பிரச்சினைகளுக்கு இடையே நகரும் வாழ்க்கையில் நேற்றைய நாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்து நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நாளாக அமைந்தது. சகோதரர் பிலால் அலியார் துபையிலிருந்து பஹ்ரைனுக்குப் பதவி உயர்வுடன் மாறிச் செல்வதற்காக ஆசிப் அண்ணனின் 'சத்திரத்தில்' சிறியதாய் ஒரு பிரிவு உபச்சார விழா, மனநிறைவாய் நடந்தது.
எப்பவும் போல் பால்கரசு வந்து கூட்டிச் செல்வதாக முதல்நாள் சொல்லியிருந்தார். மறுநாள் காலை அவரிடமிருந்து அழைப்பு வந்ததும் கீழிறங்கிப் போனால் அவரின் காருக்குப் பின்னே ருவைஸில் இருக்கும் எழுத்தாளர் சிவமணியின் காரும் நின்று கொண்டிருந்தது. பிறகு கொஞ்ச நேரம் பேசி, டீயை வாங்கி அங்கயே வைத்து விட்டு - அது வேறொரு சோகக்கதை - அவரின் இரண்டாவது புத்தகமான - முதல் சிறுகதை தொகுப்பு - 'ஸ்னெஹி என்னும் நாய்' எங்கள் வசமானது. காரில் போகும் போது அணிந்துரையும் முதல் கதையும் வாசித்துப் பின் பேசிக் கொண்டே பயணிக்க, சிவமணி எங்களைப் பின் தொடர்ந்து வந்தார்.
நட்புக்கள் ஒவ்வொருவராக வந்து சேர, அபுதாபியில் இருந்து வசந்த் -சிவசங்கரி குடும்பத்தினர் பிரியாணியுடன் வந்து சேர்ந்தனர். கௌசர் சிக்கன், முட்டை மற்றும் குலோப்ஜாமுனுடன் வந்திருந்தார். அகமது தயிர் கேன்களுடன் வந்தார். முதலில் சாப்பாட்டை முடித்தோம். அதன் பின் பிலாலுடனான நட்பு குறித்து ஒவ்வொருவராய் பேச ஆரம்பித்தார்கள்.
தன்னை இந்தக் குழுமத்தில் சேர்த்தவர், அவரின் புத்தக விமர்சனம் சிறப்பாக இருக்கும். எல்லாரையும் அன்போடு விசாரிக்கும் பாங்கு, சமயோகிதமாய் அடிக்கும் நகைச்சுவை என ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாய் நகர, பிலால் உணர்ச்சிப் பிழம்பாகத்தான் காட்சியளித்தார்.
தேர்தலின் போது எல்லாருக்கும் கழக செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குறித்து தனது பதிவை உங்களுக்கு அனுப்பலாமா எனக் கேட்டு அனுப்பினார், நான் எல்லாவற்றையும் வாசித்தேன் என தெரிசை சிவா சொன்னார்.
தனக்கும் பிலாலுக்குமான நெருக்கத்தையும் எந்த ஒரு எழுத்திலும் அரசியலை நுழைப்பதைப் பற்றியும் பால்கரசு பேசினார். ஆரம்பத்தில் எல்லாத்தையும் போட்டு உடைக்கப் போறேன் என்றவர் உடைக்கத்தான் இல்லை.
பிலால் அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என அகமதும் , ஒரு மாற்றுத் திறனாளிக்கு வேலை வாய்ப்பில் உதவியது குறித்து ஷேக் அண்ணனும் பேசினார்கள். முகநூல் மூலமாகத்தான் பிலாலை முதலில் தெரியும் அப்புறம்தான் குழுமத்துக்கு வந்தது என்றும் இப்போ அவர் இருக்கும் அதே கட்டிடத்தில்தான் நானும் இருக்கிறேன் என்றும் முஹைதீன் பாஷா சொன்னார்.
பிலாலுடன் தனக்கான நெருக்கம் குறித்து, இப்போது தினமும் ஒருமுறையாவது போனில் பேசிக் கொள்வது குறித்து ரபீக் அண்ணன் பேச, பிர்தோஷ் பேசும் போது கண் கலங்கினார், அதில் அவர்களின் நட்பின் ஆழம் தெரிந்தது. மாப்ளக்கிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தேன். இங்க வந்தா என் தம்பி வீட்டுக்குக்கூட போகமாட்டேன் இவனுடன் தங்கிவிடுவேன் என்றெல்லாம் சொன்னபோது கண்ணீருடன்தான் பேசினார். உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்ணுவோம் எனச் சிவசங்கரியும் வசந்த்தும் சொன்னார்கள்.
நல்லா எழுதுவாரு அப்பப்ப வேற மாதிரி எழுத ஆரம்பிச்சாரு. அப்பல்லாம் திட்டியிருக்கேன் என ஜெசிலா பானு பேசினார். சுரேஷ் அண்ணன் பிலால் அய்யர் ஏன் ஐயரைப் பற்றி இப்படி எழுதுகிறார் என யோசித்தேன். அவரின் விமர்சனப் பார்வை மிகச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தான் ஒரு உ.பி என்பதை நுழைத்துவிடுவார் என்றதுடன் எங்கே போனாலும் எழுத்துப்பிழையுடன் எழுதினால் அங்கயும் நான் திருத்த வருவேன் என்றார்.
சிவமணி மற்றும் குலாம் அண்ணன் இருவரும் ஒரு சிரிப்போடு முடித்துக் கொண்டார்கள்.
பிலால் நடனமாடிக் கொண்டே பேசுவதை முதலில் ஆச்சர்யமாகப் பார்த்து பின்னர் அவருடன் நெருக்கமான நட்புக் கொண்டடு பற்றி சுபான் அண்ணன் பேசினார். அப்படிப் பேசும்போது அவர் கை தூக்கிய போது 'யோவ் அதுவே பழைய பேன்ய்யா... அதக் காலி பண்ணிடாதே' என்பதாய் இருந்தது ஆசிப் அண்ணனின் பார்வை.
பாலாஜி அண்ணனுக்கும் பிலாலுக்கும் இருந்த நெருக்கம் அவரின் பேச்சில் தெரிந்தது. தன்னைப் பற்றி பிலால் எழுதியிருந்தது எல்லாரும் வெகு சிறப்பானதாக தெரிந்திருக்கும் ஆனால் எனக்கு அந்த வயதில் இருந்த பணத்திமிரின் வெளிப்பாடுதான் அது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் மூன்று காரில் எல்லாம் கல்லூரிக்குப் போய் கெத்துக் காட்டியிருக்கிறேன். நாங்க ஊர் சுற்ற, பிலாலோ கல்லூரி முடிந்ததும் கடையில் போய் வடை போட்டுக் கொண்டிருப்பான். சென்னைக்கு வேலைக்குப் போனான். நான் இங்கு வந்த போது என்னை சத்வா வரைக்கும் நடக்கவே விட்டுக் கொன்னுட்டான் என இருவரும் கல்லூரியில் ஒன்றாக சுற்றியதால், குடும்ப நட்பை இன்று வரை பேணுவதால் நிறைய விஷயங்களை - குடும்பம் சார்ந்தும் - உணர்வோடும் நகைச்சுவையோடும் பேசினார்.
ஆசிப் அண்ணன் பிலாலுக்கும் தனக்குமான உறவு, கூப்பிட்டதும் ஒடிவரும் பாங்கு, சமயத்தில் அவர் அடிக்கும் நகைச்சுவை, ஆரம்பத்தில் ஓரிதழ்பூ வாசித்து விட்டு பேசியதற்கும் இப்போது அவரின் வாசிப்புத்திறநுகும் இருக்கும் வித்தியாசம், கழகம் சார்ந்த அவரின் பணிகள் என எல்லாவற்றையும் பேசினார்.
பின்னர் ஏற்புரை வழங்கிய பிலால் தான் வாசிப்பிற்குள் வந்ததையும் இந்த எழுத்தாளர் குழுமத்தை விட்டு கொஞ்சம் விலகிப் போவதால் ஏற்படும் வெற்றிடத்தை எப்படி நிரப்புவேன் என்பதையும் குறித்துச் சொன்னார். அதிகம் பேசி உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை என்றும் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஆசிப் அண்ணனே காரணம் என்றும் சொன்னதும் சத்திரம் சென்றதும் பால்கரசு அண்ணாச்சி ரூம்ல சத்தம் கேட்டுச்சு அதனாலதான் உள்ள வரலை என்று சொன்னதையும் பிலாலின் பேச்சையும் இணைத்து எழுந்த சிரிப்பொலி அடங்க நேரம் எடுத்துக் கொண்டது.
பின்னர் ஆசிப் அண்ணனும் ரபீக் அண்ணனும் புத்தகம் கொடுக்க, சிவமணியின் புத்தகங்கள் இரண்டும் குழுமத்தில் வெளியிடப்பட , அவரும் எல்லாருக்கும் புத்தகத்தைக் கொடுத்து படிச்சிட்டு உங்க கருத்தை எழுதுங்கப்பா எனக் கேட்டுக் கொண்டார். கருத்துத்தானே உடனே வரும் என சுரேஷ் அண்ணன் சொன்னதும், அடுத்த புத்தகம் எழுதும் போது சிவமணி நிறையவே யோசிக்க வேண்டியிருக்கும் என்று சிலர் சொல்ல, அப்போதும் சிரிப்பலைதான்.
மாலை டீயுடன் நிறைவு பெற்ற நிகழ்வில் உணர்ச்சிப் பெருக்கோடு மகிழ்வு குடி கொண்டிருந்தது. எல்லாரையும் சந்திக்கும் ஒரு நாளாக அமைந்ததில் மகிழ்ச்சி.
ஆசிப் அண்ணனின் மலையாளத் திரையோரம் கிடைத்தது, வாசிக்க வேண்டும். அண்ணாச்சி வீட்டில் தொ.பரமசிவத்தின் அழகர்கோவில் இருந்தது. கேட்டு எடுத்து வந்து வாசிக்க வேண்டும் என்று நினைத்தேன், வாங்குன ஆட்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற அண்ணனின் வார்த்தைகள் நெஞ்சுக்குள் வந்தாலும் வாங்கிச் செல்லலாம் என்பதை மறந்துவிட்டு வந்துவிட்டேன். அடுத்தமுறை எடுத்து வரவேண்டும்.
வெளியில் வந்து சிறிது அரட்டையுடன் ' போயி போன் பண்ணுங்கப்பா' என்ற பாலாஜி அண்ணனின் வார்த்தைகளைச் சுமந்தபடி பிலாலை அவர் சொன்ன இடத்தில் இறக்கிவிடப் போகும்போது கள அரசியல் மற்றும் இணைய அரசியல் பற்றியெல்லாம் பேசி, ஔரங்கசீப் பற்றி பெர்னியர் எழுதியதை வாசிப்பதாய் பிலால் சொன்னபோது நான் நான்தான் ஔரங்கசீப் என பிஞ்ச்சில் சாரு எழுதுவது குறித்தும் சொல்ல, அது குறித்தான உரையாடல் ஓடியது. இடையே நாம் தமிழர் பற்றி பால்கரசும் பேசினார்.
பிலாலை இறக்கி விட்ட பின் அபுதாபி நோக்கிப் பயணித்து, எங்களை இருப்பிடம் சேர்த்து பால்கரசு அவரின் இருப்பிடம் செல்ல, நான் பாலாஜி அண்ணனுக்கு வந்து சேர்ந்த விபரம் சொல்ல, பால்கரசு தன் இடம் போன விபரம் எனக்குச் சொன்னார்.
பிலாலிடம் ஏதோ நிறைய சொத்து இருப்பதாகவும் அதை தங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டுச் செல்லவும் வேண்டும் என்பதாகவும் பிர்தோஷ் - கௌசர் சொல்லிக் கொண்டிருந்தனர். என்ன சொத்துன்னுதான் தெரியல. பிர்தோஷ் அழுததும் சொத்துக்காக எனச் சொன்ன கௌசர் பிலாலுக்கு முத்தம் கொடுத்தது கூட அதற்காகத்தான் இருக்குமோ என்னவோ..? - முகநூல், வாட்ஸப், டுவிட்டர் சொத்துக்கள்தான் என்பதை உணர முடிந்தது.
பாலாஜி அண்ணன் நிறைய எடுத்துத் தர்றேன்னு சொல்லிட்டு எதுவும் தராததால் கூட இருந்தே அண்ணே உன்னைய நான் பாத்துக்கிறேண் என்று சொல்லி அடிக்கும் தம்பிகள் தப்பித்தார்கள்.
ராஜாராம் ஊரில் இருந்தாலும் உடனுக்குடன் படங்கள் அனுப்பப்பட மனுசன் வீட்டுல புள்ளகுட்டிகளோட இருக்கத விட்டுட்டு புல்தரையில படுத்துக்கிட்டு மீம்ஸ் போட்டுக்கிட்டே இருந்தார். வீட்டுல எப்படிச் சாப்பாடு போட்டாங்கன்னு தெரியலை, தனியாத்தான் கேட்டுக்கணும்.
ஒரு நிறைவான நாளாக அமைந்தது.
நன்றி அனைவருக்கும்.
உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும் பிலால்.
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
அளவிடற்கரிய உங்களின் அன்பையும், நட்பையும் பகிர்ந்தவிதம் சிறப்பு.
சந்திப்பும் மகிழ்வும் அருமை...
கருத்துரையிடுக