மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 23 டிசம்பர், 2021

பிக்பாஸ்-5 : பாவப்பட்ட பாவனி

பிக்பாஸ்-5 பரபரப்பான இறுதி வாரங்களுக்குள் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு சீசன்களைப் போல் எந்தவிதமான அதிரடி விளையாட்டுக்களும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்றாலும் இந்த முறை கொடுத்த விளையாட்டுக்கள் எல்லாம் வித்தியாசமாய் ரசிக்க வைக்கும்படி இருந்தது. அதேபோல் இந்த முறை காதல், கத்திரிக்காய் - பாவனிக்கு அமீரின் முத்தம், வருணுக்கு அக்சராவின் முத்தம் தவிர்த்து - எதுவும் இல்லாதது ஆறுதல். மேலும் இதுவரை எந்தவொரு குழுவும் சேராமல் எல்லாருமே தனித்துப் போட்டி போடுவது மிகச் சிறப்பு.

இந்த வாரத்தில் குடும்பத்து உறுப்பினர்கள் உள்ளே வர, அழுகாச்சிக் காவியம் படைக்கும் வாரமாகத்தான் நகர்கிறது. நேற்று வரை நாலு குடும்பங்கள் வந்து அழுது, சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். 

சிபியின் அப்பா ரொம்ப ஜாலியாப் பேசுறாரேன்னு பார்த்தா நிரூப்போட அப்பா செம. எல்லாரும் ஜெயிக்கணுமின்னு விரும்பினாலும் தன்னோட புள்ள ஜெயிக்கணும்ன்னு நினைக்கிறவதானே அம்மா அப்படின்னு சொல்லி நீ ஜெயிச்சிட்டு வாடான்னு ராஜூவோட அம்மா சொன்னது சிறப்பு.


இது ஒரு பக்கம் இருக்கட்டும், வாழ்க்கையின் ரணங்களைச் சுமக்கும் பெண்மைக்குள் இவர்களின் வருகை - குறிப்பாக இளம் மனைவியரின் வருகை - எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை சிபியின் மனைவி மற்றும் ராஜூவின் மனைவி வந்த போது அவர்கள் நடந்து கொண்ட விதத்தின் பிரதிபலிப்பாய் பாவனிக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் இருந்தன.

இளம் வயதில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் முன்னே இவர்களின் அந்நியோன்யம் தன் கணவன் இப்படித்தானே இருந்தான் என்றோ, இப்போது இருந்திருந்தால் இங்கு வந்து இருப்பான்தானே... இந்த அணைப்பு, முத்தம், கொஞ்சல் எல்லாம் கிடைத்திருக்குமோ என்றோ நினைக்க வைத்துவிட்டது.

அந்த நினைப்பை மனசுக்குள் சுமந்து முகத்தில் காட்டாமல் எவ்வளவு நேரம் மறைத்து வைக்க முடியும். ப்ரியங்காவிடம் சொல்லும் போது 'இனி அவன் வரமாட்டான்' என்று சொல்லி, தன் ஆற்றாமையை, வேதனையை அவர் வெளிப்படுத்திய விதம், மனசுக்குள் இருக்கும் வலியை வாய்வழிக் காற்றாய் விரட்ட நினைத்துக் கண்ணீர் பொங்கி நின்ற தருணம் அந்தப் பெண்ணுக்காய் ரொம்பவே வருத்தப்பட வைத்தது.

பாவனியின் செயல்கள் ராஜூவைப் போல் எனக்கும் பிடிக்காது என்றாலும் அவரின் வலியை உணர்ந்து கொள்ள முடிந்தது. கைம்பெண்தானே என அவரை நாம் எப்படியும் வளைக்க முடியும் என்பதுதான் அபிநய், அமீர் போன்றோரின் எண்ணமாக இருந்திருக்கிறது, இருக்கிறது. இருவரிடமும் பிடிகொடுக்காமல் இருப்பதுதான் அவர் தன்னைச் சுற்றிப் போட்டிருக்கும் வட்டம்... அதை இறுதி வரை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்பதில்லை தோள் சாய நல்ல தோழன் கிடைத்தால் புதுவாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொண்டவனை நினைத்து நினைத்து வேதனைப்படுவதில் இருந்து விடுதலை அடையலாம்.

நீண்ட நாளைக்குப் பின் சந்திப்பு என்றபோது கட்டியணைத்தல் என்பது மீடியா மக்களுக்குள் நிகழத்தான் செய்யும். பாவனியின் நலன் கருதியாவது இவர்கள் சற்றே அடக்கி வாசித்திருக்கலாம்தான்.

பாவனியின் கதைக்குப் பின் ப்ரியங்கா அழுது கொண்டே சாக்லெட் சாப்பிட்டார். அவரின் திருமண வாழ்க்கையும் பிரச்சினையில் இருக்கிறதோ என்னமோ தெரியவில்லை என்றாலும் அந்த அழுகையும் பாவனியின் அழகையை ஒத்திருந்தது. அழுத்தம் கொடுக்கும் காரணிகளைத் தூக்கி வீசிவிட்டு வெளியே வாருங்கள். உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள். 

உங்கப்பா ஞாபகம்டா என ராஜூவின் அம்மா சொல்லும் போது பாவனிகள் அவற்றில் இருந்து மீள முடியாமல் தவிப்பது என்பது இல்லாமல் போகுமா..?

பாவனியின் மனவருத்தம் மிகவும் கஷ்டமாக இருந்தது. மீண்டு வாருங்கள் பாவனி.

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எண்ணம் சிறப்பு...