வியாழன் மாலையை இனிதாக்கிய நிகழ்வாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இரண்டு தமிழ் நூல்களின் வெளியீடு அமைந்தது, எப்பவுமே அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும விழா சிறப்பாகத்தான் அமையும் என்பதை நேற்றைய நிகழ்வும் எடுத்துக்காட்டியது. அதேபோல் விழாவுக்குப் பின்னான உரையாடல்கள் மன அழுத்தத்தைத் தீர்க்கும் மருந்து என்பதையும் நேற்றும் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம்.
அபுதாபியில் இருந்து துபை, ஷார்ஜா செல்வதென்பதே கடினம், அதுவும் வேலை நாளில் இங்கிருந்து ஷார்ஜா - போக்குவரத்து நெரிசல் என்பது எப்பவும் இருப்பதுதான் - போவதென்பது மிகவும் கடினம். விடுமுறை நாட்களில் செல்வதாக இருந்தால் பரவாயில்லை... அலுவலகமாக இருந்தாலும் பாலாஜி அண்ணனின் வந்தே ஆகணும் என்ற அழைப்புத்தான் எங்களைப் பயணிக்க வைத்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு விபத்துக்களால் நகர முடியாமல் நகர்ந்த போக்குவரத்தில் - இடையில் எப்பவும் போல் வடக்கு என்றால் தெற்கில்தான் போவேன் எனப் பால்கரசு அடம் பிடித்ததால் - நாலரை மணி நேரத்திற்கு மேல் பயணப்பட்டு புத்தகக் கண்காட்சி அரங்கை அடைந்தோம்.
அலுவலகத்துக்கே வந்து அழைத்துச் சென்றதுடன் அதிகாலை மூணு மணிக்கு அபுதாபியில் எங்களது கட்டிடத்தின் முன் இறக்கி விட்டுவிட்டு அவரின் இருப்பிடமான முஸாபாவுக்குத் திரும்பிச் செல்வதெல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்பதால் முதலில் பால்கரசுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ் அரங்கு எங்கே இருக்கு எனத் தேடி அலைந்து - இடையில் எழுத்தாளர் தெரிசை சிவாவும் இணைந்து கொண்டார் - ஒரு வழியாகக் கண்டு கொண்டோம். புத்தகக் கண்காட்சி முழுவதும் மலையாளிகளின் அரங்குகளும், அரங்கு நிறைந்த 'கனமான' புத்தகங்களும் ஆக்கிரமித்திருக்க, 'தமிழ் புத்தகங்கள்' என்று எழுதிய பேப்பரைப் பார்த்து மகிழ்வோடு அருகில் சென்றோம். DC BOOKS அரங்கின் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருந்தது உலகின் மூத்தமொழி தமிழுக்கான அரங்கம். பெரும்பாலும் சென்ற ஆண்டு கொண்டு வந்து திருப்பவும் ஊருக்கு எடுத்துச் செல்லாத புத்தகங்களே அதில் இருப்பதாய் நண்பர் சொன்னார். பால்கரசு பொண்டாட்டியோடு - அராத்துவின் புத்தகம் - போட்டோ எடுத்துக் கொண்டார்.
புத்தக வெளியீடுக்கான 'WRITER'S FORUM'-ல் ஒரு புத்தகத்துக்கு அரைமணி நேரம்தான் அனுமதி, நீண்ட உரைக்கெல்லாம் அங்கு வேலையில்லை, பாஸ்ட் புட் போலத்தான்... எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் திருமண விருந்துக்குச் சென்றால் நமக்குப் பின்னே ஆட்கள் அடுத்துச் சாப்பிட அமர்வதற்காக முதுகில் இடித்துக் கொண்டு காத்துக் கொண்டு நிற்பார்கள் அப்படித்தான் அரைமணி நேரம் முடிவும் முன்னே அடுத்த அணி களத்தில் இறங்க, மடையை உடைத்துக் கொண்டு பாயக் காத்திருக்கும் தண்ணீரைப் போல அலை மோதிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் நாங்களும் அவர்கள் முடிக்கும் முன்னரே மடை உடைத்த தண்ணீரென உள் புகுந்தோம்.
முதல் புத்தகமாக மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் எழுதி, ஆர், முத்துமணி என்பவர் மொழி பெயர்த்த பெண்ணச்சி என்னும் நாவல் வெளியீடு நிகழ்த்தப்பட்டது. நிகழ்வை எழுத்தாளரும் கவிஞருமான ஜெசிலா பானு தொகுத்து வழங்கினார். நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்தை வசந்த் - சிவசங்கரியின் மகள் பூர்விகா பாடினார்.
நூல் குறித்த அறிமுகத்தை எழுத்தாளர் நசீமா ரசாக் வழங்கியபோது ஒரு ஐந்து வயதுப் பையனைச் சுற்றிச் சுற்றி வரும் மனநிலையில்தான் நான் பேச வந்திருக்கிறேன் என்றார். மேலும் ராம் என்னும் கதாபாத்திரம் பற்றிப் பேசும் போது அவர்தான் எழுத்தாளர் வெள்ளியோடனோ என்று நினைத்தேன் என்றும் நான் கதாபாத்திரங்களைப் பற்றித்தான் பேசுகிறேன் கதையைப் பற்றி அல்ல - கதாபாத்திரங்களை வைத்து நீங்களே மிச்சம் மீதியைப் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதுடன் கதையைப் படித்துக் கண்ணீர் விட்டு அழுதேனென்றும் இறைவனிடம் பெண்ணச்சி போன்ற ஒரு பெண்ணுக்கு தாய்மையைக் கொடுத்துடாதே என வேண்டிக் கொண்டேன் என்றும் சொன்னார்.
புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்ற இருந்த கனவு சுப்ரபாரதிமணியனைப் பற்றி சிறிய அறிமுகத்தை - கதா விருது பற்றியும் - ஜெசிலா பானு வழங்க, அவரின் நண்பர் சின்ராசு வரைந்த இருபத்தை ஒவியங்களைக் கொண்டு வந்ததாகவும் அவற்றில் இருந்து வெள்ளியோடன் மற்றும் ரோஸன் ஜானுக்காக ஓவியத்தை மேடையில் வைத்துக் கொடுத்தார். கொசரிடமிருந்து பூங்கொத்தைப் பெற்றுக்கொண்டவர் பெண்ணச்சியை வெளியிட ஷாஜி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தான் 2018-ல் இங்கு வந்தபோது மலையாளக் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தது குறித்தும் வெள்ளியோடனுக்கும் தனக்குமான நட்பையும் அவரின் நாவலான கடல்மரங்களைத் தான் மொழிபெயர்த்தது குறித்தும் பேசினார். புத்தகங்களின் பக்கமாய் மட்டுமே இருந்த பேச்சாலும் ஐந்து நிமிடமே என்ற நிலையாலும் சுப்ரபாரதியின் சிறப்பான பேச்சைக் கேட்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று கூட சொல்லலாம்.
எழுத்தாளர் வெள்ளியோடன் ஆரம்பம் முதலே முகத்தில் புன்னகை இல்லாமல் ரொம்ப இறுக்கமாகவே இருந்தார். சகிப்புத்தன்மை பற்றி எல்லா நேரத்திலும் பேசிக் கொண்டே இருந்தாலும் தன்னுடைய நூலில் சகிப்புத்தன்மை எழுத்தாளர்களுக்கு இல்லை என்பதைப் பதிவு செய்திருக்கும் வெள்ளியோடனை ஏற்புரை வழங்க அழைத்தார் ஜெஸிலா பானு.
இறுக்கம் தளர்ந்து கொஞ்சமே கொஞ்சமாய் புன்னகையுடன் பேச ஆரம்பித்தார். மலையாளத்திலோ அல்லது மலையாளம் கலந்த தமிழிலோ பேசுவார் என்று பார்த்தால் எல்லாவர்க்கும் வணக்கம்ன்னு சொன்னதோட ஆங்கிலத்துக்குள் புகுந்து கொண்டார். உலகின் மூத்த மொழி தமிழ் என்றதும் கைதட்டல் அடங்க நேரம் எடுத்துக் கொண்டது. மூத்தமொழிதான் இத்தனை பெரிய புத்தகக் கண்காட்சியில் ஒரு மூலையில் கிடக்கிறது எனத் தோன்றியது. தமிழில் எனது புத்தகங்கள் வெளியாவதில் மகிழ்ச்சி என்றதும் டப்பு (தப்பு / தபு - சரி ஏதோ ஒண்ணு) தன்னை ரொம்பவே பாதித்ததாகச் சொன்னார். இன்னும் புத்தகம் குறித்து நிறையப் பேசினார். இறுதியில் நன்றி என்று கூட தமிழில் சொல்லவில்லை என்பது ஜெசிலாவின் வருத்தம் மட்டுமல்ல எல்லாருடையதும்தான்.
முதல் புத்தகத்துக்கான விழா இனிதே முடிவடைந்த போது அடுத்த புத்தகமான அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய மின்தூக்கி வெளியீடு தொடர்ந்தது. இந்தப் புத்தக வெளியீட்டிற்கான தொகுப்பாளினியாக ரேடியோ ஜாக்கி அஞ்சனா ( நிவி ஆனந்தன்) இருந்தார். எல்லாருக்கும் கேக்குதா எல்லாருக்கும் கேக்குதா என அவர் கத்தியது அமீரகம் மட்டுமல்ல அருகிருக்கும் நாடுகளுக்கும் கேட்டிருக்கும்.
எங்க தமிழய்யா ஒருத்தர் மேடையில் ஏறுமுன்னே எல்லாரும் கை தட்டணும் எனச் சொல்லிச் செல்வார். மாணவர்கள் அவர் ஆட்காட்டி விரல்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த விரல்கள் தட்டுவதைப் போல் ஒன்றோடு ஒன்றாய் உரசினால் கை தட்டல் காதைப் பிளக்கும், ஆஹா நம்ம பேச்சுக்கு பசங்க இப்படிக் கைதட்டுறானுங்களேன்னு மகிழ்வாய் பேச ஆரம்பிப்பார் பேச்சாளர்,அப்படியான உற்சாகத்தை உண்மையான கைதட்டலால் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்ட நிவி ஆனந்தன், மின்தூக்கி என்றால் லிப்ட், இது அடி மட்டத்தில் இருந்து மேலே தூக்கிச் சொல்லும் ஒன்று அதேபோல் இந்த நாவலும் நம்மை மேலே கொண்டு செல்லும் என்றும் சொல்லியதுடன் அபுல் கலாம் ஆசாத் பற்றியும் சொன்னார்.
இந்த நிகழ்வில் இந்தியத் தூதரக அதிகாரி ராஜா முருகன் அவர்களும், ஷேக் ஹம்தான் பின் கலிஃபா பின் ஹம்தான் அல்நஹ்யான் அவர்களின் வணிக மற்றும் மேலாண்மை அலுவலக நிர்வாக இயக்குநர் ஸுல்ஃபிகர் கதியாலி அவர்களும் கலந்து கொண்டார்கள். அபுல் கலாம் ஆசாத் அவர்களும் , அபுதாபி 'ஆப்பக்கடை' உரிமையாளர் நடராஜன் அவர்களும், அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் தலைவர் - அண்ணன் தலைவரெல்லாம் இல்லைன்னு சொல்லுவார் என்றாலும் அழைப்பாளினி அப்படித்தான் சொன்னார்- ஆசிப் மீரான் அவர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள்.
மின்தூக்கி நாவலைப் பற்றி ஆசிப் அண்ணனின் அறிமுக உரையில் ஏணிக்கும் மின்தூக்கிக்குமான வித்தியாசத்தைச் சொல்லி தானும் மேலே போவதுடன் தான் சுமப்பவரையும் மேலே கொண்டு செல்வதுதான் மின்தூக்கி என்றார். தமிழில் பெயர் வைப்பதென்பது அரிதாகிவிட்ட சூழலில் தனது புத்தகத்துக்கு லிப்ட் என்று வைக்காமல் மின்தூக்கி என்ற பெயரை வைத்ததைப் பாராட்டினார். பேரு வச்சாலும் வைக்காமல் போனாலும் பாடலை யுவன் சங்கரின் பாடல் என இன்றைய இளம் தலைமுறை கொண்டாடுவதைச் சொல்லி அது இளையராசாவின் பாடல் என்பதுதான் உண்மை என்பதையும் சொல்லி - பாலாஜி அண்ணன் முகத்தில் அம்புட்டு மகிழ்ச்சி - எண்பது தொன்னூறுகளுக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்குமான வித்தியாசத்தைச் சொல்லி வளைகுடா செல்லும் ஒரு இளைஞனின் பின்னணியை வைத்து எழுதிய கதைதான் இந்த மின்தூக்கி என்றார்.
ராஜா முருகன் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், பல விஷயங்களைப் பேசுவார். இரண்டு நிமிடங்கள் என்றதும் வணக்கம், நன்றி என முடிக்க, நீங்க பேசலாம் என ஆசிப் அண்ணன் கைகாட்ட தன் உரையை ஆரம்பித்தார். இந்தியர்களுக்கு அமீரகம் இரண்டாவது தாயகம் என்றும் பன்முக ஆளுமை கொண்டவர் அபுல் கலாம் ஆசாத் என்றும் சொல்லியதுடன் தனது அனுபவங்களையும் தான் கண்ட காட்சிகளையும் எழுத்தோவியம் ஆக்கியிருக்கிறார் என்றார். அலுவல் மொழியாக வேறு மொழியாக இருப்பதால் நம் மொழியை நாம் அதிகம் பயன்படுத்த முடிவதில்லை என்று சொன்னதுடன் இன்னும் நிறைய் விஷயங்களைப் பற்றிப் பேசினார். ராஜாமுருகன் அவர்களின் எளிமை எப்போதும் மற்றவர்களைக் கவர்வதாக இருக்கும். நேற்றும் நிகழ்வின் இறுதியில் போட்டோ எடுக்கும் போது தரையில் அமர்ந்து இதிலென்ன இருக்கு என்றது பதவி கொடுக்கும் மரியாதையை விட நடத்தை கொடுக்கும் மதிப்பே சிறப்பானது என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
அடுத்துப் பேச கதியாலி அவர்களை அழைக்கும் போது இங்கே ஐ.நா. சபையே பேச வந்திருக்கிறது என்றார் தொகுப்பாளினி. தனது ஆங்கில உரையை ஆரம்பித்த கதியாலி அவர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஷேக் காதர் பாடல்களைக் கேட்பதைத் தவிர எனக்குத் தமிழ் தெரியாது என்றும்அமீரக தொழில் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு அதிகம் இருக்கிறது என்றும் சொன்னார். தொடர்ந்து எழுதுங்கள் என்று அபுல் கலாம் ஆசாத்திடம் கேட்டுக் கொண்டார். இரண்டு விதமான அணுகுமுறைகள் பற்றிப் பேசினார். தமிழகத்தின் வளர்ச்சி பற்றிப் பேசும் போது கன்னியாகுமரி முதல் திருச்சி வரை பசுமையாக இருக்கும் எனச் சொல்ல முயன்று விமான நிலையம் இருக்குமே... திரு...திரு... என ஆரம்பித்ததும் ஒரு மலையாளி திருவனந்தபுரம் என்றதும் - அவனுக திருவேண்ட்ரம்ன்னுதான் சொன்னானுக, இந்த மலையாளிகளுக்கு எப்பவுமே ஊர் பெருமைதான் அதிகம், அதுவும் இந்தியன்னு சொல்றதைவிட கேரளா தனி நாடுன்னு காட்டுற பயலுக - எனக் கத்தியதும் யோவ் அது அங்கிட்டுய்யா நான் சொன்னதும் தமிழ்நாட்டுக்குள்ள அப்படின்னு அவர் சொன்னபோது கூட நம்மாளுக திருச்சின்னு கத்தல - தற்பெருமை நமக்குப் பிடிப்பதில்லை - அப்பறம் மலையாளிகளே இவனுக திருவனந்தபுரத்துக்கு வரமாட்டானுங்கன்னு நெனச்சி திருச்சிராப்பள்ளின்னு சொல்ல, அவரும் ஆமா அதுதான் என்று சொன்னார்.
மூன்று நிமிடங்கள் இருக்கும் போது புத்தக ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத் பேச அழைக்கப்பட்டார். தீ விபத்து ஏற்பட்டால் எப்படிப்பட்ட மின்தூக்கியாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தரைதளத்துக்கு வரவேண்டும் அப்படிப்பட்ட பொறுப்பில் இருந்ததால் இன்னும் இரண்டு நிமிடத்தில் முடித்து விடுவேன் என்றுதான் ஆரம்பித்தார். மின்தூக்கி நாவலை ஆசிப் அண்ணனுடனும் அய்யனாருடனும் கலந்து ஆலோசித்து, விவாதித்து எழுதினேன் என்றார். ஒரு பத்து வருடக் கதையைச் சொல்ல வேண்டும், வேலை கிடைத்த பின்னும் கல்வியைத் தொடர வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்து இந்த நாவலை எழுதினோம். நாவலை எழுதியவர் பெயர்தான் என் பெயராக இருக்குமே தவிர பின்புலமாக இருந்தவர்கள் இவர்கள்தான். இவ்வளவு பெரிய அரங்கிலே அரங்கேற்றிய ஆசிப் அண்ணனுக்கும் அமீரக எழுத்தாளர் குழுமத்துக்கும் நன்றி சொன்னார்.
விழாவில் பூங்கொத்து, பொன்னாடை, நினைவுப்பரிசுகள் எல்லாம் கொடுக்கப்பட்டன.
அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும புகைப்படக் கலைஞர் சுபான் அண்ணாச்சிக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது - ஆறேழு வருசத்துக்கு முன்னாடி அவர் எடுத்த படம்தான் நமக்கிட்ட இருக்கு இப்பல்லாம் நம்மளைத் தனியாக படம் எடுப்பதில்லை என்பதையும் சொல்லிக் கொண்டு - வாழ்த்துகள் சுபான் அண்ணா.
விழா சிறப்பாக நடந்து முடிய, 'மின்தூக்கி பத்து ரூபாய்' என விற்பனையை ஆரம்பித்தார் ஆசிப் அண்ணன். சிறப்பான கல்லாக் கட்டலாகத்தான் இருந்து என்றும் சொல்லலாம்.
அதன்பின் போட்டோ எடுத்தல் நிகழ்வு நடந்தது. இந்த பாலாஜி அண்ணன் கடந்த இரண்டு கூட்டங்களாக வந்ததைப் பதிவு செய்கிறேன், எழுத்தாளருடன் போட்டோ எடுத்துக் கொள்கிறேன் அப்படின்னு எடுக்கிறார். என்ன மீம்ஸ் வரப்போகுதோ ராஜாராமனுக்கே வெளிச்சம்.
பின்னர் அங்கயே நீண்ட உரையாடல் முடித்துக் கிளம்பும்போது 'அட இருங்கய்யா சாப்பிட்டு வண்டிய விடுங்க... கொஞ்ச நேரம் பேசுவோம்' என பாலாஜி அண்ணன் அழைக்க, கிளம்புறோம் என்றாலும் விடுவதாய் இல்லை.
அப்புறம் அங்கிருந்து கிளம்பி பாலாஜி அண்ணனுடன் பேசியபடி காரில் பயணித்து, அந்தக் கருப்பையா சொன்ன இடுப்பு மட்டும் இல்லேன்னா ரெண்டு நாள்ல வீட்டையே கட்டி முடிச்சிருவேன் என்ற கதையையும் பட்டியக் கல்லில் இரவில் படுத்துப் படுத்து செங்கல் இறக்கிய கதையையும் சொல்லி எங்களைச் சிரிக்க வைக்க, அவரின் பேச்சை ரசித்தபடியே - அவரோடு பயணித்தால் சிரித்துக் கொண்டே இருக்கலாம் - சாப்பிடும் இடத்தை அடைந்தோம்.
எங்களைப் பின் தொடர்ந்து வந்த நிவி ஆனந்தனுக்குப் பார்க்கிங் கொடுக்கிறோம் என எவனோ ஒருவனுக்கு நல்ல இடத்தை விட்டுக் கொடுக்க, அவன் மகிழ்வாய் பார்க் பண்ணிவிட்டு மனைவியுடன் கெத்தாய் நடந்து போனது தனிக்கதை. எங்கேம்மா பார்க் பண்ணியிருக்கே என்று பால்கரசு கேட்டபோது நான் மாலுக்கு உள்ளயே பார்க் பண்ணிட்டேன் என்ற எங்களுக்கு பல்ப் கொடுத்ததும் தனிக்கதைதான்.
சாப்பிடும் போதும் தொடர்ந்த அரட்டையில் திளைத்து, காருக்கு வந்தால் பக்கத்துக் கம்பியின் நிழல் எவனோ ஒருவன் காரை இடித்து விட்டான் என எங்களை அச்சப்பட வைத்து, நீண்ட நேரம் எப்படி ஆகியிருக்கும் இப்படி இடித்துப் போயிருக்கானே என மாற்றி மாற்றிப் பேசி, அந்த இடத்தைத் தொட்ட போதுதான் அது நிழலென அறிந்து கொண்டோம்.
அப்பாடா என்ற நிம்மதி வந்தாலும் அட இப்படி பயமுறுத்திருச்சே எனச் சிரித்தபடி காரை எடுக்க, எங்கிட்டு அபுதாபி போற பாதையின்னு யோசிக்காமலே ராசல் கைமா நோக்கிப் - சும்மா ஒரு அஞ்சாறு கிலோ மீட்டர் - பயணித்து அபுதாபின்னு எங்கிட்டும் எழுதலைன்னு யோசித்து வண்டியைத் திருப்பி, பேசியபடி ஷார்ஜாவில் இருந்து பயணித்து கந்தூத்தில் டீச்சாப்பிட்டு அபுதாபி வந்து சேரும் போது மூன்று மணியாகியிருந்தது. அதன்பின்னே பால்கரசு தன் இருப்பிடத்துக்குப் போனார்.
விழாவின் முடிவில் பிலாலிடம் புத்தகம் வாங்க வந்த நெருடாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க முடிந்தது.
போட்டோ சூட் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது சகோதரர் முகைதீன் பாட்ஷா வந்து பேசினார்.
போன சந்திப்பின் போதே நான் நிறைய குறிப்புக்கள் தாரேன் அதை வைத்துப் படம் வரைந்து பாகங்களைக் குறிடா தம்பின்னு பாலாஜி அண்ணன் சொன்னார். அதையே நேற்றும் சொன்னார் என்றாலும் தம்பிகள் மீதான பாசத்தால் எதையும் இதுவரை தரவில்லை என்பதை சகோதரர் பிர்தோஷ் பாஷாவுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
மலையாளத் திரையோரம் மலையாளத்தில் வருது... நீங்க பெற்ற இன்பத்தை மலையாளிகளும் பெறட்டும் என ஆசிப் அண்ணன் சொன்னார். மகிழ்ச்சி.
நண்பர்கள் இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேசப் பழகிக் கொண்டால் இன்னும் குழுமத்துக்கான மதிப்புக் கூடும். சில விஷங்கங்களைச் சில இடங்களில் தவிர்த்தல் நலம், அப்புறம் ஆயிரம், ரெண்டாயிரம்... கதையாக எல்லாரும் நம்மையே பார்ப்பார்கள்.
மின்தூக்கி நாவலை அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் கானல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மின்தூக்கி வாங்கி வைத்திருப்பதால், தற்போது சிவமணியின் 'ஸ்னேஹி என்னும் நாய்' வாசிப்பில்... இதன் பின்னே ஆசிப் அண்ணனின் 'மலையாளத் திரையோரம்' (சுரேஷ் அண்ணன் கண்டிப்பாக பதிவுக்காக அல்ல) அதன் பின்னே 'மின்தூக்கி' என வாசிக்க வேண்டும்.
எப்பவும் போல் எழுத்தாளர் குழுமத்தின் விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.
2 எண்ணங்கள்:
நிகழ்வு அருமை...
சிறப்பான நிகழ்வு. தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கருத்துரையிடுக