மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அரசியல் பரபரப்பு : விஜயகாந்துடன் திருமா திடீர் சந்திப்பு


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் - 3ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...


 tirumavalavan meets vijayakanth

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 

மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். 

இந் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். அப்போது மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. 

அரசியல் கட்சியினர் அறிக்கை: 

மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினார். அவரிடம் மரக்காணம் கலவரம் குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியனை திருமாவளவன் சந்தித்து பேசினார். 

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்ததோடு, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.


2ம் தேதி ஆர்ப்பாட்டம்-திருமாவளவன்: 

இந் நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக் காலமாக பாமகவினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சாதி சக்திகளை ஒருங்கிணைத்து ஏழை எளிய தலித் மக்களுக்கெதிராகத் தூண்டிவிடும் ஆபத்தான போக்குகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வருகின்றனர். கடந்த 25ம் நாள் மாமல்லபுரத்தில் நடத்திய விழாவில் அப்பாவி வன்னிய இளைஞர்களுக்கு சாதி வெறியை ஊட்டியுள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள். 

மரக்காணம், கழிக்குப்பம் கிராமங்களில் தலித் மக்களின் 15 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சேட்டு என்பவர் பலியாகியுள்ளார். ஏகாம்பரம் என்பவர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர். கூனிமேடு என்னுமிடத்தில் இஸ்லாமியர்களும் பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்துகளும் கொளுத்தப்பட்டுள்ளன. 


வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் இருவர் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சாதி வெறியைத் தூண்டிவரும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 2ம் தேதி அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள் யாவரையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ்தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

வணக்கம்,குமார்!///எங்கே செல்லும் இந்தப் பாதை??????

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் அடிக்கிறமாதிரி அடிப்பேன் நீ அழுகுற மாதிரி நாடி என்ற கதையாக இருக்குமோ -
டவுட்டு டாக்டர்.