மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 செப்டம்பர், 2015

சிறகை விரியுங்கள் பெண்களே..!

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி

ன்றைய உலகில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது... எப்படி நடத்துகிறது என்று பார்த்தால் இன்னும் அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் இருந்து சற்றே முன்னேறியிருக்கிறார்கள்... அப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து இன்று சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. முன்னேற்றப் பாதையில் பயணிக்க பெண்களுக்குத் தயக்கம்... அந்தத் தயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டும்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சிலர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து பார்த்து வாழ்ந்து வருகிறார்கள். இது ஆரோக்கியமான உறவுக்கு அடித்தளம்... இது போன்று வாழ்பவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்... ஒரு அந்நியோன்யம் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். ஆனால் பல வீடுகளில் பெண் அதிகாலையில் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் செய்து, குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்து, அவர்களைக் கிளப்பி தானும் கிளம்பி கணவனுக்கு பெட்காபி கொடுத்து எழுப்பும் போது எட்டு மணிக்கு மேலாகும். மெதுவாக எழுந்து குளித்து பேப்பர் பார்த்து, சாப்பிட வரும் போது அவள் குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டு வந்து அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருப்பாள். அவனும் அவளைப் பற்றிய கவலை ஏதுமின்றி கிளம்பிப் போய்விடுவான். அதேபோல் மாலை வந்து அவள் எல்லா வேலைகளையும் பார்த்து சமையல் முடித்து சாப்பிட அழைக்கும் வரை இவன் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பானா என்றால் அதுவும் இல்லை... டிவியில் செய்தி பார்ப்பான்... வடிவேலு நகைச்சுவைக்கு சிரித்துக் கொண்டிருப்பான்.  சாப்பிட்டதும் எல்லோரும் படுக்கைக்குப் போனாலும் பாத்திரங்களைக் கழுவி குழந்தைகளுக்கு பால் காய்ச்சி எடுத்து வரும்போது பத்து மணிக்கு மேலாகிவிடும். அதன் பிறகு படுத்து அவனை சந்தோஷப்படுத்தி தூங்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு என்னடி பிகு பண்ணுறேன்னு கோபம் வந்துவிடும். இந்த இயந்திர வாழ்க்கையில் எப்படி அந்நியோன்யம் இருக்கும். இங்கு பெண்மை எங்கே போற்றப்படுகிறது. அடிமைத்தனம் அல்லவா தலைவிரித்தாடுகிறது. சமூகம் அல்ல குடும்பத்துக்குள்ளேயே இப்படித்தான் பார்க்கப்படுகிறது.

கிராமங்களில் முன்பெல்லாம் கணவன் சாப்பிடும் போது மனைவி எழுந்து நின்றுதான் பரிமாறவேண்டும். இல்லையேல் சாப்பிடும் கணவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உடம்புக்கு முடியலை என்று உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போட்டால் 'என்ன மரியாதை இருக்கு' என்று சத்தம் போடுவார்கள். இதற்காகவே உடம்புக்கு முடியவில்லை என்றால் மகளிடம் சொல்லி போடச் சொல்வார்கள். அவளும் நின்றுதான் போடவேண்டும். ஆனால் இன்றைக்கு நிலமை ரொம்ப மாறிவிட்டது. உட்கார்ந்து கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும்தான் சாப்பிடுகிறார்கள். நின்று கொண்டு பரிமாற வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. இது முன்னேற்றமா... இங்கே பெண்மை போற்றப்படுகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இது அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்ததற்கான அடையாளம்தானே... கணவன் சாப்பிட்ட பின்னே மனைவி சாப்பிட வேண்டும் என்ற நிலையெல்லாம் மாறி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காலம் வந்துவிட்டதல்லவா?

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் என்பது நரகமான நாட்கள் என்பதை எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்... நேற்று எப்படி தனக்கு பணிவிடை செய்தாலோ அப்படித்தான் இன்றும் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த நாட்களில் நீ ஒன்றும் செய்ய வேண்டாம்... நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் கொஞ்சமே... மற்றவர்கள் எல்லாம் அதையெல்லாம் பெரிதாய் பார்ப்பதில்லை. நாப்கின் வாங்கிக் கொடுக்கும் அப்பா, கணவன், சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் இன்னும் இது குறித்த அறிவு பரவலாகவில்லை என்பதை நாப்கினை கருப்பு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது பேப்பரிலோ சுற்றிக் கொடுக்கும் கடைக்காரர் சமூகத்தின் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை. 

பெண்களை வீட்டில் நடத்தும் விதங்கள் மாறிவிட்டாலும் சமூகத்தில் அவர்கள் இன்னும் போகப்பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்... எத்தனை எத்தனை கற்பழிப்புக்கள்... தினமும் செய்திகளாய் சிரிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் காரணம் என்ன..? போதையில் செய்தான்... குடும்பப்பகையில் செய்தான் என்று சொல்கிறார்களே... போதையும் பகையும் ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாகவா பார்க்க வைக்கும். இதற்கெல்லாம் காரணம் சினிமாதான்... பட நாயகியின் கவர்ச்சி உடைகளைப் போல் இன்று வீட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதை போட்டுக் கொண்டு வெளியில் போகும் போது உறுத்தும் அழகுதான் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமே... இங்கு சமூகத்தின் மீது பலியைப் போட்டாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விடுத்து எல்லை மீறும் பெண்களும்தான் காரணம் என்பதை மறுக்க முடியுமா இல்லை மறைக்க முடியாமா? இங்கு தங்கள் முன்னேற்றத்திற்கு தாங்களேதான் தடையாக இருக்கிறார்கள் என்பதை பெண்ணினம் ஏன் யோசிப்பதில்லை.

இங்கு நம்ம நாட்டு மக்கள் நிறைய இருக்கிறார்கள். தங்களின் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை அங்கங்கள் தெரியும்படியான உடைகள் அணிவித்து பெற்றவர்களே ரோட்டில் கூட்டிச் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அந்தப் பெண்ணை கடந்து செல்லுவோர் பார்த்துச் செல்வதை ரசித்துக் கொண்டே போவது போல்தான் தோன்றும் அவர்களின் செயல். வேலைக்கு போகும் போது ஒரு பத்தாவது படிக்கும் பையனும் அவனுடன் படிக்கும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் நாட்களும் உண்டு. இதெல்லாம் இங்கே சரியாகப்படலாம். சிகரெட் பிடிப்பது எல்லாம் இங்கு சாதாரணமாகிவிட்டது. ஆண்களுக்கான சிகரெட் பெண்களுக்கான சிகரெட் என்று தரம் வேறு... ஒரு பெண் கையில் புகையும் சிகரெட்டுடன் நான்கு ஆண்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே தம் அடிக்கிறாள். இந்தக் கலாச்சாரம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஊரிலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவி, பீர் அடிக்கும் ஐடி பெண்கள் என அமோகமாய் நாமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சமூகம் பெண்களை தவறாக பார்க்கிறது... மோசமாக நடத்துகிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்றைய இளைய சமுதாயம் மோசமான ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்தானே?

முன்பெல்லாம் வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் காலூன்றி நிற்க வேண்டும் என்றால் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும். ஆனால் இன்று பாரதி கண்ட புதுமைப்பெண்கள் நிறைய வலம் வர ஆரம்பித்துவிட்டதால் இன்றைக்கு அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று சொல்லும் ஆண்வர்க்கம் அடங்கிப் போய்கிடக்கிறது. பெண்கள் எல்லாம் முடங்கிப்போய் கிடக்காமல் புதிய தென்றலாய் புறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தின் பார்வையில் இன்றைய நிலையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராய்த்தான் இருக்கிறார்கள்.

பெண்களை சமூகம் பார்க்கும் பார்வைக்கு எத்தனையோ கதைகளையும் காரணங்களையும் சொல்லலாம்தான் ஆனால் பணத்துக்காக சினிமா... கரகாட்டம்... ஆடல்பாடல்... தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது...? இந்தச் சமூகமா அவர்களை இப்படி நடந்துகொள்ளச் சொல்கிறது..? அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா...? பெற்றவர்களோ... கட்டியவனோ இப்படி நடக்கச் சொன்னால் அவனை எதிர்த்து... தன்னால் சுயமாக வாழ முடியாதா..?  எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இன்றைய சமூகத்தில் தாங்கள் தனித்து வாழ்ந்து சாதிக்கவில்லையா...? அப்படியிருக்க சில பெண்கள் சமூகம்தான் என்னை இப்படி ஆக்கியது என்று புலம்பிக்கொண்டே அதே சகதியில்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எல்லாம் அதிலிருந்து வெளிவந்து வாழ்ந்து காட்டும்போது பெண்ணை கேவலமாகப் பார்க்கும் இந்தச் சமூகம் தன்னைத் திருத்திக்கொள்ளும்.

இன்று ஆயா வேலையில் இருந்து நாட்டை ஆள்வது வரை பெண்கள் ராஜ்ஜியமே.... சென்னையில் முதல் மெட்ரோ ரயிலை முதன் முதலில் ஓட்டியதும் இரண்டு பெண்கள்தான்... இன்று விமானத்தையும் இயக்குகிறார்கள்... ஏன் கல்பனா சாவ்லா நிலவுக்கு செல்லவில்லையா..? சானியா மிர்சாக்களும் செய்னா நோவல்களும் பிடி.உஷாக்களும் சாதிக்கவில்லையா..?  திலகவதி ஐ.பி.எஸ்களும் ஜானகிகளும் சாதிக்கவில்லையா..? கண் இல்லை என்றாலும் கணீர்க்குரலால் வைக்கம் விஜயலெட்சுமி சமூகத்தில் சாதிக்கவில்லையா...? ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜொலிக்கிறார்கள். இங்கு ஆணுக்கு நிகராக என்று சொல்லும் போது நட்சத்திரங்களாய் மின்னுகிறார்கள் என்ற சந்தோஷத்தோடு சிகரெட், மது என்று இன்னொரு பக்கம் இன்றைய இளம் பெண்கள் ஆணுக்கு நிகராக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வேதனையையும் சுமக்கத்தான் வேண்டியிருக்கிறது.

சமூகம் என்னை இப்படிப் பண்ணுது... அப்படிப் பண்ணுதுன்னு புலம்புறதை விட்டுட்டு இன்றைக்கு கிடைத்திருக்கும் சுகந்திர வாழ்க்கையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால் கவர்ச்சிக்கும் போதைக்கும் தங்களை இழக்காமல் இருக்க வேண்டும்.  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன காலம் போய் பெண்கள் படிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கல்வி கொடுக்க நினைக்கும் சமூகத்தில்தான் இப்போது வாழ்கிறோம். சமூகம் பெண்களை எப்படிப் பார்த்தாலும் நான் பெண்... என்னை சமூகம் அப்படிப் பார்க்கிறது... கேவலமாகப் பேசுகிறது என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் பரந்த உலகில் குதித்து வெளியே வந்தால் சாதிக்கலாம்... அப்படி சிறகடித்துப் பறந்த பெண்கள் எல்லாம் இன்றைக்குச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாரும் சிறகை விரிக்க வேண்டும்...  சிறகுகள் சிறந்த இலக்கை நோக்கிப் பறக்க வேண்டும்... சிந்தையில் முன்னேற்றத்திற்கான கரு விளைய வேண்டும்...

ஆணுக்குப் பெண் நிகர் என்றாலும் இட ஓதுக்கிட்டில் இன்னும் முழுமை பெறாவிட்டாலும் சாதனைச் சிகரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் பெண்கள் உலகம் விரிய வேண்டும் என்றால் அடிமைச்சிறை, அழித்துக் கொள்ளும் நிலைகளில் இருந்து பெண்கள் வெளியில் வரவேண்டும்... பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புற்றீசல் போல் வெளிவரவேண்டும்... வருவார்கள்... சாதிப்பார்கள்... 

நாளைய உலகம் பெண்கள் கையில்... உயரப் பறக்கப் போகும் அவர்களை உச்சிமோர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை நாம் கண்கூடாக பார்க்கத்தான் போகிறோம்... 

**************

"இப்படைப்பு  எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது,  இதற்கென எழுதப்பட்ட கட்டுரை இது, இதற்கு முன் வெளியான கட்டுரை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..."

**************

பதிவர் விழாவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...


-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சினிமா : குற்றம் கடிதல்


ற்போது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான இடங்களில் ஆசிரியர் அடித்தார் என போலீசுக்குப் போவதும்... பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் குதிப்பதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களை வைத்து கதை சொல்லும் வழக்கமான பாணியில் பயணிக்காமல் காட்சிகளை வைத்து கதை சொல்லியிருக்கிறார், அதில் ஜெயித்தும் இருக்கிறார். இல்லையென்றால் படம் வெளிவருவதற்கு முன்னரே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்காது அல்லவா?

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் குற்றம் கடிதலில் என்றுதானே யோசிக்கிறீர்கள். ஆசிரியர்கள் மாணாக்கர்களை அடிப்பது சரியா..? தவறா..? என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். மேலும் செக்ஸ் கல்வியின் அவசியத்தையும் இதில் தெளிவுபடுத்தி இருக்கிறார். பணம் பிடுங்கும் கல்வி நிலையங்கள், மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் என எல்லாவற்றுக்கும் சேர்த்து நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

கிறிஸ்தவப் பெண்ணான ஆசிரியை மெர்லின் இந்துப் பையனான இன்சினியர் மணிகண்டனை காதலித்து அம்மாவின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்குப் பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்புகிறாள். அவள் ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழையும் போது அங்கு செக்ஸ் கல்வி குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. புதுப்பெண்ணான அவளிடம் தோழி அது குறித்து கேட்கும் போது வேண்டாம் என்று தலையசைத்து ஒரு புன்னகையோடு கடந்து விடுகிறாள்.அதன் பின் எல்லாருக்கும் இனிப்புக் கொடுக்கிறாள்.

அதன்பின்னான வகுப்பறைக் காட்சிகளில் ஒவ்வொரு ஆசிரியரின் அணுகுமுறையும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தன் தோழி பெர்மிஷனில் போக, அடங்காத மாணவர்கள் நிறைந்த அந்த வகுப்புக்குப் போகிறாள்... வருகிறது வினை.  ஒரு மாணவி அழுது கொண்டிருக்க என்னவென்று கேட்கிறாள். பக்கத்து மாணவி அவள் பிறந்தநாள் சாக்லெட் கொடுத்ததற்கு செழியன் முத்தம் கொடுத்துவிட்டான் என்று சொல்ல அவனை அழைத்துக் கேட்கிறாள். எது சரி... எது தவறு என்று அறியாத பருவம், 'டீச்சர் நீங்க பிறந்தநாள்ன்னு ஸ்வீட் கொடுத்தால் உங்களுக்கும் கிஸ் கொடுப்பேன்' என்று சொல்ல, விடுகிறாள் ஒரு அறை. அவ்வளவுதான்... மாணவன் மயங்கி விழ, பிரச்சினை விஸ்வருபம் எடுக்கிறது. அதன் பின்னான காட்சிப்படுத்துதலில் பிண்ணிப் பெடலெடுத்திருக்கிறார் இயக்குநர். சபாஷ் திரு. பிரம்மா.

மெர்லின் மீது பாசம் வைத்திருக்கும் பள்ளி முதல்வரும் ஆசிரியையான அவரின் மனைவியும் அவளை பாதுகாப்பாக வேறு ஊருக்கு செல்லச் சொல்லிவிட்டு மாணவனை ஆஸ்பிடலில் சேர்க்கிறார்கள். விவரம் தெரிந்து ஓடிவரும் மணிகண்டனையும் உடனே மனைவியை கூட்டிக்கிட்டு போ என ஒரு முகவரி கொடுத்து அனுப்புறார் முதல்வர். மனைவியைக் கூட்டிக் கொண்டு பேருந்தில் பயணிக்கிறான், பையன் கோமா ஸ்டேஜில் கிடக்க... மெர்லினோ வேதனைகளைச் சுமந்து அழுது அரற்றி ஒரு பைத்தியம் போல் பயணிக்கிறாள். அவளின் சிறு தவறு இவ்வளவு பெரிதாகி நிற்கிறதே என காதல் மனைவியை திட்டவும் முடியாமல் அவள் கதறி அழும்போதெல்லாம் தேற்றவும் முடியாமல் தவிக்கிறான் மணிகண்டன்.


இதற்கிடையே மீடியா இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கிறது... விவாதங்கள்... அது இது என ஒரு பக்கம் போக, மாணவன் செழியனோ தந்தையை இழந்தவன், ஆட்டோ ஓட்டும் அம்மா மட்டும்தான். அவனின் தாய்மாமா புரட்சிகர இளைஞர்... அவர் மெர்லினை தேடி ஒவ்வொரு இடமாக விசாரிக்கிறார். அவர்கள் சார்ந்த சமூகம் பள்ளி மீது கல்லெறிகிறது. மாணவனின் ஆபரேசனுக்காக தனது கைப்பணத்தைக் கட்டுகிறார் முதல்வர். பள்ளி நிர்வாகம் மெர்லினை சஸ்பெண்ட் செய்யச் சொல்கிறது. போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்கப்படுவதால் அவர்களும் அவளை விடிவதற்குள் பிடிப்பதற்கு ஆயத்தமாகிறது.

இந்நிலையில் மணிகண்டன் நண்பனின் மூலமாக இன்ஸ்பெக்டருடன் பேசி அவள் உதவியை நாடுகிறான். மீண்டும் லாரியில் ஏறி சென்னைக்கு திரும்பி வருகிறார்கள்... அவர்கள் மருத்துவமனை வந்தார்களா? மாணவன் செழியன் என்ன ஆனான்? மெர்லின் அடித்ததால்தான் அவன் கோமாவில் விழுகிறானா? போலீஸ் மெர்லினுக்கு உதவியதா இல்லையா? தாய்மாமன் அவர்களை எதுவும் செய்யாது விட்டுவிட்டானா? மெர்லின் செழியனின் அம்மாவைப் பார்த்தாளா? அவள் அவளை என்ன செய்தாள்? இப்படி பல கேள்விகளுக்கான விடைகளை அழகான காட்சிப்படுத்துதல் மூலமாகச் சொல்லி முடித்திருக்கிறார்.

இந்துவைக் கட்டிக் கொண்டாலும் இருவருக்குள்ளும் மதம் மாறும் எண்ணமெல்லாம் இல்லை என்பதாய்க் காட்டிவிட்டு... அவள் குங்குமம் வைத்துக் கொண்டு சென்றதால்தான் பிரச்சினை என்று ஒரு படித்த ஆசிரியை நினைப்பது போல் காட்டுவதும் அதை கையால் அழித்தாலே போதும் என்ற நிலையில்... (அதுபோக இவ்வளவு பிரச்சினையில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள் காலையில் வைத்த பொட்டு அப்படியே இரவு வரைக்கும் இருக்கு என்று வேறு காட்டுவது எவ்வளவு அபத்தம்) தண்ணீரை வைத்துத் தேய்த்துக் கழுவுவது போல் காட்டுவதும்... அவர்கள் பயணிக்கும் லாரியில் பைபிள் வாசகம் இருப்பது போல் காட்டுவதும் மதப் பிரசங்கமாகவே தெரிகிறது. இது போன்ற கதைகளைக் காட்சிகளாக்கி... காட்சிகள் மூலம் கதை சொல்லும் படங்களுக்குத் மத விலாசம் தேவையில்லைதானே... அதேபோல் அவர்கள் போகும் இடங்களில் நடக்கும் திருவிழாக்கள்... எதற்காக... இரண்டு மதங்களையும் சரிசமமாக தராசில் நிறுத்துவதற்கான முயற்சியா..?

வீட்டில் அலும்பு செய்யும் எலியை பொறி வைத்துப் பிடிக்கும் மெர்லின் அதைக் கொல்லக்கூடாது என்பதால் கணவனிடம் சொல்லி வெளியில் விட்டு வரச் சொல்லும் போதே அவள் எவ்வளவு மென்மையானவள் என்பதைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர். அதேபோல் செழியனின் மாமா போராட்டக்காரர் என்பதை அவரின் அறிமுகக் காட்சியிலேயே சொல்லிவிடுகிறார். ஆரம்பக்காட்சிகளில் எதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பமே லாரியில் பயணிப்பதாய் தொடங்கி அன்று காலை முதல் லாரியில் ஏறும்வரை நடந்த நிகழ்வை மெர்லின் விவரிப்பதாய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எந்தத் துணையுமின்றி இருக்கும் ஒரு தாய் மதமே முக்கியம் மகளோ அவளின் காதலோ முக்கியமில்லை என்று நினைப்பது என்பது ஏற்கும்படியாக இல்லை... அதேசமயம் பையனின் மாமா வந்து விசாரிக்கும் போது மகளுக்காக பேசுவதாய் காட்டுவதும் ஒட்டவில்லை. அப்போது அவ என்னை எதிர்த்து எவனையோ கட்டிக்கிட்டு ஓடிப்பொயிட்டான்னு சொல்லியிருக்கலாமே?


மேலும் மணிகண்டன் மெர்லினிடம் 'ஏன்டா இவனைக் கல்யாணம் பண்ணுனோம்ன்னு இருக்கா'ன்னு கேட்டதும் 'நீ கிறிஸ்டினா பொறந்திருக்கலாம்' என்று சொல்கிறாள்... ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்... காதலில் எங்கே வந்து சாதியும் மதமும்... அப்படியென்றால் அவனும் நீ இந்துவாக பிறந்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டிருக்கணும்தானே...? இவளுக்கு அம்மா இருக்கிறாள்... ஆனால் கணிப்பொறி இன்சினியரான நாயகனுக்கு பெற்றோர் இல்லையா? துறுதுறுப்பான இளைஞன் செழியனுக்கு மூளையில் அடைப்பு அதனால் அடிக்கடி மூக்கில் இருந்து ஒழுகும் ரத்தம்... பள்ளியில் இருக்கும் நேரத்தில் ஒரு கர்ச்சீப் முழுவதும் ரத்தம் ஆக்குகிறான்... அவனுக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பது புரட்சியாளனான மாமாவுக்கும் பெற்றவளுக்கும் தெரியாதா என்ன? அந்த ஆசிரியையை பிடித்தே ஆவேன் என்று திரிந்து பின்னர் அவர்களுக்கு ஆதரவாக வரும் இன்ஸ்பெக்டரம்மா கடைசியில் என்ன ஆனார்?  பேருந்தில் வரும்போது தாம்பரத்தில் இறங்கிவிடும் மனைவியை தேடிப் போகும் கணவனின் கண்களில் சிறிது நேர தேடலுக்குப் பிறகு மனைவி தட்டுப்படுவது என்பது நிஜத்தில் நடக்குமா? பையனின் அம்மாவைப் பார்க்கணும் என்று சொல்லுபவள் பேருந்தில் இருந்தே கணவனிடம் சொல்லியிருக்கலாமே... எதற்காக தாம்பரத்தில் இறங்க வேண்டும்...? இப்படி நிறைய கேள்விகளைச் சுமந்தாலும் எடுத்த கருவும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் படத்தை சிறந்த படமாக்கியிருக்கிறது.

படத்தின் முத்தாய்ப்பாய் புரட்சிக்கார மாமன் கடைசியில் எழுதும் வரிகளும்... அந்த வரிகளைத் தாங்கும் புத்தகமும்... கிரேட் முடிவு. படத்தில் செக்ஸ் கல்வியின் அவசியத்தையும், ஆசிரியர்களின் அலட்சியத்தையும் மட்டுமின்றி மீடியாக்கள் தெரிந்த செய்தியை வைத்து திரித்து போட்டி போட்டுக் கொண்டு வெளிக்கொண்டு வரும் அவசரத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுமுகங்கள் என்பதால் கதாபாத்திரங்களுக்காக கதையில் சமரசம் செய்து கொள்ளவில்லை அதுவே படத்தின் முதல் வெற்றி. பாத்திரங்கள் அனைவரும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் அதுதான் காட்சிகளை வைத்து கதையை அழகாக நகர்த்த வைத்திருக்கிறது. புதுமுகங்கள் சாய் ராஜ்குமாரும் ராதிகா பிரசிதாவும் நாயகன் நாயகியாக வாழ்ந்திருக்கிறார்கள். நாயகன் அட்டைக்கத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நாயகி ராதிகாவைச் சுற்றியே கதை பயணிப்பதால் முழுப் பொறுப்பும் அவருக்கே... முதல் படம் என்பது போலில்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சபாஷ் ராதிகா.

செழியனாக வரும் மாஸ்டர் அஜெய்,  மாமா பாவல் நவகீதன்,  அம்மாவாக வரும் சத்யா, பள்ளி முதல்வர் குலோத்துங்கன், அவரின் டீச்சர் மனைவியாக வரும் துர்கா, மெர்லினின் அம்மா, உடற்கல்வி ஆசிரியர் என ஒவ்வொருவரும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். படத்தொகுப்பு சி.எஸ்.பிரேம்... அவரின் பணி ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஒளிப்பதிவு மணிகண்டன், இசை சங்கர் ரங்கராஜன் என எல்லாமே படத்தில் நிறைவாய் அமைந்திருக்கிறது.


எல்லாருமே விமர்சனங்களில் படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்... அது உண்மைதான்... த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா போன்ற கலாச்சார அழிவுகளை உண்டாக்கும் கேவலமான படங்களுக்கு அலைமோதும் மக்கள் இதுபோன்ற படங்களைப் பார்த்து உற்சாகப்படுத்தினால் இன்னும் சில காக்கா முட்டைகளையும் குற்றம் கடிதல்களையும் கொடுக்கும் இயக்குநர்களை தமிழ் சினிமா உலகம் கண்டுகொள்ளும்.

நம் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்ற பாடலை அழகான இடத்தில் பயன்படுத்தி அதை காட்சிப்படுத்தியிருப்பது அழகோ அழகு... சின்னஞ்சிறு கிளியே நம் மனதுக்குள் பச்சக்கென்று ஒட்டிக் கொள்கிறது. மீடியா ஆட்கள் பேச வரும் போது கேமராவை ஆப்பண்ணுங்க சார் என்று மாமாவும் தன்னிடம் விசாரிக்க வரும் பெண்ணிடம் பேசாது விரட்டும் செழியனின் அம்மாவும் படத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று... ஏனென்றால் பிரச்சினை என்பதை மீடியாவிடம் பேச வேண்டியவர்களே அவர்கள்தான்... இதை பெருசாக்குவார்கள் என்று நினைத்திருக்கும் வேளையில் அவர்களின் செயல் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

படத்தின் நிறையை மட்டுமே சொல்வதல்ல விமர்சனம் சின்னச் சின்னக் குறைகளையும் சுட்டிக்காட்டினால்தான் இது போன்று நல்ல கருத்துக்களைச் சொல்லவரும் இயக்குநர்கள் யாரோ ஒருவருக்காக சமரசம் செய்து கொண்டு செய்யும் தவறுகளை தனது அடுத்தபடத்தில் கொஞ்சமேனும் குறைப்பார்கள். மற்றபடி குற்றம் கடிதல் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் குறிப்பாக ஒன்றை இரண்டாக்கி... கிராமத்துப் பாணியில் சொன்னால் பேனைப் பெருமாளாக்கி... பணம் பண்ணும் மீடியாக்காரர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்களது பார்க்க வேண்டிய படங்களில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(மனசு வலைத்தளத்தில் இது 850-வது பதிவு)

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 2. கொலையாளி யார்?

தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சுகுமாறன்.

பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

இனி...


"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  

"ம்..."

"உம் பேரு என்ன?"

"லதா"

"லதா.... ம்.. லதாதானா... இல்ல ஹேமலதா, சாருலதா இந்த மாதிரி..."

"லதாதான்..."

"கல்யாணம் ஆயிடுச்சா..?"

"ம்.."

"புருஷனுக்கு என்ன வேலை..?"

"பெயிண்ட் மேஸ்திரி..."

"பிள்ளைங்க...?"

"ஒரு பையன் ரெண்டாவது படிக்கிறான்..."

"சரி... நீ இங்க எத்தனை வருசமா வேலை பாக்குறே...?"

"ரெண்டு வருசமா?"

"ம்... பகல்ல மட்டும் வருவியா... இல்ல ராத்திரியில..?"

"ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்குப் பொயிட்டு காலையில ஆறுமணிக்குத்தான் வருவேன்.... இங்க தங்க மாட்டேன்..."

"இன்னைக்கும் ஆறு மணிக்குத்தான் வந்தியா?"

"ம்..."

"வந்தோடனே கொலை செஞ்சி கிடக்கதைப் பார்த்தியா?"

"இல்ல... காபி போட்டுக்கிட்டு போயி ஐயாவை எழுப்புவேன்... அது மாதிரித்தான் இன்னைக்கும் போனேன்... அங்கே ஐயா... ஐயா..." அழுக ஆரம்பித்தாள்.

அவள் அடங்கும் வரை அமைதி காத்தவர், "இவரு மதுரைதானே... இங்க அடிக்கடி வருவாரா?" என்றார்.

"மாசத்துக்கு மூணு டைம் வருவாரு... ரெண்டு மூணு நாள் இருப்பாரு... அப்ப மட்டும்தான் எனக்கு வேலை... சம்பளமும் நிறையக் கொடுப்பாரு.... அதான் நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டேன்..."

"ம்... எப்ப வருவேன்னு உனக்குச் சொல்லுவாரா..?"

"இல்ல.... அவரு வர்றதுக்கு முதல் நாள் ரத்தினண்ணன் போன் பண்ணிச் சொல்லும்..."

"அதாரு ரெத்தினம்..."

"இங்க வாட்ச்மேனா இருக்கு..."

"ம்... ஆளு எப்படி...?"

"யாரு...?"

"அந்த ரெத்தினம்..."

"ரொம்ப நல்ல மனுசன்..."

"சரி... இருக்கட்டும்... நல்லவனா கெட்டவனான்னு நான் பாத்துக்கிறேன்,, உங்க ஐயா இங்க வர்றப்போ யாராலயும் பிரச்சினை..?"

"அப்படியெல்லாம் தெரியலை..."

"இங்க எதுக்கு வர்றாரு... பொண்ணுங்க கூட..."

"அதெல்லாம் இல்லை.." அவசரமாக மறுத்தாள்.

"அப்ப குடி..."

"ம்... அதிகம்...."

"அவரு மட்டுமா?"

"இல்ல கொஞ்சம் பிரண்ட்ஸ் வருவாங்க... எல்லாரும் எல்லா நேரமும் வரமாட்டாக... டாக்டர் சிவராமன் மட்டும் பெரும்பாலும் இங்கயே இருப்பார்..."

"ம்... அப்ப சிவராமன் கொன்னிருப்பாரா...?"

(தொடரும்)

-'பரிவை' சே.குமார்.

சனி, 26 செப்டம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி -1. கொலையாளி யார்?


'பாடி எங்க இருக்கு..?', 'யார் முதலில் பார்த்தது..?' என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் "அந்தப் பெண் என்ன சொல்றா?" என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன், போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரனுக்கே உரிய கடுமை கலந்திருந்தது.

"மேலதான் சார் இருக்கா?" என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடன் இருந்தார்.

"ம்... எதாவது சொன்னாளா?" கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.

பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி "அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் இல்லை..." என்றார்.

"உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?"

"அப்படித் தோணலை சார்... காலையில காபியோட போயிருக்கா... அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா..."

"ம்..." 

"அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு..."

"ம்..." என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே... கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்... தொழிலதிபர் தணிகாசலம்.

"என்ன வெறியோ தெரியலை... இப்படி கொன்னிருக்காங்க... இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா.... பிரான்சிக் ஆட்கள் எங்கே...?"

"ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்... பிரான்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்.."

"சரி... ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க... இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா?"

"சொல்லியாச்சு சார்..."

"கிளம்பிட்டாங்களாமா?"

"பையனும் பொண்ணுந்தான்... வந்துக்கிட்டு இருக்காங்க..."

"மனைவி...?"

"இல்லையாம் சார்..."

"இல்லைன்னா இறந்துட்டாங்களா... இல்ல...?"

"சரியான விவரம் தெரியலை சார்... இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்..."

"ம்... நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க... நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வாறேன்..." என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து சுவரோடு ஒண்டினாள். சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார். அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை... கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க...அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் சுதாரித்து கட்டுக்குள் வந்தார். அவரோட மனசுக்குள் இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்...? என்ற வினா எழும்ப 'சேச்சே.... சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது' என வீசிவிட்டு "இங்க வா..." என்றார்.

அருகே வந்து நின்றவள் அழுக ஆரம்பித்தாள். "எதுக்கு அழுகுறே...? அப்ப நீதான் கொன்னியா?" 

"இ....இல்லங்க... சார்..." பதறினாள்.

"அப்ப அழுகாம கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்... சரியா..?"

"ம்..." தலையாட்டினாள்.

"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் விழா போட்டி : வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

போட்டி வகை (2) சுற்றுச் சூழல் விழிப்புணர்வு 

கட்டுரை தலைப்பு : வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும்

ன்றைய உலகில் வெளிநாடுகளில் எல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு வந்து காலங்கள் கடந்துவிட்ட போதிலும் நம் இந்தியாவில் மட்டும் இன்னும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக ஏற்படவில்லை என்பதே உண்மை.  ஒரு வீட்டின் புறச் சுத்தம் எப்படியிருக்கோ அதைப் பொறுத்துத்தான் அந்த வீட்டிற்குள்ளும் சுத்தம் இருக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுவே உண்மை. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள்... அதுதான் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று எவ்வளவுதான் சொன்னாலும் நாம் இன்னும் மாறாமல்தான் இருக்கிறோம். வீட்டைச் சுற்றி குப்பைகளைக் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றிய அறியாமை தரும் ஆபத்துக்களையும் அதற்கான விழிப்புணர்வுகளையும் குறித்துப் பார்ப்போம்.

கழிவு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள் எல்லாம் சரிவர இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான இடங்களில் கால்வாய்களுக்குள் தண்ணீர் ஓடாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லை என்பதுதானே நிதர்சனம். கால்வாய்கள் இல்லாத இடங்களில் வீடுகளுக்கு முன்னே சிறிய குழி வெட்டி அதில் அசுத்த நீரை சேமித்து வைக்கிறோம்... கூடவே நோய்களையும்... இதேபோல் தெருவோர கால்வாய்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. அதில் தண்ணீர் ஓடாமல் அப்படியே கிடப்பதால் கொசு உற்பத்தியாகி மலேரியாக் காய்ச்சலைக்களைக் பரப்பி விடுகின்றன. இப்போது இது போன்ற கழிவு நீர்களின் சாக்கடையால்தான் டெங்கு உருவாகிறது. இந்தச் டெங்கு எத்தனை உயிர்களைக் கொன்றதை என்பதை நாமெல்லாம் அறிவோம்.  இதெற்கெல்லாம் காரணம் என்ன? சாக்கடை கால்வாயை சரிவர சுத்தம் செய்யாததே முக்கியக் காரணம். அடிக்கடி சுத்தம் செய்து அந்தத் தண்ணீரையெல்லாம் ஊருக்கு வெளியே கொண்டு போய் விட்டால் நம்ம பகுதியும் சுத்தமாக இருக்கும் நோய்களையும் தடுக்கலாம் அல்லவா? ஆனால் நாம் செய்வோமா.... இல்லையே பிளாஸ்டிக் பேப்பர் முதல் கொண்ட எல்லாக் குப்பைகளையும் சாக்கடைக் கால்வாயில் போட்டுத்தானே வைக்கிறோம்.

முன்பு பெரிய நகரங்களில் மட்டுமே குப்பைகளை வீட்டில் வந்து சேகரித்துச் சென்றார்கள். இப்போது பெரும்பாலான இடங்களில் காலையில் வீதி வீதியாக வந்து சேகரித்துச் செல்கிறார்கள். ஆனால் நாம்தான் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. நாலு வீடு இருந்தால் பக்கத்தில் இருக்கும் காலியிடமே குப்பைகளைக் கொட்டும் மைதானமாக மாறிவிடுகிறது.  நல்லது கெட்டது எல்லாத்தையும் அங்குதான் கொட்டி வைக்கிறோம். எல்லாக் குப்பையும் சேர்ந்து அந்த இடத்தைக் கெடுப்பதுடன் நோய்களைப் பரப்பும் கிருமிகளை உருவாக்கும் இடமாகவும் மாறிப் போய்விடுகிறது.  வீட்டில் இருக்கும் குப்பைகளை பக்கத்தில்தானே கொட்டுகிறோம். நம் வீடு சுத்தமாகத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்பது எவ்வளவு தவறு என்பதை ஏன் யாருமே உணருவதில்லை. 

சென்னையில் நாங்கள் இருந்த பகுதியில் தினமும் காலையில் குப்பை வண்டி வந்து வீட்டுக்கு வீடு குப்பையை வாங்கிச் செல்வார்கள். ஆனால் அந்தப் பகுதியில் இருந்த ஒரு காலி இடம்தான் குப்பைகளின் புகழிடமாக இருந்தது. அதன் அருகே சிறிய ஹோட்டல், டீக்கடை மற்றும் காய்கறிக்கடைகள் என சின்னச்சின்ன கடைகள் எல்லாம் இருந்தன.  மீன், நண்டு, இறைச்சிக் கழிவுகள் மற்றும் அனைத்து விதமான குபைகளையும் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றமும் உருவாகும் கிருமிகளாலும் அருகே இருக்கும் ஹோட்டல் மற்றும் டீக்கடையில் சாப்பிடுபவர்களுக்கு நோய் வரலாம் என்பதையோ அல்லது இந்த துர்நாற்றமான காற்றைச் சுவாசிப்பதால் நோய்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறோம் என்பதையோ அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உணரவேயில்லை. இப்படிப்பட்ட சுகாதாரக் கேடுகளை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது எவ்வளவு வேதனையான விஷயம்.

இதேபோல் தேவகோட்டை - காரைக்குடி ரோட்டில் ஓரிடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு என்றே நகராட்சி இடம் ஒதுக்கியிருக்கிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்ற பிரிவுகள் வேறு... அந்த இடத்தைக் கடக்கும் போதே மாசு நிறைந்த காற்றைத்தான் சுவாசிக்க வேண்டும்.  இந்த கேடு போதாதென்று ஒரு சில நாட்கள் அதில் தீயை வைத்து எரித்து அந்தப் பக்கத்து காற்றை எல்லாம் கெடுத்து வைப்பார்கள். இப்படியான சூழலில் அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் எப்பவுமே சுகாதாரமற்ற காற்றைத்தானே சுவாசிக்கிறார்கள். இதனால் பாதிப்பு வரும் என்பதை அரசும் மக்களாகிய நாமும் யோசிப்பதும் இல்லை... இவற்றிற்கான தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை என்பதை நினைக்கும் போது வருத்தத்தைவிட வெட்கமே மேலோங்கி நிற்கிறது.

இதைவிட மோசமான சூழல் என்றால் அது கிராமங்களில்தான்... இப்போது சில கிராமங்கள் மாறியிருந்தாலும் பல கிராமங்களில் மாற்றம் என்பது இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மை. மலம் கழிப்பது பொதுவெளியில்தான் என்பதை அனைவரும் அறிவோம். கால் கழுவுவது... குளிப்பது... மாடுகளைக் குளிப்பாட்டுவது மற்றும் குடிதண்ணீர் என எல்லாவற்றிற்குமே குளங்களில் தேக்கி வைத்திருக்கும் நீரைத்தான் பயன்படுத்துவார்கள். முன்பெல்லாம் விவசாயம் இருந்தது குப்பைகளையும் கூழங்களையும் வயல்களில் கொட்டி உரமாக்கினார்கள். வாய்க்கால்களில் நீர் ஓடிப் பாய்ந்ததால் வயல் வரப்புக்களில் இருந்த மரங்கள் எல்லாம் நல்ல செழிப்போடு இருந்தன. சுகாதாரமான... சுத்தமான காற்றை சுவாசித்து வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கோ நிலைமை அப்படியே மாறிவிட்டது. விவசாயம் இல்லாத வயல்களில் வேலிக் கருவைகள் மண்டிக் கிடக்கின்றன... நீர்வரத்து இல்லாமல் தூர்ந்து போன வாய்க்காலகளில் பசுமையும் இல்லை... வரப்புக்களில் மரங்களும் இல்லை... குப்பைகளும் மலக் கழிவுகளுமாய் இருக்கும் சுற்றுச் சூழலால் இன்றைய கிராமங்கள் சுகாதாரம் இழந்துதான் தவிக்கின்றன.

மனிதன் செத்தால் புதைக்கவோ எரிக்கவோ செய்யும் நாம் விலங்குகள் செத்தால் மட்டுமே தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே போட்டுவிட்டு வருகிறோம். அதை நாய் நரிகள் கடித்துக் குதறி... இது எத்தகைய சுகாதாரக் கேடு தெரியுமா?   முன்பெல்லாம் கிராமங்களில் விலங்குகள் செத்தால் அதை ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் குழி தோண்டிப் புதைப்பார்கள். இப்போ அவர்களும் மாறித்தான் இருக்கிறார்கள்.

இதேபோல் அமில ஆலைகள், ஊருக்கு வெளியேதானே இருக்கின்றன இதனால் என்ன தீங்கு வந்து விடப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால் இவற்றில் இருந்து வெளியாகும் கழிவுகளும் அதனால் ஏற்படும் ஒரு வித அழுகிய முட்டை நாற்றமும் எவ்வளவு மோசமானவை தெரியுமா? இந்தக் கழிவில் இருந்து வெளியாகும் கிருமிகளும் அதன் நாற்றமும் காற்றில் கலந்து அந்தப் பகுதி வாழ் மக்களின் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை எத்தனை பேர் அறிவோம். கூடங்குளம் வேண்டாம் என்று போராடிய மக்களுக்காக எத்தனை பேர் ஆதரவுக் குரல் கொடுத்தோம். அதன் பாதிப்புக்கள் நமக்கு வராது என்றுதானே வாளாதிருந்தோம்... அனுபவிக்கப் போறவர்கள் அவர்கள்தானே என்றுதானே வாய் திறக்காதிருந்தோம். 

வெளிநாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என நிறைய முக்கியத்துவங்கள் கொடுக்கிறார்கள். குப்பையை போடும் இடங்களில் வைக்கும் பெரிய பெரிய டப்பாக்களை எல்லாம் தினமும் கழுவி சுத்தம் செய்கிறார்கள். ஒரு சிறிய குப்பையை போட்டால் கூட அபராதம் விதிக்கிறார்கள். எனவே காபி குடித்த கப்பாக இருந்தாலும் சாக்லெட் பேப்பராக இருந்தாலும் குப்பைத் தொட்டியை தேடிப் போய் போடுகிறார்கள். நம்ம ஊரில் எந்த இடமோ அங்கு போட்டுவிட்டு நாம் ஜாலியாக நடப்போம். இங்கெல்லாம் கழிவு நீர் தேக்கமும் இல்லை... கண்ட குப்பைகளின் அணிவகுப்பும் இல்லை. இத்தனை சுத்தமாக இருப்பதால்தான் இங்கு கொசுக்களும் இல்லை மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் இல்லை. நாம் இதையெல்லாம் பின்பற்றுவதும் இல்லை... நோய்களை ஒழித்து சுகாதாரமான வாழ்க்கையை வாழ விரும்புவதும் இல்லை. நமக்குத்தான் பேருந்து நிலைய சுவரைப் பார்த்தாலே நாய் போல் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்துவிடுகிறதே. அப்புறம் எப்படி சுற்றுச்சூழலாவது சுகாதாரமாவது... 

தனி மனிதனில் தொடங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு தீப்பொறியாய் கிளம்பி நாடெங்கும் நல்ல சுவாலையோடு பரவ வேண்டும். அதற்கு நாம் முதலில் நம் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்... வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சுகாதாரக் கேடுகளான குப்பை கூழங்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் சுத்தமானால் அந்த ஊர் சுத்தமாகும்.... இப்படி ஒவ்வொரு ஊராக சுத்தமாகும் போது மாவட்டம் சுத்தமாகும்... மாவட்டம் மாநிலமாகும்... மாநிலங்கள் சுத்தமாகும் போது நம்நாடு சுத்தமாகும். நாமும் சுகாதாரமான வாழ்வை வாழ்வோம். நோய் நொடிகள் எல்லாம் பறந்து போகும். அதற்கு ஒவ்வொருவரும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்பதை உணர வேண்டும். 

குப்பைகளை எல்லாம் அதற்குரிய இடத்தில் சேர்க்க வேண்டும். தேவையில்லாத குப்பைகளை, பாலித்தீன் பைகளை எல்லாம் நெருப்பிட்டுக் கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். சாக்கடைகளில் குப்பைகளைக் கொட்டி தண்ணீரைத் தேங்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை நேரங்களில் ஆங்காங்கே நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். இதில் அரசும் முதுகெலும்பாய் செயல்பட வேண்டும். இப்படி எல்லா வகையிலும் எல்லா மக்களும் சேர்ந்து செயல்பட்டால் சுற்றுச் சூழல் பாதிப்பில்லாமல் சுகாதாரமான வாழ்வை வாழலாம். நாளைய உலகம் சுகாதாரமாய் இருக்க நடவடிக்கை எடுக்கும் சக்தியே மக்களாகியா நாம்தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்... செய்வோமா?.

-----------------------------

"வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை" மற்றும் "தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்" இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிக்கான வகை-(2) சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக்கான கட்டுரைப் போட்டிக்கு எழுதிய பகிர்வு இது.

'இந்தப் பகிர்வு முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையே.... இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள் நட்புக்களே... தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் உடனே சேர்த்து விடுங்கள்... நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காதீர்கள்.

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...


-'பரிவை' சே.குமார்.

புதன், 23 செப்டம்பர், 2015

மனசு பேசுகிறது : மதம் பிடிக்க வேண்டாமே



து மதத்திற்கு எதிரான பதிவும் அல்ல... மனங்களைப் புண்படுத்தும் பதிவும் அல்ல... என்னைப் பொறுத்தவரை நட்புக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். சாதி... மதமெல்லாம் தூக்கிச் சுமக்க மாட்டேன். அதை என்னுடன் பழகிய நட்புக்கள் அறிவார்கள். என்னோட பாதையை நான் இப்படித்தான் வைத்திருக்கிறேன். அந்தப் பாதை மிக அழகாக இருக்கிறது... இங்கு கற்களும் இல்லை முற்களும் இல்லை... அழகான பூக்கள் மட்டுமே இருக்கிறது. இறுதிவரை அப்படியே பயணிக்கத்தான் நினைக்கிறேன்.

முதுகில் குத்துனவன் நண்பனா இருந்தா அவனுக்காக அதைத் தாங்கிக்கணும்ன்னு வசனமெல்லாம் வருமே அப்படி நட்புக்காக மட்டுமல்ல உறவுகளுக்காகவும் மனதில் நிறைய இடம் வைத்திருந்தவன்தான் நான். இனிமேலா மீண்டும் இப்படி பிறக்கப் போகிறோம் எல்லோரும் கடைசிவரை ஒன்றாக இருக்க வேண்டும். அடித்துக் கொண்டு அத்துக் கொண்டு போகக் கூடாது என்று நினைத்தவன்... நினைப்பவன்தான் நான். அப்படியிருந்தும் உறவுக்குள் நிகழ்ந்த சில மோசமான நிகழ்வுகளால் இனி சேரவே கூடாது... அவ்வளவுதான் அந்து போனதை இனி ஒட்ட வைக்கவே கூடாது என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டேன். அதை மறப்போம்... இப்போ முதல் பாராவில் பேசியதற்கு வருவோம்.

முதல்லயே சொல்லிடுறேன்... எனக்கும் ஒரு மதம் உண்டு... எனக்கும் ஒரு சாதி உண்டு... அதற்காக அதை எல்லாம் என்னோடு இழுத்துக் கொண்டு திரியவில்லை, ஆனால் எனக்கு நிறைய கடவுள் பக்தி உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்துக்குள் வர நான் விரும்பவில்லை. எனது சில காரியங்களில் கடவுள் துணை இருக்கு என்று நம்புபவன். நான் நினைக்கும் தெய்வம் என் வழியில் இருக்கும் இடர்பாடுகளை எல்லாம் தகர்தெறியும் என்று நினைப்பவன்... அப்படியும் நடந்ததை... நடப்பதை நான் அறிவேன். இதை விவாதமாக்க விரும்பவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம் நண்பர்களே.... மதமும் சாதியும் நம்மோடு இருந்தாலும் நாம் மனிதனாய் இருப்போம். எங்கு மனிதன் மரித்தாலும் அதை மனிதாபிமானத்தோடு பார்ப்போம். அங்கு மதமும் சாதியும் பார்க்க வேண்டாம். அதை முகநூலில் கேலி செய்ய வேண்டாம். இறந்தது மனிதன் அவ்வளவே... அவன் உடம்பில் இருந்து பிரிந்த ஆன்மாவுக்கு இல்லை சாதியும் மதமும் என்பதை உணருங்கள். என் மதத்திற்கு வா... உனக்கு மோட்சம் உண்டு... பாதுகாப்பு உண்டு என்றெல்லாம் பேசாதீர்கள். இவன் செத்தால் அவன் கேலி செய்யிறான்... அவன் செத்தால் இவன் கேலி செய்யிறான்... இங்கே செத்தது மனிதனா மனிதாபிமானமா என்பதை பலர் யோசிக்க மறுக்கிறார்கள். நாமாவது யோசிப்போம்.

எல்லோரும் எனக்கு ஒன்றே... எல்லா மதமும் எனக்கு ஒரே மாதிரித்தான். கொஞ்ச நாளாக எங்களைத் துரத்தியடித்த குடும்பப் பிரச்சினையின் போது ஊருக்குப் பேசும்போது எல்லாம் 'அவன் பாத்துப்பான்... அவனுக சத்தியம் பண்ணட்டும்' என்று மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் என்னுடன் அன்பாய் நட்பு பாராட்டும் நண்பர் ஒருவர் இதைக் கேட்டு விட்டு 'உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா?' என்று கேட்டார். 'எதில்?' என்று திரும்பிக் கேட்டேன். 'அதான் சத்தியம் பண்ணுவோம்... பண்ணச் சொல்லுன்னு சொன்னீங்கதானே... அதில்..?' என்றார். 'ம்... எனக்கு ரொம்ப உண்டு... ஏன்?' என்றதும் அவர் சொன்னதை கேட்டு எனக்கு கோபம் வரவில்லை மாறாக சிரித்தபடித்தான் பதில் சொன்னேன்.

என் பதிலையும் 'ஏன்?' என்ற கேள்வியையும் கேட்டதும் நண்பர் 'நாங்க படைச்சோனை மட்டுமே வணங்குவோம்... படைக்கப்பட்டதை எல்லாம் வணங்கமாட்டோம்' என்றார். உடனே நான் 'உங்களுக்கு ஒரு படைச்சோன் என்றால் எங்களுக்கும் ஒரு படைச்சோன்... இது அவரவர் நம்பிக்கை... எங்களுக்கு இருக்கும் தெய்வங்கள் அவதாரங்களாய் படைக்கப்பட்டிருக்கின்றன... எனக்கு நம்பிக்கை உண்டு நண்பரே...' என்றேன். 'இல்ல... சத்தியம் கித்தியம்ன்னு அதெல்லாம்....' என்று இழுத்தார். 'எனக்கு எல்லா மதமும் பிடிக்கும்... எங்களில் இது போன்ற நம்பிக்கை உண்டு... அவ்வளவுதான்.... இதற்கு மேல் பேச வேண்டாமே...' என்றதும் அத்துடன் அந்தப் பேச்சு முடிந்தது.

அதேபோல் 'நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்... ரொம்ப நல்லா இருக்கும்' என்று என்னுடன் வேலை பார்க்கும் மலையாளி சொன்னபோது 'நான் அந்த மாட்டை வைத்து பொழப்பு நடத்தும் குலத்தில் பிறந்தவன். நாங்கள் அதை எல்லாம் சாப்பிடுவதில்லை... தயை கூர்ந்து இது போல் என்னிடம் பேசாதே...' என்று சொல்லி விட்டேன். ஆனால் அவன் அடிக்கடி 'இந்தியாவில் எல்லா இடத்திலும் மாடு வெட்டுறான்... திங்கிறான்... அப்புறம் என்ன நீ மட்டும் இல்லையின்னு சொல்றே..?' என்று கேட்க ஆரம்பிக்க, அதுவும் சற்றே கேவலமாகப் பேச 'எல்லாரும் சாப்பிடுறான்கிறதுக்காக எல்லாரும் எல்லாம் சாப்பிட மாட்டானுங்க... நான் சாப்பிடுறதை நீ சாப்பிடமாட்டே... நீ சாப்பிடுறதை நான் சாப்பிடமாட்டேன்... எங்க பகுதியில் மாட்டுக்கறியும் இல்லை அதை சாப்பிடுவதும் இல்லை... போதுமா... இனி இதைப் பற்றி பேசாதே' என்று சற்று கோபமாகச் சொல்ல வேண்டி வந்தது.

கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்த நண்பன் சூசை மாணிக்கம் கல்லூரிக்கு பஸ் ஏறும்போதே சர்ச்சுக்குப் பொயிட்டுத்தான் வருவான். அது அவனது மார்க்கம்... அவன் அங்குதான் போக வேண்டும்... அதே சமயம் எங்களுடன் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நடக்கும் போது ஆண்டவர் செட்டில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு நெற்றியில் விபூதி இடும் போது அவனும் இட்டுக் கொள்வான். ஆரம்பத்தில் 'என்னடா நீயெல்லாம் துணூறு பூசுறே?' என்று நண்பர்கள் கிண்டலாக கேட்பார்கள். அதற்கு அவன் 'இதிலென்ன இருக்கு... எங்கூட சர்ச்சுக்கு வந்தா நீங்க இயேசுக்கிட்ட வேண்டமாட்டீங்களா?' என்று திருப்பிக் கேட்பான். மூன்று வருடங்கள் தினமும் அவன் நெற்றியில் விபூதி வைத்திருக்கிறான். நானும் முருகனும் கூட அடிக்கடி சர்ச்சுக்குப் போய் மெழுகுவர்த்தி ஏற்றி, சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வந்திருக்கிறோம். அப்படி அமரும் சப்தமற்ற சில நிமிடங்கள் மனதுக்குள் பேரானந்தத்தை நிரப்பி வைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன.

நண்பர்களே தயவு செய்து எங்கள் மதம்தான் நல்லது... அதில்தான் அது இருக்கிறது... இது இருக்கிறது... என்பது மட்டுமல்லாமல் உங்கள் மதத்தில் என்ன இருக்கிறது... அதில் கடவுளுக்கெல்லாம் ரெண்டு பொண்டாட்டி... அப்படியிப்படியெல்லாம் என்னிடம் பேசாதீர்கள். உங்களுக்கு உங்கள் மதம் எப்படியோ அப்படித்தான் எனக்கு என் மதம்... அதற்காக உங்களை கீதையில் அப்படிச் சொல்லியிருக்கு... இப்படிச் சொல்லியிருக்குன்னு சொல்லி என் மதத்திற்கு வாருங்கள் என்று அழைக்க நான் விரும்புவதும் இல்லை எனக்கு த்
தேவையும் இல்லை. எந்த மதத்தில் இருந்தாலும் உங்கள் மதம் தொடர்பான சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றுங்கள்... அதை மனதோடு வையுங்கள் சட்டையாக அணிந்து வெளியில் வராதீர்கள்.

இந்த மதத்தையும் சாதியையும் பிடித்துக் கொண்டு பயணித்திருந்தால் முகம் தெரிந்த நட்புக்களை மட்டுமின்றி முகம் தெரியாமல் எங்கிருந்தோ 'என்ன தம்பி சாப்பிட்டியா?' என்று கேட்க்கும் பாசக்கார உறவுகள் எனக்கு கிடைத்திருக்கமாட்டார்கள். இந்த உறவுகள் எனக்குப் போதும்... நானும் என் குடும்பமும் நல்லாயிருக்கணும் என்று நினைக்கும் இந்த உள்ளங்கள் எனக்குப் போதும். சாதியும் மதமும் எனக்குள் வரவேண்டாம். எனக்கு எப்பவுமே மற்ற மதத்து நண்பர்கள்தான் அதிகம் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன்... எனக்கும் சாதியும் உண்டு... மதமும் உண்டு... நான் எந்த மதத்துக்கும் சாதிக்கும் மாறும் எண்ணத்திலும் இல்லை. நான் பிறந்த குலம் எனக்குப் போதும். என்னைப் பொறுத்தவரை சாதியும் மதமும் இப்போது எனக்குச் சோறு போடவில்லை நட்புக்களே... படித்த படிப்பும்... எனது பயணங்களும் மட்டுமே எனக்கான வாழ்வைத் தீர்மானித்து நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதுவே நிறைவாய் இருக்கிறது... இப்படியே நகரட்டும்... என் வாழ்வை மாற்றுவதைக் குறித்தான தீர்மானங்களை நான்தான் எடுக்கவேண்டும். எனக்காக வேறு யாரும் எடுக்க வேண்டியதில்லை... அதை நான் விரும்புவதும் இல்லை.

நண்பர்களே...  மனிதத்தை நேசியுங்கள்... நல்ல மனிதர்களை நட்பாய் பெறுங்கள்...அது போதும். அதே சமயம் உங்கள் மதத்தையும் நேசியுங்கள்... ஆனால் அதை தோளில் சுமந்து கொண்டு அந்தச் சுமையை அடுத்தவரிடம் மாற்ற நினைக்காதீர்கள். அது வேண்டாம்... என் நட்புக்கள் எனக்குள் எப்போதும் நிறைவாய் இருக்கிறார்கள்... சாதியையும் மதத்தையும் சுமந்து அதை என்னுள் திணிக்க நினைக்கும் நட்புக்களை நான் விரும்புவதும் இல்லை... தூக்கிச் சுமப்பதும் இல்லை... நல்ல நட்பை கடைசி வரை என்னோடு இறுத்திக் கொள்வேன்... மதம் பிடித்த நட்புக்களை அப்படியே இறக்கி விட்டுவிட்டு என் பயணத்தை நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன். இதுதான் நான்... இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்... 

மனிதம் சுமந்து... மதம் பிடிக்காத... நட்புக்களோடு வலம் வருவோம்.  நாளைய பாரதம் சாதி மதமில்லாத நல்ல சமூகத்தை தன்னுள்ளே இறுத்திக் கொள்ளட்டும். இந்தப் பகிர்வு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... எனக்குள் மதம் பிடிக்கவில்லை நட்புக்களே, என் நட்புக்களும் அப்படியே என்றுதான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே பயணிப்போம் நட்புக்களே....
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

சில பல நிகழ்வுகள் கொடுத்த வேதனைகளின் காரணமாக கடந்த பத்து நாட்களாகளுக்கு மேலாக வலைப்பக்கம் வரவில்லை. எதையும் வாசிக்கவும் இல்லை.... எழுதவும் இல்லை. அண்ணன் கில்லர்ஜி கூட மனசு குமார் கூட சுற்றினேன் என பதிவுகள் எல்லாம் போட்டிருக்கிறார். எனக்குத்தான் எங்கும் சுற்ற மனசே இல்லை. ஊருக்குப் போன் பேசவும்... இணையத்தில் படம் பார்க்கவும் என பொழுதைப் போக்கினேன்.  என்றோ எழுதி வைத்த ஒரு கவிதையை நேற்று தளத்தில் பகிர்ந்தேன். என்னடா இவன் நம்ம பக்கமே ஆளைக் காணோம் என்று நினைக்காமல் எப்பவும் போல் உறவுகள் அனைவரும் வந்து வாசித்து கருத்து இட்டிருந்ததைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  நான் தங்கள் பக்கம் வரவில்லை என்று எண்ணாதீர்கள் இப்போதும் சிலரை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கருத்துக்கள் பதியும் மனநிலை இன்னும் வரவில்லை... எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு நகர்கிறது வாழ்க்கை. விரைவில் மீண்டு வருவேன்...

********

பாயும் புலி பார்த்தேன்... போலீஸ் கதை... விஷால் இப்போ நடிகர் சங்கத்துக்குள் நான் தனி ஒருவன் என சவால் விட்டுக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். வந்தேறிகள் ஆளத்தானே தமிழகம் இருக்கிறது... அடுத்து இவரும் கட்சியை ஆரம்பிப்பார்... ஆட்சியைப் பிடிக்கும் ஆசையோடு காய் நகர்த்துவார் என்பதை அவரது தற்போதைய அதிரடிகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. சரி வாங்க புலி பாய்ந்ததான்னு பார்ப்போம். 


கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம்... போலீஸ் விஷாலுக்கும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்துக் கொல்லும் கும்பலுக்கும் இடையில் நடக்கும் போராட்டாம்... ஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாய் போனாலும் படம் நகர ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக படுத்துவிடுகிறது. அண்ணன்தான் அந்தக் கும்பலின் தலைவன் என்று தெரிய வரும் போது இன்னும் விறுவிறுப்பாகும் என்று நினைத்தால் ஒரு சாதாரண சண்டைக்காட்சியில் குடும்பமே அவனைக் கொல்லு என சொல்லிவிட இறுதிப் போராட்டத்தில் அண்ணனைக் கொன்று போலீஸ் கையில் கொடுக்காமல் பாலத்துக்கு அடியில் மறைத்து பத்தோடு பதினொன்றாக தொழிலதிபர் பணம் பறிக்கும் கும்பலால் கொல்லப்பட்டார் என முடித்து வைக்கிறார்கள். காஜல் வந்து போகிறார்... சூரி நகைச்சுவை என கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். டப்பு டப்பு என்று துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்க்கும் திரைக்கதையில் போலீசுக்கான மிடுக்கு இல்லை.

********

32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம் என்ற மலையாளப் படத்தை பொழுது போகாமல் டவுன்லோட் பண்ணிப் பார்த்தேன். கதைகளுக்காகவே மலையாளப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  23 என்ற எண்ணை வைத்து வெளிவந்த ஆங்கிலப் படமான ஜிம் கேரியின் 'த நம்பர் 23' படத்தின் கதையைத் தழுவித்தான் எடுத்திருக்கிறார்கள். மாமா என்று அழைக்கப்படும் லால் தவிர காதல் தம்பதிகளான நாயகன் நாயகிக்கு உறவுகள் தொடர்பில் இல்லை. நாயகன் அநாதை இல்லத்தில் வளர்ந்தவன்... நாயகிக்கு அம்மா அப்பா இருந்தும் தொடர்பில் இல்லை. காதல் வாழ்வின் முதல் வருட திருமண நாளைக் கொண்டாட யூ.எஸ்ஸில் இருந்து வரும் நாயகன் மனைவி அலுவலகம் செல்ல பொழுது போகாமல் மனைவியின் தோழி கொடுத்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறான். 


கதையின் நாயகன் ஜான் ரேயனாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஆசிரியர் எழுதி கதையை ஆரம்பிக்க இவனும் அப்படியே நினைக்க... கதையின் நிகழ்வுகளை அவன் வாழ்வுக்குள் புகுத்திப் பார்க்கிறான். மனைவியை சர்ச்சுக்கு கூட்டிப் போகும் போது கல்லறையில் ஒரு மனிதனைப் பார்த்து போட்டோ எடுக்க, அவன் இவனிடம் சண்டைக்கு வர, அப்போது வந்து தடுத்த சிலர் அவன் அமர்ந்திருக்கும் கல்லறைக்குள் இறந்த பெண் இல்லை... அவளின் பிணம் கிடைக்கவில்லை என்று சொல்லி வைக்க, கதையோடு இறந்த பெண்ணின் கதையும் பயணிக்க, அவளது உடலைத் தேடிப் போகிறான். திரில்லராக பயணிக்கும் படத்தில் அவளைக் கொன்றது நாயகனா அல்லது வேறு யாருமா என்ற சஸ்பென்சை இறுதியில் உடைத்திருக்கிறார்கள். படம் பார்க்கலாம்.

********

ரண்டு சிறுகதைப் போட்டிக்கான கதைகளை ஒரு வழியாக அனுப்பிவிட்டேன். இன்னும் கல்கி குறுநாவல் போட்டிக்கான கதையை எழுதவில்லை.... இந்த வாரத்தில் வரும் பக்ரீத் விடுமுறையில் எப்படியும் எழுதி 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நமது வலைப்பதிவர் விழாவுக்கான கட்டுரைப் போட்டிகளிலாவது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மனநிலை மாறும் பட்சத்தில் வலைப்பதிவர் விழாவிற்கான கட்டுரைகளை எழுதும் எண்ணம்... பார்க்கலாம்.

********

லைப்பதிவர் மாநாடு குறித்த பகிர்வுகள் நண்பர்களின் தளங்களில் வெளியாகி வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வேளையில் தினமணி மற்றும் தீக்கதிரில் செய்தி வெளியாகியிருக்கிறது என்ற பகிர்வை வலைப்பதிவர் விழாவுக்கான பிரத்யோக வலைப்பதிவில் பார்த்ததும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்து வெற்றி விழாவாக ஆக்க வேண்டும் என்பதே எனது ஆசை. கண்டிப்பாக சிறப்பாக நடக்கும்.... நடத்திக் காட்டுவோம். வலைப்பதிவர் விழாவுக்கான பிரத்யோக வலைப்பக்கம் வாசிக்க... BLOGGERS MEET-2015

********

சேனையின் நண்பர் திரு. ராஜசேகர் அவர்களின் முதல் படைப்பான ஜிப்பா ஜிமிக்கி படத்தின் பாடல்கள் குறித்து முன்னர் ஒரு பகிர்வு எழுதியிருந்தேன். அந்தப் பதிவை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கி வாசியுங்கள். மிகச் சிறப்பான பாடல்களை நீங்களும் ரசிப்பீர்கள். அந்தப் படத்தில் வரும் 'ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...' பாட்டை பானுஷபானா அக்கா அவர்கள் சேனையில் பகிர்ந்திருந்தார்கள். பாடலும் அதற்காக படப்பிடிப்பு நடத்தப்பட்ட வயல்வெளிகளும் ஆஹா... அழகு மற்றும் அருமை... ரொம்ப நல்லா வந்திருக்கு... நீங்களும் கேட்டு ரசியுங்கள்... வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் இயக்குநர் / தோழர் ராஜசேகர்.


********

லைப்பதிவர் திருவிழா-2015 இது நம்ம திருவிழா... மறந்து விடாதீர்கள்... மறந்து இருந்து விடாதீர்கள்... ஊரே வியக்கும் வண்ணம் புதுக்கோட்டையில் பூக்கட்டும் வலைப்பூக்கள்...

-------------------------------------------------------

விழா இடம்... நாள்...

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
பீ வெல் மருத்துவமனை எதிரில்
பழைய பேருந்து நிலையம் அருகில்
ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை

அக்டோபர், 11 - 2015
ஞாயிற்றுக் கிழமை.

-------------------------------------------------------
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பலாவின் சுவை..?


லையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...

வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....

பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...

தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...

பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?

(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)
-'பரிவை' சே.குமார்.

சனி, 12 செப்டம்பர், 2015

குலவைப் பாட்டு

(இணையத்தில் சுட்ட படம் - எந்த ஊர் திருவிழா என்பது தெரியாது)

கிராமியப் பாடல்களில் தாலாட்டுப் பாட்டுக்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது குலவைப்பாடல். இந்தக் குலவைப்பாடல் என்பது ஒரு பெண் பாடல் சொல்ல அவள் முடிக்கும் போது மற்றவர்கள் சேர்ந்து வாய்க்குள் நாக்கைச் சுழற்றி ஒருவித ஒலி எழுப்புவார்கள். அந்த ஓலி கேட்பதற்கு அவ்வளவு அழக்காக இருக்கும். குலவைப் பாடல் சொல்லும் பெண் பெரிய பாடகி அளவிற்கு பாடவில்லை என்றாலும் ராகத்தோடு பாடும்போது அந்தக் குரலும் ரசனைக்குரியதாகத்தான் இருக்கும்.

குலவைப் பாடல்கள் பெரும்பாலும் நாற்று நடவின் போதும் திருவிழாவின் போதும் பாடப்படும். முன்னெல்லாம் வயல்களில் விவசாய நேரத்தில் ஆங்காங்கே குலவைப் பாடல் கேட்கும். வயலில் நாற்று நடும்போது குனிந்தபடியே நடவு செய்யும் பெண்கள் தங்கள் மீது அடிக்கும் வெயிலில் உக்கிரத்தில் முதுக்குப்படை தீயாய் எரிவதையும் குனிந்தே நிற்பதால் இடுப்பில் ஏற்படும் வலியையும் மறக்கவே இந்தப் பாடல்களைப் பாடுவார்கள். அவர்க்ள் பாட ஆரம்பிக்கும் முன்னர் ரோட்டோரத்தில் வயலென்றால் ரோட்டில் ஒரு துண்டை விரித்து அதன் மீது ஒரு நாற்று முடியை வைத்து குலவை போட ஆரம்பிப்பார்கள். இதுவே ரோட்டோரத்தில் இல்லாத வயலென்றால் வரப்பில் இதுபோல் வைப்பார். அதைத் தாண்டிப் போகும் எல்லாரும் காசு போடவேண்டும் என்பது கிராமங்களில் எழுதப்படாத சட்டம்.

நடவு செய்யும் போது அந்த நிலத்தின் உரிமையாளர் காபி, பலகாரம் கொடுக்க வரும் போது 'ஏய் ஐயா வாராரு... குலவையைப் போடுங்கடி... ஏய் வைராத்தா நீதான் கணீருன்னு பாடுவே... சட்டுன்னு பாடுல' அப்படின்னு சொல்லவும்... 'மவராசன் செய்யில... மணிக்கையால் நடவுங்க... ஐயா வருவாங்க... அம்பது நூறு தருவாங்க'ன்னு சும்மா எடுத்துவிடும். உடனே எல்லாரும் சேர்ந்து 'உலுலுலு...'ன்னு சத்தம் கொடுப்பார்கள். அவர் சிரித்துக் கொண்டு பத்தோ இருபதோ போட்டுவிட்டுப் போவார். இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் காசு பார்த்துவிடுவார்கள்.

"மவராசன் வாராக...
மண்ணெல்லாம் பொன்னாக...
நாத்து நடும் எங்களுக்கு
சோறு மட்டுமில்லாம...
பொருளாவும் கொடுக்கும்
புண்ணியராம் எங்க ஐயா.."

அப்படின்னு அந்த நிலத்துக்காரரை மவராசன், புண்ணியவான், உத்தமன் என்றெல்லாம் வர்ணித்துப்பாடி காசு வாங்குவார்கள். அதே போல் ஆடு, மாடு எல்லாத்தையும் பாட்டுல கொண்டு வருவாங்க...

"ஆனைகட்டி தாளடிக்க
ஆறுமாசம் செல்லும்
மாடுகட்டி தாளடிக்க
மறுவருசம் செல்லும்
குதிரை கட்டி தாளடிக்க
கோடிநாள் செல்லும்"

அப்படின்னும் பாடுவாங்க. இப்பல்லாம் கிராமங்களில் விவசாய் முறை மாறியாச்சு. பல கிராமங்களில் விவசாயமே இல்லை என்பதுதான் இன்றைய நிஜம். அப்பல்லாம் நாற்றங்காலில் நாற்றுப்பாவி அது வளர்ந்ததும் அதைப் பறித்து முடிபோட்டு நூறு நூறாக எண்ணி குப்பம் கணக்கில் எண்ணி வைப்பார்கள். அன்று மாலையோ அல்லது மறுநாள் அதிகாலையோ நாற்று முடிகளை எல்லாம் வரப்பில் அடுக்கி நீர் இறங்க வைப்பார்கள். அடுத்த நாள் காலை எந்த வயலில் முதல் நடவோ அந்த வயலுக்கு எத்தனை குப்பம் தேவையோ அதை கூடைகளில் அள்ளிக் கொண்டு போய் நடுவதற்கு தோதாக வயலெங்கும் இறைத்து வைக்க வேண்டும். நடவுப் பெண்கள் வருவார்கள்... நடுவார்கள் பாடல் பாடுவார்கள்... நமக்கும் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கும்.

இன்றைக்கோ நிலமை வேறு... நாற்றுப் பாவி நடுவதெல்லாம் இல்லை... நடவுக்கு ஆள் கிடைப்பது கஷ்டம்... எனவே இன்று மழை பெய்ததும் வயலில் டிராக்டர் வைத்து ரெண்டு மூணு ஓட்டு ஓட்டிட்டு விதைத்து விடுவார்கள். அதில் களை எடுப்பதற்கு அதிகமாக செலவு செய்வார்கள். அதனால் இன்று நடவுப் பாடல் எல்லாம் காணாமல் போய்விட்டது.

இதே குலவைப் பாடல் கிராங்களில் இருக்கும் அம்மன் கோவில் திருவிழாவில் பெண்களால் பாடப்படும். கரகம் எடுத்து வரும் போது, தீபம் பார்க்கும் போதெல்லாம் குலவை போடுவார்கள். நடவைப் போலத்தான் இங்கும் ஒரு பெண் பாட்டுப்பாட மற்றவர்கள் குலவை போடுவார்கள். குலவைப் பாடல்கள் பலருக்கு சாமி வரவைத்து விடும். ஆத்தா குலவை போடுங்கத்தா என்று யாராவது சொன்னால் போதும் பெரியவர்கள் போடுகிறார்களோ இல்லையோ சின்னப் பெண்கள் கணீர்க்குரலில் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

'தெற்குத் தெருவிலே
தேரோடும் வீதியிலே
தேங்காய் குலைபறிச்சு
வாறாளாம் மாரியாத்தா'  

என்று பாடி முடிக்கும் போது சுற்றியிருப்பவர்கள் 'உலுலுலு' அப்படின்னு குரல் எழுப்புவார்கள்.  இப்பல்லாம் எங்க ஊரில் கூட குலவை போட பெண்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். 'ஆத்தா குலவை போடுங்கத்தா' என்று பலமுறை கத்தினாலும் இப்ப மக்கள் பாட்டை ஆரம்பிப்பதில்லை. எங்க ஊருக்கு இப்ப மொளக்கொட்டுப் பாட்டுச் சொல்ல ஒருவர் வருவார். இப்பெல்லாம் அவர்தான் குலவைப் பாடலும் சொல்லுகிறார். மொளக்கொட்டுப் பாட்டைப் பற்றி அடுத்து ஒரு பதிவு தேற்றிக்கலாம்.

சென்ற முறை மனைவியின் அம்மா ஊருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஒரு சின்னப் பெண் மைக் எல்லாம் இல்லாமல் கணீர்க்குரலில் குலவைப்பாடல் சொல்லியது. பார்க்க ஆச்சர்யமாகவும் கேட்க சந்தோஷமாகவும் இருந்தது. இன்னும் குலவைப் பாடல் இளவயதினரிடமும் தொற்றிக் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. 

'மதுவாம் மதுக்குடமாம்
மதுக்கேத்த தெம்மாங்காம்
மதுவ இறக்கி வைக்க
மனங்குளிர்வா மாரியாத்தா...'

***

'எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...'

இப்படி நிறையப் பாடுவார்கள்... இவையெல்லாமே அம்மனுக்கு காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்து கொண்டாடும் அந்த நாட்களில் பாடப்படும் பாடல்கள்... இசையில்லாமல் ஊரே கூடியிருக்க... ஒற்றைக் குரலெடுத்து அழகாய் பாடும் போது பின்பாட்டாய் குலவைச் சத்தம் ஆத்தாளை மட்டுமல்ல நம்மளையும் குளிரச் செய்யும்.

************

ம் குடும்பத் திருவிழாவாம் வலைப்பதிவர் திருவிழா குறித்து  முத்துநிலவன் ஐயா தளத்தில் பகிர்ந்திருக்கும் பகிர்வில்...

வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

இதைத் தொடர்ந்து வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு

டந்த புதனன்று வயிறு வலியின் காரணமாக அலுவலகத்துக்கு விடுப்புப் போட்டுவிட்டு படுத்திருந்தேன். ஊரில் ஒரு சிறிய பிரச்சினை, அது குறித்தான சர்ச்சைகள்... பேச்சு வார்த்தைகள் என மதியம் வரை போனிலேயே கரைந்தது. வயிறு வலி மட்டும் கரையாமல் இருந்தது.  மதியம் சாப்பாட்டுக்குப் பின்னர் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. சரி எதாவது படம் பார்க்கலாம் என ஆன்லைனில் தேடினேன். சரி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்ன்னு படம் பேரு இருக்கே.... கொஞ்சம் சிரிக்கலாம்... வயிறுவலியோட மனவலியும் போகும்ன்னு நினைச்சு பார்க்க ஆரம்பித்தேன்.

படத்தோட ஆரம்பத்துல காட்டின தொடர்ந்து ஜனாதிபதி அவார்டு வாங்கும் கிராமத்தைப் பார்த்ததும் ஆஹா ஓவராக் காட்டுறாங்களேன்னு நினைச்சிக்கிட்டே பார்க்க ஆரம்பித்தேன். பிரசிடெண்டே இறங்கி கால்வாய் சுத்தப்படுத்துவது, கடையில் பால்காரர் பால் ஊற்றிவிட்டு கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு போவது, பத்துப் பவுனு நகையை ரோட்டுல போட்டு ரெண்டு நாளாக் கிடக்குது தொலச்சவங்க வந்து எடுத்துக்கிட்டுப் போவாங்கன்னு சொல்றதுன்னு வித்தியாசமாப் போனப்பவே சுதாரிச்சிருக்கணும்... வேற வலி தூக்கமும் வரலை... அறையில் பேச்சுத் துணைக்கும் ஆளில்லை... இருந்தாலும் ஆளாளுக்கு கணிப்பொறியே தெய்வம்ன்னுதான் இருப்போம். அது வேற விஷயம்... இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமே... இன்னைக்கு தனியாத்தானே இருக்கோம் தொடர்ந்து பார்ப்போம்ன்னு தொடர ஆரம்பித்தேன்.


நம்ம கலைஞர் பேரன்தான் நாயகன்... ஆரு... தம்பி உதயநிதியான்னு கேக்குறீகளா? இல்லைங்க இது அருள்நிதி... இது வம்சத்துல வந்துச்சே அந்தத் தம்பி... அதுல கூட அப்புடி இப்புடி இருந்துச்சு... இதுல ஆளு நல்லாத் தெரிஞ்சிச்சு... சரி கொஞ்சம் நல்லாயிருக்கும் போலன்னு நெனச்சா... நாலு போலீசுல எஸ்.ஐ, ஏட்டு ரெண்டு பேரும் இருக்கும் போது தம்பிதான் எல்லா முடிவும் எடுக்குது.  நம்ம ஊருப்பக்கமெல்லாம் கான்ஸ்டபிள் கொஞ்சம் எந்திரிச்சிப் பேசினாலே 'யோவ் இருய்யா... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல்ல' என்று அதட்டும் எஸ்.ஐயைத்தானே பார்த்திருக்கிறோம். இங்க எஸ்.ஐ. எதுவுமே சொல்றதில்லை. எப்படி இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்கன்னு தெரியலையேன்னு நினைக்காதீங்க... எல்லாம் நாம பாக்குறோங்கிற தைரியத்துலதான் எடுக்குறாங்க.

நாயகன் அருள்நிதிக்கு வீடு இருக்கு அம்மா அப்பா இல்லை.... எஸ்.ஐக்கும் இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் வீடே இல்லை... சிங்கம்புலிக்கு மட்டும் குடும்பம் குட்டி இருக்கு. நாயகி டீச்சராம்... இவரு தேடிப் போயி லவ் பண்றாராம்... பாவம்  நாயகி ரம்யா நம்பீசன் கனவு காண்கிறார்... பாட்டுப் பாடுகிறார். அதிகம் வேலை இல்லை. சிங்கம்புலிதான் நல்லா இருந்த ஊரைக் கெடுக்க திட்டம் தீட்டுகிறார். எதற்காக என்றால் இராமநாதபுரத்துக்கு நாலு பேரையும் மாற்றப் போறோம் என்று மேலதிகாரி சொல்லியதற்காக... 

படத்தில் ரசிக்க வைத்த இடம் என்றால் சிங்கப்பூர் மாப்பிள்ளை முதல் காட்சியில் ஊருக்குள் வரும்போது பார்த்து மலைப்பதும் பின்னர் இறுதிக் காட்சிகளில் மனைவியுடன் வந்து படாதபாடுபட்டுப் போவதும்தான். மற்றபடி சின்னச் சின்ன பாத்திரங்களில் எட்டிப் பார்த்த ஒரு ஆளை வில்லனாக்கி அவன் திருட ஆளெடுப்பதும் அவர்களை திருட அனுப்பும் போது ஏதோ இசை ராஜா போல் கையை ஆட்டி ஆட்டி சைகை செய்வதும்... தான் திருடன் என்று தெரிந்து தன்னை அன்போடு பார்த்த ஊருக்குள் திருடுவதும்... என ஸ்ஸ்ஸ்... அப்பா முடியலை சாமி.


சிங்கம்புலி செய்த காரியங்களால் ஊருக்குள் அடிதடி சண்டை, திருட்டு, வெட்டுக் குத்தெல்லாம் வருது. அப்பத்தான் ஜனாதிபதி விருதுக்காக அந்த ஊரைப் பார்வையிட்டு மக்களிடம் பேச கலெக்டர் வருகிறார்.  சரி... சரி... இருங்க நீங்க கேக்குறது தெரியுது...  என்னாச்சு...? படத்தில் அந்த ஊர் மீண்டும் நல்ல நிலைக்கு வந்து ஜனாதிபதி அவார்ட் வாங்குச்சான்னுதானே?... அடப்போங்கப்பா கலெக்டரையே கடத்திடுறானுங்க... ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் ஊர் வந்திருது... அதுக்கப்புறம் எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நாயகன் வாயால ஒரு வசனத்தைச் சொல்ல வச்சி முடிச்சிட்டானுங்க...

பொற்பந்தல்ன்னு பொய்யான கிராமத்தைக் காட்டின இயக்குநர், இராமநாதபுரம் என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து, 144 தடை உத்தரவு எனச் சொல்வதும்... இராமநாதபுரம் பேருந்துக்குள் அடிதடி பற்றி பேசுவதும்... படிக்காத மனிதர்கள் அடித்துப் பிடித்து ஏறுவதும்... என காட்சிப்படுத்தியிருக்கிறார். அதை கடைசியில் இராமநாதபுரத்தில் இருந்து சிலரை பொற்பந்தலுக்கு மாற்றுவதாக கேள்விப்பட்ட எஸ்.ஐ என்னய்யா உங்களை பொற்பந்தலுக்கு மாத்திட்டாங்கன்னு வருத்தப்படுறாருங்கிற மாதிரி காட்சி வைத்து சரி பண்ணியிருக்காரு. இயக்குநர் இராமநாதபுரத்துக்காரராய் இருப்பார் போல.

சரி விடுங்க... இந்த மாதிரி படமெல்லாம் பார்க்க நேரம் கிடைக்குது பாருங்க... சண்டி வீரன் படத்துல தண்ணிப் பிரச்சினை பேசி, காதல், அழகிய பாடல்கள்ன்னு கொண்டு போன சற்குணம் லால் போன்ற நல்ல நடிகரை கடைசியில் காமெடியன் ஆக்கி தண்ணி ஓடுற வாய்க்காலோட அழகை ரசிச்சிக்கிட்டே போகும் போது டக்குன்னு வாகமடை போட்டு அடச்சி எல்லாரையும் என்னடா இந்தாளு இப்படி காமெடி பண்ணிட்டாருன்னு சொல்ல வைக்கலையா... அது மாதிரித்தான் இதுவும்... அதுல இயக்குநர் கடைசியில சிரிக்க வச்சாரு... இதுல இயக்குநர் கதையே இல்லாட்டியும் அங்க அங்க சிரிக்க வைக்கிறாரு...

-:000:-

-:பாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதி:-

இன்று நம் நேசக் கவிஞன்... தேசக் கவிஞன் பாரதியின் நினைவுநாள்... 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன நம் தமிழன் பாரதியை நினைவில் நிறுத்துவோம்.

"ஏழை யென்றும் அடிமையென்றும் 
எவனும் இல்லை ஜாதியில், 
இழிவு கொண்ட மனித ரென்பது 
இந்தி யாவில் இல்லையே 
வாழி கல்வி செல்வம் எய்தி 
மனம கிழ்ந்து கூடியே 
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச 
மானமாக வாழ்வமே!"

என்று சொன்னவன் பாரதி.... இன்னைக்கு அப்படியிருக்கான்னு கேக்கக்கூடாது... இன்னைக்கு அவனையே சாதிக்குள்ள் கொண்டு வந்துட்டோமுல்ல....சரி விடுங்க... எட்டுத் திக்கும் தமிழ் என கொட்டும் முரசடித்த நம் மீசைக் கவிஞனை என்றும் நினைப்போம்... 



-'பரிவை' சே.குமார்.

புதன், 9 செப்டம்பர், 2015

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?


க்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா என்பதுதான் இன்னைக்குமுக்கியமான விவாதமா முகநூல், டுவிட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இருக்கு. எங்க அறையில் கூட இது குறித்து பயங்கர விவாதம் நடந்தது. ஆம்... மணிமண்டபம் தேவையா என்று நாமும் விவாதிப்போமே... 

நம் நாட்டில் இதுவரை கட்டப்பட்ட மணிமண்டபங்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கு என்பதை நாம் அறிவோம். எங்கள் காரைக்குடியில் கூட கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம் எல்லாம் இருக்கு. விழாக்களின் போது மட்டுமே அவை ஜொலிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவர்களின் சிலைகளை மூலைக்கு மூலை வைத்திருக்கிறோம். அவர்களின் பிறந்தநாள்... இறந்தநாளில் மட்டுமே மாலைகளில் சிரிப்பார்கள். மற்ற நாட்களில் எல்லாம் குருவிகளின் எச்சத்தை சுமந்து நிற்பார்கள். இதில் என்ன கொடுமை என்றால் சிலைகளை வைத்து நாம் சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமாக வாழ்ந்த பல தலைவர்களை இப்போது சிலைகளாய் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். இதில் சிவாஜியை கடல்கரையில் இருந்து தூக்குங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... அரசு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று சொல்லியிருப்பது சரியா தவறா என்பதெல்லாம் இங்கு விவாதம் இல்லை மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது சரியா என்பதே கேள்வி. அதிமுக அரசு சென்ற முறையே இதற்காக இடம் ஒதுக்கியது என்றும் அதன் பின்னான திமுக அரசு அதை வாடகைக்கு விட்டுவிட்டது என்றும் படித்த ஞாபகம். இப்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறக்கும் முகமாக முதல்வர் அறிவிக்கும் திட்டங்களில் இதையும் மீண்டும் அறிவித்திருக்கிறார்.

சிவாஜி...

மிகச் சிறந்த நடிகர்... சிம்மக் குரலோன்.... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த கலையார்வம் மிகுந்த அர்ப்பணிப்புக் கலைஞன்... வரலாற்று நாயகர்களை எல்லாம் திரையில் காட்டியவர்... கட்டபொம்மன், இராஜராஜ சோழன், வ.உ.சிதம்பரநாதன், வீரசிவாஜி என எல்லாரையும் திரையில் நம் கண் முன்னே நிறுத்தியவர். இன்றும் வரலாற்று நாயகர்கள் என்றாலே நம் மனக்கண்ணில் வருவது சிவாஜிதான்.

ஒருவரின் நடிப்புத் திறமைக்காக மணிமண்டபம் கட்ட வேண்டுமா? ஆம்... வேண்டும் என்றுதானே பிரபு கேட்டார்.  சினிமாவில் சிறப்பாய் நடித்த ஒரு கலைஞன்... தான் சம்பாதித்து சேர்த்த சொத்தில் ஏழைகளுக்கு உதவியிருக்கலாம் அது நமக்கு தெரிய வேண்டியதில்லை... அவரும் சொல்ல வேண்டியதில்லை... ஏன்னா ஒரு கை செய்வது இன்னொரு கைக்கு தெரியாமல் இருப்பதுதான் உதவி... தம்பட்டம் அடித்துக் கொள்வது உதவியல்ல. எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் உதவிக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் சினிமா நாயகர்கள் எல்லாருமே பெரும்பாலும் நான் இதைச் செய்தேன்... அதைச் செய்தேன்னு விளம்பரம் செய்யத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பாடாவதி ரசிகன் குடும்பத்தை விட்டுட்டு இவனுக்காக செத்தாக்கூட அவனோட வீட்டுக்குப் போயி பணம் கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த உதவி விஷயத்தில் விஜயகாந்த் பெரும்பாலானவைகளை வெளியில் தெரியாமல் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அவரது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் நான் செய்தேன்... நான் செய்தேன்... என முரசு அடித்து அறிவிக்கிறார்கள். அஜீத் செய்வதாகச் சொல்கிறார்கள்... எல்லாவற்றிற்கும் மேலாக ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தனது படத்துக்காக கிடைத்த பணத்தை மக்களுக்காக மேடையில் வைத்தே கொடுத்து அதற்காக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து கலாமின் காலடியில் என்ற அமைப்பின் மூலமாக சேவை செய்யப் போவதாகத் தெரிவித்தார். இதில் அவர் விளம்பரம் தேடிக்கொண்டதாகத் தெரியவில்லை. விஷயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

பாருங்க... மணிமண்டபத்தைப் பற்றி பேச வந்துட்டு பேச்சு அங்கிட்டும் இங்கிட்டுமாப் போயிருது... சிவாஜி தனது குடும்பத்துக்கு தேவையான சொத்தைத் சேர்த்து வைத்துவிட்டுப் பொயிட்டார். எந்த ஏழைக்காவது உதவணுமின்னு டிரஸ்ட் ஆரம்பிச்சி வச்சிருக்காரா...? எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றுதான் நினைக்கிறேன்... அப்படியிருந்தால் சொல்லுங்கள்.  அரசியலில் வந்து ஆட்சியைப் பிடிக்கும் ஆசையும் அவருக்கு வர தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்தார். கஞ்சிக்கு இல்லாதவனுக்கு உதவவா அரசியல்ல இறங்கினார்... இப்படி மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரு மனிதருக்கு மக்களின் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மக்களுக்காகவே உழைத்து மறைந்த பலர் இருக்கும் போது ஒரு கலைஞனுக்கு ஏன் மணி மண்டபம்? மக்களெல்லாம் கேப்பை சாப்பிடுகிறார்கள் என்று தன் தாயையும் கேப்பைதான் சாப்பிட வேண்டும் என்று சொன்ன காமராஜர், மக்களுக்ககாகவே வாழ்ந்த ஜீவா, கக்கன்... இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர்தான் என்றாலும் தனது குடும்பத்தினருக்கு சலுகை அளிக்காத, அனுபவிக்க விடாத அப்துல் கலாம் இப்படி எத்தனையோ மனிதர்கள் மக்கள்... மக்கள் என்று இருந்தார்கள்... ஆனால் சிவாஜி அப்படி இருந்தாரா... அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்ன நம்ம முதல்வர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்று வழக்கு நடந்து தீர்ப்பும் வந்து மீண்டும் வழக்கு தொடரப்பட்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு செய்தவர் ஏன் தன் சொந்தப் பணத்திலேயே கட்டக்கூடாது?  கல்யாண் ஜீவல்லரிக்கு மட்டுமே வாங்க... தங்கம் வாங்கன்னு மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் நடிக்கும் பிரபுவிடம் அரசு கொடுத்த இடத்தில் மணிமண்டபம் கட்ட பணம் இல்லையா என்ன? இந்த வேஷ்டி சட்டையில் எங்க சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு பேசும் விக்ரம் பிரபு கூட இன்னைக்கி சினிமாவுல சம்பாதிக்கத்தானே செய்கிறார். ஏன் பிரபுவின் அண்ணன் ராம்குமார் சிவாஜி பிலிம்ஸ் மூலமாக படங்களை தயாரித்துக் கொண்டுதானே இருக்கிறார்.  கோடிகளை வைத்திருக்கும் குடும்பம் இருக்க மக்கள் வரிப் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்னதும் கமல், ரஜினி, பிரபு என ஆளாளுக்கு அம்மாவுக்கு நன்றி சொல்றாங்க. தமிழக திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தலைவராக போட்டிபோடும் நடிகர்கள் மணிமண்டபம் கட்ட ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டாலுமே போதுமே மிக அழகான, நல்லதொரு மணிமண்டபத்தைக் கட்டிவிடலாமே? சிவாஜியைப் பார்த்துத்தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்றும்... தமிழ் சினிமாவின் பிதாமகன் அவர் என்றும்...  சொல்லும் நடிகர்கள் எவருமே இதற்கு பணம் நாங்கள் போடுகிறோம் என்று சொல்லவில்லையே ஏன்? வரியே கட்டாமல் ஏய்க்கும் இவர்களுக்கு அன்றாடம் சம்பாரித்து அதற்கும் வரிக்கட்டும் குப்பனும் சுப்பனும் கொடுக்கும் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

நாட்டுக்காகவோ நாட்டு மக்களுக்காகவோ உழைத்தவர்களுக்கு வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டப்படுமேயானால் அதை கரம் குப்பி வரவேற்கலாம்... ஆனால் சினிமா என்னும் கவர்ச்சி ஊடகத்தில் ஆடிப்பாடி சம்பாதித்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்ட மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுமேயானால் அதை எப்படி வரவேற்பது?  இதை அரசு சொல்லியிருப்பதுதான் வேடிக்கை... என்ன செய்வது கூத்தாடிகள்தானே நம்மை ஆள்கிறார்கள். நடிகர்களையும் ஒரு குடுபத்தையும் குளிர்விக்க செய்யும் இந்தச் செயலால் யாருக்கு லாபம்? நாட்டில் ஆயிரத்தெட்டு தேவைகள் அடிப்படை மக்களுக்கு இருக்க ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்டி என்னவாகப்போகிறது? 

சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி என்று செய்தி போடுகிறார்கள்... உண்மையில் எத்தனை பேர் மகிழ்ந்திருப்பார்கள்... குடும்பத்தை விட்டு கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் அந்த ரசிகர்கள் மட்டுந்தான் நம்ம வரிப்பணத்தில் கட்டுறாங்களே என்று சிந்திக்காமல் வெடிவெடித்து மகிழ்ந்திருப்பார்கள். சரி... நாளை மணிமண்டபம் கட்டியதும் எல்லாரையும் உள்ளே விடுவானுங்களா என்ன..? தலைவருக்கு மணிமண்டபம் என்று குதிக்கும் இவர்கள் டாஸ்மார்க் சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டு அழுக்கடைந்த உடையோடு போனால் காவலாளி அடித்து விரட்டுவான். இவன் பணத்தில் கட்டிவிட்டு இவனையே உள்ளே விடமாட்டானுங்க... அதுதானே நடக்கும்... அப்புறம் இவனோட வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் பார்வையும் சரியாகத்தான் தெரிகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் மணிமண்டபமும் சிலைகளும் மக்கள் வரிப்பணத்தில் செய்வதால் என்ன லாபம்? அடிப்படை வசதிகளற்ற எண்ணற்ற குடும்பங்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு செலவு செய்து அவர்களை உயர்த்த முயற்சித்தால் அதை பாராட்டலாம்... அதைவிடுத்து மணிமண்டபம் கட்டுவது எதற்கு?

கடைசியாக சொல்லிக்கிறேன்... நான் சிவாஜி ரசிகனுமில்லை... அவருக்கு எதிரியும் இல்லை... எனது இந்தக் கட்டுரை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். இது என் மனதில்பட்ட கருத்து... நல்ல கலைஞன்... தான் ஏற்ற கதாபாத்திரங்களை அப்படியே நம் கண்முன் நிறுத்தியவர்... தமிழ் சினிமா என்றால் தவிர்க்க முடியாத கலைஞன்... என எல்லாவற்றிலும் அவர் மீது மரியாதை இருக்கு... ஆனால் மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டும் அளவுக்கு என்ன மக்கள் தொண்டாற்றினார் என்று நினைக்கும் போது மணிமண்டபம் தேவையா என்றே தோன்றுகிறது... 

இது சிவாஜிக்கு எதிரான பதிவு அல்ல.... என்னோட வரிப்பணமும் அந்த மணிமண்டபத்துக்கு போகுமே அப்ப சிவாஜி நமக்கு என்ன செய்தார்ன்னு தரையில படுத்துக்கிட்டு மோட்டுவலையைப் பாத்து யோசிக்கிற ஒவ்வொரு தமிழனோட மனசாட்சிப் பகிர்வுதான் இது... யார் திட்டினாலும் ஏற்றுக் கொள்ளப்படும்... தயக்கம் வேண்டாம்... தயங்காமல் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

என்னோட கேள்வி மக்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா?.என்பதுதான். மணிமண்டபம் தேவை என்றால் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் முதல்வரும், கோடிகளில் புரளும் நடிகர்களும், வளமாய் வாழும் பிரபு குடும்பமும் சேர்ந்தே செய்யட்டும்... மக்கள் வரிப்பணத்தில் தேவை இல்லை என்பதுதான் என்னோட எண்ணம்.

-'பரிவை' சே.குமார்.