மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : ஜமா

மா-

தன் அப்பாவை ஏமாற்றிப் பறித்துக் கொண்ட ஜமாவை - தெரு நாடகக் குழு - தான் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் தெருக்கூத்து ஆட்டக் கலைஞனான கதை நாயகன் அதில் வெற்றி பெற்றானா என்பதைக் காதல், ஏமாற்றம், தெருக்கூத்து, அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் எனக் கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.


இன்றைய தமிழ்ச் சினிமாவில் துப்பாக்கிச் சத்தங்களும், ரத்த ஆறும் ஓடும் நேரத்தில் தென்றலாய் இது போன்ற சில படங்கள் வருவது மகிழ்வும் ஆசுவாசமும் என்றாலும் இந்தப் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காதததும் கிடைத்தால் ஒரு காட்சி, இரவுக் காட்சி என்பதாய் இருப்பதும் கொடுமை. இப்படியான படங்கள் ஜெயிக்காத போது - அதாவது ஜெயிக்க விடாமல் தடுக்கப்படும் போது - இது போன்ற படங்களை இயக்க நினைக்கும் ஒரு சிலர் கூட ரத்தச் சகதிக்குள் சிக்கிக் கொள்ளத்தான் செய்வார்கள். அப்புறம் பக்கத்து மாநிலத்தைப் பார், அவன் வீட்டுக்குள் படமெடுக்கிறான் எனப் புலம்ப வேண்டியதுதான்.

ஜமா என்னும் அழகிய படத்தை, இசைஞானியுடன் சேர்ந்து கொடுத்த இயக்குநர் மற்றும் கதை நாயகனானா பாரி இளவழகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கதை நிகழிடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் கதை, வட தமிழகங்களில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்தை தங்களின் வாழ்வியலாகக் கொண்ட மக்களின், குறிப்பாக இரண்டு குடும்பங்களின் நெருக்கத்தையும், அதில் ஒருவனின் சதியையும், அந்தக் குடும்பங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளையும், அதில் பூக்கும்  காதலையும் மையப்படுத்திக் கதை நகர்கிறது.

தெருக்கூத்துதான் தென் தமிழகங்களில் நடத்தப்படும் கூத்து - நாடகம் - ஆகும். ஜமா விமர்சனம் ஒன்றில் தெருக்கூத்து என்பது தென் தமிழக மக்களுக்குப் பரிட்சையமில்லாத ஒன்று என்று எழுதியிருப்பதைப் பார்த்தபோது எதுவுமே தெரியாமல் பக்கங்களை நிரம்பும், தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதும் மனிதர்களை நினைத்துச் சிரிப்புத்தான் வந்தது.


வட தமிழக தெருக்கூத்துக்களுக்கு எனப் பெரிய திடல் - இடம் - எல்லாம் தேவையில்லை, ஒரு திரைச்சீலையைக் கட்டியோ அல்லது கட்டாமலோ கலைஞர்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு தெருவில் நாடகத்தை நடத்தி முடித்துவிடுவார்கள். அதிலும் குறிப்பாக தெருக்கூத்துக் கலைஞர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால் ஒப்பனைகளுக்கு இடம் தேடத் தேவையில்லை. ஆனால் தென் தமிழக கூத்துக்களுக்கு ஒரு மேடை, மேடைக்கு முன்னே மக்கள் அமர்ந்து பார்க்கப் பெரிய பொட்டல் தேவைப்படும். மேடையில் நாடகம் நடக்கும் இடமும்  நாடகங்களில் பெண்களும் நடிப்பார்கள். என்பதால் அதற்குப் பின்னே அடைக்கப்பட்ட ஒப்பனை அறையும் இருக்கும். பெரும்பாலான ஊர்களில் கூத்துமேடை என்பது அவ்வப்போது மேடை போட்டு, கொட்டகை போடுவதாக இல்லாமல் ஒரு அரங்கமாகவே கட்டப்பட்டிருப்பதை தென் தமிழக கிராமங்களுக்குப் போனால் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன் ஒரு சிறுகதை வாசித்தேன் - எம்.எம். தீன் எழுதியது என்று நினைக்கிறேன்- அதில் கரகாட்டக் கலைஞர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சாவு வீட்டில் ஆடப்போய் ஓப்பனை செய்வதற்காக ஒரு வீட்டுக்குள் போய் அவர்களால் விரட்டப்பட்டு மாட்டுக் கொட்டகையில் ஒப்பனை போடும்போது இளசு முதல் பெரிசு வரை அவர்களைச் சீண்டுவதையும், பிணம் தூக்கிப் போகும் போது ஆடும் அவர்களை அவர்கள் பாடாய் படுத்துவதையும், வீட்டாரின் சொத்துப் பிரச்சினையால் ஆடியதற்குப் பணம் கொடுக்காமல் போக, அவர்கள் வருத்தமுடன் திரும்புவதாய் கதை நகரும். 

இது கதை என்பதைவிட நடக்கும் உண்மை எனலாம். பெரும்பாலும் கரகாட்டக் கலைஞர்கள் ஒப்பனைக்கெனத் தனி இடம் இருப்பதில்லை, அப்படி அவர்கள் ஒப்பனை செய்யும் போது கிடுகுகளை நீக்கிப் பார்ப்பது எங்கும் நடப்பதுண்டு. இப்போதெல்லாம் எங்களுக்கு ஒப்பனை செய்ய நல்ல, பாதுகாப்பான இடம் வேண்டும் என அவர்கள் கேட்டாலும் அவர்கள் ஆடுவது ஆபாசமாகிப் போனதால் பல இடங்களில் கரகாட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில்லை. ஒரு நல்ல கலை அழிவை நோக்கிப் போய் விட்டது. அப்படியில்லாமல் , வட தமிழக தெருக்கூத்துக்களும் , தென் தமிழகக் கூத்துக்களும் இன்னும் உயிர்ப்போடு இருப்பது மகிழ்வான விசயம்தான்.

பெரும்பாலும் கூத்துக் கலைஞர்கள் முடி வளர்த்து, மீசையை எடுத்து விட்டுத்தான் எப்போதும் நடமாடுவார்கள். அவர்களின் நடை, உடை, பாவனை எல்லாமே அவர்கள் நடித்து நடித்து பழகிப்போன கதாபாத்திரமாகவே மாறிப் போய் இருப்பதை நாம் உணரலாம். பார்க்கலாம். அப்படித்தான் கதை நாயகனான கல்யாணம் மாறிப் போகிறான்.


அவனுக்கு பெண் வேடம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதற்கு அந்த ஜமாவை நடத்தும் தாண்டவத்தின் சுயநலம்தான் காரணியாய் இருக்கிறது. பெண் வேடமிட்டவனை ஊர் இளைஞர்கள் 'கல்யாணி அக்கா' என்று கேலி செய்ய, அவனும் பெரும்பாலும் வயதான பெண்கள் கூட்டத்தோடுதான் பெரும்பாலும் இருக்கிறான். அதுவே அவனின் அம்மாவுக்கு வருத்தமாக இருக்கிறது. அவனுக்குக் கல்யாணம் பண்ண அவள் செய்யும் முயற்சிகளை எல்லாம் அவனின் பெண் செய்கைகள் காலி செய்து விடுகின்றன. அதை நகைச்சுவையாகச் சொல்லியிருப்பார்கள்... படம் சோகமாய் பயணிக்கப் போவதற்கு முன் இது ஒரு ஆறுதல் என்றும் சொல்லலாம்.

நமக்கு எதாவது ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டால், அதன் மீதொரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டால் நம்மை அதில் இறுத்திப் பார்க்கச் சொல்லும் அப்படித்தான் வெறொரு ஊரில் நடக்கும் தெருக்கூத்துக்கு ஒரு கலைஞனை சைக்கிளில் கொண்டு போய் விடப்போய், அதில் ஈர்க்கப்பட்டு இரவில் விழித்தால் நடித்துப் பார்க்கும் நிலைக்குப் போய் தன் ஊரில் ஒரு கூத்துக் குழுவை, தாண்டவத்துடன் ஆரம்பித்து, அவனால் ஏமாற்றப்பட்டு குடிக்கு அடிமையாகி இறந்து போகிறான் நாயகனின் அப்பன் (ஸ்ரீ கிருஷ்ண தயாள்). அப்பனைப் போல் கூத்தின் மீது காதல் கொண்டு தானும் நடிகனாய் மாறிப் போகும் கதை நாயகனும், கூத்து வாத்தியாரான தாண்டவமும் தெருக்கூத்தை, அந்தக் கலைஞர்களை நம் கண் முன்னே நிறுத்தி விடுகிறார்கள். 

தனக்காக எல்லாம் செய்யும் கல்யாணத்தின் மீது காதல் கொண்டு , தன்னிடமிருந்து விலகிப் போறவனை விரட்டி விரட்டி வம்பிழுத்து, அவனைத் தன்னைப் பெண் கேட்டு வரச் சொல்லி, அப்பாவால் அவர்கள் கேவலப்படுத்தப்படும் போது அவனைத்தான் கட்டுவேன் என அவர்களுடன் செல்வதும், பின் கல்யாணி, எனக்கு கூத்துத்தான் முக்கியம் எனக் காதலைத் துறந்ததும் ஊரை விட்டு அக்கா வீட்டுக்குச் செல்வதும், இறுதியில் மீண்டும் வருமாய்.... ஜெகாவாகத் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் அம்மு அபிராமி.

நாயகனின் அம்மாவாக வரும் கேவிஎன் மணிமேகலை, பெண் நளினத்துடன் ஊரில் வலம் வரும் மகனுக்குத் திருமணம் பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டு, அது நடக்காமல் போனதுடன், கூத்தின் மீதான ஆர்வத்தில் தனியே ஜமா ஆரம்பிக்க ஆசைப்பட்டு தன்னிடம் பொய் சொல்லி நிலத்தை விற்று ஏமாந்து வரும் மகனால் வருந்தி உயிரை விடும் போது தன் ஆசையைச் சொல்லிச் சாகிறாள். அவளின் ஆசையை, அப்பன் கட்டிக் காத்த 'அம்பலவாணன் ஜமா'வைக் கைப்பற்றும் எண்ணத்தை நாயகன் செய்து முடித்தானா என்பதைப் பேசும் படத்தில் மணிமேகலையின் நடிப்பு சிறப்பு.

தன் வாழ்க்கையே கலைக்குத்தான் என வாழும் ஒருவனை, அதை விட்டு ஒதுக்கி வைத்தால் அவன் என்ன ஆவான்...? அவனின் வாழ்வு என்னவாகும்...? என்பதை மிக அருமையாகக் காட்டியிருக்கிறார்கள். 


இந்தப் படம் பற்றி விமர்சனங்களில் எல்லாம் கல்யாணம் ஆரம்பத்தில் இருந்து விரும்பி, ஏற்று நடிக்க நினைக்கும் அர்ஜூனன் பாத்திரத்தை இறுதியில் ஏந்தி புழுதி பறக்க ஆடியதையே பெரிதாக எழுதியிருந்தார்கள்.  அது பலரைக் கவர்ந்திருக்கலாம் ஏனென்றால் படத்தோட பிரதானமே ஜமாவைப் பிடிக்கிறேன் என்பதைவிட அர்ஜூனன் வேடம் என்பதாய்த்தான் இருக்கிறது, மேலும் அம்மாவின் ஆசையும் கூட அதுதான். அதனால் நமக்கு அந்தப் பாத்திரம் ஆரம்பம் முதல் மனதில் ஒட்டிவிடுவதால் அதுவே பிரதானமாக, மெய் சிலிர்க்க வைப்பதாகத் தெரிகிறது.

உண்மையில் படத்தில் கவர்ந்தது குந்தி வேடமே. அர்ஜூனன் கட்ட தயாராகிக் கொண்டிருப்பவனை, எப்பவும் போல் பாஞ்சாலி வேடம் கூட ஏற்க விடாமல் குந்தி வேடமேற்கச் சொல்வதுடன் அர்ஜூனனாக மேடையேறிவன் இந்த மேடையில் கர்ணனாகிறேன் எனக் குரூரமாய் நிற்கும் தாண்டவத்தின் முன்னே குந்தியாய் களம் இறங்கும் வரை வருத்தமும் ஏமாற்றமும் முகத்தில் ஒருங்கே கூடி நிற்க அமர்ந்திருந்து தனக்கான காட்சி வந்ததும் குந்தியாய் கலக்கி, ஒப்பாரிப் பாடலை ஏற்ற இறக்கத்துடன் வயிறை உள்ளிழுத்து கர்ணனான தாண்டவன் முன்னே பாடி நடிக்கும் போது அத்தனை பேரும் கலங்கி நிற்பார்கள். ஏன் தாண்டவத்தின் கண்களில் கூட நீர் கட்டி நிற்கும். பார்க்கும் நமக்கும்தான். படத்தின் உச்சம் என்றால் அந்த குந்தி வேசம்தான். சிறப்பு பாரி இளவழகன்... அறிமுக நாயகனாய், இயக்குநராய் எங்கும் தெரியவில்லை. கை தேர்ந்த நடிகனாய் கலக்கியிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து இது போன்ற சிறப்பான படைப்புகள் வரட்டும். தயவு செய்து ரத்தச் சேற்றில் இறங்கிவிடாதீர்கள்.

சட்டி முட்டிகளை உருட்டி, நாரசமாய் இசையை நம்முள் இறக்குவோர் மத்தியில் 'நான் என்றும் ராசாதான்' என நம்ம இளையராஜா அடித்து ஆடியிருக்கிறார். படத்தில் ஒரு பாடல் மட்டுமே என்றாலும் பின்னணி இசையில் மனிதர் பின்னிப் பெடலெடுத்துவிட்டார். ராஜா இல்லாமல் ஜமாவை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. இயக்குநர் செய்த முக்கியமான செயல் இந்தக் கதையை ராஜாவிடம் கொண்டு சென்றதுதான். தெருக்கூத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் சிறப்பு. கலை இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால், படத் தொகுப்பாளர் பார்த்தா, ஒலி வடிவமைப்பு செய்த ஏ.எம், செந்தமிழன் மற்றும் எஸ். செந்தில்குமார் ஆகியோரின் உழைப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்.


சேத்தனின் மனைவியாக வரும் சத்யா மருதாணி, பக்க வாத்தியமாய் இருந்து தாண்டவத்துக்கு தூபம் போட்டு, கல்யாணத்தைக் கேவலப்படுத்துபவராய் வருபவரும், கல்யாணத்துக்கு ஆதரவாய் இருக்கும் மனிதர் என படத்தில் நடித்த அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இன்னொரு விசயத்தையும் மெல்லத் தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அதாவது பணத்துக்காக வேலைக்கு அனுப்பும் -அடிமை- நிகழ்வு இன்னும் வட தமிழகங்களில் தொடர்வதையும் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு அழகான வாழ்வியலை திரையில் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் குறைகள் இல்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது, அழிந்து வரும் நமது கலையை வைத்து அவர்களின் வாழ்வியலைப் படமாக்கியிருப்பதற்காகவே அதையெல்லாம் மறந்து படத்தைப் பார்ப்பதில் தவறொன்றும் இல்லை.

இந்தப் படங்கள் எல்லாம் எல்லா மக்களிடமும் சென்றடைய வேண்டும். 

ஜமா படக்குழுவுக்கும் நடிக, நடிகர்களுக்கும் வாழ்த்துகள்.

சிறப்பான படம். கண்டிப்பாகப் பாருங்கள்.

-பரிவை சே.குமார்.

4 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு விமர்சனம்?  இதைப் படிக்காமல் இருந்திருந்தால் அந்தப் படம் பார்க்க வாய்ப்பு வரும்போது தாண்டிச் சென்றிருப்பேன்.  கட்டாயம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

ஸ்ரீராம். சொன்னது…

இந்தப் படம் போலவே இன்னொரு அழகான படம் வெளியாகி இருப்பதாக தெரிகிறது,. 

மின்மினி. 

அதுவும் நீங்கள் சொல்லும் ரத்தச்சகதிகள் இல்லாத படம் என்று விமர்சனத்தில் பார்த்தேன்.

ஸ்ரீராம். சொன்னது…

கரகாட்டம் என்பது அழகான கலை.  அதை இந்தக் காலத்தில் காசுக்காக ஆபாசம் ஆக்கி விட்டார்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம் - படத்தினை பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கிறது விமர்சனம்.