அரடஜன் டிஸ்கி போடலாமுன்னுதான்... என் பகிர்வுக்காக கதை சொன்ன நாளைய இயக்குநர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்..


சகோதரர் எம். அப்துல் காதர் கொடுத்த விருதுகளை வீட்டில் மாட்டி அவருக்கு தனிப்பட்ட வகையில் நன்றி சொல்லியிருந்தாலும் பெரிய மனசுக்கு மனசில் நன்றி சொல்லவிட்டுப் போய்விட்டது. விருதுக்கும் விருது கொடுத்த சகோதரருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.



-'பரிவை' சே.குமார்.

போட்டோக்கள் கொடுத்து உதவியது கூகிள்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

மனசின் பக்கம் 28/12/2010


ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் நடத்திய சங்கமம் 2010 மிக அருமையானதொரு நிகழ்வாக அமைந்ததாக பதிவுகள் மூலம் அறிய முடிந்தது. நிகழ்ச்சிக்கு போய் வந்த உடன் பதிவிட்ட ஜாக்கி சேகர் அவர்களின் பதிவை முதன் முதலில் படித்ததும் விழாவின் சிறப்பை அறிய முடிந்தது. ஒரு அருமையான நிகழ்வை பலர் வாய்ப்பிருந்தும் தவறவிட்டிருந்தாலும் கையெழுத்து இடாதவர்கள் பலர் இருக்க பதிவேட்டில் 80க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து இட்டிருந்தார்கள் என்பதை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்க வலைப்பூவில் பார்த்து மகிழ்ந்தேன். எங்களுக்கும் கலந்து கொள்ள ஆசைதான். என்ன செய்வது... பரவாயில்லை விழா போட்டோக்களையும் பகிர்வையும் பார்க்கும் போது நாங்களும் அங்கு இருந்தது போல் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி.. இந்த ஆரம்பம் அமர்க்களமாகட்டும்.

************

கமலின் மன்மதன் அம்பு படம் நன்றாக வந்திருப்பதாகத்தான் அபுதாபியில் படம் பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் பதிவர்கள் மத்தியில் மன்மதன் அம்பு படத்திற்கான விமர்சனத்தில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நண்பர்கள் நல்லாயில்லை என்பதாகவே எழுதியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரஜினியும் கமலும் இரு விருட்சங்கள். இருவரின் நடிப்புப்பாணி வேறு.

எந்திரன் எப்படியிருந்தாலும் ஆஹா ஓஹோவென்று எல்லோரும் எழுதினார்கள். ஆனால் கமல் என்று வரும்போது அப்படி எழுத பதிவர்களுக்கு மனமில்லை என்பது விமர்சனத்தில் தெரிகிறது. நீங்கள் எழுதும் விமர்சனங்கள் தற்போது படங்கள் மீதான பார்வையை விசாலப்படுத்தியிருக்கின்றன என்பது உண்மை. எனவே பொய்யான கருத்துக்களைத் தவிர்த்து உண்மையான விமர்சனங்களை எழுதுங்கள். நீங்கள் இதுபோல் எழுதும் விமர்சனங்களால் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வரிசையில் நீங்களும் இணையும் காலம் தூரமில்லை.

************

கடந்த மாதம் வரை உக்கிரமான வெயிலால் தகித்துக் கொண்டிருந்த பாலைவனப் பூமியில் இந்த மாதம் முதல் குளிர் ஆரம்பமாயாச்சு. இப்ப குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு இருபத்து நாளு மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியின் இயக்கம் தேவைப்பட்டது. இப்போது இரவில் அதுவும் எங்களுடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

காலையில் சுடு தண்ணீரை ஊற்ற வேண்டுமே என்று நினைத்த நாட்கள் கடந்து ஐஸ் தண்ணியில குளிக்கணுமா என்ற நாட்கள் நகரத் துவங்கிவிட்டன. அறையில் இருந்து கார் ஏற நான் போகும் இடம் செல்லும் போது குளிரில் உடம்பு ஆட்டம் எடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இப்படித்தான் போகும். அதன் பின் இத்தனை நாட்களாக எரியாத சூரியன் பதவியில் வந்தமர்ந்தால் மீண்டும் உக்கிரத்தின் பிடியில்தான் வாழ்க்கை.

************

பெரும்பாலான பதிவர்கள் நல்லா இருக்கு என்று எழுதியதால் விருதகிரி படம் பார்த்தேன். ஸ்காட்லாந்து போலீசுக்கு தமிழக போலீசின் வீரத்தையும் விவேகத்தையும் காட்டும்போதே தூங்கியிருக்கலாம். பதிவர்கள் பக்கத்தில் நின்று கொண்டு நல்லாயிருக்கு என்று சொல்லிக் கொண்டிருப்பது போல் தோன்ற பார்த்தேன்... பார்த்தேன்... ஒரு கட்டத்தில் முடியலை... தூக்கம் ஜெயிச்சிருச்சு.

இதுல என்ன விசேசமுன்னா எங்க அண்ணன் டாக்டர் விஜயகாந்தோட தீவிரமான ரசிகர். எப்பவும் படம் போட்டுவிட்டு தூங்கும் அவர் அன்று உட்கார்ந்து கடைசி வரை படம் பார்த்தார். படம் பார்க்கும் போது நண்பர் ஒருத்தர் 'விஜயகாந்த்தும் ராஜேந்தரும் படம் பூராம் அவங்க மட்டும்தான் திரைய அடச்சிக்கிட்டு வருவாங்க' என்றார். அது உண்மைதான் அனைத்துப் பிரேமிலும் அவர் இருந்தார் உப்பிலியப்பனாக.

************

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அரசு விடுதியில் உணவு, பராமரிப்பு சரியில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை நேற்று தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நமக்கான போராட்டம் அதன் எல்லைக்குள் இருந்தால்தான் நல்லது. சாலைகளில் அமர்ந்து பல மணி நேரங்கள் போராட்டம் நடத்தும் மாணவர்கள் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஏன் யோசிப்பதில்லை. அவசர சிகிச்சைக்கோ, பிரசவத்திற்கோ, அவசர வேலை நிமித்தமோ செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் உங்கள் போராட்டடத்தால் காத்திருக்க முடியுமா? போராட்டங்கள் தேவைதான் அதற்காக சாலைகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட வேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தார்கள். இதில் என்ன ஒரு கூத்து என்றால் போராடியவ்ர்களுக்கு தலைமை தாங்கி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கும் மாணவர்கள் இல்லை என்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது.

அமைச்சர் வரவேண்டும் என்று போராடி ஆதி திராவிட நலத்துறை அமைச்சரும் வந்தாச்சு. அந்த அம்மாவிடம் விடுதி உணவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். அந்த அம்மா ரெண்டு சோத்தை எடுத்து கிளி போல கொறிக்குது. உடனே ஒரு மாணவன் நல்லா சாப்பிடுங்க என்றார். கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு அதை திருப்பிக் கொடுத்தது. எதோ பேசியது. ஆனால் மாணவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் கிளம்பிச் செல்ல, மீண்டும் போராட்டம்... தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் மீண்டும் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம். பொறுமை இழந்த போலீஸ் களத்தில் இறங்க பல புலிகள் காட்டுக்குள் ஓட... ஐம்பது மட்டும் ஆடுகளத்தில். அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள்.

அப்ப ஒரு மாணவர் சொல்கிறார். அமைச்சரும் வந்து எதுவும் சொல்லாமல் பொயிட்டார். காவல்துறையும் பாத்துக்கிட்டு இருக்கு. பொதுமக்களுக்கு இடையூரில்லாம அவங்க நினைச்சா செஞ்சிருக்கலாம்ன்னு... உனக்கு எங்கய்யா புத்தி போச்சு. அரசு விடுதி தானேன்னு சுத்தமா வச்சிக்க நமக்கு மனசில்லை... நம்ம வீட்டை நாம சுத்தமா வச்சிக்கிட்டா பிரச்சினைகளை தவிர்க்கலாமே. உணவு சரியில்லையா போராடு... உள்ள இருந்து போராடு.. நீ ரோட்டுல கெடந்து ஆட்டம் போட அப்பாவி பொதுஜனம் ஏன் பாதிக்கப்படனுங்கிறேன். மாணவர்கள் போராட்டம் வீதிக்கு வந்தால் தக்க நடவடிக்கை எடுக்க சட்டங்கள் திருத்தப்பட்டால் தப்பில்லை என்பதே என் எண்ணம்.

************



என்னடா 'அங்காடிதெரு' அஞ்சலி படத்தைப் போட்டிருக்கானே... இங்க இருக்க செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு நினைக்கிறீங்கதானே... எனக்கென்னமோ அஞ்சலிய பிடிக்கும். இன்னைக்கு "பிரபாகரனின் தத்துப்பித்துவங்கள்" வலைப்பூவில் கனவுக்கன்னி 2010 படித்தப்போ போட்டோ பார்த்தேன். அங்கயிருந்து சுட்டுக்கிட்டு வந்து இங்க போட்டாச்சு... இப்படி போட்டாவாவது ஹிட்ஸ் குவிஞ்சு அந்த 20க்குள்ள வரலாமேன்னு சத்தியமா நப்பாசையெல்லாம் இல்லைங்க... ஆமா... நம்புங்க...

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஏய் கடலே...




கடலம்மா...

இப்போதெல்லாம் உன்னை

இப்படி அழைக்க மறுக்கிறது மனசு..!



மணல் வீடு கட்டிய மழலைகளை

மண்ணுக்குள் புதைத்த

நீ எப்படி அன்னையாவாய்..?



'அம்மா' என்ற ஓலங்கள் மத்தியில்

உற்சாகமாய் உயர்ந்து

உயிர்ப்பலி கொண்டவளல்லவா நீ..!



பசிக்கு உணவு கொடுப்பளே தாய்...

கோரப்பசிக்காக உயிர்களை எடுத்தவளான

நீ எப்படி எங்கள் தாயாவாய்..?



நீ பறித்த் உயிர்களின்

உறவுகள் இன்னும் அலைகின்றன

உறவுடன் உயிரையும் இழந்து

கட்டை மரங்களாக..!



உயிர்களைத் தின்ற...

உறவுகளைக் கொன்ற...

நீ அன்னையாக இருக்கமுடியாது...


அரவணைப்பவளே அன்னை...

அடித்துக் கொல்பவள் அல்ல...



(சுனாமியில் உயிர்களை இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் உறவுகளை இழந்த மனங்களின் சோகம் குறையவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.)

-'பரிவை' சே.குமார்.

படம் அருளிய கூகிளாருக்கு நன்றி

வியாழன், 23 டிசம்பர், 2010

குப்பையும் கோபுரமும்



 "சும்மா இருக்கமாட்டே... பாட்டி மாதிரி தொணத்தொணன்னு..." துருவித்துருவி கேட்டுக் கொண்டிருந்த தங்கை துர்காவை கடிந்து கொண்டான் ரமேஷ்.

"எனக்கு தெரியுது உனக்கு என்னமோ பிரச்சினையின்னு... என்னன்னு கேட்டா பாட்டி... அது இதுன்னு பேசுறே... நீ சரியில்லைங்கிறத உன் முகமே காட்டிக் கொடுக்குது.... இரு அம்மாவை கூப்பிடுறேன்..."

"ஏய்... சும்மா இரு... எதுக்கு அம்மாவை கூப்பிடுறே... இப்ப என்னோட பிரச்சினை என்னன்னு உனக்கு தெரியணும் அவ்வளவுதானே..."

"ஆமா... சொல்லு..."

"தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?"

"எதாவது சொல்யூசன் சொல்வேன்..."

"நீ... சரித்தான் போ.. ஆமா உனக்கு உண்மையான காரணம் வேணுமா... பொய்யான காரணம் வேணுமா..?"

"எப்படியிருந்தாலும் பொய்யான காரணம்தான் சொல்லுவே... சொல்லித்தொலை... எனக்கும் பொழுது போகணுமில்ல..."

"ஏண்டி எம் பிரச்சினை உனக்கு பொழுதுபோக்கா... சொல்லமாட்டேன் போடி..."

"டேய் சொல்றியா... இல்ல அம்மாவை கூப்பிடட்டுமா.... அம்ம்ம்ம்...." துர்க்காவின் வாயை பொத்தியபடி "சனியனே... எதுக்கெடுத்தாலும் எதுக்கு அம்மாவை கூப்பிடுறே... சொல்லித் தொலையிறேன்.." என்றான் கடுப்பாக.

அவனின் கையை தட்டிவிட்டவள் "அப்படி வா வழிக்கு..." என்றாள்.

"என்னய சங்கர் அடிச்சிட்டான்"

"டேய்... என்னடா சொல்றே... பொய் சொல்லாதே... அவன் ஏண்டா உன்னைய அடிக்கணும்..."

"உண்மைதாண்டி...நல்லா அடிச்சிட்டான்... அவன் கூட ரெண்டு மூணு பேரும் இருந்தாங்க... இங்க பாரு... " என்றபடி சட்டைய கழட்டி முதுகை காட்டினான்... கோடு கோடாய் செவந்திருந்தது. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்த அவனது கண்கள் கலங்கின.

அவனது முதுகைப் பார்த்தவள் "ஏண்டா... அடிச்சான்..." அவளுக்கும் அழுகை வந்தது.

"அது... அது வந்து..."

"என்னடா தயங்குறே... ஆளக்கூட்டியாந்து அடிக்கிற அளவுக்கு சங்கர் போயிருக்கான்னா உங்களுக்குள்ள எதோ பெரிய பிரச்சினை இருக்கணும்... என்ன சொல்லு..."

"நான்... நான்..."

"இங்க பாரு... அடிவாங்கிக்கிட்டு வந்து நிக்கிறே... அதுவும் காலேசுப் பிரச்சினையின்னா ரெண்டு குரூப்தான் மோதுவீங்க... ஆனா இங்க உன்னோட பிரண்ட் அடிச்சிருக்கான்... அப்ப உங்களுக்குள்ள நடந்த எதோ ஒரு பிரச்சினைதான் காரணமா இருக்கணும்... சொல்றியா... இல்ல அவனுக்கு போன போட்டு எங்க அண்ணனை ஏண்டா அடிச்சேன்னு கேக்கவா..."

"வேணாண்டி... சங்கர் தங்கச்சி மலரத் தெரியுமில்ல..."

"ஆமா... எங்க ஸ்கூல்லதான் லெவன்த் படிக்கிறா... அவளுக்கு என்ன?"

"அவளும்... நானும்..."

"அவளை லவ் பண்ணிறியா... அவளும் உன்னை லவ் பண்றாளா..."

"ஆமா..."

"டேய் அவ இப்பத்தாண்டா லெவன்த் வந்திருக்கா... அதுக்குள்ள அவ எப்படி உன்னை..."

"எப்படியோ... அது எதுக்கு உனக்கு... சரி விடு அம்மாகிட்ட சொல்லாதே..."

"இதை எப்படி விடுறது... அவளும்தானே லவ் பண்ணினா... அவளை அடிக்க வேண்டியதுதானே... எதுக்கு உன்னைய போட்டு அடிச்சான்... சரி அதைவிடு... நீ பிரண்ட் வீட்டுக்குப் போனே... அத்தோட இருக்க வேண்டியதுதானே... எதுக்கு பிரண்டோட தங்கச்சிய லவ் பண்ணினே... தப்புத்தானே... உன்னைய அடிக்கணுமுன்னு இல்லையே... எடுத்துச் சொல்லியிருக்கலாமே... அதைவிட்டுட்டு ஆள வச்சு அடிக்கிறான்னா... அவன் உன்னோட பிரண்ட் மாதிரி தெரியலையே..." பொரிந்து தள்ளினாள்.

"எம்மேல தப்புதாண்டி... அவன் எங்கிட்ட வேணாண்டா ரமேஷ்... விட்டுடு... நீ எந்தங்கை மேல வச்சிருக்கிற அன்பு வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சினையாயிடும் அப்படின்னு எங்கிட்ட சொன்னான்..."

"அப்புறம் என்ன விட்டுட வேண்டியதுதானே..."

"விட்டுடலாமுன்னு அவகிட்ட சொன்னேன்... அவ கேக்கலையே... நான் அவளை வேண்டான்னு சொன்னா செத்துருவேன்னு மிரட்டினா... அவன் அவளை கண்டித்தப்பவும் அவ என்னை விரும்புறதாவும் நான் இல்லைன்னா செத்துப் போயிடுவேன்னும் அவங்கிட்டயும் சொல்லியிருக்கா..."

"அறிவு கெட்டுப் போச்சா அந்த நாய்க்கு... நீ அவ வீட்டுக்குப் போகாம இருக்க வேண்டியதுதானே..."

"அது... இருந்திருக்கலாம்... ஆனா... என்னைய காணோமுன்னு அவங்க அப்பா அம்மா கேட்க ஆரம்பிச்சிட்டா... அவங்க காதுக்கு விஷயம் பொயிட்டா என்ன பண்றதுன்னு அந்த வீட்டுக்குள்ள எப்பவும் போல போனேன். ஆனா அவ தீவிரமா இருந்தா... இதனால எனக்கும் சங்கருக்கும் பிரச்சினை வர ஆரம்பிச்சது... அதுவே இந்தளவுக்கு வருமுன்னு நினைக்கலை..."

"சரி... அவன் பக்கம் இருந்து பாத்தா அவன் பண்ணினது சரிதான்னு படுது... ஏன்னா உன்னோட பிரண்ட் யாரையாவது நான் லவ் பண்ணினா நீ ஒத்துப்பியா... மாட்டியல்ல... அது மாதிரித்தான்... அவங்க குடும்பம் ரொம்ப ஆச்சாரமானவங்க.... நாளைக்கு உங்க காதலுக்கு எல்லாரும் எதிர்க்கிறப்போ அவன் மட்டும் ஆதரிக்க முடியாது... இல்ல யாருக்கும் தெரியாம அவளை உன்னோட அனுப்பி வைச்சான்னா அதுக்கு அப்புறம் அவங்க குடும்பத்துல என்ன நடக்கும்ன்னு அவனுக்கு நல்லா தெரியும்... அதனால அவன் உங்க காதலை எதிர்த்திருக்கான்... ஆனா அதுக்காக உன்னைய ஆள் வச்சு அடிக்கிற அளவுக்கு அவன் போயிருக்க வேண்டியதில்லை..."

"சரிடி... விடு... அம்மாகிட்ட சொல்ல வேணாம்...நான் பாலாவ பாத்துட்டு வாரேன்..."

"அவனை எதுக்குப் பாக்கப் போறே... சங்கரை அடிக்க ஆள் சேக்கிறியா?"

"இல்லடி... நீ வேற.... சும்மாதான் பாத்துட்டு வாரேன்..." என்றபடி கிளம்பினான்.

************

எதோ ஒரு புத்தகம் கையில் இருந்தாலும் அண்ணன் அடி வாங்கியது மனசுக்குள் வலியை தந்து கொண்டிருந்தது. அப்போது டெலிபோன் மணி அடிக்க

"அலோ... யாரு..."

"நாந்தாண்டி... அம்மாகிட்ட சொல்லலையே..."

"இல்லடா... இதுக்காகவா போன் பண்ணினே..."

"இல்ல சங்கர் வீட்டுக்கு போன் எதுவும் பண்ணி பிரச்சினைய பெரிசாக்கிடாதேன்னு சொல்லத்தான் போன் பண்ணினேன்..."

"அவனுக்கு போன் பண்ணி கேக்கத்தான் போறேன்..."

"சொல்றதைக் கேளுடி... அவங்க வீட்டுல யாருக்கும் இந்த விசயம் தெரியாது... இது இப்படியே போகட்டும்... தயவு செய்து போன் பண்ணி மலர்கிட்டயோ இல்ல சங்கர்கிட்டயோ இது விசயமா பேசிறாத... ப்ளீஸ்..."

"சரி... பேசலை... சீக்கிரம் வந்து சேரு... அம்மா வேற எங்கடி போனான்னு நச்சரிக்கிறாங்க... இன்னம் அப்பா வரலை... அதுக்குள்ள வரப்பாரு... சும்மா பாலாகூட உருப்படாத பேச்சு பேசிக்கிட்டு இருக்காதே..."

"சரிடி... வாரேன்... போனை வையி... பொரிஞ்சு தள்ளாம..."

************



மறுநாள் பள்ளியில்...

துர்காவும் அவளது தோழி பானுவும் மலரைத்தேடி சென்றனர்.

"வாங்கக்கா..." என்றாள் மலர்.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.... அந்த மரத்துக்கிட்ட போகலாமா?"

"சரி... என்ன பேசணும்..."

"வா.... சொல்றேன்..."

"ம்... சொல்லுங்க... எனக்கு மதியம் டெஸ்ட் இருக்கு... படிக்கணும்..."

"எங்க அண்ணனை லவ் பண்றியா?" நேரடியாக கேட்டாள்.

"அது.... அது...."

"சொல்லுடி..."

"ஆமா..." பட்டென்று சொன்னாள்.

"லெவன்த் படிக்கும் போதே லவ்வா..." மிரட்டல் பாணியில் பேசினாள்.

"லெவன்த் பொண்ணு லவ் பண்ணக்கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா..." மலரிடம் இருந்து சலிக்காமல் பதில் வந்தது.

"என்னடி வாயாடுறே...?"

"நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னா வாயாடுறதுன்னு அர்த்தமா?"

"நீங்க பெரிய லைலா மஜ்னு பாருங்க... பிரச்சினை வருதுன்னு தெரிஞ்சா விட்டுட்டு போயி படிக்கிற வேலைய பாக்க வேண்டியதுதானே... அதை விட்டுட்டு செத்துருவேன்னு சினிமா வசனமெல்லாம் பேசினியாம்..."

"உங்கண்ணன் சொன்னாரா... அவரை லவ் பண்ணிட்டு எப்படி விட்டுட்டு போக முடியும்..."

"ஓ... தெய்வீக காதல்... உங்கண்ணன் சொல்லிப் பாத்திருக்கான்... ரெண்டு பேரும் கேக்கலை... கடைசியா ஆளைக் கூட்டிக்கிட்டு வந்து எங்கண்ணனை அடிச்சிட்டான்... உனக்கு தெரியுமா?"

"தெரியும்... நான் தான் அவனை அடிக்கச் சொன்னேன்..."

"என்னடி சொன்னே... நீதான் அடிக்கச் சொன்னியா... தெய்வீக காதல்ன்னு டயலாக் பேசுறே... அப்புறம் நீயே அடிக்கச் சொன்னேங்கிறே... அவன் அப்படி என்னடி பண்ணினான்... உன்னைய காதலிச்சது தப்பாடி..." கோபமாக கேட்டாள்.

"அக்கா கூல்... எதுக்கு இத்தனை கோபம்... எனக்கு எதுவும் தெரியாத வயசுல எம்மனசுல ஆசைய வளத்தது உங்க அண்ணன்... அப்புறம் அவனோட குணத்தைப் பாத்து நானும் பழக ஆரம்பிச்சேன்... இது எங்க அண்ணனுக்கு தெரிஞ்சப்போ குடும்பத்தை காரணம் காட்டி வேண்டான்னு சொன்னான்... ஆனா நான் பிடிவாதமா இருக்கவும்... எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு குடும்ப சூழல்... படிப்பு... அது... இது...ன்னு எல்லாம் சொல்லி கொஞ்ச நாளைக்கு காதலை ஒதுக்கி வச்சிட்டு நல்லா படிச்சு ரெண்டு பேரும் நல்ல நிலைக்கு வாங்க... கண்டிப்பா ரெண்டு பேரையும் நான் சேத்து வைக்கிறேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தான்... அத நாங்களும் ஏத்துக்கிட்டோம். எங்க வீட்டுக்கு உங்கண்ணன் வர்றப்போ எல்லாரும் சந்தோஷமா பேசிக்கிட்டு இருப்போம்... நாங்க வெளியில சந்திக்கிறதெல்லாம் இல்லை... ஒரு நாள் உங்கண்ணன்..."

"என்னடி டுவிஸ்ட் வைக்கிறே... சொல்லுடி..."

"எங்கிட்ட வந்து நம்ம காதலை மறந்துடுன்னு சொன்னார்... நான் ஏன் திடீர்ன்னு மறக்கச் சொல்றீங்க... அதான் சுந்தர் சப்போர்ட் இருக்குல்லன்னு கேட்டேன். அதுக்கு நம்ம காதல் சரிப்பட்டு வராது... இதுக்கு மேல என்னை காதலிக்க நினைக்காதேன்னு சொல்லிட்டுப் பொயிட்டார். அப்புறம் சில நாள் எங்க வீட்டுக்கு வரலை... எங்கண்ணன் எனக்கிட்ட வந்து உனக்கும் ரமேசுக்கும் என்ன பிரச்சினை... வீட்டுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கிறான்னு கேட்டான்... அப்ப நான் நடந்ததை சொன்னேன்... அவன் கோபமாகி உங்க அண்ணங்கிட்ட பேசினப்போ... எதோ வயசுக்கோளாறுல்ல உன் தங்கச்சியோட பழகிட்டேன்... ஆனா இப்ப வேண்டான்னு தோணுதுன்னு சொல்லியிருக்கார். காரணம் கேட்டா அவங்ககூட படிக்கிற பொண்ணு ஒருத்தி அவருக்கு புரபோஸ் பண்ணியிருக்கதாகவும் அதனால என்னையவிட அவ பெட்டருன்னும் முடிவுக்கு வந்ததாவும் சொல்லியிருக்காரு... ஆத்திரப்பட்ட எங்கண்ணன் கோபத்துல அவரோட சட்டைய பிடிக்கப் போக, எதுக்கு கோபப்படுறே... உன் தங்கச்சி கூட பழக மட்டும்தானே செஞ்சேன்... படுக்கலையேன்னு..." கண்ணீர் வழிந்தது.

"ஏய் அழாதே...மத்தவங்க பாத்தா தப்பா போயிடும்.."

"அந்த வார்த்தைய தன்னோட பெஸ்ட் பிரண்ட் சொன்னதை கேட்டதும் மனசொடிஞ்சு பொயிட்டான் என் அண்ணன்... சரியா சாப்பிடலை... தூங்கலை... நான் அவங்கிட்ட துருவித்துருவி கேட்டு விபரத்தை தெரிஞ்சுக்கிட்டேன். நானும் உங்கண்ணனும் காதலிச்சோம்... நான் உண்மையா இருந்தேன்... ஆனா உங்க அண்ணனுக்கு பொழுது போக்கா இருந்திருக்கு எங்க காதல்... என்னால என் அண்ணன் படுற அவஸ்தைய பாக்க சகிக்க முடியலை... அவனை பழைய சங்கரா பாக்கணுமின்னா இந்த மேட்டரை முடிவுக்கு கொண்டாரணும் எனக்கு தெரிஞ்ச ஒரே வழி உங்கண்ணனை மறந்துட்டு படிப்புல கவனம் செலுத்துறது. சங்கர்கிட்ட சொன்னேன்... அவனுக்கும் சந்தோஷம்... ஆனா உங்க அண்ணன் கேட்ட அந்த கேள்வியோட வேதனை குறையல... அதைக் குறைக்க நாந்தான் உங்கண்ணன அடிக்கச் சொன்னேன்... என்ன வேணாலும் பேசலாமுன்னு நினைச்ச உங்க அண்ணனுக்கு என்னாலயும் என்ன வேணாலும் செய்ய முடியுமுன்னு நிரூபிக்கச் சொன்னேன். அவனும் ஒரு அண்ணனா போயி அடிச்சானே தவிர நண்பனா இல்ல... போதுமா நாளைக்கு இப்ப புரபோஸ் பண்ணியிருக்கவளைவிட வேற எவளாவது அழகா வந்தான்னு இவளுக்கும் எங்கதிதான்... பாத்து இருக்கச் சொல்லுங்க எங்கண்ணனாவது லேசா தட்டுனான்... அவங்க கைய காலை ஒடிச்சிரப் போறாங்க..." என்றபடி கிளம்பிய மலரின் கைகளை பிடித்துக் கொண்டு "சாரிடி... சங்கர்கிட்ட எங்க அண்ணன் சார்பா நான் மன்னிப்பு கேட்டதா சொல்லு... ப்ளீஸ்..." என்ற துர்காவின் மனதுக்குள் ரமேஷ் குப்பையாய் ஒதுங்க... சங்கர் கோபுரமாய் உயர்ந்தான்.


-'பரிவை' சே.குமார். 

Photo From google  - Thanks

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

அபுதாபியில் எஸ்.பி.பி - வாசகனாய் நான்...

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பினர் எஸ்.பி. பால சுப்பிரமணியன் அவர்களுக்கு நடத்திய பாராட்டுவிழா குறித்த பகிர்வை எல்லாரும் படித்திருப்பீர்கள். அந்த விழா போட்டோக்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



'புதிய மனிதா பூமிக்கு வா' பாடல் முழங்க விழா நாயகனின் அறிமுகம்.




பாடும் நிலாவை வரவேற்க வந்த பால் நிலாக்கள்


இறை வணக்கம் பாடிய இசையரசிகள்


'செந்தமிழ் நாடென்னும் பாடலிலே' துள்ளும் நடன மான்கள்




அழகிய நடனங்களின் புகைப்படங்கள்


இவர்கள் சப்தம் இல்லாத தனிமை கேட்கிறார்கள்


இசையால் மயக்கிய வைத்யா


பாரதி(ராஜா)க்கு பாரதியின் பொன்னாடை


அன்புத் தழுவலில் நட்பின் விலாசம்




விருதுக்கு மரியாதை

பேச்சால் மயக்கிய பாடகன்


விழாவுக்கு வந்த தமிழினத்தின் ஒரு பகுதி


போட்டோக்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

**************************

இந்த முறை தமிழ்மண விருதுகள் களத்தில் இறங்க முடியாத சூழல். காரணம் நான் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மனசு வலைப்பூவில் மட்டுமே எழுதி வருகிறேன். எனது மற்ற வலைப்பூக்களுக்கு இணைப்பு அளித்த தமிழ்மணம், மனசுக்கு கொடுக்கவில்லை.

நான் மின்னஞ்சல் அனுப்பியும் அவர்களின் வேலைப்பளுவினால் அதற்கு பதில் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் படைப்புக்களை வாசித்து வாக்களிக்கும் வாசகனாய் மட்டுமே நான் இந்த முறை களத்தில்...

போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவரும் எந்த இடுகையை களத்தில் இறக்கியிருக்கிறேன் என்று பதிவு போட்டாச்சு. முதல் கட்ட வாக்கெடுப்பும் ஆரம்பமாயாச்சு. விறுவிறுப்பான போட்டிக் களத்தில்  கலந்து கொள்ளும் எல்லாரும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் அது நடக்க வாய்ப்பில்லை என்பதால் எல்லாருக்குமான வெற்றிப் போட்டியில் எல்லைக் கோட்டைப் பிடித்து வெற்றியை தனதாக்கிக் கொள்ள இருக்கும் பதிவுலக பிரமாக்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்
Photos from My Friend - No Thanks to Him

வெள்ளி, 17 டிசம்பர், 2010

மொதச் சொத்து


செல்லம்மாவுக்கு மகன் சொன்ன செய்தியைக் கேட்டதும் மனசு நொறுங்கிப்போனது. என்னப்பா சொல்றே... அந்த நிலத்தை விக்கப் போறியா?... மறுபடியும் கேட்டாள். ஆமா... அது வேஸ்ட்டாத்தானே கிடக்கு... அதை கொடுத்துட்டு ரோட்டோரமா ஒரு இடம் வருது. வாங்கிப் போட்டா பின்னால வீடு கீடு கட்டி வாடகைக்கு விடலாம். அந்தப் பக்கம் இருக்கிற எல்லா நிலத்தையும் ஒருத்தர் வெல பேசுறார்... நல்ல வெல போகுமாம். அதான் கொடுத்துடுவோம். அது உங்கப்பா மொதமொதலா எனக்கு வாங்குன்ன சொத்துடா... அதை விக்கணுமாடா மெதுவா கேட்க, ஆமா பெரிய அரண்மனைய வாங்கி கொடுத்திட்டாரு... ஒரு ஏக்கரு எடந்தானே... எல்லாப் பயலும் வித்துட்டா அப்புறம் அதை ஒருத்தனும் வாங்க வரமாட்டான். நல்ல வெல கிடக்கிறப்போ வித்துடலாம். உங்க பேருல இருந்தா பின்னால பொம்பளைப் புள்ளங்க வேற பிரச்சினைக்கு வந்ததுங்கன்னா... சரி இடத்தை விக்கிற வரை யாருகிட்டயும் சொல்லாதீங்க... அப்புறம் எங்களுக்குத்தான் சொத்துன்னு கொடிப் புடிக்க வந்திருங்க என்றபடி கிளம்பினான்.

அவன் விற்பதாக சொன்ன நிலம் ரோட்டோரத்தில் இல்லைதான்... ஆனால் நல்லா வெளஞ்ச நிலம்தான்... இப்ப வானம் பொய்த்துப் போகவும் பராமரிக்க ஆள் இல்லாததாலயும் விவசாயத்தை துறந்துட்டு கருவ மரங்களை தாங்கி நிக்குது. இப்பவும் வீட்டுல அடுப்புக்கு போக வருசம் வருசம் அதுல இருக்க வெறக வெலக்கி கொடுத்து சம்பாதிக்கத்தான் செய்யிறாங்க.

செல்லம்மா அந்த வீட்டு மருமகளா வந்தப்போ கொஞ்ச நிலம்தான் இருந்தது. வெஜயன் மாமாவோட நிலத்தை பங்குக்கு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவரு டவுனுல எதோ கவருமெண்ட் உத்தியோகம் பாத்ததால வெவசாயம் பண்ண விரும்பலை... கொஞ்ச காலத்துக்கு பின்னால ஒரு வெலய வச்சு அவ மாமனாருக்கிட்டயே கொடுத்துட்டாரு... வெவசாய வேல காலத்துல மாமனாரு சொல்லாமலே செல்லம்மா மாங்கு மாங்குன்னு வெவசாய வேல எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டு பாப்பா... இருக்கதுலயே பெரிசாவும் கடைசியாவும் இருக்கிற எல்லச் செய்யிக்கு கம்மாயில இருந்து தனியாளா தண்ணி கொண்டு போயி பாச்சிடுவா. சில சமயங்கள்ல மாமனாருக்கு உடம்பு முடியலைன்னா இவளே வயல்ல இறங்கி உரமெல்லாம் போட்டிருக்கா. அவ புருஷன் தனராஜ் ஸ்டேட் பேங்குல பியூனா இருந்தான். கவருமெண்ட் உத்தியோகம் பாக்கிறதால கல்யாணத்துக்கு முன்னால இருந்தே மாமனார் அவனை வய பக்கம் வரவிட்டதில்லை. அவனும் வய பக்கமே வாரதில்லை. ஆனா அவனுக்கும் சேத்து செல்லாத்தா வேல பாத்தா.

அப்பத்தான் இந்த நிலம் வெலக்கு வந்தது. அவள் மாமனார் காசு இல்லைன்னு வேண்டாமுன்னு மறுத்தப்போ தனராஜ்தான் நல்ல இடம்ப்பா... மொத்தமா ஒரு ஏக்கருக்கிட்ட இருக்கு.... வெவசாயம் பண்ண நல்ல இடமுன்னு எங்கெங்கயோ பணம் பொரட்டி வாங்க வச்சான். அவன் முத முதல்ல பணம் போட்டு வாங்கினதால அவங்கிட்ட சொல்லி மருமக பேர்ல பத்திரம் போட வச்சாரு. அதனால செல்லம்மாவுக்கு அந்த நிலத்து மேல தனிப்பட்ட பாசம். அவ புருசன் மொதமொதலா வாங்கின நெலம்... அதுவும் அவ பேர்ல வேற... சந்தோஷம் இருக்காதா என்ன.

அதை எல்லாரும் பெரிய செய்யின்னு சொன்னாலும் அவ மாமனாரு மட்டும் செல்லம்மா செய்யின்னுதான் சொல்வாரு. செல்லம்மா செய்யில நாளைக்கு உரம் போடணும்... செல்லாத்தா செய்யிக்கு தண்ணியடச்சு விடனுமின்னு அவரு சொல்றப்போ அவளுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். மாமனாரும் மாமியாரும் போய்ச் சேந்ததுக்குப் பின்னால எல்லா வயலையும் செல்லம்மா மட்டும்தான் பாத்தா... அப்பல்லாம் நாட்டுக்கட்டு கட்டுன சேலய மொழங்கால் வரைக்கும் தூக்கி சொருகிகிட்டு தலமுடிய கொண்ட போட்டுகிட்டு அவ வயலுக்குள்ள திரியிறதைப் பாக்கணுமே... சும்மா ஆம்பளக் கணக்கா வேலை பாப்பா... அவளுக்கு பொறந்ததெல்லாம் அப்பன மாதிரி... இங்கன கெடக்கத அங்கன எடுத்துப் போடாதுக... மூத்தவன் மட்டும் அப்ப அப்ப அவ திட்டுக்குப் பயந்து வயல்ல இறங்கி வேல பாப்பான். மத்ததெல்லாம் அப்பவுல இருந்து இப்ப வரைக்கும் வயப்பக்கமே வாறதில்லை.

நல்லா வெளஞ்சுக்கிட்டிருந்த ஊர்ல விவசாயமே வாழ்க்கைன்னு கிடந்த மக்களெல்லாம் அறுவடையான பின்னால வய வேலை பாக்கிறவங்க கொறஞ்சிட்டாங்க. பாதிச் செய்யில கருவ மரம் வளர்ந்து பசுமையா இருந்த அந்த ஊரை கொஞ்சம் கொஞ்சமா தன்னோட பிடிக்குள்ள கொண்டாந்திருச்சு. எதோ நாலஞ்சு குடும்பம் வெவசாயத்தை இழுத்துக்கிட்டு கிடந்துச்சு. அதுல செல்லம்மாவும் ஒருத்தி, எல்லா வயலையும் வெயிலு காலத்துல மராமத்து பாத்து கருவ வராம வச்சிருப்பா... மண்டிக்கிடக்கிற கொலுஞ்சிச் செடியவும் மழை பேஞ்சு தண்ணி நிக்கிறப்போ தூரோட பிடுங்கி வயல்ல போட்டு வப்பா... அது தண்ணியல அழுகி கருப்பு கலாரா தண்ணி நிக்கும்... அது நல்ல உரமுன்னு மாமனாரு சொல்லியிருக்கிறாரு.

செல்லம்மா அவ புருசன் அவளுக்குன்னு வாங்கின வயல்ல விவசாயம் பண்ண ரொம்ப சிரமப்பட்டா, அவ்வளவு பெரிய வயல முன்ன மாதிரி பாக்க முடியலை. இன்னொரு பிரச்சினை என்னன்னா வேலக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பா இருந்துச்சு. அதனால பாத்தா செலவழிச்சு அழிவுல இருந்து காக்க முள்ளெல்லாம் அடச்சு ஆள் வச்சி பாத்து கடைசியா கொடக்கூலி மிஞ்சாது போலன்னு அத தரிசா போட்டா அடுத்த ரெண்டு வருசத்துல ஊரே தரிசாயிடுச்சு. பயிரு வெளஞ்ச பூமியெல்லாம் முள்ளு வெளஞ்சு ஏதோ தீவு மாதிரி ஆயிடுச்சு.

முன்னெல்லாம் வருசப் பொறப்பன்னைக்கு வயல்ல போயி புது ஏர் கட்டுவாங்க... மாமனார் காலத்துல அவரு ஏர் கட்ட குடும்பமே போயி நெல்ல வயல்ல போட்டு இந்த வருஷம் நல்லா வெளயணுமின்னு சாமி கும்பிட்டு வருவாக. அவருக்கு அப்புறம் ஏர் ஓட்ட ஆளில்லாததால செல்லம்மா மம்பட்டிய எடுத்துக்கிட்டு யாராவது ஒருத்தனை கூட்டிக்கிட்டு போயி ரெண்டு கொத்து கொத்திட்டு நெல்லப் போட்டு மேல தண்ணிய ஊத்திட்டு வருவா... அதுவும் இப்ப சில காலமா இல்லை. பொங்கலன்னைக்கு புத்தாண்டுன்னு சொல்லிட்டாங்களா... பொங்கலை பாக்கிறதா... விளைஞ்சு அறுப்புக்கு நிக்கிற வயல்ல ஏரோட்டப் போறதா... சொல்லப் போனா ஏர் ஓட்ட யார் வீட்டுலயும் மாடு இல்லை... இப்பல்லாம் டிராக்டருதான் உழுகுது.... எல்லா வயலையும் ஒரே நாள்ல உழுதுருவான்... அவனுக்கு வரப்பு இருக்கதுதான் சிரமம் இல்லேன்னா இந்த பக்கத்துல இருந்து அந்தப்பக்கம் வரைக்கும் ஒரே ஓட்டா ஓட்டிடுவான்.

எல்லாரோட வயலுகதான் தரிசா இருந்துச்சின்னா பல வீடுகள் மனிதர்கள் இல்லாம தரிசாயிக்கிட்டே வர ஆரம்பிச்சாச்சு. யாரோ ஒரு புண்ணியவான் அந்த ஏரியாவுல எதோ ஒரு பேக்டரி கட்டப்போறானாம் அவன் தான் எல்லா நிலத்தையும் வளச்சு வாங்குறான். எல்லாரும் விக்க ரெடியாயிட்டாங்க. மத்த செய்யெல்லாம் கேட்டா கொடுத்துடலாம்... பெரிய செய்யி மட்டும் நம்ம காலத்து வரைக்கும் அவரு நெனவா இருக்கட்டும் என்று செல்லம்மா நினைத்திருந்தாள். ஆனால் சுத்தி உள்ள வயலுகளை எல்லாம் வித்துட்டாங்கன்னா இது தீவு மாதிரி போக வழியில்லாம ஆயிடும். அதான் இப்ப கொள்ளக்காடுக எல்லாத்தையும் பிளாட் போட்டு வீடாக்கிட்டாங்கள்ல... டவுனும் அவ ஊரும் ஏறத்தாழ ஒண்ணாயிருச்சு. அதனால பய சொல்றபடி கொடுத்துட்டு ரோட்டோரமா ஒரு எடத்த வாங்கப் போடலாம். மொத மொதலா அவரு சம்பாத்தியத்துல வாங்கினதுன்னு தரலைன்னு சொல்லிட்டா நாளக்கி எல்லாரும் கொடுத்துட்டா இப்ப கொடுக்கிறதா சொல்ற வெலயும் கிடைக்காது. அவன் சொல்றதுதான் வெலயாயிடும். கொடுத்துடுறது நல்லது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அந்த வயல்ல இருந்து கொஞ்சம் மண்ணெடுத்து அவரு நெனவா முடிஞ்சு வச்சுக்கணும். இந்த வயசுல அங்க போக முடியாது. மாமனாரு காலத்துல இருந்தவங்க வரப்புக் கட்டுறதுன்னு சொல்லி வரப்ப நல்லா கட்டி நடக்கிற மாதிரி வச்சிருந்தாங்க... அப்புறம் வந்தவங்க வரப்ப வெட்டுறதுன்னு சொல்லி இப்ப ரெண்டு செய்களுக்கு இடையே பேருக்கு சொவரெடுத்த மாதிரி இருக்கு. அதுல நடக்க தனி தகிரியம் வேணும். போயி விழுந்து கிடந்தா அவ்வளவுதான் என்று நினைத்தவள் ஏய்... இசோறு... அடேய்... இசோறு என்று கத்த அய்யோ அப்பத்தா எத்தனை தடவை சொல்லிருக்கேன்.... என் பேரு இசோறு இல்ல... கிஷோருன்னு... என்ன சோறோ... எனக்கு அப்புடித்தான் வருது... நம்ம பெரிய செய்யில போயி கொஞ்சம் மண்ணெடுத்துக்கிட்டு வாடா... அட போ நீ வேற.... அங்க யாரு போவா.... வேற வேலையில்ல... நான் பித்திக்கா விளையாடப் போறேன்... என்றபடி டூர்ரென்று ஓடினான். ம்... யாரு போவா... என்று நினைத்தவள், சரி சொர்ணம் மயன் வரட்டும் அவங்கிட்ட சொல்லி எடுத்தராச் சொல்வோம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வாசலில் காத்திருந்தாள்.

-'பரிவை' சே.குமார்.

புதன், 15 டிசம்பர், 2010

மனசின் பக்கம் 15/12/10


இன்றைய மனசின் பக்கத்தில் கடந்த வெள்ளியன்று அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பினரால் திரு.எஸ்.பி.பி. அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் என் கண்களில் விழுந்த சிலவற்றையும் பாரதி அமைப்பினர் இப்படி செய்திருக்கலாம் என்று நினைத்த சிலவற்றையும் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

எனது பக்கத்து இருக்கையில் ஒரு நண்பர் அமர்ந்திருந்தார். அவர் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வந்திருந்தார். அவரது மகனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். அவன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாரதி நட்புக்காக அமைப்பின் பேனரில் இருந்த ஆங்கில எழுத்துக்களை அவரிடம் வாசித்துக் காட்டிவிட்டு அதன் கீழே இருந்த தமிழ் எழுத்துக்களை வாசிக்கத் தெரியாமல் அவரிடமே கேட்டான். அவர் கடைசி வரை அதை என்னவென்று சொல்லிக் கொடுக்கவேயில்லை. மேலும் அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளித்தார்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் அவருடைய மகளுக்கு 2 வயதுக்குள்தான் இருக்கும். அது தமிழில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஆங்கிலத்தில்தான் பதிலளித்தார். ஆங்கிலம் முக்கியம்தான் ஆனால் தமிழ் நமது தாய்மொழி என்பதை மறக்கக் கூடாது. பள்ளியில் தமிழ் இல்லை என்றால் வாசிக்கும் அளவுக்காகவாவது வீட்டில் சொல்லிக் கொடுக்கலாம் அல்லவா...

எதோ அமெரிக்காவில் பொறந்து வளர்ந்தது போல் அவர் பண்ணிய அல்டாப்பு.... அப்பா... சாமி... தாங்கலை... நம்ம தமிழகத்தில் எதாவது ஒரு குக்கிராமத்தில் பிறந்துதானே வந்திருப்பார். அரபு நாடு வந்த உடன் எல்லாமே மாறிவிடும் போல... அவர் பண்ணின அலப்பறையால் முன் இருக்கை நண்பர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள் என்பது அவர் பாதியில் விழாவில் இருந்து கிளம்பிய போது அவர்களின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் தெரிந்தது. என்ன செய்ய இப்படியும் மனிதர்கள்.

***************

எங்கள் இருக்கைக்கு முன்னர் ஒரு நடுத்தர வயது குடும்பம் ஒண்ணு அமர்ந்திருந்தது. அவர்களுக்கு அருகில் இரண்டு இருக்கைகள் கிடந்தன. அதில் எங்கள் நண்பர்களை அமரச் சொல்லலாம் என்று அவர்களிடம் ஆள் வருகிறதா என்று கேட்டபோது ஆள் வருவதாக சொன்னார்கள். நாங்களும் சரியென்று நண்பர்களை பின்னால் சென்று அமரச் சொன்னோம்.

நீண்ட நேரமாக யாருமே வராத இருக்கையை கடந்து ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டில் வந்த அம்மாவும், இளம் பெண்ணும் சென்ற போது அந்தப் பெண் எழுந்து ஓடிப்போய் அவர்களை அழைத்து வந்து அமரச் செய்தார். இவ்வளவுக்கும் அவருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களும் பாதியில் எழுந்து போக, சும்மா கிடந்த இருக்கையில் எங்களுக்கு தெரிந்த நண்பர் மனைவியுடன் வந்து அமர்ந்தார். இதை முன்னமே எங்களிடம் சொல்லியிருந்தால் நண்பர்கள் அமர்ந்திருப்பார்கள். இவர்களை என்ன சொல்வது?

***************

அன்றைய தினத்தில் விழா நடந்த நேஷனல் தியேட்டருக்கு அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் நடந்த போட்டியை காண கேம்பில் தங்கியிருப்பவர்களை பேருந்தில் அழைத்து வந்து சாப்பாடு கொடுத்து கூட்டம் சேர்த்தார்கள். அதனால் பாதைகள் அடைக்கப்பட்டு சுற்றி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தும் விழா அரங்கம் நிறைந்து பெரும்பாலான நண்பர்கள் நின்று கொண்டு பார்த்தார்கள். இதற்கு தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

***************

இனி, விழாவை நடத்திய பாரதி நட்புக்காக அமைப்பினரின் திட்டமிடல் அருமையாக இருந்தது... சில இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று என்ன வைத்தன... அவை.

1. பாரதியாரின் பாடலுக்கு நடனமாடிய போது பின்புறத் திரையில் பாரதியின் ஒரு போட்டோ மட்டும் காட்டப்பட்டது. அதையே பாரதியின் போட்டோக்களைத் தொகுத்து ஒரு ஸ்லைடு ஷோவாக காட்டியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

2. இசை நிகழ்ச்சி நடத்திய வைத்யாமேடையில் இடமிருந்தும் பின்புறமாக தள்ளி உட்கார வைக்கப்பட்டிருந்தார். இன்னும் முன்னே வந்து நடத்தியிருக்கலாம். நடன் நிகழ்ச்சி நடக்கும் போதே அவருக்கான மேடை தயார் செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்.

3. விழாவில் பாடிய வைத்யாவின் இசையை ரசித்த எஸ்.பி.பி மற்றும் பாரதிராஜாவை ரசிக்கவிடாமல் மொபைல், கேமரா என்று துரத்தினர். பின்னர் பாரதி அமைப்பினர் அரண் அமைக்க கூட்டம் குறைந்தது.

4. பாலுவின் திரையுலக வாழ்க்கையை அழகாக தொகுத்திருந்த திரு.சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் அவர் வாசித்த கவிதை அழகாக போய்க் கொண்டிருக்கும் போதே மேடையின் கீழே இருந்த ஒருவர் கையைக்காட்ட அவசரமாகக்கூட அல்லாமல் அப்படியே முடிக்கப்பட்டது.

5. பாரதிராஜா வைத்யாவை பாராட்டிப் பேசும்போது அவர் கைகாட்டிய திசையில் வைத்யாவின் வீணை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அவர் குறித்து பாரதிராஜா நீண்ட நேரம் பேச ஒரு வழியாக வைத்யாவை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். மேடையில் ஒரு சேர் போட்டு அவரையும் அமர வைத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? கல்யாணக்கார வீட்டில் மேளக்காரர்கள் வாசிப்பது போல்தான் அன்று அவரது நிலை.

6. பாரதி அமைப்பினர் விழாவிற்கு வந்த பிரபலங்களுடன் போட்டோ எடுப்பதெல்லாம் விழா முடிந்தோ அல்லது விழாவிற்கு முன்னரோ முடித்து விட்டால் நல்லா இருக்கும் சென்ற வருடம் சுசிலாம்மா வந்த போது எப்படியோ அதே போல்தான் பாலு அவர்களிடமும் நடந்து கொண்டார்கள். மேடைக்கு கீழே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த அவரைச் சுற்றி கூட்டமாய் நின்று விழாவின் சுவராஸ்யத்தை கெடுப்பதில் அவர்களே தலைமை ஏற்கிறார்கள். இந்தத் தவறை அடுத்த முறை சரி செய்தால் நல்லது.

7. விழா நடக்கும் போது அரங்கத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு மெலிதான வெளிச்சமே இருக்க நல்லாயிருந்தது. தீடீரென விளக்குகள் எல்லாம் போடப்பட்டு பின் அதன் வெளிச்ச அளவு மெதுவாக குறைக்கப்படும். இதுபோல் பலமுறை செய்யப்பட்டது. அது அந்த அரங்கத்தில் தானியங்கி விளக்குகளா? அல்லது யாராவது செய்தார்களா? என்பது தெரியவில்லை.

போதும் இன்னும் உள்ளே நுழைய வேண்டாம்... ரொம்ப நல்லா நடந்த விழாவில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வார்கள் என்பது உண்மை.

***************

சன் தொலைக்காட்சியில் தற்போது சங்கீத மகாயுத்தம் இரண்டாவது பகுதி சனி, ஞாயிறுகளில் நடத்தப்படுகிறது. மாதங்கி தொகுத்து வழங்குகிறார். சின்மயி அளவுக்கு இவருக்கு நடத்த வரவில்லை என்பதே உண்மை. ஆறு அணிகளில் நான் கிற்கு ஆண் பாடகர்களும் இரண்டிற்கு பெண் பாடகர்களும் கேப்டனாக இருக்கிறார்கள். இந்த ஆண் பாடகர்கள் நடுவர்களாக இருக்கும் போது பண்ணும் அலம்பல் தாங்கவில்லை.

ஒரு அணியில் பாடும் பெண் பார்க்க அழகாக இருக்கிறார். அவர் எப்படி பாடினாலும் இவர்கள் சூப்பர்...ஆஹா... ஒஹோ... என்பது சகிக்கமுடியவில்லை. நல்லா பாடியவருக்கு மார்க்கை குறைத்து அவருக்கு அள்ளி வீசுகிறார்கள். சென்ற வாரம் இதற்கெல்லாம் மேலாக அவர் பாடியதும் பிரசன்னா என்று நினைக்கிறேன்... உங்க புன்னகை எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு என்றதும். கிரேஸ் கருணாஸ் அவர்கள் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு நேர சொல்ல வேண்டியதுதானே என்றதும் வழிந்து கொண்டு ஒரு சிரிப்பு வேற...

அப்புறம் டூயட் பாடல் பாடும் போது பாடுபவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்டரி (அப்படின்னா என்னங்க????) ஒத்து வர வேண்டும் என்று சொல்ல, இருவரும் ரொமான்டிக்காக பாட உடனே நீ என்ன அவங்களை லவ் பண்ற பீலிங்கோட பாடுறே என்றதும் அந்த அணியில் கேப்டனான பெண் எழுந்து அவங்க பெற்றோருக்கு தெரியாம என்ன வேணாலும் பண்ணட்டும் என்கிறார். இவர்களே ஜோடி சேர்த்து விடுவார்கள் போல... என்ன செய்ய கலிகாலமாயிப் போச்சு.

***************

டிசம்பர் 26-ல் ஈரோட்டுல பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியான 'சங்கமம்-2010' நடக்க இருக்கிறது. கதிர் அண்ணா, சகோதரர் பாலாசி என எல்லாரும் தங்கள் வலைப்பூவின் மூலமாக அழைத்திருக்கிறார்கள். முடிந்தளவு எல்லாரும் கலந்து கொள்ளுங்கள். நாங்கள் விழா சிறக்க வாழ்த்துகிறோம். விழாவின் வெற்றி குறித்த பதிவுகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.


-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

இது ஒரு பொன்மாலைப் பொழுது...



இந்த வார விடுமுறை மாலை அபுதாபி வாழ் தமிழர்களுக்கு பொன்மாலைப் பொழுதாக அமைந்தது. ஆம்... வெள்ளியன்று மாலை பாரதி நட்புக்காக அமைப்பும் இந்திய தூதரகம் கலாச்சார பிரிவும் இணைந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஒரியா, குஜராத்தி என எல்லா மொழியிலுமாக 39000 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த நம் 'பாடும் நிலா' எஸ்.பி.பிக்கு பாராட்டுவிழாவாக நடத்திய 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' நிகழ்ச்சிதான் அது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்களது முன்னாள் அறைத்தோழரும் அருமை நண்பருமான சுபஹான் அவர்கள் எஸ்.பி.பி. அவர்களுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாக சொல்லியிருந்தார்கள். விழாவிற்கு செல்ல அழைப்பிதழே டிக்கெட்டாக பயன்படுத்தப்படுவது எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரிய வந்தது. அதன்பின் நண்பரிடம் பேசியபோது வாங்க டிக்கெட் ஏற்பாடு செய்யலாம் என்றார். அதன்படி சென்று நண்பர்களின் உதவியால் ஒரு அருமையான விழாவை கண்டு களித்து வந்தோம்.

விழா நடந்த நேஷனல் தியேட்டருக்கு நாங்கள் இரண்டு காரில் சென்றோம். விழா நடந்த மேடைக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட அரங்கில் போட்டி நடந்ததால் சற்றே சுற்றிச் செல்ல வேண்டிய சூழல். இருந்தும் தியேட்டரில் நம் மக்கள் நிறைந்திருந்தனர். விழா சரியாக 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று போட்டிருந்தாலும் சில நிமிடங்கள் தாமதமாக ஆனால் நம்ம ஊர் அரசியல் கூட்டம் போலில்லாமல் ஆரம்பமானது.

எஸ்.பி.பி.யின் அரங்க அறிமுகம் 'புதிய மனிதா... பூமிக்கு வா...' பாடல் பின்னனியில் அற்புதமாக இருந்தது. அந்த மகா கலைஞன் எந்த பந்தவும் இன்றி சாதரண உடையில் காலில் செருப்பணிந்து அரங்கத்தைப் பார்த்து கும்பிட்டபோது அரங்கமே அதிர்ந்தது... அவரை வரவேற்க மேடைக்கு பூத்து வந்தன குட்டிகுட்டி தேவதைகள்... அந்த மழலைச் சிரிப்பில் பூரித்து நின்றது எஸ்.பி.பி. மட்டுமல்ல... பார்வையாளர்களான அரங்கமும்தான். அவர்கள் பெயரை சொல்லியிருந்தல் பிஞ்சு மனசு நிறைந்திருக்கும். சொல்லவில்லை...

பின்னர் விழா ஆரம்பம்... பாரதி நட்புக்காக அமைப்பின் பெயர் காரணத்திற்காக அமைந்தாலும் டிசம்பர்-11ம் தேதி பாரதியின் பிறந்த நாளுக்கு சிகரம் அமைப்பது போல் இருந்தது 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே...'. அருமையான நடனம். தொடர்ந்து சில பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தினார்கள் மாணவ மாணவிகள். நடனங்களுக்கு மகுடம் சூட்டுவது போல் எஸ்.பி.பி.யின் குரலில் அமர்க்களமாக வந்த 'சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' மற்ற பாடல்களுக்கு நடனமாடிய அனைவரும் ஒன்றாய் ஆறு பிரிவாய் ஆடியது கலக்கல்... எல்லா நடனங்களையும் அமைத்தவர் ஆஷா நாயர். அவருக்கு தனியாக ஒரு சூப்பர் அல்ல... சூப்பரோ சூப்பர் சொல்லலாம். கிரேட் அம்மா.

பின்னர் வீணை நாயகர் ராஜேஷ் வைத்யாவின் நிகழ்ச்சி ஆரம்பமானது. மேடையின் நடுவே வீணையுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும் திரை இசை நிகழ்ச்சி என்று நினைத்திருந்தவர்கள் எல்லாரும் 'என்னடா இது கர்நாடக கச்சேரியா... ஐய்யோ' என்று நினைக்க மனுசன் எல்லாரையும் கட்டிப் போட்டதுடன் மட்டுமல்லாமல் இன்னும் நடத்தமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு பாடலின் போதும் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது. எஸ்.பி.பியின் பாடல்களை அவர் அனுபவித்து வாசித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக 'எங்கேயும் எப்போதும் சங்கீதம்... பாடலை வாசித்தபோது கரகோஷம் அடங்கவேயில்லை. எல்லாப் பாடலையும் மெய்மறந்து கை தட்டி ரசித்துக் கொண்டிருந்த எஸ்.பி.பியும் பாரதிராஜாவும் எழுந்து நின்று வைத்யாவைப் பாராட்டினர். வெல்டன் வைத்யா.

வைத்யாவின் இசை மழையைத் தொடர்ந்து விழா நாயகரை மையப்படுததி திரு.சங்கர் அவர்கள் சிறு கவிதையுடன் எஸ்.பி.பியின் திரையுலக வாழ்க்கைப் பயணம் குறித்த ஒரு தொகுப்பு ஒன்றை திரையில் வழங்கினார். அருமையான தொகுப்பு. 'அட' போட வைத்தாலும் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

பாராட்டு விழாவுக்காக அரங்கம் தயாரானது. பாரதி நட்புக்காக குழுவின் முக்கியஸ்தர்கள் மேடைக்கு அழைக்கப்பட, அவர்களைத் தொடர்ந்து இந்தியத் தூதரக பிரதிநிதி ஆர்.சி நாயர், வைரமுத்து, எஸ்.பி.பி. என ஒவ்வொருவராக மேடையேறினர். ஒவ்வொருவராக பேச... பாரதி நட்புக்காக அமைப்பிற்கான இணையதள அறிமுகம் முரளி என்பவரால் செய்யப்பட்டது. ஆனால முரளிக்கு தமிழ் அவ்வளவாக வர மறுத்ததால் அவர் பேசியதை கவனிக்கும் மனநிலையில் பார்வையாளர்கள் இருக்கவில்லை என்பதே உண்மை.

அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் பேசும்போது, அவர்களது அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களது ஆலோசகர் செய்யும் உதவிகள் குறித்தும் பேசினார். ஒரு 11 பேரை வைத்து (மேடையில் பரபரப்பாக திரிந்தவர்கள்... உறுப்பினர்கள் பலர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்) அருமையாக ஒரு தமிழ் அமைப்பை வழி நடத்துவது என்பது சாதாரணம் அல்ல. அந்தப் பணியை மிக நேர்த்தியாக செய்து வருகிறார் திரு. ராமகிருஷ்ணன். வாழ்த்துக்கள் ராம்கி.

திரு.ஆர்.சி. நாயர் பேசும் போது இந்திய தூதரக கலாச்சாரப் பிரிவு பற்றி பேசியதுடன் இதுவரை 6 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் உங்களுக்கு இன்னும் எனது தாய்மொழியில் (மலையாளம்) விருது கிடைக்கவில்லையே சார் என ஆதங்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து கர்ஜிக்க எழுந்து வந்த சிங்கம் தண்ணீர் பாட்டிலையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்தது. 'என் இனிய தமிழ் மக்களே...' என்று திரையில் ஒலிக்கும் அந்தக்குரல் நேரில் ஒலித்தபோது கரகோஷம் அடங்க அதிக நேரமானது. ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டில் பார்த்த பாரதிராஜா கோட்டுப் போட்டு ஒரு இளைஞனாக வந்திருந்தார். அவர் பேசும் போது எஸ்.பி.பியை மேட நாகரீகம் கருதி அவர், இவர் என்று பேசவிலை... எப்பவும் பேசுவதுபோல் வாடா, போடாதான். இதுதான் உண்மையான நட்பு இல்லையா?. 'நான் குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கும் போது கூட ஜின்ஸ் பேண்ட் டீ சர்ட்டில்தான் போவேன். இன்று கோட்டுப் போட்டு வரக் காரணம். இவனுக்கு போட்டியாத்தான் என்று ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் அழகாக சிரித்தபடி வரும் இவன்... கோட்டுப் போட்டு வந்தான்னா சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு அழகா இருப்பான். அதான் அவன் விழாவுக்கு அவன் சிம்பிளா வந்தாலும் நான் கோட்டுப் போட்டு வந்தேன். அவன் எங்கிட்ட 'என்னடா கோட்டெல்லாம் போட்டு வந்திருக்கேன்னு' கேட்டான் என்றவர் இந்தக் கோட்டை நான் நான்கு முறை மட்டுமே போட்டிருக்கேன். ஒண்ணு என் திருமணத்தில்... அடுத்தது அமெரிக்காவில் நான் எதோ சாதிச்சேன்னு நினைச்சு ஒரு பதினஞ்சு நாள் பேச கூப்பிட்டுருந்தாங்க. அப்ப இங்கீலீஸூம் தெரியாம அங்க போனப்போ போட்டேன். மூனாவது தடவையாக எம் மக கல்யாணத்தப்போ எல்லாரும் வற்புறுத்தியதால போட்டேன். இப்ப பாலுவுக்காகவே போட்டு வந்திருக்கேன்." என்றார்.

பாலு குறித்து நிறைய பேசியவர். "அவன் தலைக்கனம் இல்லாதவன்... யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டான்... அவனுக்கு மரணமே இல்லை... தமிழ் இருக்கும் வரை... இந்த உலகம் இருக்கும் வரை அவன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான் " என்றும் "மற்றவர்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவன், நான் சினிமாத்துறையில் வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில் இவன் பிரபல பாடகன். கச்சேரிக்கெல்லாம் போகும்போது பியட் காரை அவன் ஓட்ட, இரவு நேரப் பயணத்தில் தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அருகில் இருந்து கதை சொல்லிக் கொண்டே வருவேன். . அப்படி இப்படி அலைந்து 16 வயதினிலே படத்துக்கு வாய்ப்பு வாங்கிவிட்டேன். முதல் நாள் பூஜை இவன் பாடவேண்டும் என்று சொல்லியிருந்தேன். பூஜைக்கு வந்தாச்சு... இவனுக்கு தொண்டை சரியில்லை. முதல் காட்சி... முதல் படம்... இப்ப என்ன செய்வது என்று அந்த நேரத்தில் மலேசியா பக்கத்துல நின்னான் அவனை பாடவச்சேன். பின்னால் அதை கேட்டவன், அருமையா பாடியிருக்கான்... என்னாலகூட இப்படி பாடமுடியாது... அவனையே பாடச் சொல்லுன்னு சொல்லிட்டான்... இந்த தன்மை யாருக்கு வரும் சொல்லுங்க என்றார்.

இதே போல் இன்னொரு நிகழ்ச்சி, காதல் ஓவியம் படத்தில் ஒரு பாடலை தீபன் சக்கரவர்த்தி என்ற பையன் நல்லா பாடுவான் அவனுக்கு கொடு ரொம்ப நல்லா வரும் என்று தனக்கான வாய்ப்பை தீபனுக்கு கொடுத்தான். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாடலின் இறுதியில் ராகம் மட்டுமே வருவது போல் இருக்கும். எனக்கு இசை பற்றியெல்லாம் தெரியாது... கதையை சொல்லும் போது அந்த இடத்தில் 'தனகு தனகு தத்தா...' அப்படின்னு எதோ சொல்லிட்டேன். படம் எடுக்கும் போது எப்படி வாயசைக்க வைக்கிறது. அப்ப கதாநாயகனோட வாயை கட் பண்ணிட்டு கண்ணையும் கன்னத்தையும் மட்டும் சூட் பண்ணிட்டேன். கன்னத்தை மேலயும் கீழயும் ஆட்டச் சொல்லியிருந்தேன். அப்பத்தானே என்ன வேணுமினாலும் பாடலாம். இவங்கிட்ட சொன்னப்போ 'என்னடா சொல்றே என்ன பாட' என்றான் எதாவது பாடு என்றேன். பாடியிருப்பான் பாருங்க... இவன் மகா கலைஞன். இத்தனை வருசமா பாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. எத்தனையோ பேர் வந்தாலும் பாலுக்கென்று ஒரு இடம் இருக்கிறது.

அப்புறம் இவன் சட்டை ஒண்ணு கொடுத்தான் இன்னும் திருப்பி கொடுக்கலை... கிழிச்சாச்சு. இவனும் இளையராஜாவும் நமக்கு கிடைத்த பெரிய சொத்து. இவங்கிட்ட இருக்கிற எல்லா குணமும் அவங்கிட்ட இருந்திருந்தா அவன் இன்னைக்கு இன்னும் பெரிய இடத்துல இருப்பான். அவன் கிட்ட ஈரம் கம்மி... அதை நான் அவன் கிட்டயே சொல்லியிருக்கேன். (ராசாவுக்கு கோபம் அதிகம் வரும் என்பதை ஈரம் கம்மி என்று சொன்னாரா தெரியவில்லை... அத்துடன் முடித்துக் கொண்டார்). எனக்கு பொய் பேச வராது... உண்மையை மட்டுமே சொல்லுவேன் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். எனக்கும் பாலுக்குமான நெருக்கம் அதிகமிருந்தாலும் எங்கள் பட சம்பந்தமான தொடர்பு கம்மிதான்.

எனக்கு அதிக வயதோ இல்லை அவனுக்கு அதிக வயதோ தெரியாது ஆனால் எங்களுக்குள்ளான பந்தம் ரொம்ப நெருக்கமானது என்று பாரதிராஜா சொன்னபோது மேடையில் இருந்த எஸ்.பி.பி. 'உன்னைவிட எனக்கு 5 வயது கம்மி' என்று கையைக் காட்ட என்னைவிட ஐந்து வயது சிறியவனாம். என்னைவிட ஒரு வயது கூட இருந்தால் அவன் காலில் விழ நான் தயார் என்ற போது எஸ்.பி.பி. காதுகளை மூடிக்கொண்டார். 'ஏன்னா அவன் தலைக்கனமில்லாத கலைஞன்.... பாரதி நட்புக்காக... ஆம் இந்த பாரதியின் (அவரது நெஞ்சில் கை வைத்து) நட்புக்காக (எஸ்.பி.பியை) கை காட்டி இந்த பாராட்டு... இதைவிட இன்னும் ஒரு பெரிய மேடையில் இவனுக்கு பாராட்டுவிழா நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும். அங்கும் இன்னும் நிறைய இவனைப் பற்றி சொல்லவேண்டும். எல்லா மொழியிலுமாக 39,000 பாட்டு பாடியிருக்கான்... இன்னும் அதே குரல் வளம்... எத்தனையோ பேர் வந்து போயிருக்காங்க... ஆனா நான் பார்த்து வியக்கிறது இருவர்.. ஒண்ணு இவன்... மற்றாவர் ஜானகி... இருவருக்கும் இன்னும் இளமையான குரல்.

கடந்த மூன்று வருடமாக பாடகர்களை மட்டுமே அழைத்து பாராட்டுவிழா நடத்துகிறார்கள். அதற்கு முன்னரே நான் வந்துவிட்டேன். அதில் இயக்கநருக்கு முதல் மரியாதை தந்துவிட்டார்கள்

இந்த வைத்யா என்னய்யா பண்ணினான். எனக்குத் தெரிந்து வீணை என்பது தூங்குவதற்காக வாசிப்பதுதான்... இந்த குன்னக்குடி ஒரு வயலினை வச்சிக்கிட்டு 'டொய்யி டொய்யி...' வாசிப்பாரு... அது ஒரு மாதிரி கட்டிப் போடும் . எல்லாப் பாட்டையும் அவன் வாசித்த அழகு என்னமா வாசிக்கிறான். இன்னைக்குத்தான் முதல் முதலா அவன் கச்சேரி கேக்குறேன். ஏர்போர்ட்ல பார்த்தப்போ 'நீங்க... எஸ்.பி.பி. சார் பாராட்டு விழாவுக்குத்தானே..' என்று எதோ வந்து பேசினான்... சரி எதாவது வாசிப்பான் போலன்னு பார்த்தா எல்லாரையும் கட்டிப்போட்டுட்டானேய்யா... அருமை... சூப்பர்... இந்த வைத்யா வீணையை காதலிக்கிறான்யா... கல்யாணம் பண்ணிட்ட சின்ன சின்ன விஷயத்தில் எல்லாம் சண்டை வரும் ஆனால் காதலிக்கும் போது சண்டைக்கே வாய்ப்பில்லை... இந்த காதல் கடைசி வரைக்கும் காதலாவே இருக்கணும் அப்பதான் அதிகம் ருசிக்கும். வைத்யா நீ உன் வீணையை காதலித்துக் கொண்டே இரு. என்று வைத்யாவை பாராட்டியதுடன்.. நடனம் அமைத்த ஆஷா நாயர் அவர்களையும் பாராட்டினார். பேசி முடித்து அமர வந்த பாரதிராஜாவின் கால்களை தொட்டு வணங்கினார் எஸ்.பி.பி.

பின்னர் பேச வந்த எஸ்.பி.பி. என்னும் இசைக் கலைஞன், முதலில் வைத்யாவைப் பாராட்டி குழந்தைகளின் நடனத்தைப் பாராட்டி வைத்யாவின் இசையில் பாடல்களை கண்டுபிடித்து கரகோஷ மழை பெய்த பார்வையாளர்களின் இசைப் புலமையைப் பாராட்டி உரையை தொடங்கினார். 'எத்தனையோ பேர் வந்தாலும் என்னை உங்கள் இதய சிம்மாசனத்தில் தனி இடத்தில் வைத்திருக்கும் உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். எல்லாருக்கும் தனித்தனியா வீடு வீடா வந்து நன்றி சொல்லனும் அது முடியாதே... என்றார். நான் சிறியவன் பாலச்சந்தர், பாரதிராஜா என எல்லாப் பெரியவர்களையும் பாராட்டி இப்பதான் நான் வந்திருக்கிறேன்... அதில் எனக்கு சந்தோஷமே. 16 வயதினிலேயில் டாக்டர் கேரக்டரில் என்னை நடிக்கச் சொல்லியிருந்தான்... எனக்கும் ஆசைதான்... முடியலை... அதேபோல் முதல் மரியாதை படத்தில் என்னைத்தான் முதலில் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தான். (இப்போது அரங்கத்தில் 'ஓ' என்ற குரல்கள் எழ) 'நீங்க ஆன்னாலும் ஓன்னாலும் ஓஹோன்னாலும் இதுதான் உண்மை' என்றவர், 45 நாட்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்ற போது ஒரு நாளைக்கு 6,7 பாட்டு பாடுறேன்... அதையெல்லாம் 45 நாள் விட்டுட்டு வந்த பெரிய பாதிப்பு வருமேடா என்று மறுத்தேன். சிவாஜி சார் நடித்தார்.... அதனால்தான் அந்தப் படத்துக்கு அந்தனை பெருமையும்... விருதுகளும்... நான் நடித்திருந்தாலும் நன்றாக நடித்திருப்பேன் என்றார்.

சிவப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை இவன் எங்கிட்ட சொன்னபோது 'டேய் இந்த கதையில் யாரை நடிக்க வைப்பே... சிவாஜி சார் நடிச்சாத்தான் நல்லாயிருக்கும்... அவர் ஒத்துப்பாரா என்றேன். அப்ப கமல் பிரபலமாகத நடிகனாத்தான் இருந்தான். இல்லடா இந்தப் படத்தை எடுத்துச் ஜெயிக்கிறோம் என்றான்... ஜெயித்தான்... இன்றைய புதுமைகளை அப்பவே செய்தவன் இவன். இவன் சினிமாவுக்கு வாறதுக்கு முன்னால நாடகம் போட்டான். எங்கிட்ட ஒரு ஜிப்பா இருந்துச்சி... இவனுக்கு அது மேல ரொம்ப நாளா ஒரு கண்... அப்ப ஒரு நாடகத்துல நடிக்கும் போது டேய்... இந்த ஜிப்பாவைக் கொடு... போட்டுட்டு தந்திடுறேன்னு சொன்னான்... எங்கிட்ட இருந்ததே ஒண்ணே ஒண்ணு... திருப்பி தந்திரணும் என்று சொல்லிக் கொடுத்தேன். ஸ்டேஜ்ல நடிக்கும் போது ஆர்வக்கோளாறுல என் ஜிப்பாவை பிடிச்சுக் கிழிச்சிட்டான்... நான் கீழ இருந்து டேய் அது என் ஜிப்பாடான்னு கத்துறேன்... அப்புறம் வாங்கித்தாறேன்டா என்றான். அந்தக் கடன் இன்னும் அப்படியே இருக்கு. இருக்கணும் அப்படி ஒரு கடன் இருந்தாத்தான் எங்கள் அன்பு இன்னும் பலமாகும்.

எனக்கு ஏன் மலையாளத்தில் விருது கிடைக்கவில்லை என்று நாயர் அவர்கள் கேட்டார்கள்... விரைவில் கிடைக்க வேண்டும் என்றார்கள்... அவர்கள் அன்புக்கு நன்றி... காரணம் என்னவென்றால் எனக்கு மலையாளத்தில் அதுபோல பாடல்கள் கிடைக்கவில்லை. அங்கே ஒரு அருமையான கலைஞன் இருக்கிறார். அவரை விட நான் எப்படி பாடமுடியும். அது என் ஒன்றுவிட்ட சகோதரன் ஜேசுதாஸ் அண்ணாதான். அண்ணனும் என்னை தன் தம்பியாகத்தான் நினைக்கிறார். மலையாளத்தில் தாஸ் அண்ணாவுக்கு கிடைத்த விருதுகளை எல்லாம் எனக்கு கிடைத்த விருதாகத்தான் நினைக்கிறேன். அதேபோல் தெலுங்கில் தாஸ் அண்ணாவுக்கு விருது கிடைக்கவில்லை... ஆனால் எனக்குக் கிடைத்த விருதுகளை எல்லாம் அண்ணனுக்கு கிடைத்த விருதாகத்தான் எண்ணிக் கொள்வேன் என்றார்.

இந்த பூமியில் என்னை தவழவிட்ட என் பெற்றோர், எந்த இசைப்பின்புலமும் இல்லாமல் வந்த என்னை பாடவைத்த என் குருநாதர், 15, 16 வயதில் என்னுடன் ஓடிவந்த என் மனைவி இவர்களெல்லாம் என் பயணத்தில் முக்கியமானவர்கள். நான் என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்... வீட்டில் அரிசியிருக்கிறதா என்றெல்லாம் பார்த்ததேயில்லை... காசைக் கொடுப்பேன் எல்லாம் அவள்தான். நானும் அவளும் காதலிச்சு கல்யாணம் பண்ணினவங்க... அப்ப எனக்கு 22 வயசு, அவளுக்கு 15,16 வயசிருக்கும். வீட்ல ஒத்துக்கலை... நான் சென்னையில்... அவள் பெங்களூரில்... எனது நண்பர்கள் உதவியுடன் பெங்களூரில் இருந்து அவளை கடத்தி சென்னையில் திருமணம் செய்தால் போலீஸ் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஆந்திராவில் ஒரு மலைக் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். அப்போது என் நண்பர்கள் கையில் இருந்த மொத்த பணமே 500 மட்டும்தான். இன்றுவரை நான் ஜெயிக்க அவள்தான் காரணம். இப்பவும் உங்கள் அன்பாலும் கடவுளின் அணுக்கிரகத்தாலும் வருடம் 365 நாளும் பாடுகிறேன். நாங்கள் இளமையில் இழந்த சந்தோஷங்களை எங்கள் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் சந்தோஷமாக களிக்கிறோம். எம்.ஜி.யாருக்காக நான் பாடிய முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா...' அதே படத்தில் மற்றுமொரு பாடல் பாடினேன். அம்மா குறித்த அந்தப் பாடல் எம்.ஜி.யாருக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் பாடல் வரிகள் மிகவும் சுலோவாக வருவதால் வேறு பாடல் மாற்றப்பட்டது. அதை என் அன்னைக்காக நான் இங்கே பாடுகிறேன். இசையெல்லாம் இல்லை... வைத்யா விரைவாக செல்ல இருப்பதால் அவரை இசைக்கு பயன்படுத்த முடியாத நிலை... இருந்தும் பாடுறேன்... நீங்க அமைதியா ரசிங்க... குழந்தைங்க புட்பால் விளையாடுற மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் திரியுறாங்க... கொஞ்சம் கண்ட் ரோல் பண்ணுங்க... முடியலைன்னா விட்டுடுங்க... என்றபடி பாட... இரவு நேரங்களில் பாலைவனப் பூமியில் பலரது தூக்கத்துக்கு தாலாட்டா இருக்கும் எஸ்.பி.பியின் அந்த குரல் ஒலித்ததும் அரங்கமே அமைதியானது.

இந்த அமைப்பினர் ஒரு பெரிய தொகையை எனக்கு அளிக்க உள்ளார்கள். நான் எனது தந்தை பெயரில் ஒரு டிரஸ்ட் நடத்துகிறேன். அதற்கு யாரிடமும் பணம் பெறாமல் எனது பணத்தை மட்டுமே உபயோகித்து வருகிறேன். இவர்கள் கொடுத்த பணத்தில் பாதியை அதற்கு பயன்படுத்த இருக்கிறேன். மீதத்தை பாலைவனப் பூமியில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யும் பாரதி அமைப்பிற்கு எனது சிறு பங்காக அளிக்க நினைக்கிறேன். மறுக்காமல் வாங்கிக் கொள்ளவும். இதற்கு கரகோஷம் எழுந்த போது பாரதி அமைப்பினர் எழுந்து நின்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

எஸ்.பி.பி.யின் பாடல்கள் சிலவற்றை அவர் பாடுவார் என்ற ஆவலோடு போனவர்களுக்கு ஏமாற்றமே... அவர் பேச மட்டுமே செய்தார். இருந்து சில நல்ல கலைஞர்களை கொண்டு வாடைக்காற்று ஆரம்பித்திருக்கும் இந்த மாதத்தில் விழா வைத்து தமிழர்களை மட்டுமல்லாது மலையாளிகளையும் உற்சாகப்படுத்திய பாரதி நட்புக்காக அமைப்பின் தோழர்களையும் அவர்களுக்கு பின்னணியில் உதவியாய் இருந்த நண்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாரதி நட்புக்காக அமைப்பின் இணையதள முகவரி....  www.bharathinet.com

**********

மிக முக்கியம் 1: இந்த விழாவில் நான் ரசித்த சுவராஸ்யங்களையும் பாரதி நட்புக்காக இப்படி செய்திருக்கலாமே என்று யோசிக்க வைத்த நிகழ்வுகளையும் அடுத்த பகிர்வில் தருகிறேன்...

மிக முக்கியம் 2: நண்பர் ஒரு ஒருவரிடம் போட்டோஸ் கேட்டிருக்கிறேன்.  கிடைத்தால் அதையும் பகிர்கிறேன். (ஹைய்யா... இன்னும் ரெண்டு பதிவுக்கு நம்ம பாரதி மேட்டர் இருக்கு...)

மிக முக்கியம் 3: போட்டோ எனது மொபைலில் எடுத்தது... நல்லா இருப்பது போல் தெரியவில்லை...உருவங்கள் தெரிகிறதா என்று படத்தை கிளிக் செய்து பாருங்கள்.

-'பரிவை' சே.குமார்