மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 ஜனவரி, 2015

அமைதியாய் தெரு...!

அமைதியாய்
இருந்தது
அந்தத் தெரு...

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறிய செருப்புக்கள்...!

ஆங்காங்கே
நிகழ்வை உணர்த்த
அருவாளும் கம்புகளும்...!

கிழிசல்களாய்
ரத்தம் சுமந்த
வேஷ்டி துண்டுகள்
சில சட்டைகள்...!

வீசப்பட்டகற்கள்
உடைத்ததில்
சிதறிய கண்ணாடிகள்...!

புகையைக் கக்கியபடி
நகர்ந்து செல்லும்
போலீஸ் வண்டி...!

குலைத்தபடி
அதைத் துரத்திக்
கொண்டோடும்
தெரு நாய்...!

அடைக்கப்பட்ட
கேட்டின் உள்ளிருந்து
கேள்விக் குறியோடு
பார்க்கும் குழந்தை...!

அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!

சாதி வெறியால்
களவாடப்பட்ட காதல்
களவாடிச் சென்ற
உடல்களைப் புதைப்பதில்
அமைதி இழந்திருந்தது
மயானம்...!

உடைந்த மண்டைகளும்
விழுந்த வெட்டுக்களும்
நிகழ்ந்த பொழுதுகளைக்
கொன்று அமைதியாய்
இருக்கிறது - அந்த
பாரதியார் தெரு...!
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்

திப்பிற்குரிய லெட்சுமணன் அவர்களின் பேரை மட்டும் சொன்னால் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பேனாக்கடை லெட்சுமணன் என்றால் எல்லாருக்கும் தெரியும். தேவகோட்டையில் ஸ்டேட் பாங்க் வீதியில் (குதிரை வண்டிச் சந்துங்கிற பேரு இப்ப மறைந்து விட்டது) பேனாக்கடை வைத்திருக்கிறார். இன்றைய வெள்ளந்தி மனிதராய் இவருடனான உறவைக் கொஞ்சம் நினைவில் நிறுத்திப் பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும் போது மை ஊற்றி எழுதும் பேனா வாங்குவதற்காக இவரின் கடைக்குப் போவோம். நான்கு பக்கம் கட்டை வைத்து வயரால் பின்னப்பட்ட அடிப்பலகை போட்டு அமர்ந்திருப்பார். சிவப்பாக, பெரிய உருவமாக, தங்கப்பல் தெரிய சிரித்தபடி செட்டியார் மாதிரி இருப்பார். வகை வகையாக பேனாக்களை அட்டையில் வைத்திருப்பார். எடுத்துக் கொடுத்து பிடித்ததை எடுத்துக்கச் சொல்லி அதற்கு மை ஊற்றி ஒரு பேப்பரில் கிறுக்கிப் பார்த்து பின்னர் நம்மை எழுதச் சொல்லி கையில் கொடுப்பார். பணம் கொடுக்கும் போது 'கொஞ்சம் குறைச்சுக்கங்க ஐயா' என்று சொன்னால் போதும் கோபம் சுருக்கென்று வரும். 'இங்க லாபத்துக்கு விக்கலை தம்பி. வாங்குறதை விட 25 காசு 50 காசு சேர்த்து விக்கிறேன் அம்புட்டுத்தான்... வேணுமின்னா மத்த கடையில விசாரிச்சிட்டு வாங்க... நம்ம கடையிலதான் கொறச்ச விலை' என்று சொல்லியபடி பணத்தை பெற்றுக் கொள்வார்.

இப்படியாக பேனா வாங்கும் நேரத்தில் மட்டுமே அவரைச் சந்தித்தவன், கல்லூரியில் படிக்கும் போது திரு. பழனி ஐயாவால் கலையிலக்கியப் பெருமன்ற உறுப்பினரான போது அங்கு பொருளாளராக இருந்த லெட்சுமண ஐயாவுடன் (பின்னாளில் அப்பா என்றோம்) நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 'என்னப்பா இன்னும் இழுத்துப் போட்டுக்கிட்டு கெடக்கீக... சட்டுப் புட்டுன்னு வேலையை முடிக்க வேண்டாமா...?', 'இதையே இப்படி இழுத்துக்கிட்டு இருந்தா... சாயந்தரம் அடிகளார் நிகழ்ச்சி இருக்குப்பா...', 'சாப்பாடு திருப்தியா இருக்கணும்... வாறவன் வாய்க்கி வந்த மாதிரி பேசிடக்கூடாதுல்ல...' என பேசியபடி எல்லா வேலையிலும் ஒரு இளைஞனைப் போல் தன்னையும் இணைத்துக் கொள்வார்.

இந்த நட்பின் வாயிலாக நானும் முருகனும் அவரின் வீட்டுக்கும் கடைக்கும் செல்லும் பிள்ளைகளானோம். அவரின் இரண்டாவது புதல்வன் லெனின் எங்களுக்கு நட்பானார். அவருடன் கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். கலையிலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவுக்கு இரவு உணவு பூவநாதன் ஐயா வீட்டில் பணம் கொடுத்து செய்து வாங்கி வருவோம். ஐயாவின் இறப்புக்குப் பிறகு அது சரி வராது போகவே, கடையில் வாங்கினோம். அதில் திருப்தி இல்லாததால் அடுத்த விழாக்களில் எல்லாம் பெருமன்றம் மூலமாக பொருட்களை வாங்கி தனது வீட்டிலேயே செய்து கொடுக்க ஆரம்பித்தார்.

விழா நடக்கும் போது எங்களை அழைத்து நம்ம வீட்ல சாப்பாடெல்லாம் தயாரா இருக்கும். ஒரு ஆட்டோ எடுத்துக்கிட்டுப் போயி தூக்கிக்கிட்டு வந்துருங்க என்பார். அதன்படி அங்கு சென்றால் எல்லாம் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். அம்மாவோ அவரின் மகளோ இருப்பார்கள். சொல்லி எடுத்து வந்தால் அவர்களும் விழா அரங்கிற்கு வந்துவிடுவார்கள். விழா முடியும் தருவாயில் பந்திக் கட்டுல போயி எல்லாம் ரெடி பண்ணுங்கப்பா... சாப்பாட்டை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல, அவர் மனைவி, மகள் மற்றும் நாங்கள் என எல்லாருமாக நின்று பரிமாறி விழாவைச் சிறப்பாக முடிப்போம்.

கலையிலக்கியப் பெருமன்ற வரவு செலவு விவரங்கள் அடங்கிய சின்ன பேக்கை கையில் இடுக்கிக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வார். 'பழனி சார்... அடுத்த வருசத்துக்கு இது சரியா வராது. வேற மாதிரி பண்ணனும்...', 'ஊர்வலத்தை இன்னும் சிறப்பா பண்ணியிருக்கணும்...' என முடிந்த விழாவில் வரும் ஆண்டுக்கான விழா குறித்த திட்டங்களைப் பேசுவார். செயலர் முருகன் அண்ணனை எப்பவும் கூப்பிட்டு எதாவது சொல்லுவார்.

கல்லூரி நாட்களில் மாலை வேளைகளில் எங்கள் குழு ஐயா வீட்டில் தஞ்சமடைந்துவிடும். நான், முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, தமிழ்குமரன் மற்றும் ஐயாவின் மகள் மணிமேகலை என கூட்டமாய் அமர்ந்து அரட்டை அடிப்போம். ஐயாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். எங்களுடன் எதிர் வீட்டில் இருந்த ஜெயலட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திர குமார் மற்றும் அவரின் தங்கை என அவர்களும் இணைந்து கொள்ள நீண்ட நேரம் எங்கள் பேச்சு தொடரும்.

ஐயா வெளியில் கிளம்ப ஆயத்தமாகிவிட்டால் எல்லாரும் களைந்து விடுவோம். நானும் முருகனும் ஐயாவுடன் சைக்கிளை உருட்டியபடி பேசிக்கொண்டே வருவோம். ஒரு சில நாள்களில் 'வாங்கய்யா பேனாக்கடை லெட்சுமண அண்ணனைப் பார்த்துட்டுப் போவோம்' என ஐயா சொல்வார். அங்கு சென்றால் 'என்ன பழனி சார்... ரெண்டு பிள்ளைங்களும் எப்போதும் உங்க கூடத்தானோ...?' என்று கேட்டுவிட்டு வெள்ளந்தியாய்ச் சிரிப்பார். 'டீ சாப்பிடுங்கய்யா...' என்று கடையில் இருக்கும் அண்ணனிடம் போய் டீ வாங்கி வரச் சொல்லுவார். செம்மலர் கட்டுரைகளையும் தாமரையில் பொன்னீலனின் எழுத்தையும் விலாவாரியாக ஐயாவிடம் சொல்லிச் சிலாகிப்பார். அப்புறம் பேச்சு கலையிலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளில் வந்து நிற்கும். 

மாதக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் பள்ளியில் கொஞ்சம் பிரச்சினை எழுந்த போது தன் வீட்டில் சில மாதங்கள் நடத்த இடங்கொடுத்ததுடன் எல்லோருக்கும் காபி வடையெல்லாம் கொடுக்கச் சொல்லி அமர்க்களப்படுத்தினார். எப்பவும் கடையில்தான் இருப்பார். மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது தூங்கி விட்டு கடைக்கு வந்தால் பின்னர் இரவுதான் செல்வார். அவரின் இரண்டு மகன்களும் அவருடன் கடையில் இருந்து கடையை நடத்தினார்கள்.

எப்போது ஊருக்குப் போனாலும் அவரைப் பார்ப்பேன்... இப்போது ரொம்பத் தளர்ந்திருந்தார். கடையில் அதிக நேரம் உக்காருவதில்லை போலும். எப்போதாவதுதான் கடைக்கு வருவேன்... முன்ன மாதிரி உக்கார  முடியிறதில்லை... வேலை பாக்கவும் கண்ணு மட்டுப்படலை என அவரே சொன்னார். 

இந்த முறை வாட்ச்சுக்கு வார் மாற்றுவதற்காகப் போனேன். கல்லாவில் அமர்ந்திருந்தார்... என்னை பார்த்து விட்டு பேசாமல் அமர்ந்திருந்தார். நானும் சிரித்து விட்டு என்னடா ஆளைத் தெரியலை போல என்று நினைத்தபடி பணம் கொடுக்கப் போனபோது என்னைத் தெரியுதாப்பா? என்று கேட்டேன். 'ஏந்தெரியாம... நீ நம்ம குமாருதானே...? வந்த வேலை முடியட்டும் பேசுவோம்ன்னு பார்த்தேன்... உன்னையும் முருகனையும் மறக்க முடியுமா என்ன? எப்படிப்பா இருக்கே? எங்க இருக்கே? குழந்தைங்க எப்படியிருக்காங்க? முருகன் வீடு கட்டிட்டான் போல... நீ கட்டலையா..? எனக் கேள்விகளை அடுக்கி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதன் பின்னர்தான் மேலே இருக்கும் பாராவில் சொன்னதைச் சொன்னார்.

பேனாக்கடை லெட்சுமணன் என்ற அந்த தங்கப்பல் கட்டிய சிங்கம், நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்தில் கோலோச்சியிருந்தது. இன்றைய நிலையில் உடல் தளர்ந்து முதுமை ஆட்கொள்ள.. தள்ளாத வயதில்... கலையிலக்கியப் பெருமன்ற செயல்பாடுகளில் எல்லாம் இருந்து விலகி இருப்பார் என்று நினைக்கிறேன். முதுமையின் பிடியில் இருக்கும் அவர் கஷ்டங்கள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து செல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 17)

முந்தைய பகுதிகள் : 


பதினாறாவது பகுதியின் இறுதியில்...

"டேய்...சின்னக் காயம்ன்னு சொன்னே...?" என மணி வேகமாக எழுந்து வந்து பேக்கை வாங்க, "என்ன மாப்ள எல்லாருக்கும் அடிபட்டிருக்கு... அபிக்கு இத்தனை கட்டுப் போட்டிருக்காங்க... சின்ன காயந்தான்னு சொன்னே...' என கேட்டபடியே வந்தார் அழகப்பன்.

"இல்லண்ணே...சின்னக் காயந்தான்... கட்டுத்தான் பெரிசு... " சொல்லி வலியை மறைத்துச் சிரித்த அபி "மாமா எப்படியிருக்காங்க?" என்று கேட்டபடி வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாள். அப்போது அங்கு வந்து நின்ற காரில் இருந்து கண்மணியின் கணவன் ரமேஷ் இறங்கினான்.

இனி...

மேஷ் காரிலிருந்து இறங்கவும் உள்ளே நுழைந்த குமரேசனும் அபியும் மீண்டும் வாசலுக்கு வந்தார்கள். 'வாங்கத்தான்' என மணியும் குமரேசனும் சொல்ல தலையை மட்டும் ஆட்டினான். 'அண்ணே நல்லாயிருக்கீகளா?' என அபி கேட்க 'ம்' என்றான். 'வாப்பா' என்று அழகப்பன் சொல்லவும் 'அண்ணே...' என்றவன் 'எப்படியிருக்கீங்கண்ணே... மாமாவுக்கு இப்ப எப்படியிருக்கு... வேலை விஷயமா வெளிய போயிருந்தேன்..." என அவரிடம் பவ்யமாய் பேசினான்.

"கண்மணி சொன்னுச்சு... எனக்கென்ன நல்லாயிருக்கேன்... மாமா ரொம்ப பயமுறுத்திட்டாரு... ஐசியூவுல இருந்து வெளிய கொண்டாந்துட்டாங்க... இப்பப் பரவாயில்லை... போ... போய் பாரு..."

"ம்... சரிண்ணே..." என உள்ளே செல்ல, அழகப்பன் குமரேசனிடம் நீயும் அவன் கூட போவெனக் கண்ணைக் காட்டினார். பின்னாலேயே சென்ற அபியை கூப்பிட்டு அப்புறம் போகலாம் எனச் சொன்னார்.

"வாங்க... எப்படியிருக்கீங்க..?" தன்னைக் கடந்த ரமேஷிடம் கேட்டாள் சுந்தரி.

"நல்லாயிருக்கேன்... எந்த ரூம்...?"

"இந்தா இதுல கடைசி... அம்மா இருக்கு... இப்பத்தான் கண்மணி பாத்துட்டு வாறேன்னு போனா..."

பதில் சொல்லாது அவள் காட்டிய திசையில் நடந்தான். குமரேசன் அக்காவிடம் பேசிக் கொண்டு நின்றான். அவனின் முகம், கையெல்லாம் தடவிப் பார்த்தவள் எங்கடா அபி புள்ளைங்க எல்லாம் எனக் கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.

அதற்குள் அறைக் கதவை நாசூக்காக தட்டிவிட்டு உள்ளே சென்றான் ரமேஷ்.

"வாங்கப்பா..." என்றபடி சேரில் இருந்து எழுந்தாள் காளியம்மாள்.

"ம்..."

"உக்காருங்க..." 

பேசாமல் உக்கார்ந்தான். "என்ன மாமா பண்ணுச்சு...?" என்றான் கந்தசாமியிடம்.

"நெஞ்சுவலி வந்திருச்சுப்பா..." என்றாள் காளியம்மா.

"ம்..."

"வேலையாப் போனியன்னு கண்மணி சொன்னுச்சு..." மெதுவாகக் கேட்டார் கந்தசாமி.

"ஆமா... இப்பத்தான் வந்தேன்..."

"வீட்டுக்குப் பொயிட்டு வந்தீங்களா? ஸ்ரீ என்ன பண்றா..?"

"பொயிட்டுத்தான் வாறேன்... அதான் எங்கம்மா இருக்குதுல்ல... அப்புறம் என்ன... நீ ரெண்டு நாளைக்கி இருந்து பாத்துக்கிட்டு வா... நா கிளம்புறேன்..."

"சத்த இருங்க... நானும் வாறேன்... நாளக்கி வந்து பாத்துக்கிறேன்..."

"அங்க வந்து என்ன பண்ணப் போறே...? எல்லாரும் இங்க இருக்கயில நீ வந்துட்டா நாந்தேன் ஒட்டவிடாம கூட்டிக்கிட்டுப் பொயிட்டேன்னு பேசுவாங்க.... இருந்துட்டு வா... எங்கம்மா பாத்துக்கும்..." என்றான்.

அப்போது குமரேசன் உள்ளே வர, தன் பேச்சை நிறுத்தினான். தம்பியைப் பார்த்ததும் "என்னடா... அடி ரொம்பவா.. பிள்ளைங்க, அபியெல்லாம் எங்க...?" என்றாள் கண்ணகி.

"வெளிய இருக்குக..." என்றவனை "அடி ஆத்தி... இப்படி அடிபட்டு வந்திருக்கியே ராசா.... அதுக எங்க... அதுகளுக்கும் ரொம்ப அடி பட்டிருக்கா?... நல்லவேளைக்கு இத்தோட போச்சே... நம்ம குடும்பத்துக்கே நேரஞ்ச் சரியில்லை போல..." என கண்ணீரோடு அவனை அணைத்துக் கொண்டாள் காளியம்மா.

"வெளியில அத்தானுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குக... அடியெல்லாம் ரொம்ப இல்லைம்மா... எதுக்குப் பதறுறே..? அப்பாவுக்கு எப்படியிருக்கு..." என்றவன் கந்தசாமிக்கிட்ட போய் "அப்பா.. " என்றழைத்த போது அவனை அறியாமல் கண்ணீர் வந்தது.

"ஏய்... எதுக்கு அழுவுறே...? என்னை விடு... உனக்கென்னாச்சுப்பா..?" பதறலாய் கேட்டார்.

"ஒண்ணுமில்லை... சின்ன ஆக்ஸிடெண்ட்...."

"ஆத்தி... புள்ளைங்க எங்கே... கூப்பிடு நா பாக்கணும்..."

"அப்பா.... உங்களுக்கு உடம்பு முடியலை... பதறக்கூடாது.. இருங்க இப்ப வருங்க..."

"கண்மணி." என மெதுவாக மனைவியை அழைத்தான் ரமேஷ்.

"என்னங்க..." என அவனருகில் வர, அவளிடம் மெதுவாக "எங்கடி விழுந்தானாம்?" என்று கேட்டான்.

"பஸ் ஆக்ஸிடெண்டாம்... வெளிய அபிய பாக்கலையா நீங்க... "

"ஆமா... பாத்தேன்... தலையில கட்டுப் போட்டிருந்துச்சி... ஏதோ ஞாபகம் ஒண்ணும் கேக்கலை..." என்றான் மெதுவாக.

"சரி.. இவனுக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமுல்ல..."

"ம்... என்னைய என்ன மானங்கெட்டவன்னு நினைச்சியா? " என்றவன் "அப்ப கிளம்புறேன் மாமா, பாருங்க... இல்லைன்னா சொல்லுங்க மதுரைக்கு போயி பாத்துட்டு வந்திருவோம்.... காசு பணத்தைப் பத்தி யோசிக்காதீக... எங்கிட்ட இருக்கு... நாஞ்செலவு பண்ணுறேன்... என்ன வரட்டுமா?" என்றவன் அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக வெளியேறினான்.

'நீயும் அவருகூட போயிட்டு வீட்டுக்கு கூட்டியாந்ததும் வா.. போ... ஊரு ஊரா சுத்திட்டு வர்ற மனுசனுக்கு அவுக ஆத்தா என்ன சமைச்சிப் போடும்... நீ போனியன்னா வாய்க்கு ருசியா சமைச்சிப் போடுவே... போகும் போது ஒத்தக்கடையில மீனு கெடந்தா வாங்கிக்கிட்டுப் போங்க" என மகளை விரட்டினாள் காளியம்மாள்.

"சரிம்மா... அப்பா பாத்துக்கங்க... தம்பி உடம்பைப் பாத்துக்கடா... " என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினாள்.

எல்லாரும் பேசிக் கொண்டு நிற்க, "என்ன அபி ஆக்ஸிடெண்டாமே... ரொம்ப அடியோ...?" என்றான் ரமேஷ்.

"இல்லண்ணே... சின்னக் காயந்தான்..."

"பசங்களுக்கும் அடியா...?"

"லேசா.."

"சரி உடம்பைப் பாத்துக்க... நா வர்றேன்.."

"இருங்கண்ணே... போகலாம்..."

"வேலையிருக்கு... அதான் உங்க அத்தாச்சி இருக்காளே... அண்ணே வர்றேண்ணே... பாருங்க... சரியா வரலைன்னா போன் பண்ணுங்க... மதுரைக்கு கொண்டு போயி காட்டிக்கிட்டு வந்திருவோம்... காசு பணத்தைப் பத்தி யோசிக்காம..."

"என்னப்பா... காசு பணத்துக்கா மொடை... பாத்தாச்சு.... நல்லாயிருக்கார்... பாப்போம்... அப்படி போறதாயிருந்தா போன் பண்ணுறேன்..."

"சரிண்ணே... சரி கண்மணி நா கிளம்புறேன்...."

"நானுந்தான் வாறேன்..."

"உன்னையத்தான் இருக்கச் சொன்னேனே..."

"இல்லங்க... அதான் அண்ணன், அக்கா, அத்தான், தம்பி எல்லாரும் இருங்காங்க... நீ பொயிட்டு வான்னு அம்மா சொன்னுச்சு..."

"சரி வா..." என்றவன் மற்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.

"இந்தாளு இன்னும் திருந்தலை... அவனுகளும் மதிப்பும் மரியாதையுமா  இருக்கும் போது அவனுககிட்ட பேசினா என்னா கொறஞ்சா போயிரும்" சுந்தரி கடுகடுத்தாள்.

"விடு.... அவனாத் திருந்தி வருவான்... இன்னைக்கு என்னமோ அதிசயமா அபிக்கிட்ட பேசுனான்... சரி அபி கையெல்லாம் மறச்சிக்கிட்டு மாமாவைப் பாத்துட்டு வா... ரொம்ப நேரம் நின்னா அப்புறம் அவரு உங்களுக்காக வருந்த ஆரம்பிச்சிருவாரு..."

"சரிண்ணே..." என உள்ளே சென்றாள்.

ந்தசாமி ஆஸ்பத்ரியில் இருந்து திரும்பி பத்து நாளைக்கும் மேலாச்சு, கண்ணதாசன் ஆட்களைப் பிடித்து எல்லா வயல்களிலும் அறுபடை முடித்திருந்தான். அபி வீட்டு வேலை பார்க்க, குமரேசன் லீவு போட்டு விட்டு கண்ணதாசனுடன் கூடமாட திரிந்து ஒரு வழியாக நெல் மூடைகளை எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். எல்லாரும் வந்து பாத்துப் போக, மூத்த மருமகள் மட்டும் பொங்கலுக்கு வரும் போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது கந்தசாமிக்குக்கூட வருத்தமாகத்தான் இருந்தது. என்ன செய்வது மகனுக்காக எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டதால் வருத்தத்தை வெளியில் சொல்லவில்லை.

பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னதாக மணியும் குடும்பத்துடன் வந்துவிட, வீடு  கலகலன்னு இருந்தது. வீட்டுக்குள் ஆய்... ஊய்... என குழந்தைகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த சந்தோஷம் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும் அப்புறம் நானும் கெளவியுமாத்தான் கெடக்கணும் என கந்தசாமி நினைத்துக் கொண்டு பேரன் பேத்திகளை அதட்டியும் கேலி செய்து கொண்டும் பொழுதைக் கழித்தார்.

விடிந்தால் பொங்கல்... இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த கந்தசாமி, வாசலில் வந்து அமர்ந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது "அப்பா... என்னோட நெலமை சரியில்லை... எப்ப என்னாகும்ன்னு தெரியலை..." என இழுத்தார்.

"எதுக்கு மாமா நல்லநாளும் பெரியநாளுமா இப்படி பேசுறீக... உங்களுக்கு ஒண்ணும் ஆகாது..." சித்ரா வேகமாகச் சொல்ல, 'பரவாயில்லையே பாசம் இருக்கத்தான் செய்யுது' என நினைத்துச் சிரித்தபடி "வயசாயிருச்சும்மா... என்ன எப்ப நடக்கும்ன்னு யாருக்குத் தெரியும்..." என்றார்.

"அப்பா... எதுக்கு இப்ப இதெல்லாம்?" குமரேசன் கேட்டான்.

"இரு வாறேன்... பொங்க முடிஞ்சதும் நம்ம அங்காளி பங்காளிகளை வச்சி இடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணிருவோம்... இனியும் போட்டு இழுக்க வேண்டாம்... சொத்தை பிரிச்சிக்கிட்டா அவனவனுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிக்குவீங்கதானே.... இனி என்னால வெவசாயம் பாக்க முடியாது.... கண்ணதாசனைப் போட்டு இழுக்க முடியாது... அவனுக்கு அவனோட வேலை பாக்கவே செரியா இருக்கும்... பாவம் புள்ள இந்தத்தடவை நெல்லை வீடு கொண்டாந்து சேக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டான்... இதுதான் இறுதி முடிவு... இதில் மாற்றமில்லை... மாட்டுப் பொங்க முடிஞ்ச மறுநாள் சொத்தைப் பிரிக்கிறோம்... என்ன செரியா?" என்று கந்தசாமி கேட்க, அனைவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

சனி, 17 ஜனவரி, 2015

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

ன்று எங்கள் அன்பு மகன் விஷாலுக்குப் பிறந்தநாள். அவன் நீண்ட ஆயுளோடும்... நல்ல கல்வியோடும்... நிறைவான வாழ்வும் நிறைந்த சந்தோஷமுமாய் வாழ உங்கள் ஆசிகளை வேண்டி....

நேற்றிரவு நண்பரின் திடீர் அழைப்பின் பேரில் 'ஐ' படம் பார்த்தாச்சு. இயக்குநரின் சங்கரின் முந்தைய படங்களைப் போல் அவ்வளவாக கவரவில்லை. காதலும் காதலுக்கான பழிவாங்களுமான அரதப் பழசான தமிழ் சினிமாக் கதையை பிரமாண்டம் என்னும் சர்க்கரை சேர்த்து தித்திப்பான பொங்கலாக்க முயன்று தோற்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அவ்வளவாக நல்ல கதை என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் சண்டைக்காட்சிகளை நீளமாக்கி நகர்த்தியிருக்கிறார். ஐந்து வில்லன்களில் 'சைடு வகுப்பெடுத்து சாப்டா பேசினா சரத்குமார்ன்னு நினைச்சியோ அவருதான் மெயின் வில்லன்' அப்படின்னு ராம்குமார் இறுதிக்காட்சியில் சொல்வதற்கு முன்னரே அந்த நபர் வரும் இரண்டாவது காட்சியிலேயே நமக்கு இவர்தான் முக்கிய வில்லன் எனத் தெரிய வருவதால் சுவரஸ்யம் இல்லை. இசைப்புயலின் இசையும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும் அருமை என்றால் மெர்சலாயிட்டேன் தவிர மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலக்கியிருப்பவர் சீயான். மனுசனுக்கு தொழில் மீது எவ்வளவு ஈர்ப்பு... அப்பா... கலக்கிட்டார். படம் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் விக்ரம் நிறைவாய் நிற்கிறார். தன்னை வருத்தி கலைஞன்டான்னு சொல்ல வைத்திருக்கிறார். சந்தானம், பவர்ஸ்டார் கூட்டணி சிரிப்புக்கள் பரவாயில்லை. 


மாடலாக வரும் எமி அழகோ அழகோ... அவர் விளம்பரப் படங்களில் நடிப்பது போன்று வரும் பாடல் காட்சியில் அவர் மீது கேமரா விளையாடியிருக்கிறது. தன்னைக் காதலித்தது போல் நடித்தது தெரிந்த இடத்தில்... இன்னும் ஒரு சில இடங்களில் விக்ரம் வசனம் பேசும் போது தனுஷ் தெரிஞ்சான்ய்யா... அது எனக்கு மட்டும்தானான்னு தெரியலை... திருநங்கைகளை கேவலமாக காட்டுவதும், இரட்டை அர்த்தம் என்பதை விட நேரடி அர்த்தமே கொள்ளக்கூடிய அசிங்கமான வசனங்களை வைத்திருப்பது ஷங்கருமா என நினைக்க வைக்கிறது. பிரமாண்டத்தை நம்பி படமெடுக்கும் இயக்குநர் ஷங்கர், ரசிகர்கள் தனது படத்தை எப்படியும் பார்ப்பார்கள் என்ற தீவிர நம்பிக்கை வைத்திருக்கிறார். அதை முதலில் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மீண்டும் இந்தியன் போன்ற ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். ஆளானப்பட்ட சூப்பர் ஸ்டாரோட லிங்காவையே ஓரங்கட்டுன ரசிகர்கள் பிரமாண்டத்தை பிச்சி உதறுவானுங்கங்கிறதுக்கு 'ஐ' உதாரணம். மொத்தத்தில் ஐ-யை விக்ரம் என்னும் மகா கலைஞனுக்காகப் பார்க்கலாம்.

ரு எழுத்தாளன் இனிமேல் எழுதமாட்டேன்... எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான் என்று சொல்லும் அளவுக்கு கொண்டு சென்ற சமூகத்தை என்ன சொல்வது. தனது நாவலில் ஒரு ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதும் போது அதனால் பிரச்சினைகள் எழும் என்று நினைத்தால் அதை அப்போதே கற்பனைப் பெயராக மாற்றியிருக்கலாம். நம்ம ஊர் பெயரைப் பயன்படுத்த நமக்கு உரிமை இருக்கு என்று நினைத்திருக்கலாம். அதேபோல் நம்ம ஊர் பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார் என்பதை நாலாண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய பிரச்சினை ஆக்கும் நபர்கள், புத்தகத்தின் முதல் பிரதி வந்த போதே அவரிடம் பேசி அடுத்த பிரதியில் பெயர் வராமல் செய்திருக்கலாம். நாலாண்டுக்குப் பிறகு ஒரு அரசியல்... அது ஒரு எழுத்தாளனின் சிந்தனையை சிறையிலிடும் அளவுக்குப் போய்... ஊரை விட்டே போ என்று மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையால் சொல்ல வைத்து... எழுத்தாளன் செத்துட்டான்யா என அறிக்கைவிட வைத்து... சை... என்ன மாதிரியான சூழலில் நாம் இப்போது வாழ்கிறோம். ஒரு எழுத்தாளனின் பேனாவைப் பறித்து வைத்து அவன் சிந்தனைகளுக்கு தீயிட்டு விட்டோம் என மார்தட்டிக் கொள்வதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு. இதில் இருந்து ஐயா பெருமாள் முருகன் அவர்கள் மீண்டு வர வேண்டும்... மீண்டும் வரவேண்டும்... 


வெண்ணிலா வீடு படத்தை இரண்டு நாட்களுக்கு பொழுது போகவில்லை எனப் பார்த்தேன். இரவல் நகை வாங்கி அதனை களவு கொடுக்கும் கதைகள் பல புத்தகங்களில் வெளி வந்திருக்கின்றன. அதே கதைக்களம்... அன்பான வாழ்க்கை. அழகான குழந்தை என வாழும் குடும்பத்துக்குள் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் பணக்காரியின் நட்பும்... அதன் பின்னான நிகழ்வுகளில் அவளின் நகையை வாங்கி அணிந்து திருமணத்திற்குச் சென்று அதை களவு கொடுத்து விட்டு படும் இன்னல்களும் என வெண்ணிலா வீடாக இருந்த குடும்பம் எப்படி அமாவாசை இருளுக்குள் செல்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல படம்.... பார்க்கலாம்...

தினைந்து நாட்கள் அலைனில் ஓட்டியாச்சு.. இன்னும் ஒரு வாரம்... இரண்டு வாரம்... என்று சொல்கிறார்களே தவிர முடிவாய் சொல்ல மாட்டேங்கிறானுங்க... எதாயிருந்தாலும் சொல்லுங்கடா நான் இரண்டு இடத்திலும் வாடகை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் பதிலில்லை. அபுதாபி குளிரை விட அலைனில் குளிர் கொன்று எடுக்கிறது. இங்கு ஹீட்டர் தண்ணீரில் 5.30க்கு குளிக்கும் போது கிடைத்த சுகம் 5 மணிக்கு எழுந்து குளிரக்குளிர தண்ணியை ஊத்தும் போது கிடைக்கவில்லை. பின்னர் குளிரில் பேருந்து நிறுத்தம் வந்து பஸ் பிடித்து அலுவலகம் சென்று வேலை பார்த்து திரும்ப அறைக்கு 3.30 மணிக்கு வந்தாலும் குளிர் மட்டும் குறைவேனா என்கிறது. அலுவலகத்திலோ பெண்கள் அதிகம்... பெரும்பாலும் அரபிப் பெண்களுக்கு வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும் ஏசியை மட்டும் குறைக்கும் மனசு வரவே வராது. அங்கயும் பிரீசர்தான்... என்ன செய்ய... எப்படா அபுதாபிக்கு வருவோம்ன்னு இருக்கு... ஆனா அறையை விட்டு எங்கும் செல்லாததால் ஊருக்குப் பேச, படிக்க, எழுத என நிறைய நேரம் கிடைக்கிறது. இங்கு 11.30 மணி வரை விளக்கு எரியும் அலைனில் 9.40க்கெல்லாம் விளக்கை அணைத்து விடுவதால் இரவில் எழுதும் எழுத்துக்களுக்கு தடாவாகிவிட்டது. 


டூ நூரா வித் லவ் அப்படின்னு ஒரு மலையாளப்படம் பார்த்தேன். சமூக சேவை செய்யும் இஸ்லாமியப் பெண்ணுக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள். குழந்தை பிறப்பதில் பிரச்சினை என்பதாக ஆரம்பிக்கும் படம்.... மெல்ல பின்னோக்கி பயணிக்க... அவளின் சமூகசேவை, ஆராய்ச்சி, நட்பு, காதல் என நகர்ந்து கர்ப்பிணி ஆகும் போது இந்தக் குழந்தை வயிற்றில் வளர வளர அவளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் வரும்.. உயிருக்கே ஆபத்து வரும் என்ற இடத்தில் நிற்க, கருவைக் கலைக்கலாம் என கணவன் மன்றாட அவளோ எனக்கு என்னோட குழந்தை வேணும் என பிடிவாதமாய் மறுக்க, பிரசவ சமயத்தில் மருத்துவமனையில் அவள் உயிருக்குப் போராட, பைக்கில் இந்த நினைவுகளைச் சுமந்து செல்லும் கணவன் விபத்தில் தலையில் அடிபட்டு அதே ஆஸ்பத்திரி ஐசியூவில் இருக்க, குழந்தை பிறந்து கணவனைப் பார்த்தவளுக்கு மீண்டும் பிரச்சினை வர, இதயத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இதயம் மாற்றி மீண்டு வந்தாளா? அவளுக்கு யார் இதயத்தைக் கொடுத்தார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கி முடித்திருக்கிறார்கள். ரொம்ப நல்ல படம்ன்னு சொல்ல முடியாது என்றாலும் பார்க்கலாம் ரகம்தான்.

விஷால் பள்ளியில் நடனத்தில் இரண்டாம் பரிசாக ஒரு கோப்பையும் சர்ட்டிபிகேட்டும் வாங்கி வந்திருந்தான். நேற்று எங்கள் ஊர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் பரிசாக டம்ளம் பெற்றிருக்கிறான். அவனை அவன் போக்கில் வளர விட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

சில நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது என்ன மனிதர்கள் இவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அடுத்தவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பொழைப்பை நடத்த நினைக்கும் பிறவிகளைப் பற்றி என்ன சொல்வது? நம்மிடம் உருகி உருகிப் பேசி, நம்ம சொந்தங்களிடம் நல்ல பெயர் வாங்க உன்னை அப்படிப் பேசினான், இப்படிப் பேசினான்... அவரை வாடான்னான் போடான்னான்... சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப் பாக்கிறான்னு வாய்க்கு வந்ததைப் பேசி வாழ நினைக்கும் ஈனர்களுக்கு என்ன பதில் சொல்வது? சொத்துக்கள் மட்டுமே ஒருவனுக்கு சுகத்தைக் கொடுக்குமெனில் அந்தச் சொத்துக்களை போட்டுக் கொடுத்து வாழ நினைக்கும் புண்ணியவான்களே துதி பாடி பெற்றுக் கொள்ளட்டும். எங்களுக்கு வேண்டாம்... கடனை வாங்கிக் கட்டினாலும் எங்களுக்கு என்று ஒரு வீடும் இரண்டு செல்வங்களும் சொத்தாய்... நிறைவான வாழ்க்கையை எங்களுக்கு கொடுக்க அதுவே போதும்... தயவு செய்து சொத்து சொத்து என்றோ... சொல்லாததை சொன்னேன் என்றோ சொல்லி வாழ நினைக்காதீர்கள்... அந்த வாழ்க்கை நரகலைத் தின்று வாழ்வதற்குச் சமம். இனி இது போல் என்னிடம் செய்யாதீர்கள். பிறர் போற்ற வாழப் பழகிக் கொள்ளுங்கள்... பிறரைத் தூற்றி வாழ நினைக்காதீர்கள். 

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

கிராமத்து நினைவுகள் : மாட்டுப் பொங்கல்


கிராமத்து விஷேசங்கள் என்றாலே சந்தோஷத்துக்கு குறைவிருக்காது. அதிலும் குறிப்பாக மாட்டுப் பொங்கல் என்பது மிகவும் சிறப்பான விழாவாக கொண்டாடப்படும். முதல் நாள் வீட்டுப் பொங்கல் என்பது எங்கள் முனியய்யா கோவில் இருந்து ஆரம்பிக்கும். அன்று மட்டும் முனியய்யா கோவில், வீடு மற்றும் வெற்றியூர் கருப்பரைக் கும்பிடும் பங்காளிகளால் நாச்சியம்மன் கோவிலில் வைக்கப்படும் பொங்கல் என மூன்று பொங்கல்களைச் சுவைக்க, தை முதல் நாள் தித்திப்போடு சந்தோஷமாக நகரும்.

மறுநாள் அதாவது மாட்டுப் பொங்கல் அன்று காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு எல்லாம் மாற்றி, காளைகளுக்கு வால் முடியை அழகாக வெட்டி, குளிப்பாட்ட கண்மாய்க்கு பிடித்துச் செல்வோம். அங்கு தண்ணீர் நிறைந்து கிடக்கும் வருடங்களில் அவைகளை நடுத்தண்ணிக்கு கொண்டு சென்று நீந்த விட்டு அழுக்குத் தேய்த்து குளிப்பாட்டி, குளிக்கும் துறைக்கு அருகே கண்மாய் கரையில் இருக்கும் முனியய்யா கோவிலில் குங்குமம் எடுத்து மாட்டின் நெற்றியில் இதயம் போல், மாங்காய் போல் பொட்டு வைத்து... உடம்பெல்லாம் அங்கங்கே பொட்டு வைத்து... புதுக்கயிறு போட்டு கட்டி வைப்போம். இப்ப மாடுகளும் இல்லை விவசாயமும் இல்லை.

பின்னர் எப்போது பொங்கல் வைக்கலாம் என நல்ல நேரம் பார்த்து ஆண்கள் எல்லாம் பொங்கல் வைக்கும் இடம் சுத்தம் பண்ணப் போவோம். எங்கள் ஊர் எல்லையில், கண்டதேவி போகும் பாதையில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வம் கருப்பர் கோவிலின் முன்பாக எந்தப்பக்கம் சூலம் எனப்பார்த்து பொங்கல் வைப்பதற்காக சுத்தம் பண்ணி, வரிசையாக பொங்கல் வைக்க செதுக்கி வைத்து அதற்கு அருகே திட்டிக்குழி ஒன்றை தயார் பண்ணி வைப்போம். திட்டிக்குழி என்பது நான்கு பக்கம் வாசல் போல் வைத்து மண்வெட்டியால் வெட்டி வைக்கப்படும் வீடு போன்ற அமைப்பிலானது. மாடுகளைக் கட்ட நிழலான இடத்தில் சுத்தம் பண்ணி வைத்து வருவோம்.

பின்னர் நல்ல நேரத்தில் பொங்கல் வைக்க ஊரே கூடி அங்கு சென்று பொங்கல் வைத்து, எல்லாருடைய பானைகளும் பொங்கியதும் சங்கு ஊதி சந்தோஷித்து எல்லாரும் இறக்கியதும் பாச்சோறு தீட்டுவதற்காக காய்கறிகளை வெட்டிப் போட்டு ஒரு குழம்பு போல் வைத்து திட்டிக்குழியில் பறங்கி இலைகளைப் போட்டு அதில் எல்லா வீட்டிலும் எடுத்த சோற்றை கொட்டி வைத்து அதன் மீது குழம்பை ஊற்றி படையல் போட்டு அதில் கொஞ்சம் புறமடத் தண்ணீர் எடுத்து வரப்பட்ட மரக்காவில் போட்டு மந்திரித்து மாடுகளுக்குத் தீட்டி பொங்கலோ பொங்கல் என சத்தமாக பாடல்களைப் பாடியபடி மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் பாச்சோறு தண்ணீர் தெளித்து கருப்பர் கோவிலையும் சுற்றி மூன்று முறை அதே போல் வலம் வருவோம்.

(இன்று... இப்போது வைக்கும் பொங்கல் விழா - மனைவியின் நேரடி ஓளிபரப்பில் - கையை உயரே தூக்குபவர் அப்பா)
பொங்கலோ பொங்கல் என சுற்றிச் செல்லும் போது புது மண் சட்டியில் நெருப்பைக் கொண்டு வருவார் எங்கள் ஊர் இளையர் ஐயா, அதில் கடைசியாக பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டினருக்கு திட்டி சுற்றி மிளகாய் உப்பென அதில் இட அது வெடிக்கும் போது ஏற்படும் காரம் எல்லாருடைய நாசியிலும் ஏறும். பின்னர் பொங்கல் வைத்த இடத்தைத் தாண்டி திட்டிக்குழிக்கு முன்னர் அதைப் போட்டு உடைத்ததும் எல்லோரும் பொங்கக்குழி தாண்டி விழுந்து வணங்கி எழுந்து திட்டிக்குழி சோறு வாங்கி சாப்பிட்டு கேலி முறைக்காரர்களுக்கு எல்லாம் முகத்தில் தீட்டி சந்தோஷமாக சில நிமிடங்களைக் கரைப்போம். அதிலும் மிளகாயை மட்டும் எடுத்து தீட்டுவோரும் உண்டு.

பின்னர் மாடுகளை திட்டிக்குழி தாண்டவிட்டு வீட்டிற்கு கொண்டு சென்று கசாலைக்கு முன்னர் இடப்பட்ட உலக்கையைத் தாண்ட வைத்து வைக்கோல் அள்ளிப் போட்டு கட்டி வைத்து விட்டு மீண்டும் பொங்கல் வைக்கும் இடம் வந்து கருப்பர் கோவிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு வீட்டுக்குச் சென்று மாட்டுப் பொங்கல் விருந்து சாப்பிடுவோம்.

இதற்கிடையில் கண்டதேவியில் இருந்து வரும் தபால்காரர் வழியிலேயே ஊரே கூடி பொங்கல் வைப்பதால் அங்கேயே பெயரை வாசித்துக் கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் எல்லாம் வாங்கி யார் அனுப்பினார்கள் எனப் பார்த்து சந்தோசித்து ஆட்டம் போடுவோம். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் வந்த பின்னர் மாட்டுப் பொங்கல் சந்தோஷ மணித்துளிகளில் சில துளிகளை களவாடிவிட, பொங்கக்குழியில் கூடும் பசங்க கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. என்பதையும் சொல்லித்தான் ஆகணும். 

சில வருடங்களாக எங்கள் ஊர் இளவட்டங்கள் உரி அடித்தல், சின்னப் பசங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என கலக்கலாக நடத்துகிறார்கள். அந்த சந்தோஷ நிகழ்வுகள் முடிந்ததும் மாலை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பார்கள். இதை சில ஊரில் கொப்பிப் பொங்கல் என்பார்கள். இரவு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு பொங்கலைச் சிறப்பாக முடிப்பார்கள்.

பொங்கலுக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இப்போதெல்லாம் நீடிக்கிறது. கடந்த ஆறு வருடத்தில் ஒரு முறை மட்டும் பொங்கலுக்கு ஊரில் இருந்திருக்கிறேன்.பொங்கக்குழி சுத்தம் பண்ண எங்க சித்தப்பா அழைக்க, நாங்கள் எல்லாம் கிளம்பிப் போவோம். இந்த வருடம் இளங்கோ மச்சானுடன் நம்ம விஷாலும் நானும் ஆம்பளைதான் என கிளம்பிவிட்டானாம். அவனின் மகனும் இவனும் சேர்ந்தால் அதகளம்தான். பரவாயில்லை நம்ம வாரிசு கிராமத்து வாசனையை நுகர்வதில் ரொம்பத் தீவிரம் காட்டுறார். இன்னைக்கு எல்லாம் ஒரே ஆட்டமாகத்தான் இருக்கும்.

எங்கள் ஊர் மாட்டுப் பொங்கலை நான் ரொம்பத் தவற விடுகிறேன் என்பதில் வருத்தமே.

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 14 ஜனவரி, 2015

பொங்குக பொங்கல்..!


ரணி செழித்திருக்கும் வேளையிலே... தை மகளின் வரவை உற்சாகமாகக் கொண்டாடும் என் உறவுகளுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்தாய் 2013-ல் மனசில் எழுதிய கவிதை கொஞ்சம் மாற்றங்களுடன் மீள்பதிவாய்... 


யலெல்லாம் வெளஞ்சிருக்க
களத்து மேடு காத்திருக்க
களம் நிறையும் நெல்லுக்காக
காத்திருக்கும் வேளையிலே...

வாசலிலே கோலமிட்டு
வண்ணங்கள் அதில் கொடுத்து
வீட்டினுள்ளே கோலமிட்டு
இரும்படுப்பை அதில் வைத்து...

கோலமிட்ட புதுப்பானையில்
கொத்தாய் மஞ்சள் கட்டி
சுத்தமான பசும்பாலோடு
புத்தரிசிப் பால் கலந்து இட்டு...

பொங்கி வரும் வேளையிலே
சந்தோஷம் பொங்கவே...
பச்சரிசி வெல்லமிட்டு
பக்குவமாய் பொங்கல் வைத்து...

குடும்பத்தோடு உறவுகளும்
கூடிக் களித்திடவே...
இந்நாளை நமக்களித்த
தை மகளுக்கு நன்றி சொல்வோம்...

பொங்கலோ பொங்கலென
கூடியே சொல்லிடுவோம்...
மங்களமாய் நம் வாழ்வு
மகிழ்ந்தே சிறக்கட்டும்...

              அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...


                                                                                                                         -'பரிவை' சே.குமார்.