கடந்த புதன்கிழமை ஜெயலலிதா சென்னை நந்தனம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்தார். ஒரு முதலமைச்சர் தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கிடையில் இது போல ஒருவரைச் சென்று சந்திப்பது வரவேற்கத்தகுந்த விஷயம். அது தினத்தந்தி அதிபர் என்பதால் இருந்தாலும் கூட. சசிகலாவைத் தவிர வேறு யாரின் நலனிலும் அக்கறை துளியும் இல்லாத ஜெயலலிதா இது போல நேரம் ஒதுக்கி உடல் நலிந்த ஒருவரைப் பார்ப்பது சிறப்பான விஷயமே. ஆனால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளைப் பார்ப்பது, அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளியைப் பார்க்கையில், அதற்குண்டான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமா வேண்டாமா ?
சாதாரண நபர்கள் என்றால் அத்தகைய கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கலாம். ஆனால் ஜெயலலிதாவை அப்படிச் சொல்ல முடியுமா ? ஜெயலலிதா எந்த சட்டத்தையோ விதிகளையோ மதிப்பவரா என்ன ? கோடுகளை உடைத்த பிகாசோவைப் போல மரபுகளை உடைப்பவர் அல்லவா ? அந்த விதிகளையெல்லாம் அவர் பின்பற்றுவாரா என்ன ? அப்படி விதிகளைப் பின்பற்றாமல் சென்ற ஜெயலலிதாவை கேள்வி கேட்ட ஒரு முதிய மருத்துவருக்கு “தக்க பாடத்தை“ புகட்டியுள்ளார் ஜெயலலிதா.
தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் உடலில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரைப் பார்க்க ஜெயலலிதா சென்றபோது, பல ஆண்டுகளாக சிவந்தி ஆதித்தனின் மருத்துவராக உள்ள கருணாநிதி என்ற மருத்துவர் ஜெயலலிதாவை வரவேற்றுள்ளார். வணக்கம் கூறி வரவேற்று விட்டு, மேடம் தங்கள் காலணிகளை கழற்றுங்கள் (Please remove your shoes) என்று கூறியிருக்கிறார். அவ்வாறு சொன்னவரை நோக்கித் திரும்பிய ஜெயலலிதா ஒரு புழுவைப் போல பார்த்து விட்டு, (ஜெயலலிதாவின் அந்தப் பார்வையில் பல ஆங்கில கெட்டவார்த்தைகள் அடக்கம். கான்வென்டில் படித்தவர் ஆங்கிலத்தில்தானே திட்ட முடியும். திருக்குவளைக்காரர் என்றால் காது கூசும் அளவுக்குத் தமிழில் திட்டுவார்).
ஜெயலலிதா சிவந்தி ஆதித்தனைப் பார்த்துவிட்டு, செய்தித் துறை புகைப்படக் கலைஞர்களின் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விட்டு சென்று விட்டார். அதன் பிறகு நடந்ததுதான் சர்ச்சைக்குரியது. ஜெயலலிதாவோடு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் (Core Cell CID) ஜெயலலிதா அகன்றவுடனேயே அந்த மருத்துவரை கடுமையாக திட்டியுள்ளனர்.. யாரைப் பாத்து ஷுவைக் கழற்றச் சொல்கிறாய் என்று தொடங்கிய மிரட்டல் சிறிது நேரம் தொடர்ந்துள்ளது. அத்தோடு அந்த பிரச்சினை முடிந்து விட்டது.
ஜெயலலிதாவின் காலணியை அவிழ்க்கச் சொன்ன மருத்துவரின் பெயர் கருணாநிதி. அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு தற்போது வயது 70. வியாழனன்று அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். காலை 11 மணிக்கு சென்னை மாநகரக் காவல்துறையின் தேனாம்பேட்டையைச் சேர்ந்த காவல்துறையினர் காவல்துறை வாகனத்தில் சென்று வண்டியில் ஏறுங்கள் உங்களைக் கைது செய்கிறோம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். காலை 11 மணிக்கு வண்டியில் ஏற்றப்பட்ட 70 வயது கருணாநிதி பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நான்கு மணி நேரம், ஒரு ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதை என்றால் அடித்துத் துன்புறுத்தி, தலைகீழாக கட்டி அடித்தால்தான் சித்திரவதை என்றல்ல… ஒருவரை உட்கார வைத்து, பலர் சுற்றி நின்று வளைத்து வளைத்து கேள்வி கேட்டு, கன்னத்தில் அறைவதம் சித்திரவதைதான். ஒரு குற்றச்செயலைச் செய்து, அது தொடர்பாக விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியைப் பார்க்க வரும் நபர் பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமலும், வெளியிலிருந்து வருகையில் காலணியோடும் வந்து, நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடப்போகிறாரோ என்ற கவலையில் காலணியைக் கழற்றுங்கள் என்று சொன்ன ஒரு நபரை இப்படி பலர் அமரவைத்து விசாரிப்பது சித்திரவதையா இல்லையா. இதற்குப் பிறகு பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு மருத்துவர் கருணாநிதி வரவழைக்கப்பட்டபோது அவர் குடும்பத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையம் வரவழைக்கப்பட்ட பிறகு, அங்கே மருத்துவரை காவலர்கள் அடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு மருத்துவர் கருணாநிதியின் குடும்பத்தினர் வருவதற்குள், சக்திவேலு என்ற உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்துக்காக கருணாநிதியை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற நடுவரிடம் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்று விட்டனர். மாலை நீதிமன்ற நடுவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட மருத்துவர் கருணாநிதி மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்று இரவு என்ன நடந்தது என்பது மிகவும் மர்மமாகவே உள்ளது. நீதிமன்ற நடுவர் முன்னிலையில் மாலையில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவர், வெள்ளியன்று காலையில் ஜாமீன் கிடைத்து விடுவிக்கப்பட்டள்ளார்.
மருத்துவர் கருணாநிதியின் இந்தக் கைது ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் தலையீட்டினாலேயே இரவோடு இரவாக மருத்துவர் கருணாநிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இப்படி ஒரு சம்பவம் முட்டாள் அரசில் மட்டுமே நடக்க முடியும். அதுவும் மருத்துவராக தனது கடமையை செய்த ஒரு மருத்துவரை கைது செய்யும் நடவடிக்கை முட்டாளின் அரசில் மட்டுமே நடக்கும். இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடந்திருக்கலாம், நடந்திருக்கிறது என்பதால் அவரைக் குற்றம் சொல்ல முடியாது என்று கூறலாம். ஆனால் நடந்த சம்பவத்துக்கு ஜெயலலிதா மட்டுமே முழுப் பொறுப்பு. உள்துறைக்கான அமைச்சராக இருப்பதால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு இச்சம்பவத்தில் பொறுப்பு இல்லை. ஒரு 70 வயது முதிய மருத்துவரை இப்படி கைது செய்து சித்திரவதை செய்வதை புரட்சித் தலைவி அம்மா விரும்புவார்கள் என்ற ஒரு பிம்பத்தை ஜெயலலிதா கட்டமைத்துள்ளார். இப்படி ஒரு மோசமான மனித உரிமை மீறலை அரங்கேற்றி அதன் மூலம் புரட்சித் தலைவியின் மனதில் இடம் பிடித்து அப்படி இடம் பிடிப்பதன் மூலம் மேலும் அதிகாரத்தை கூட்டிக் கொள்ளலாம், கூடுதலாகக் கிடைக்கும் அதிகாரத்தின் மூலம் கூடுதலாக லஞ்சம் வாங்கலாம், யாரை வேண்டுமானாலும் தூக்கிப் போட்டு மிதிக்கலாம் என்ற வேட்கையே காரணம். வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை.
ஒரு நோயாளியை சாதாரண சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவதற்கான காரணம், அவர் கோமா நிலையிலோ, சுயநினைவு இல்லாமலோ, எந்த நேரத்திலும் அவர் நிலை மோசமடையும் ஒரு நிலையிலோ, சிறுநீர் கழிக்க கேத்தட்டர் பொறுத்தப்பட்ட நிலையிலோ, மூக்கு வழியாக உணவு உண்ணும் நிலையிலோ இருக்கையில் மாற்றப்படுகிறார்.
சமீப காலமாக HAI என்று அழைக்கப்படும் Hospital Acquired Infection அல்லது non cosmial infection அதிக அளவில் பரவி வருகிறது. இதை மருத்துவமனைத் தொற்று என்று அழைக்கலாம். அமேரிக்காவில் உள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய்யம் நடத்திய (Center for Disease Control and Prevention) ஆய்வில் இத்தகைய மருத்துவமனைத் தொற்று காரணமாக மட்டும் ஆண்டுதோறும் 25 ஆயிரம் மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது. இத்தகைய மருத்துவமனைத் தொற்று பல்வேறு பாக்டீரியாக்கள் காரணமாக ஏற்படுகிறது. இந்த மருத்துவமனைத் தொற்று சிறுநீரகப் பாதை (Urinary tract) மூச்சுக் குழாய் (respiratory tract) வெளிக்காயங்கள் (external wounds) ஆகியன வழியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை பாதிக்கிறது.
நோயாளிகளைப் பார்க்க வரும் நபர்கள், தும்முவதாலும், தொடுவதாலும், அவர்களின் மூச்சுக் காற்றின் வழியாகவும், அவர்கள் பாதத்தில் உள்ள தூசுகளாலும் தொற்று பரவி அது நோயாளிகளை பாதிக்கும் அபாயம் பெருமளவில் உள்ளது. மேலும் சமீப காலமாக, பாக்டீரியாக்கள் மருந்துகளை எதிர்க்கும் சக்தியை (drug resistant) வளர்த்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை அவர்களின் நெருங்கிய உறவுகளைக் கூட மருத்துவர்கள் பார்க்க அனுமதிப்பதில்லை. அப்படிப் பாரக்க முயற்சிப்பவர்களை மருத்துவர்கள், கையுறை, காலுறை, ஏப்ரன், முகமூடி போன்ற பாதுகாப்புக் கவசங்களை அணிந்த பிறகே பார்க்க அனுமதிக்கிறார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிவந்தி ஆதித்தனைப் பார்க்கச் சென்ற ஜெயலலிதா இது போன்ற எந்த பாதுகாப்புக் கவசங்களையும் அணியவில்லை. ஒரு மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்கச் செல்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல. மருத்துவமனை அவருக்கு ஒன்றும் புதிதல்ல. 1984ம் ஆண்டில் சிறுநீரகப் பழுது காரணமாக எம்.ஜி.ஆர் முதன் முதலாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது க்ரீம்ஸ் சாலையில், அப்போது புகழ் பெறாத அப்போல்லோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கச் சென்றார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவைப் பார்த்து ஜானகி உதிர்த்த வார்த்தைகள் எழுதத்தக்கதல்ல. எந்த உளவுத்துறையினரும், காவல்துறையினரும் இன்று ஜெயலலிதாவைக் காலணியை கழற்றச் சொன்ன மருத்துவரை துன்புறுத்தினார்களோ, அதே துறையைச் சேர்ந்தவர்களால், ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து அப்போதிருந்த சுழல் படிக்கட்டின் வழியாக மிரட்டி வெளியேற்றப்பட்டார் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
ஜெயலலிதா சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்ததால் அவருக்கு எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால் அவ்வாறு பார்த்ததால் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சொம்படித்துக் கொண்டிருக்கும் தினத்தந்தி மேலும் சிறப்பாக சொம்படிக்கும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஜெயலலிதா ஒரு மருத்துவமனைக்கு செல்வதால், அந்த நோயாளிக்குச் சிரமம், மருத்துவர்களுக்குச் சிரமம், மற்ற நோயாளிகளுக்குச் சிரமம், அந்த நோயாளிகளின் உறவினர்களுக்குச் சிரமம், சாலையில் உள்ள பொதுமக்களுக்குச் சிரமம் என்று பல்வேறு தரப்பினருக்கு சிரமம் மட்டுமே ஏற்படுகிறது. ஜெயலலிதா நேரில் சென்று பார்ப்பதால் சம்பந்தப்பட்ட நோயாளியின் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். பழம்பெரும் நடிகை சுகுமாரியை ஜெயலலிதா சென்று பார்த்து வந்த நான்கே நாட்களில் அவர் மரணமடைந்தது ஒரு சிறந்த உதாரணம்.
நோயாளிகளின் மீதான தனது அன்பை ஜெயலலிதா நேரில் சென்றுதான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட நோயாளியிடமோ, அவர் குடும்பத்தினரிடமோ தொலைபேசியில் நலம் விசாரித்தாலே அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள். விளம்பரத்திற்காக இன்னாரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இன்று, தொலைபேசியில் நலம் விசாரித்தார் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். ஜெயலலிதா தனது ஆட்சி முடியும் வரை நோயாளிகளை அந்த நோயாளிகளின் நலன் கருதி பார்க்காமல் இருப்பது நல்லது.
இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள் ஆய்வுக்குரியன. தேனாம்பேட்டை உதவி ஆணையராக இருப்பவர் சிவபாஸ்கரன். இவர் நீண்ட நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உளவுப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர். ஒரு மாவட்டத்தின் உளவுப் பிரிவு ஆய்வாளர் (Special Branch Inspector) வேலை என்றால் என்னவென்றால், காவல்துறை மொழியில் பக்கெட் தூக்கும் வேலை என்று பொருள். அந்தந்த மாவட்டக் கண்காணிப்பாளரின் வீட்டு வேலை, அவர் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டுவது, அதிகாரியின் வீட்டு மளிகை சாமான்கள் வாங்கித் தருவது, அவரின் “இதரத் தேவைகளை” பூர்த்தி செய்வது, அவருக்கு மாமூல் வசூல் செய்வது, போன்ற வேலைகளே பிரதான வேலைகள். இதையெல்லாம் செய்த பிறகே, உளவு வேலைகளைச் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக உளவுப்பிரிவில் மாவட்ட ஆய்வாளராக ஒரு அதிகாரி இருக்கிறார் என்றாலே, அவர் சிறந்த பக்கெட் என்று பொருள். நீண்ட நாட்களாக பக்கெட்டாக இருந்த சிவபாஸ்கரன், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றதும், கும்பகோணம் டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார். கும்பகோணத்தில் சிவபாஸ்கரன் மாமூல் வாங்காத இடமே இல்லை எனலாம். கிட்டத்தட்ட கிரி படத்தில் வடிவேலு மாமூல் வாங்கிய அளவுக்கு சிவபாஸ்கரனும் மாமூல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.
உதவி ஆய்வாளராக இருந்தபோது, தற்போது சென்னை நகர ஆணையராக உள்ள ஜார்ஜின் பக்கெட்டாக வேலை பார்த்த சிவபாஸ்கரனைப் போன்ற சிறந்த பக்கெட்டுகள் சென்னை நகருக்கு தேவை என்பதால், ஜார்ஜ், சிவபாஸ்கரனை சென்னைக்கு மாறுதல் செய்து, தேனாம்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கிறார். இந்த சிவபாஸ்கரன்தான் மருத்துவர் கருணாநிதியின் கைதில் முக்கிய சூத்ரதாரி என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நீதித்துறையின் செயல்பாடுகள் மர்மமான முறையில் இருந்துள்ளதோடு அல்லாமல், அயோக்கியத்தனமாகவும் உள்ளது. கைது செய்யப்பட்ட ஒரு நபரை நீதித்துறை நடுவரின் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு ஒரு கைதியை நீதித்துறை நடுவரின் முன்பு ஆஜர்படுத்துகையில், காவல்துறை அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளில் சந்தேகம் இருந்தால், நீதித்துறை நடுவர், குற்றம்சாட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்பத் தேவையில்லை. உங்களை சொந்த ஜாமீனில் விடுவிக்கிறேன் என்று விடுவிக்கலாம். ஆனால், 99 சதவிகித நீதித்துறை நடுவர்கள் செக்குமாடுகள் போலத்தான் செயல்படுகிறார்கள்.
ஒரு நீதித்துறை நடுவரின் முன்பு ஒரு குற்றவாளியை ஆஜர்படுத்தினால், பெரும்பாலான நீதித்துறை நடுவர்கள் கேட்கும் கேள்வி “எனி கம்ப்ளெயின்ட்ஸ்” அல்லது ”ஏதாச்சும் சொல்லனுமாப்பா” அந்தக் கைதி என்னை போலீஸ் அடிச்சாங்க என்று சொன்னால் அதைக் காதில் கூட வாங்காமல், உங்களை 15 வரை ரிமாண்ட் பண்றேன் என்று ஆல் இந்திய ரேடியோவின் செய்தி வாசிப்பாளர்கள் போல கூறுவார்கள். நீதித்துறை நடுவருக்கு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கியுள்ள எந்த அதிகாரத்தையும் நீதித்துறை நடுவர்கள் பயன்படுத்தாமல், காவல்துறையின் அடிமைகள் போலவே செயல்படுகிறார்கள். நீதித்துறை நடுவர்கள் அவர்களின் அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தொடங்கினால், காவல்துறையினரின் பொய்வழக்குகளில் பாதியைக் கட்டப்படுத்த முடியும். ஒரு 70 வயது மருத்துவர், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர், ஒரு அரசு ஊழியரை, அதுவும் ஒரு உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற வழக்கைப் பார்த்ததுமே நீதித்துறை நடுவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் இது பொய் வழக்கு என்று. முதலமைச்சரோடு வரும் காவல்துறை அதிகாரிகளை எப்படி ஒரு 70 வயது முதிர்ந்த மருத்துவர் தடுத்திருக்க முடியும் ? ஆனால் ஒரு செக்குமாட்டைப் போன்ற அறிவை உடைய ஒரு நீதித்துறை நடுவர் அந்த முதியவரை சிறைக்கு அனுப்பும் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.
சிறைக்கு மருத்துவர் கருணாநிதி எப்படி அனுப்பப்பட்டாரோ, அதே போல மர்மமான முறையில் அவர் விடுதலையும் செய்யப்பட்டிருக்கிறார். வியாழன் அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை அவர் நீதித்துறை நடுவரால் ரிமாண்ட் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். வியாழனன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தால் கூட, அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வெள்ளியாகியிருக்கும். வியாழனன்றே ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் கூட, அதுவும் சொந்த ஜாமீன் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த ஜாமீன் மனுவை இரவோடு இரவாகத் தயார் செய்து, காலை 6 மணிக்கு புழல் சிறைக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, வெள்ளிக்கிழமை காலை மருத்துவர் கருணாநிதி சிறையிலிருந்து வெளியே வந்திருக்க முடியும். யார் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தது, நீதித்துறை நடுவர் அதை எப்போது விசாரித்தார், அந்த ஜாமீன் உத்தரவு எப்போது தயார் செய்யப்பட்டது, அந்த ஜாமீன் உத்தரவை யார் புழல் சிறைக்கு எடுத்துச் சென்றது, என்பது போன்ற விபரங்கள் வெளிவராமல் மர்மமாகவே உள்ளன. ஆனால் சட்டபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அரசு இயந்திரம் நினைத்தால் ஒரு மனிதரின் வாழ்வை எப்படிச் சின்னாபின்னமாக்க முடியும் என்பதற்கு மருத்துவர் கருணாநிதியின் கைது ஒரு சிறந்த உதாரணம். இரவோடு இரவாக மருத்துவர் கருணாநிதியை விடுவிக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, இதோடு நின்று விடாமல், இந்தக் கைதுக்கு உத்தரவிட்டது யார், எந்த அதிகாரி முடிவெடுத்தார் என்று கண்டறிய வேண்டும். கீழ் நிலை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த உயர் அதிகாரி உத்தரவிட்டார் என்பதை அறிந்து, அந்த அதிகாரியை, உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளான மருத்துவருக்கு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். இது போல எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே, ஆர்வக்கோளாறு பிடித்த அடிமைகளின் அதிகப்பிரசங்கிச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.
இவற்றைச் செய்ய ஜெயலலிதா தவறுவாரேயானால், காலம் அவருக்கு மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.
|
மின்னஞ்சலில் நண்பர் அனுப்பிய பகிர்வு இது... யார் எழுதியது என்பது தெரியவில்லை.... அனுப்பிய நண்பருக்கும் எழுதிய நண்பருக்கும் நன்றிகள்....
-'பரிவை' சே.குமார்
2 எண்ணங்கள்:
தவறான தகவல் குமார். மருத்துவர் காலணியைக் கழற்றும்படி சொன்னது முதல்வர் ஜெ.யை அல்ல. அவர் ஒழுங்காக காலணியைக் கழற்றிவிட்டுத் தான் உள்ளே போயிருக்கிறார். அவர் பாதுகாப்புக்கு வந்த காவல் அதிகாரிகளைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் மருத்துவர். ஜெ. மருத்துவமனையை விட்டுப் போனபின், மருத்துவர் கண்டிக்கப்பட்டிருக்கிறார். பின் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது முதல்வரின் கவனத்திற்கு தெரிந்து நடந்திருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. ஜெயலலிதாவின் மீது எவருக்கு காழ்ப்புணர்வோ... இந்த செய்தியை சற்றே திரித்து உங்களுக்கு அனுப்பியிருக்காங்க...
அதுபோகட்டும்... அப்படியே நடந்திருந்தாலும் அந்த டாக்டரை யார் ‘கருணாநிதி’ன்னு பேர் வெச்சுக்கச் சொன்னது? அது ஒண்ணு போதாதா ‘அம்மா’வுக்கு கோபம் வரவழைக்கறதுக்கு? ஹி... ஹி...
வெட்கப்பட வேண்டிய செயல்
கருத்துரையிடுக