‘இது என் அத்தை பொண்ணுடா...’
என்று சாரதி சொன்னதும் கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை.
“என்னடா... பதிலைக் காணோம்..?”
சாரதியே மீண்டும் கேட்டான்.
“என்ன சொல்லணும்... படபடன்னு
பேசுதே... யார் இந்தப் பொண்ணுன்னு பார்த்தேன். உடனே நீ அத்தை பொண்ணுன்னு சொன்னே...
அப்புறம் என்ன... சரி சரி... என்ன எதிர்பார்க்கிறேன்னு தெரியுது... உன் வருங்காலம்
அழகா இருக்காடா...” என்றான் மெதுவாய்.
“வருங்காலமா... யாரு...? இந்த
வாயாடியா...? சரித்தான்... இதைக்கட்டிக்கிட்டு நான் முடியைப் பிச்சிக்கிட்டு நிக்க
வேண்டியதுதான்...”
“அதான் நிறைய இருக்கே...
பிச்சுக்கிட்டு நில்லு...” என்று சிரித்தான் கண்ணன்.
“என்னங்கடா... ரகசியம் பேசி
சிரிக்கிறீங்க..? எங்ககிட்ட சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போம்ல...” என்றான்
அம்பேத்கார்.
“ஒண்ணுமில்லடா... சும்மாதான்...”
என்றான் சாரதி.
“என்ன மிஸ்டர் சாரதி, உங்க
பிரண்டு யாருடா இந்த அழகின்னு என்னைப் பற்றித்தானே கேட்டார்...” என சுபஸ்ரீ
கேட்கவும், “ஆமா இவ ஊர்ல இல்லாத அழகி. உன்னையப் பற்றி ரகசியம் பேச என்ன இருக்கு...
உனக்கு மட்டுந்தான் நீ அழகின்னு கர்வம்... மத்தவா சொல்லணும்... அழகியா இல்லையான்னு...”
சாரதி சிரித்துக் கொண்டே சொன்னான்.
“அலோ சார்... நாங்க அழகிதான்...
இவா சொல்லாட்டி என்ன... எங்க காலேசுல இருக்கா ஆயிரம் பேரு என்னை அழகின்னு தாங்க...”
“அவாளே தாங்கட்டும்... நாங்க
தாங்க நினைக்கலை... வெட்டிப் பந்தாவை விட்டுட்டு வேலையைப் பாருடி...”
“டேய்... ஏன்டா... சும்மா
அவங்கிட்ட சத்தம் போடுறே... விடுடா...” என்றான் கண்ணன்.
“அது...” என்று இழுத்தவள், “அவாளுக்குத்
தெரிஞ்சதுகூட எங்க சாரதி சாருக்கு தெரியலை பாருங்க அத்தை... இதைக் கட்டிக்கிட்டு
என்னைய என்ன பண்ணச் சொல்றேள்... நான் மாட்டேன்...”
“ஆமா இவளைக் கட்டிக்கிறேன்னு இவ ஆத்துல
வந்து கிடையாக் கிடக்கேன் பாரு... எவளாவது ஏழைப் பிராமணத்தியை கட்டிக்கிட்டு
வருவேனே ஒழிய... இந்த வாயாடியை நான் ஆத்துக்காரி ஆக்கிக்கமாட்டேன்...”
“ஆமா நாங்களும் இவாள்தான்
வேணுன்னு இங்க வந்து கிடக்கோம் பாருங்க... “
“ஏய் எதுக்குடி இப்ப ரெண்டு
பேரும் வாய்க்குவாய் பேசறேள்... ஏன்டா சாரதி எப்ப அவகிட்ட வம்பு பண்ணுறதுன்னு
இல்லையா... வந்தவா என்ன நினைப்பாங்க... தினமும் சண்டைதான் போடுறீங்க... உங்க
ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வச்சுண்டு சண்டை தீர்க்கிறதே எங்க வேலையா
இருக்கும் போல... ரெண்டு பேரும் சித்த சும்மா இருங்கோ...”
“பின்ன என்ன அத்தை... சாரதி
சார்தானே இப்படிப் பேசுறார்... அவருக்கு பிரண்ட்ஸ் எல்லாம் இருக்கான்னு தைரியம்...”
“விடுங்கங்க... அவன்தான் கிண்டலா
பேசுறான்னா... நீங்களும் வருத்தப்பட்டுக்கிட்டு... நாங்க ஒண்ணும் நினைக்கலை... டேய்
சாரதி... பாவம்டா அவங்க... எதுக்கு இப்ப சண்டை போடுறே..?” என்று கண்ணன் சமாதானம்
பேச, அதை சட்டை செய்யாமல் சுபஸ்ரீ கோபமாக எழுந்து உள்ளே போனாள். சுபத்ராவும் “டீ...
சுபா... அவன் கிடக்கான்... நீதான்டி எம் மருமகள்... கோபிக்காதேடி... என்
செல்லம்ல்ல....” என பின்னாலே போனாள்.
“எங்கடா படிக்கிறாங்க...?
மெதுவாகக் கேட்டான் பிரவீண்.
“ஏன் அங்க இவங்க அழகியா...
இல்லையான்னு போய் பார்க்கவா...?” என்றான் ஜாகீர்.
“என்னடா... அவ... இவன்னு
சொன்னீங்க... இப்ப அவங்கன்னு மரியாதை எல்லாம் வருது... மதுரை யாதவா காலேசுல
படிக்கிறா... இப்ப லீவுல்ல அதான் வந்திருக்கா... அவங்க வீட்ல இருக்கதைவிட எங்க
வீட்லதான் அதிகம் இருப்பா... எங்க அம்மா செல்லம்... எங்க அத்தை கூட அவளுக்கு
நீதான் அம்மான்னு சொல்லிச் சிரிப்பாங்க... சும்மா அவளை வம்பிழுப்பேன்...
எல்லார்க்கிட்டயும் ரொம்பச் ஜாலியாப் பேசுவா... பிறத்தியார்ன்னு எல்லாம் பார்க்கமாட்டா...
அவளுக்கு கூட்டமா உக்காந்து ஜாலியாப் பேசினா ரொம்பப் பிடிக்கும்... முற்போக்கு
சிந்தனைவாதி... கல்லூரி பட்டிமன்றப் பேச்சாளர்... நிறைய கவிதை எழுதுவா...
போட்டிகளில் ஜெயிச்சு பிரைஸ் வாங்கி குவித்து வைச்சிருக்கா... எந்த பிரைஸ்
வாங்கினாலும் முதல்ல அம்மாக்கிட்ட கொண்டு வந்து கொடுத்து ஆசி வாங்கிக்குவா...
அம்மாவுக்கும் அவ ஒருநாள் போனில் பேசலைன்னாலும் மனசு சரியில்லைன்னு
புலம்பிடுவாங்க... அதனால எத்தனை மணியா இருந்தாலும் அவ வீட்டுக்குப் பேசுறாளோ
என்னமோ அம்மாக்கிட்ட பேசிருவா... சில சமயம் அத்தை அவ பேசினாளான்னு அம்மாக்கிட்ட
வந்து கேட்டுட்டுப் போகும்... அவ ரொம்ப நல்லவடா... வெகுளி... யாரும் அவ முன்னாடி
சோகமா இருக்கக்கூடாது... அவளுக்கு எல்லாரும் சந்தோஷமா... மகிழ்ச்சியா...
இருக்கணும்.” சாரதி நீளமாய் பேசி முடித்தான்.
“அது சரி... அப்புறம் என்ன...
ரொம்ப நல்ல பொண்ணா இருக்காங்க... என்ன கேட்டே... ஏன்டா அவங்க... இவங்கன்னு
பேசுறீங்கன்னுதானே... உன் மனைவியா வரப்போறவங்க... எங்க சிஸ்டர்... சோ இனி அவங்க...
இவங்கதான்...” சொல்லிச் சிரித்தான் அம்பேத்கார்.
“அடப்போங்கடா... காலம் என்ன
நினைக்குதுன்னு பார்ப்போம்...” என்றான் சாரதி.
“சுபஸ்ரீதான் சாரதிக்குன்னு
எழுதிவச்சி ரொம்ப நாளாச்சு... இனி காலம் என்ன மாத்துறது...” என்றான் கண்ணன்.
அப்போது...
“கண்ணண்ணா...” என வாசலில்
இருந்து கூவியபடி அபி உள்ளே நுழைய, “வயசுக்கு வந்த பொம்மனாட்டிக்கு அடக்கம்
ஒடுக்கம் வேண்டாம்... வீதியில நின்னுன்டு கத்துறே... “ திண்ணையில் இருந்து
கத்தினாள் பாட்டி.
கருதறுப்பு முடிந்த இரவில்....
“ஏத்தா... மாப்பிள்ளைக்கு
நாட்டுக்கோழி ரசம்ன்னா ரொம்பப் பிடிக்கும்ல்ல... இன்னும் கொஞ்சம் ஊத்து...”
சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் வேலாயுதம்.
“அடி ஆத்தி... போதும்... வயிறு
புல்லா இருக்கு....” என்று மறுத்தான் ராமநாதன்.
“காலையில சீக்கிரமே
போகணுமாப்பா... பத்து மணி வாக்குல போகலாம்ல்ல... உங்களுக்குப் புடிக்குமேன்னு
குழிப் பணியாரத்துக்கு போட்டு ஆட்டி வச்சிருக்கேன்... சாப்பிட்டுப் போகலாம்ல்ல...”
மெதுவாகக் கேட்டாள் சவுந்தரம்.
“காலையில கடைக்குப் போயாகணும்...
நாளை மறுநாள் முகூர்த்தம் நாள்.... நிறைய பாத்திரம் கொடுக்கணும்... செல்வி
இருந்துட்டு வரட்டும்...”
“ஏம்ப்பா... சாப்பிட்டு போங்க...
ஒம்போது மணி வாக்குல நம்ம பிரசிடெண்ட் தம்பி வர்றேன்னு சொல்லியிருக்கு... நாளைக்கு
நம்மூருல சாதிச் சங்க போர்டு வைக்கிறோமுல்ல...”
“எனக்கு வேலை இருக்கு மாமா...
நாலு சாதி இருக்க ஊர்ல எதுக்கு மாமா சாதிச் சங்க போர்டு அது... இதுன்னு... தாயாப்பிள்ளையா
பழகுற இடத்துல இதெல்லாம் நுழைஞ்சா பிரச்சினைக்குத்தானே வழிவகுக்கும்.”
“அதுக்காக... நாலு கட்சிக் கொடி
பறக்குற இடத்துல நம்ம சாதிப் போர்டு வச்சா என்ன தப்புங்கிறேன்... எந்தச்
சாதிக்காரன் வேணுமின்னாலும் வச்சிக்கட்டும்... அதுபோக நாம வக்கிறதுக்கு முன்னால
வேற யாராச்சும் வச்சிட்டானா... நமக்கு அசிங்கமில்லையா...?”
“என்னமோ மாமா... உங்க அளவுக்கு
எல்லாம் எங்களால சாதியை தூக்கிச் சொமக்க முடியலை... எங்கயாச்சும் கேட்டாலும்
எவனாச்சும் பேசினாலுந்தான் எனக்கெல்லாம் சாதியே ஞாபகத்துல வரும்...”
“நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை
இருக்குல்லப்பா... அதை கீழ போட்டு உடைச்சிடக்கூடாது... இன்னைக்கு இருக்க தலமுறை
அதைத்தான் பண்ணுது... அதான் அவனுகளுக்கும் சாதி உரத்தை ஏத்தத்தான் இதெல்லாம்...
பாருங்க... இப்ப அம்புட்டுபய வண்டியிலயும் நம்ம சாதிச் சிங்கம் போட்டா
ஓட்டிக்கிட்டு திரியிறானுங்க...”
“என்னமோ போங்க... நானெல்லாம்
சாதி சாதியின்னு நின்னா என்னோட பாத்திரக்கடை தொழிலெல்லாம் படுத்திருக்கும். வர்ற
சமையக்காரன் எல்லாம் நம்ம சாதிக்காரனா வர்றான்... இன்னொன்னு தெரியுமா மாமா... நம்ம
ஆளுக பூராம் எங்கே நா நல்லா வந்துருவேனோன்னு செட்டியார்கிட்டதான் பாத்திரம்
எடுக்குறானுங்க... இந்த சாதியை எல்லாம் நான் வீட்டை விட்டு வெளிய போகும் போது எறவாரத்துலயே
விட்டுட்டுப் போயிடுவேன்... எனக்கு
வேண்டாம் இதெல்லாம்... சாதி... சாதியின்னு பேசித்தான்... இன்னைக்கு வேற சாதியில
இருந்து ஒருத்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா... விட்டுட்டு வேலையைப் பாருங்க
மாமா...” எதார்த்தமாய்ச் சொல்லியபடி எழுந்து போனான் ராமநாதன்.
வேலாயுதம் சவுந்தரத்திடமும்
செல்வியிடமும் கத்துவதைப் போல் கத்த முடியாமல் தட்டில் இருந்த சாப்பாட்டின்
மீது கை கழுவிக் கொண்டிருந்தார்.
(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே.குமார்.
8 எண்ணங்கள்:
தொடர்கிறேன் நண்பரே...
தமிழ் மணம் 2
த.ம
சுபஸ்ரீ குறித்த வர்ணனைகள் அசத்தல். அதெப்படி கரெக்டாக அத்தனை குணாதிசயங்களையும் பட்டியல் போட்டீர்கள் சார்?
நட்புக்களிடையாய் உரையாடல்களும் அருமை குமார், கடைசியில் அந்த பாட்டி,,, நச்!ஒன்றையும் விடாமல் கவனித்திருப்பீர்கள் போலவே!
தொடருங்கள்!
தொடர்கிறேன்நண்பரே
தம +1
கதையில் நுணுக்கமான உரையாடல்கள்....தொடர்கின்றோம்....குமார்..
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக