சனிக்கிழமை (27/07/2024) மாலையை இனிமையாக்கிய கேலக்ஸியின் இரண்டு நிகழ்வுகளில் முதலாவதாய் 'மூக்குக் கண்ணாடி' வெளியீடு முடிந்தபின் இரண்டாவதாய் எனது 'வாத்தியார்' சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நடைபெற்றது.
வாத்தியார் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் முதல் விமர்சனக் கூட்டம் நேற்றுத்தான் நடைபெற்றது. பாலாஜி அண்ணன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதில் மொத்தம் 13 கதைகள் இருக்கின்றன, அதிலிருந்து 'மண்புழு' என்னும் கதையைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன். மண்புழு என்ன செய்யும்... மண்ணுக்குள் வாழும், மண்ணைச் சாப்பிடும், அதற்குள்ளேயே மரித்துப் போகவும் செய்யும். அப்படித்தான் கிராமத்து மண்ணில் பிறந்து வளர்ந்து அங்கு தங்களது வாழ்வின் பெரும்பகுதியை கழித்த பெரியவர்களை அந்த மண்ணில் இருந்து பிடுங்கி வேறு இடத்துக்குக் கொண்டு செல்வதென்பது நடக்காத காரியம். அவர்கள் மண்புழுவைப் போல அந்த மண்ணில்தான் இருப்பார்கள். மண்புழுவை எடுத்து ஒரு தொட்டிலில் அல்லது ஏசி அறையில் வைத்து நாம் வளர்க்க முடியாது. அது மண்ணைத்தான் தேடிப் போகும். அப்படித்தான் இவர்களும் என்றெல்லாம் பேசி, முதியவர்களை இன்று நாம் வேலையின் காரணமாகத் தனிமையில் விட்டுவிடுகிறோம், அரவணைத்து வாழக் கற்றுக் கொள்வோம் என்றார். மேலும் மண்புழு கதையோட முடிவு தெரிய புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று சொல்லி, புத்தக விற்பனைக்கு ஒரு வழி ஏற்படுத்தித் தந்தார்.
மேலும் ஒரு எழுத்தாளனின் எழுத்தை நாம் இப்படி எழுதியிருக்கலாம்... அப்படி எழுதியிருக்கலாம் என்றெல்லாம் விமர்சிக்கக் கூடாது. இப்படியான வேலையை நான் முன்பு செய்திருக்கிறேன், இப்போது புரிந்து கொண்டேன். அவரின் எழுத்தை வாசித்து நமக்குப் பிடித்த, பிடிக்காதவற்றை மட்டும் சொன்னால் போதும் என்றார். என் கதைகள் குறித்துப் பால்கரசு பேசும் போது எப்போதும் தன் வாழ்வோடு இணைத்துப் பார்த்துக் கொள்வார். தான் கதைகளை வாசிக்கும் போது பல இடங்களில் கண் கலங்கியிருக்கிறேன் என்று அன்றைய மேடையில் மட்டுமல்ல நாங்கள் பேசும்போதும் சொல்லியிருக்கிறார். எனக்குத் தெரிய தீபாவளிக் கனவு கதையை இப்போது பேசினாலும் தன் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துக் கண் கலங்குவார். நேற்றும் பேசும்போது என் வாழ்வியலோடு என்று சொன்னபோது சற்றே உணர்ச்சி வசப்பட்டதை உணர முடிந்தது. பால்கரசுக்கு நன்றி.
அடுத்துப் பேச வந்தவர் சகோதரர் பிலால், இவரின் பேச்சு சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்து இருக்கும். வாத்தியார் என்னும் கதாபாத்திரம் பதிமூன்று கதைகளிலும் வருவதையும் அது பேசும் சமூகப் பிரச்சினைகளையும் பற்றிப் பேசி, தாய்முகம் என்னும் சிறுகதையைப் பற்றி விரிவாகப் பேசினார். அதில் காதல் திருமணம் செய்து கொண்டு போன ஒருவன் அவனின் அம்மாவின் இறப்பு, மனைவியுடன் வருவதும், அவர்களின் வருகையைத் தம்பி எதிர்ப்பதும், அப்பா சின்னவன் என்ன சொல்றானோ அதுதான் எனச் சொல்லிப் பேசாமல் இருப்பதும், தங்கை அண்ணனுக்காகப் பரிந்து பேசுவதும், அவன் அம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது 'தாய்க்குத் தலைமகன்தானேப்பா கொள்ளி வைக்கணும்' என்ற குரலைக் கண்டு கொள்ளாமல் அவன் செல்லும் போது வாத்தியார் அவன் முதுகில் தட்டுவதையும் இன்றைய சமூக நிகழ்வோடு இணைத்துப் பேசினார்.
வாத்தியாரின் அந்தத் தட்டுதலுக்குப் பின்னே இருக்கும் காரணி என்ன என்பதை மிகச் சிறப்பாக எடுத்துச் சொன்னார். அவரின் அந்தக் கதை பற்றிய புரிதலும் மற்ற கதைகளைப் பற்றி அவரின் பார்வையும் மிகச் சிறப்பாக இருந்தது. பழையன புகுதல் என்ற கதையில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பதையும், அவரின் மனைவி வாசித்த முதல் புத்தகம் வாத்தியார் என்பதைச் சொல்லித் தானும் தன் மனைவியும் பழையன புகுதல் கதையைப் பற்றி நிறைய விவாதித்ததாகவும் சொன்னார். சமூகம் மாறி வரும் வேளையில் இம்மாதிரி மீண்டும் பழமைக்குப் போவோம் என்று சொல்லும் கதைக்களம் எனக்குப் பிடிக்கலை என்பதாய் சொன்னார். இந்தக் கதை திருமணத்துக்கு இன்று மண்டபங்களுக்குச் செல்வதையும், அதுவும் தங்களிடம் இருக்கு என்பதைக் காட்ட, லட்சங்களில் மண்டபங்களைப் பிடித்து உறவுகள் பேருக்கு வந்து செல்ல, அடுத்த நாள் முகூர்த்தம் இருந்தால் மூன்று மணிக்கெல்லாம் அவசரம் அவசரமாக மண்டபத்தைக் காலி செய்து கொடுப்பதையும் தவிர்த்து உறவுகள் சூழ கிராமத்தில் திருமணம் செய்ய நினைப்பவரைப் பற்றித்தான் பேசியிருக்கும் எனவே சமூகம் முன்னேறிச் செல்வதை இக்கதை எந்த விதத்தில் தடுக்கிறது எனச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படிக்கமாட்டேன் எனச் சொல்லும் மாணவனின் தந்தை மார்க்கெட்டில் வாத்தியாரைச் சந்திக்கும் இடத்தில் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து கையில் வைத்துக் கொள்வதையும் அதற்கு வாத்தியார் பேசுவதும், படிக்க மாட்டேன் எனச் சொல்லும் மகனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என நினைக்கும் நீங்கள் நன்றாகப் படித்த மகளைப் படிக்க வைக்கவில்லையே என வாத்தியார் சொன்னதும் அந்த மனிதர் தன்னோட பேத்தியை நல்லாப் படிக்க வைப்பேன் எனச் சொல்வார். இதில் கல்வியின் முக்கியத்துவத்தை, அதுவும் பெண் கல்வியின் முக்கியத்துவத்துவம் சொல்லப்பட்டிருக்கும். இப்படி இவர் எழுதும் ஒவ்வொரு கதைக்குள் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சமூகக் கருத்து இணைந்தே வரும் என்று சொன்னார். பிலாலின் பேச்சு எப்பவுமே சிறப்பாக இருக்கும், வாத்தியாருக்கு அது மிகச் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சி, நன்றி.
எழுத்தாளர் ஹேமா நல்ல தோழி, கொச்சினில் இருந்தாலும் எங்களது நிகழ்வுகளில் எல்லாம் தான் வீடியோவின் வாயிலாகவாது கலந்து கொள்வார். வாத்தியார் நிகவுக்கும் அவர் ஒரு வீடியோப் பதிவு அனுப்பியிருந்தார். அது கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதில் நிச்சயித்த திருமணங்கள் குறித்து தனது மகளுடன் பேசியபோது நிச்சயித்து திருமணம் பண்ணும் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். அவைதான் சமூக மாற்றத்தை ஏற்ற்படும் என்றும் மகள் பேசியதாகச் சொல்லி, பிலால் பேசிய அதே கதையைப் பற்றித் தனது பாணியில் விரிவாகப் பேசியிருந்தார். பதிமூன்று கதைகளிலும் பயணிக்கும் வாத்தியார் கதாபாத்திரம் என்பது காளிதாஸின் மனைவியான வாத்திச்சிதான் என்று சொல்லியிருந்தார். அவர் பேசும்போது மறந்திருக்கலாம் காளிதாஸ் வாத்தியார்தான் இதில் எல்லாக் கதைகளிலும் பயணிக்கும் வாத்தியார் அவர் மனைவி அல்ல. ஊரிலிருந்து வீடியோவில் பேசிய அனுப்பிய ஹேமாவுக்கு நன்றி.
மேலும் வேரும் விழுதுகளும் நாவலில் வரும் கண்ணதாசனைப் பற்றியும், அந்த நாவலை வாசித்தபோது பல இடங்களில் தான் அழுததையும் சொல்லி, வேரும் விழுதுகளை கண்டிப்பாக வாசியுங்கள் என்றார். திருவிழா புத்தகம் குறித்துப் பேசும் போது அந்தப் புத்தகத்தின் மொத்தப் பக்கம் 700-க்கு மேல் இருந்த போதும் தசரதன் அப்படியே கொண்டு வருவோம் என்று சொன்னதையும், நான் வற்புறுத்தி நூறு பக்கங்களுக்கு மேல் குறைத்ததையும், புத்தகம் வெளியானபோது இந்தப் புத்தகத்தை வாசித்துப் பிடிக்கவில்லை எனத் திருப்பிக் கொடுத்தால் இதன் விலையின் இருமடங்கில் கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடுகளைத் தருகிறோம் எனத் தசரதன் விளம்பரம் செய்ததையும், அவரின் நம்பிக்கையையும் பற்றிச் சொன்னதுடன் அப்படியான் விளம்பரம் வேறு யாரும் செய்து நான் பார்த்ததில்லை என்றார், திருவிழா என்னும் பெயரை ஒரு மதிய நேர பாலை நிலத்து வெயிலில் நாங்கள் மூவரும் - நான், ராஜா, பாலா - ஒரு கட்டிடத்தின் கீழ் அமர்ந்திருந்த வேளையில் தான் சொன்னதையும் உடனே இதுதான் தலைப்பு எனத் தீர்மானித்ததையும் சொன்னார்.
வாத்தியார் புத்தகம் உருவாகும் முன் பாலாஜி அண்ணன் இந்த மாதிரி வேண்டும் எனச் சொன்னதையும், இந்த வார்த்தையை மதுரைப் பக்கம் பேசமாட்டோம்ப்பா என்று ஒரு வார்த்தையை மாற்றச் சொன்னதையும், ஒரு வாத்தியாரைப் போல் முஸாபாவில் ஒரு மலையாளி டீக்கடையில் அமர்ந்து வரிவரியாகத் திருத்தியதையும் நினைவு கூர்ந்தார். கேலக்ஸியின் வளர்ச்சியில் தாங்கள் எல்லாரும் இணைந்து செயல்படுவதையும் , போட்டிகளைச் சிறப்பாக நடத்துவதையும் சொல்லி முடித்துக் கொண்டார்.
இறைத்தேர் கதை குறித்து நான் பேசியே தீருவேன் எனச் சொன்னவர் அங்கு கதைகளை விடுத்து எங்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கம் குறித்துப் பேசினார். இறைத்தேர் குறித்த அவரின் பார்வையைத் தனியாகப் பகிர்ந்தால் மகிழ்வேன். நன்றி ராஜா.
அடுத்துப் பேச வந்தவர் எங்களுக்கெல்லாம் வாத்தியாரான சகோதரி ஜெசிலா பானு, கேலக்ஸியின் வளர்ச்சி குறித்துப் பேசியவர், தனது பணிக்கு இடையே பாலாஜி அண்ணன் இலக்கியம் சார்ந்து செயல்படுவதைப் பாராட்டியதுடன் கேலக்ஸியின் வாசகர் கூட்டத்தை மாதாமாதம் நடத்த இருப்பதைச் சொன்னார். தனது புத்தகத்தை வெளியிட்ட எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களைப் பாராட்டி வாழ்த்துச் சொன்னார்.
கதைகள் குறித்துப் பேசுவதற்கு முன் 'எல்லாரும் எழுதலாம்' என்று நான் சொன்னதை மறுத்து நிறைய வாசிப்பவர்களால் மட்டுமே எழுத முடியும் என்றார். இதைச் சொல்லத்தான் நான் மறந்திருந்தேன். அவர் சொன்னது சரி, வாசிப்பனுபவமும் மனிதர்களைப் படிப்பவர்களாலும் மட்டுமே நல்ல கதைகளை எழுத இயலும். நிறைய வாசிப்பதைவிட வாகனத்தில் பயணிப்பதால் நிறைய எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்கிறீர்கள் அதனால்தான் உங்களால் நாவல் எழுத முடிந்திருக்கிறது. நான் இன்னும் உங்கள் நாவலைப் படிக்கவில்லை அதை விரைவில் வாசித்துவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன் என்று திப்பு ரஹிமிடம் சொன்னார்.
எனது கதைகள் வட்டார வழக்கில் இருப்பதால், அதுவும் மதுரை வட்டார வழக்கு - செட்டிநாட்டுப் பேச்சு வழக்கு - என்பதால் புரிந்து கொள்வது தனக்கு மிகுந்த சிரமம் என்று சொன்னார். எதிர்சேவையை வாசிக்கும் போதெல்லாம் சுத்தமாப் புரியவில்லை என்றும், இப்போது கொஞ்சம் அந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டுள்ளேன் என்றும் சொன்னார். குறுக்க மறுக்க, சும்மா இருக்கியா, இளைச்சிப் பொயிட்டே போன்ற வார்த்தைகளை எல்லாம் நம்ம இதுக்கு இப்படிச் சொல்வோம், இவங்க இதுக்கு இப்படிச் சொல்றாங்க என ஒப்பிட்டுப் பேசினார்.
அன்பிற்கும் உண்டோ என்னும் கதையைப் பற்றிப் பேசும்போது, தன் மகள் வீட்டுக்கு, துபைக்கு வரும் வாத்தியார், அவளின் தோழி வராததையும் இதுவரை போன் கூடச் செய்யாததையும் குறித்து மகளிடம் விசாரிக்க, அவர்கள் இருவருக்கும் இடையில் தோழியின் வேலை போன கணவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்காமல், தன் கணவனின் நண்பனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு பற்றியும், அதன் பின் சுற்றி இருப்பவர்கள் சொன்ன அவள் இதைச் சொன்னாள், அப்படிப் பேசினாள் என்ற கட்டுக் கதைகளால் பேச்சுவார்த்தை சுத்தமாக அற்றுப் போனதையும் அறிந்து கொள்கிறார். போன் பண்ணிப் பார்க்கலாம் என்றால் மகள் வேண்டாம் அவள் பேசமாட்டாள் எனச் சொல்லி ஒத்துக் கொள்ளமாட்டாள். அவரோ ஒரு முறை பண்ணிப் பார்ப்போமே எனப் போன் செய்வார். இதைச் சொல்லி இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்கணும்ன்னா நீங்க வாத்தியாரை வாங்கிப் படிங்க என புத்தக விற்பனைக்கு இவரும் துணை புரிந்தார்.
எப்பவுமே எங்க வாத்தியாரம்மா இது ஏன் இப்படி, இந்த இடத்தில் இந்த வார்த்தை எதற்கு என்றெல்லாம் கண்டிப்புடன் கறாராக விமர்சனம் செய்வார். நேற்று அன்பிற்கும் உண்டோவில் அன்பு கவர்ந்ததால் கம்புடன் வரவில்லை போலும். விரிவான பார்வைக்கு நன்றி மேடம்.
இறுதியாகப் பேச வந்தவர் எழுத்தாளர் தெரிசை சிவா, எப்பவும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர் இவர். சுத்தமான தமிழில் ஆரம்பிக்கும் போதே ஆரம்பம் இப்படித்தான் இருக்கும் கொஞ்ச நேரத்துல நான் எங்களோட வட்டார வழக்குக்கு மாறிடுவேன் என்று சொல்லிப் பேச ஆரம்பித்தார்.
நான் வாத்தியார் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றாலும் எட்டு மாதங்களுக்கு முன் வாசித்தேன். இப்ப திருப்பிப் பார்க்க நேரம் இல்லாத வேலை, இந்த நிகழ்வுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதால் அலுவலகத்தில் வேலை நேரம் முடியும் முன்னரே சொல்லிவிட்டு இங்கு வந்திருக்கிறேன். எல்லாரும் பேசியதும் நாம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டுப் பேசிடலாம் என்பதால்தான் கடைசியில் பேசுகிறேன் என்று சொன்னேன் என்று ஆரம்பித்தவர் எந்த ஒரு நிகழ்வு குறித்து எழுதினாலும் விரிவாக, பேசியதை எல்லாம் அப்படியே எழுதுவார், எனக்கு வியப்பாக இருக்கும். அவரின் எழுத்தும் அப்படித்தான் வாழ்வியலைப் பேசும், எனக்கும் கூட சில இடங்களில் அயற்சியைக் கொடுத்தாலும் அதுதானே வாழ்வியல் அதை மிக அழகாகத் தன் எழுத்தில் கொண்டு வருவார்.
எனக்கு இந்த வாத்தியார் என்ற பெயர் ரொம்ப நெருக்கம், எங்க ஊர்ல கேசவன்னு ஒருத்தர் இருக்கார். அவர் ஆசாரி. அவரை நாங்கள் வாத்தியார் என்றுதான் சொல்வோம். மூணு நாளைக்கு முன்னால கூட அவரோடதான் இருந்துட்டு வந்தேன். நாம வருசம் ஒருமுறை ஊருக்குப் போவோமா... அவர் அந்த ஒரு வருச செய்திகளை எல்லாம் சேகரித்து நமக்கிட்ட அப்படியே கொட்டிருவார் எதையும் விட்டு வைக்கமாட்டார். அதே மாதிரி எந்த வேலை என்றாலும் என்ன ஏதுன்னு கேட்கமாட்டார். பண்ணிடலாம் என்பார். நம்ம வீட்டுல வேலை இருக்கு என்றால் போதும் வந்ததும் வேகமாக ஓட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை எடுத்து வாயில் அதக்கிக் கொண்டு இப்ப என்ன செய்ய ணும் என்று கேட்கும் மனிதர் அவர். ஒருமுறை எங்கள் வீட்டில் ஓடு மாத்தணும் என்று சொன்னதும் நாளைக்குப் பாத்துடலாம் என்றார். மறுநாள் விடியும் போது பார்த்தால் ஓடெல்லாம் காணோம், ராவோட ராவா வந்து கழட்டிட்டார். அப்படி ஓரு ஆள். எல்லா இடத்திலும் இருப்பார் என்றார்.
நேரம் இருக்குமானால் அவரைப் பற்றிய நிகழ்வு ஒன்றைச் சொல்லலாமா...? எனக் கேட்க, ரசித்துப் பேசுவதை யார்தான் கேட்கமாட்டார்கள்... பேசுங்கள் என்றதும் அந்த வாத்தியாரோட கதை ஒன்றைச் சொன்னார். நான் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் போது வாத்தியார் இளவட்டம். அப்ப ஊரில் ஒரு பண்ணையார் இறந்துவிட்டார். அவரது சின்ன மகன் வீட்டில்தான் அவர் இருந்தார். பெரியவன் அமெரிக்காவில் இருந்து வரணும் என்பதால் மூன்று நாட்களுக்கு ஐஸ் பெட்டியில் வைத்திருந்தார்கள். அவர் ஒரு மோதிரம் போட்டிருந்தார். அதை மூத்தவன் வருவதற்கு முன்னால் கழட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சின்னவனின் எண்ணம். மூணு நாள் ஐஸ் பெட்டியில் இருந்ததால் விரலெல்லாம் உப்பிப் போயிருச்சு. எவ்வளவு முயற்சித்தும் மோதிரத்தைக் கழட்ட முடியலை. இதைக் கழட்ட சரியான ஆள் யார் என்ற ஆலோசனையில் அதற்கு இவர்தான் சரிவருவார் என வாத்தியாரை முடிவு செய்தார்கள்.
வாத்தியார் கையில் கொரடுடன் வந்தார்... அவரிடம் காதும் காதும் வைத்த மாதிரி விபரம் சொல்லப்பட்டது. மோதிரமே தெரியலையேப்பா எப்படி எடுக்கிறது என்று சொன்னவரிடம், அதைக் காட்டுறோம், மெல்ல உறுவிரு எனச் சொல்லி பக்கத்தில் அழைத்துச் செல்ல, கொரடு கொண்டு வந்திருந்தாலும் விரல் உப்பியிருந்தால் அவராலும் கழட்ட முடியலை. முடியாதுப்பா என்று சொன்னவரிடம், ஐஸ்ல இருந்ததால குளியாட்ட அதிக நேரம் எடுத்துக்க மாட்டாங்க, நாங்க வேஷ்டியால் மறைக்கிற அந்த சில நிமிடத்துல உறுவிரு, வரலைன்னா வெட்டி எடுத்துரு எனச் சொல்ல, அவரும் அதே மாதிரி மோதிரத்தை எடுத்துக் கொடுத்துட்டார்.
அவரைக் கொண்டு போய் காரியம் எல்லாம் பண்ணிட்டு வந்தாச்சு. கிட்டத்தட்ட ஒன்னறை வருசத்துக்கு அப்புறம் எங்க வாத்தியாருக்கும் பண்ணையார் மகன் சின்னவனுக்கும் சின்னதாய் ஒரு வாய்த்தகராறு. சண்டையின் போக்கில் நீ சொன்னேன்னுதானே உங்கப்பன் விரலை வெட்டி, மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன் என்று சொல்லப் போக, அடேய் மோதிரத்தைக் கட் பண்ணி எடுடான்னு சொன்னா நீ எங்கப்பா விரலை வெட்டுனியான்னு சண்டை பெரிசாயிருச்சு எனச் சொல்லி முடிக்க எல்லாரும் ரசித்துச் சிரித்தார்கள். ஜெஸிலா மேடம் இதை அப்படியே கதையாக எழுதலாமே என்றார். சிவா இந்நேரம் எழுதியிருப்பார், அடுத்த சிறுகதைத் தொகுப்பில் ரசித்து வாசிக்க கண்டிப்பாக இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
எல்லாரும் நல்லாயிருக்குன்னே பேசிட்டா, நாம சொல்ல வேண்டியதையும் சொல்லணுமில்ல என்று சொல்லி, நான் எழுதும் கதைகளில் பெரும்பாலும் வில்லனெல்லாம் இல்லாமல் குடும்பச் சிக்கல்களைப் பேசும் என்பதை மனதில் கொண்டு, இப்படியே எழுதினால் எப்படி அப்பப்ப ரகுவரன், பிரகாஷ்ராஜை எல்லாம் இறக்கிவிடணும். அப்படி ஒரு கதை எழுதணும்ன்னு நேயர் விருப்பமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார். நன்றி சிவா.
பாலாஜி அண்ணன் ஒவ்வொருவரைப் பேச அழைக்கும் போதும் அவர்களைப் பற்றி சுவராஸ்யமான தகவல்களைச் சொல்லி அழைத்ததுடன் அவர்கள் பேசியதும் அவர்கள் பேசியதற்குப் பதில் சொல்லும் விதமாகவும் பேசியதிலிருந்து எடுத்துப் பேசி நிகழ்வை மிகச் சிறப்பாக, சுவராஸ்யமாகக் கொண்டு சென்றார்.
பிலால் அவர்கள் இரண்டு நிகழ்வுக்கும் சேர்ந்து நன்றியுரை வழங்கினார். அப்துல் அஹதி குறுநாவல் போட்டி பற்றி, ஆகாத தீதார் ஆசிரியர் ஆமினா பற்றி, கேலக்ஸியின் செயல்பாடுகள் பற்றி, ஒரு சிறு உரையாற்றி அனைவருக்கும் நன்றி சொன்னார்.
திருவாசகத்திற்கு தமிழில் மிகச் சிறப்பாக உரை எழுதி வைத்திருக்கும் பாலாஜி அண்ணனிடம் அதைப் புத்தகமாகக் கொண்டு வாருங்கள் எனச் சொன்னபோது, ஓராண்டுக்கு முன் எங்களிடம் மறுத்ததைப் போல் இப்போதும் மறுத்தார். என் ஆசைக்காக எழுதி வைத்திருக்கிறேன்... பல ஜாம்பவான்கள் எழுதிய உரைகள் இருக்கு இது எதுக்கு. அது போக இதை தட்டச்சுப் பண்ணி எடுக்குறது அவ்வளவு சுலபமில்லை. கூத்தாட்டு புத்தகத்துக்கு தட்டுச்சு செய்த தம்பி குமார் பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும், அவன் வேற இதையும் நமக்கிட்ட கொடுத்திருவானோன்னு யோசிப்பான் எனச் சொன்னார். விரைவில் அதைப் புத்தகமாக்கினால் எல்லோரும் மகிழ்வோம்.
திருப்திகரமான இரவு உணவுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது. அனைவரும் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். வீடியோவை - அவ்வப்போது போட்டோவும் - சகோதரர் ஸ்ரீஹரீஸ் பார்த்துக் கொள்ள, பால்கரசு, திலீப் போன்றோர் போட்டோக்கள் எடுத்தார்கள். அனைவருக்கும் நன்றி.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நாச்சியார் கதை குறித்து பிலால் பேசினார். அப்போது நாச்சியார் எதனால் செத்தாள் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் குழந்தைகள் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். நீ எதாவது வாங்கிக் கொடு என மாமனிடம் வாத்தியார் சொல்ல, அவன் அந்தக் குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது அம்மா இறந்தது இதனால்தான் என அந்தக் குழந்தைகள் சொல்லியிருக்க வேண்டும் என்றார். அப்படி சொல்லியிருந்தால் நாச்சியா என்னும் கதையின் முடிச்சு அவிழ்ந்திருக்கும் என்று நான் சொல்ல நினைக்கும் போதே, இதுதான் சரி... அப்படிச் சொல்லியிருந்தா இது பத்தோடு பதினொன்னாத்தான் இருக்கும் எனச் சிவா கதையை விளக்கினார். அந்தக் கதை நிகழ்வது நள்ளிரவில், அது ஒரு கிராமம், இரவு அந்த நேரத்தில் டீ, காபி, பிஸ்கெட் எங்கு போய் வாங்குவது...? ஆனாலும் கதையில் நாச்சியாவின் மகன் அம்மா அந்தக் கல்லுதான் என ஆரம்பிக்கும் போது பிரச்சினை வெடித்திருக்கும். இப்படியான கதை நகர்வில் செத்திருக்கிறாள்... கல்லில் விழுந்திருக்கிறாள் என்பதை மட்டுமே சொல்லி எழுதியதுதான் சரி என எனக்கும் தோன்றியது.
பிலால் எல்லாக் கதைகளையும் பற்றி விரிவாகப் பேச வேண்டும் என நினைத்திருந்தேன் என்று சொன்னார். ஒரு வீடியோவாகவோ அல்லது பதிவாகவோ தந்தால் மகிழ்வேன்.
நிகழ்வை மன நிறைவுடன் முடித்துவிட்டு எப்பவும் போல் கதை பேசியபடி நள்ளிரவில் அபுதாபி வந்து சேர்ந்தோம். அறைக்கு வந்து கூட்டிச் சென்று நள்ளிரவில் என் இருப்பிடத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு, முஸாபாவில் ராஜாவை கொண்டு சேர்த்து, அதன்பின் ஷாபியாவில் இருக்கும் தனது இருப்பிடத்துக்குச் செல்லும் பால்கரசுக்கு நன்றி எனச் சொல்லி நகர்ந்துவிட முடியாது. தொடரும் நட்பு எப்போதும் இப்படியே மகிழ்வாக இருக்கட்டும். ஆமா எங்க போனாலும் வந்து கூட்டிக்கிட்டுப் போகணும் சரியா.
வாத்தியார்ல இப்படி ஏன் எழுதினீர்கள்...? இது சரியில்லை...? இதெல்லாம் ஒரு கதையா...? இந்தக் கதாபாத்திரம் எதுக்கு...? என்றெல்லாம் பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவர்ந்த கதைகளில் அனைவரும் கரைந்து போனார்கள். அலசி ஆராய்ந்து சிறப்பான விமர்சனத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை மன நிறைவான மாலையாக இருந்ததில் மகிழ்ச்சி.
மனைவி இங்கு வந்திருக்கும் போது இந்த நிகழ்வை நடத்திவிட வேண்டுமென சகோதரர் சதீஷ் முயற்சி செய்தார். அது பாலாஜி அண்ணனின் உடல் நிலையால் நடவாமல் போனது. மனைவிக்கு அதில் வருத்தம். நேற்றைய நிகழ்வுக்குப் பின் நான் இருந்திருக்கலாம் என வருந்தினார். இதுவரை எனது புத்தக நிகழ்வுகள் எதிலும் அவர் கலந்து கொண்டதில்லை. வாய்ப்பிருந்தால் அடுத்த நிகழ்வில் அவரும் இருப்பார்.
வாத்தியார் புத்தகம் வெளியானதும் வாசித்து, எங்களை மதீனா சயீத் மாலுக்கு வரவழைத்து, அது குறித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் பேசி, எனக்கு வேஷ்டி, சட்டை இன்னும் சில பரிசுப் பொருட்கள் கொடுத்து, சரவண பவனில் சாப்பிட வைத்து அனுப்பிய சதீஷ் இந்த நிகழ்விற்கு வரமுடியாமல் போனதில் எனக்கு வருத்தமே. அவருக்கும் வருத்தம்தான். நிறையப் பேச வேண்டும் எனச் சொல்லியிருந்தார். நேற்றிரவு அமெரிக்காவில் இருந்து நிகழ்வு சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி எனச் செய்தி அனுப்பியிருந்தார். இங்கிருந்து போகும் போது 'காளையன்' நாவலை வாசித்தவர், இப்போது 'சாக்காடு' நாவலை வாசித்துக் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொண்டார்.
எனக்கு கேலக்ஸி சார்பாக பொன்னாடை போர்த்திய சகோதரர் ஸ்ரீஹரீஸ் அவர்களுக்கு நன்றி.
பேசிய, கலந்து கொண்ட அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.
அடுத்த மாதம் படித்ததைப் பேசுவோம் என்ற எங்களின் மாதாந்திரக் கூட்டம் வழி சந்திக்கலாம்.
நன்றி.
-பரிவை சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக