முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...
போன் அடிக்கவும் ‘யாரு இந்த
நேரத்துல...’ என்று முணங்கியபடி போய் போனை எடுத்தார் வேலாயுதம்.
“அப்பா சரவணன் பேசுறேன்...”
என்றது எதிர்முனை.
“என்னப்பா... சரவணா...
எப்படியிருக்கே..? பேத்தியா... மருமவ எல்லாரும் நல்லாயிருக்காகளா...?”
“எல்லோரும் நல்லாயிருக்கோம்...
நீங்க... அம்மா...”
“எங்களுக்கு என்னப்பா...
நல்லாத்தானிருக்கோம்... வய வேல எல்லாம் முடிஞ்சிருச்சு... அக்காவும் அத்தானுந்தான்
வந்து பாத்தாக... அக்கா இங்கதான் இருக்கு...”
“அப்படியா... அக்கா
நல்லாயிருக்கா... பாப்பா எப்படியிருக்கு...?”
“எல்லாரும் நல்லாயிருக்காக...”
“அத்தான் இருக்காகளா..?”
“இல்லை கடைக்கிப் பொயிட்டாரு...”
“ம்... நாந்தான் அத்தானுக்கு
போன் பண்ணனுமின்னு நினைச்சி பண்ணவே இல்லை...”
“அப்ப அப்ப பேசுப்பா... சரி வேற
என்னப்பா...”
“அப்பா... நெல்
அவிச்சிட்டீங்களா..?”
“ம்... இப்பத்தான் அம்மாவும்
அக்காவும் அவிக்கிறாங்க... மூணு நாலு நாள்ல அரைச்சி கொண்டுக்கிட்டு
வர்றேம்ப்பா...”
“அதுக்காக கேக்கலை... போன மாசம்
நம்ம அரிசி முடிஞ்சி கடையில வாங்கினேன்... இன்னும் ரெண்டு மூணு நாள் வரும்...
அதான் நீங்க கொண்டாருவீங்களா... இல்லை வாங்கணுமான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்.
“
“கொஞ்சமா வாங்கிக்க... இந்த
வாரத்துல கொண்டு வாறேன்...” என்றார்.
“சரிப்பா... அம்மாவைக்
கேட்டேன்னு சொல்லுங்க....” என போனை வைத்தான்.
“போன்ல யாருப்பா.... சரவணனா...?”
அவரிடம் அம்மாவுக்கு காபி போட்டு ஊற்றி வைத்த தூக்குச் சட்டியைக் கொடுத்தபடி
கேட்டாள் செல்வி.
“ஆமா...”
“என்னவாம்...?”
“சும்மாதான்...
நல்லாயிருக்கிகளான்னு கேட்டான்....”
“இருக்காதே... இந்த நேரத்துல
பண்றான்னா எதாவது காரணம் இருக்கணுமே...”
“அரிசி எப்பக் கொண்டாருவீங்கன்னு
கேட்டான்... அதான்...”
“அதானே பார்த்தேன்... ரொம்ப பாசமா
இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கானேன்னு நினைச்சேன்...”
“அட நீ சும்மா இரு கழுத...
சின்னமங்களச் செய்யி அறுத்ததுமே அவனுக்கு அரிசி கொண்டே கொடுத்துட்டு வாறேன்னு
சொன்னேன்... உங்காத்தாதான் மடக்கரை செய்யில போட்டிருக்கது பொன்னி, அதைக்
கொண்டேயிக் கொடுக்கலாம்ன்னு சொன்னா... பிள்ளை பாவம்... கடையில அரிசி
வாங்கியிருக்கு...” என்றபடி நெல்லவிக்கும் மனைவிக்கு காபியை எடுத்துக் கொண்டு
கிளம்பினார்.
‘பாவம் இந்த வயல்ல கஷ்டப்பட்டவன்
இன்னைக்கு வருசம் பூராம் கடையிலதானே அரிசி வாங்கிச் சாப்பிடுறான்... அவன் தப்பே
பண்ணியிருந்தாலும் மனசுக்குப் பிடிச்சவளைத்தானே கட்டியிருக்கான்... வாழ்த்துட்டு
போகட்டும்ன்னு நினைக்காம... வெவசாய வேல செய்யாம வளர்ந்தவனுக்கு... பொண்டாட்டி
பேச்சைக் கேட்டுக்கிட்டு இருக்கவனுக்கு அரிசியை தூக்கிக் கொண்டு போயி
கொடுக்குறாராம்... ம்.. பெரியவனை என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள சேப்பாங்களோ
தெரியலை...’ என்று மனசுக்குள் நினைத்து பெருமூச்சு விட்டபடி எரியாத விறகடுப்பை
ஊதாங்குழல் வைத்து ஊதி எரிய வைத்துவிட்டு, புகையால் எரிந்த கண்ணை புடவை
முந்தானையால் துடைத்துக் கொண்டே அம்மா வாசிக்கும் ராணிப் புத்தகதை எடுத்துக்
கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் செல்வி.
யார் வீட்டுக்குச் சென்று
வந்தாலும் அவனின் வீட்டாரின் அன்பு, உபசரிப்பு என ஒரு வார காலத்துக்கு திரும்பத்
திரும்ப பேசுவது நண்பர்களின் வாடிக்கை... ‘டேய் அம்மா எங்களைக் கேட்டாங்களா...?’, ‘அண்ணன்
என்ன சொன்னான்..?’,’அக்கா எதாவது சொன்னுச்சா...?’, என்று போய் வந்தவர்களும் ‘எல்லாரும்
உங்களை மறுபடியும் இன்னொரு முறை அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாங்கடா...’ என கூட்டிப்
போனவனும் திரும்பத் திரும்ப கேட்பதையும் சொல்வதையும் பார்க்கலாம். அப்படித்தான்
சாரதி வீட்டு உபசரிப்பு, பாசம், நேசம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது.
கண்ணன் வயல் வேலை, கல்லூரி,
நண்பர்களுடன் அரட்டை என எப்பவும் போல் சந்தோஷமாக இருந்தான். இடையில் ஒன்றிரண்டு
முறை மட்டும் ‘ஏன்டா உங்க அத்தை பொண்ணு என்ன சொல்லுது?’ என்று சாரதியிடம்
கேட்டான். ‘அவ ஆஸ்டல்ல இருக்காடா... காலேஜ் பொயிட்டா... இனி லீவுல வரும்போதுதான் உங்களைப்
பற்றி எல்லாம் பேசுவா..?’ என்றான்.
“அடேய்... நான் எங்களைப் பற்றி
என்ன சொன்னாங்கன்னா கேட்டேன்... உங்க லவ் பற்றி...” இழுத்தான்.
“லவ்வா... அது சரி...
வீட்டுல முடிவு பண்ணி வச்சிருக்காங்க...
அவ்வளவுதான்... அவ எங்கிட்ட அதிகம் பேசமாட்டா... எப்பவாச்சும் பேஸ்புக்ல வந்து
எதாவது கேப்பா அவ்வளவுதான்... அவ எங்க அபிக்குத்தான்டா ரொம்ப குளோஸ்... ரெண்டும்
எப்பவும் சாட்டிங்லதான்....”
“என்னடா பேசுவீங்க...?”
சிரிக்காமல் கேட்டான் அம்பேத்கார். அவர்களின் அரட்டை சாரதியையும் சுபஸ்ரீயையும்
சுற்றிச் சுற்றி வந்தது.
“ஏன்டா... இன்னைக்கு ஓட்டுறதுக்கு ஆளே
கிடைக்கலையா... பாவம்டா... அந்தப் பொண்ணுக்கு மண்டையில ஏறப்போகுது.”
“ஏன்டா... கட்டிக்கப் போறவனுக்கு
இல்லாத கரிசனம் உனக்கெதுக்கு...” நக்கலாய்க் கேட்டான் பிரவீண்.
“ஓகே... தப்புத்தான்... நான்
இண்டர்நெட் சென்டர் வரைக்கும் போகணும்.. அப்புறம் அப்பா மாட்டுக்கு தீவனம்
வாங்கிட்டு வரச் சொன்னார்... லேட்டாப் போனா கத்துவாரு... “ என்றபடி கிளம்பினான்.
இண்டர்நெட் மையத்தில் முகநூல்
கணக்கில் உள்ளே செல்ல, அவனுக்கு இரண்டு நண்பர் விண்ணப்பம் வந்திருந்தது. ‘ஆமா
எவனாச்சும் அந்து முறிஞ்சவன் அனுப்பியிருப்பான்...’ என்று நினைத்தபடி அதைக்
கிளிக்கினான். முதலாவது ஒரு அமைப்பு சார்ந்தது... அதை நீக்கினான். இரண்டாவது ‘சுபஸ்ரீ
தட்சிணாமூர்த்தி’ என்றிருந்தது, அழகிய இரண்டு கிளிகள் புரோபைல் படமாக இருந்தது.. ‘ஏற்றுக் கொள்வதா...? வேண்டாமா...?’ என்ற
யோசனையோடு மவுஸை நகர்த்தினான்.
(சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.
2 எண்ணங்கள்:
எவனாச்சும் அந்து முறிஞ்சவன் அனுப்பியிருப்பான்..
ஹாஹாஹா ஸூப்பர்
//‘ஆமா எவனாச்சும் அந்து முறிஞ்சவன் அனுப்பியிருப்பான்...’ என்று நினைத்தபடி அதைக் கிளிக்கினான்.// ஹா ஹா செம..தொடர்கிறேன் சகோ..பெரிய பையனை பற்றி இன்னும் எதுவும் சொல்லலையே,ஒரு அவர் தான் நம்ம கண்ணனோ??
கருத்துரையிடுக