சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைப் புரிய வைத்த மிகச் சில ஒளிப்பதிவாளர்களுள் முதன்மையானவர் ஏ.வின்சென்ட். கருப்பு வெள்ளைப் படங்களாகட்டும், வண்ணப்படங்களாகட்டும் ஓவியம்போல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் இவர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஒளிப்பதிவு செய்த "வசந்த மாளிகை' திரைப்படம் அண்மையில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏ.வின்சென்ட்டை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.......
"வாஸ்கோடாகமா முதன்முதலாக இந்தியாவுக்கு வந்திறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கோழிக்கோடுதான் என் சொந்த ஊர். 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினான்காம் தேதி நான் பிறந்தேன். என் தந்தை ஜார்ஜ் வின்சென்ட் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் பெயிண்டிங், டிசைனிங் ஆகியவற்றிலும் வல்லவராகத் திகழ்ந்தார். கோழிக்கோட்டில் சொந்தமாக சித்ரா ஸ்டுடியோ எனறு ஒரு ஸ்டுடியோவையும் வைத்திருந்தார். இந்த ஸ்டுடியோதான் சிறு வயதிலேயே எனக்கு புகைப்படக் கலையில் ஈடுபாடு வரக் காரணமாக அமைந்தது. இண்டர்மீடியட் படித்து முடித்ததும் ஸ்டுடியோவிலேயே முழு நேரமும் இருந்து எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன்.
1947ஆம் ஆண்டு என் தந்தை என்னை சென்னைக்கு அழைத்து வந்து ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்த்து விட்டார். நான் எடுத்த சில கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்து என்னை கேமரா அசிஸ்ட்டெண்ட்டாக ஜெமினி ஸ்டுடியோவில் சேர்த்துக் கொண்டார்கள். கமால் கோஷ் அப்போது சீஃப் கேமராமேனாகப் பணியாற்றி வந்தார். கே.ராம்நாத், எம்.நடராஜன், சி.வி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் அப்போது ஜெமினியில் பணியாற்றி வந்தார்கள்.
"அபூர்வ சகோதரர்கள்', "சந்திரலேகா', "ஞானசௌந்தரி' போன்ற படங்களுக்கு கேமரா அசிஸ்ட்டெண்ட்டாகப் பணியாற்றினேன். பிரபல நடனக் கலைஞர் உதயசங்கர் இயக்கிய "கல்பனா' என்ற இந்திப்படத்துக்கு கே.ராமநாத் ஒளிப்பதிவு செய்ய நான் கேமரா அசிஸ்டெண்ட் ஆகப் பணியாற்றினேன். இந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளிலும் கேமரா உதவியாளனாகப் பணியாற்றி தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன்.
நடிகை பி.பானுமதி, தான் விரைவில் அமைக்கவிருக்கும் பரணி ஸ்டுடியோவில் நான் பணியாற்ற வேண்டும் என்று அழைக்கவே நான் ஜெமினி ஸ்டுடியோவிலிருந்து விலகி அங்கு சேர்ந்தேன். பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கிய "பிரஜூகோ தெருவு' என்ற தெலுங்கு படம்தான் நான் முதன்முதலாக தனித்து ஒளிப்பதிவு செய்த படம். நாகேஸ்வரராவ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அடுத்ததாக "பரதேசி" என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன்.
தமிழில் நான் பணியாற்றிய முதல் படம் "அமரதீபம்'. பின்னாளில் பெரும் இயக்குநராகப் புகழடைந்த ஸ்ரீதர் கதை வசனத்தில் உருவான இப்படத்தை டி.பிரகாசம், கோவிந்தராஜ், கோபால் ரத்னம் (இயக்குநர் மணிரத்னத்தின் தந்தை) ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
"அமரதீபம்' படத்துக்கு முன்பிருந்தே சிவாஜியுடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு. நான் கேமரா உதவியாளராக பணியாற்றி வந்த காலத்தில் நண்பர்கள் சிலருடன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த இடத்துக்கு பக்கத்தில்தான் சிவாஜியும் தங்கியிருந்தார். அப்போதிருந்தே சிவாஜி எனக்கு நெருக்கமாகவே பழக்கம். அப்போதெல்லாம் இருவரும் "வாடா' "போடா' என்றுதான் பேசிக்கொள்வோம். "பராசக்தி' படத்துக்கு முன்பாகவே சிவாஜியை மேக்கப் டெஸ்ட் எடுத்தது நான்தான்.
எல்.வி.பிரசாத் இயக்கத்தில் கமால்கோஷ் ஒளிப்பதிவு செய்த "பூங்கோதை' படத்துக்காக முதன்முதலாக சிவாஜியை நான் மேக்கப் டெஸ்ட் எடுத்தேன். நடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பான இப்படத்துக்கு மொத்தம் நாலு பேரை மேக்கப் டெஸ்ட் எடுத்தோம். அதில் ஒருவர்தான் கணேசன். அப்போது அவர் சிவாஜி இல்லை. மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்ட நால்வரில் ஒரு தெலுங்குப் பையனுக்குத்தான் "பூங்கோதை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. நான்தான் இயக்குநர் எல்.வி.பிரசாத்திடம் பலமாக சிபாரிசு செய்து சிவாஜிக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தேன். "பூங்கோதை'தான் சிவாஜியின் முதல் படமாக வந்திருக்க வேண்டியது. ஆனால் "பராசக்தி' முதலில் வெளிவந்து விட்டதால் அது முதல் படமாகி விட்டது.
நானும் சிவாஜியும் ரொம்ப நாட்களாக "வாடா' "போடா' என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். சிவாஜி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு நிறைய பேர் அவரைப் பார்க்க வந்து கொண்டிருப்பார்கள். அப்போது முதல் அவரை அப்படிக் கூப்பிடுவதில்லை. ஆனால் அவர் மட்டும் என்னை எப்போதும்போல் "வாடா' "போடா' என்று கூப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்.
சிவாஜி இறந்து போவதற்கு முன்பு உடல் நலமின்றி வீட்டில் இருந்தபோது நான்போய் பார்த்துவிட்டு வந்தேன். அவரது மரணம் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது. சிவாஜியின் நூற்றி ஐம்பதாவது படமாக மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளியான "சவாலே சமாளி', வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளியான "கௌரவம்' போன்ற சில முக்கியமான படங்களை என்றென்றும் என்னால் மறக்க முடியாது.
"கௌரவம்' படத்தில் இரட்டைவேடக் காட்சிகளைப் படமாக்கிய விதம் குறித்து எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் எனது ஆரம்ப காலங்களிலேயே சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "உத்தமபுத்திரன்' படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்தில் மைசூர் பிருந்தாவன் கார்டனில் சிவாஜி கணேசன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு காட்சியில் ஜூம் செய்திருப்பேன். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே முதல் முறையாக ஜூம் செய்து எடுக்கப்பட்ட காட்சி அதுதான்.
நான் தனித்து ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப் படமான "அமரதீப'த்துக்கு கதை வசனம் எழுதிய ஸ்ரீதருக்கும் எனக்கும் துவக்கம் முதலே நல்ல புரிதல் இருந்ததால் எங்களால் தொடர்ந்து பணியாற்றவும் வெற்றிப்படங்களைக் கொடுக்கவும் முடிந்தது. அவர் இயக்கிய "நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ஒளிப்பதிவாளருக்கு நல்ல பெயர் வரும்படியான காட்சிகள் பலவற்றை அமைத்துக் கொடுத்தார். "நெஞ்சில் ஓர் ஆலயம்' குறைந்த நடிக நடிகையரைக் கொண்டு இருபத்தெட்டே நாட்களில் உருவாக்கப்பட்ட படம்.
நான் தனித்து ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப் படமான "அமரதீப'த்துக்கு கதை வசனம் எழுதிய ஸ்ரீதருக்கும் எனக்கும் துவக்கம் முதலே நல்ல புரிதல் இருந்ததால் எங்களால் தொடர்ந்து பணியாற்றவும் வெற்றிப்படங்களைக் கொடுக்கவும் முடிந்தது. அவர் இயக்கிய "நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ஒளிப்பதிவாளருக்கு நல்ல பெயர் வரும்படியான காட்சிகள் பலவற்றை அமைத்துக் கொடுத்தார். "நெஞ்சில் ஓர் ஆலயம்' குறைந்த நடிக நடிகையரைக் கொண்டு இருபத்தெட்டே நாட்களில் உருவாக்கப்பட்ட படம்.
இப்படத்தில் இடம் பெற்ற "சொன்னது நீதானா' என்ற பாடல் காட்சியில் கேமரா, முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலின் கீழே புகுந்து வெளிவருவது போன்று அமைக்கப்பட்ட ஷாட்களை படம் பார்த்தவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இந்தக் காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்றால் அரை வட்ட வடிவ டிராலி போட்டு, அதன் மேல் கட்டில் போட்டிருந்தோம். கேமரா கட்டில் அருகில் வந்ததும் மேலே கட்டியிருக்கும் கயிறு மூலம் கட்டிலை தூக்கி விடுவார்கள். கேமரா கட்டிலுக்கு அடியில் இருப்பதுபோல் காட்சியில் தெரியும்.
எம்.ஜி.ஆருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் "எங்க வீட்டுப் பிள்ளை'. எம்.ஜி.ஆர். எப்போதும் என்னை முதலாளி என்றுதான் அழைப்பார். எங்கே என்னைப் பார்த்தாலும் மலையாளத்தில்தான் என்னுடன் உரையாடுவார். அவர் நடித்த "அடிமைப் பெண்' படத்துக்கு நான்தான் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன். அப்படம் துவங்கப்பட்டபோது இருந்த வேகத்தில் பின்னர் தொய்வு ஏற்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் மற்ற படங்களில் பிசியாகிவிட்டேன். "அடிமைப் பெண்' படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்கும்போது எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ஆனால் என்னால் அவரது அழைப்பை ஏற்று அந்தப் படத்துக்கு செல்ல முடியவில்லை. இதில் அவருக்கு வருத்தம்தான்.
தான் நடிக்கும் ஒரு சில படங்களின் கேமராமேன் யாராக இருந்தாலும் பாடல் எடுத்துக் கொடுக்க எம்.ஜி.ஆர். என்னை அழைப்பார். அவர் நடித்த "நான் ஆணையிட்டால்' படத்துக்கும் வேறு சில படங்களுக்கும் பாடல் காட்சிகளைப் படமாக்கிக் கொடுத்திருக்கிறேன். இதேபோல் ஜெயலலிதா நடித்த நூறாவது படமான "திருமாங்கல்யம்' நான் பணியாற்றியவற்றில் முக்கியமான ஒன்று.
நான் படங்களை இயக்க ஆரம்பித்த பிறகு எனது உதவியாளர்களை ஆபரேடிவ் கேமராமேனாகவும், தனித்து ஒளிப்பதிவு செய்யவும் ஊக்கமளிப்பேன். பி.என்.சுந்தரம், கே.ஆர்.பிரகாஷ் ராவ், பாஸ்கர் ராவ், வெங்கட் போன்ற பலரும் என்னிடம் பணியாற்றி பின்னர் தனியாக கேமராமேன் ஆனவர்கள்தான்.
நான் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் புகழ் பெற்றுத் தந்தது "துலாபாரம்'. இதில் கதாநாயகியாக நடித்த சாரதாவுக்கு தேசிய விருதையும் இப்படம் பெற்றுத் தந்தது. இதேபோல் ராமு காரியத் இயக்கத்தில் நான் ஒளிப்பதிவு செய்த "நீலக்குயில்' என்ற படத்துக்கும் விருது கிடைத்தது. நான் பணியாற்றிய படங்களுக்கும், அதில் பங்கு பெற்ற பல கலைஞர்களுக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றனவே தவிர எனது ஒளிப்பதிவுக்கு பெரிதாக எந்த விருதும் கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தமும் இல்லை.
தமிழில் வெளியான "வசந்த மாளிகை'யின் இந்தி வடிவமான "பிரேம் நகர்' படத்துக்கு மட்டும் "பிலிம்பேர்' விருது எனக்குக் கிடைத்தது. "நீல வெளிச்சம்' என்ற பெயரில் தான் எழுதிய சிறுகதைக்கு சினிமாவுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர். ஆவிகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையை "பார்கவி நிலையம்' என்ற பெயரில் நான் இயக்கினேன். பிரேம் நஸீர், மது, விஜயநிர்மலா ஆகியோர் நடித்த அந்தப்படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
நான் இயக்கிய படங்களில் மற்றுமோர் குறிப்படத்தக்க படம் "நதி'. படகிலேயே நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட படம் இது. ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அதில் நீரை நிரப்பி, மோட்டார் வைத்து செயற்கையாக அலைகளை உருவாக்கிதான் இதற்கான காட்சிகளைப் படம் பிடித்தோம். இப்போது இருப்பதைப்போல் படகு வீடுகள் என்ற கானசெப்ட்டே அப்போது இல்லை. ஆனால் "நதி' படத்துக்காக நாங்கள்தான் படகுவீடுகளை உருவாகினோம். இந்தப் படத்துக்குப் பிறகுதான் படகு வீடுகள் அங்கே வந்தன. இப்படத்தில் பலவித சோதனை முயற்சிகள் செய்யப்பட்டதால் இந்தப் படமும் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.
கமல்ஹாசன் மேக்கப் போட்டுக் கொள்ள மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வது குறித்தும், வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பது குறித்தும் இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோதே நான் இயக்கிய "வயநாடன் தம்பான்" என்ற மலையாளப் படத்தில் மிகமிக வயதானவராக தோல் எல்லாம் சுருங்கியிருப்பதுபோல் மேக்கப் போட்டுக்கொண்டு மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். "வயநாடன் தம்பான்' திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு "கன்னி வேட்டை' என்ற பெயரில் வெளிவந்தது.
நான் ஒளிப்பதிவு செய்த "வசந்த மாளிகை' படத்தில் ஏராளமான கண்ணாடிகள் உள்ள ஒரு அறையில் கதாநாயகி வாணிஸ்ரீ நுழையும்போது அத்தனை கண்ணாடிகளிலும் அவரது உருவமே தெரிவதுபோல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கேமராவோ நானோ கண்ணாடியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, இருட்டான பகுதியில் மறைந்து கொண்டு சிரமப்பட்டு இந்தக் காட்சியைப் படமாக்கினேன். படம் வெளிவந்த பிறகு திரையரங்குகளில் இந்தக் காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல்களும் பாராட்டும் பிரமாதமாக இருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலுமாக சேர்த்து நான் ஒளிப்பதிவு செய்த படங்களும் இயக்கிய படங்களும் சுமார் நூற்றி இருபது இருக்கும் என நினைக்கிறேன். ராஜேஷ் கண்ணா, தேவ் ஆனந்த் நடித்த பதினான்கு இந்திப் படங்களும் இவற்றில் அடங்கும். கன்னடத்தில் ஒரே ஒரு படத்துக்கு-அதுவும் பாதி படத்துக்கு-ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். துவாரகீஷ் நடித்த "சிங்கப்பூரில ராஜா குள்ளான்' என்ற கன்னடப் படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு வேறு ஒரு கேமராமேன் பணியாற்ற, இங்கு எடுக்கப்பட்ட மற்ற காட்சிகளை நான் படமாக்கிக் கொடுத்தேன். ஸ்ரீதர் படங்களுக்கு பணியாற்றும்போது சி.வி.ராஜேந்திரனுடன் ஏற்பட்ட நட்பு இன்றுவரை நீடிக்கிறது.
இப்போது எனக்கு எண்பத்தைந்து வயதாகிறது. 1958ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. என் மூத்த மகன் ஜெயனன் வின்சென்ட்டும், இளைய மகன் அஜயன் வின்சென்ட்டும் சினிமா கேமராமேன்களாகப் பணியாற்றி வருகின்றனர். என் ஒரே மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் வசிக்கிறார். மூத்த மகன் ஜெயனன் வின்சென்ட்டுக்கே பேரன் பிறந்து விட்டதால் நான் இப்போது கொள்ளுத்தாத்தா ஆகிவிட்டேன்.
கடைசியாக எந்தெந்த படங்களில் பணியாற்றினேன் என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி உருவாக்கத்திற்கு துணை நின்றவர்களில் நானும் ஒருவன். அந்த பிலிம் சிட்டியில் என்னென்ன இடம் பெற வேண்டும் எப்படி அமைய வேண்டும் என்பதையெல்லாம் சில ஆண்டுகள் அங்கேயே தங்கி வடிவமைத்துக் கொடுத்தேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்குள் தவறி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு செயற்கை எலும்பு பொருத்தியிருக்கிறார்கள். அதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்படியாகிவிட்டது. ஆயினும் படுக்கையில் படுத்தபடி புத்தகங்கள் பத்திரிகைகளை படிக்கிறேன். குறிப்பாக கேமரா சம்மந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு வருகிறேன்" என்கிறார் வின்சென்ட் சிரித்துக்கொண்டே.
நன்றி : தினமணி சினிமா எக்ஸ்பிரஸ்
-'பரிவை' சே.குமார்
2 எண்ணங்கள்:
வணக்கம்,குமார்!நல்ல பகிர்வு.முன்னாள்கள் எப்போதுமே அடக்கம் தான்!
எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி குமார்
கருத்துரையிடுக