அழகர் கோவில்-
எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொண்ட ஆய்வு நூலாகும். நமக்கெல்லாம் அழகர் கோவில் மதுரையில் இருக்கிறது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரும் திருவிழாவும் மட்டுமே தெரியும், சிலருக்கு இன்னும் கூடுதலாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.
இது நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்த புத்தகம், சமீபத்தில்தான் BYNGE புண்ணியத்தில் வாசிக்க முடிந்தது. வாசிக்க வாசிக்க அழகர் கோவில் குறித்தான பல அறியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததும் எழுத்தாளரின் கள ஆய்வு மிகப்பெரும் வியப்பைத் தந்தது. எத்தனை எத்தனை தகவல்கள்... எவ்வளவு தேடுதல்கள்.
கோவில் அமைப்பு, திருவிழாக்கள், உருவமில்லாமல் கோவிலையும் மக்களையும் காக்கும் பதினெட்டாம்படிக் கருப்பர் குறித்த தகவல்கள், கோவில் நிர்வாகத்தில் இருக்கும் சாதிகள், நாட்டார் வகையறாக்கள், நாடுகள் குறித்த செய்திகள், சாதிகளின் ஆளுமை எனத் தகவல்களைத் தேடித்தேடி திரட்டி எடுத்திருக்கிறார்.
வைகையில் எழுந்தருள வரும்போது வழியெங்கும் இருக்கும் திருக்கண்களில் - தங்கும் மண்டபம் - நடக்கும் நிகழ்வுகள், அழகர் ஏன் கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்பது குறித்த செய்திகள், அழகருக்கும் ஆண்டாளுக்குமான உறவு, அழகருக்கும் மீனாட்சிக்குமான உறவு என ஒவ்வொன்றையும் இவரின் கள ஆய்வுடன் இவருக்கு முந்தையோர் செய்து வைத்த ஆய்வுகளையும் எடுத்துச் சொல்லி விளக்கியிருக்கிறார்.
சைவமும் வைணவமும் இணையும் மதுரையின் பிரமாண்டமான திருவிழாவில் நடக்கும் எதிர்சேவை நிகழ்வு, கோவிலுக்கு அருகே இருக்கும் சமணமலை, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப் பயன்படுத்தும் ஆட்டுத் தோலில் செய்யப்பட்ட துருத்தி, அழகர் ஆற்றில் இறங்குவதில் கலந்து கொள்ளும் மக்கள் அணியும் உடைகள், கோவில் தேரோட்டம் என விரிவாகப் பார்த்திருக்கிறார். தண்ணீர் அடிப்பவர்களையும் சாமி ஆடுபவர்களையும் நாம் ஒரே மாதிரித்தான் உடை அணிந்திருக்கிறார்கள் என்று கடந்து சென்றிருப்போம்... ஆனால் அவ்வுடைகளில் இருக்கும் வித்தியாசங்களை விளக்கியிருப்பது சிறப்பு.
சைவரான பெருமாளுக்கு எப்படிக் கிராமத்து மக்கள் இந்தளவுக்கு கூடுகிறார்கள், கோவில் நிர்வாகத்தில் இருக்கும் நாலு சாதிகளில் எந்த சாதி அதிகமாக அழகரைக் கும்பிடுக்கிறது, அந்தச் சாதிப் பெண்களின் உடை, நடை எனக் காணப்படும் வித்தியாசம், ஒவ்வொரு சாதியும் அழகர் கோவிலில் செய்யும் வேலைகள் என விரிந்த பார்வை.
ஆண்டாருக்குச் செய்யப்படும் மரியாதை, அழகர் வைணவத் தெய்வம் என்பதால் அவருக்கு ஐயர்களின் பூசையும் கருப்பர் கிராமத்து மக்களின் பாதுகாவலன் அவனே அழகருக்கும் பாதுகாவலனாய் இருந்தாலும் அவருக்குப் பூஜை செய்வோர் வேளார்கள் என்றாலும் இரவு கோவில் நடை சாத்தும் போது அழகர் கோவில் ஐயர் ஒருவர் பதினெட்டாம்படியானுக்கு சாப்பாடும் மாலையும் கொண்டு வந்து போடுவார் என்ற செய்திகளும்கோவிலில் ஒவ்வொரு மன்னரின் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தான செய்திகளும், பாதி கட்டப்பட்டு முடிக்காமலேயே விடப்பட்டிருக்கும் கோபுரம் குறித்த செய்திகள், அழகருக்கு மருந்து சாத்துவது தொடர்பான செய்திகள், பழமுதிர்சோலை குறித்த செய்திகள், நூபுரகங்கை, ராக்கச்சி பற்றிய விபரங்கள், காலமாற்றத்தில் திருவிழாக்களில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என மிக விரிவான கள ஆய்வு நூல் இது.
அழகர் அந்தாதி, பிரசுரமான பிரசுரமாகாத வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புறக் கூறுகள் பழமரபுக் கதைகள் குறித்த செய்திகள் என எல்லாவற்றையும் பேசியிருக்கிறார்.
கள்ளழகர் எங்களின் குலதெய்வம் என்றாலும், வருடம் ஒரு முறையேனும் கோவிலுக்குச் சென்று அழகரையும், பதினெட்டாம்படிக் கருப்பனையும், ராக்கச்சியையும், பழமுதிர்சோலை முருகனையும் கும்பிட்டு வந்தாலும் அந்தக் கோவில் குறித்துப் பெரிதாக விபரம் எதையும் அறிந்ததில்லை என்பதே உண்மை.
அழகருக்கும் மீனாட்சிக்கான உறவு முறையும், பதினெட்டாம்படிக் கருப்பருக்கும் அழகருக்குமான உறவு போன்றவற்றை எங்கள் முன்னோர்கள் சொல்லித் தெரிந்திருந்தாலும் அழகரைத் தரிசிக்கப் போனால் மீனாட்சியையும் கும்பிட்டுத்தான் வரவேண்டும் என்ற வழிவழியாய் வந்த வழி முறையையும் இன்றும் பின்பற்றியும் வருகிறோம் என்றாலும் இவரின் ஆய்வில் வைகையில் எழுந்தருளும் நிகழ்வையும் மீனாட்சியுடனான உறவையும் மிகவிரிவாகச் சொல்லியிருப்பது அறிந்து கொள்ள வேண்டியது.
அழகர் கோவில் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பவர்கள் மட்டுமின்றி, ஒரு கள ஆய்வை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
இறைமறுப்புக் கொள்கை உடைய ஒருவர் அந்தத் தெய்வத்துக்கும் அதை வணங்கும் மக்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை இதை வாசித்தால் புரிந்து கொள்ளலாம். இது மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் பதிப்பிக்கப்பட்ட நூல்.
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
சுவாரஸ்யமான நூல் என்று தெரிகிறது. PDF ஆகக் கிடைத்தால் படிக்கலாம்.
சிறப்பான தகவல்கள் குமார்.
துருத்தி பயன்பாடு திருவரங்கத்திலும் உண்டு. தேர் உற்சவங்கள் சமயத்தில் இப்படி துருத்தி உடன் தேர்த் தடம் முழுவதும் தண்ணீர் தெளித்துக் கொண்டு செல்லும் பலரைக் கண்டதுண்டு.
நூலை வாசிக்க முயல்கிறேன்.
கருத்துரையிடுக