விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டில் இது ஆறாவது படம் என்று நினைக்கிறேன். எந்தப் பந்தாவும் இல்லாமல் இப்படித்தான் நடிப்பேன்... வெளிநாட்டில் பாட்டு வைக்கணும் என்றெல்லாம் சொல்லாமல் கதையின் நாயகனாக ஜெயித்துக் கொண்டிருக்கும் அவர் இதிலும் அதையே செய்திருக்கிறார்... ஜெயித்திருக்கிறாரா பார்ப்போம்.
றெக்க... படத்துக்கான பெயர் காரணத்துக்கு எல்லாம் அதிகமாக யோசிக்கக் கூடாது. விஜய் சேதுபதி சண்டை போடும் போது பின்னணியில் ஏதோ பாட்டுப் போடுறாங்க... அம்புட்டுத்தான்...
தமிழ் சினிமா நாயகன் வேலை வெட்டி இல்லாம இருப்பான்... அப்பாவை பேர் சொல்லி அழைத்து பெருமை கொள்வான்... இதில் நாயகன் ஒரு வக்கீலிடன் ஜூனியராக இருப்பதாகச் சொல்கிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். திரும்பிப் போகவே இல்லை என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
சின்ன வயதில் செய்த ஒரு தவறால் தான் லவ்வுவதாகச் சொன்ன டியூசன் டீச்சர் மாலாக்கா எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத சூழல். அவர் லவ்விய மருத்துவர் பட்டம் பெற்ற கிஷோர் பைத்தியமாக அலைய, அந்த வலியில் தவிக்கும் விஜய் சேதுபதி, காதலர்களை மட்டுமின்றி வில்லனுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க இருக்கும் பெண்ணைத் காப்பாற்றி விருப்பப்பட்ட மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க வில்லனின் கோபத்துக்கு ஆளாகிறார்.
அந்த வில்லனிடம் வசமாக சிக்கி அவருக்காக பொண்ணைத் தூக்க மதுரை போறார்... அதில் ஜெயித்தாரா..? வில்லனை என்ன செய்தார்...? மாலாக்காவை கண்டு பிடித்தாரா...? என்பதை 'றெக்க' கட்டி பறக்க விட்டிருக்காங்க... வல்லூறு அளவுக்கு பறக்காட்டியும் சிறகு ஒடியாம பறந்திருக்கு.
படத்தோட உயிர்நாடி விஜய் சேதுபதியும், கிஷோர் மற்றும் மாலாக்கா காதல் காட்சிகளும்தான். மாலாக்காவா நடித்தவர் மிக்கச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி தன்னோட இடத்தை சரியாக செய்திருக்கிறார். மதுரையில் பெண்ணைக் கடத்தும் இடத்துச் சண்டை, கோயம்புத்தூரில் நடக்கும் இறுதிக்காட்சி சண்டை என இரண்டு இடத்திலும் புகுந்து விளையாடி தன்னால் மாஸ் படமும் பண்ண முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
லஷ்மி மேனன்... ஸ்ஸ்ஸ்... அபா.... தொடரியில பார்த்த லூசுக்கு அக்காவா இருக்கு... அட கதாபாத்திரம்தான் அப்படின்னா... நமீதாவுக்கு தங்கச்சி மாதிரி.... சுந்தரபாண்டியன் லஷ்மியை எதிர்பார்த்தா... ரொம்பக் கஷ்டம்... வரவர ஆம்பளையாக மாறிக்கிட்டு வருது... டான்ஸ் ஆடுறதெல்லாம் மிடியல ரகம்... உடம்பைக் குறைக்கணும்...
மதுரையில மிகப்பெரிய பெரிய மனுசன் அவனோட பொண்ணைத் தூக்கினா சும்மா விடுவானுங்களா...? அம்மாக்காரியை மகளைவிட லூசாக்கியிருக்கானுங்க... ஒருத்தனோட ஓடப்போறேன்னு மக சொன்னதும் அப்பத்தாக்கிட்ட சொல்லிட்டுப் போன்னு சொல்ற அம்மாவை மதுரையில நீங்க பாத்திருக்கீங்க... எம் பேத்தி இவங்கூடத்தான் ஓடப்போறான்னு தண்டட்டி போட்ட கிழவி சொல்றதை மதுரைப் பக்கம் நீங்க கேட்டிருப்பீங்க... கொக்காமக்கா திருப்பாச்சி அருவாளை எடுத்து சீவுற கிழவியத்தான் பாக்கமுடியுமே தவிர இப்படி லூசுக்களை அல்ல... காதல்ல வருமே அப்பத்தா அதுதான் நிஜம்... இதெல்லாம் காமெடிக்காக வைத்து நம்மை நோக வச்சிட்டானுங்க...
வில்லன்கள் ரெண்டு பேரும் மலையிங்கிற மாதிரி ஆரம்பத்துல காட்டுனானுங்க... ஒருத்தனோட தம்பியை ஒருத்தன் கொல்வதில் ஆரம்பிக்கும் கதை ரணகளமா ஆரம்பிங்கும்ன்னு பார்த்தா.... கோயம்பத்தூர்ல இருக்கிற ஒரு மாலுக்காக அடிச்சிக்கிறானுங்க... அப்புறம் ஒருத்தனு நிச்சயித்த பெண்ணை இன்னொருத்தன் கடத்துறான்... கும்பகோணத்துல இருக்க வில்லனுக்கும் கோயம்புத்தூர்ல இருக்க வில்லனுக்கும் என்ன ஒட்டு உறவு கிடையாது... ஆனா அடிச்சிக்கிறானுங்க... காதுல பூ.
கதை கும்பகோணத்தில் ஆரம்பித்து வில்லனுடன் மோதல்... மதுரைக்கு பயணித்து தானே வலிய வர்ற லூசைத் தூக்குறதில் நகர்ந்து... கோயம்புத்தூருக்குப் போய்... வில்லன்களை வரவைத்து முடிகிறது. எதற்கு இந்தச் சுற்று... ஏன்னா கோயம்புத்தூர்லதானே ரெண்டு மாலும் இருக்கு... ரெண்டு மால்லா... படம் பாருங்க புரியும்... காதுல பூ...பூ...
கே.எஸ்.ரவிக்குமார் அப்பாவாய் நல்லா நடித்திருக்கிறார்... மகனைக் காதலிக்கச் சொல்லும் அப்பா... நமக்கெல்லாம் இப்படி அமையலை... கல்லூரி படிக்கும் போது தோழி பொங்கல் வாழ்த்து அனுப்பினாலே யாருடா இது... எதுக்குடா உனக்கு வாழ்த்து அனுப்புதுன்னு ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாங்க... ம்... சினிமா அப்பாக்கள் காதலிக்கச் சொல்லிக் கொடுக்கிறாங்க... இதைப் பார்த்துட்டு நிஜ வாழ்விலும் இப்படி அப்பாக்கள் வேணுமின்னு யோசிக்கிறது அபத்தம்... என்ன பண்றது... சினிமாதானே கெடுக்குது.
சின்னப் பய டியூசன் சொல்லிக் கொடுக்கிற டீச்சரை லவ் பண்றேன்னு சொல்ல... அதை ஏத்திவிட ரெண்டு பசங்க... நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கருத்து.
சதீஷ் இருந்தும் நகைச்சுவை தண்ணீர் வராத காவிரி போல் வறண்டுதான் இருக்கு...
விர்ரு...விர்ரு... பாட்டு அருமை... ரன் படத்தி வரும் தேரடி வீதியில் தேவதை வந்தா... பாடலை நினைவு படுத்தும் மெட்டு... விர்ரு... விர்ருங்கவும் படமும் விர்ரு...விர்ருன்னு போகும்னு எதிர்பார்த்தா அது நம்மளோட தப்பு... விர்ரு விர்ருன்னு போகாட்டியும் விழுகாமப் போனதால தப்பிச்சிக்கலாம்.
விர்ரு... விர்ரு... தவிர மற்ற பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ... பார்க்கும் போது மனசுல ஒட்டலை...
மதுரையே பயப்படும் ஒருவரின் மகளைக் கடத்தியும் அவர் பக்கத்து கதையில் நகராமல் வில்லன்களின் பக்கமே கதை நகர்வதால் றெக்க வேகமாக சிறகடிக்கலை... ஒருவேளை அந்தப் பக்கமாக நகர்ந்து... வில்லன்களும் பயணித்திருந்தால் மூம்முனைத் தாக்குதலில் றெக்க உயரப் பறந்திருக்கலாம்.
மொத்தத்தில் விஜய் சேதுபதியை ரசிப்பவர்களுக்கு றெக்க ரொம்ப பிடிக்கும்... மற்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமில்லை என்றாலும் விருப்பப்பட்டால் பார்க்கலாம்... ரொம்ப மொக்கையில்லை.
எனக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் என்பதால் படம் பிடித்திருந்தது என்றாலும் கதை கோர்வையாக நகரவில்லை... மதுரை என்றாலே வெள்ளை வேஷ்டி... வெள்ளைச் சட்டை... அரிவாள்... என்ற கலாச்சாரத்தை எப்போது மாற்றுவார்கள் என்று தெரியவில்லை... அவ்வளவு அரிவாளையும் அசால்டா தூக்கிச் சாப்பிட்டுட்டு பொண்ணைக் கடத்துறாங்கன்னா பாத்துக்கங்க... நம்ப முடியாத காட்சிகள் நகைக்க வைக்கின்றன.
இயக்குநர் ரத்தின சிவா இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
றெக்கே நல்லாத்தான் பறக்குதூ,,,,,
ம்ம்ம்... விஜய் சேதுபதிக்காக அப்பு....றமா மெதுவா "ஹோம் தியேட்டர்"ல ஒருதடவை பார்ப்பேன்!
நல்ல விமர்சனம். நன்றி.
பார்க்கும் பொறுமையில்லை.
நன்றி நண்பரே
உங்கள் விமர்சனம்..நன்று....ஸோ பார்க்கும் பொறுமை இல்லை. விஜய் சேதுபதி நன்றாக நடிக்கிறார். ஆனால் படம் ரொம்ப போர் போல இருக்கு...ம்ம்ம் நன்றி குமார்..
பகிர்வுக்கு நன்றி.
கருத்துரையிடுக