கடந்த வியாழன் அன்று ஏதாவது படம் பார்க்கலாமாண்ணே என்று எனது அறைத் தம்பி கேட்டதும் சரின்னு இந்தப்படம், அந்தப்படம் என ஒவ்வொன்றாய் கேட்க, சிம்பு ரசிகரான அவரோ 'பத்து தல' பக்கமாய் நின்றார். சரின்னு படத்தைப் போட்டுப் பத்து நிமிசம் இருக்கும் நமக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பிச்சிருச்சு. ஏசி குளிருக்கும் அதுக்கும் இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிட்டேன். அவர் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ரெண்டு மணி நேர நிம்மதியான தூக்கத்துக்குப் பின் விழித்துப் பார்த்தால் சிம்பு பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்னு உக்கார்ந்திருந்தார். அட என்னடா இது கொடுமையா இருக்கு, நாம படம் பாக்கலைன்னும் இவரு பிறந்தநாள் கொண்டாடமாட்டேங்கிறாரேன்னு யோசிச்சிக்கிட்டே சரிங்க நானும் பாக்குறேன் தலைவர் பிறந்தநாளை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடட்டும் என்றேன் தம்பியிடம். அவரோ அண்ணே நான் வந்து பாத்துக்கிறேன், இப்ப ஜிம்முக்குப் போறேன் நீங்க பார்த்து ரசிங்க என்றபடி கிளம்ப, நானும் சிம்புவை சோகத்தோட தனியே எதுக்குப் பாக்க அவரும் வரட்டும்ன்னு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்ன்னு சோகமா இருந்த சிம்புவை துரத்திட்டு கணிப்பொறியை மூடி வச்சிட்டுப் போயிட்டேன்.
அவரு வந்தவுடனே அண்ணே பாத்து முடிச்சிட்டீங்களா..? என்றார். இல்லங்க அந்தச் சோகத்தை தனியா வேற பாக்கணுமா என்றதும் போடுங்கண்ணே பார்த்து முடிச்சிடலாம் என்றார். மீண்டும் சிம்பு... சோகமான பிறந்தநாள்... மருமகள் செய்த பொம்மை மழையில்... அப்புறம் சோகம் தீர்ந்து பாட்டுப்பாடி ஆடி, கௌதம்மேனன் நெல்லைப் பாஷை பேசிக்கிட்டு ஆயிரம் பேரோட வந்துட்டாரு சிம்புவைக் கொல்ல... நடந்த சண்டையில முன்னால் குண்டு, முதுகுல குத்து எல்லாம் வாங்கிக்கிட்டு கௌதம் மேனன் உள்ளிட்ட எல்லாரையும் கொன்னு குவிச்சிடுறாரு.
போலீஸ் வந்து பிடிச்சிக்கிட்டுப் போக, இம்புட்டுக் கொலைக்கும் தூக்குத்தான்னு நினைச்சா... கிளம்பி கொஞ்ச நேரத்துல நடு ரோட்டுல முன்னாள் முதல்வரான உங்க தங்கை கணவரைக் கொன்றதற்கான சாட்சி இல்லாததால் நீங்க போகலாம்ன்னு இறக்கி விட்டுடுறானுங்க. துணை முதல்வரான கௌதம்மேனனையும் மற்ற ஆயிரம் பேரோட உடலையும் சேகரித்த போலீஸூக்கு சாட்சி இல்லை போல. தலைவர் கெத்தா நடந்து போக, ஹெலிகாப்டருக்கும் போலீஸ் இந்த இடத்துல இறக்கி விடுறோமுன்னு தந்தி கொடுத்துட்டாங்க போல, சரியா வந்து தலைவரைப் பிக்கப் பண்ணிக்கிட்டு கடலுக்கு மேல பறக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒருவேளை தலைவர் நித்யானந்தா மாதிரி தனித் தீவை வாங்கி வச்சிருப்பாரு போல... அங்க போய் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு போயிருப்பார்ன்னு நினைச்சிக்கிட்டென். அரைமணி நேரம் பாத்ததுக்கு நமக்குத் தலைவலிதான் மிச்சம்.
அப்புறம் ஐபிஎல், ஊருக்குப் போன், சமையல், சாப்பாடு, இடையில் புத்தக வாசிப்பு என எல்லாம் முடிந்து படுக்கலாம் எனக் கடையை மூடலாம்ன்னு பார்த்தால் அண்ணே நாளைக்கு லீவுதானே எதாச்சும் படம்... என ஆரம்பிக்க. ஏதாவது சண்டைப்படம் இல்லாட்டி க்ரைம் த்ரில்லர் பார்க்கலாம் என்று சொல்லித் தேட, மதியம் மாதிரியே நான் சொன்ன படங்களை எல்லாம் புறந்தள்ளி கன்னித்தீவில் நின்றார்.
கன்னீத்தீவைத் தட்டினால் வ(வீ)ரலட்சுமி நின்றார், ஆஹா இது நமக்குப் பெரும் சோதனையா இருக்கும் போலயே... இந்தப் படம் பார்க்கணுமா என்று கேட்டதும் அண்ணே, அட்வெஞ்சர், த்ரில்லர்ன்னு எல்லாம் போட்டிருக்கு என நின்றார். விதி வலியது என நினைத்துக் கொண்டே படத்தைப் போட்டால் ஆரம்பத்திலேயே ஒயின் ஷாப்பை மூடச் சொல்லிப் போராட, ஆத்தாடி இதைத் தொடரணுமா என அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். அவரோ பார்ப்போமுண்ணே என நன்றாக எழுந்து அமர்ந்தார். அதற்கப்புறம் ரோஜா சீரியலை விட மோசமாகப் பயணிக்க, அவர் மெல்லப் படுத்து போனை நோண்ட ஆரம்பித்தார். நான் பொறுமை காத்தேன்.
மெகா சீரியலை விட மொக்கைச் சீரியலாக மாறிக் கொண்டே வர, அண்ணே நிப்பாட்டுங்க போதும் இதுக்கு மேல படம் பார்த்தா தூங்க முடியாதுன்னு அவரோ போர்த்திக்கிட்டுப் படுக்க, நல்லவேளை நான் தப்பித்தேன் என கடையை மூடிட்டு தூங்கிட்டேன். இப்படியாக பெருநாளின் முதல்நாள் விடுமுறை கழிந்தது.
இரண்டாம் நாளான நேற்று இங்கு பெருநாள் என்றாலும் முன்பிருந்த இடங்களைப் போல் இப்போது தங்கியிருக்கும் தளத்தில் பெருநாள் கொண்டாட்டத்தில் திளைக்க ஆட்கள் இல்லை. வெளியில் பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டு விட்டுப் படுத்துவிடும் ஆட்களே அதிகம். நோன்பு காலத்தில் காலையும் மாலையும் கிச்சனில் சப்தமில்லாமல் இருந்ததை இத்தனை வருசத்தில் இந்த முறையே அனுபவித்தேன் என்பதால் நோன்பும் பெருநாளும் எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
நாங்கள் முதல் வைத்த மீன் குழம்புடன் முட்டை கோஸ் துவட்டலும் பாவக்காய் தொக்கும் வைத்துச் சாப்பிட்டுவிட்டு மதியம் அதே தம்பி படம் ஏதாச்சும் பாக்கலாம்ண்ணே என்றதும் மலையாள ரோமாஞ்சம் போட்டு விட்டு நான் தூங்கிவிட்டேன். நான் மலையாளத்தில் முன்னரே பார்த்த படம், சிறப்பான படம். தனியே எழுத வேண்டும். இரவு புட்டு சாப்பிட்டுவிட்டு காலையில் பார்த்துப் பாதியில் விட்டிருந்த பாசமலர் படத்தைப் பார்த்து முடித்து விட்டுப் படுத்தேன்.
இந்த விடுமுறையில் ஏதாவது எழுதலாம் என்ற எண்ணம் தோன்றி இன்று மூன்றாவது நாள் இதுவரை எதுவும் எழுதவில்லை. இன்றும் நாளையும் ஏதாவதொன்றை எழுதவோ திருத்தவோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. செய்ய வேண்டும்.
-பரிவை சே.குமார்
1 எண்ணங்கள்:
முடிவில் நிம்மதி...
கருத்துரையிடுக