மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மனசின் பக்கம்: மிக்ஸர்


அரசியல்:

** தே.மு.தி.க.வுக்கு மீண்டும் முதலில் பேச வாய்ப்புக் கொடுத்ததற்காக அம்மாவுக்கு ஆளாளுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். இன்னா செய்தவருக்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயந்தோ சால்பு என்ற குறளுக்கு இணங்க கெடுதல் செய்தாருக்கும் நன்மை செய்யும் வகையில் இந்தப் பிரச்சினையை முதல்வர் அணுகியிருப்பதாக தே.மு.தி.க துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். அதற்கு அம்மாவின் விசுவாசி நத்தம் விஸ்வநாதன் (சாஷ்டாங்கமாக விழுந்து அம்மாவை வணங்குவதில் முதலிடம் பிடிப்பவர்) இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்கிற குறளையும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் சேர்த்து சொல்லியிருக்கலாம் என்று சொல்ல, மேஜையை தட்டி ஆர்ப்பரித்திருக்கிறது அம்மாவின் பள்ளிக் குழந்தைகள்... 


** ஸ்டாலின் பார்க்காமல் சென்றது குறித்துப் பதில் சொல்ல என்ன இருக்கு என்று கேட்ட மதுரையின் மன்னர் அழகிரி அவர்கள் மேலிடம் சொன்னால் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று சொல்லி தற்போது தான் திமுகவில் இருந்து விலகியிருக்கிறேன் அல்லது விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இலைமறை காயாக சொல்லி இருக்கிறார்.


சினிமா:

** வீட்டை விட்டு ஓடிப்போன அஞ்சலி காட்டில் இப்போ மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. 50, 60 லட்சங்களில் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனிடையே என்னை துன்புறுத்தியவர்கள் சித்தி, களஞ்சியம் மற்றும் இன்னார்கள் என ஒரு பெரிய லிஸ்டையே ஆந்திர போலீஸில் கொடுத்திருக்கிறாராம். எங்கே தமிழகம் வந்து போலீஸில் காணாமல் போனதற்கு விளக்கம் கொடுக்க வரும் போது நம்மளையும் போட்டுக் கொடுத்து விடுவாரோ  என்று தமிழக இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கிலி பிடித்து அலைகிறார்களாம்.

** நயனும் ஆர்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் ராஜாராணி என்ற படத்துக்காக சர்ச்சில் திருமணம் செய்வதுபோல் காட்சி படமாக்கப்பட்டதாம். மூன்று நாட்கள் இந்தக் காட்சி படமாக்கப்பட்டதாம். தத்ரூபமான திருமணம் போலவே இருந்ததாக படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.


** செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஒரு வழியாக சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதாக டுவிட்டரில் செல்வா சொல்லியிருக்கிறார். 90 நாளில் படமெடுக்கும் இயக்குநர்கள் இருக்க ஒரு படத்தை இரண்டு வருடங்களாக எடுத்தால் எப்படி செல்வா?

** செம்பட்டை என்றொரு படம், டெங்குவில் இறந்து போன அதன் நாயகன் பற்றியும் படம் குறித்து ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் தெரியும் அதன் இயக்குநர் எங்கள் தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் ஐ.கணேசன் அண்ணன் என்பது. இந்த இடத்தை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு என்பது எனக்குத் தெரியும். காதலுக்கு மரியாதை படம் வரும்போது அவர் பாசிலிடம் அசோசியேட் டைரக்டராக இருந்தார். எனது அண்ணனின் நண்பரான அவர் தீபாவளிக்கு தேவகோட்டை வந்திருந்த போது திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு வந்த அண்ணனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனபோது  நாலைந்து கதை இருக்குடா.... விஜயகாந்தை வைத்துத்தான் படம் எடுக்கணுங்கிறதுக்காக காத்திருக்கிறேன்  என்று சொன்னார். எத்தனை வருடங்கள் காத்திருந்திருக்கிறார் பாருங்கள்... கடைசியில் தீலீபனை வைத்து எடுத்திருக்கிறார். படம் குறித்து நல்ல விமர்சனம் இருக்கிறது. இன்னும் பார்க்கலை... பார்க்கணும்.

எழுத்து:

** ஆனந்தவிகடனில் ராஜூமுருகன் எழுதிய வட்டியும் முதலும் முடிவடைந்த நிலையில் 'நீயாநானா' கோபிநாத் எழுதும் பாஸ்வேர்ட் புதிய தொடராகி இருக்கிறது. இவரும் நடப்பை எழுதுகிறார். ஆனால் எனக்கு என்னவோ படிக்கும் போது ராஜூமுருகன் பாணியில் எழுதுவது போல் தெரிகிறது. இவர் பாணியில் எழுதினால் நல்லாயிருக்கும்.

முகநூல்:

** என்ன வேணுமானாலும் எதை வேணுமானாலும் பதியும் இடமாக வளர்ந்து நிற்கும் முகநூல் நேரம் விழுங்கியாகவும் இருக்கிறது. 
'இப்போதான் பல் விளக்கினேன்...'
'சாப்பிடப் போறேன்...'
'இன்னைக்கு என்னை அவன் இப்படிப் பார்த்தான்' 
என உப்புச் சப்பில்லாத பகிர்வுகள்... இதில் இதைப் பகிர்பவர் ஆணாக இருந்தால் ரொம்ப கண்டு கொள்ளப்படுவதில்லை... பத்தோடு பதினொன்னாக பார்க்கப்படுகிறது. பெண்ணாக இருந்தால் அதற்கு வரும் கமெண்டுகள் எவ்வளவு பேரின் நேரத்தை இது விழுங்குகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது. இப்போதெல்லாம் நேரம் விழுங்குகிறது என்பதற்காகவே அதிக நேரம் பயன்படுத்துவதை குறைத்து வருகிறேன்.

குழந்தைகள்:

** இரண்டு நாட்களுக்கு முன்னர் என் மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் ஊருக்கு வரும் நாளை சொன்னது முதல் நாட்களை எண்ண ஆரம்பித்துவிட்டார். என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எனது மகன் பின்னால் இருந்து 'அப்பா... அப்பா...' என்று கூப்பிட அவனுடன் பேச ஆரம்பித்தேன். உடனே என் மகள் கோவத்தில் எழுந்து சென்றுவிட்டார். அப்பா இவருக்கு மட்டும்தான் என்பது எப்போதும் நடக்கும் சண்டை. 'பாப்பா வாடா.... என்னாச்சு... உன்னோட தம்பிதானே' என்று சொன்னதற்கு அவர், 'நான் வாய்க்கு மட்டும்தான் உங்க மக, அவன் மேலதான் உங்களுக்குப் பாசம் என்று சொல்ல, என் மனைவி என்ன சொன்னுச்சு என்று புரியாமல் கேட்கிறார். பிறகு அவருக்கு வாய் வார்த்தையில் மட்டும்தான் பாப்பா எம்பொண்ணுன்னு சொல்றேனாம்.... மனசளவில் விஷால்தானாம் என்று அர்த்தத்தைப் புரிய  வைக்க, இப்பவே எப்படி பேசுதுங்க பாருங்க என்றதும் என் மகன் 'அம்மா பொறுமை' என்கிறான்.

மனசு:

** வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை அறிமுகம். இந்த முறை அறிமுகப்படுத்தியவர் புவனா அக்கா (அப்பாவி தங்கமணி). அறிமுகப்படுத்தியதற்கு அக்காவிற்கு நன்றி. அடிக்கடி அறிமுகம் ஆகும் வாய்ப்பை தடை செய்யாத வலைச்சர நிர்வாகி திரு. சீனா ஐயா அவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

** கலையாத நினைவுகள் என்ற தலைப்பில் சிறுகதை எழுத ஆரம்பித்தேன். வலைச்சரத்தில் புவனா அக்கா, எனக்கு தனது கருத்துக்களால் ஊக்கம் கொடுக்கும் ஆசியா அக்கா மற்றும் சில நண்பர்கள் கலையாத கனவுகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனக்கும் அதுவே நன்றாகத் தெரிய கலையாத நினைவுகள் கனவுகளாகிவிட்டது.

** நாம் யோசித்து நம்ம பாணியில் எழுதும் எழுத்துக்கள் அதிகம் வாசிக்கப்படுவதில்லை... எங்காவது எடுத்து சினிமா செய்திகளைப் போடும் போது அதற்கான வரவேற்பு அதிக அளவில் இருக்கிறது. இதற்கு உதாரணம் நான் பதிவில் கதை, கவிதைகள் பதியும் போது 30, 40 பேர் பார்ப்பதே அறிது. தமிழ்மணத்தில் எனது இடம் 350க்கு மேலிருந்தது. சில நாட்களாக படித்ததில் பிடித்தது, அரசியல் என பத்திரிக்கைகளில் இருந்து எடுத்துப் போட்டால் 1000, 2000 என போகிறது வாசிப்பவர்கள் எண்ணிக்கை. இப்போ தமிழ்மணத்தில் எனது இடம் 100க்குள். இப்படியே சினிமா செய்திகளை சுட்டுப் போட்டால் தமிழ் மணத்தில் நானும் நம்பர் ஒன் ஆகிடுவேனோ?. என் தளத்திற்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த நண்பன் என்னடா உன் எழுத்துக்களை குறைத்து அரசியல், சினிமா என குப்பையாக்கி வைத்திருக்கிறாய் என்கிறான். ஊரோடு ஒத்து வாழ்வோம் நண்பா என்று சொல்லிவிட்டேன். என்ன சரிதானே?

கொசுறு:

** இனி மனசின் பக்கத்தில் சிதறல்களாத் தராமல் நான் பார்த்த, ரசித்த, அனுபவித்த ஒன்றைப் பற்றி எங்கள் சிவகெங்கைப் பேச்சு வழக்கில் எழுதலாமென்று நினைக்கிறேன்... வாராவாரம் எழுதும் போது நமக்கும் எழுத்து மேல் ஒரு காதல் வரும் அல்லவா? பார்க்கலாம்...வீடு குடிபோவதற்காக மே மாதம் ஊருக்குப் போகிறேன். எழுத்து வேலை என்பது ஊரில் இருக்கும் நாட்களில் சாத்தியப்பட வாய்ப்பில்லை.  எனவே ஊரில் இருந்து வந்ததும் ஆரம்பிக்கலமா அல்லது ஊருக்குப் போறதுக்கு முன்னர் பிள்ளையார் சுழி போட்டுவிட்டுச் செல்லலாமா என யோசனையோடு....

**********
-'பரிவை' சே.குமார்

12 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

சுவைமிக்க மிக்ஸர் சூப்பர்..இனிதான் உங்க தொடர்கதையை படிக்கவேண்டும்,வாழ்த்துக்கள்!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்ஸர் அருமை...

வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்பவர்கள், உங்கள் தளம் பிடித்தால் எத்தனை முறை ஆனாலும், அறிமுகம் செய்வார்கள்... இதில் திரு. சீனா ஐயாவிற்கு சம்பந்தமில்லை...

பல பேரை (மூத்த பதிவர்களையே) கவிழ்க்கும் மயக்கம் - 'நம்பர் ஒன்' உங்களையும் விட்டு வைக்கவில்லை... வாழ்த்துக்கள்...

கொசுறு - நல்ல முடிவு... உங்களுக்கு பிடித்ததை "எந்த எதிர்ப்பார்ப்பும்" இல்லாமல் ஆரம்பியுங்கள்... அது தான் உங்கள் உள்ளத்தின் உண்மையான மகிழ்ச்சி... உடனே தொடங்குங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா....
சிறுகதை குறித்த உங்கள் பார்வை அவசியம் தேவை அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன்...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

வலைச்சரம் அறிமுகம் என்பது எல்லாருக்கும் சந்தோஷமான விஷயமே... இது அடிக்கடி நிகழ்வதால் நான் பெரிய பதிவராக நினைக்கவில்லை... இன்னும் புதிய பதிவராகத்தான் நினைக்கிறேன்...
வலைச்சர ஆசிரியனாய் நானும் சிலரை அறிமுகம் செய்யும் பணியை இரண்டு வருடங்களுக்கு முன்னர் சீனா ஐயா கொடுத்தார்.
காரைக்குடி சென்று வரும் போது எனது இல்லம் சென்று குழந்தைகளைப் பார்த்து வருபவர் சீனா ஐயா அவர்கள்...

இது ஜாலிக்காக எழுதியதுதான்... பதிவு போதை ஏறும் அளவுக்கு இன்னும் அப்படியான பதிவை நான் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்...

அதேபோல் நம்பர் ஒன் என்பது நமது எழுத்தின் மூலம் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும்... வெட்டி ஒட்டுவதால் நம்பர் ஒன் என்பதை விரும்பவில்லை மனசு.

ஒரு வாரம் செய்து பார்த்ததில் 200 இடம் முன்னுக்கு வந்திருக்கிறது என்றால் பாருங்கள்...

தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

எல்லா பதிவரையும் ஊக்குவிக்கும் குணம் எல்லாருக்கும் அமைவதில்லை... அது உங்களிடம் இருக்கிறது அதற்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்...

இது சற்றே விளக்கமாக சொன்னதுதான்...

நன்றி நண்பரே... தொடர்ந்து வாருங்கள்...

ஊருக்கு வரும்போது சந்திக்க முயற்சிக்கிறேன்...
நன்றி.

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள்...

r.v.saravanan சொன்னது…

நான் பார்த்த, ரசித்த, அனுபவித்த ஒன்றைப் பற்றி எங்கள் சிவகெங்கைப் பேச்சு வழக்கில் எழுதலாமென்று நினைக்கிறேன்... வாராவாரம் எழுதும் போது நமக்கும் எழுத்து மேல் ஒரு காதல் வரும் அல்லவா? பார்க்கலாம்

வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான கதம்பம்! சொந்த படைப்புக்களை விட அரசியல் சினிமா செய்திகள் அதிகம் விரும்பப்படுவது உண்மைதான்! நானும் அவ்வாறு வெட்டி ஒட்டி இப்போது குறைத்துக் கொண்டு உள்ளேன்! ஹிட்ஸும் குறைந்துள்ளது! ஆனாலும் நீயா! நானா என பார்த்துவிட தீர்மானித்துள்ளேன்! நன்றி!

Asiya Omar சொன்னது…

மிக்ஸர் சூப்பர்.நிறைய பதிவுகள்,கிடுவென்று ஒரு பார்வை தான் விட முடிந்தது.ஆஹா! இப்ப தான் பார்க்கிறேன்,தொடர்கதையின் தலைப்பு கலையாத கனவுகளா ,நினைவுகளா? முன்பு எப்படி புரிந்திருந்தேன்னு எனக்கே சந்தேகம்..!

Unknown சொன்னது…

வணக்கம்,குமார்!வலைச்சரம் பக்கம் போகவில்லை.மீண்டும் அறிமுகமானால் என்ன?பிடித்தவர்களை மற்றையோருக்கு அறிமுகப்படுத்துவது நல்லது தானே?மிக்சர் அருமை.இல்லப் பணிகளை முடித்து விட்டுத் தொடரைத் தொடங்கினால்,ஆசுவாசம் இருக்கும்.எதிர்பார்த்து........................

வருண் சொன்னது…

***இப்போ தமிழ்மணத்தில் எனது இடம் 100க்குள். இப்படியே சினிமா செய்திகளை சுட்டுப் போட்டால் தமிழ் மணத்தில் நானும் நம்பர் ஒன் ஆகிடுவேனோ?. என் தளத்திற்குள் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த நண்பன் என்னடா உன் எழுத்துக்களை குறைத்து அரசியல், சினிமா என குப்பையாக்கி வைத்திருக்கிறாய் என்கிறான். ஊரோடு ஒத்து வாழ்வோம் நண்பா என்று சொல்லிவிட்டேன். என்ன சரிதானே?***

சினிமா அரசியல், படித்ததில் பிடித்ததெல்ல்லாம் எழுதி உங்களை எல்லாரும் "அறிந்து" கொண்ட பிறகு, உங்க ஒரிஜினல் பாணிக்கு செல்லலாமே? :) நான் சொல்றதும் சரிதானே? :)

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

உங்கள் வலைப்பூவிற்கு முதல்முறையாக வருகிறேன். அங்கு வந்தமைக்கும் மிக்க நன்றி!

இங்கு பல்சுவை விருந்து படைக்கிறீர்கள்... அருமை.

தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்!