மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 13 ஏப்ரல், 2023

சினிமா விமர்சனம் : அயோத்தி (தமிழ் - 2023)

யோத்தி-

மனிதமும் மனிதநேயமும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை வலிமையாக வலியுறுத்திச் சொல்லியிருக்கும் படம்.

மொழி தெரியாத ஒரு இடத்தில் வந்து மாட்டிக்கொள்ளும் போது படும் அவஸ்தை எப்படி இருக்கும் என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருப்போம். அப்போதெல்லாம் எப்படியோ சமாளித்துப் பேசி, எப்படியோ நமக்கானதை நிறைவேற்றிக் கொண்டு மீண்டு வந்திருப்போம்.

இந்தப் படத்தில் இறந்த உடலை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் கலந்த உணர்வுடன் 'பையா ப்ளீஸ் ஹெல்ப்' என்ற வார்த்தைகளைக் கண்ணீரோடு சொல்லி, அடுத்த நொடி என்ன நிகழும் என்ற பயம் உறைந்த விழிகளில் உறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் கண்ணீரோடு ஒரு இளம்பெண் எதிர் கொள்ளும் சூழலை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

தானென்ற அகம்பாவமும் அடிப்படை வாதமும் கொண்ட, மத நம்பிக்கையின் மீது தீவிரமான பற்றும் கொண்ட  ஒருவன் தனக்குப் பயந்து, தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அடிமை மனநிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை வைத்திருப்பதை அப்பட்டமாக, அற்புதமாக நமக்குள் நகர்த்தி விடுகிறது படத்தின் ஆரம்பக் காட்சிகள். அத்தனை மகிழ்வாக இருக்கும் வீடு அந்த மனிதனின் உள் நுழைந்த உடன் சுடுகாடு போல் மாறிவிடுகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கித் தவிப்பதை அழகாய் படம்பிடித்துக் காட்டிவிடுகிறது.



'என்ன பண்றே..?', 'எத்தனை மணிக்கு வந்தே..?'. 'காபி சூடா இல்லை, அப்பறமா இன்னொரு காபி கொடு', 'உன்னைய நானா படிக்கச் சொன்னேன்' என அவர் வீட்டாருடன் பேசும் வார்த்தைகள் எல்லாமே அவர்களின் மகிழ்விழந்த மனசுக்குள் நெருப்புப் பந்தாகத்தான் தைக்கிறது. அப்படிப்பட்ட மனிதர் ஒரு தீபாவளி நாளில் தன் குடும்பத்துடன் இராமேஸ்வரத்துக்கு வருகிறார். 

மதுரை இரயில் நிலையத்தில் இறங்கிய பின்னும் அதே ஆணாதிக்கம் தொடர்கிறது. வாடகை காரில் பயணிக்கும் போது டிரைவருடனான மோதலில் ஏற்படும் விபத்து, அவர்களின் பயணத்தை மாற்றிப் போட்டுவிடுகிறது. இறந்த உடலை வைத்துக் கொண்டு அவர்கள் எப்படி ஊர் போய்ச் சேர்ந்தார்கள் என்பதைச் சொல்லும் கதையோடு நாம் பயணிக்கும் போது பல இடங்களில் நமக்கும் கண்ணீர் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மதுரை மருத்துவனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்றதும் அந்தப் பெண் 'பையா...' எனக் கதறி உதவி கேட்க்கும் இடம், பிரேதப் பரிசோதனை செய்யும் உதவியாளர் காசு கேட்கிறான் என்பதை பேச்சை வைத்துப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவனின் முகத்தை, செய்கையை வைத்துப் புரிந்து கொண்டு, கோவிலில் செலுத்தக் கொண்டு வந்த தான் சேமித்த உண்டியலை உடைக்கும் இடம், அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டு உதவி செய்ய வந்த இருவரும் கிளம்பியபின் அடுத்து என்ன செய்ய என்பதாய் கண்களில் பயம் காட்டி நிற்கும் இடம், அம்மாவின் சேலையை எடுத்துக் கொடுக்கும் இடம், இறுதிக் காட்சியில் அந்தச் சிறுவன் கையெடுத்துக் கும்பிடும்போது சசிக்குமார் வேகமாய் அந்தக் கைகளைப் பிடித்துத் தளர்த்தும் இடம் என நிறைய இடங்களில் அழ வைத்து விடுவார்கள்.

படத்தில் ஹிந்தி மட்டுமே பேசத் தெரிந்த நாயகி (ப்ரீத்தி அஸ்ரானி) , விபத்துக்குப் பின் கண்ணீரோடு, பயத்தோடு, மருங்கமருங்க விழுத்தபடி, கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே உதவி கேட்டு நிற்கும் போதெல்லாம் அநாயாசமாய் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி நடிப்பில் மிளிர்கிறார். அவரின் நடிப்பு அத்தனை எதார்த்தமாய். சிறப்பாக நடித்திருக்கிறார்.

சசிக்குமாரைப் பொறுத்தவரை உதவி செய்பவராய் நடித்தால் எப்பவுமே கலக்கல்தான். இதில் அவருக்கு ரொம்ப உணர்ச்சி வயப்பட்டுப் பேசும் காட்சிகள் எல்லாம் இல்லை என்றாலும், 'டேய் அவ என்ன சொல்றான்னு தெரியலடா... ஆனா உதவி செய்யச் சொல்றாங்கிறது மட்டும் புரியுது' எனச் சொல்லித்தான் அவர்களுக்கு உதவ வருகிறார். அவர்களை அனுப்ப அந்த ஒருநாளில், அதுவும் தீபாவளி நாளில் ஏழு சான்றிதழ்களைப் பெற அவர் எடுக்கும் முயற்சிகள்... ஒவ்வொரு முறையும் 'பையா' என்ற கண்ணீரோடு அந்தப் பெண் கும்பிடும் போதெல்லாம் முகத்தில் வலி சுமந்து தன்னால் இயலவில்லையே என்ற கழிவிரக்கம் கொண்டாலும் முயன்றால் முடியும் என்ற நம்பிக்கையோடு நகரும் போதெல்லாம் சசிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல நடிப்போடு, சிறப்பான ஒரு படம் கிடைத்த மகிழ்ச்சியும்.

'அண்ணே அக்காவுக்கு ஜாக்கெட்' என வரும் புகழ், இந்தப் படத்தில் படம் முழுவதும் நாயகனுடன் பயணிக்கிறார். சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக ஆணாதிக்கவாதியாக, மனைவி இறந்த போதும் கண்ணீர் சிந்தாத கல்நெஞ்சக்காரனாக, என் மதநம்பிக்கையின் படி பிரேதப் பரிசோதனை பண்ணக் கூடாது எனச் சண்டையிடுபவராக மிக சிறப்பான, நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கும் யஷ்பால் சர்மா, இறுதிக் காட்சிகளில் தன் தவறை உணர்ந்து வருந்தி நிற்கும் இடத்தில் நம்மை ஈர்க்கிறார்.

அந்தத் தீபாவளி நாளில் தலை தீபாவளிக்கு மகள் வந்திருக்கும் போதும் உதவி கேட்டு வந்து நிற்கும் சசிக்குமாருக்கு பிரேதத்தைக் கொண்டு செல்லும் பெட்டியை, பணம் வாங்காமல் கொடுப்பதுடன் விமானத்தில் கொண்டு செல்வதற்கான பேப்பர்களையும் பெற்றுக் கொடுக்கும் போஸ் வெங்கட், பைக்கை விற்று டிக்கெட் போட்டுக் கொடுக்கும் கல்லூரி வினோத் மற்றும் உதவி செய்யும் நண்பர்கள் என எல்லாருமே அவரவர் கதாபாத்திரத்துக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள்.

எல்லாமே நல்லாயிருக்குன்னா... சில நெருடல்களும் இருக்கத்தான் செய்கிறது. 


மதுரை ரயில்வே நிலையத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் எனச் சொல்லும் பெண்ணைத் திட்டிக் கூட்டிக் கொண்டு போய், விபத்து, ராமநாதபுரம் மருத்துவமனை, மதுரை நோக்கிப் பயணம் என அலைந்து மதுரையை ஒட்டிய ஓரிடத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு வரும்போது அவளே 'கழிவறை எங்கே இருக்கு' எனக் கேட்டுப் போவதாய் காட்டுவதெல்லாம் பார்ப்பவருக்குப் பச்சாதாபம் வரவேண்டும் என்பதற்காகத்தான் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா..?

தன் எதிரே சிறுவன் ஒருவன் உண்டியலை உடைத்து அதிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்கும் போது எப்படிப்பட்ட மனிதனும் வாங்க மாட்டான். அப்படியிருக்க அந்த பிரேதப் பரிசோதனை உதவியாளர் அதை வாங்குவதாய் காட்டுவதெல்லாம் நான் மட்டும் நல்லவன் சுற்றியிருப்பவரெல்லாம் கெட்டவர்கள் என்பதைக் காட்டவே எனச் சொல்லத்தான் வேண்டுமா..?

காவலர்களுக்கு வரும் மாமூல் தீபாவளி ஸ்வீட், வெடிகள் எல்லாம் ரெண்டு மூணு நாள் முன்னரே வந்துவிடாதா..? தீபாவளி அன்றுதான் கொண்டு வந்து கொடுப்பார்களா..?

காவல் நிலையத்தில் காவலர்கள் அடாவடியாக நடந்து கொள்வார்கள், யாரையும் மதிக்கமாட்டார்கள் என்பதை நாமே பார்த்திருப்போம் என்றாலும் தீபாவளி அன்றைக்கு சிலரைப் பிடித்துக் கொண்டு வந்து பாட்டுப் பாடச் சொல்லி ரசிப்பார்களா..? அந்தப் பாட்டு தேவையே இல்லாத ஆணி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா..?

காவல் நிலையத்தில் உன் பெயர் என்ன என்று கேட்காமலா இருப்பார்கள்..? இறுதிவரை பெயரைச் சொல்லாமல் இறுதியில் சொல்வது சமீபத்திய தமிழ் படங்கள் பயணிக்கும் அதேபாதைதான் என்றுதான் தோன்றியது. அந்தப் பெயர் மாணிக்கமாகவோ, மாலிக்காகவோ, டொமினிக்காகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதை ஆரம்பம் முதல் உதவி செய்யும் ஆட்களில் ஒருவர் கூடக் கேட்கவில்லை என்பதுதான் வேடிக்கை.

யாரென்றே தெரியாமல் ஆம்பூலன்ஸை எப்படிக் கொடுப்பார்கள்...? கொடுத்த ஆம்பூலன்ஸில் அயோத்தி வரை போகிறேன் என்று சொல்வதெல்லாம் வேற லெவல் இயக்கம்தான்.

இப்படி நிறைய குறைகள் இருந்தாலும் மனிதநேயத்துடன் பயணிக்கும் கதை நம்மை ஈர்த்துக் கொள்வதால் 'அயோத்தி' பார்த்து முடிக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

என்.ஆர். ரகுநந்தனின் பின்னணி இசையும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம். 

ஆர். மந்திரமூர்த்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸின் ஆர். ரவீந்திரன் தயாரித்திருக்கிறார்.



தான் எழுதிய உண்மைக் கதையைத்தான் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து அதற்கெனத் தீவிரமாகப் போராடி, தன் பெயர் வர வேண்டியதில்லை என்றாலும் அந்த நேரத்தில் உதவிய நண்பர்களுக்காவது நன்றி தெரிவித்திருக்க வேண்டுமென இயக்குநருடனான சந்திப்பில் திரு. மாதவராஜ் அவர்கள் சொன்னபின் ஓடிடி தளத்தில் வெளியான அயோத்தியில் அதைச் செய்திருக்கிறார்கள், அனைவருக்கும் வாழ்த்துகள்.

நல்ல படம், குடும்பத்துடன் பார்க்கலாம்.

***

டைப்பு ஹைநூன்பீவி சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது கதையை வாசித்து, முடிந்தால் தங்கள் கருத்துக்களையும் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன். பதிவுக்குச் செல்ல சுட்டி கீழே...

https://padaippu.com/submitted/hainoonbeevi2023/184

-பரிவை சே.குமார்.

 

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல விமர்சனம்... பார்க்க வேண்டும்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார், உங்கள் விமர்சனம் வழக்கம் போல் சூப்பர். எல்லாருமே படம் நல்லாருக்குன்னு சொல்றாங்க. வாய்ப்பு கிடைக்குதான்னு பார்ப்போம்..

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

கதை மாதவராஜா?  படத்தில் எஸ் ராமகிருஷ்ணன் என்று பார்த்த ஞாபகம்.  எஸ்ரா பக்கத்திலும் தேடினேன்.  எங்காவது கதையாய்க் கிடைத்தால் படிக்க ஆர்வம்.  மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆவல்.  நானும் படம் பார்த்து நெகிழ்ந்து கண் கலங்கினேன்.  ஒரு விமர்சனமும் எழுதி இருந்தேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா.

ஆம் அண்ணா. மாதவராஜ் அவர்கள் வங்கியில் பணி செய்யும் போது அவர் சார்ந்த அமைப்பில் உள்ள வடநாட்டவர்கள் இப்படி வந்து மாட்டிக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு உதவச் சொல்ல, அவர் அவரது நண்பர்கள் இருவரை வைத்து இறந்த உடலை இத்தனை சிரமங்களை அனுபவித்து அனுப்பியிருக்கிறார். இதை அவர் உண்மை நிகழ்வாக தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தாராம். படம் வெளியானதும் இது எனது கதை எனப் போர்க்கொடி தூக்கி, முகநூலில் தொடர்ந்து எழுதி, எஸ்.ராவிடம் பேச முயற்சித்து தோல்வியில் முடிய, அவரது கதைதான் என திரைக்கதை எழுதிய உதவி இயக்குநரும் கை கோர்க்க, தொடர்ந்து போராடி இறுதியில் மந்திரமூர்த்தியைச் சந்தித்துப் பேசி, ஓடிடியில் வெளியானபோது உதவிய தன் நண்பர்களுக்கு நன்றி எனப் போட வைத்தார். சமீபத்தில் சினிமாவில் கதை திருட்டு என்பதை பிரபல எழுத்தாளர்களே செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கேட்டால் நான் உட்கார்ந்து யோசித்து எழுதினேன் என்று சொல்கிறார்கள்.

உங்கள் பக்கத்தில் அயோத்தி விமர்சனம் பார்த்தேன். சிறப்பு. என்னால் யாருக்கும் கருத்திட முடியவில்லை. என் கூகிள் அக்கவுண்ட் திறப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை. சிலருக்கு மட்டும் அநாமதேயமாக கருத்திட முடிவதுண்டு. உங்கள் தளத்தில் அதுவும் முடியலை.

நல்ல படம். நன்றி.