மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 ஜூன், 2014

தலையெழுத்து மாறுமா?


"வா... சரோஜா... நல்லாருக்கியா?"

"நல்லாருக்கேங்க்கா... நீங்க எப்புடியிருக்கீக... முத்துமீனா நல்லாருக்காளா?"

"ம்.. எங்களுக்கென்ன... நல்லாத்தேன் இருக்கோம்..."

"செரி... வா உள்ளற... புள்ளங்கல்லாம் நல்லாருக்காகளா?"

"நல்லாருக்குகக்கா..." என்றபடி உள்ளே வந்த சரோஜா "நீ இப்ப சந்தோஷமாத்தானேக்கா இருக்க... பாத்து ரொம்ப நாளாச்சேன்னுதான் இன்னக்கி கெளம்பி வந்தேன்..."

"எனக்கென்ன நல்லாத்தேன் இருக்கேன்... எந்தலவிதி கஷ்டப்பட்டுத்தான் வாழணுமின்னு இருக்கு... அத ஆரால மாத்தமுடியுஞ் சொல்லு... ஒக்காரு... காபி போட்டாறேன்..." என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.

பின்னாடியே வந்த சரோஜா "இப்பவும் உங்க வீட்டுக்காரர் அப்படித்தான் இருக்காராக்கா..." மெதுவாகக் கேட்டாள்.

அந்தக் கேள்விக்கு ஒரு உலர்ந்த புன்னகையை உதிர்த்து விட்டு "இது என்னடி கேள்வி... எருமை சேத்துல விழுகாம விலகிப் போனாத்தான் வித்தியாசமாத் தெரியும்... இவரெல்லாம் இப்புடியே வாழ்ந்துட்டு சாவணுமின்னு தலயில எழுதி அனுப்பிட்டான் அந்த ஆண்டவன்... அப்புறம் திருந்துவாரா என்ன... எப்பவும் போலத்தான்..."

"அங்க நீ பொம்பளப்புள்ளைய வச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேக்கா... பக்கத்துல இருந்த எங்களுக்கே உன்னோட நெலமை ரொம்ப வருத்தமா இருக்குங்க... இப்ப சாதி சனத்தை விட்டுட்டு... அங்காளி பங்காளி விட்டுட்டு... பழகுன எங்கள மாதிரி ஆளுகளை எல்லாம் விட்டுட்டு இப்படி வந்து தனியாக் கெடக்கியே அக்கா..."

"என்ன பண்ணுறது... எங்க சாதி சனத்துல காசு பணத்தை சேக்கப்பாப்பாங்களே ஒழிய குடிச்சிட்டு அழிக்க மாட்டாங்க... இவரு தப்பாப் பொறந்துட்டாரு... எல்லாத்தையும் அழிச்சிட்டு சாதி சனங்க முன்னாடி தெருவுல நிக்கிறதைவிட கண்கானாத இடத்துல காவயித்துக் கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லைன்னுட்டுத்தான் இங்க வந்தேன்..."

"ம்... நீ எடுத்தது சரியான முடிவுக்கா..."

"இங்க வந்து அந்த மனுசனால ஒரு பிரயோசனமும் இல்ல... எப்பவும் போல குடி மட்டுந்தான்... வேலா வேலைக்கு சாப்பிட வாரதுலாம் இல்ல... எந்த நேரமுன்னு கிடையாது.... பெரும்பாலும் ராத்திரிக்கு வந்து கொஞ்ச நேரம் ஆடிட்டு... ஒரு சில நாள் அடிச்சிட்டு..." அவளின் பேச்சை இடைத்த மறித்த சரோஜா, "இன்னமும் அடிக்கிறாராக்கா..." என்று சோகமாய்க் கேட்டாள்.

"குடிகாரனுக்கிட்ட அடிவாங்காத பொண்டாட்டி இருக்காளா என்ன... இப்ப அடிக்கிறதை கொறச்சிட்டாரு... முத்துமீனா எதுக்க ஆரம்பிச்சதால வாயில வந்த வார்த்தை எல்லாம் பேசி திட்டுறது மட்டுந்தான்..." என்று சிரித்தாள்.

"எப்படிக்கா உன்னால சிரிக்க முடியுது... இப்புடிப்பட்ட ஆளோட வாழாம தனியா வாழ்ந்திடலாங்க்கா... நானா இருந்தா அதைத்தான் செய்வேன்..."

"இது எனக்கு கிடைத்த வாழ்க்கை... என்ன செய்ய முத்துமீனாவுக்காக வாழ்றேன்... இந்தக் கஷ்டமே அவளுக்காகத்தான்... இப்ப காலேசு ரெண்டாவது வருசம் படிக்கிறா... எனக்கு மாதிரி வாழ்க்கை அமையாம அவளுக்கு நல்ல வாழ்க்கை அமச்சிக் குடுத்துட்டுப் பொயிட்டேனா... போதும்..."

"உன்னோட மனசுக்கு நல்ல வாழ்க்கை அமையுங்க்கா..."

"ம்..."

"ஆமா செலவழிவுக்கு எல்லாம் அம்மா வீட்ல எதாவது..." சரோஜா இழுத்தாள்.

"அடிப்போடி... அவனுகதானே... அதெல்லாம் எதிர்பாக்கலை... இந்த வீடு எங்க அப்பாவோட தங்கச்சி வீடுதான்... எங்க அயித்த மவன் பாரின்ல செட்டிலாயிட்டான். அதனால ஒரு பக்கத்துல எங்களுக்கு கொடுத்திருக்கான். வாடகை எல்லாம் இல்ல... வீட்டை பாத்துக்குவோம்ன்னு கொடுத்திருக்கான்... இப்ப கொஞ்சம் கடைகளுக்கு சீடை, முறுக்கு, போலி எல்லாம் போட்டுக் கொடுக்கிறேன்... எங்கொழுந்தனாரு முத்துமீனா படிப்புக்கு கொடுக்குறாரு... அவருக்கு பொம்பளப்புள்ள இல்ல பாரு... அதுனால அவ மேல ரொம்ப பாசம்... எம்புட்டு வேணுமின்னாலும் படித்தா அப்பா படிக்க வைக்கிறேன்னு சொல்லியிருக்காரு... அவரு பொண்டாட்டியும் நல்ல குணவதி... அதனால பிரச்சினையில்ல..."

"ம்... இருந்தாலும் இப்ப விக்கிற வெலவாசிக்கு இந்த பொழப்புல எப்படி காலம் ஓட்டமுடியுங்க்கா.... அதுவும் வயசுக்கு வந்த புள்ளய வச்சிக்கிட்டு... அதுக்கும் நாலு நல்லதக் கெட்டத வாங்கிப் போடணுமில்ல..."

"என்ன பண்ண ஓட்டித்தான் ஆகணும்... அவளும் கஷ்டம் புரிஞ்சு எதுவும் கேக்கிறதில்ல... அதுவும் போலி இன்னைக்குப் போட்டுட்டு நாளைக்கு போகும் போது விக்காம இருந்தா திருப்பி எடுக்கணும்... ஒருசில நாள் அதிகம் எடுக்க வேண்டியிருக்கும்... அன்னைக்குத்தான் வருத்தமா இருக்கும்... என்ன செய்ய... வாழ்க்கையை ஓட்டணுமே..."

"இருந்தாலும்... " என்று இழுத்தாள் சரோஜா.

"என்னோட கதய விடு... இரு கோழி வாங்கிக்கிட்டு வந்து சமைக்கிறேன் மத்தியானம் சாப்பிட்டுப் போகலாம்..."

"இல்லக்கா... மத்தியானம் புள்ளங்க வந்துருவாங்க... நம்ம வீடுதானே... இன்னொரு நாளைக்கி புள்ளகள கூட்டிக்கிட்டு வாரேன்... அப்ப இருந்து சாப்பிட்டுப் போறேன்...."

"பழகுன பழக்கத்துக்கு இம்புட்டுத்தூரம் வந்திட்டு சாப்பிடாமப் போனா எப்படிடி.."

"என்னக்கா சொன்னே பழகுன பழக்கமா... நானும் உனக்கு தங்கச்சிதாங்க்கா... கலியாணமான புதுசுல எனக்கு நீ செஞ்ச உதவியெல்லாம் மறக்குறவ நாயில்லக்கா... பழகுனவளாமுல்ல பழகுனவ... இனி அப்படியெல்லாம் சொல்லாதக்கா..." பொரிந்து தள்ளினாள்.

"செரிடி தப்புத்தான்... சாப்பிடச்சொன்னா மாட்டேங்கிறே... இந்தா இதுல சீடை முறுக்கெல்லாம் இருக்கு... பிள்ளைகளுக்கு கொடு..." என்று கொடுத்தாள்.

"எதுக்குக்கா இதெல்லாம்..." என்றபடி வாங்கியவள், "ரொம்ப நாளாவே வரணு ... வரணுமின்னு நெனச்சிக்கிட்டே இருப்பேன்... பாக்கியக்கா வரும்போதுகூட வர ஆசைதான்... ஆனா வீட்டுல வேல சரியா இருக்கேக்கா... அதான் முடியல... இப்பக்கூட பாக்கியக்காக்கிட்ட கேட்டுக்கிட்டு அயித்தைக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டுத்தான் வந்தேன்... அயித்தைக்கு என்னய விட்டா அளில்லையில்ல... அதுக்கு பின்னால பாக்கணுமின்னுதானே தம்பி மவளான என்ன மருமவளாக்குச்சு.... சரி.. வர்றேங்க்கா..." என்றபடி ஜாக்கெட்டுக்குள் கைவிட்டு பர்சை எடுத்து இரண்டு ஐநூறு ரூபாய்த்தாள்களை எடுத்து நீட்டினாள்.

"எதுக்கு இது...?"

"வச்சிக்கக்கா... என்ன அள்ளியா கொடுக்கிறேன்... அதிகமா கொடுக்கிற மாதிரி நானில்லை...  எதோ என்னால முடிஞ்சது..."

"சரோஜா... எனக்கு இதெல்லாம் பிடிக்காது... கஷ்டப்பட்டாலும் இன்னும் கையேந்துற நிலைக்கு வரலை... கொழுந்தனுமே முத்துமீனா படிப்புக்காக கொடுக்கிறதால வாங்கிக்கிறேன்...  இதெல்லாம் கொடுத்து என்னய கடங்காரி ஆக்கிடாதே..."

"ஏங்க்கா இப்புடி பேசுறே... எனக்கு உனக்கு எதாவது கொடுக்கணுமின்னு தோணுச்சு... அம்புட்டுத்தான்... தங்கச்சி கொடுத்ததா நினைச்சுக்க..." என்று கையில் அழுத்தினாள்.

"வே... வேண்டாம் சரோஜா... இப்படி பணம் வாங்கி பழக்கமில்லை... எனக்கு சங்கோஜமா இருக்கு..."

"வேண்டான்னு சொல்லாதேக்கா... ஒரு தங்கச்சி அக்காவுக்கு கொடுத்ததா நினைச்சிக்க... இந்தா..." என்று கையில் திணித்து விட்டு சரோஜா கிளம்ப, கமலம் கலங்கிய கண்களுடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளின் கணவன் குடிபோதையில் ரோட்டை அளந்து கொண்டு வந்தான். அவளை அறியாமல் கை வேகமாகப் பணத்தை தனது ஜாக்கெட்டுக்குள் திணித்தது.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

தனிமரம் சொன்னது…

வணக்கம் குமார் சார் சிறுகதை இன்னும் படிக்கவில்லை தொடர்கதை இடையில் நின்றாதால் நீங்களும் வலையை மூடி ஓடிவிட்டீர்களோ என்று இன்று வந்தேன் மீண்டும் மனசு கலையாதகனவு தொடர் வரும் என்ற ஆவலில்!

Angel சொன்னது…

கதை ரொம்ப நல்லா இருக்குங்க .இயல்பான ஊர் பேச்சு வழக்கில் ..
பாவம் சிலருக்கு இது தலை எழுத்துதான் :(

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...

ஒரு மாத விடுப்பில் ஊருக்குப் போயிருந்தேன். அதான் மனசுக்கு கொஞ்சம் ஓய்வு...

கலையாத கனவுகள் விரைவில் வரும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க சகோதரி ஏஞ்சலின்...
தங்கள் கருத்துக்கு நன்றி.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

கதை மிக நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகிழ்நிறை சொன்னது…

இப்படி குடிபோதைக்கு அடிமையாகும் ஆண்களின் மனைவி பாவம் தான் சகோ! நல்ல சொல்லிருகீங்க!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனசு கனக்கவைக்கும் சிறுகதை..
இயல்பான பேச்சு நடை... பாராட்டுக்கள்.!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

http://blogintamil.blogspot.in/2014/06/2.html

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இயல்பான நடையில் நல்லதொரு சிறுகதை! வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
www.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in

நித்யா குமார் சொன்னது…

nalla kathai arumaiya eruntha thu sir

Unknown சொன்னது…

தலைஎழுத்து.............ஹூம் மாற்றுவது கொஞ்சம் கஷ்டம் தான்,ஆனாலும் ஏதாவது செய்து சமாளிக்கலாம்,கமலம் மாதிரி.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனசை தொடும் கதை, அருமையா எழுதி இருக்கீங்க குமார் !

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் தொட்ட கதை. இன்னமும் பல வீடுகளில் இதே நிலை...