மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

விழலுக்கு இறைத்த நீர் (முதல் பரிசு பெற்ற கதை)

(சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது... இந்த சந்தோஷத்தை உங்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். போட்டியை நடத்திய சேனை நிர்வாகத்தினருக்கும் பரிசு பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...)

*******************************
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர் திடீரென விழித்துக் கொள்வார். அப்புறம் தூக்கம் அவ்வளவுதான். எப்பவும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குவார். இன்று தூக்கம் வரவேயில்லை... அதுக்கும் காரணம் இருந்தது... இரவு வாசலில் உக்கார்ந்து சாமிநாதனுடன் வெற்றிலை போட்டபடி பேசிக்கொண்டிருப்பது அவரது வாடிக்கை. இன்றும் பல விஷயங்களைப் பேசினார்கள்... சிரித்தார்கள்...

பேச்சு சந்தோஷமாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் சாமிநாதன், 'உன்னைய மாதிரி பிள்ளைகளை நாங்க யாரும் பாத்துப்பாத்து வளக்கலை... அப்படி வளர்த்தே.... நல்லா படிக்க வச்சே... ஆனா இன்னைக்கு என்னாச்சு... ஒருத்தன் வெளிநாட்டுல குடும்பத்தோட போயி செட்டிலாயிட்டான். இன்னொருத்தன் சென்னையில இருக்கான். ரெண்டு பேருமே வயசான காலத்துல உங்களுக்குத் துணையா இருக்கலை... என்ன வளத்து என்ன பண்ணப்பா... இந்த வயசுல துணையில்லாம நீயும் கமலமும் படுற கஷ்டம் பாக்கும்போது எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு' அப்படின்னு ஆரம்பிச்சாரு. உடனே இவரு மகன்களை விட்டுக் கொடுக்காம 'நீ வேறப்பா அவனுக வரச்சொல்லித்தான் நிக்கிறானுங்க... நாங்கதான் இந்த வாழ்க்கையை இழக்க விரும்பாம வரலைன்னு சொல்லிட்டோம்... இப்பவும் மாசாமாசம் எங்க செலவுக்கு கூடுதலாகவே பணம் அனுப்புறானுங்கன்னா பாத்துக்கோயேன்' அப்படின்னு பெருமையாச் சொன்னாரு.

'பணம் கெடக்குப்பா பணம்... எம்புட்டுப் பணம் அனுப்பி என்ன பலன். இந்த கமலம் இந்த வயசுல வெறகடுப்புல மாங்கு மாங்குன்னு ஊதிக்கிட்டு கிடக்குறதை என்ன சொல்றது. உம்பசங்களுக்கு வசதியா இல்லை... ஒரு கேஸ் அடுப்பு வாங்கிக் கொடுக்குறது. அது கூடவா முடியாது. சும்மா சப்பைக் கட்டு கட்டாதேப்பா....' என நறுக்கெனச் சொல்ல, 'எங்களுக்கு எதுக்குப்பா கேஸ் அடுப்பெல்லாம்... அவதான் அதெல்லாம் சரி வராதுன்னு சொல்லிட்டா... அவளுக்கு வெறகடுப்புல சமைக்கிறதுதான் பிடிச்சிருக்கு... இதுக்கு அவனுகளைக் குத்தம் சொல்லி என்ன பண்ணச் சொல்றே... சும்மா குத்தம் கண்டுபிடிச்சா நிறையக் கண்டுபிடிக்கலாம்ப்பா... நம்மமேல குத்தத்தத்தை வச்சிக்கிட்டு அவனுகளைச் சொல்றது நியாயமில்லையில்ல...' என சப்பைக்கட்டுக் கட்டினார்.

ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்து விட்டு வந்து கட்டிலில் சமுக்காளத்தை உதறிப் போட்டவரிடம், 'வெறகடுப்புல சமைச்சிக்கிறேன்னு நான் சொன்னேனா.. இன்னமும் அந்த களவாணிப் பயலுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுறதை நீங்க விடவே இல்லையில்ல..' என்ற கமலாவின் கேள்வி தாக்கியதில் நிலை குலைந்துதான் போனார். ஆனாலும் 'நீ ஒரு இவ... அவன் வந்து நம்ம பிள்ளைகளைச் சொல்லுறான்... விட்டா கொடுக்க முடியும்... அவம்பிள்ளைக பாக்குறானுகளாக்கும்.... உனக்கு உடனே பொத்துக்கிட்டு வந்திரும்...' என்று அவளை அதட்டினார்.

'ஆமா பொத்துக்கிட்டு வருது...சாமிநாதண்ணனுக்கு என்ன கொறச்சல்... மூணு பெத்தாரு... மூத்தது ரெண்டு வெளியூர்ல இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு வருதுக.. செலவுக்கு மாசாமாசம் பணம் அனுப்புதுக... இங்க இருக்க சின்னவனும் அவம் பொண்டாட்டியும் தாங்குதாங்குன்னு தாங்குறாக... பொண்டாட்டியில்லைன்னாலும் புள்ளைக அவருக்கு ஆதரவாத்தான் இருக்குக... நமக்கு என்ன நாதியிருக்கு... ஒரு நல்லது கெட்டது இருக்கா... ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா பணம் அனுப்புனா போதுமா...? பாசத்துக்கு எங்கங்க போறது...?' என்றாளே பார்க்கலாம்.... அவருக்கு என்ன சொல்றதுண்ணே தெரியலை... சொம்பிலிருந்த தண்ணியை மடக்மடக்கென்று குடித்து விட்டு பேசாமல் படுத்தார்.

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார்… இரண்டு முறை எழுந்து போயி ஒண்ணுக்குப் பொயிட்டு வந்தார். அவள் கேட்ட கேள்வி சரிதானே... பாத்துப் பாத்துல்ல வளத்தேன்... சாமிநாதன்  பிள்ளைகளை ரொம்பல்லாம் படிக்க வைக்கலை... ஆனா நா... விவசாயம் பண்ணி வந்த வெளச்சலை வச்சி மூத்தவனை எம்.ஏ. எம்.எட் படிக்க வச்சேன். இன்னைக்கி சென்னையில ஒரு தனியார் கல்லூரியில புரபஸராக இருக்கான். மருமகளும் படிச்சிட்டு பேங்குல வேலை பாக்குற... கை நிறைய சம்பாரிக்கிறாங்க... ஆணென்னு பொண்ணொன்னு அளவான குடும்பம்... ஏன் சின்னவனைக்கூட இஞ்சினியருக்குப் படிக்க வச்சேன். இன்னைக்கு அவன் துபாயில கை நிறைய சம்பாதிக்கிறான். அவன் கூட வேலைபாத்த மலையாளியை அங்கிட்டே கலியாணமும் பண்ணிக்கிட்டான். ஒரு பய இருக்கான்... இதுவரைக்கும் பேரன் முகத்தைக் கூட பாத்ததில்லை.

நல்லது கெட்டதுக்கு கூட வர்றதில்லை... இங்க வாங்கன்னு ரெண்டு பேரும் ஒரு வார்த்தைக்கு கூட சொன்னதில்லை.... ரெண்டு மாசம் மூணு மாசத்துக்கு ஒருக்கா பணம் அனுப்புவானுங்க... அவ கேக்குறது நியாயந்தானே... பணம் அனுப்புனா மட்டும் போதுமா... பாசத்தை எந்தத் தபால்ல அனுப்புவானுங்க... நமக்கும் பெத்தபுள்ளைக பேரம்பேத்திகன்னு பாக்க ஆசையிருக்காதா... கோவில் வாசல்ல விளையாடுற நண்டு சிண்டையெல்லாம் பாக்கும் போது எம்புட்டுச் சந்தோஷமா இருக்கு... பாத்துப் பாத்து வளத்து நம்மளைப் பாக்க ஒரு புள்ளை இல்லையே... இப்ப கைகாலு நல்லாயிருக்கு ரெண்டு பேருமா ஓட்டுறோம். அவ விழுந்தா நா பாத்துருவேன்... நா விழுந்துட்டா... அவ... அவ.... நினைத்தவருக்கு திடுக்கென்றிருந்தது. தூக்கம் இல்லாமல் எழுந்து வாசலுக்கு வந்தவர் வேப்பமரக் காற்றை அனுபவித்தபடி பதினெட்டாம் படிக்கருப்பா எனக்கு முன்னால அவ கைகால் சுகத்தோட போயிறணும்.. நா போயி அவ கெடந்தா பாக்க நாதியிருக்காது....' என்று கருப்பர் கோவில் இருந்த மேற்குப் பக்கம் பார்த்து கையை உயர்த்திக் கும்பிட்டார்.

எங்கோ ஆந்தை அலறியது... தெருநாய்கள் எல்லாம் எதையோ பார்த்தது போல் வீதியில் ஓடி ஓடிக் குலைத்தன. 'ம்... என்ன போகுதோ யாருக்குத் தெரியும்... நாய்க்கு மட்டுமே தெரியும்...' என்று நினைத்தபடி வைக்கோலை இழுத்துப் போட்டு அதன் மேல் படுத்துக்கிடந்த கருத்தைப்பசுவை அதட்டி எழுப்பி வைக்கோலை எல்லாம் அரித்து ஒரிடத்தில் குவித்து வைத்துவிட்டு கன்றைச் சுமக்கும் அதன் வயிறைத் தடவிக் கொடுத்தார். இது அதுக்கு அஞ்சாவது கன்று... இதுக்கு முன்னாடி போட்டதுல மூத்தது மட்டுமே பொட்ட... மத்ததுக காளையாப் போக பால் வற்றியதும் அதுகளை வந்த விலைக்குத் தள்ளிவிட்டுட்டார். மூத்தது இப்ப கிடேரியா நிக்கிது... போன வாரந்தான் காளைக்கு கத்துச்சுன்னு மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டு போய் சினை ஊசி போட்டுக்கிட்டு வந்தாரு. ‘ம்... நீயும் பிள்ளைகளைச் சுமக்குறே... அதுக உதவியா இருக்கும்ன்னு நினைக்கிறியா இல்லையே... பால் கொடுக்குற வரைக்கும் பாதுகாப்பா பாத்துக்கிறே... அப்புறம் அதுகளுக்கும் உனக்கும் எதாச்சும் உறவு இருக்கா என்ன...? ஏன் இந்த மனுசனுங்க மட்டும் உறவுகளைத் தொங்கிக்கிட்டு கிடக்கானுங்க…’ என்று அதனிடம் வேதாந்தம் பேசினார்.

காலையில் கமலம் தட்டி எழுப்பவும்தான் எழுந்தார். எப்பப்படுத்தார்.... எப்படித் தூங்கினார் என்று தெரியவில்லை. 'இப்புடியா மனுசன் தூங்குறது... நல்லாத்தான்... மொகத்தைக் கழுவுங்க.. காபி குடிக்க' என்று சொல்லியபடி காபி டம்ளரை சன்னலில் வைத்தாள். 'ம்... ராத்திரியெல்லாம் தூக்கம் வரலை... விடிகாலையில கண்ணசந்துட்டேன் போல...' என்றபடி முகம் கழுவிவிட்டு  காபியை உறிஞ்சியவர், 'ஏய்... நம்ம புள்ளைக நம்மளைப் பாக்கலைன்னு கவலைப்படுறியா?' என்றார். 'நீங்க இருக்கும் போது எனக்கென்ன கவலை... பூவோட பொட்டோட போயிச் சேந்தாப் போதும்... ஆனா அதுக்கு அப்புறம் உங்கள நினைச்சாத்தான் வேதனையா இருக்கு... பாக்க நாதியில்லாமா....' கண்ணைக் கசக்கினாள். 'அட விடு... ஆண்டவன் கஷ்டப்பட விடாம பொசுக்குன்னு கூட்டிப்பான்... பாரேன்... ரெண்டு பேரையும் ஒண்ணாக் கூட்டிக்கிட்டாலும் கூட்டிப்பான்' என்று சிரித்தார்.

'எங்க இருந்தாலும் நாம பெத்ததுக நல்லாயிருந்தாப் போதும்... நம்மளைப் பாக்கலைன்னு நாம அதுகளை திட்டி அதுகளுக்கு ஒண்ணுன்னா என்ன பண்றது.. விடு... அவனுக நல்லாயிருக்கட்டும்... நம்மளை கருப்பன் பாத்துப்பான்... பாசத்தை கொரியர்லயா அனுப்பச் சொல்ல முடியும்... அவனுகளுக்காத் தெரிஞ்சி ஒருநா பாசத்தை மூட்டை கட்டிக்கிட்டு வருவானுங்க...' என்று மனைவியின் தலையை ஆறுதலாய்த் தடவினார். 'பயலுக மேல உங்களுக்கு உண்மையாவே வருத்தமில்லையாங்க' என்ற கேள்விக்கு சிரிப்பை பதிலாக்கிவிட்டு எழுந்தவர் அவளுக்குத் தெரியாமல் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு படியிறங்க, அவரைப் பார்த்த கருத்தப்பசு 'ம்ம்மா' என்று பாசமாய் அழைக்க, வாசலில் நின்ற நாய் வாலாட்டிபடி அவருக்கு முன்னே 'வ்வ்...வ்...வீ...வ்' எனக் குழைந்து நின்றது.

-'பரிவை' சே.குமார்


புதன், 1 ஏப்ரல், 2015

மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை


வணக்கம்...


வாத்தியார் பாலகணேஷ் அவர்களின் 'டூ இன் ஒன்' புத்தகமான சரிதாயணம் ('சிரி'தாயணம்) + நான் இருக்கிறேன் அம்மாவை அண்ணன் கில்லர்ஜி அவர்களின் உதவியால் படித்தேன். அலைனில் இருக்கும் போதே வாசித்தாகிவிட்டது. இங்கு வந்ததும் வேலை மற்றும் சொந்த அலுவல்களால் எழுத்து மற்றும் வாசிப்பு குறைந்து போனதால் படித்ததை பகிர்வதற்கு நாளை... நாளை என தள்ளிப்போட்டு சென்ற வாரத்தில் புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாச்சு. அதனால் விரிவாக எழுதவில்லை என்றாலும் ரசித்துச் சிரிக்கும்படியான கதைகளுடனும் கொஞ்சம் வித்தியாசமான கதைகளுடன் அருமையாக இருக்கிறது.  ரசித்து வாசிக்கக் கூடிய புத்தகங்களில் வாத்தியாரின் இந்தப் புத்தகமும் முக்கிய இடம் பிடிக்கும். நீங்களும் வாசித்துப் பாருங்கள்... ரசிப்பீர்கள்.


கோவை ஆவி அவர்களின் ஆவிப்பா என்னும் கவிதைகளின்... இல்லையில்லை நஸ்ரியாவை நினைத்து எழுதிய அழகிய வரிகளின் தொகுப்பையும் புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கும் அண்ணன் கில்லர்ஜியே கொடுத்தார். நஸ்ரியாவுக்கும் கவிதைகளுக்கும் தொடர்பில்லை என்று சொல்லியிருந்தாலும் வாத்தியார் பாலகணேஷ் அவர்கள் வரிக்களுக்கு பொருத்தமாய் நஸ்ரியா படங்களை வைத்து அழகாய் வடிவமைத்திருக்கிறார். பக்கத்துக்கு பக்கம் கலரில் நஸ்ரியா... வாவ்... அழகு. அப்புறம் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்து கடகடவென முடித்துத்தான் வைக்கவிட்டன... பின்னூட்டமே பக்கம் பக்கமாய் அழுத்தமாய்... அழகாய்... ரசனையாய்... எழுதும் மஞ்சுபாஷினி அக்கா முன்னுரையில் கலக்கலாய் எழுதியிருக்கிறார். அவர் ரசித்துச் சொன்னதைப் போலவே அழகான வரிகள்... ஆவிப்பா குட்டியூண்டு புத்தகமாய் இருந்தாலும் நிறைவாய்...


தம் கதம் படம் பார்த்தேன்... பரவாயில்லை ரகம்தான் என்றாலும் நட்ராஜ் மனுசன் கலக்கியிருக்கிறார்... வசனங்கள் அருமை... படத்தின் கதையின் போக்கும்... முடிவும் அலுப்பை ஏற்படுத்தினாலும் வசனங்களுக்காகவும் நட்ராஜ்க்காகவும் பார்க்கலாம்.


மலின் உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழாவை யூடியூப்பில் பார்த்தேன். எல்லாரும் கமலின் புகழ் பாடினாலும்... இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் கமலுக்கு எழுதிய லெட்டர்,... கமல் பாலச்சந்தருக்கு எழுதிய மடல்... நாசரின் உருக்கமான பேச்சு... பார்த்திபனின் தொகுப்பு... வித்தியாசமான முறையில் பாடல் வெளியீடு... என அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை பார்க்கலாம்.


ப்புறம் முக்கியமான சமாச்சாரங்க... நாளை இரவு எனது மனைவியும் குழந்தைகளும் ஒரு மாத காலத்திற்கு இங்கு தங்கும் விதமாக வருகிறார்கள்... மே மாதம் நான் அவர்களுடன் ஊருக்குப் போகிறேன்... அதனால் மனசு தளத்திற்கு மட்டுமல்ல நண்பர்களின் எழுத்துக்களை வாசிப்பதற்கும் விடுமுறை... விடுமுறை... அவர்களுடன் ஊர் சுற்றவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இங்கு வரமுடியாது. சில நேரங்களில் சும்மா எட்டிப் பார்ப்பேன். முடிந்தால் 'வேரும் விழுதுகளும்' தொடர்கதை மட்டும் பதியப்படும்... மற்றவை இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னரே... அதுவரை...



இருங்க... இருங்க... போயிடாதீங்க... ஆங்... சொல்ல மறந்துட்டேனே... மனசு தளத்தில் இது 800-வது பகிர்வு... முன்பு கிறுக்கிய மற்ற மூன்று தளங்களிலும் (கிறுக்கல்கள் + நெடுங்கவிதைகள் + சிறுகதைகள்) சேர்த்து 1000-த்தை எட்டிப் பிடிக்க 5 குறைவாக 995 பகிர்வுகள்... எல்லாம் தங்கள் அன்பால்தான்... அதற்கு ஒரு...


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 31 மார்ச், 2015

கூடிழந்த பறவையாய்...


குளத்தங்கரை படித்துறையும்...
குளுகுளுக்கும் வேப்பமரமும்...
இன்றும் சுமக்கின்றன
நம் காதலின் சுவடுகளை..!

கருப்பர் கோவில் பூவரசு
கண்ணியமாய் சுமக்கிறது
மடி சாய்ந்த பொழுதுகளின்
நினைவுகளை..!

ஆவாரம் செடி தாலாட்டும்
ஒற்றையடிப் பாதை..
இன்னும் இசைக்கிறது
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த நாட்களின்
சந்தோஷங்களை..!

பிள்ளைகள் ஆடும்
ஆலமர விழுதுகள்
ஆராவாரமாய் சுமக்கின்றன
முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தை..!

கடக்கும் ஒவ்வொன்றும்
கடத்தாமல் வைத்திருக்கின்றன
நம் காதலின் தாக்கத்தை..!

நீயும் நானும் கடத்தி விட்டோம்...
காதலின் வாழ்க்கையை
காலத்தின் பாதையில்..!

எப்போதாவது சந்திக்கிறோம்...
எதாவது பேசுகிறோம்...
இதயம் மறந்த புன்னகையோடு..!

சிநேகமாய் சிரிக்கிறார்கள்
இதயத்தில் இடை புகுந்தவர்கள்...
கூடி விளையாடுகின்றன
வாழ்வின் வசந்தங்கள்..!

எல்லாம் சந்தோஷமாக...
எல்லாரும் சந்தோஷமாக...
ஏனோ மனசு மட்டும்
தவிக்கிறது...
கூடிழந்த பறவையாய்...!
-'பரிவை' சே,குமார்.

சனி, 28 மார்ச், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 25)

முந்தைய பகுதிகள் :

"இல்ல நீ பாரு நா பாருன்னு நம்மள இங்கயும் அங்கயும் அலைய விட்டுருவானுங்களோன்னு பயமா இருக்குங்க..."

"ஏய்... அதெல்லாம் எதுவும் நடக்காது... சித்ரா பேச்சுத்தான் அப்படி... ஆனா பாசமானபுள்ளதான்... சின்னவன் பொண்டாட்டி நம்ம மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கு... அப்புறம் என்ன...?"

"அக்கம் பக்கத்துல நடக்குறதைப் பாக்கும்போது..."

"எதையும் பாக்காதே... யோசிக்காதே... எல்லாம் நல்லதே நடக்கும்..." என மனைவியை ஆறுதலாக தடவிக் கொடுத்தார். கண்ணீரைத் துடைத்தபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காளியம்மாள்.

இனி...

ந்தசாமி மனைவிக்கு ஆறுதல் சொல்ல, காளியம்மாள் முகத்தைத் துடைத்துக் கொண்டு 'இருங்க... காபி போட்டுக்கிட்டு வாறேன்...' என்றபடி எழுந்தாள்.

மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் மனசுக்குள் எங்களை மாதிரி எப்பவும் அன்போடு இவனுக இருப்பானுங்களா... இல்லை ஒரு சிலர் மாதிரி அடிச்சிக்கிட்டு நிப்பானுங்களான்னு தெரியலையே.... என்று யோசித்தார். அவர் மனசு ஏனோ நம்ம ஆயுசு வரைக்கும் அவனுக சேர்ந்திருந்தாப் போதும்ன்னு நினைக்கலை... ஆயுசுக்கும் ஒண்ணா இருக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டார்.

"என்ன சித்தப்பா... யோசனை பலமா இருக்கு?" டவுனுக்குப் பொயிட்டு வந்த கண்ணதாசன் வண்டியை நிறுத்திக் கேட்டான்.

"வா... கண்ணா... நா எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கப்போறேன்... எல்லாம் நீங்க நாலு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்கனுமேன்னுதான் யோசனை..."

"சித்தப்பா... நாங்க உங்க பிள்ளைங்க... எப்பவும் ஒண்ணாத்தான் இருப்போம்... என்ன சின்னத்தா மூக்கைச் சிந்திருச்சாக்கும்... அது முகம் நேத்து சித்ரா பேசினதுல இருந்தே நல்லாயில்ல... விடுங்க சித்தப்பா...குலைக்கிற நாயி கடிக்காதுல்ல... சித்ரா அப்ப அப்ப கூவிட்டு விட்டுடும்... விடுங்க... மலையாளத்தான் கடைப்பக்கம் போனேன் சூடா அப்பம் போட்டிருந்தாரு... இந்தாங்க..." என்று பொட்டலத்தை நீட்டினான்.

"பிள்ளைகளுக்கு வாங்கினியா... இல்லேன்னா இதைக் கொண்டேக்கொடு..."

"இருக்கு சித்தப்பா... சாப்பிடுங்க..."

"சரி கொடுத்துட்டு வா.... உங்க சின்னத்தா காபி போடுறா... "

"இந்தா வாறேன்... சின்னம்மா போடுற காபி வேண்டான்னு சொல்லுவேனா..." என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

"ஏலா... கண்ணனுக்கும் காபி சேத்துப் போட்டுக்கிட்டு வா..." என்று கத்தினார்.

"அதுதான் மாமரத்துக் கொல்லையில ஆளுக்கு பத்துச் செண்டு இருக்குல்ல... அப்புறம் எதுக்குடி மொத்தத்தையும் எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டு ஏழரையை இழுக்கப் பாத்தே...?" நேற்றிலிருந்து கேட்க நினைத்த கேள்வியை சாப்பிட்டு முடித்து படுத்தபோது மெதுவாகக் கேட்டான் மணி.

"ஆமா... எல்லாத்துக்கும் குத்துக்கல்லு மாதிரி உக்காந்துக்கிட்டு இருந்தா எல்லாம் வந்திருமா? ரோட்டோரத்துல மொத்தம் இருபது செண்டு... சும்மாவா?"

"அதுக்காக அவனுக்கு அங்க வீடு கட்டணுமின்னு எண்ணம் இருக்காதா?"

"பழைய வீட்டை எடுத்துக்கடான்னு சொல்லிட்டு இதை மொத்தமா வாங்கியிருக்கலாம்ல்ல... நா ஆரம்பிச்சா.... உடனே உங்க குடும்பத்தை பிரிக்கப் போறேனாக்கும்ன்னு என்னையத்தானே அதட்டுறீங்க..."

"அதுக்காக... அவனோ அபியோ எதுவும் பேசாதப்போ பெரிய மனுசங்ககிட்ட படக்குன்னு பேசுறது நல்லாவா இருக்கு..."

"ஆமா... பொல்லாத சொத்து... மேட்டுச் செய்யும்... அயிருவாய்க்காலும் என்னத்துக்கு ஆகப்போகுது... வானம் பாத்த பூமியில நாம போயி வெவசாயமா பண்ணப் போறோம்... உங்கப்பா இருக்கவரை பாப்பாரு... அப்பறம் வேலாயி வீட்டு வயலுக மாதிரி கருவ மண்டிப் போயிக் கெடக்கப் போகுது... அதுக்கு மாமரத்துக் கொல்லையை வாங்கியிருந்தா... இந்தா செட்டியாரு வீட்டு கரும்புத் தோட்டத்துல இஞ்சினியரிங் காலேசு கட்டப் போறானுங்க... இன்னைக்கு மாமரத்துக் கொல்லைதானேன்னு நினைப்பீங்க... நாளைக்கு அந்த எடத்துல செண்டு என்ன வெல போகும்... அதை நாம எடுத்துக்கிட்டா வீடு கட்டும்போது ரெண்டு வீட்டை சேத்துக் கட்டிப் போட்டா வாடகைக்கு விட்டாச்சும் சம்பாதிக்கலாம்ல்ல..."

"அது சரி... உன்னோட எண்ணம் இப்படிப் போகுதா... அடேங்கப்பா உன்னைய மட்டும் உங்கப்பன் படிக்க வச்சிருந்தாருன்னா... இன்னேரம் கலெக்கடராயிருப்பே... நீ யோசிக்கிற மாதிரி அவனும் யோசிச்சு அண்ணன் வீட்டை எடுத்துக்கட்டும் நா கொல்லையில வீடு கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தா... "

"ம்க்கும்... உங்க தம்பிதானே... அவரு இனியாவது ஊருக்குள்ள வர்றதாவது... மெதுவா உங்க தம்பிக்கிட்ட பேசி அதை வாங்கப் பாருங்க..."

"ஆத்தா... பத்து செண்டு நமக்குப் போதும்... பேசாம இரு...."

"அதானே... நீங்க கேட்டுப்புட்டாலும்... கேக்கிற நேரத்துல நான் கேட்டுக்கிறேன்...."

"அத்தான்... நான் குமரேசன் பேசுறேன்..." 

"சொல்லு மாப்ள..." என்றார் எதிர்முனையில் அழகப்பன்.

"என்னத்தான் எப்படியிருக்கீங்க...?"

"என்ன மாப்ள நேத்துத்தான் பாத்துட்டுப் போனே... அதுக்குள்ள நலம் விசாரிக்கிறே...?"

"இல்ல அப்படி கேட்டு பழக்கமாயிருச்சில்ல..." சிரித்தான்.

"சரி... சரி... என்ன விஷயம்... எதாவது முக்கியமா...?"

"ம்... மருமக, மருமகன் எல்லாம் ஹாஸ்டல் போயாச்சா..."

"ம்... கிளம்பிட்டாங்க... நானும் உங்கக்காவுந்தான் எம்மொகத்தை நீ பாரு... உம்மொகத்தை நா பாக்குறேன்னு உக்காந்திருக்கோம்..."

"அப்புறம்... ரமேஷ் அத்தான் திடீர்ன்னு ரொம்ப நல்லவரா மாறிட்டாரேத்தான்... எப்படித்தான்..."

"ஏய்... அவன் அப்படித்தான்.... நல்லவந்தான்... மிடுக்கிக்கிட்டுத் திரிவான்... சரி விடு... அவனோட போக்கை அவனே மாத்திக்கிட்டது நல்லதுதானே... கெட்டவன் கெட்டவனாவே இருந்து சாகணுமின்னா எப்படி... நாலு வார்த்தையின்னாலும் நறுக்குன்னு பேசிப்பிட்டானுல்ல..."

"ம்... எனக்கு ஆச்சர்யம்..."

"அப்ப அப்ப அவனுக்கிட்ட போன் பண்ணிப் பேசு... இன்னும் மொறச்சிக்கிட்டு திரியாம..."

"சரி..."

"ம்... வேறென்ன சொல்லு..."

"அப்புறம் மாமரக் கொல்லையை...."

"கொல்லையை..."

"சித்ராண்ணி கேட்ட மாதிரி அவங்ககிட்ட கொடுத்துடலாம்ன்னு பாக்குறேன்... ஆசைப்பட்டுட்டாங்க... அதைக் கொடுக்கிறதால கொறஞ்சி போயிடப் போறதில்லை... பழைய வீட்டை அப்பாம்மா காலத்துக்கு அப்புறம் வேலை பாத்து வச்சிக்கிட்டு நல்லது கெட்டது போனா தங்கிட்டு வந்துக்கலாம்..."

"உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..."

"ஏந்த்தான்...?"

"ரோட்டோரத்துல கிடக்கிற நெலம் அது ஒண்ணுதான்... அதையும் மொத்தமாத் தூக்கி அவனுக்கிட்ட கொடுத்துட்டு... நாலப்பின்ன அபியே கேள்வி கேட்டா என்ன பண்ணுவே..."

"அதெல்லாம் அவ கேக்கமாட்டாத்தான்... அண்ணனுக்குத்தானே கொடுக்கிறோம்..."

"அண்ணன் கேட்டானா... இல்லையில்ல... அவ எதுக்கு இருபது செண்டையும் கேக்குறா தெரியுமா...? வீடு கட்ட மூணு செண்டு போதும் மாப்ள... தோட்டம் போட்டு காய்கறி யாவாரமா பண்ணப்போறா.... எல்லாம் பயங்கர பிளான் மாப்ள..."

"என்ன பிளான்?"

"பக்கத்துல இஞ்சினியரிங் காலேஸ் வருது... அப்புறம் அந்த எடத்துல செண்டு என்ன வெலைக்குப் போகும்... பிளாட் போட்டு வித்தாலும் நாலஞ்சி பிளாட் விக்கலாம்... இல்ல லோனைக்கீனைப் போட்டு வீடா கட்டி விட்டா மாசாமாசம் வாடகை வரும்... எந்தங்கச்சி சித்ரா படிக்கத்தான் இல்ல... ஆனா கலெக்டரைவிட அழகா கணக்குப் போடுவா... வெவரம் புரியாம தூக்கிக் கொடுக்கிறேன்னு சொல்றே..."

"அது சரி... இம்புட்டு உள்குத்து இருக்கா...?"

"மாப்ள... உலகம் புரியணும்... எனக்கு நீ வேற... மணி வேற இல்லை.... எல்லாரும் நல்லாயிருக்கணும்... அதுதான் எனக்கு வேணும்... சித்ரா கணக்கு வேற மாதிரி... நீ பேசாம உனக்கு உள்ள பத்துச் செண்டை வச்சிக்க... பின்னால பாக்கலாம்... இன்னைக்கி தூக்கிக் கொடுத்துட்டு பின்னால அவங்க அதன் மூலம் பலன் அனுபவிக்கும் போது நீயோ அபியோ மனசு வருந்தி எதாவது சொல்லப்போயி முட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.... நம்ம குடும்பம் கந்தசாமிங்கிற சிற்பி செதுக்குனது... அதுல ஒச்சம் விழக்கூடாது... செய்யணுமின்னு நினைச்சியன்னா... மகா கல்யாணத்துக்கு நீயே நின்னு செய்யி... அவனுக்கும் உதவியா இருக்கும்... என்னடா அத்தான் இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதே... உலகம் புரிஞ்சி வாழக் கத்துக்க... ஏன்னா உன்னையப் புரிஞ்ச அபிக்கு நம்ம குடும்பந்தான்  உலகம்... அவ மனசுல இதுவரைக்கும் வராத வருத்தங்கள் வந்தா பின்ன கூட்டுக் குடும்பம் சின்னா பின்னமாயிரும்... சித்ரா... குலைக்கிற நாய்... அது கடிச்சிடாது... ஆனா... யோசிச்சிக்க..."

"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 27 மார்ச், 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 9. எம்.எஸ். சார்

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னைப் பாதித்த, செதுக்கிய, பாசம் காட்டிய உறவுகள் குறித்த நினைவுகளை கொஞ்சமாய் அசைபோட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த பகிர்வில் நினைவாய் மலரப்போவது எனது அன்பிற்குரிய பேராசிரியர். திரு. எம்.சுப்பிரமணியன் (எம்.எஸ்) அவர்கள்.

எங்கள் ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியராய் இருந்தார். கல்லூரியில் முதல் வருடம் படித்த போது இவருடன் அவ்வளவு நெருக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அமையவில்லை என்பதைவிட நான் படித்த துறைக்கும் இவரின் துறைக்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் இவருடன் பழகும் வாய்ப்புக் கிட்டவே இல்லை. எனது தோழர் தோழியர் இவரின் துறையில் படித்ததால் இவரைப் பற்றி நிறைய அறிய முடிந்தது.

இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் ஐயாவுடன் பேசியபடி செல்லும் நாட்களில் திருப்பத்தூர் ரோட்டில் இருந்த எம்.எஸ்.சாரின் கண்ணா பேப்பர் ஸ்டோரின் கல்லாவில் அமர்ந்திருக்கும் அவரைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பார். அப்போது நாங்களும் அங்கு நிற்போம்... அப்போது சிநேகமாய் சிரிப்பார். கடையில் வேலை பார்த்த ஜீவா ஐயா மீது மிகுந்த பற்று வைத்திருந்தான். ஐயா வீட்டுக்கு அடிக்கடி வருவான். அவனுடன் எங்களுக்கும் நெருக்கமானது. இவனைப் பற்றி மற்றுமொரு பகிர்வில் பார்ப்போம். ஐயாவுடன் எங்களைப் பார்த்ததும் என்ன ஐயா,  ரெண்டு மாணவர்களையும் எப்பவும் பக்கத்துலயே வச்சிருக்கீங்க என்று சொல்லிச் சிரிப்பார்.

அதன் பின் மே மாதம் புத்தகம், நோட்டு வியாபாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் ஒத்தாசைக்கு ஆளு வேணும் காலேசு இல்லாதப்போ மாலை நேரத்துல வந்து நில்லுவே என்று ஜீவா சொல்ல, மே,ஜூன் இரண்டு மாதமும் கணிப்பொறி மையம் ஆரம்பிக்கும் வரை கடையில் நின்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்தேன். முருகன் வரமாட்டான். நானும் ஜீவாவுக்கு வேண்டிய சில நண்பர்களும் எங்களால் ஆன உதவியைச் செய்வோம். அப்படியே நெருக்கம் தொடர, குமார் வரலையா? என்று கேட்க ஆரம்பித்தது அவரின் நேசம்.

பின்னர் கணிப்பொறி மையம் அது இதுவென கொஞ்சம் அவருடனான உறவு பார்க்கும் போது பேசுவதோடு மட்டுமே தொடர்ந்தது. கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் எம்.எஸ். சாருடன் நெருக்கம் அதிகமாகியது. குறிப்பாக சபரிமலைக்கு அவர் தலைமையில் நான்காண்டுகள் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தபோது சாரின் அன்பில் மீண்டும் நனைய ஆரம்பித்தேன். மலைக்குச் செல்லும் போது நானும் முருகனும் மாணவர்களாய் அவர் முன் என்றாலும் எங்களை அன்பாய் பார்த்துக் கொள்வார். எந்த வேலை என்றாலும் எங்களைத்தான் அழைப்பார். மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவதற்காக தேங்காய் தேய்த்து எடுப்பது மற்றும் மற்ற வேலைகள் என சார் வீட்டில்தான் இருந்து செய்வோம்.

எம்.எஸ்.சார் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர். ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை அவருக்கு மிகுந்த சோகத்தையே கொடுத்தது. பையன்கள் இருவருக்கும் ஒரு வித நோய்... குழந்தைகள் இருவருமே நோயின் பிடியில் என்பதால் அவரின் மனைவியோ விரக்தியின் பிடியில்... எப்பவும் இருவருக்கும் ஒத்துப் போவதேயில்லை... எல்லாவற்றையும் தாங்கினார்.... இரண்டு மகன்களையும் இழக்கும் வரை...

நாங்கள் கல்லூரியில் வேலை பார்த்த போதுதான் அவரின் இளைய மகன் இறந்தான். அவரது வீட்டு ஹாலில் கிடத்தியிருந்தார்கள்... பார்க்க சகிக்கவில்லை... சாரின் அழுகையும்... துடிப்பும்... இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் வரக்கூடாது என்று நினைத்தாலும் எங்காவது மீண்டும் மீண்டும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. எனது மைத்துனனை அவருக்கு நன்றாகத் தெரியும்... எங்களுடன் சபரிமலைக்கு இரண்டு வருடம் வந்தான். அவன் தற்கொலை பண்ணிக் கொண்டதைக் கேட்டு பதறியவர், நித்யாவுக்கு ஆறுதல் சொல்லு... அவங்க அப்பா அம்மா எப்படி இதைத் தாங்குவாங்க... கிறுக்குப்பய இப்படிப் பண்ணிட்டானே என்று புலம்பியவர்தான்... அன்று தனது மகனை இழந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

அபுதாபி வந்த பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் அவரைக் கடையில்  சென்று சந்திப்பதுண்டு... எப்பவும் போல் பேசினாலும் ஒரு சோகம் அவருக்குள் ஒளிந்தே கிடக்கும்... குமார், சபரிமலைக்கு மறுபடியும் ஒரு பயணம் போற மாதிரி விடுமுறை எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொல்லுவார். அவரது பணி நிறைவுக்குப் பின்னரும் தேவகோட்டையில்தான் இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடைக்குப் போனபோது அவரின் தம்பிதான் கடையில் இருந்தார். சார் எப்படியிருக்காங்க என்று கேட்டதுக்கு நல்லாயிருக்கார் என்று சொன்னார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

அதன் பின்னான நாட்களில் நண்பர்கள் மூலமாகத்தான் அவரின் மூத்த மகனும் இறந்து விட்டதாகவும் மதுரையில் போய் செட்டிலாகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவரின் தம்பியிடம் விசாரிக்க, 'ம்... அண்ணோட பையன் இறந்த பின்னால... அண்ணனுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு இல்லை... அண்ணிக்கும் இங்க இருக்க பிடிக்கலை... மதுரைப் பக்கமே பொயிட்டாங்க... நானும் கொஞ்ச நாள் கடையைப் பாத்துட்டு வித்துட்டுப் போக வேண்டியதுதான்' என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரம் ரொம்ப வேதனையாகவும் இருந்தது.

கல்லூரியில் எந்த மாணவனையும் கோபமாகப் பேசாத, எல்லாருக்கும் பிடித்த எம்.எஸ். சாராக, சபரிமலைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு பக்தனாக, அடுத்தவரை எடுத்தெறிந்து பேசாத மனிதராக வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற... அந்த மனிதரின் வாழ்வு மட்டும் ஏன் இப்படியானது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

எம்.எஸ்.சார்... தங்களின் புத்திர சோகத்துக்கு ஆறுதல் சொல்ல முடியாது. உங்கள் வாழ்வின் இழப்புக்கள் அதிகம்... மீட்க முடியாத இழப்புக்களால் வாழும் கடைசி நாள் வரை உங்களை இறைவன் அழ வைத்து விட்டான்... ஆற்றுப் படுத்த முடியாத சோகம் உங்கள் வாழ்க்கையில்... என்னைப் போன்றோரை செதுக்கிய சிற்பிகளில் தாங்களும் ஒருவர்... கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் என்று சொல்ல முடியாத நிலை என்றாலும் இனி வரும் காலங்களில் உங்கள் மனைவி உங்களிடத்தில் அன்போடு இருந்து உங்களை... உங்கள் வாழ்க்கையை கொஞ்சமாவது சந்தோஷமாக கொண்டு செல்லட்டும்.... செல்ல வேண்டும் என்பதே ஆசை.

இந்த முறை விடுப்பில் செல்லும் போது மதுரையில் இருக்கும் மனைவியின் அம்மா வீட்டுக்கு போகும்போது கண்டிப்பாக எம்.எஸ்.சாரை பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எங்க எம்.எஸ்.சார் இனி வரும் நாட்களில் வசந்தத்தை பார்க்காவிட்டாலும் வலிகளை மறந்து வாழ இறைவனைப் பிரார்த்தியுங்கள்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 மார்ச், 2015

ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்

2004 ஆம் ஆண்டு மார்ச்-26... எங்கள் வாழ்வில் மிகச் சிறந்த நாள்.



மதுரையில் தல்லாகுளத்தில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்திருந்தோம். ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்றதில் இருந்து பத்தாவது மாதம் வரை சுகப்பிரசவம் ஆகும் என்று சொன்னவர்கள்... ஏன் வலி வந்து சேர்த்த அந்த இரவு இட்லி சாப்பிடச் சொன்னவரை அதையேதான் சொன்னார்கள். அதன்பிறகு திடீரென மீண்டும் ஸ்கேன் எடுத்தார்கள்... உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்லிவிட்டார்கள்.

நாங்களும் அவர்களுடன் சண்டையிட்டு முடியாமல் தோற்று ஒத்துக்கொள்ள, அப்பா, அம்மா, அத்தை என எல்லாரும் பதட்டத்துடன் காத்திருக்க... மாமாவுக்கு விவரம் சொல்லி அவர் ஹோட்டலில் இருந்து வரும் முன்னரே ஆபரேசன் அறைக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள். நமக்கு ஒரு குழந்தை என்ற சந்தோஷம் நீங்கி... மனைவிக்கு ஆபரேசன் என்ற பயம் கவ்விக்கொள்ள என்னையறியாமல் கண்ணீர் ஓட, மாடிப்படியில் சென்று அமர்ந்துவிட்டேன்.

குழந்தை அழுகும் சத்தமும் எல்லோரும் சந்தோஷமாக பேசும் சத்தமும் கேட்க, என் மகள்... என் செல்லம் பிறந்ததை அறிந்து சந்தோஷித்தாலும் மனசு மனைவியை நாடியது. வெளியில் கொண்டு வந்து பின்னர் குளிரும் காய்ச்சலும் வர, மருத்துவர்கள் ஒன்றுமில்லை என்று சொல்லியபடி மீண்டும் ஐசியூவுக்குள் கொண்டு செல்ல, குழந்தையைக் கூட பார்க்க மனமின்றி மனைவிக்காக வேண்டுதலோடு காத்திருந்த அந்த நிமிடங்கள் இன்னும் மனசுக்குள் தடக்.. தடக்கென்று கடக்காமல் நின்று கொண்டேயிருக்கிறது.

மனைவி நினைவு திரும்பி, கொஞ்சம் பேச ஆரம்பித்ததும் மகளைக் கொஞ்சுவதே வேலையானது. அப்போது தேவகோட்டை கல்லூரியில் பணி, வார வெள்ளி மாலை கிளம்பிப் போய் மகளுடன் இருந்து திங்கள் காலை கிளம்பி வருவேன். நமக்குன்னு ஒரு வாரிசு என்ற சந்தோஷம் துள்ளலாட்டம் போட்டது. சின்ன பிள்ளையாக இருக்கும் போது கைலிக்குள் போட்டு விளையாடியது பசுமையாய்...

பின்னர் அவரும் வளர வளர... சேட்டைகளும் வளர ஆரம்பித்தது. நான் கல்லூரிக்குச் செல்லும் போது எனது பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விட்டுச் செல்ல வேண்டும். அதேபோல் மதியம் சாப்பிட வரும்போது கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டாலே சிமெண்ட் தரையின் சூட்டைப் பற்றி அறியாமல் தத்தக்கா... பித்தக்கான்னு நடந்து வரும் அழகே தனிதான்... கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னம் வாய் என எச்சில் வடிய முத்தம் கொடுக்கும் செல்லத்துக்கு எப்பவும் அப்பா வேணும்... ஆம்... அப்பா செல்லமாக வளர்ந்தது. விஷால் வரும் வரை தனிக்காட்டு ராணிதான்.

சென்னையில் இருக்கும் போது என்னோடுதான் படுக்கை... பெரும்பாலும் வயிற்றில் ஏறித்தான் படுத்துக் கொள்ளும். இறக்கிப் போட்டாலும் மீண்டும் ஏறிப்படுத்து விடும். இல்லையேல் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கும்... முகப்பேர் வேலம்மாளுக்கு எல்.கே.ஜி. போகும் போது இரவு வேலை பார்த்துவிட்டு வந்து படுத்தாலும் குளிக்கவும்... சாப்பாடு ஊட்டவும்... பள்ளியில் கொண்டு சென்று விடவும் அப்பா வேணும்... அப்பா இப்பத்தான் வந்தாக... தூங்கட்டும் பாப்பா என்று அம்மா சொன்னாலும் பக்கத்தில் உக்காந்து அப்பா... அப்பான்னு கிளப்பிக் கொண்டு செல்லும்.

காரைக்குடி வந்து பள்ளிக்குச் சென்ற நேரத்தில் நான் அபுதாபி வந்தாச்சு... பின்னர் வருடம் ஒருமுறைதான் என்றாலும் அந்த ஒரு மாதமும் அப்பாதான் எல்லாம்... அப்பா... அப்பா.... எப்பவும் அப்பா பிள்ளை.... விஷாலும் அப்பாவுக்கு போட்டி போட ஒரே களபரம்தான். இந்த சண்டை இன்று வரை தொடருது. அதுவும் ஒரு சந்தோஷம்தானே,

எல்லாருக்கும் பாப்பா ஆகிப்போன எங்கள் செல்லத்துக்கு வயது பதினொன்று ஆச்சு.... டேய் பாப்பான்னு சொல்லாம அக்கான்னு சொல்லுடா என்று விஷாலிடம் அம்மா மிரட்ட, அப்பா பாப்பான்னு சொல்லாம அக்க்க்க்க்க்கான்னு சொல்லணுமாம் என்று சொல்லிச் சிரிக்கிறான். இப்பவும் பாப்பாதான் போடுறான்.

படிப்பு விஷயத்தில் திட்டும் போது என்னையவே திட்டுங்க என்று அழுதாலும் கத்தினாலும் அடுத்த நிமிடமே அப்பா என்று ஒட்டிக் கொள்ளும் அந்த அன்பு பெண்பிள்ளைகளுக்கே உரியது. அது இன்னும் கூடுதலாய்....

ஸ்ருதி... 

இதுதான் எங்கள் செல்லத்தின் பெயர்... ஆனா எல்லாருமே பாப்பான்னுதான் கூப்பிடுறோமா... ஸ்ருதிங்கிறது பள்ளியில் மட்டுமே கூப்பிடும் பெயராகிவிட்டது. வீட்டில் பெரிசு முதல் சிறுசு வரை எல்லாருக்கும் பாப்பாதான்... பாப்பா ஐயாவின் (மனைவியின் அப்பா) செல்லம். அவருக்கு காலையில் பேத்தியிடம் பேசவில்லை என்றால் வேலையே ஓடாது... அதே போல் அவர் பேசவில்லை என்றால் இவங்க போன் பண்ணி பேசிட்டுத்தான் பள்ளிக்குப் போவாங்க...

மார்ச் -07 என்னோட பிறந்தநாள்... மார்ச் - 15 தங்கை (நண்பனின் மனைவி) பிறந்தநாள்... மார்ச் - 21 பேராசான். மு.பழனி இரகுலதாசன் (எங்க ஐயா) பிறந்தநாள்... அந்த வரிசையில் மார்ச் - 26  எங்க செல்லத்தோட பிறந்தநாள்... 

நாளைக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள்... கைகளில் தவழ்ந்த எங்க செல்லம் பதினோறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... உங்கள் ஆசிகளையும் அன்பையும் வழங்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.