மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 பிப்ரவரி, 2015அபுதாபியில் அபூர்வராகம் - 2

பாரதி நட்புக்காக அமைப்பின் அபூர்வராகம் நிகழ்வு குறித்த முதல் பகிர்வை வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கி வாசியுங்கள். திரு. ராஜேஷ் வைத்யா இசை, குழந்தைகள் நடனம், திரு. மோகன், திரு.யூகி சேது ஆகியோரின் பேச்சுக்கள் என எல்லாம் முடிந்தது. இது குறித்து முதல் பகிர்வில் பார்த்தோம். இன்றைய பகிர்வாய்...

நவீன நாகேஷின் சுவையான பேச்சு:

திரு. டெல்லி கணேஷ் அவர்கள். மைக்கிற்கு முன் வந்ததும் மடை திறந்த வெள்ளமானார். எந்தக் குறிப்பும் இல்லாமல், தங்கு தடையின்றி பேசுவது என்பது எல்லாருக்கும் வருவதில்லை. அது ஒரு சிலருக்கே வாய்த்த கலை. அந்தக் கலை கைவரப்பெற்ற.. நகைச்சுவையாய் பேசி அரங்கை கட்டிப்போட வைத்த டெல்லியாரின் பேச்சில் இருந்து சில...

(நவீன நாகேஷ் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உரை நிகழ்த்திய போது.)

"வெளிநாடு வாழ் தமிழர்களில் மிகச் சிறப்பாக தமிழை வளர்க்கும் நிகழ்ச்சியை நடத்தும் பாரதி நட்புக்காக அமைப்பினரை பாராட்டியதுடன், ஒரு நிகழ்ச்சியை அழகாய் தொகுப்பதையும் பாராட்டி, ஒரு சில இடங்களில் அறிவிப்பவர் திரு. டெல்லி கணேஷ்... அவரு வரலையா.. யூகி... அவரும் வரலையா... மோகன் பேசுவார். என்று குழப்புவார்கள் ஆனால் இங்கு எல்லாமே திட்டமிட்டபடி அழகாய்...' எனப் புகழ்ந்தார். 'ஜெட் ஏர்வேய்ஸ் 15% கட்டணச் சலுகை தர்றேன்னு சொன்னாங்க... நான் பாரதி நட்புக்காக அமைப்புக்கு 100% தர்றேன்ய்யா... இனி எந்த விழாவாக இருந்தாலும் காசு வாங்காமல் கலந்துக்கிறேன்... விமான டிக்கெட் கூட நானே போட்டு வருகிறேன்...' என்று சொல்லி கைதட்டலை அள்ளினார். 

தன்னை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான் என்றும் 'பட்டிணப் பிரவேசம்' படம்தான் முதல்படம் என்றும் சொன்னவர் தனது பெயர்க்காரணத்தை சுவராஸ்யமாகக் கூறினார். 'படப்பிடிப்புக்குப் போனபோது உனக்கு என்ன பேர் வைக்கலாம் என்று கே.பி. சார் கேட்க, என் பேரு  எம்.கணேசன் ஐயா அப்படியே இருக்கட்டும் என்றதும் ஏய் இது நல்லாயில்ல... சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மாதிரி கொஞ்சம் நல்லாயிருக்கணும் என்று சொன்னார். பின்ன நான் என்னோட சொந்த ஊர் வல்லநாடு அதனால வல்லை கணேசன்னு வச்சிரலாம் என்றதும் நடிக்க ஆரம்பிச்சிட்டா பேமண்ட் வல்லை, செக் வல்லைன்னு சொல்லப்போறே... எதுக்கு பேரோட வல்லைன்னு சேக்குறே என்று சொல்லியவர், நிறைய அலசலுக்குப் பின் நீ பொறந்தது இங்கே என்றாலும் டில்லியில்தானே முதல் நாடகம் போட்டே அதனால டில்லி கணேஷ்ன்னு வச்சா என்ன என்றவர் அப்படி வைத்ததுதான் இந்தப் பெயராம்.. 

பாரதிராஜா சார் கூட பக்கத்துல அமர்ற பாக்கியத்தை வேற எந்த மேடையும் கொடுக்கலை... முதல்ல கொடுத்தது இந்த அபுதாபி மேடைதான்... ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர். முதல் படத்தில் நடித்து வெளிவந்ததும் அடுத்தவன் அறிமுகப்படுத்துனவந்தானே என்றில்லாமல் என்னை அழைத்து நல்லா நடிச்சிருக்கேய்யா... உன்னோட கண் பேசிச்சுய்யா என்று மனதாரப் பாராட்டியவர் பாரதிராஜா. அவரோட படத்துல நடிக்க எனக்கு உடனே வாய்ப்பும் கொடுத்தார். ஆனால் சில காரணங்களாலே நடிக்க முடியலை. அதுக்கு அப்புறம் அவரோட படத்துல நடிக்கவேயில்லை. அதுக்காக நான் வருத்தப்படலை... அவருக்கு வலப்பக்கம் அமர்ற பாக்கியத்தை கேபிசாருக்கான இந்த மேடை எனக்கு கொடுத்திருக்கிறதே... இது யாருக்குக் கிடைக்கும்... இதுவே போதும்.. என்றார். 

இதே கேபி சார் கூட என்னைய எட்டு வருசம் கூப்பிடவேயில்லை. அதுக்கு அப்புறம்தான் கூப்பிட்டார். தண்ணீர் தண்ணீர் படத்துல ராஜேஷ்க்கு அப்பாவா ஒரு கறுப்பான ஆளைத் தேர்வு செய்திருந்தார். ராஜேஷோட நிறத்துக்கு ஒத்துப்போனதால அப்பாவா செலக்ட் செய்தார் போல நடிக்க வரலை... இவன் சரிவரமாட்டான்னு வேண்டான்னு சொல்லிட்டார். அப்புறம் யாரைப் போடலாம்ன்னு தன் சகாக்களோட ஆலோசனை பண்ணியபோது என்னைச் சொல்லியிருக்காங்க... அவனா அவன் அப்பா கதாபாத்திரத்துக்கா... சரியா வருமான்னு கேட்டிருக்கார். அதுக்கு அவரு சிவாஜிக்கே அப்பாவா நடிக்கிறாரு என்றதும்... அப்படியா சரி கூப்பிடு என்று சொல்லியிருக்கார். 

நான் அங்கு போனதும் தாயில்லாமல் தந்தை வளர்த்த பிள்ளையான ராஜேஷூக்கு அப்பா,  என்று சொல்லி காய்கறி நறுக்கிக்கிட்டே வசனம் பேசணும் என்றார். எப்படி வசனம் பேசினேன் என்று சொல்லியபடி, ஒவ்வொரு வசனத்துக்கும் இடையே வெட்டிய காயை வாய்க்குள் வீசியதையும் செய்து காட்டினார். அதை ரசித்த கேபி அவர்கள் பாருங்க எப்படிப் பண்ணுறானு என அசிஸ்டெண்ட்களிடம் கண்காட்டினார். காட்சி முடிந்ததும் 'நல்லா நடிச்சேடா' என்றவரிடம் 'என்னை எட்டு வருசமா கூப்பிடலையில்ல... உங்க மேல எனக்குக் கோபம்?' என்று சொல்லி அழுதாராம். உடனே கேபியும் கண் கலங்கி தன்னோட அழுகையை அடக்க இவரோட முதுகில் அடித்து 'அதான் கூப்பிட்டேன்ல...' என்றவர். அதன் பின் எல்லாப் படத்திலும் நடிக்க வைத்தாராம் . 

ஒரு படத்தில் காதில் கடுக்கண், நெற்றியில் விபூதி பட்டையெல்லாம் அடித்து ரெடியாகி வர, கேபி தன்னோட ஸ்கிரிப்டில் குளித்து தலையைத் துவட்டிக் கொண்டு வருவது போல் சீன் எழுதியிருந்தாராம். டேய் நீ குளிச்சிட்டு வர்ற மாதிரி சீன் அதுக்கு ரெடியாகு என்றதும் என்ன சீன் சார் என்று கேட்க, எல்லாப் படத்துலயும் அப்பா கேரக்டர் பேப்பர் படிக்கிற மாதிரித்தான் வரும்... அதனால இதுல குளிச்சிட்டு தலையைத் துவட்டிக்கிட்டு வர்றே... அப்போ காலிங்க் பெல் அடிக்குது... இதோ வாறேன்னு சொல்லி கதவைத் திறக்கிறே... என்றாராம். குளிச்சிட்டு வந்தாத்தானா... பூஜை பண்ணிக்கிட்டு இருக்கும் போது காலிங்பெல் அடிக்கிறமாதிரி வச்சா என்றதும் எங்கே பண்ணு பார்ப்போம் என்றாராம். நான் அப்படியே விநாயகர் துதி பாடிக்கிட்டே, காலிங்பெல் அடிக்கவும் 'இதோ வாறேன்' என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடலைப் பாடியபடி கதவைத் திறப்பது போல் நடித்துக் காண்பித்தேன் என்று  சொல்லி அப்படியே நடித்தும் காண்பித்தார். அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. உடனே கேபிசார் இது நல்லாயிருக்குடா இதுவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம்.

சிந்து பைரவியில் நான் தண்ணியடித்துவிட்டு வந்தேன் என்பதற்காக இன்னைக்கு கடம் வாசிக்க மாட்டார் என்று என்னை வெளியில் போகச் சொல்லுவார் சிவக்குமார், ஒரு கலைஞனை மேடையில் இருந்து இறக்கிவிட்டால் எவ்வளவு கேவலம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அதன் பிறகு தண்ணி போட்டுட்டு அவர் வீட்டில் போய் கடம் அடித்துக் கொண்டே பேசவேண்டிய சீன், அதற்கு முதலில் மாதவய்யா என்ற கேரள கடம் கலைஞரைப் போட்டிருந்தார். அவர் வந்து சீனைக் கேட்டவர், வெள்ளம் அடிச்சது போல் நடிக்கணுமா... சரியல்ல... எனக்கு ஆத்துல பிரச்சினை உண்டாகும் அப்படின்னு சொல்லிட்டுப் பொயிட்டார். இவரோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குமான்னு ஏங்குற காலத்துல கெடைச்சதை விட்டுட்டு ஓடிட்டார். 

(திரு. டெல்லி கணேஷ் அவர்களுடன் மனசுக்கு படங்களை கொடுக்கும் சுபஹான் அண்ணன் ( நான் எடுத்த போட்டோ.)).
அதன் பிறகே என்னைக் கூப்பிட்டார்... இதுதான்டா கதை நீ கடம் அடிக்கணும்... உனக்குத் தெரியுமா? என்றார். தெரியாது என்றேன்... கண்டிப்பாத் தெரியணுமே... தெரியலைன்னா எப்படி என்றவர், அவரின் டிரைவர் அப்போத்தான் ஒருவாரமாக கடம் வாசிக்க கற்றுக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு.'டேய் இவனுக்கு கத்துக்கொடுடா' என்றார். அவன் 'ஒன்..டூ..திரி...போர்..' அப்படின்னு மட்டும் சொல்லிக் கொடுக்க, இவனுக்கிட்ட எப்ப கத்துக்கிறதுன்னு நானே வாங்கி அடிக்க ஆரம்பிச்சேன் என்று பேசுவதற்காக போட்டிருந்த மர ஸ்டாண்டில் அழகாக கடம் வாசித்துக் காட்டினார். உள்ளேயிருந்து அதைக்கேட்ட பாலசந்தர் அவர்கள், 'இது யாருடா வாசிக்கிறா?' என்று கேட்டு நான் என்றதும் வெளியே வந்து 'நல்லாத்தானேடா வாசிக்கிறே? இது போதும் மத்ததை இளையராஜா பாத்துப்பான்' என்று சொல்லிவிட்டார் எனக்கு அந்தப்படத்தில் பேர் வந்ததுக்கு காரணமே நான் தட்டுனது போக இளையராஜா தட்டுனதாலதான் என்று சொல்லிச் சிரிக்க வைத்தார்.

நான் சிவக்குமார் வீட்டுல போயி தண்ணி அடிச்சிட்டு கடம் வாசிச்சிக்கிட்டே வசனம் பேசணும் என அவரின் அசிஸ்டெண்ட்ஸ் வசந்த், பாலகுமாரன், (இன்னொருவர் பெயர் ஞாபகமில்லை) மூவரும் சொல்ல, வாசிச்சிக்கிட்டே வசனம் பேசினால் சரியா வருமா கடம் அடிச்சிட்டு அப்புறம் பேசிட்டு... அப்புறம் கடம் இப்படி பேசினால் நல்லாயிருக்கும் என்றதும் அவர் சொன்னார்... இனி நீங்க அவர்கிட்ட பேசிக்கங்க என்று அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். நானும் சரி அவருக்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லி சீன் ஆரம்பிக்கும் போது கடம் அடித்து பின் நிறுத்தி வசனம்பேசி.. பின் கடம் அடித்து... வசனம் பேசி...பார்த்தவர் ரொம்ப நல்லா இருக்கேடா... இப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட,. நான் அவர்கள் மூவரையும் பார்க்க, அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினார்கள் என்றார். 

அவர் சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்தவர், மிகப்பிரபலமான இயக்குநர் ஒருவர் (பெயர் சொன்னார்... மறந்துவிட்டது)  ஒரு நாளாவது நான் பாலசந்தரின் அசிஸ்டெண்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி, ஒருமுறை அவருக்கு போன் பண்ணி எங்கே சூட்டிங்... நான் வாறேன் என்று சொல்ல... நீங்கள் என் பிதாமகன்... நீங்க இங்க வந்தீங்கன்னா... என்னால காட்சி அமைக்கவே முடியாது... தயவுசெய்து வரவேண்டாம் என்று சொன்னவர் ஒரு மேடையில் பாரதிராஜாவைப் பார்த்து உங்கிட்ட ஒரு நாள் அசிஸ்டெண்டா வேலை பார்க்கணும் என்று சொன்னார். உண்மைதானே என்று பாரதிராஜாவைப் பார்த்துக் கேட்க, அவரும் ஆமோதித்தார். 

வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தபோது சிலருக்கு பத்திரிக்கை கொடுத்தேன் யாரும் வரலை... ஆனா கேபிசார் வந்தார்... மோகன் போன் பண்ணி அட்ரஸ் கேட்டான். வந்தவர் வீடு நல்லாக் கட்டியிருக்கேடா... சினிமாவுக்கு வாடகைக்கு கொடுக்கப் போறியா? டிராலியெல்லாம் போற மாதிரி பெரிசா கட்டியிருக்கே... ஆமா பின்னால கிடக்க இடத்தையும் வாங்கிப் போட வேண்டியதுதானே என்றார். நீங்க தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தீங்கன்னா வாங்கிரலாம் என்றதும் சிரித்தார். 

கேபி கோபக்காரர்தான் ஆனா ரொம்ப பாசமானவர் என்றவர், பைபாஸ் சர்ஜரி பண்ணி மருத்துவமனையில் இருக்கேன்... எம்பொண்டாட்டிக்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கார். அவ நீங்க வரவேண்டாம்... வந்தா அழுதுடுவாருன்னு சொல்ல, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குப் போன பின் மோகன் போன் பண்ணி வீட்டுக்கு ஐயா வர்றாருன்னு சொன்னான். எதுக்கு நான் நல்லாயிருக்கேன் வரவேண்டாம் என்றேன். ஆனால் வந்தார்... சிகரெட் இன்னும் குடிக்கிறியா என்றார்... நிறுத்திட்டேன் என்றேன்... எப்போ என்றார்... நேற்று என்றேன். கவலைப்படாதேடா... நீ அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டே... இன்னும் நிறையப்படங்கள்ல நடிச்சி எல்லோரையும் சிரிக்க வைப்பேடா... எனத் தட்டிக்கொடுத்துச் சென்றார் என்று உணர்ச்சிப்பூர்வமாய்ச் சொன்னார்.  

கேபி சார் மத்தவங்களை மதிக்கத் தெரிந்தவர், தன்னிடம் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்தி அங்கு எதாவது சாப்பிட்டுத்தான் வருவார். அந்தப் பண்பாடு வேறு யாரிடமும் இல்லை. அவர் ஒண்ணும் அல்பாயிசுல போயிடலை. 84 வயசுலதான் போயிருக்கார். எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டுத்தான் போயிருக்கார். எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவ்வளவு கூட்டம் கூடியது கேபி சாருக்குத்தான்... எனக் குரல் தழுதழுக்கச் சொன்னார். 

பாரதிராஜா பற்றிச் சொல்லும் போது முதல் படத்தில் நடித்ததும் தன்னை அழைத்ததை நினைவு கூர்ந்தவர், அவர் அழைப்பை ஏற்று அம்மன் பிலிம்ஸ்க்குப் போனேன் ரொம்ப வயசானவரா இருப்பார்ன்னு நினைச்சிப் போனேன். இப்ப மாதிரிதான் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டுல சின்னப்பையனா இருந்தார். வாய்யா என்றார். இப்போ மாதிரி கரகரப்பான குரல் அப்போ இல்லை... இப்போத்தான் வா (அப்படியே பாரதிராஜா போல் கரகரப்பாக பேசி) அப்படின்னு பேசுறார். இது வேற எதாலயும் ஆனதில்லை... நடிக்கிறவங்ககிட்ட கத்திக்கத்தியே இப்படி ஆயிடுச்சு என்றார்.

தனது தெள்ளத் தெளிவான பேச்சில் நகைச்சுவையோடு கேபியின் நினைவுகளையும் அழகாய்... ஆழமாய்த் தந்து அமர்ந்தார் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். அவரின் பேச்சுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் எழுந்து அடங்க நேரமானது. யூகி சேதுவின் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மிரண்ட கூட்டத்தை பேசஞ்சர்ஸ் ரயில் போல மிக மெதுவாக ஆரம்பித்து சிரிக்க வைத்த டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சில் சிரித்துத் சிரித்து மிரட்சியில் இருந்து மீண்டது. மிகச் சிறப்பான பேச்சு...  வாழ்த்துக்கள் டெல்லி சார்.

(திரு.பாரதிராஜா அவர்கள் பேசும் போது மேடையில் திரு. டெல்லி கணேஷ், திரு. யூகி சேது, திரு. இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல்)

மேடையில் பாரதி நட்புக்காக அமைப்பு இவரை நவீன நாகேஷ் என்று அழைத்தது. அது உண்மைதான் என்பது அவரின் பேச்சின் மூலம் உறுதியானது. இப்படி ஒரு பட்டத்தை கலைமாமணிக்கு கொடுத்த பாரதிக்கு வாழ்த்துகள்.

-திரு. பாரதிராஜா அவர்களின் உரை நாளை மாலை பகிரப்படும்.

------------------------------

மனசின் துளிகள் சில :

மூன்றாண்டுகளுக்கு முன்னர் அபுதாபியில் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் பேசியதை பகிர்வாக வெளியிட்டிருந்தேன். அதைப் பார்த்து அவரும் எனது தனி மின்னஞ்சலை சுபஹான் அவர்களிடம் வாங்கி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இந்தமுறை வந்தவர் பேச்சினூடே என்னைக் கேட்டு பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவருடன் ஒரிரு வார்த்தைகள் பேசி போட்டோ எடுத்துக் கொண்டது சிறப்பு.

முன்பெல்லாம் மொபைலில் போட்டோ எடுத்தார்கள்... ஆண்ட்ராய்டு போன் வந்ததும் வீடியோ எடுத்தார்கள்.  இப்போ பெரும்பாலானோர் கையில் டேபை வைத்துக் கொண்டு மேலே தூக்கிப்பிடித்து விழா நிகழ்வுகளை வீடியோ எடுக்கிறேன் என்று பின்னால் இருப்பவர்களை பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள். சரி தொலைக்காட்சியில் பார்ப்பது போல் பார்க்க வேண்டியதுதான் என பலரின் நிலை படம் பிடிப்பவர்களின் டேப்பில் பார்க்கும்படி ஆகிவிட்டது. 

குழந்தைகளைக் கொண்டு வரும் பெற்றோர் அவர்களை கத்தி ஆட விட்டு விடுவதால் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சில நேரம் உன்னிப்பாகக் கேட்டாலும் கவனிக்க முடியவில்லை. மேடைக்கு முன்னே விஐபி சேரில் அமர்ந்து விழாவை ரசிக்கும் பாரதி அங்கத்தினரில் சிலராவது ஓரங்களில் விளையாடும் குழந்தைகளை சத்தமின்றி விளையாடுங்கள் எனச் சொல்லியிருக்கலாம். இல்லை குழந்தைகளை அருகே அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது அரங்கிற்கு வெளியே இருக்கும் இடத்தில் விளையாட விடுங்கள் என்று அறிவித்திருக்கலாம். சென்றமுறை ஒரு சிலர் குழந்தைகளை அதட்டி சப்தத்தைக் கட்டுப்படுத்தினார்கள். இந்த முறை ஏனோ யாருமே எழுந்து வரவில்லை.

விழா ஆரம்பிக்கும் போது ஜெட் ஏர்வேய்ஸ் நிர்வாகியை கௌரவித்த தலைவர் அவர்கள், 'பாரதி உறுப்பினர்களுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் 15% கட்டணச் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதுகுறித்து விழா முடிவதற்குள் அறிவிக்கப்படும்' என்றும் சொன்னார். ஆனால் கடைசிவரை அறிவிப்பு வரவேயில்லையே என்று நினைத்திருந்தேன். அவர்களின் இணையப் பக்கத்தில் பிப்ரவரி முதல் டிசம்பர் -2015 வரை இச்சலுகை என அறிவித்திருக்கிறார்களாம். அங்கு விவரம் அறிந்து கொள்ளலாம். 
(துளிகள் தொடரும்)
படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன்  அவர்க்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

29 கருத்துகள்:

 1. உங்கள் முக தரிசனத்தை பார்க்க வாய்ப்பே கிடைக்காதா குமார்? எப்போது உங்கள் படத்தை போடப் போறீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   என் போட்டோ வலைப்பூவில் இருந்ததே அண்ணா...
   விரைவில் பதிகிறேன் அண்ணா...

   நீக்கு
 2. இவ்வளவு பேச்சுகளையும் ஞாபகம் வைத்து எழுதியது கண்டு வியப்பாக இருக்கிறது நன்பரே...
  முதல் புகைப்படம் தெரியவில்லை
  நேற்றைய பதிவிலும் இரண்டு படம் தெரியவில்லை
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   இங்கு அனைத்துப் படமும் தெரிகிறதே... பிரச்சினை இல்லையே...
   கருத்துக்கு நன்றி அண்ணா...

   நீக்கு
 3. திரு டெல்லி கணேஷ் பேச்சை விளக்கமாக வெளியிட்டு சவாரஸ்யத்தைக் கூட்டி விட்டீர்கள் குமார் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. குமார் ஸார்.. இவ்வளவையும் ஞாபகம் வைத்திருந்து எழுதியிருக்கிறீர்களே.. மிக்க நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா..
   இது மட்டுமே இறைவனின் வரப்பிரசாதம்...
   ஞாபகத்தில் வைக்க முடிகிறதே... அதுவே சந்தோஷம்தானே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. திரு. டெல்லி கணெஷ் அவர்களின் சுவாரசியமான பேச்சை மிக அழகாக கொடுத்துள்ளீர்கள்.

  மனசின் துளிகள் 2&3 விழா ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   இதெல்லாம் எல்லா இடத்திலும் இருக்கு... கவனிக்க வேண்டிய விஷயம் என்றாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போயாச்சே...

   நீக்கு
 6. இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவு இது!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு நண்பரே
  ரசித்தேன்
  முதல் படம் தெரியவில்லை
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா....
   கில்லர்ஜி அண்ணாவும் அப்படித்தான் சொல்லியிருந்தார் ஐயா.... ஆனால் இங்கு வருகிறதே... என்ன பிரச்சினை... என்று தெரியவில்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. "உன்னால் முடியும், நான் நம்புகிறேன்... முயற்சி செய்" என்று திறமையை வெளிக் கொணர்வதில் திரு.பாலச்சந்தர் அவர்கள் நிபுணர் என்பதில் திரு டெல்லி கணேஷ் அவர்களும் ஒரு உதாரணம்...!

  அவரின் பேச்சை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர் டெல்லி கணேஷ். எப்படி பேசியது அத்தனையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
  பாரதிராஜா பேச்சை ஆவலுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முரளிதரன் ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. டெல்லி கணேஷ் பேச்சு அருமை! நன்றி குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. திரு டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சு கவர்ந்தது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க திருமதி வெங்கட் (அண்ணா)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. #அவருடன் ஒரிரு வார்த்தைகள் பேசி போட்டோ எடுத்துக் கொண்டது சிறப்பு.#
  நவீன நாரதர் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் ,பாராட்டுக்கள் ...அந்த போட்டோவை எப்போது போடப் போகிறீர்கள் ?
  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி...
   இன்னைக்கு பதிவில் போட்டாச்சு...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. திரு டெல்லி கனேஷ் அவர்களின் பேச்சு மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி குமார்.

  எனது இன்றைய பதிவு அபியும் நானும் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. இத்தனை விஷயங்களையும் நினைவில் வைத்து பதிவாக்கிய உங்களுக்கு எனது பாராட்டுகள்.

  சிறப்பான தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 15. ஹை! மிக அருமையான நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கின்றது. மட்டுமல்ல மிகவும் பிடித்த இயக்குனர் பாலசந்தர் பற்றி பல தகவல்கள். தாங்கள் அவர் பேசியதை மிக அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.. - துளசிதரன், கீதா

  கீதா: டெல்லி கணேஷ் அவர்களுக்கும் என் கிராமத்திற்கும் (நாகர்கோவில் அருகே உள்ளது) தொடர்பு உண்டு. நடிக்க வந்த புதிதில், ஏற்கனவே அவர் மேடை நாடகங்களில் நடித்து பெயர் அறியப்பட்டவர்தான்....அவர் எங்கள் கிராமத்திற்கு அவரது உறவினரின் கல்யாணத்திற்கு வந்திருந்த போது, (37 வருடங்களுக்கு முன்) எங்கள் ஊர் குளத்தில் நீந்திக் குளிக்க.....நாங்கள் எல்லோரும் அவரை நடிகர் என்று வாயைப் பிளந்து வேடிக்கை பார்த்து ரசித்தது நினைவுக்கு வருகின்றது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார் / கீதா மேடம்
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...