மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 20 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : நான்காம் சுவர்

Image result for நான்காம் சுவர்
நான்காம் சுவர்...

ஆகஸ்ட் 2018 முதல் மே 2019 வரை ஆனந்த விகடனில் தொடராக வந்து ஜூலையில் யாவரும் பதிப்பகத்தால் புத்தமாகியிருக்கிறது.

நாம் எட்டி நின்றே பார்த்துக் கொண்டிருக்கும் விளிம்புநிலை மனிதர்களைப் பக்கத்தில் இருத்திப் பார்த்து... அவர்களின் வாழ்வை ரசித்து... அவர்கள் கொடுப்பதையும் சாப்பிட்டு... அவர்களின் சுக துக்கங்கங்களைத் தன்னுள் சுமந்து வலியும் நேசமும் நிறைந்த எழுத்தாய் இறக்கி வைத்திருக்கிறார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர்.

இது கதையா..? கட்டுரையா..? என யோசிக்கும் முன் இதில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நமக்கு இது வாழ்க்கைக் கதை... வாழ்ந்த கதை... வாழும் கதை என்பதை நம் பொட்டில் அடித்துச் சொல்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நாம் பார்த்து ஒதுங்கி நகர்ந்து சென்ற பலரின் வாழ்க்கையை நமக்குள் துளிர்த்தெழச் செய்கிறது.

புத்தகத்தின் ஆரம்பமே பிணப் பரிசோதனை செய்யும் ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் 'திருப்பால்' என்னும் வாழ்க்கைக் கதை. வாசிக்க வாசிக்க நம் மனதை ஏதோ செய்கிறது. இந்த வேலை என்னோடு போகட்டும் என் மகன் இந்த வேலைக்கு வரக்கூடாது என்ற அவரின் எண்ணம் எண்ணமாகவே அவருடனே மறைந்து போகிறது. ஆம் அவரின் மகனும் கத்தியெடுக்கிறான். இது வழிவழியாய் தொடரும் வாழ்க்கை என்பதை மட்டும் சொல்வதாக திருப்பால் முடிந்து விடவில்லை. அந்த மனிதனின் மனசுக்குள் இருக்கும் மனிதநேயத்தை, இறந்து போன குழந்தைக்கு அவர் கொடுக்கும் மானசீக அன்பைப் பற்றிப் பேசுகிறது... அதைத்தான் அதிகம் பேசுகிறது. திருப்பாலைப் போல எத்தனையோ பேர் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் பிணவறைக்குள் நுழைய யோசிப்பதுடன் அந்த மனிதர்களையும் பிணங்களாகப் பார்க்கக் கற்று வைத்திருக்கிறோம். அவர்கள் மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மயில்வாகணன் என்னும் பிச்சையெடுக்கும் மனிதரின் வாழ்க்கையை மட்டுமின்றி அவரோடு வாழும் மற்றொரு பெண் பற்றியும் பேசுகிறது மைலோ. நாளெல்லாம் பிச்சையெடுத்து மனம் முழுவதும் வலியையும் வேதனையையும் சுமந்து வரும் பெண்ணுக்கு இரவில் ஒரு அன்பான அணைப்புத் தேவைப்படுகிறது... அது காமத்துக்கான வடிகால் என தவறாக நினைக்க வேண்டாம்... இங்கே ஒற்றை அணைப்புக் கொடுக்கிறது ஓராயிரம் சந்தோஷத்தை... அந்த அணைப்பில் அவளின் வலியும் வேதனையும் கண்டிப்பாகக் கரைந்து போய் விடியலில் மலர்ச்சியோடு எழுவாள் என்பதுதான் உண்மை. எப்பவும் தான் படுக்கும் இடத்தில் எவனோ ஒருவன் படுத்திருக்கும் போது அவளின் மனம் படும் பாட்டையும் அது வார்த்தையாய் வந்து விழும் போது எவ்வளவு வெப்பமாக இருக்கிறது என்பதையும் ரொம்ப அழகாகச் சொல்லிச் செல்கிறது மைலோ.

உலகுக்குக் கலையைக் கற்றுக் கொடுத்த தொம்பரக் கூத்தாடிப் பரம்பரையில் வந்த பாபுஜீயின் வாழ்க்கையை, அந்தப் பெண்களை நாம் பார்க்கும் பார்வை, படிக்க ஆசைப்படும் அவர்களின் குழந்தை சோனா என ஒரு கூத்தாடியின் வாழ்க்கையைச் சொல்கிறது தொம்பரக் கூத்தாடி. அதில் பாக்கியம் சங்கர், கவிஞர் வெயிலின் கவிதையை இறுதியாகக் கொடுத்திருக்கிறார். அந்தக் கவிதை மனதை ஏதோ செய்கிறது. அதிலிருந்து மீண்டு வருதல் என்பது முடியாததாகவே இருக்கிறது. இன்னும் இம்சிக்கிறது அந்தக் கவிதை... வரிகளில் வலியைக் கடத்த முடியும் என்பதைக் காட்டிய கவிதை அது. 'சோனாவைப் பார்த்தேன்... சோனா சிரித்தாள். என் பிள்ளை என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் போலவே இருந்தது' என்ற வரிகள் வாசித்து முடிக்கும் போது எனக்குள்ளும் சோனா அப்படித்தான் அமர்ந்து கொண்டாள்.

இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்... இது ரசித்து வாசித்த புத்தகமல்ல... வலியும் வேதனையையும் மட்டும் சுமக்காமல் அந்த மனிதர்களின் அன்பான விசாலமான மனதை அருகிருந்து பார்த்தது போன்ற உணர்வோடு வாசித்த புத்தகம். ஒவ்வொருவருடைய வாழ்வையும் படிக்கும் போது நாமும் அவர்களுடன் பயணித்தது போன்றதொரு உணர்வைக் கொடுத்த எழுத்து... உள்ளுக்குள் ஈர்த்துக் கொண்டது.

'நான் உழைச்சித்தான் கடைசி வரைக்கும் சாப்பிடுவேன்... புரியுதாடா என் மாமா பையா...' எனச் சொல்லும் விலைமாது கல்யாணி... உடம்பை விற்பவளாகத் தெரியவில்லை... மனுசியாகத்தான் தெரிகிறாள்... ஆம் அவளும் மனுசிதானே.  

'விவரம் தெரியாதவனும் போதையில் இருக்கிறவனும்தான் விஷவாயுல மாட்டிப்பான் நைனா' என்று சொல்லிச் சிரிக்கும் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் மாலகொண்டைய்யா. பின்னொரு நாளில் அதே விஷவாயு தாக்கி இறந்ததாய் பேப்பரில் உர்ரென்று இருக்கும் போட்டோவில் சிரிக்கும் போது நம் மனசும் கல்லென ஆகிவிடுகிறது.

'என் உசுரைக் கொடுத்தாவது என் புள்ளையைப் படிக்க .வச்சிருவேன் நைனா...' எனச் சொல்லும் குப்பை அள்ளும் மன்னாரு. தலையில் தூக்கி வீசப்பட்ட குப்பைக்குப் பின்னே வந்து விழும் சாரியையும் குப்பை வண்டியில் தூக்கிப் போட்டுப் பயணிக்கும் போது பஞ்சரான அவரின் வண்டியை பேசியபடி நாமும் தள்ளிக்கொண்டே நடக்கத்தான் செய்கிறோம்.

'மிருகங்ககிட்ட கூட பயமில்லை சார்... வெள்ளையா சிரிக்குற இவனுங்கதான் சார் வெசத்தோட அலையுறானுங்க' என்று சொல்லும் தங்கள் இருப்பிடத்தில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி, ஈக்கள் மூலமாக நோயைக் கொடுத்துக் கொண்டிருப்போரை எதிர்த்துப் போராடும் சிறைக்காடு மகாலெட்சுமி. புண் சுமக்கும் பசங்களின் முதுகை நாமும் தடவிக் கொடுக்கத்தான் செய்கிறோம் மனசுக்குள்.

'கடைசியா மொகம் பார்க்கிறவங்கள்லாம் பாத்துக்கங்கப்பா...' என்று சொல்லிவிட்டு ஊருக்காக உழைத்ததால் இறந்த பின்னும் கருத்துப் போகாமல் மினுத்துக் கொண்டிருக்கும் தன் ஆசான் சாண்டோராஜ் வாத்தியாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கும் மாசாணம். அடுத்தவங்க நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிற நிறையப் பேர் மனக்கண்ணில் வந்து போனார்கள்.

'என் கூடப் பொறந்தவங்க மொத்தம் நாலு பேர்... அதுல ஒருத்தங்க திருநங்கை' என தன் தம்பி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அம்மாவாக மாறிப் போன சுதா என்னும் செந்தில். திருநங்களைகள் தொழில், வேலை வாய்ப்பென வளர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் இந்தச் செந்திலும்... மன்னிக்கவும் சுதாவும்.

'இனி இந்தக் காசைச் சேர்க்கிறதுக்கு என் குரலு போவாம இருக்கணும் சார்... ஜானகி என் மொகத்தைப் பார்த்துரணும் சார்...' என்று சொல்லும் திருச்சி வோகநாதன். இவரைப் போல எத்தனை பேர் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமின்றி தங்களை நம்பியிருப்போருக்காகவும் பாடுவார்கள்... வேனில் அமர்ந்து 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...' எனப்பாடும் பலரை தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகே பைக்கில் போனபடி கடந்து சென்றது ஞாபகம் வந்தது.

'பாவம் அந்த மூதேவிக்கு கொழந்த பொறக்கப் போவுது... கூட நூத்தி அம்பது ரூபா கெடச்சா சந்தோஷம்தான அசிஸ்டெண்ட் சார்' எனச் சொல்லும் ஒரு படத்தில் நடித்த போஸ்டரால் வாழ்வை இழந்து நிற்கும் வைரம். திருப்பம் வருமென காத்திருக்கும் இவரைப் போல பலர், இதுதான் திருப்பமென ஆவலில் நுழைந்து வாழ்வையே இழந்த கதையைப் பார்த்திருக்கிறேன்.

'ரோஸி இப்போதைக்கு இந்தத் துணியை வச்சிச் சமாளி... நா போயி நாப்கினை எடுத்துட்டு வந்துர்றேன்...' எனச் சொல்லும் மனநலம் பாதிக்கப்பட்டு குணமான பின்னும் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் மனநல மருத்துவமனையிலேயே தங்கி இருக்கும் குணா. 'அவன் போறான்... பைத்தியக்காரன்...' என வீட்டாரே சொன்னதை எங்க பங்காளி வீட்டிலேயே கேட்டிருக்கிறேன்... நல்லா வந்து... பின்னர் மீண்டும் பைத்தியமாகி... மறுபடியும் நல்லா வந்து என அமாவாசை, பௌர்ணமி என மாறிமாறி நகர்ந்து இறுதியில் இறந்தே போனார்.

'கடலோடு பொறந்து கடலோடு வாழ்ந்த எங்கள தடுக்க நீ யாருடா...' என தங்கள் வாழ்விடத்துக்காகப் போராடும் தேசப்பனும் வள்ளியும். இப்படித்தான் பல இடங்களில் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. நல்ல இடம் தருகிறோம் எனச் சொல்லி நகர்த்தி விட்டு கண்டும் காணாமலும் போகும் அரசு அதிகாரிகளை நாம் பார்த்ததில்லையா..?

'முடியாது... முடியாது... மொதலாளி ஏசுவா' எனச் சொல்லும் நாகர்கோவிலுக்கே இராசியாகிப் போன நாரோயில் கிட்ணா. ராசிக்காரன் என்றாலும் அவன் மனசு வைக்க வேண்டும்...  பள்ளியில் படிக்கும் போது எங்க ஊருக்கு அருகில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார்... 'அம்ம்மா' என்றுதான் சத்தமிடுவார்... அது பெரும் சப்தமாக இருக்கும். கடைகளில் அவருக்குக் காசு போடுவார்கள். அம்பது பைசா, ஒரு ரூபாயெல்லாம் போட்டால் எடுத்து வைத்துவிட்டுப் போய்விடுவார். பத்துகாசு போதும் என்பார். அப்படித்தான் கிட்ணாவும் அவனுக்குத் தேவை எதுவோ அது போதும்... தன் கைராசியை அவன் அறிந்திருக்கவேயில்லை. அப்படி அறிந்திருந்தால் கோடிஸ்வரானகியிருப்பான்தானே...

'மச்சி... இந்த தடவ... என் வெளையாட்ட யாராலும் தடுக்க முடியாது... வெளையாடிட்டே இருக்கறவந்தான் மெஸி ஆவ முடியும்... வெளையாடவே கூடாதுன்னு சொன்ன என் அம்மாவே பால் குடுத்தாச்சு... வேல்டு கப்புல நா ஆடறது அம்மா பாக்கும் மச்சி...' என நம்பிக்கையோடு சொல்லும் குடியால் மதி மயங்கி மீண்டு வந்திருக்கும் மெஸி. இப்ப டிஸ்டிரிக் விளையாடுறேன்... அடுத்து தமிழக அணிதான் என்ற கனவோடு விளையாண்டவன் அரசியல் விளையாட்டில் தேவகோட்டையில் மளிகைக் கடை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

'ஏதாவது பத்தலைன்னா... சொல்லி விடுங்கடா... பார்த்துக்கலாம்...' என தன் கஷ்டத்தை எப்போதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கொடை வள்ளலாகவே வாழும் சேகர். இப்படி நிறையப் பேர்... எங்க பேராசான் கூட இன்னும் வாடகை வீட்டில்தான் என்றாலும்... உதவி என்று போய் நிற்பவர்களுக்கு இல்லையென்று சொல்வதே இல்லை... இன்றும் பலருக்கு உதவிக் கொண்டேதான் இருக்கிறார் எந்த எதிர்பார்ப்பும் இன்றி... இப்படி மனிதர்களுடன் வாழ்தல் மட்டுமல்ல... அவர்களின் அன்புக்குப் பாத்திரமாதலும் வரமே.

'எங்க போனாலும் எங்கள தொரத்துறானுங்கய்யா... ஊரு பேரு இல்லாத... நாதியத்த பயலுவதான்னு நெனக்கிறானுங்க... ஈனப் பயலுவ... ராவுக்கெல்லாம் அடிவயிறு வலிக்குதுன்னு அழுதாய்யா' எனச் சொல்லும் குறவர்களின் இறப்பு பற்றிப் பேசும்  வாழ்க்கைக் கதையில் தங்கள் நிலை சொல்லி வருந்தும் மேஸ்திரி. இது எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதான் எனக் கடந்து போனாலும் அவர்களின் வலியை என்ன சொல்வது..? எங்கள் ஊருக்குச் செல்லும் வழியில் நரிக்குறவர் காலணி இருந்தது... இப்போதும் இருக்கிறது அந்த வீடுகளில் வேற்றுச் சாதியினர்தான் இருக்கிறார்கள். அவர்கள் திருவிழா... ஏழு பானையில் பொங்கல் வைப்பது... எருமை மாடு வெட்டுவது... என சிறப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர் படமெல்லாம் ஓட்டுவார்கள். அங்கு போகக்கூடாது... கருமம் என வீட்டில் திட்டினாலும் போய்ப் படம் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்கள் அழகுதான்... அழுக்கோடு இருப்பதே பாதுகாப்புதான் என்பதால் அப்படி இருப்பார்கள் என்றுதான் நான் நினைத்துக் கொள்வேன். இல்லையேல் கர்ப்பிணி என்றும் பாராமல் மேஸ்திரி பொண்டாட்டியைத் தொட்டவர்களைப் போல் பலருக்கு குறத்திகளும் இரையாகக் கூடும் இல்லையா..?

'ஏன் தலைவருங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டாங்களா... இல்ல அவங்கள பொயித்தான் யாராவது கேட்டமா.... அந்த மாதிரித்தான் இதுவும்...' எனச் சிரிக்கும் பூகம்பம். அப்பன், அம்மா, மகன் என மூவரும் மூன்று கட்சியில்... இது எல்லா இடத்திலும் உண்டு. எங்க ஊரில் ஓரே வீட்டில் நாலு கட்சிக்கு மாவட்டச் செயலாளர்கள்... நால்வரும் கூட்டுக் குடும்பமாய் ஒரே வீட்டில்... எந்த அரசு வந்தாலும் அவர்களுக்கு லாபமே. பெத்த அரசியல்வாதின்னா அது சாத்தியம்... பூகம்பம் போன்றோர் 'என் இனிய வாக்காளப் பெருமக்களே...' சொல்ல மட்டும்தான் முடியும்... வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதால்தான் தலைவன் வீட்டில் இருக்க நாம் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறோம் எப்போதும்.

'சார்... வெளிய போங்கன்னு சொல்றது ஓகேதான்... அதுக்காக... புள்ள செத்து போயிடும்ன்னு சொல்றது தப்பில்லயா...'  எனச் சொல்லும் நான்... அந்த நான் வாசிக்கும் நாமாகக் கூட இருந்திருக்கலாம். இங்கே இதன் ஆசிரியர் மருத்துவமனையில் தகப்பனாய்த் தவித்திருக்கிறார். குழந்தைக்கு உடல் நலமில்லை என ஒருநாள் மருத்துவமனையில் இருந்து பாருங்கள். அப்போது தெரியும்... அந்த நரக வேதனை. நானும் அனுபவித்திருக்கிறேன் என் மகளுக்காக... அதன் பின்னும் தீராத பிரச்சினைக்காக பல வருடம் ஒரு மருத்துவமனையில் காட்டிக் கொண்டே வந்தோம். எத்தனை காலம்தான் தலை, உடம்பென வயர்களை வைத்து சிகிச்சை அளிப்பது...? எத்தனை காலத்துக்குத்தான் மாத்திரை கொடுப்பது..? அப்போதுதான் நண்பர் மூலம் ஔவை நடராஜனின் சகோதரர் இதைச் சரிபண்ணுவார் என அறிந்து அங்கு சென்றோம். பார்த்ததும் அவர் கேட்ட கேள்வி ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்கதானே... புள்ளைய கொன்னுக்கிட்டே இருந்திருக்கீங்க...  மொதல்ல வெளியே போங்க... நான் உங்க முன்னாடி பிள்ளையைப் பார்க்க மாட்டேன் என்றார்... அதன் பின் சமாதானமாகி முதல்ல அந்த மாத்திரை சாப்பிடதால் வந்த பாதிப்பைச் சரி பண்ணுவோம் என மருத்துவத்தை ஆரம்பித்தார்... நான்கு மாதத்தில் இரண்டு முறை சென்றோம். இனி வரவேண்டாம்... போதும் என்றார்... அதன் பின் அந்தப் பிரச்சினை போன இடம் தெரியவில்லை. படக்கெனப் பேசும் மருத்துவர்கள் நல்லவர்களே.

'ஆனா ஒண்ணுலே.... அப்பவும் டிஸோசா பிரஷ்தான் புடிச்சேன்... இப்பவும் பிரஷ்தான் புடிக்கேன்' எனச் சிரிக்கும் டிஸோசா. இதைப் பார்த்தபோது சமீபத்தில் பார்த்த வினீத் ஸ்ரீனிவாசனின் மனோகரம் மலையாளப் படம்தான் ஞாபகத்தில் வந்தது. அதிலும் இப்படித்தான். பெயிண்டரானவன் டிஜிட்டலாக மாறிப்போன ஊரில் தானும் மாற நினைத்து என்னவாகிப் போனான் என்பதைச் சொல்கிறது. உண்மையில் ரசித்துப் பார்த்த படம். கல்லூரியில் படிக்கும் போது நண்பன் நம்மைப் பார்த்து அப்படியே வரைவான்... இப்போது அவன் வரைவதில்லை... வாழ்க்கை அவனை வச்சிச் செய்து கொண்டிருப்பதால் அதன் பின்னே நகரவே அவனுக்கு நாட்கள் போதவில்லை.

'மண்ண நம்பி வாழ்ற எங்களுக்கு... எந்த நோவும் வராது சார்... உட்கார்ற இடத்துல பொறந்து... போற ஊர்ல செத்து... பொதச்சுட்டு போய்ட்டே இருப்போம் சார்...' எனச் சொல்லும் வெட்டுக்கார முனுசாமி. இவர்கள் பிரசவம் பார்ப்பது போல்தான் நாடோடிகளாய் நகரும் பலர் பார்த்துக் கொள்கிறார்கள். நாம்தான் மருத்துவர்கள் சொல்வதை நம்பி கிழித்தெடுக்கிறோம். என் மகள் பிறந்த போது 'புள்ள நல்லாயிருக்கு... வலி வந்ததும் பொறந்துடும்' எனச் சொல்லிச் செல்ல, இட்லி சாப்பிட அமர்ந்தவரை ஏதோ டெஸ்ட் எடுக்கணும் எனச் சொல்லி அழைத்துச் சென்ற மறுவினாடி, குழந்தை கொடி சுற்றியிருக்கு ஆபரேசன் பண்ணலைன்னா ஆபத்து எனச் சொல்லி அறுத்தார்கள்... அதெல்லாம் பணத்துக்கான் அறுவைதான்... அந்த வலியை இன்னும் சுமப்பது என் மனைவிதானே. அவர்களுக்கென்ன... இவரைப் போல் பல பேர்...

'ஏன் சார் கேக்குறே..? இருக்கும் போது ஜாதி மதம் மயிருன்னு பேசுவான்... அடிபட்டுக் கொழ கொழன்னு கெடக்கும்... எவ்ளோன்னாலும் பரவயில்ல பாடிய தூக்குங்கன்னுவான் பார்ட்டிக்காரன்... நமக்கு அதுல்லாம் இல்ல சார்... தலைல சுமந்தா கூலி... வேலன்னு வந்தாக்கா சந்தோசமும் கெடயாது... வருத்தமும் கெடயாது...' என ஸ்டெக்சரைத் தூக்கிக் கொண்டு நடக்கும் பாடிமேன் தர்மன். ஆம் இவரைப் போன்றோர் சிதைந்து சின்னாபின்னமான உடம்பையும் பொறக்கி எடுத்து அள்ளிக் கொண்டு போவதில்தான் வாழ்க்கை இருக்கிறது. இறந்தவனின் நகைகளை போலீசுக்குத் தெரியாமல் உரியவரிடம் கொடுக்கும் அந்த மனசுதான் இவர்களை மனிதர்களாய் மட்டுமல்ல தெய்வங்களாகவும் கையெடுத்துக் கும்பிட வைக்கிறது இல்லையா..?

'இதுதான் மாப்ள என்னோட குரல்... இத ஏன் நா மாத்திக்கணும்...' எனச் சொல்லும் டி.எம்.எஸ். போலப் பாடும் மாரி. ஆம் எதற்காக, யாருக்காக நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். என் எழுத்தைப் பலர் அழுகாச்சி எனக் குறை சொல்லி அதிலிருந்து மாறி வா என்று சொல்லும் போதெல்லாம் நான் சொல்வது 'உங்களுக்காக நான் ஏன் என் எழுத்தை மாற்ற வேண்டும்...' என்பதுதான்.

'கடல் இன்னாடா தப்புப் பண்ணிச்சு... நாம போட்ட குப்பய நம்மளாண்ட வந்து குடுத்துட்டுப் போச்சுடா..' எனச் சொல்லி கடலுக்குப் பூ அள்ளிப் போடும் சுனாமியில் மனைவியையும் மகனையும் பறிகொடுத்த பாம்பு நாகராஜ். கடலம்மா எனக் கும்பிடும் இவர்கள் யாரும் கடல் மீது கோபம் கொள்வதில்லை... பீச்சுக்குப் போகிறோமென அதை நாறடிக்கும் நாம்தான் அதைத் தூற்றிக் கொண்டிருக்கிறோம். அதனதன் வாழ்வை அப்படியே வாழ விட்டோமென்றால் அது ஏன் நம்மீது திரும்பப் போகிறது...?

'காயல் விழியாளே... உன்னை கோத்தித் தின்னப் போகிறேன்...' என போதையில் தன் மனதுக்குப் பிடித்த சாந்தகுமாரியிடம் பேசி, பின் வருந்தி மீண்டும் பேசும் போது சிங்கமெனப் பேசும் ஜம்பு. பிடித்த பெண்ணுடன் நடித்தல் என்பது சுகமே... ஆனால் வில்லனாக என்னும் போது கஷ்டம்தான்... அவளை எனக்குப் பிடிக்கும்... ஆனா எப்போதோ ஒருநாள் கல்லூரி வாசலில் ஸ்டிரைக்கின் போது இளையராஜா அவளைக் கேலி செய்து பாடல் பாடியபோது அருகிருந்தவன் நான் என்பதால் முன்பு புன்னகைத்த முகம் இப்போது சுட்டெரிக்கிறது பங்காளி எனச் சொன்ன நண்பன்... இறுதி ஆண்டில் அவளைப் புன்னகைக்க வைத்தான்... காலம் அவர்களைப் பிரித்துத்தான் வைத்தது... இங்கே ஜம்பு சாந்தகுமாரியை அடுத்த காட்சியிலேயே தனக்குள் இழுத்துக் கொள்கிறான்.

'பார்த்தியா ஜம்பு... நாம சரியாத்தானே யோசிக்கிறோம்... எவ்ளோ அப்ளாஸ்... என் கதையை அவங்க எடுத்துட்டாங்கன்னு நா கவலப்படல... எனக்கு அவங்க நம்பிக்க  குடுத்துருக்காங்க.... நம்மால சினிமா பண்ண முடியும்... நெயிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க...' என நம்பிக்கையாகப் பேசும் கலை. நானும் நடிகனாகனும் இயக்குநராகனும் என மேற்கு மாம்பலத்தில் ஒரு மொட்டை மாடியில் அமர்ந்து பேசும் என் நண்பர்களுடன் நானும் அவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். அடுத்த நாள் காலை ஒரு சீரியல் சூட்டிங் இருக்குன்னு கிளம்பி ஓடுவார்கள்... இன்னும் ஒடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன கதைகள் எல்லாம் படங்களாக வருவதைப் பார்க்கத்தான் முடிகிறது. பேர்தான் வேறாக இருக்கிறது.

'தமிழனுக்கு ஒரு நாடு வேணும்னு நெனக்கிற உங்க மனசுக்காகவே தமிழ் ஈழம் அமையும்ணே... அப்பிடி அமைஞ்சதுன்னா அப்பவாவது உங்கள மாதிரியானவங்களுக்கு ஒரு வீடாவது இருக்கும்ன்னு தோணுதுண்ணே...' என அருகில் போகவே அஞ்சும் குஷ்டரோகிகளுடன் அமர்ந்து பேசி, கடிதம் எழுதி, அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கும் குட்டக்கையன். எங்க ஊருக்கு அருகில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் முகாம். அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறோம். தமிழ் மீது நாம் கொண்டிருப்பதெல்லாம் அவர்கள் மொழி மீது கொண்டிருக்கும் பற்றுக்கு முன் சாதரணமே. இன்னமும் நம்மட நாட்டில் போய் வாழும் காலம் வரும் என அவர்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாம் கனவாய்ப் போய்விட்டது என்பதுதானே உண்மை.

'எம்மோவ் சும்மா அழுவாத.... கல்யாணம் பண்ணிக்கினு இன்னா பண்ணச் சொல்ற... எந்நேரமும் கழுத்த குறி பாத்துகினு ஒரு கத்தி இருந்துக்கினே இருக்குது... எப்ப வேணா போட்டுருவானுங்க... ஒரு பொண்ணோட வாழ்க்கய கெடுக்கச் சொல்றீயா..?' என எதார்த்தமாய்ச் சிந்திக்கும் கைமால் செய்ய ஆரம்பித்து ரவுடியாகிப் போன குட்டக்கையன். கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பதைப் பார்த்துத்தானே வளர்ந்து வந்திருக்கிறோம். இன்று அவனை வெட்டினால் நாளை வெட்டியவனை வேறொருவன் வெட்டுவான்... அந்த வாழ்க்கை எப்போதும் கத்தி மீது நடப்பது போல்தான்.

'சாமி நாளைக்கும் வாங்க சாமி.... இருபத்தி அஞ்சு ரூபா கொடுங்க... எம் பொண்ணோட ஆடுங்க.... அது கல... எங்க பொழப்பு.... கூடாரத்துக்குள்ள வரணும்ன்னு நெனக்காத சாமி...' எனச் சொல்லும் கருணைபிரகாசம். எங்க ஊருக்கு கரகாட்டம் ஆட வந்த குறத்தி கூட இது எங்க பொழப்பு அதுக்காக ஆடுறோம்... ஆனா வாழ்க்கையின்னு ஒன்னு இருக்குதுங்களே... பல ஊர்ல இவ ஆடுறவதானேன்னு கை வைக்கிறாங்க... என்னத்தைச் சொல்றது... எங்கள்லயும் சிலதுக பணத்துக்காக அப்பிடி இப்படி நடக்கத்தானே செய்யிதுங்க... அதான் எல்லாரையும் ஒரே தராசில் வச்சிருறானுங்க என்று சொல்லியிருக்கிறார். எங்க ஊரில் கெட்ட வார்த்தை பேசுதல், கெட்ட ஆட்டம் போடுதல் என்பதெல்லாம் கூடாதென எப்போதும் கரகாட்டக்காரர்களுக்கு கட்டுப்பாடு உண்டு. இப்போதெல்லாம் கரகாட்டம் வைத்தால் நான்கு மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும் என காவல்துறை கட்டுப்பாடு இருக்கிறது.

'ஆனா ஓனர்... உள்ள ரொம்ப நாள் இருந்துட்டா... வெளிய வந்து தப்பு பண்ணமாட்டான் ஓனர்...' சிறையிலிருந்து வெளியே போகமாட்டேன் எனச் சொல்லி, உனக்கு விடுதலை போய்த்தான் ஆகவேண்டும் என வெளியேற்றப்பட்டு புரோட்டோ கடையில் வேலை பார்க்கும் திருநா. சிறைக்குள் இருந்து திருந்தி வரும் மனிதர்களும் இருக்கிறார்கள்... வந்ததும் மீண்டும் தவறு செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள்தானே... சிறை எல்லாரையும் மனிதனாக மாற்றுவதில்லை என்றாலும் பலர் மாறித்தான் வருகிறார்கள்.... ஆனால் நாம்தான் அவர்களை ஜெயிலுக்கு வைத்துப் பார்க்கிறோம்.

'குளோசப்பில் பார்க்கும் போது வாழ்க்கை ஒரு துயரம். ஆனால், லாங் ஷாட்டில் பார்க்கும் போது அதுவொரு நகைச்சுவை' என்று சொன்ன சார்லி சாப்ளினின் வார்த்தைகள் எத்தனை மகத்துவமானது என்று பாக்கியம் சங்கர் குட்டக்கையன் கதையில் எழுதியிருப்பார். அது உண்மை... இவர்களை எல்லாம் அருகில் போய் பார்க்கும் போதுதானே நம்மால் எல்லாம் அறிய முடிகிறது. தூரத்தில் நின்று பார்க்கும் போது எதையும் பற்றித் தெரிந்து கொள்ளாமல் கடந்துதானே போகிறோம்.

இப்படி நான்காம் சுவர் முழுவதும் விளிம்பு நிலை மனிதர்களின்  முகங்களை நிறைத்துள்ளார் பாக்கியம் சங்கர். இங்கு நான் சொன்னவர்கள் எல்லாம் ஒவ்வொரு தலைப்போடும் ஒன்றிப் பயணித்தவர்கள். இவர்கள் அல்லாது ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் இன்னும் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் கதையையும் இல்லை வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒவ்வொரு கட்டுரையையும் நீங்கள் ரசித்து மட்டுமல்ல... அந்த மனிதர்களை அருகில் அமர்த்தி வாசிக்க வேண்டும்... ஒரு புது அனுபவமும் வாழ்க்கையும் உங்களுக்குக் கிடைக்கும்.

இலக்கியம்... இலக்கணம் என எந்த வரையறைக்குள்ளும் கொண்டு வர முடியாத எழுத்து மட்டுமே தன் கண் முன்னே வாழும்... வாழ்ந்த மனிதர்களைப் பற்றிப் பேசும்... அவர்களின் வாழ்க்கையை ஜிகினா சேர்க்காமல் அப்படியே சொல்லும்... இப்படியானவர்களின் வாழ்க்கையை வாசிக்கும் போது வலியும் வேதனையும்தான் மிஞ்சும் என்றாலும் ஒரு சில நேரங்களில் இதழோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று கண்டிப்பாகப் பூக்கும். அது அந்த மனிதனின் வலியால் அல்ல... அவனின் விசாலமான மனசால்... இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போனது எனக்கு அடிக்கடி அப்படிப்பட்ட புன்னகை பூக்கத்தான் செய்தது.... நான் இவர்களை எழுதவில்லை என்றாலும் கிராமத்து மனிதர்களையே என் கதைகளில் எழுதி வருவதால் இந்தப் புன்னகை பூத்திருக்கலாம்.

இப்படிப்பட்ட நிறைந்த மனங்கொண்ட மனிதர்களை. அவர்களெல்லாம் அருவறுக்கத் தக்கவர்கள் என ஒதுக்கும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட, சிறைபட்ட மனசுக்காரர்களாகிய நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கும் பாக்கியம் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாசிப்பவரை ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை... இது அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. அருமையான, கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த நான்காம் சுவர்.

Image result for நான்காம் சுவர்

தொம்பரக் கூத்தாடியில் பாக்கியம் சங்கர் பகிர்ந்திருந்த கவிஞர் வெயிலின் கவிதையையும் இங்கு பகிரவேண்டும் எனத் தோன்றியது... 

'ஆகாச விரிவு கண்டு அஞ்சி
இமைகளை இறுக்கிக் கொள்ளும் குழந்தை
கம்பத்தினுச்சியில் மல்லாந்து கிடக்கையில்
தயவு செய்து பிச்சையிருங்கள்
இன்றேல்,
வில் தைத்த பறவைக் குஞ்சாய்
விழும் பஞ்சுடம்பை ஏந்துகையில்
தகப்பனின் கைகளைத் தட்டிவிடுங்கள்'.

நான்காம் சுவர்
பாக்கியம் சங்கர்
யாவரும் பதிப்பகம்
ஜூலை 2019 வெளியீடு
விலை ரூ. 375

வாசிக்க வேண்டிய புத்தகமெனக் கொடுத்த சகோதரர் இராஜாராமுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படிக்கத் தூண்டும் விமர்சனம்