மலையாள சினிமாவில் அடிக்கடி மிகச் சிறப்பான கதைகளுடன் படங்கள் வருவதுண்டு. நம் தமிழ்ச் சினிமாவிலோ எப்போதோ ஒரு முறைதான் அப்படிப்பட்ட படங்கள் வரும். இங்கு நாயகனின் துதி பாடி... பில்டப் கொடுக்கப்படும் படங்கள்தான் அதிகம், கதை முக்கியமல்ல... கதையே இல்லாமல் கூட நாயகன் சூப்பர்மேனாக காட்சியளித்தால் போதும் விசிலடித்து வெள்ளி விழாக் கொண்டாட வைப்போம். அதை சில புதிய இயக்குநர்கள் மாற்றிக் காட்டினார்கள். ஆனால் இன்னும் பில்டப் காட்சிகள் குறையாமல்தான் இருக்கின்றன. அந்த வகையில் மலையாள சினிமாக்கள் ஹீரோயிசம் இல்லாமல் வெளிவருவது மகிழ்ச்சி... மலையாளிகள் இங்கு தமிழனுக்கு குழி தோண்டுகிறார்கள் என்றாலும் கதைக்காகவே மலையாளப் படங்களை விரும்பிப் பார்க்கத் தூண்டுகிறது. என்ன ஒரு கொடுமைன்னா அவனுங்க பாக்குறது தமிழ்ப்படங்களே... விரும்புறதும் தமிழ்ப் பாடல்களே... ஆம் மலையாளத்தில் பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. மாறுபட்ட சிந்தனைகள்தான் நல்லது இல்லையா..?
சரி... சரி... தலைப்பு என்னு நிண்டே மொய்தீனுன்னு போட்டுட்டு கதையளக்குறானேன்னு நினைக்காதீங்க வாங்க காஞ்சனமாலா மொய்தீன் காதலுக்குள் சென்று வருவோம்.
1960, 70-களில் கேரளா மாநிலம் முக்கத்தில் உண்மையில் நிகழ்ந்த மூஸ்ஸீமான மொய்தீனுக்கும் இந்துப் பெண்ணான காஞ்சனமாலாவுக்கும் இடையிலான காதலையும் அதனால் அவர்கள் சந்தித்த பிரச்சினைகளையும் ஒரு டாக்குமெண்டரியாக எடுத்திருந்த ஆர்.எஸ்.விமல், அதே கதையை எடுத்துக் கொண்டு வெள்ளித்திரைக்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார். புதிய இயக்குநர் ஒருவர் உண்மையான அமரத்துவம் வாய்ந்த காதல் கதையை அதே காலகட்டத்தில் நடப்பது போல் எடுத்து ஜெயிக்க முடியும் என்ற தீவிர நம்பிக்கையோடு அந்தக் காதல் குறித்தும் அதன் பின்னணிகள் குறித்தும் நீண்ட நாட்களாக விவரம் சேகரித்து அதில் கடுகளவு கூட சினிமா கலப்பு செய்யாமல் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இப்பவே நாம சாதியையும் மதத்தையும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறோம்... மாட்டுக்கறி சாப்பிடாதே, ஆட்டுக்கறி சாப்பிடாதேன்னு கொலை வரைக்கும் போறோம். சகிப்புத் தன்மை இல்லைன்னு நடிகர்களும் எழுத்தாளர்களும் விருதை திருப்பிக் கொடுத்தால் போதும் சகிப்புத் தன்மை வந்துவிடும் என்று தர்க்கம் செய்கிறோம். நமக்கு தண்ணி தரமாட்டேங்கிற பக்கத்து மாநிலத்துக்காரன்கிட்ட அரசாங்கம் பேசலைன்னாலும் பரவாயில்லை நடிகன் பேசணுமின்னு இன்னும் பாமரத்தனமாக கொடும்பாவி எரிக்கிறோம். சாதி... சாதியின்னு காதலித்தவர்களை வெட்டிச் சாய்க்கிறோம்... மனிதம் பேச மறந்து மதம் பேசுகிறோம். மானுடம் பார்க்காமல் சாதி பார்க்கிறோம்... இந்த 2015ல் இப்படி என்றால் 1960-இல்..?
நாயகன் மொய்தீன் (பிரித்விராஜ்), நாயகி காஞ்சனமாலா (பார்வதி) இருவரின் குடும்பமும் சாதி, மதம் கடந்து நல்ல நட்பில் இருக்கிறது. பார்வதியின் அண்ணனும் (பாலா) பிரித்விராஜூம் நண்பர்கள். கால்பந்து விளையாட்டு வீரர்கள். இப்படியிருக்க இவர்களுக்கு காதல் மலர்கிறது, பார்வதியை அவரது முறைப்பையன் (டோவினோ தாமஸ்) ஒரு தலையாக காதலிக்கிறார். இந்தக் காதல் மதம் என்னும் பூதகரமான பிரச்சினையால் எப்படி தத்தளிக்கிறது... கரை சேர்ந்ததா என்பதே கதை.
தங்களின் காதலை திருமணப் பந்தமாக மாற்ற எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும் தங்கள் காதலால் இந்து முஸ்லீம் கலவரம் வந்து விடக்கூடாது என்பதில் காதலர்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே இவர்கள் காதல் நரை தட்டியும் கல்யாணத்தில் முடியாமல் தொடர்கிறது. இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்... நாம் சேர்ந்து வாழ வேண்டும் இங்கில்லாவிட்டாலும் உலகில் எங்காவது என காதலர்கள் ஒரு முடிவுக்கு வந்து பாஸ்போர்ட் எடுத்து வரும்போது இயற்கை குறுக்கிட காதலர்களோடு சேர்ந்து நம் இதயமும் தவிக்கிறது.
படத்தில் அதிகம் ஸ்கோர் பண்ணுபவர் பார்வதியே. ஒவ்வொரு காட்சியிலும் முகபாவத்தில் கலக்கியிருக்கிறார். பெண் பார்க்க வரும் இடத்தில் வெள்ளைச் சேலை கட்டி வருவதாகட்டும், அப்பா அடித்த போது கன்னத்தில் மோதிரம் குத்திவிட, ரத்தத்தை துடைக்கும் அம்மா அழுது கொண்டே மொய்தீன் குறித்துப் பேசும்போது பதில் சொல்வதாகட்டும் தன்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று வரும் முறைப்பையனிடம் மொய்தீனை தான் மனதில் சுமப்பதைச் சொல்வதாகட்டும், கடைசிக்காட்சியில் சிரிக்கும் அந்த சிரிப்பாகட்டும், ஒவ்வொரு காட்சியிலும் கலந்துகட்டி ஆடியிருக்கிறார். அதிகப் படங்களில் நடிக்காமல் கதைகளை தேர்வு செய்து நடிப்பது கூட அவருக்கு மிகச்சிறப்பான படங்களைக் கொடுக்கிறது என்பதே உண்மை.
பிருத்விராஜூம் சிறப்பாகச் செய்திருக்கிறார். சிகை அலங்காரமும் மீசையும் சரியாக செட்டாகவில்லை. கை விரல் நகம் கூட படாமல் காதலிக்கும் காதலனாய் ஜொலிக்கிறார். அப்பாவிடம் எதிர்த்துப் பேசுவதாகட்டும், காஞ்சனாமாலாவைக் காண அடிக்கடி அவரின் வீட்டுப்பக்கம் வருவதாகட்டும், கடிதம் எழுதி காதலிப்பதில் ஆகட்டும், பாலாவிடம் எங்க காதலுக்கு எல்லாரும் எதிர்த்தாலும் நீ சம்மதிப்பேன்னு காஞ்சனாக்கிட்ட சொன்னேன், ஆனா அதுவும் தப்பாப் போச்சு என்று பேசிச் செல்வதிலாகட்டும், கோர்ட்டில் அப்பா என்னைக் குத்தவில்லை என்று சொல்லி அவருக்கு நல்ல மகனாக வெளியே வருவதாகட்டும் , கடைசிக் காட்சியில் தண்ணீருக்குள் அனைவரும் காப்பாற்றுவதிலாகட்டும்... எல்லா இடத்திலுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்.
அவரின் அப்பா உன்னி மொய்தீன் ஷாகிப்பாக வரும் சாய் குமார், மிரட்டலாக நடித்து கடைசியில் நம்மை கலங்க வைத்து விடுகிறார். தன் மகன் தான் சொன்ன பெண்ணைக் கட்டமாட்டேன் என்று சொல்லி காஞ்சனா மாலாவைத்தான் கட்டுவேன் என்று சொன்னதும் அவனை கொல்ல துப்பாக்கி எடுத்து மனைவியின் பேச்சால் வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டு, ஒவ்வொரு இடத்திலும் தன்னை எதிர்க்கும் மகனுடன் சிலிர்த்துக் கொண்டு மோதுவதும், தான் காஞ்சனமாலாவைக் கூட்டிக்கொண்டு போகப்போகிறேன் என்று சொன்னதும் எங்கே இவனால் சகோதர்களாக வாழும் இரண்டு மதக்காரர்களுக்குள்ளும் கலவரம் மூண்டு சாகக் கூடாது என்ற எண்ணத்தில் பெற்ற மகனையே கத்தியால் குத்துவதும் என ஒரு முஸ்லீம் பெரியவராகவே வாழ்ந்திருக்கிறார். அதேபோல் அம்மாவாக வரும் லீனா, சிறப்பாகச் செய்திருக்கிறார். அதுவும் கடைசிக் காட்சியில் சூப்பர்.
பார்வதியின் அப்பா மாதவனாக சஷிகுமார், மகளின் காதல் விவரம் தெரிந்து படிப்பை பாதியில் நிறுத்துவதோடு அவளை அடிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நடிப்பில் ஜொலிக்கிறார். அம்மாவாக வரும் கலாரஞ்சனியும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். கடிதப் பரிமாற்றம் செய்யும் வேலைக்காரப் பெண், சிறுவன் என எல்லாருமே அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காஞ்சனமாலவை காதலித்ததால் தானும் பலகாலம் திருமணமே செய்யாமல் வாழ்ந்த முறைப்பையனும் மனதில் நிற்கிறார்.
வீட்டாரின் பிடிவாதத்தோடு மொய்தீன் தவிர மற்றவனை கணவனாக நினைக்க மாட்டேன் என்று தானும் கடைசி வரை பிடிவாதமாகவே வாழ்ந்து நரை தட்டிய மனுஷியாய் காதலனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் காஞ்சனமாலாவின் வைராக்கியம் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்தக் கதை அப்படியே நிகழ்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது வாழும் அந்த மனுஷி ஆர்யமாலாவின் காதல் எப்படிப்பட்டது...? அவளின் உள்ளம் மொய்தீன் என்னும் மனிதரின் காதலை எந்தளவு சுமந்திருக்கும்...? இத்தனை ஆண்டுகள் வீட்டுச் சிறைக்குள்ளேயே காலத்தை ஓட்ட அந்த மனுஷியால் எப்படி முடிந்தது...? என்றெல்லாம் யோசனைகள் கிளம்பினாலும் அந்தத் தாயை வணங்கவே தோன்றுகிறது.
படத்தின் ஆரம்பமே 'நான் என் மகனைக் குத்திட்டேன்' என்று கத்தியோடு காவல் நிலையம் வருவதில் ஆரம்பிக்கிறது. அப்போது பெய்யும் மழை... படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாகவே பயணிக்கிறது. நமக்கும் காட்சிகளை மழையோடு பார்க்கும் போது ரசிக்கத் தோன்றுகிறது. காஞ்சனமாலாவும் மொய்தீனும் மழையில் நனையும் போதெல்லாம் நமக்கும் நனையும் ஆவல் தோன்றுகிறது... அந்த மழை வில்லனாக மாறும் வரை மட்டுமே... இறுதிக்காட்சியில் நாம் மழையை ரசிப்பதை விடுத்து சபிக்கிறோம்.
ஒரு உண்மைக்கதையை எடுக்கும் போது அதன் தன்மை கெடாமல் எடுக்க வேண்டும் அதை அப்படியே செய்திருக்கிறார் இயக்குநர். ஏன்னா நாம மலையாளத்தில் வந்த படத்தை தமிழில் எடுத்தால் நாயகனுக்காக காட்சி அமைப்பில் மாற்றம் செய்வோம்.... தமிழ்ப் படத்தை தெலுங்கில் எடுத்தால் ரசிகர்களுக்காக கையை நீட்டி ரயிலை நிறுத்துவோம்... வாழைப் பழத்தை வைத்து அஞ்சு பேரைக் கொல்லுவோம்... புலியாய் பறந்து வானத்தில் புஸ்வானம் வெடிப்போம். முதல் படமாக இருந்தாலும் என்னால் இந்தக் கதையை அப்படியே எடுத்து வெற்றி பெற முடியும் என்று நம்பி... அதில் சாதித்துக் காட்டிய விமலுக்கு ஒரு சபாஷ். காட்சிகளும் காட்சி அமைப்பும் நம்மை அப்படியே கதை நிகழும் வருடத்திற்கே கொண்டு செல்கிறது. ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவு மிரட்டல்... படத்தின் இசையும் அருமை.
படத்தில் பல இடங்களில் கை தட்டலை பெறும் காட்சிகள் இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றி என்பது இறுதியில் சுபம் போடும் போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுவதில்தான் இருக்கிறது. ஏன்னா நாமெல்லாம் தியேட்டரில் தேசியகீதம் போட்டாலே எழுந்து நிற்கமாட்டோம். அதுக்காகவே அதை நிறுத்திட்டானுங்க அது வேற கதை... இறுதிக்காட்சி திரையில் ஓடும்போதே சைக்கிளையும் வண்டியையும் எடுக்க ஓடிவிடுவோம். ஆனால் இந்தப்படத்தில் இறுதிக்காட்சியில் படம் பார்த்தவர்கள் எல்லாம் கைதட்டி இயக்குநருக்கு வாழ்த்தைத் தெரிவிக்கிறார்கள்.
என்னு நிண்டே மொய்தீன் வாழ்ந்த காதலை திரையில் வாழ வைத்திருக்கிறது. எந்தக் கலப்பும் இல்லாமல் உண்மைக் கதையோடு பயணிக்கும் போது நாமும் காஞ்சனமாலா மொய்தீனுடன் வாழ்கிறோம் என்று உணர்வோடு பார்த்தால் மெதுவாக நகர்வது போல் செல்லும் கதை அமைப்பு தெரியாது... அவர்களின் காதலும் அதற்கான எதிர்ப்பும் மட்டுமே தெரியும்.
படமும் காஞ்சனமாலா பார்வதியும் நம் நினைவில் எப்போது நிற்பார்கள். மொய்தீன் இறந்தாலும் அவரின் பெயரில் சேவா சங்கம் வைத்து உண்மைக் காதலை மனதில் நிறுத்தி வாழும் காஞ்சனமாலா அம்மாவின் காதலுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
-'பரிவை' சே.குமார்.
24 எண்ணங்கள்:
ஏற்கெனவே சில மலையாளப் படங்கள் கணினியில் வைத்திருக்கிறேன். பார்க்க வேண்டும் இந்தப் படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற என்னத்தை ஏற்படுத்தி இருக்கிறது உங்கள் விமர்சனம்.
படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம் நண்பரே
அருமை
அவசியம் பார்க்க முயற்சிப்பேன்
நன்றி
தம +1
நிறைய பேர் முகநூலிலும் பகிர்ந்துவிட்டார்கள்.... கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்....
ரசிக்க வைக்கும் விமர்சனம் சகோதரரே...
படத்தைப்பார்க்கும் ஆவலைத் தூண்டும்படியான விமர்சனம்..வாழ்த்துகள் சகோ
விரிவான அழகான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!
விமர்சனம் அருமை நண்பரே தமிழ்ப்படத்தைவிட மலையாளப் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதில் எனக்கு என்முனை அளவும் மாற்றுக் கருத்தில்லை காரணம் நானும் அதிகமான மலையாளப் படங்களை ரசித்தவன் காரணம்.
அங்கு (கேரளத்தில்) கலை வளர்க்கப்படுகிறது
இங்கு (தமிழ்நாட்டில்) கலைஞன் வளர்க்கப்படுகிறான்
தமிழ் மணம் 5
அருமையான விமரிசனம் குமார். தங்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!
கில்லர்ஜி கரீக்டா சொன்னீங்க...அந்தக் கடைசி இரு வரிகள்....
துளசி :பார்த்தாச்சு அருமையான படம். உங்கள் விமர்சனம் அழகு...
கீதா: படம் பார்க்கவில்லை எல்லோருமே + சொல்லுகின்றார்கள். கேரள படங்களைத்தான் நான் மிகவும் விரும்பிப் பார்ப்பேன். அவர்களின் கதைக்காகவே. கதையில் கிமிக்ஸ் செய்யாமல் ஹீரோயிசம் இல்லாமல் எடுப்பதற்காகவே. மிகவும்யதார்த்தமாகவும் இருக்கும். இதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். விமர்சனம் அருமை.
அட!!! இது உண்மை கதையா!! அருமையான விமர்சனம் அண்ணா!!
அருமையான படம் பற்றிய விமர்சனம். பார்க்க முயல்கிறேன்.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக பாருங்கள் ஐயா...
வாங்க கார்த்திக்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாருங்கள்... ரசிப்பீர்கள்.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் கருத்து உண்மை அண்ணா...
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைக்கதையே தான்.... பாருங்க...
மழையும் அந்தக் கதையும் ரொம்பப் பிடிக்கும்
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான நடை....நானும் பார்க்க வேண்டும் உங்கள் பதிவிற்காக...
கருத்துரையிடுக