இப்போ அலுவலகத்துக்கு 45 நிமிட பேருந்துப் பயணம்... அதிக நேரத்துடன் சோர்வும் சேர்ந்து கொள்கிறது. கணிப்பொறியில் இருந்த ஆளை புராஜெக்ட் இல்லாத காரணத்தால் களப்பணிக்குப் போகச் சொல்லிக்கிட்டு இருக்கானுங்க... வண்டியை ஓட்டணும்ன்னா போகத்தான் வேணும்... இப்ப அதுவல்ல கதை... இது வேற கதைக்கானது... அண்ணன் ஒருவர் அனுப்பிய சிறுகதைகளை மொபைலில் இணைய வசதி இல்லாததால் அலுவலகத்திலேயே தரவிறக்கம் செய்து பேருந்தில் வாசித்துக் கொண்டு வந்தேன். அருகில் இருந்தவர் வட இந்தியன் போல் தெரிந்தார்... என்னைப் பார்த்தார்....நான் வாசிப்பதைப் பார்த்தார்... வாசிக்கும் எழுத்தை அவரும் படிப்பது போல் கண்களை மேயவிட்டார்... ஒரு ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டே இருந்தார்... என்ன நினைத்தாரோ தெரியலை... கஷ்டப்பட்டு பேண்ட்டில் இருந்து போனை எடுத்தார்... வேகமாக முகநூலை திறந்தார்.... ஹிந்தியில் எழுதியிருந்த பெரிய பகிர்வை வாசித்தார்... கையால் அதை மேலும் கீழும் இறக்கி ஏற்றினார்... அடுத்த ஐந்தாவது நிமிடம் அவன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் படக்கென்று போனை பேண்டுக்குள் போட்டபடி வண்டியை நிறுத்த பட்டனை அழுத்திவிட்டு என்னைப் பார்த்து 'எக்ஸ்கியூஸ் மீ' என்க, நான் ஒதுங்கி வழிவிட இறங்கி மறைந்து போனார். அட பஸ்ல படிச்சது தப்பாய்யா... அவருக்கு என்ன வயிற்றெரிச்சல்.... எரிஞ்ச வயிறு அஞ்சு நிமிஷத்துல எறங்கப் போறோம்ன்னு தெரிஞ்சும் எரிஞ்சது பாருங்க... அப்ப அவஎ எவ்வளவு கடுப்புல இருந்திருப்பாரு....
இதுவும் அலுவலகம் செல்லும் போது பார்த்ததுதான்... பேருந்தில் செல்லும் வழியில் கட்டிடப் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதன் தரைத்தளம் போக முதல் தளத்தை ஒட்டி சுற்றிலும் கம்பிச் சாரம் அமைத்து அதன் மீது பலகைகளைப் போட்டு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பணியாளர்... பார்க்கும் போது நம்மாளு மாதிரி இருந்தாரு... மேல நின்னு கீழ வச்சிருந்த குப்பைக்கான தொட்டியில் உடைத்த கற்களை வீசிக் கொண்டிருந்தார்... சாரம் அவ்வளவு வலுவில்லாமல் இருப்பது அதன் ஆட்டத்தில் தெரிந்தது. இவ்வளவு மோசமாக சாரம் போட்டிருக்கானுங்களே.... பாரம் தாங்காமல் விழுந்தால் என்னாகும் என்ற நினைப்போடு பேருந்து நகர அந்த மனிதரைச் சுமந்து பயணித்தேன். மறுநாள் பேருந்து அந்த இடம் கடக்கும் போது சுற்றிலும் இருந்த சாரம் ஒரு பக்கம் முழுவதும் சரிந்து கிடக்கிறது.... அவசரம் அவசரமாக பணியாளர்களும் அருகிருந்தவர்களும் பலகைகளை புரட்டிக் கொண்டிருந்தார்கள்... உள்ளே முதல் நாள் கல்லைத் தூக்கிப் போட்ட மனிதரும் மற்றவர்களும் கிடந்தார்களோ இல்லையோ... அந்த இடத்தை பார்த்ததும் மனசு வலித்தது.
பிரதிலிபி கொண்டாடி வரும் எழுத்தாளர் வாரத்தில் இந்த வாரம் எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு அவர்களது முகப்புப் பக்கத்தை எனது பதிவுகள் அலங்கரிக்குமாம். அகலில் வெளியான காத்தாயி சிறுகதையை சிகரம் பாரதி அவர்கள் பகிர்ந்திருந்தார்கள். வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் குலசாமி சிறுகதைக்கு ஆறுதல் பரிசு... ஜீவநதி சிறுகதையை ஆர்.வி.சரவணன் அண்ணன் திரைக்கதையாக எழுதித் தந்து பகிரச் சொன்னார்கள்... பாக்யா மக்கள் மனசு பகுதியில் தொடர்ந்து கருத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.... பத்திரிக்கை ஆசிரியர் நண்பர் ஒருவர் கிருஷ்ண ஜெயந்திக்கு கட்டுரை ஒன்று கேட்டு வாங்கினார்... ஆனால் அதை மலரில் வெளியிட மறந்துவிட்டார்... இப்போது அதை தீபாவளி மலருக்கு பயன்படுத்திக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். இப்படி எல்லாமே என்னை ஊக்குவிக்கும் நட்புக்களால்தான் மட்டுமே சாத்தியம்.
கொஞ்ச நாளாக ஏனோ நாவல் வாசிப்பில் இறங்கியாச்சு... அது குறித்து முகநூலில் அரட்டையும் களைகட்ட வாசிப்பில் ஆசை அதிகமாயிருச்சு... இப்போ நந்திபுரத்து நாயகி போய்க்கிட்டு இருக்கு... இன்னும் வாசிப்பில் இறங்க ஆசை... வேலைப்பளூவும் மனநிம்மதி இல்லாத சிலபல கஷ்டங்களும் தொடரவிடுமா தெரியவில்லை. இதற்கிடையே முகநூலில் நண்பர் ஒருவர் ஒரு பக்கம் வீரபாண்டிய கட்டப்பொம்மனை திட்டுறானுங்க... இன்னொரு பக்கம் வரலாற்று நாவலை வாசிக்கிறேன்னு கொல்றானுங்கன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்காரு.... சாதி வளையத்துக்குள் சிக்காமல் தலைவர்களை சாதிக்குள் இழுக்காமல் ஏதோ வாசித்து நாலு பேரு கருத்துப் போர் நடத்துறது தப்பாய்யா.... வாசிக்கிறது தப்பாய்யா...
எல்லாருடைய பதிவுகளையும் வாசிக்கிறேன்... அலுவலகத்தில் வேலை இல்லாப் பிரச்சினை... அதனால் களப்பணிக்கு செல்ல வேண்டிய சூழல்... மேலும் காலை மாலை பேருந்துப் பயணம் என சோர்வு அதிகமாய்.... அது போக வீடு கட்ட வாங்கிய கடன் கண் முன்னே நின்று சிரிப்பதும் மனச்சோர்வுக்கு முக்கிய காரணம்... இருப்பினும் இரவு விளக்கு அணைத்த பின்னும் கணிப்பொறியில் களமாடி வாசித்து விடுகிறேன். கருத்து இட முடிவதில்லை.... கோபப்படாதீர்கள்.
இன்று 84வது பிறந்தநாள் கொண்டாடும் புலவர் கவிதைகள் இராமாநுசம் ஐயா அவர்களை வாழ்த்தும் வயது எனக்கு இல்லை என்பதால் வணங்குகிறேன். அவரின் ஆசியும் அன்பும் அனைவருக்கும் கிடைக்கவும் நீண்ட ஆயுளோடு வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
8 எண்ணங்கள்:
புலவர் ஐயாவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!கண்டதும் கேட்டதும் அனுபவங்களில் தொகுப்பு அருமை குமார்.அப்படியும் இப்படியும் சில மனிதர்கள். வேலைப்பிரச்சனை, கடன் பிரச்சனைகளை நினைத்து மன்ம் வருந்தாமல் எல்லாமே வெல்லலாம் எனும் மனப்பாங்குடன் முன் செல்லுங்கள் இதுவும் கடந்து போகும். நிரம்ப படிப்பதும் மனதையும் அமைதியாக்கி அறிவையும் விருத்தியாக்குவதால் வாசிப்பை நேசிப்போம்!
இந்த வாசிப்பு அலைக்குள் என்னையும் இழுத்து கொண்டமைக்கு நன்றி!
பல்வேறு சுவையான தகவல்களை ரசித்தேன். பத்திரிகைகளில் இடம் பெற்றமைக்கும், போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகள்.
வாசிக்காத நாட்கள் எல்லாம்
சுவாசிக்காத நாட்கள் என்பர் நம் முன்னோர்
தொடர்ந்து வாசியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்
தம +1
வாசிப்பதில் தப்பேயில்லை. நிறைய வாசியுங்கள்..! நிறைய எழுதுங்கள்..! பிரதிலிபியின் இந்த வார எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள்!
த ம 3
வாசிப்பது தப்பேயில்லை. தொடருங்கள். பிரதிலிபி குழுவினருக்கு நன்றி. தங்களது பணி தொடரட்டும்.
வாசிப்பு நம்மை செம்மை படுத்தும் நண்பரே தொடர்ந்து வாசியுங்கள் வாழ்த்துகள் பல........
மேலும் மேலும் முன்னேற
வாழ்த்துகள்
வாசியுங்கள் குமார். எங்களுக்கு அதுதான் இப்போது பிரச்சனையாகி வருகிறது. நீங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...தொடருங்கள்.
பல பத்திரிகைகளில் தங்கள் படைப்புகள் வெளியாவதற்கு வாழ்த்துக்கள்! குமார்!
கருத்துரையிடுக