முன்கதை
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். அவளிடம் விசாரிக்கும் போது இரண்டு பேரைப் பற்றி அறிந்து அவர்கள் கொலை பண்ணியிருக்கலாமா என சந்தேகிக்கிறார்.
பகுதி -1 படிக்க கொலையாளி யார்?
"ம்... அப்ப சிவராமன் கொன்னிருப்பாரா...?"
"ஐய்யய்யோ... அவரு ரொம்ப நல்லவரு... நேத்து அவரு இங்க வரலை சார்..."
"சிவராமன் கொன்னிருப்பாரான்னு கேட்டா நல்லவருன்னும் நேற்று வரலைன்னும் சர்ட்டிபிகேட் கொடுக்கிறே..?"
"இல்ல சார்... ரொம்ப நல்ல டாக்டர்... எல்லாருக்கும் உதவி செய்வாரு... ஐயா வரும் போதெல்லாம் அவரு இங்க தினம் வருவாரு... நேத்து வரலை... ஐயா கூட சாப்பிடும் போது சிவராமனுக்கு இன்னைக்கு ஏதோ முக்கியமான ஆபரேசனாம்... அதான் வரலையாம்ன்னு சொன்னாங்க..."
"ம்... சரி... எல்லாருக்கும் உதவுவாருதானே... அப்ப யாருக்கு உதவ இந்தக் கொலையை பண்ணுனாரு... கண்டிப்பாக உனக்கு தெரிஞ்சிருக்கணுமே... டாக்டர்ல அதான் ரொம்ப கிளியரா செஞ்சிட்டுப் போயிருக்கார்... இல்லையா... ஆமா உனக்கு இதுல என்ன பங்கு...?"
"சார்... என்ன சார் திரும்ப திரும்ப அதுக்கே வாறீங்க... எம்புள்ள மேல சத்தியமா இது எனக்குத் தெரிஞ்சி நடக்கலை... போலீஸ்காரங்க எங்களை மாதிரி சாதாரண ஆளுங்கக்கிட்டதான் மாத்தி மாத்தி கேப்பீங்க... இந்தக் கேசை முடிக்கணுமின்னா என்னையவே கொலைகாரி ஆக்கிடுவீங்க... உண்மையிலேயே டாக்டர் ரொம்ப நல்லவரு... அவரு பண்ணியிருக்கமாட்டாரு... யாரு எதுக்காக பண்ணுனாங்கன்னு எனக்குத் தெரியாது சார்... காசுக்காக கழுத்தறுக்கிற சாதியில்லை சார் எங்க சாதி..." இதுவரை பயந்து பயந்து பேசியவள் உனக்கென்ன பங்குன்னு கேட்டதும் பொரிந்து தள்ளினாள்.
"சரி... சரி... எதுக்கு இப்ப கோபப்படுறே... அவரு நல்லவருன்னு சொல்லிட்டே... நல்லவரா... கெட்டவரான்னு நான் விசாரிச்சிக்கிறேன்... ஆமா அப்புறம் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே உண்மையா...?" மெதுவாக கொக்கியைப் போட்டார் சுகுமாறன்.
"எ...என்ன சார்?" கலவரமாய்க் கேட்டார்.
"உனக்கும் உங்க ஐயாவுக்கும் ஒரு இதுன்னு கேள்விப்பட்டேனே.... உண்மையா?"
"சார்..." கத்தினாள்.
"இங்கபாரு.... போலீசுகிட்ட மறைச்சி உண்மை தெரிய வந்தா என்னாகும் தெரியுமா? சும்மா சொல்லு... நீயும் அழகா இளமையோட இருக்கே... அவருக்கும் மனைவி இல்லை.... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா... "
"கூட்டிக் கழிச்சி வகுத்தெல்லாம் பாக்காதீங்க சார்... நாங்க ஏழைங்க.. வயித்துப் பொழப்புக்காக வேலைக்கு வர்றோம்... கெட்டுப் போயித்தான் சாப்பிடணுமின்னு இல்லை... அந்தச் சாப்பாட்டை சாப்பிடுறதுக்கு மலத்தை திங்கலாம் சார்... அவரு மதுரையில எப்படின்னு தெரியலை... இங்க வர்ற மூணு நாளும் சத்தியவான் சார்... வேலைக்கு வர்ற பொண்ணுதானேன்னு இல்லாம மகளாட்டம் நினைப்பாரு சார்... அவருக்கும் வயசுக்கு வந்த பொண்ணு இருக்கா... இங்க கூட வந்திருக்கு... நானும் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை.... அவரும் அப்படிப்பட்ட ஆளில்லை..." படக்கென்று சொன்னாள்.
அவளின் முகத்தில் பயத்திற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.. ஆரம்பத்தில் பயந்து பயந்து பேசியவள் அவளை தவறானவள் என்று சொன்னபோது ஆவேசமாகப் பேசினாள். இவள் செய்திருக்கவோ அல்லது யார் செய்தார்கள் என்பதை அறிந்திருக்கவோ மாட்டாள் என்று நினைத்தவர் "எப்பக் கூப்பிட்டாலும் ஸ்டேசனுக்கு வரணும்... உம்புருஷனையும் கூட்டிக்கிட்டு வரணும்... சரியா...?" என்று அவளிடம் சொல்லிவிட்டு சுகுமாரன் வெளியில் வந்தார்.
'அன்புள்ள மன்னவனே... என் ஆசைக் காதலனே...' என அவரின் செல்பேசி அழைக்க, எடுத்து "என்ன புவி.." என்றார். எதிர்முனை ஏதோ சொல்ல "ஓ அப்படியா... என்னைய பேசச் சொன்னாங்களா..? சரி நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்..." என்றார்.
எதிர்முனையில் புவனா ஏதோ கேட்க, "என்ன... சாப்பாடா... இல்லம்மா... கொஞ்சம் லேட்டாகும்மா... ஒரு மர்டர் கேஸ் குட்டிம்மா... நான் ஸ்பாட்லதான் இருக்கேன்... செத்தது ஒரு பிஸினஸ்மேன்... கொஞ்ச நேரத்துல லோக்கல் சேனல்ல செய்தி வரும்... பாத்துக்க... இப்ப கொஞ்சம் பிஸி... அப்புறம் கூப்பிடுறேன்... பை..." என்றபடி போனை கட் செய்தவரை எதிர்க்கொண்டார் பொன்னம்பலம்.
"என்ன... சொல்லுங்க...?" என்றார்.
"சார்... ஆம்பூலன்ஸ் வந்திருச்சு..." என்றார் மெதுவாக.
"சரி... ஆக வேண்டியதைப் பாருங்க.... இவரோட பசங்க வந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வரச்சொல்லி கான்ஸ்டபிள்ஸ்க்கிட்ட சொல்லிட்டுப் போங்க... அந்தப் பொண்ணு செய்திருக்க வாய்ப்பில்லைன்னு தோணுது.... தேவைப்பட்டா விசாரணைக்கு கூப்பிடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்... அதையே சொல்லி அனுப்பிடுங்க... அப்புறம் அவ ரெண்டு பேரு சொன்னா... அது... ம்ம்ம்ம்.... ரெ... ரெத்... ம்... ரெத்தினம்..."
"அவன் வாட்ச் மேன் சார்.. நான் விசாரிச்ச வரை அந்தப் பொண்ணு மாதிரித்தான் இவனும் சொல்றான்"
"ம்... அவனையும்... அப்புறம் இன்னொருத்தர் டாக்டர்........ பேரு கூட.... சி..... சிவ....ராமன்..ஆங்... சிவராமன்... இவங்க ரெண்டு பேரையும் விசாரிக்கணும்... ஆமா அவனுக்கிட்ட விசாரிச்சீங்களா...?"
"ஆமா சார்... அவன் பொய் சொல்ற மாதிரி தெரியலை... டாக்டர் நல்லவருன்னு சொல்றான்... இருந்தாலும் நீங்களும் விசாரிச்சிருங்க சார்... நீங்க விசாரிக்கிற விதம் வேற மாதிரி இருக்கும்ல்ல..."
"என்னத்தை சொல்லப் போறான்... உங்ககிட்ட சொன்னதைத்தான் எங்கிட்டயும் சொல்வான்... இந்தக் கேஸ் நம்மளை அலைய வைக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்... ரொம்ப பிளானா பண்ணியிருக்காங்க... சரி... சரி... அவனைக் கூப்பிடுங்க..."
"இங்கதான் சார் இருந்தான்... இந்தாப் பார்க்கிறேன்..." என்றபோது ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பதட்டமாய் இறங்கிய நடுத்தர வயது வழுக்கைத் தலை மனிதர் வேகமாக உள்ளே வந்தார்.
"அலோ சார்... யார் நீங்க... அவருக்கு உறவா?" பொன்னம்பலம் அவரிடம் கேட்டார்.
"சார்... ஐ ஆம் டாக்டர் சிவராமன்"
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
14 எண்ணங்கள்:
முதல் 3 பகுதிகளும் படித்தேன்...
சுவாரஸ்யமாகச் செல்கின்றது.
(ஒரு சந்தேகம்;
கொலையாளி?
கொலைகாரன்?
எது சரி?)
ஆஆஆ குறுந்தொடர் ஆரம்பிச்சுட்டீங்களா,மிக்க நன்றி சகோ...
விட்டுப்போன பாகத்தையெல்லாம் படிச்சு முடித்தேன்,விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது கதை,வாழ்த்துக்கள் சகோ !!
தொடர்கிறேன்.
சஸ்பென்ஸாக போகிறது தொடர்கிறேன்...
வணக்கம்
அண்ணா.
நன்றாக உள்ளது தொடருங்கள் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செம சஸ்பென்ஸ் தொடர்கின்றோம்....
வணக்கம் சகோதரரே.
இத்துடன் இதன் தொடர்பான, 2 பகுதிகளையும் படித்து விட்டு இதனையும் படித்தேன். கதை மிகவும் விறுவிப்புறுடன் ஸ்வாரஸ்யமாக செல்கிறது. அடுத்த பகுதியை படிக்க ஆவலாய் உள்ளேன். தொடருங்கள். நன்றி.. வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்,
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கொலைகாரன் என்பது ஆண் பால், கொலைகாரி என்பது பெண்பால் இரண்டையும் குறிக்க கொலையாளி என்பது சரிதானே?
வாங்க சகோதரி...
திரில்லர் கதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தீர்கள்...
நானும் முன்னால் பாதிவரை எழுதி கிடப்பில் போட்ட கதையை தூசி தட்டியிருக்கிறேன்...
நல்லாயிருக்கா இல்லையா என்பது எனக்குத் தெரியாது....
என்ன ஆளைக் காணோம் என்று நினைத்தேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக