புதன், 27 பிப்ரவரி, 2019

மனம் பூக்க வைத்ததா 'மணல் பூத்த காடு'?

'மணல் பூத்த காடு'

மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கும் ஒரு மனிதனால்தான் அதன் மீதான தன் காதலை வசீகரிக்கும் எழுத்தாக்க முடியும். அப்படித்தான் எழுத்தால் வசீகரித்திருக்கிறார் கனவுப்பிரியன் என்னும் முஹம்மது யூசுஃப்.

கூழாங்கற்கள், சுமையா என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களைக் கொடுத்த கனவுப்பிரியன் அவர்கள் மணல் பூத்த காடு என்னும்  முதல் நாவலினை தன் இயற்பெயரிலேயே எழுதியிருக்கிறார். அது தேவை என்பதால் கனவுப்பிரியனைத் துறந்திருக்கிறார். இனி முஹம்மது யூசுஃபாகவே தொடர்வார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்நாவல்.

முழுக்க முழுக்க சவுதி மண்தான் மணக்கிறது நாவல் முழுவதும்... நாம் அறியாத ஒரு நாட்டின் பெரும்பாலான இடங்களை நாவல் மூலம் நமக்கு அறியத் தருகிறார், கூடவே நாம் அறியாத மூஸ்லீம் மதம் தொடர்பான நிறைய செய்திகளுடன்... இங்கு நாம் என்பது முஸ்லீம் அல்லாத நாம்... நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியாதவை என்பதைவிட நமக்குப் புரியாதவைதான். 

சவுதியின் எல்லா இடங்களுக்கும் நம் கை பிடித்து அழைத்துச் செல்லும் நாயகன், அந்நாயகனிடம் 'இங்கு போ...', 'அங்கு போ...', 'இதைப் படி...', 'அந்தப் படம் பார்...' எனச் சொல்லி இயக்கும் நாயகனுக்கு நாயகன், நட்பு வட்டம், அலுவலக நட்புக்கள், செல்லும் இடமெல்லாம் உதவி புரியும் நட்புக்களின் நட்புக்கள் என அன்பால் விரிந்து கிடக்கிறது  பாலையின் மணல்வெளி.

Image result for மணல் பூத்த காடு

புதிதாக சவுதிக்கு வந்த மகனுக்கு மழையில் நனையும் ஆசை வருகிறது... அது மழையில் நனையும் ஆசைதானா என்றால் இல்லை என்பதே உண்மை... காரணம் பாலை நிலத்தில் மழையில் நனையும் ஆசை என்பது எளிதாய்க் கிட்டிவிடுவதில்லை.... ஊரில் இருந்து வருபவர்களுக்கே தோன்றும் ஊருக்குப் போக வேண்டுமென்ற உள்ளத்து ஆசையை மழையில் நனைய வேண்டுமென்பதாய் முன் வைக்கிறான். மகனின் ஆசைக்காக உடனே  ஊருக்குப் போக வழியற்ற தந்தை ஹம்மாது மழையில் நனையவென பெட்ரா என்னும் ஊருக்கு கூட்டிப் போகிறார். அதே நேரத்தில் பின்பொரு நாள் ஹம்மாது வேலை செய்யும் தோட்டத்துக்கு ஒட்டகபால் குடிக்கச் சென்று அவரின் மகனையும் நல்ல வேலையில் சேர்த்துவிட தன்னுடன் அழைத்துச் செல்லும்  அனீஸ் இந்தியாவில் இருந்து வேலைக்காக சவுதிக்கு விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறான்.  

வெளிநாட்டுக்கு வேலைக்கு வருபவர்களில் 80%க்கு மேல் குடும்ப கஷ்டம்,  வாழ்க்கைப் பிரச்சினைகள் நிமித்தமே விமானம் ஏறுபவர்களாய் இருப்பார்கள்... இருக்கிறார்கள்.  அப்படித்தான்  பயோமெடிக்கல் இன்சினியரான அனீஸூம் கடன் பிரச்சினையால் வெளிநாட்டுக்கு விமானம் ஏறுகிறான்.

கல்லூரிகள், சிறைச்சாலை, அரசு அலுவலகங்கள் என சவுதி முழுமைக்கும் இயந்திரங்களை இணைத்து அது குறித்து அங்கியிருப்பவர்களுக்கு விளக்கம் அளித்து வரக்கூடிய வேலை... மொத்தத்தில் அனீஸ் ஊர் சுற்றி... ஊர் சுற்றும் வேலையில் உள்ள சுகம் என்னவெனில் நமக்குப் பிடித்த இடங்களையும் பார்த்து வரமுடியும்... அப்படித்தான் தனக்குப் பிடித்த, தான் பார்க்க நினைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்த்து வருகிறான்.

அப்பாவின் நண்பரைப் போலிருக்கும் மீராசா ஹாஜியாரை அனீஸ் தோழப்பாவாக்கிக் கொள்ள, வார இறுதி நாள் நடைப்பயிற்சியின் போது அடுத்த வாரம் செல்ல இருக்கும் இடம் பற்றி அவரிடம் சொன்னதும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிச் சொல்லி, அது தொடர்பான புத்தகங்கள், படங்கள் குறித்தும் சொல்லுவார்... அவர் ஒரு சவூதி தகவல் அங்காடி... நடமாடும் நூலகம்.

அவர் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்லும் அனீஸ், தனக்கு இருக்கும் சந்தேகங்களை மறு வாரத்தில் அவரிடமே தீர்த்துக் கொள்ள, மீண்டும் அடுத்த வார பயணம் குறித்த பேச்சில் அங்கு காண வேண்டிய இடங்களைப் பற்றி பேசுவார். எதையும் விரிவாக பேசமாட்டார்... பார்த்துட்டு வா பேசலாம் என்பார்.இவர்தான் அந்த நடையாடியின் வழிகாட்டியாய் நாவல் முழுவதும்... இவர்தான் நாயகனின் நாயகன்... நாவலின் நாயகன்.

வெளிநாட்டு வாழ்க்கையில் வாரம் முழுவதும் வேலை... வேலை... வேலைதான்... வார இறுதி விடுமுறைநாள்தான் கொண்டாட்ட தினம். தண்ணி அடிப்பவர்கள் எல்லாம் வியாழன் இரவே ஆரம்பித்து விடுவார்கள் ஆட்டத்தை... வெள்ளி என்பது பிரியாணியுடன் படம் பார்த்து மகிழ்வாய் கழியும் நாள். அனீஸ்க்கும் ரவி, ஷேக் பாய் என ஒரு நட்பு வட்டம் கிடைக்கிறது வார இறுதியை பிரியாணி, சினிமா என ரகளையாய் கழிப்பதற்கு.

இந்த நாவல் அனீஸின் கடன் தொல்லையையோ குடும்ப நிலையையோ வெளிநாட்டில் அவன் படும் கஷ்டத்தையோ, அவனுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகத்தையோ பேசவில்லை.... மாறாக அவன் இணைக்கும் கருவிகள், செல்லும் பயணங்கள், பார்க்கும் இடங்கள் என பயணத்தை மட்டுமே பேசுகிறது. நாவலுக்கான வட்டத்துக்குள் இருந்து சற்றேயல்ல மொத்தமாய் விலகி பாலை எங்கும் பயணப்படுகிறது... 448 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகமாய்.

அனீஸ் மனைவிக்கு எழுதும் கடிதங்களில் முதல் கடிதம் மனம் கனக்கச் செய்கிறது. இறுதிக் கடிதத்தில் 'தாஜூஸ் ஸலாவத்' ஓதினேன் என்று சொல்லி அதை முழுவதுமாய் இரண்டு பக்கங்கள் கொடுத்திருப்பது தேவையில்லை என்பதாய்த்தான் தோன்றியது. மனைவியிடம் சொல்லும் போது எதற்காக முழுப்பாடலும் என அவரிடமே கேட்டபோது அரபிப் பாடல் ஒன்றை தமிழில் மொழிமாற்றம் செய்து ஓதுவது பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என பதிப்பகத்தார் விரும்பி வைத்ததாகச் சொன்னார். இருப்பினும் மனைவிக்கான கடிதத்தில் அது அவசியமில்லை என்பதாய்தான் மீண்டும் வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றியது.

எத்தனை பயணங்கள்... 

எவ்வளவு அனுபவங்கள்... 

ஒவ்வொன்றும் பல கதைகள் பேசுகிறது. இந்த நாவலில் இடம்பெற்ற சில பயணங்கள் குறித்து  புத்தகமாகும் முன் எங்களுடன் பேசியிருக்கிறார்... நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்... ஆனால் புத்தகத்தில் அவை எல்லாம் நிறைவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது. இது குறித்தான விபரம் வேணுமா..? அப்ப அந்தப் புத்தகத்தைப் படி, இந்தப் படத்தைப் பார் எனச் சொல்லி முடித்து விடுகிறார்... சில வில்லங்க அரசியலை விரிவாய்ப் பேச வேண்டாமே என்பதாய்தான் நிறுத்தியிருக்கிறார் என்றாலும் பல விஷயங்களை முடிந்தளவு விரிவாய்ப் பேசியிருக்கிறார்.

வஹாபியிசம் பற்றி, வஹாபிகளால் வரும் பிரச்சினைகள், அவர்கள் எப்படி... யாரால்... எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள் என்பதை எல்லாம் மிக விரிவாகப் பேசியிருக்கிறார். 

 ஓட்டகம் நீரைத் தன் திமிலில் சேமித்து வைப்பது போல சவுதியில் ஊர் சுற்றியாய்த் திரிந்து செய்திகளைச் சேகரித்து, அதைத் தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டு இன்னும் இன்னுமென புதியவற்றைத் தேடி அலையும் அனீஸ், விடுமுறையில் ஊருக்கு வரும் போது மனைவி மக்களுடன் மகிழ்வாய் கழித்தாலும் ஊரிலும் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்... அவன் மனம் பயணத்துக்குள் சங்கமித்து விடுகிறது. எங்கு சென்றாலும் பயணப்படனும்... புதியவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதாய் அவனை மாற்றிவிடுகிறது பாலையில் பயணித்த காலங்கள்...

மீண்டும் சவுதிக்கு வருபவனுக்குப் பிரச்சினைகள் எல்லா விதத்திலும் ஆரம்பிக்கிறது. பாலை மண்ணும் காற்றும் இன்னும் காதலோடு இருக்க... நண்பர்களாய் இருந்தவர்களில் பலர் எதிரிகளாய் மாறுகிறார்கள். தோழப்பா தந்தையாக நிற்கிறார் இறுதிவரை...  

சவுதியில் அவனுடன் ஒரு பூனை இருக்கிறது... வழியில் அவனுடன் இணைந்த இந்தப் பூனை... ஏதோ ஒரு பாசத்தில் அவனுடன் பிணைந்து கிடக்கிறது. நம்ம ஊரில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்போம்... இந்தப் பாலை நிலங்களில் பூனைகள் குறுக்கிடாமல் எங்கும் செல்ல முடியாது. அந்தப் பூனையும் பேட்டா என்று அழைக்கும் பாகிஸ்தானி டிரைவரும் மட்டுமே தோழப்பாவைப் போல அவன் மீது பாசமாய்... 

பிரச்சினைகள் சூழ, அதிலிருந்து மீள நினைப்பவன் எவரிடமும் சொல்லாமல் சவுதியில் இருந்து மன வருத்தத்துடனேயே விடைபெறுகிறான். பாலை மண்ணின் மீதான அவனின் பெருங்காதலை மனித மனங்கள் உடைத்து விடுகின்றன.

கல்லில் இருந்து ஓட்டகம் வந்த கதை கேட்ட நண்பனின் குழந்தை, அந்த ஒட்டகம் இப்ப வருமா? என்று கேட்க, அருகில் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அரபி என்னவென்று கேட்டு , குழந்தைக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் நீயும் குழந்தையாக மாற வேண்டும் என்று சொல்லி, அத்தரை அவனிடம் கொடுத்து இதை நான் சொல்லும் போதெல்லாம் நீயும் முகர்ந்து பார், அந்தக் குழந்தையையும் முகரச் சொல் என்று சொல்லி ஒரு புது உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறார்.

அதே போல் ஜபல் அல் நூர் மலையின் உச்சியில் உள்ள குகையில் இருந்து பார்த்தால் தூரத்தில் இருக்கும் உலகின் முதல் பள்ளியான 'காபா' தெரியும். அதைக் காணச் செல்லும் போது அனீஸ் மயக்கமுறுகிறான்... அதன் காரணமாக படுக்க வைத்துவிட்டு மற்றவர்கள் மேலே செல்ல, மயக்கம் தெளிந்து எழுந்தமர்பவனைக் கடந்து செல்லும்  கைத்தடி ஊன்றியபடி மேலிருந்து இறங்கி வரும் பெரியவர் 'ஸலாவத் ஓது' என்று சொல்லிப் புன்னகைக்கிறார். அந்த உருவத்தில் தன் அப்பாவைக் காணும் அனீஸ் அதன் பின் மீண்டும் நடந்து மேலேருகிறான்.

குகையில் அமர்ந்து 'காபா'வைப் பார்க்கும் போது ஆட்கள் செல்லாமல் இருக்கப் போடப்பட்டிருக்கும் இரும்புக் கிராதிகளைத்தாண்டி இளம் வெள்ளாடு ஒன்று காபாவைப் பார்த்தபடி நிற்கிறது. அனீஸ்க்கு எப்படி ஆடு வந்ததென ஆச்சர்யம்... இப்படியான சில ஆச்சர்ய நிகழ்வுகளும் நாவலுக்குள் சிதறிக் கிடக்கின்றன... பயணக் களைப்பைப் போக்கும் விதமாக.

சித்ரா மாமி, புத்தகங்கள், பட்டிமன்றம் என நகரும் இடத்தில் சித்ரா மாமி, காபியெல்லாம் எனக்கு வேறொரு நிகழ்வை ஞாபகமூட்டியது. தம்பி எழுத்தாளர் நௌஷாத்தும் கவிஞர் பிரபும் வந்து போனார்கள் ஆனால் இது சவுதியில் என்பதால் ஞாபகத்துக்கு சிறையிட்டாச்சு. சித்ரா வைத்திருக்கும் புத்தகங்கள் குறித்த பேச்சுக்களும் புத்தகங்களைப் பார்க்க வேண்டும் என்பதும் பாதி படித்த புத்தகமாய் மட்டுமே... முழுவதுமாக பேசப்படவில்லை.

சவுதி வெயில் தகிக்கும்  பாலை நிலம் என்றும் அங்கிருக்கும் சட்டதிட்டங்கள் மோசமானவை என்றும் நினைத்திருப்போர் மத்தியில் அந்தப் பாலையில் பல பசுமை இருக்கிறது... சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தாலும் நமக்கான நல்வாழ்வு அங்கிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்.

அவர் பேசும் வரலாறுகள் எந்தளவுக்கு உண்மை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்தப் புத்தகத்துக்கான அவரின் உழைப்பு மிகக் கடுமையானது... இதற்காக அவர் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். நிச்சயம் அவரின் உழைப்பைக் கொண்டாட வேண்டும்... கொண்டாடுவோம்.

எழுத்துப் பிழைகளை ஒரு குறையாகக் கூறி சிலர் எழுதுவது வருத்தமளிப்பதாய் இருக்கிறது. பதிப்பகத்தாரின் தவறினால் நிகழ்ந்தது அது அடுத்த பதிப்பில் சரி செய்யப்படும் என்ற போதும் அதை பெரிதாக்கிப் பேசுவதில் என்ன லாபம் இருக்கப் போகிறது..?

நடையாடியாய் இருந்தால் உனக்கு இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருப்பார் தன் முன்னுரையில்... அது உண்மைதான் நாவலோடு பயணப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்...  நீண்ட பயணம்... பயணம் அலுக்க, பயணப்பட்டது போதும் என்ற எண்ணம் தோன்றினால் நாவல் நமக்கு அயற்சி அளிக்க ஆரம்பித்துவிடும். அதன் பின் பக்கங்கள் மெல்லத்தான் பயணிக்கும்.

வெளிநாட்டு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்னடா இது வார விடுமுறை, பிரியாணி, சினிமா என திரும்பத் திரும்ப வருதேன்னு தோன்றும் என்றாலும் ஊரில் இருப்பவர்களுக்கு இங்கான வாழ்க்கை இப்படிதான்... எல்லாரும் சொகுசாக வாழ்ந்து விடுவதில்லை என்பதை அறியும் போது உனக்கென்ன வெளிநாட்டு வாழ்க்கை என்று சொல்லும் மனநிலையில் இருந்து மாறிக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

Image result for கனவுப்பிரியன்

நாவல்களுக்கான ஆதி வடிவத்தை உடைத்தெறிந்து பயணப்படும் 'மணல் பூத்த காடு' உலகெங்கும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை... விருதுகளையும் அள்ளிக் குவிக்கும்... குவிக்க வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் எனக்குள் இருக்கிறது... கண்டிப்பாக நடக்கும்.

மிகப்பெரிய நாவல்தான் என்றாலும் கண்டிப்பாக வாசியுங்கள்... உங்களுக்கு சவுதி குறித்தான வித்தியாசமான... இதுவரை உணர்ந்திராத அந்த மண் குறித்த புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

மொத்தத்தில் 'மணல் பூத்த காடு' வாசிப்பனுபவம் உங்கள் மனதைப் பூக்க வைக்கும்.

யாவரும் பதிப்பகம்.
பக்கம் : 448
விலை : 500
எழுத்தாளரின் மின்னஞ்சல் : usooff@gmail.com 


*******************

பிரதிலிபி சிறுகதை போட்டியில் இருக்கும் சிறுகதை... வாசிக்காதவர்கள் வாசிக்க....

"அவரை வெறி ஏத்திப் பாக்காதே... அவரு வெறியானாருன்னா என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும்ல்ல... கேட்டதுக்குப் பதில் சொல்லு.... அவளோட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு..." கோவில்ல சாமி ஆடுறவரைப் பார்த்து பக்கத்துல இருக்கவரு ஆத்தா உக்கிரமாயிருக்கான்னு ஏத்தி விடுற மாதிரி அம்மா அவ பங்குக்கு சாம்பிராணி போட்டாள்.

அப்பாவின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது. எப்பவும் பந்து வீசலாம்... களத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.

-'பரிவை' சே.குமார். 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

அமீரக எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா


மீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் வாட்ஸப் குழுமத்தைச் சார்ந்த எட்டு எழுத்தாளர்களின் ஒன்பது புத்தகங்களின் வெளியீட்டு விழா நிகழ்வு வெள்ளி மாலை நடைபெற்றது.

ஒரு விழாவிற்கான திட்டமிடலும், அதனை நினைத்தபடி நடத்தி முடித்தலுமே அவ்விழாவினைச் சிறப்பாக்கும். அப்படியான முன்னெடுத்தலை எடுத்த அண்ணன்கள் ஆசிப் மீரான், பாலாஜி மற்றும் அவர்களுடன் உழைத்த நண்பர்களுக்கும் விழாவை மிகச் சிறப்பாக்கிய அனைவருக்கும் பகிர்வுக்குள் செல்லும் முன் அமீரக எழுத்தாளர் குழுமத்தில் ஒரு உறுப்பினராய் எனது நன்றி.

ஆமாம்... என்னென்ன புத்தகங்கள் வெளியிடப்பட்டன..? என்ற கேள்வி நமக்குள் எழும் அல்லவா. அதனால் நிகழ்வு குறித்துப் பார்க்கும் முன் சிறு குறிப்பு ஒன்றை புத்தகங்கள் குறித்துப் பார்த்து விடலாமே....

எழுத்தாளர்கள் அய்யனார் விஸ்வநாத் பணத்துக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கையை காமம் தூக்கலாகக் கலந்து எழுதியிருக்கும் விறுவிறுப்பான 'பழி'; முஹம்மது யூசுஃப் சவுதியின் பல பக்கங்களை... சிறப்புக்களை நடையாடியாய் மனம் பூக்க எழுதியிருக்கும் 'மணல் பூத்த காடு'; தேவா சுப்பையா காதலுடன் கசிந்துருகி எழுதியிருக்கும் 'காதலே சுவாசமாக' மற்றும் தன் மண்ணின் மீதான காதலை, அம்மக்களின் வாழ்க்கையை சிறுகதையாய் செதுக்கியிருக்கும் 'யாரோ எழுதிய கதை'; பிரபு கங்காதரன் காளி மீது கொண்ட பேரன்பின் காதலை, காமம் கொப்பளிக்க கொடுத்திருக்கும் 'அம்புயாதனத்துக் காளி'; ஜெஸிலா எழுதியிருக்கும் குழந்தைகளுக்கான என்று சொல்லப்பட்டாலும் பெரியவர்களும் அறிந்து கொள்ள வேண்டிய 'மூஸா' வரலாறு; தெரிசை சிவா தன் மக்களின் வாழ்க்கையைப் பதிந்திருக்கும் 'குட்டிக்கோரா'; ஆர்.ஜே. நாகா இசையின் நிறத்தைத் தூரிகையில் தேடியிருக்கும் 'இசையின் நிறம் தேடும் தூரிகை'; ஆசிப் அண்ணன் தொகுத்திருக்கும் 'ஒட்டக மனிதர்கள்' என்ற அமீரக எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

துபையில் நடக்கும் விழாவுக்குச் செல்லுதல் என்பதுதான் சிரமம் என்பதால் பல நிகழ்வுகளுக்குச் செல்ல முடிவதில்லை. நேற்றைய நிகழ்வுக்கு என் இருப்பிடத்துக்கே வந்து அழைத்துச் சென்றார் சகோதரர் பால்கரசு. இரண்டு கார்களில் பயணம் என்பதால் எங்களின் காரோட்டியாய் சகோதரர் இராஜாராம். 

விழா சற்றே தாமதமாய் ஆரம்பித்தாலும் சிறப்பான நிகழ்வாய் அமைந்தது. காபியும் சமோசாவும் அதனுடன் கேசரியும் விழா ஆரம்பிக்கும் முன்னே வயிற்றுக்கு நிறைவைக் கொடுத்துவிட்டது. அதன் சுவையில் மயங்கி அரங்கிற்குள் செல்லாமல் எல்லாரும் அவ்விடத்திலேயே சுற்ற, பாலாஜி அண்ணன் கடையைச் சிறிது நேரம் அடைக்கும் சூழல் ஏற்பட்டது.

சிறிய அரங்கம் என்றாலும் இங்கு இலக்கிய நிகழ்வில் நிறைவதென்பது அரிதே என்ற போதிலும் இடமின்றி பலர் நின்று கொண்டிருக்கும் அளவுக்கு கூட்டம் கூடியது சிறப்பிலும் சிறப்பு.

விழாவை எப்பவும் போல் ஆசிப் அண்ணன் தொகுத்து வழங்கினார். அந்தக் காந்தக் குரலுக்கு எப்பவுமே கூட்டத்தை வசீகரிக்கும் தன்மை அதிகம். அது நேற்றும் அரங்கத்தில் நிறைந்து நின்றது. ஐயா அப்துல் ஜாப்பரின் வாரிசு என்றால் சும்மாவா..?

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட நான்கு மகளிரை மேடைக்கு அழைத்தார். நால்வரின் குரலையும் தாண்டி அண்ணாச்சியின் குரலே கணீரென ஒழித்தது. அரங்கமே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியது.

வரவேற்புரையை ரமாமலர் எதுகை மோனையுடன் ஆரம்பித்து வைக்க, அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தைப் பற்றி, அவர்களின் முன்னெடுப்புக்களைப் பற்றி அன்னையின் கருவினிலே தமிழ்பால் குடித்தவன் என்று சொல்லும் சசிகுமார் பேசினார்.

முதல் வெளியீடான தெரிசை சிவாவின் புத்தகம் குறித்து மாகவிஞன் என்று அண்ணாச்சியால் பட்டம்  பெற்ற பிரபு கங்காதரன் பேசினார். சில கதைகளைக் குறித்து சிலாகித்தார். கரகாட்டக்காரியிலேயே நின்றார். அதன் பின் புத்தகத்தை சிவாவின் நண்பர் கிருஷ்ணன் வெளியிட மகேந்திரன் பெற்றுக் கொண்டார். சிவா ஏற்புரை வழங்கும் போது குழுமத்தினையும் பழி நாவலையும் குறித்தே அதிகம் பேசினார். குட்டிக்கோராவை வாசகர்கள் பேசட்டும் என விட்டு விட்டார் போல.

அடுத்ததாக பெண்ணியப் போராளி (இந்தப் பட்டமும் அண்ணாச்சி கொடுத்ததே) ஜெஸிலாவின் மூஸா நாவல் குறித்து பேச ஆரம்பித்தால் அடித்து ஆடும் குறிஞ்சிநாதன் நிறைய விஷயங்களுடன் பேசினார். புத்தகத்தை ஜெஸிலா அவர்களின் சகோதரி வஹிதா நஜ்முதீன் மர்யம் ஸலாஹூதீன் வெளியிட மற்றொருவர் பெற்றுக் கொண்டார். ஜெஸிலா தனது ஏற்புரையின் போது புத்தகம் குறைத்து ஜார்ஷா புத்தக விழாவில் நிகழ்ந்த வெளியீட்டின் போது நிறையப் பேசிவிட்டேன் என்றாலும் இங்கும் சில விஷயங்களைப் பேச வேண்டும் எனப் பேசினார்.

மூன்றாவதாய் நாகாவின் 'இசையின் நிறம் தேடும் தூரிகை' குறித்து பேச இருந்த அஞ்சுகம் உடல்நலக் குறைவால் வர முடியாமையால் சசிக்குமார் அவர்கள் பேசினார். புத்தகத்தை வாசிக்கவில்லை என்ற உண்மையைச் சொல்லி, பண்பலையில் நாகாவின் ஆளுமை குறித்துப் பேசினார். புத்தகத்தை  முஹைதீன் வெளியிட கவிதா சோலையப்பன் பெற்றுக் கொண்டார். அதன் பின் முஹைதீன் சில நிமிடங்கள் பேசியதால் நேர்ந்த குழப்பத்தின் காரணமாக ஏற்புரைக்காக நாகா அழைக்கப்பட மறக்க, அங்கே சின்னதாய் ஒரு சீற்றம்... பாலை மண்ணள்ளவா கொஞ்சம் சூடாய்த்தானே இருக்கும். ஆசிப் அண்ணாவின் சிறிய முயற்சிக்குப் பின் மேடையேறி எனக்குத் தமிழ் தெரியாது என நடிகைகள் நன்றி வணக்கம் சொல்வதைப் போல் சொல்லிச் செல்ல, மீண்டும் அவரைச் சமாதானம் செய்யும் நிகழ்வு அரங்குக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருக்க. உள்ளே விழா தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

நான்காவதாக தேவாவின் 'காதலே சுவாசமாக' பற்றி சான்யோ  பேசினார். காதலைச் சுவாசித்து அதே காதலுடன் பேச வேண்டும் என்பதால்தான் தேவா இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் போல... காதல்... காதல்ன்னு மட்டுமின்றி தேவா... தேவான்னும் உருகிட்டார். அதன் பின் 'யாரோ எழுதிய கதை' குறித்து ஆசிரியை ஷோபியா பேசினார். சிவபாக்கியம் அப்பத்தாவைச் சிலாகித்தார். இறுதியில் புத்தகத்தைக் குறித்துப் பேசச் சொன்னதற்கு நன்றி என்பதற்குப் பதிலாய் வெளியிடச் சொன்னமைக்கு நன்றி என்றார் மேடைப் பதட்டம் போலும். புத்தகங்களை ஆசிப் அண்ணன் வெளியிட அய்யனார் பெற்றுக் கொண்டார். தேவா அவர்கள் தனது ஏற்ப்புரையில் சிவபாக்கியம் ஆயா என்னோட வாழ்க்கையில் நான் பார்த்த கதை என்றார்.

சமாதனம் அடைந்த நாகா மீண்டும் பேச வந்தார். கலைஞனுக்கே உரிய கோபம் என்றார். இதுதான் தன் முகம், பண்பலையில் பேசும் போது பணி நிமித்தம் அப்படி இப்படி மாற்ற வேண்டியிருக்கும் முகத்தை... ஆனால் சுயம் இதுவே என்பதாய்ப் பேசினார். அது நான் இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்வதாய் இருந்தது. கோபம் வரவேண்டியதுதான் மேடையில் நின்று பல முறை மன்னிப்புக் கேட்டும் கலைஞனுக்கு கோபம் வரும் என்பதெல்லாம் சற்றே அதிகமாய்த்தான் பட்டது. இருப்பினும் நாகா பேசாதிருந்தால் விழா நிறைவு பெற்றதாய் தோன்றியிருக்காது என்பதால் அவருடன் பேசி சமாதானம் செய்த நட்புக்கள் உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்கள்... சான்யோ 'அவர் அப்படித்தான்... திரும்பி வந்து பேசுவார்' என்று காதலே சுவாசமாக குறித்துப் பேசும் போதே சொல்லி வைத்திருந்தார். அதே போல் அவர் நிறைவாகப் பேசவில்லை என்றாலும் கோபம் மறந்து மீண்டும் வந்து பேசியது கரும்புள்ளியைத் கலைத்தது என்றே சொல்லலாம். 

ஐந்தாவதாக  யூசுஃப்பின் 'மணல் பூத்த காடு' குறித்து பேச வந்த ராம் சுரேஷ் அவர்கள் நாவலைப் பற்றி தனக்கு சில விமர்சனங்கள் இருக்கிறது அதை விமர்சனக் கூட்டத்தில் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லி  இது அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய மிகச் சிறந்த நாவல் என்று சொன்னார். தமிழ் மக்கள் மன்றத்தின் முரளி மற்றும் நீலகண்டன் ஆகியோர் வெளியிட தீபக் பெற்றுக் கொண்டார். யூசுஃப் பணி நிமித்தம் கேரளா சென்றிருப்பதால் திடீர் புதுமாப்பிள்ளை ஆக்கப்பட்ட பிலால் பேசினார். எங்களிடம் யூசுஃப் அவர்கள் சொன்ன அப்பாஸை மானசீக நாயகனாக வைத்திருந்த ஒரு பையனின் கதையைச் சொல்லி, முஸ்லீம் இளைஞர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைந்த புத்தகம் என்றார். யூசுஃப் நாவல் குறித்துப் பேசிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது.

ஆறாவதாய் பிரபுவின் 'அம்புயாதனத்துக் காளி' குறித்து அய்யனார் விஸ்வநாத் பேசினார். இதுதான் கவிதை... கவிதை என்று கிறுக்குபவர்கள் சற்றே ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்பதாய்ப் பேசினார். புத்தகத்தை வேல்முருகன் அவர்கள் வெளியிட அடியேன் பெற்றுக் கொண்டேன். நூல் குறித்து ஏற்ப்புரை வழங்கிய பிரபு நான் என்ன பேசுவது... படிச்சிட்டு நீங்களே பேசுங்கள் என்பதாய் உரையை முடித்துக் கொண்டார்.

ஏழாவதாய் அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி' குறித்து தேவா பேசினார். எழுத்தாளன் என்பவன் ஒரு புள்ளியில் நிற்கக்கூடாது. அவன் சாதி, மதம் கடந்து வெளியில் வரவேண்டும். பழி இலக்கிய நாவல் இல்லை என்று யார் சொன்னா... இதிலும் இலக்கியம் இருக்கு என்று தனது சட்டையின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு பேசினார். இடையில் சாரு பழி குறித்து எழுதிய முகநூல் செய்தியும் வாசிக்கப்பட்டது. புத்தகத்தை ஜெஸிலா அவர்கள் வெளியிட ஷோபியா, சான்யோ, ரமா, ஜெசி, சுடர்விழி என பெண்கள் அணி பெற்றுக்கொண்டது.  அய்யனார் விஸ்வநாத் தனது ஏற்ப்புரையில் இதுதான் என முதல் நாவல் என்றும் 2009-ல் பிளாக்கில் எழுதிய காலகட்டத்தில் பலத்த எதிர்ப்பையும் அதன் பின் பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நாவல் இது என்றும் சொன்னார்.

எட்டாவதாய் அமீரக எழுத்தாளர்களின் ஒட்டக மனிதர்கள் குறித்து ஆசிப் அண்ணன் பேசும் போது நிறைய எழுத்தாளர்கள் விடுபட்டுப் போய்விட்டார்கள் என்றும், இந்தப் புத்தகத்துக்கான முன்னட்டைப் படம் எப்படித் தேர்வு செய்தோம் என்றும் இது நிறைவான புத்தகமாக இல்லை என்றாலும் நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நிறைந்த புத்தகம் என்றார். கைக்காசை போட்டிருக்கிறேன் புத்தகத்தை எல்லாரும் வாங்குங்கய்யா என மார்க்கெட்டிங் செய்யவும் மறக்கவில்லை. ஒரளவு எல்லாரும் வாங்கினார் என்பதும் சந்தோஷமே. புத்தகத்தை மூத்த எழுத்தாளர் ஆபிதின் அவர்கள் வெளியிட எஸ்.எஸ். மீரான் அவர்கள் பெற்றுக் கொண்டார். ஒட்டக மனிதர்களில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாரும் மேடையில் இருந்தனர்.

நன்றியுரைக்கு பாலாஜியும் கூட திடீர் மாப்பிள்ளையாகத்தான் அழைக்கப்பட்டார். நம்ம பக்கத்து நக்கல் நையாண்டி ரசிக்கக் கூடியதே என்பதால் மனிதரின் பேச்சு எட்டுப் புத்தகங்களின் அறிமுக, ஏற்புரைகளைக் கேட்டு அயற்சியாய் இருந்தவர்களை புன்னகை கடலுக்கே கொண்டு சென்றது... கோபத்துல சேரை உடைக்கிறாங்க... குரூப்புல அடிச்சி மண்டையை உடைச்சிக்கிட்டு உருளுவானுங்க... அடுத்த நாள் காலையில ராஜாராம் வந்து எதுவும் நடக்காதது மாதிரி திருக்குறள் போடுவாரு.... கூப்பிடுறானுங்கன்னு நம்பி யாரும் வந்துறாதீங்க.... என்றெல்லாம் தன் பாணியில் அடித்து ஆடி, அரங்கை சிரிப்பால் நிரப்பினார். சதமடித்தவனைவிட போட்டியில் ஜெயிக்க கடைசி நேரத்தில் சிக்ஸராக விளாசியவனையே கொண்டாடும் உலகம் இது என்பதை நேற்று பாலாஜியின் பேச்சுக்கு கிடைத்த கரகோஷமும் சிரிப்பொலியும் நிரூபித்தது.

விழாவைத் தொகுத்தளித்த ஆசிப் அண்ணன் இடையிடேயே தனது சிலேடைப் பேச்சை, நகைச்சுவையாய் தந்து கொண்டே இருந்தார். மாப்பிள்ளை பெஞ்சு லூட்டி விழா முழுவதும் தொடர்ந்தது. விழா குறித்து ஹேமா பேசிய காணொளி ஒளிபரப்பப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில் குழுமத்தின் ஒரு வருட செயல்பாடுகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. 

எழுத்தாளர்களுக்கு  பொன்னாடைகள் போர்த்தப்பட்டன... பொன்னாடைகளை அமீரக மதிமுக வழங்க தி.மு.கவின் எஸ்.எஸ்.மீரான் போர்த்தினார்.

விழா முடிந்த பின்னர் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என பாலாஜி எங்களை இழுத்து நிறுத்தினார். ஹோட்டலில் எங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட பிலால் அதைச் சொல்லவா... இதைச் சொல்லவா... என கேட்டுக் கேட்டு வாங்கிக் கொடுத்தார். அருமையான சாப்பாடு... செட்டிநாடு பெப்பர் சிக்கன் கிரேவி என எதையோ வைத்தார்கள்... செட்டிநாட்டுக்காரனான நமக்குத்தான் கஷ்டமாக இருந்தது. மற்றபடி எல்லாம் அருமை... அதிலும் அந்த இளநீர்ப் பாயாசம்... அட... அட... இன்னும் இனிக்கிறது. மதுரைக்காரய்ங்க பாசத்துல மட்டுமில்ல உபசரிப்பிலும் முன்னோடிதான்.

அங்கிருந்து இரவு 11:30 மணிக்கு மேல் தமிழ் மக்கள் மன்ற நண்பர்களுடன் காரில் கிளம்பி, இரவு 1:30 மணிக்கு மேல் எங்கள் கட்டிடத்தின் வாசலிலேயே இறக்கிவிடப்பட்டேன். காரில் வரும்போது அரசியல்... அரசியல்... அரசியல் என நடுராத்திரியில் பேசிக்கொண்டே வந்தார்கள். நமக்கு அது வெகு தூரமான களம் என்பதால் அவ்வப்போது தூக்கத்தை அணைத்துக் கொண்டேன்.

சுபான் அண்ணாச்சி சிறப்பாக படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். எப்பவும் போல் நம்மளை கண்டுக்காம இருந்திருக்கலாம். ஏதோ கோபமாக முகத்தை வைத்தாற் போலிருக்கும் போது சரியாக கணித்து எடுத்திருக்கிறார்.... ஆனாலும் பெண்களை எல்லாம் வளைத்து வளைத்து அழகாக எடுத்திருக்கிறார். படங்கள் அருமை... வாழ்த்துக்கள் அண்ணா.

ஒரு நல்லதொரு நிகழ்வை நிகழ்த்தி முடித்திருக்கிறது அமீரக வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர் குழுமம். இந்த விழா சிறக்க உழைத்த ஒவ்வொருவரும் பாராட்டுக்குறியவர் என்பதில் சந்தேகமில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

விடுமுறை நாளின் மாலைப் பொழுது நிறைவாய் அமைந்தது.

நன்றி.
*************

பிரதிலிபி 'காதலா... காதலா...' சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது இரண்டு சிறுகதைகள்...


-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

சிறுகதை : அப்பா... அம்மா... அட்வைஸ்...! (முத்துக்கமலம்)

இந்த மாத 16-02-2019 முத்துக்கமலம் இணைய இதழ் பதிப்பில் எனது சிறுகதை வெளியாகி இருக்கிறது. முத்துக்கமலத்தில் இது 5-வது கதை.

கதையின் தலைப்புதான்  'அப்பா... அம்மா... அட்வைஸ்...!' என குமுதம் பாணியில் மாற்றப்பட்டது விட்டது என்றாலும் கதை வழக்கம் போல குமார் பாணிதான்...

நான் வைத்திருந்த தலைப்பு 'நீரில் நனைந்த நெருப்பு'

வாசித்து கருத்து சொல்லுங்க...

அப்பா... அம்மா... அட்வைஸ்...!



நான் திவாகர்... வயது 27.

வேலை தேடிக்கொண்டிருக்கும் முதுகலைப் பட்டாதாரி. கிடைக்கும் வேலையை விட விரும்பும் வேலைதான் முக்கியம் என்பதால் கிடைத்த வேலைகளை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

மற்றபடி என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. என்னைப் போல் தண்டச்சோறுகளான நண்பர்களின் சங்கமத்தில் தெருமுனை டீக்கடையே பெரும்பாலான நேரங்களை விழுங்கியது. சிகரெட்டும் டீயுமே எங்கள் சங்கமத்தில் அதிகம். 

மாலைவேளைகளில் பெண்களைக் சைட் அடிப்பதும் கேலி செய்வதும் உண்டு. இதைச் சொல்வதில் எனக்கு எப்பவும் வெட்கமோ வருத்தமோ பயமோ இல்லை. இளைஞன் ஒருவன் பெண்ணைப் பார்க்கவோ கேலி பேசவோ செய்யவில்லை என்றால்தான் யோசிக்க வேண்டும்... அவன் இளைஞன்தானா என்பதை... இன்று இளைஞிகள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது இல்லையா..?

"இப்படியே இன்னும் எவ்வளவு நாளைக்குத் திரியிறதா உத்தேசம்...?" அப்பாதான் கேட்டார்.

"வேலை கிடைக்கும் வரை..." படக்கென்று சொன்னேன்.

"வேலை கிடைக்கும் வரை.. சரித்தான்... இந்த வேலைக்குத்தான் போவேன்னு நின்னா எப்படிக் கிடைக்கும்... கிடைக்கிற வேலையில ஏறிக்கிட்டு அப்புறம் நினைக்கிற வேலைக்கு முயற்சிக்கணும்..."

"அப்படியெல்லாம் ஏறிட்டா... அப்புறம் விருப்பப்படுற வேலையைப் பிடிக்க முடியாது... உங்கள மாதிரி நாற்காலிய தேய்ச்சிக்கிட்டு குப்பை கொட்ட வேண்டியதுதான்..."

"என்ன செய்ய... அன்னைக்கி நானும் படிச்ச படிப்புக்கு வேலை வேணுமின்னு உன்னைய மாதிரி ஊரு சுத்தியிருந்தா... எனக்குப் பின்னால இருந்த நாலு பேரைக் கரை சேர்த்திருக்க முடியாதே... நாற்காலியத் தேய்ச்சித்தானே நாலு பேரைக் கரை சேர்த்தேன்... உங்க மூணு பேரைப் படிக்க வச்சேன்..."

"இப்ப எதுக்கு உங்க புராணமெல்லாம்...? யார் கேட்டா அதை...? திரும்பத் திரும்பக் கேட்டுப் புளிச்சிப் போச்சு…" வாய்க்குள் முணங்கினேன்.

"புராணம் இல்லை... வாழ்க்கைதான்... உனக்குப் பின்னால ரெண்டு பொட்டப்புள்ளைங்க இருக்காங்க... ஊரு சுத்துறதால ஒண்ணும் ஆகப் போறதில்லை... டீக்கடைக்காரன் கூட காசு கொடுத்தாத்தான் சிகரெட்டும் டீயும் கொடுப்பான்.... அதைப் புரிஞ்சிக்க..."

"விடுங்க நீங்க... அவன் விருப்பப்படி வேலை கிடைக்கும்... டேய் ஏண்டா அப்பாக்கிட்ட வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... போ... போய் குளிச்சிட்டு சாப்பிட வா..."

அம்மா இடைபுக, நான் நகர்ந்தேன்.

"ஆமா... இப்படியே ஜாமீன் வாங்கியே அவனைக் கெடுத்துடு... சிகரெட் பிடிச்சி உதடெல்லாம் கருத்துப் போயிக் கிடக்கு... நேத்து பார்ல தண்ணியப் போட்டுட்டு சலம்பல் பண்ணியிருக்கான்... என்னோட வேலை பாக்குற ஒருத்தன் பார்த்துட்டு வந்து சொல்றான்... அதையெல்லாமா கேட்டேன்.. அப்படிக் கேட்டிருந்தா இந்நேரம் என்னாயிருக்கும்... தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை திட்டக்கூடாதுன்னுதான் வேலை விசயமாக் கேட்டேன். என்னவோ பண்ணச் சொல்லு... சின்னப்புள்ளையில அவன்தான் சிகரெட் பிடிக்காதீங்கப்பான்னு என்னைத் தடுத்தான்... நான் விட்டுட்டேன்... இன்னைக்கு அவன் அதைச் செய்யிறான்... நான் சொன்னா விடவாப் போறான்... வேலைக்குப் போனா இந்த வெத்துச் சகவாசமெல்லாம் குறையும்... குடி, சிகரெட்டு, பொண்ணு புள்ளைகளைக் கேலி பேசுறது எல்லாம் குறையும்... இருக்கிறத விட்டுட்டுப் பறக்குறதுக்கு ஆசைப்பட்டா எப்பக் கிடைக்கும்...? சொல்லு... போ... போயி உன் சீமந்த புத்திரன் குளிச்சிட்டு வந்ததும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பு... மாநாட்டுக்கு லேட்டாயிரும்..."

என்னைப் பற்றித்தான் பேசுவாருன்னு தெரியும் என்பதால் குளிக்கப் போனவன் "அம்மா..." எனக் கத்தினேன்.

"என்னடா..." என்றபடி உள்ளே வந்தாள் அம்மா.

"என்ன எனக்குப் பண்ணுன உபதேசத்தோட தொடர்ச்சியா... இப்ப என்ன வயசா ஆயிப்போச்சு... கிடைச்ச வேலைக்குப் போன்னு குதிக்கிறாரு... சும்மா சும்மா கத்தக் கூடாதுன்னு சொல்லி வையி..."

"அவரு உம்மேல உள்ள பாசத்துலதானே பேசுறாரு... நீ சிகரெட்டு... தண்ணியின்னு திரியிறதைப் பார்த்துட்டு பல பேரு அவருக்கிட்ட சொல்லியிருக்காங்க... உனக்கு அசிங்கம் தெரியலை... ஆனா அவருக்கு அது அசிங்கம்தானேடா... அதெல்லாம் எங்கிட்டதானே புலம்புறாரு... உங்கிட்ட இதுநாள் வரைக்கும் எதுனாச்சும் கேட்டிருப்பாரா சொல்லு..."

"அம்மா நீயுமா...?"

"இந்த வயசு... எதையும் கேக்கக் கூடாதுன்னு ஒரு வீராப்போட சுத்துற வயசு... யார் என்ன சொன்னாலும் அது கடுப்பாத்தான் இருக்கும்... அதுவும் அட்வைஸ்ன்னா... சொல்லவே வேண்டாம்... சொல்றவங்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கணும் போலத் தோணும்... நாங்களும் இதைக் கடந்து வந்தவங்கதான்..."

"அம்ம்ம்மா... ஆளை விடு... அந்தாளு பரவாயில்லை போல... நான் குளிச்சிட்டு வாறேன்... சூடா இட்லி அவிச்சி வையி..." அங்கிருந்து நகர முயன்றேன்.

"இருடா... எங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் உங்கப்பா சிகரெட் பிடிப்பார்ன்னு எனக்குத் தெரியும்... அதுவும் அவர் ஒரு ஜெயின் சுமோக்கர் தெரியுமா...? ஊதித் தள்ளுவாரு... எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்... இது ஆபீஸ் டென்சனைக் குறைக்க... இதை மட்டும் விடச் சொல்லாதேன்னு மறுத்திட்டாரு... ஒரு பொண்ணுக்குப் புருசன் ஆசையா பக்கத்துல வரும் போது, பிடிக்காத சிகரெட் வாசனையும் சேர்ந்து வந்தா எப்படியிருக்கும்... அதையும் பொறுத்துக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தினேன்... நீங்க மூணு பேரு பிறந்தீங்க..."

"ஐயோ அவரு சுயபுராணம் முடிஞ்சி... இப்ப உன்னோட புராணமா... ஐயோ... ஏம்மா... இப்படி மாத்தி மாத்திக் கொல்றீங்க..." கடுப்பானேன்.

"பேச விடுடா... சும்மா சும்மா குறுக்கப் பேசாம..."

"இப்ப இதுக்கு என்ன அவசரம்... மெதுவா உன்னோட சுயபுராணத்தைச் சொல்லலாம்..."

"அவசியமிருக்கு... நான் சொல்லி விடாத சிகரெட்டை... அப்பா சிகரெட் நாத்தம் பிடிக்கலைன்னு சின்னப் பிள்ளையில நீ சொன்னதால... எம்மகனுக்குப் பிடிக்கலையாம்ன்னு சொல்லி... விட்டொழிச்சவரு உங்கப்பா... இப்ப நீ சிகரெட் பிடிக்கிறியே... அது அவருக்குத் தெரிஞ்சிருந்தும் உங்கிட்ட கேட்கலை... கண்டிக்கலை... அப்படி கேட்டாலும் கண்டிச்சாலும் நீ கேக்கப் போறதில்லை... கண்டிப்பாக மல்லுக்கு நிப்பேன்னு தெரியும்...ம்... சரி... எனக்காக இல்லேன்னாலும் உங்கப்பாவுக்காக... அவரோட மனசுக்காக... இதையெல்லாம் குறைச்சிக்க..."

"பிரசங்கம் முடிந்ததா...? நான் குளிக்கப் போகலாமுல்ல..." என நகர்ந்தேன்.

"டேய்..."

"ஐய்யோ இன்னும் என்னம்மா இருக்கு... சண்டேயும் அதுவுமா காலங்காத்தால புருஷனும் பொண்டாட்டியும் அட்வைஸ் பண்ணிக் கொல்றீங்களே... என்னன்னு சொல்லும்மா... எனக்கு வேலையிருக்கு..."

"ஆமா... உன் தங்கச்சி பிரண்ட் ராதிகாவை... அதான்டா நம்ம லட்சுமி மக... அவளைக் ரொம்ப மோசமாக் கேலி பண்ணுனியாம்... நேத்து வந்து ஒரே அழுகை... சொல்லி வைங்க ஆண்டின்னு... ஏன்டா..."

"அழுதாளாக்கும்... எல்லாரையும்தான் கேலி பண்றோம்... எல்லாரும் வீட்டுக்கு வாராளுகளா என்ன... ஜஸ்ட் லைக் ஜாலியா எடுத்துக்கிட்டுப் போவேண்டியதுதானே... இனிமே வந்தான்னா உன்னையவே எம்மருமகளாக்கிக்கிறேன்னு சொல்லு... அப்புறம் கம்ப்ளைண்ட் கொடுக்க வரமாட்டா..." சிரித்தபடி சொன்னேன்.

"அப்படியும் நடக்கலாம்... யாரு கண்டா..."

"அந்த அடங்காப் பிடாரியா... ஆளை விடு தாயி..." இதற்கு மேல் நிற்கக்கூடாதென வேகமாகப் பாத்ரூமிற்குள் ஓடினேன்.

குளித்து... சாமி கும்பிட்டி... திருநீறு இட்டு... அம்மா கொடுத்த ஆவி பறக்கும் இட்லியை காரச்சட்டினியோடு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.

வாசலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவைப் பார்க்காமல் செல்ல நினைத்துத் தலையைக் குனிந்தவாறு வாசலுக்கு வந்தேன்.

"என்ன மாப்ள எதாவது வேலை கீலை கெடச்சதா...?" அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த அவரின் நண்பர் சாம்பவசிவம் மாமா சப்தமாக கேட்டதுடன், நான் கேட்காமலே "எங்க வனிதாவுக்கு கூட விப்ரோவுல வேலை கிடைச்சிருச்சு.." என்றார் மகிழ்வோடு.

நான் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் "நிறைய வேலைக்கான இண்டர்வியூ வருதுப்பா... போன வாரம் கூட ராம்கோவுல இருந்து இண்டர்வியூக்கு கூப்பிட்டிருந்தாங்க... கிடைச்ச வேலையை விடப் பிடிச்ச வேலையா அமைஞ்சா அவனோட பியூச்சர் நல்லாயிருக்கும் பாரு... அதான் அவசரப்பட வேண்டான்னு நினைக்கிறோம்... அவன் எதிர்பார்க்கிற வேலை கிடைக்காமலாப் போகப் போகுது..." அப்பா பேசிக் கொண்டே போக, நான் பதில் பேசாது வண்டியை எடுத்தேன்.

டீக்கடையில் டீயுடன் சிகரெட்டையும் நீட்டினான் மணி... ஏனோ சிகரெட்டைத் தவிர்த்தேன்.
-‘பரிவை’ சே. குமார்

திங்கள், 11 பிப்ரவரி, 2019

காற்றுவெளி சிறுகதை : யாசகம்

பிப்ரவரி மாத (மாசி) காற்றுவெளி இதழில் எனது 'யாசகம்' என்ற சிறுகதை வெளி வந்திருக்கிறது. கதையை தேர்வு செய்து வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

இந்தக் கதை முகநூலில் வந்த யாசகம் வேண்டாம் என்று சொன்ன ஒரு பெரியவர் குறித்ததான ஒரு கருத்தினை மையமாக வைத்து எழுதிய கதை...  இப்படி எழுதுவது முதல் முறை என்றாலும் கதை நல்லாத்தான் வந்திருக்கும் போல... அதான் காற்றுவெளியின் முதல் பக்கத்தைப் பிடித்திருக்கிறது...

ஸ்ரீராம் அண்ணா படத்தைச் சுட்டி வாசிப்பதில் சிரமம் இருப்பதாக கருத்தில் தெரிவித்திருந்தார். அலுவலக கணிப்பொறி என்பதால் இதழில் இருந்து எடுத்த போட்டோவை இணைப்பது சுலபமாகத் தெரிவதால் கடந்த பதிவுகளில் செய்தது போல் செய்தேன். இப்போது கதையைப் பகிர்ந்திருக்கிறேன்.

நன்றி ஸ்ரீராம் அண்ணா...

(இது கதை வந்திருக்குன்னு காட்டிக்க.. :))
யாசகம்

பேருந்தில் ஏறப்போனபோது படியினருகில் நின்ற கண்டக்டர், 'ஆனாப்புதூர், ராம்நகர் நிக்காது சார்... தேவகோட்டை பஸ்ஸ்டாண்ட்தான்' என்றதும் நான் சிரித்தபடி உள்ளே ஏறி இருவர் இருக்கும் இருக்கையில் சன்னலோரமாக அமர்ந்து கொண்டேன்.

இந்தக் கண்டக்டர்கள் எப்பவும் இப்படித்தான்... அங்க நிக்காது.. இங்க நிக்காதுன்னு சொல்லிட்டு எல்லா இடத்திலும் நிப்பாட்டி ஆள் ஏற்றுவார்கள். நாம கேட்டா நிக்காதுன்னு சொல்லி ஏற விடமாட்டார்கள். பலர் வீம்புக்கு ஏறி 'ஏன் நிக்காது... அது ஸ்டேஜ்தானே... அங்க நிக்கிம்ன்னுதானே ரூட் வாங்கினீங்க' அப்படின்னு ரூல்ஸ் பேசி ஊரைவிட்டு நூறு நூற்றம்பது அடி தள்ளி இறக்கிவிடபடுவார்கள்.

ஒரு சில கண்டக்டர்கள் நிக்காதுன்னு சொல்ல மாட்டாங்க... 'ராம்நகருங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.... கிளம்பும் போது ஏறிக்கலாம்... இப்பவே ஏறி சீட்ல உக்காந்துக்கிட்டீங்கன்னா... லாங்க் ரூட் ஆளுங்க இடமில்லைன்னு ஏறமாட்டாங்க'ன்னு சொல்லி ஏத்திப்பாங்க... இந்தக் கண்டக்டரைவிட அவங்க நல்லவங்கன்னு தோணுச்சு.

என் யோசனையை தடுப்பது போல "தம்பி இங்க ஆளு வருதா?"என்ற குரல் கேட்டது. அவரைப் பார்த்தால் எழுபது வயசிருக்கும்... பழுப்பேறிய வேஷ்டி, பழுபேறிய சட்டை... தும்பைப் பூவாட்டம் முடி... கையில் ஒரு மஞ்சப் பை... 'இல்ல... உக்காருங்க' என்றதும் என் மீது படாதவண்ணம் ஓரமாக உக்கார்ந்தார்.

'ஐயா... நல்லாச் சிலாவத்தா உக்காருங்க... எதுக்கு மழையில நனைஞ்ச கோழி மாதிரி உக்கார்றீங்...' என்று சிரித்ததும் நன்றாக உட்கார்ந்து கொண்டு மஞ்சப்பையை மடியில் வைத்துக் கொண்டார்.

"தம்பி... நீங்க எங்க போறீக?"

"ஒரு வேலையா தேவிபட்டினம் வரைக்கும் போறேங்க..."

"இது திருவாடான போவுமா?"

"என்னய்யா பஸ்ல ஏறிக்கிட்டு திருவாடானை போகுமான்னு கேக்குறீங்க? கண்டக்டருக்கிட்ட கேக்கலையா...?"

"இல்ல... அங்க ஒரு டிரைவரு நின்னாரு... அவருக்கிட்ட கேட்டதுக்கு இந்த வண்டி போகும்ன்னு சொன்னாரு... நா இதுல ஏறுறப்ப கண்டக்டரு இல்லயே..."

"அப்படியா... இது போகும்..."

"ம்... ஒரு செல வண்டிக்காரனுக வெளக்குல எறக்கிவிட்டுட்டு ஊருக்குள்ள போவாதுன்னு சொல்லிருவானுக... வெயில்ல நடக்க முடியாது பாருங்க..."

"இல்ல... இது உள்ள போகும்... ஆமா நீங்க திருவாடானைதானா...?"

"பக்கத்துல... கிளியூருங்க... திருவாடானயில இருந்து டவுன்பஸ் போவும்..."

"அப்படியா... மகிழ்ச்சி... ஆமா இங்க எங்க வந்துட்டுப் போறீங்க...?"

"மவன் வூட்டுக்கு... பேரம்பேத்திய பாத்துட்டு வாறே..." சிரித்தார்.

"எத்தனை பசங்க உங்களுக்கு?"

"ரெண்டு பொண்ணுக... ஒரு பய..."

"பொண்ணுங்க..?"

"ஒண்ணு மதுர மேலூருல இருக்கு... இன்னொன்னு பட்டுக்கோட்டப் பக்கம்..."

"எல்லாரையும் தூரத்துல கட்டிக் கொடுத்துட்டிய..."

"பக்கத்தூருலதான் கட்டிக் கொடுத்தே... தொழில் பண்றேன்னு அங்கிட்டு பொயிட்டாக... எங்க இருந்தாலும் நல்லாருந்தாச் செரிதானுங்களே..."

"ஆமா... சரி உங்க பையன் இங்க என்ன பண்றார்..?"

"டெலிபோனு ஆபீசுல இஞ்சினியரு..."

"எங்கே எக்சேஞ்சுலயா..?"

"ஆமா..."

"அப்ப அவரு கூட இருக்க வேண்டியதுதானே..?"

பெரியவர் பேசாமல் அமர்ந்திருந்தார். பஸ் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது.

"என்னங்க பதிலைக் காணோம்..."

"என்னத்தச் சொல்ல தம்பி... பயலுக்கு பாசமிருக்கு... ஆனா பக்கத்துல வச்சிக்க முடியாத நெலமயில இருக்கான்... வந்தவளுக்கு வசதி கொஞ்சங் கூட... இப்பவும் வசதியா இருக்காளா... அதனால எங்கள பெத்தபுள்ளகிட்ட கூட பேச விடுறதில்ல..." கண் கலங்கியது.

"உங்க மகன் எதுத்துக் கேக்க மாட்டாரா..?"

"எங்க... படிக்கிற காலத்துல எல்லாத்துக்கும் நம்மள எதுத்துக்கிட்டு நிக்கிறானுக... இப்ப பொட்டிப்பாம்பா இருக்கானுக... இப்பக்கூட அவ பேச்சு சரியில்ல... கெளம்பி வந்துட்டேன்... பயலுக்குத் தெரியாது... பேரம்பேத்திக பாசமா இருக்குங்... ஆனா அதுகளையும் நெருங்க விடமாட்டா... நாஞ் சுத்தமில்லையாம்..." விரக்தியாய் சிரித்தார்.

"உங்க செலவுக்கு பணம் கொடுப்பாரா..?"

"முன்ன மாசாமாசம் கொடுத்தான்... இப்ப எப்பவாச்சும்..."

எனக்கு வலித்தது....

என்ன மனிதர்கள் இவர்கள்...

இந்த மனிதன் கண்டிப்பாக வயலில் கிடந்து உழைத்து படிக்க வைத்திருப்பார். கஷ்டப்பட்ட மனுசனை கடைசி காலத்துல கூட பாக்காத பையன் படித்து என்னத்தைக் கிழித்தான் என்று நினைத்தேன்.

என் மனசைப் படித்தவர் போல "தம்பி அவனத் தப்பா நெனக்காதீக... வாழ்க்க அவன மாத்திருச்சு... அம்புட்டுத்தான்... எங்களுக்காக அவகிட்ட பேசினா அவனோட சந்தோசம் போயிரும்... அவன் சந்தோசமா இருக்கட்டும்... அது போதும்..." என்றார்.

"பிள்ளை நல்லாயிருந்தாப் போதும்ன்னு நினைக்கிறீங்க பாருங்க... இதுதான் பெத்த மனசு... அப்பா நல்லாயிருக்கணும் நெனக்கிற பிள்ளை மனசு ரொம்பக் கம்மி..." என்றவன் "ஆமா உங்க மனைவி..?" மெல்லக் கேட்டேன்.

"அவ மவராசி... ஆறு மாசத்துக்கு முன்னால பொயிட்டா...." என்று அவர் சொன்ன போது ஒரு ஆம்புலன்ஸ் சைரனுடன் எங்கள் பேருந்தைக் கடந்து சென்றது.

பேச்சை நிறுத்தியவர் அதையே வெறித்துப் பார்த்து "பாவம் ஆரோ ஒருத்தருக்கு நேரம் வந்திருச்சு போல...  எம் பொண்டாட்டியவும் இப்படித்தான் தூக்கிட்டு ஓடினோம்... சண்டாளி பொயிட்டா..." தோளில் கிடந்த துண்டால் வாய் பொத்தினார். கண்ணீர் இறங்கியது.

ஆறுதலாய் அவரின் தோள் தொட்டேன்.

"முடியாம இருந்தாங்களா..?"

"நல்லாயிருந்தா... ஒடம்புக்கு முடியல டாக்டருக்கிட்ட போவனுமுன்னு மகனுக்கிட்ட கேட்டா, அப்ப மருமவ முடியலன்னா போய்ச் சேராம இருந்துக்கிட்டு எங்க வாநாளயும் வதயயும் ஏன் வாங்குறீகன்னு கேட்டா, ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்ன்னு கிராமங்கள்ல சொல்வாக.... அவ சொன்ன அந்தச் சொல்லு பொறுக்காம வயலுக்கு வாங்கி வச்சிருந்த பீரிடான தின்னுட்டா... ஒத்தச் சொல்லு கொன்னுருச்சு... யாருக்கு எப்போன்னு எழுதியிருப்பானுல்ல... அவ பொயிட்டா... நாங் கெடந்து நாயா லோல்படுறே..." கண் கலங்கினார்.

'டிக்கெட்... டிக்கெட்...' என்று கண்டெக்டர் வரவும் 'நான் எடுக்கிறேன் ஐயா' என்ற போது 'வேணாந்தம்பி சில்லறை இருக்கு' என்றார்.

நானும் திருவாடானைக்கே டிக்கெட் எடுத்தேன்.

"தேவிபட்டினம் போறேன்னு சொன்னீக..."

"இல்ல உங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு உங்களை பஸ் ஏத்திவிட்டுட்டுப் போகலாமேன்னுதான்..." என்றதும் சிரித்தார்.

"மனைவி சாவுக்கு மருமகளோட பேச்சுத்தான் காரணம்ங்கிறது உங்களுக்குத் தெரியும்... அப்படியிருந்தும் மகன் வீட்டுக்குப் போறீங்க..?"

"என்ன தம்பி செய்ய... அவனைப் பெத்துட்டோம்... பேரம் பேத்திகள பாத்துப்புட்டோம் இல்லயா..."

"செலவழிவுக்கு என்ன பண்றீங்க..?"

"பொண்ணுக வாறப்போ எதாவது கொடுத்துட்டுப் போவாக... ஒத்தக்கட்டக்கு என்ன செலவு தம்பி... பேரம் பேத்திகள பாக்கப் போனாத்தானே செலவு... ஆடு மாடு வச்சிருக்கே... பால் ஊத்துறே... வெவசாயம் இருக்கு... முடிஞ்சவரைக்கும் அதுகள வச்சி ஓட்டிட்டு முடியாதன்னக்கி அவள மாதிரி பீரிடானோ பால்டாலோ சாப்பிட்டு போவண்டியதுதானே..."

"ஐயா...  நீங்க நல்லாயிருப்பீங்க... சாவை நீங்களே தேடிக்காதீங்க... நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமப் போயிரும்.." என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டபோது என் கண் கலங்கியது.

திருவாடானையில் இறங்கி "வாங்க எதாவது சாப்பிடலாம்" என்றதும் "வேணாந்தம்பி... சாப்பிட்டுத்தா வந்தே..." என்று மறுத்தார்.

வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல "ரெண்டு இட்லி போதும்ய்யா..." என்றவருக்கு கூடுதலாக ஒரு மசாலா தோசை வாங்கிக் கொடுத்தேன்.

அவரிடம் தண்ணீர் பாட்டில் ஒன்றையும் வாழைப்பழமும் வாங்கிக் கொடுத்தபோது "எதுக்கு தம்பி இதெல்லாம்?" என்றார்.

"எனக்காக பாடுபட்ட எங்கப்பா மகன் தலையெடுத்துட்டான் இனி நம்ம கஷ்டம் தீர்ந்துருச்சுன்னு சந்தோஷப்பட்டார்... அவரை உக்கார வச்சி சோறு போடணும்ன்னு ஆசைப்பட்டேன்... ஆனா முதல் மாச சம்பளம் வாங்குறதுக்கு முன்னால விபத்துல அவரு பொயிட்டாரு... உங்களைப் பாத்தா எங்கப்பா மாதிரி இருக்குய்யா..." அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்லும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

"ஒங்க மனசுக்கு நல்லாயிருப்பீங்க தம்பி... அந்த பழனி முருகன் தொணயிருப்பான்" என்றார்.

பஸ்ஸில் அமர வைத்து கண்டக்டரிடம் 'கிளியூருக்கு ஒரு டிக்கெட் கொடுத்துருங்க... இந்தாங்க காசு' என்ற போது 'வேண்டாந்தம்பி எங்கிட்ட இருக்கு வாங்கிக்கிறேன்' என்றதோடு நில்லாமல் தனது இடைவாரில் கைவிட்டு தேடி ஒரு அம்பது ரூபாய் சில பத்து ரூபாய் நோட்டுக்களையும் எடுத்தவர்  'தப்பா நெனக்காம வாங்கிக்கங்க தம்பி... நா ஆருக்கிட்டயும் யாசகம் வாங்குறதில்ல... என்னய பழனி முருகன் இன்னும் அந்த நெலமக்கு விட்டுடல... வாங்கிக்கங்க' என்று அம்பதை என் கையில் திணித்தபோது நான் உடைந்து போனேன்.

தேவிபட்டினம் பேருந்தில் ஏறி அமர்ந்தவனின் பாக்கெட்டுக்குள் கசங்கிய அம்பது ரூபாய் கனமாய் இருந்தது... என் மனசைப் போல. 

-'பரிவை' சே.குமார்.