முந்தைய பகுதிகள்:
‘மூத்தவன் யாரு ரத்தம்?’ என்று
பஞ்சநாதன் கேட்டதும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார் வேலாயுதம். “என்னப்பா நாங்கேட்டதுக்கு
பதிலைக் காணோம்...” நமுட்டுச் சிரிப்போடு கேட்டார் பஞ்சநாதன்.
“ம்... நீ எடக்கு மடக்கா ஏதாவது
கேட்பே... அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?”
“இதுல எடக்கு மடக்கு என்ன
இருக்கு... சின்னவன் உன்னோட ரத்தம்ன்னா... மூத்தவன் யாருன்னுதானே கேட்டேன்...”
“இதுல ரத்தத்தைப் பத்திப் பேசினா
என்னைய நானே கேவலப் படுத்திக்கிற மாதிரி ஆயிரும்... மொத்தத்துல அவனைப் பெத்ததுக்காக
ரொம்ப வருத்தப்படுறேன்... வேற எதாவது இருந்தாப் பேசு...”
“அப்ப கடைசி வரை அவனை நீ
சேக்கமாட்டே... பேரம்பேத்திகள பாக்கணுமின்னு ஆசையுமில்ல உனக்கு அப்படித்தானே...”
“ம்... எதுக்கு அவனைச்
சேக்கணும்... அப்புறம் சாதி சனத்துக்கிட்ட எனக்கு என்ன மரியாதை இருக்கும்... பேரம்பேத்தி....
ம் நாம பாத்துக் கட்டி வச்சிருந்தா பேரம்பேத்தியின்னு கெடக்கச்
சொல்லியிருக்கும்... அதுதான் இல்லைன்னு போச்சே... அப்புறம் பேரம்பேத்தி எப்படி
வரும்... செல்வியும் சரவணனும் பெத்து வச்சிருக்க செல்லக்குட்டிக இருக்குதுகளே...
அது போதும்... செத்த அன்னைக்கு அதுக தீப்பந்தம் பிடிச்சாப் போதும்... பொட்டப்புள்ள
சவுந்தரம் மாதிரி இருக்காம்... பய நம்மாளுக மாதிரி இல்லைன்னு சின்னவன் சொன்னான்...
இருந்து என்ன செய்ய... அது கலப்புப்
பயிர்தானே... பேச்சை விடுப்பா... வேற இருந்தா பேசு....”
பஞ்சநாதன் ஏதோ சொல்ல
வாயெடுக்கும் போது ரோட்டில் வண்டியில் போன வாத்தியார் வாசுதேவன், வண்டியை நிறுத்தி பஞ்சநாதனைப் பார்த்து “மச்சான்... நம்ம
மேலஊரணி கண்ணப்பன் மகனை ரோட்டுல வச்சி வெட்டிட்டு பொயிட்டானுங்க... பய ஸ்பாட்
அவுட்... புள்ள ரொம்ப சீரியஸா இருக்காம்...” என்று கத்தினார்.
“என்ன சொல்றே வாசு..? இப்பத்தானே
ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...” பஞ்சநாதனும் சற்றே சப்தமாகக் கேட்டார்.
“அதுதான்... லவ் மேரேஜ்... அவன்
உயிரைப் பறிச்சிருச்சு...” வெறுப்போடு சொன்ன வாத்தியாரிடம் “செஞ்சது சரிதானே...
இதை எதுக்கு இங்க சொல்ல வந்தே...” கோபமாய்க் கேட்டார் வேலாயுதம்.
“என்னங்க... இந்தத் தோட்டை
மாத்தித் தாங்கன்னு எத்தனை நாளாச் சொல்றேன்...” கணவனின் மார்பில் கோலம் போட்டபடிக்
கேட்டாள் செல்வி.
“காசு தாறேன் போயி மாத்திக்கன்னு
சொன்னா நானும் வரணுங்கிறே... கடையைப் போட்டுட்டு வரச் சொல்றே... உங்காத்தாவையோ வேற
யாரையோ கூட்டிக்கிட்டு போகலாம்ல்ல... சரி... சரி... காலையில பணம் தர்றேன்...
நாளைக்கு நீ பொயிட்டு வா...” என்றான் ராமநாதன்.
“போகத் தெரியாமயா உங்களைக்
கூப்பிடுறேன்... நீங்க வந்து வாங்கிக் கொடுத்தா அதுல கிடைக்கிற சுகமே தனிங்க...
அங்கனதானே இருக்கு சத்த கடையை போட்டுட்டு வந்தா வாங்கிட்டு வந்திடலாம்ல்ல... அதான்
கடைப்பயல் இருக்கானுல்ல...”
“ம்... சரி... நாளைக்கு
மத்தியானம் சாப்பிட வந்துட்டு போகும் போது கூட்டிக்கிட்டுப் போறேன்... சரியா?”
என்று அவளை அணைத்தபோது செல்போன் அழைத்தது.
“யாரு இந்த நேரத்துல...?” என்று
எடுத்தவன் “என்ன உன் தம்பி கூப்பிடுறான்... ஆச்சர்யமா இருக்கு...” என்றபடி ஆன்
செய்து “சொல்லு மாப்ள... இங்கிட்டு காத்தடிக்குது... மழை வர்ற மாதிரியும்
இல்லையே...” என்று சிரித்தார்.
“ஏந்த்தான் நான் உங்ககிட்ட பேசாமலா இருக்கேன்...
வேலை அது இதுன்னு முடியாமப் போயிருது... அக்காவும்...” பேச்சை நிறுத்தினான்.
“அக்காவும்... என்ன மாப்ள சொல்ல
வந்ததைச் சொல்லு...”
“ஒண்ணுமில்ல... அதை விடுங்க...
எனக்கு எப்பவுமே எல்லாரு மேலயும் பாசம் இருக்குத்த்தான்... அதை தினமும் போன் பண்ணிக்
காட்டினாத்தானா... நான் அம்மா அப்பாவுக்கே எப்பவாச்சும்தான் பேசுவேன்... எங்கம்மா
கூட ஒரு போன் பண்ணினா என்னன்னு திட்டும்... சரி விடுங்க.... இப்ப கூப்பிட்டது
அண்ணன் விசயமாப் பேச...” என்றான்.
“அண்ணன் விசயமா?” ஆச்சர்யமாய்க்
கேட்டான்.
“ஆமா... அவனைப் பார்த்து
பேசினேன்... நம்மளை விட்டு விலகியிருக்கிற வலி அவனுக்கிட்ட இருக்கு... பிள்ளைங்க
ரெண்டும் தங்க விக்கிரம் மாதிரி இருக்குதுக...”
“ம்... அதுக்கு நானென்ன
செய்யணும்?”
“என்னத்தான் இப்படிக்
கேக்குறீங்க... வீட்ல பெரியவங்க நீங்க...
அதுபோக நீங்களும் அக்காவும் அவனோட பேசுவீங்கன்னு எனக்குத் தெரியும்... நாமதான்
அவனை சேர்த்து வைக்கணும்...”
“இங்க பாரு மாப்ள... பெரியவன்
விசயத்துல நான் மாமாக்கிட்ட பேசினதாலதான் அவருக்கு இப்பவும் என் மேல கொஞ்சம் கோபம்
இருக்கு... அதனாலதான் உன் கல்யாண விசயத்துல நான் எதுலயும் தலையிடல... நீங்கதான்
பொண்ணைப் பாக்கணும்.... பேசணுமின்னு சொன்னப்போ போதும்... என்னை எதிலும் இழுக்காதீங்கன்னு
ஒதுங்கிட்டேன்... உங்க அக்காவையும் உங்க வீட்டு விசயத்துல ஒதுங்கி இருக்கச்
சொல்லியிருக்கேன்... மூத்தவன் எங்ககிட்ட பேசுவான்... ஆனா இங்க இதுவரைக்கும் வந்ததில்லை...
நாங்களும் அங்கிட்டு போனதில்லை... போதும் மாப்ள... என்னை இதுல இழுக்காதீக... வீணாவுல
இதுல இறங்கி உங்கப்பாரு நம்மளை எல்லாம் ஒதுக்கி வச்சாலும் வச்சிருவாரு... ஆளை
விடுங்க...” என திட்டவட்டமாக மறுத்தார்.
“என்ன புரட்சியாளரே... என்னைப்
பார்த்தும் பார்க்காத மாதிரி நிக்கிறீங்க?” என்றபடி கண்ணனுக்கு அருகில் வந்தாள்
சுபஸ்ரீ.
“அப்படியில்லைங்க... இப்பத்தான்
வந்தோம்... நீங்க பிரண்ட்ஸோட பேசிக்கிட்டு இருந்தீங்க.... அதான்... “ மெல்ல
இழுத்தான்.
“ஓகே... நம்பிட்டோம்...” என்றவள்
அம்பேத்காரைப் பார்த்து “நல்லாயிருக்கீங்களா?” என்றாள். அவன் தலையாட்டிச் சிரித்தான். பின்னர் அவர்களை தோழிகளிடம் அறிமுகம்
செய்ய, கண்ணனைப் பற்றிச் சொன்னபோது தோழிகள் ‘ஓ... இதுதானா அவுரு...’ என கோரஸாய் கத்த,
மற்றவர்கள் திரும்பிப் பார்த்தனர்.
“சும்மா இருங்கடி..." என்றவள் "சரி சாப்பிட்டீங்களா?” என்றாள் கண்ணனிடம்.
“இல்லங்க... போகணும்...”
“வாங்க போகலாம்...”
“அய்யோ உங்க கூடவா...? இவ்வளவு
தூரம் வந்து பருப்புச் சாம்பார் சாப்பிடவா? நீங்க தனியாப் போங்க... நாங்க தனியாப்
போறோம்... “ என்றான் அம்பேத்கார்.
“நான் உங்களை எங்கூட சாப்பிடச்
சொன்னேனா... வாங்க போகலாம்... இவளுகளும் நான் வெஜ்தான்... நீங்கள்லாம் சேர்ந்து
சாப்பிடுங்க...” என்றாள். பந்தி நடக்கும் மாடிக்குச் சென்றதும் எல்லாரும் நான்
வெஜ் பக்கம் போக, “நான் மட்டும் தனியாச் சாப்பிடணுமா...? ஏய் யாராச்சும் வாங்கடி ப்ளீஸ்...” தோழிகளிடம் கெஞ்சினாள் சுபஸ்ரீ.
“போடி... ஆஸ்டல் சாப்பாடு
சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு... இங்கயாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கிறோம்” என
தோழிகள் நகர, கண்ணன் “நான் வாறேன்... வாங்க...” என்றதும் அம்பேத்கார்
அவனை முறைத்துப் பார்த்தான். உடனே “நீ அவங்க கூடப் போய் சாப்பிடுடா...” என்று
சொல்லிவிட்டு அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் நடந்தான்.
“நீங்க எதுக்காக... நான்
சாப்பிட்டு வாறேன்... போங்க...” என்றவள் மனசுக்குள் ‘நீ என்னோட
சாப்பிடணுங்கிறதுக்காகத்தானே கூப்பிட்டேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.
இருவரும் அருகருகே அமர்ந்து
சாப்பிடும் போது “எனக்காகத்தானே வந்தீங்க... இல்லேன்னா நான் வெஜ் ஒரு
பிடிபிடிச்சிருப்பீங்கதானே...” மெல்லக் கேட்டாள்.
“அது எப்படிங்க பிடிச்சவங்களை
தனியாச் சாப்பிடட்டும்ன்னு விடுறது...”
“ஓஹோ... அப்ப என்னைய லவ்
பண்றீங்களா?” அவளின் கேள்வியில் நிலைகுலைந்த கண்ணன் சாப்பிடுவதை விடுத்து அவளைப்
பார்த்தான். அவள் எதுவும் நடக்காதது போல் அவன் இலையில் இருந்த அப்பளத்தை எடுத்துக்
கடித்தாள்.
இணையத்தில் கிடைத்த ஓவியர் இளையராஜாவின் படத்துக்கு நன்றி.
இணையத்தில் கிடைத்த ஓவியர் இளையராஜாவின் படத்துக்கு நன்றி.
(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)
-‘பரிவை’ சே..குமார்.
6 எண்ணங்கள்:
கண்ணன் பதில் என்ன என்பதை படிக்க தொடர்கிறேன்.
இரு பக்கங்களும் அருமையா போகுது....ஃப்ளாஷ் பேக் காதல் ஒரு புறம் இப்போதைய இன்னும் சாதி வெறி தணியாத கதை ஒரு புறம். சமீபத்திய கௌரவ கொலை நிகழ்வையும் கொண்டு வந்திவிட்டீர்கள்...
தொடர்கின்றோம்..
காட்சிகள் அப்படியே மனக்கண்ணில் ஓடுது,தொடர்கிறேன் சகோ...
வாங்க அம்மா...
பதில் என்னவாக இருக்கும் அழகான அறிவான பொண்ணுங்கும் போது அவனும் மனிதன்தானே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கதையின் நகர்வை அழகாய் கணிக்கும் விதத்துக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக