ALT + 2
பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அண்ணனின் சிறுகதைத் தொகுப்பு.
இதில் மொத்தம் 25 கதைகள் இருக்கின்றன. சின்னச் சின்ன கதைகளாய் இருந்தாலும் மிகச் சிறப்பான முடிவோடு, குறிப்பாக எதிர் பார்க்காத முடிவோடு இருக்கின்றன. இதில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாணியில் இருக்கின்றன. குடும்ப, சமூக. அறிவியல், வரலாறு என எல்லாப் பக்கமும் பரந்து விரிந்து எழுதப்பட்டிருக்கின்றன.
'தந்தை சொல் மிக்க' என்பதை நாங்கள் குறுநாடகமாகப் பார்த்திருக்கிறோம். மகனின் ஆசையை விட தனது எண்ணத்தை மகனின் மீது திணிக்க நினைக்கும் அப்பா எப்படி, எதனால் திருந்துகிறார் என்பதைச் சொல்லும் கதை.
அறிவியல் புனைவான 'யயாதி' சிறுகதை பல நூறு ஆண்டுகள் மன்மதனாய் வாழும் ஒருவன் தன் வாழ்வு தொடர் ரத்தம் மாற்ற வேண்டுமென கேட்டதற்கு மகன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறான். அவனது மகன் எடுக்கும் முடிவுதான் கதையின் திருப்பம்.
'கைவண்ணம்' சிறுகதை நண்பன் மீதான கோபத்தை மாற்ற வைக்கும் டீக்கடை சம்பவத்தையும், 'படுக்கை' சிறுகதையோ மரணப் படுக்கையில் கிடக்கும் கிழவனைத் தன்னைப் படுத்திய பாட்டுக்காக கொல்ல வருபவள் பலி வாங்கிச் சிகண்டியாகத் திரும்புகிறாள். தன்னோட கால்குலேட்டரைத் தொலைத்துவிட்டு எடுக்காதவன் மீது பழியைப் போடுவதில் அவன் படிப்பை நிறுத்தி விடுவதையும், 'உங்கட நாடு எங்களுக்குப் பண்ணியதை நீங்கள் தனி ஒருவனுக்குச் செய்திருக்கிறீர்கள்' என்ற கடைசிப் பாரா இலங்கைத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்திருக்கிறது 'கால் குலேட்டர்'.
காதலுக்காக மாத்திரைகளைக் சாப்பிட்டு மருத்துவமனையில் கிடப்பவைக் காண வேண்டி அழைத்து வருபவள் அங்கே நடந்து கொள்வதும் காலம் கடந்தபின் அவளைக் காணும் போது அவளது கணவனைப் பார்த்து ஆச்சர்யப்படுவதையும் பதிவு செய்திருக்கிறது 'நாற்பது மாத்திரைகள்'. சில தமிழ் சினிமாவில் இதுதான் கதை என ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே புரிந்து கொள்வதைப் போல இவனைத்தான் கட்டிப்பா என்பதும் வண்டியில் போகும் போது நமக்குத் தெரிந்துவிடுகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் தடைசெய்யப்பட்டதை காதலை ஆராய்ச்சி செய்ததற்காகவும் அரசு அனுமதியில்லாமல் ஈஸ்ட்ரோஜனைப் பயன்படுத்தியதற்காகவும் கைது செய்து தண்டனை வழங்கும் கதைதான் 'அவன் அவள் கெமிஸ்ட்ரி' இதுவும் ஒரு அறிவியல் புனைவு என்று சொல்லலாம். இதேபோல்தான் இரு வேறு உலக மனிதர்களைப் பற்றிப் பேசும் 'அக்னிக் குஞ்சு'. 'இரண்டும் ஒன்றும்' நீண்ட நாட்களுக்குப் பின் ஊருக்குத் திரும்பும் கணவனைக் காண காத்திருக்கும் மனைவிக்கு கிடைக்கும் அதிர்ச்சியைச் சொல்லும் கதை.
'காட்டுவழி' - சாதாரண மனிதர்களாய் காட்டுப் பாதையில் பயணிக்கும் மனிதர்கள் சோழப்பேரரசின் வந்தியத் தேவன், அருண்மொழி தேவர் என்பதாய் முடிகிறது. வரலாற்றை வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை. 'கடன் அட்டை' - இது கிரிடிட் கார்டால் ஒருவன் எப்படிப் பாதிக்கப்படுகிறான் என்பதைப் பேசுகிறது. 'காமத்திற்கும் கண் உண்டு' என்ற கதை இன்று நான் ஒருத்தியுடன் இருக்கப் போகிறேன் என்ற நினைப்போடு அவளை விமான நிலையத்தில் போய் கூட்டி வருபவன் அவள் அறைக்கு அழைக்கும் போது மறுத்து கற்போடு திரும்புவதைப் பேசும் கதை.
'நம்பிக்கை' - ஒருவனுக்கு இருக்கும் காதல், வேலை, தங்கையின் திருமணம் குறித்த பிரச்சினைகளைப் பேசி, அவன் எதிர்பார்க்காத ஏதோ ஒரு பிரச்சினையால் பாதிக்கப்படுவதைப் பற்றிப் பேசியிருக்கிறது. 'மந்தைச் சிங்கம்' - ஒருவனின் வேலை இழப்பையும் கம்பெனி எப்படி முடிவெடுக்கும் என்பதையும் அவனின் மன உறுதியையும் பற்றிப் பேசியிருக்கிறது. 'இலவசம்?' - என்பது துறைமுகத்தில் இருந்து வெளியாவதில் இருக்கும் சிக்கலைப் பற்றிப் பேசப் போன இடத்தில் முதலாளியின் தாயாரின் நிலை, அவரின் வலியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.
'அசைவு' - என்னும் கதை மேடம் லூயிஸின் மெழுகுப் பொம்மைகள் பிரபலம் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். அதைப் பற்றிய டாக்குமெண்டரியைப் பார்த்த பின் ஆடிப்போய், அதைப் பற்றி ஆராய்ந்து எழுதிய முதல் சிறுகதை என்று சொல்லியிருக்கிறார். மனதை உறைய வைக்கும் கதைக்களம் இது. 'சீட்டு மாளிகை' - விமான விபத்தையும் அதில் வீட்டிற்குச் சொல்லாமல் பயணித்த நண்பன் என்ன ஆனான் எனத் தேடி முடிவில் கிடைக்கும் விடையுடன் முடிகிறது.
'திறமைக்குப் பல முகம்' - சுனாமியின் கோர முகம் எத்தனை திறமைசாலிகளைக் கொண்டு போயிருக்கும் என்பதை வீரமணி என்பவனை வைத்துச் சொல்லியிருக்கிறார். 'தேர்தல் 2060' - தேர்தலைப் பற்றிப் பேசி, ஓட்டுப்போட பூவா, தலையா போட்டுப் பார்ப்பதில் முடிந்திருக்கிறது. 'பெண்கள் வாழ்கவென்று' - தொழில் போட்டியில் தனக்குக் கிடைக்காதது அவர்களுக்கு கிடைத்து விட்டதே என பங்குதாரர்களாய் இரு பெண்கள் நடத்தும் கம்பெனியை உடைக்கும் கதை, 'இரு சம்பவங்கள்' - அப்பனைக் காப்பாற்ற ரத்தம் கொடுத்தவன் மதம் என்று வரும்போது மகனைக் கொலை செய்வதைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.
'திரைகடல் ஓடியும்' - தற்கொலை செய்ய நினைப்பவனை மாற்றும் சம்பவத்தைப் பற்றிப் பேசியிருக்கிறது. 'இரட்டைக் கையுறை' - வாடகைத் தாயாய வருபவளுக்கு எய்ட்ஸ் இருப்பதால் அவளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை நீ வளர்க்க வேண்டாம் எனச் சொல்லும் டாக்டர் நண்பனையும் அம்மாவின் தப்புக்கு பிள்ளைகள் என்ன செய்வார்கள், என்ன இருந்தாலும் அவர்கள் என் ரத்தமல்லவா..? எனச் சொல்லும் தகப்பனையும் பற்றிய கதை. சிறப்பான கதை.
'அங்கே இப்போ என்ன தேதி?' காலச் சக்கரத்தில் முன்னே பயணித்து பேச முடியுமா என ஆராய்ச்சி பண்ணுபவன் ஒரு பெண்ணுடன் போனில் பேசுவதையும் அவனே நேரடியாக வரும் போது ஏற்படும் அதிர்ச்சியையும் பற்றியது.
பெரும்பாலான கதைகள் ரொம்பச் சின்னக் கதைகளாய் இருந்தாலும் நிறைவாய் இருக்கின்றன.
பினாத்தல் சுரேஷ் அண்ணனின் 'கரும் புனல்' நாவலின் வாசிப்பு கொடுத்த ஆவலில்தான் ALT + 2-வை வாங்கி வாசித்தேன். எழுத்து ஏமாற்றவில்லை. சிறப்பான புத்தகம்.
'இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் சிறுகதை இலக்கியத்தைச் சற்றும் மீறாமல் விறுவிறுப்புத் தன்மை குன்றாமல் எழுதப்பட்டிருக்கின்றன' என இந்தப் புத்தகத்தை வெளியிட்ட கேலக்ஸி பதிப்பகத்தின் பாலாஜி பாஸ்கரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
'வாத்தியார் சுஜாதாவின் எள்ளல், கதை சொல்லும் த்வனி வழியே நமது சிறுவயது முதல் தொடர்கிற வாசிப்பின் விலாசத்தை சொல்லாமல் சொல்லி விடுகிறார் எழுத்தாளர்.' என்றும் 'பூங்காவில் அசைந்தாடிக் கொண்டு இருக்கும் ரோஜாக்கள் வசீகரம் தான். நமது தோட்டத்து மல்லிகைப் பூவை விடவா?' என்றும் தனது நீண்ட அணிந்துரையில் சசி. எஸ்.குமார் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
வாங்கி வாசித்துப் பாருங்கள்... நல்லதொரு சிறுகதைகளை வாசித்த அனுபவம் கிடைக்கும்.
----------------------------
Alt + 2
கேலக்ஸி பதிப்பகம்
விலை ரூ. 250
www.galaxybs.com
admin@galaybs.com
2 எண்ணங்கள்:
வித்தியாசமாய் எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. சுவாரஸ்யமாய் இருக்கும் என்று தெரிகிறது. நல்லதொரு அறிமுகம்.
அருமை குமார்...
கருத்துரையிடுக