அனைவருக்கும் வணக்கம்.
ஊருக்குச் சென்று திரும்பி ஒரு வாரம் பணிக்குச் சென்றாகிவிட்டது. எப்பவும் போல் இல்லாமல் இந்த முறை பிரிவுத் தனிமை அதிகம் ஆட்கொண்டுள்ளது. மனைவி, குழந்தைகள் என்ற ஒரு வட்டத்துக்கள் வாழ்க்கை நடத்தி விமானம் ஏறும்போது இருந்த வலி இன்னும் இறங்காமல் இருக்கிறது.
இந்த வருட விடுமுறை வீட்டு வேலை மற்றும் சில முக்கிய காரணங்களுக்குள் அடங்கிவிட்டது. கிராமத்திலேயே அதிகம் இருக்கும்படி ஆகிவிட்டதால் இணையப் பக்கமே வரவில்லை. எனக்கு தங்களது செல்போன் எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொன்ன திண்டுக்கல் தனபாலன் சார், திரு. முத்து நிலவன் ஐயா, கரந்தை திரு. ஜெயக்குமார் ஐயா மற்றும் சில உறவுகளுடன் பேச வேண்டும் என்று நினைத்து நினைத்தே நாட்கள் நகர்ந்து விட்டது செல்பேசி எண் இணையத்தில் இருந்ததால்...
மனைவியின் நேர்த்திக்கடனுக்காக பழனி செல்லும் போது திண்டுக்கல்லில் தனபாலன் சாரைச் சந்திக்க வேண்டும் அவரிடம் சொல்ல வேண்டும் என இன்னும் சில வேண்டும்கள் கடைசிவரை நிறைவேறவில்லை... நேர்த்திக் கடனும் அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போய்விட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு வேலையாக செல்லும் போது முத்துநிலவன் ஐயாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் எனது வேலையை நண்பனிடம் சொல்லி முடிக்கச் சொல்லிவிட்டு வரும் போது கனவாகவே போனது.
எனது அன்பு அண்ணன் குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள் நீ போன் பண்ணு நான் உன்னைப் பார்க்க வாரேன் என்று சொன்னார்கள். அவர்களுக்கும் அழைக்க முடியவில்லை. ஊருக்கு வருவதற்கு இரு தினங்கள் முன்னர் இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும் அன்றுதான் கம்பெனியில் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்ப்பதற்காக எங்கள் இல்லம் வந்திருந்தேன். அப்போது அண்ணன் சாட்டிங்கில் வந்தார். இரவு பதினோரு மணிக்கு மேல் என்பதால் நாளை கூப்பிடுகிறேன் என்றேன். பரவாயில்லை இப்ப உங்க நம்பர் கொடுங்க நான் கூப்பிடுறேன் என்றார். பின்னர் அவருடன் பேசினேன்... எனக்கு அவ்வளவு சந்தோஷம்... எனது மூத்த சகோதரன் என்னிடம் எப்படி பேசுவாரோ அதே போல் பேசினார். அவரது 'இளமை எழுதும் கவிதை நீ' புத்தகத்தை அனுப்ப அப்போதே முகவரி வாங்கினார். அடுத்த நாள் அனுப்பிவிட்டு தகவலும் தெரிவித்தார். நான் ஊருக்கு வருவதற்கு கிளம்பும் போது புத்தகம் வந்து சேர இங்கு கொண்டு வந்து படித்தும் முடித்து விட்டேன். புத்தகம் குறித்து அண்ணனிடம் தெரிவித்து விட்டேன். அது குறித்து விரிவாக மற்றொரு பகிர்வில் பார்க்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. சென்னை சென்றிருந்தால் அவரைச் சந்தித்து இருக்கலாம்... செல்லவில்லை.
இந்த முறை எங்கும் செல்லவில்லை. மதுரையில் அழகர் வைகையில் இறங்கும் விழா மட்டுமே காணச் சென்றேன். மூன்று நாட்கள் மதுரையில் இருந்து அழகு மலையானை அருமையாக தரிசித்தோம். அதுவே யாம் பெற்ற பாக்கியம். தனபாலன் சார், ஐயாக்கள் முத்து நிலவன் மற்றும் ஜெயக்குமார் அவர்களுடன் இங்கிருந்து நாளையோ அதற்கடுத்த நாளோ கண்டிப்பாக பேச வேண்டும் என்று இருக்கிறேன். நம்மை விரும்பி அழைத்தவர்களுடன் பேச முடியாமல் வந்து சேர்ந்தது வருத்தமே.
நண்பர் செங்கோவி எழுதிய ஒரு பகிர்வுக்கு கருத்து போட்டிருந்தேன். இன்று அதில் பார்த்தால் திரு.யோகராஜா அண்ணன் அவர்கள் குமார் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டிருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்க என்ன தவம் செய்தேனோ.
ஊரில்தான் வெயில் கொளுத்துகிறது என்று வந்தால் இங்கும் வெயில் தாக்கு தாக்கு என்று தாக்குகிறது. வந்தது முதல் வேலை அதிகம்தான்... அடுத்த வாரம் நோன்பு ஆரம்பிப்பதால் வேலை நேரம் மாறும்... ஒரு மாதம் அப்படியே ஓடும்... இருந்தும் எங்களுக்கு முடிக்க வேண்டிய புராஜெக்ட் என்பதால் வேலைப்பளு குறைய வாய்ப்பில்லை. ஊர் சென்று வந்த சோர்வு நீங்கி வேலையை முடிக்க வேண்டுமே என்று ஓட நினைத்தாலும் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே என இன்னும் நம் இல்லத்தையே சுற்றி வருகிறது மனசு.
-இனி மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
வணக்கம் அண்ணா
தாங்கள் மற்றும் குழந்தைகள் நலமா?
பணி தான் அண்ணா முக்கியம்
//இல்லத்தைச் சுற்றிச் சுற்றியே வரும் மனது//
தங்கள் வலையின் பெயரே மனதுதானே
மனைவி குழந்தைகளை விட்டுப் பிரிந்து இருப்பதென்பத எளிதான செயல் அல்ல.
குடும்பத்திற்காகத்தானே வெளிநாட்டு வாழ்க்கை என்பதை நினைத்து வலியை மெதுவாகக் குறையுங்கள்
வாழ்த்துக்கள் நண்பரே
தங்களுடன் பேசக் காத்திருக்கின்றேன்
tha ma 2
ஓ... ஊரிலிருந்து திரும்பியாச்சா... வலைகளில் சிந்திப்போம் குமார்..! :)))
வணக்கம்
அண்ணா
நீண்ட நாட்கள் வலைப்பக்கம் பார்த்து. இப்போ மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
வட்டி நிறைய சோறு வேண்டும் என்றால் வேலை முக்கியம் பின்புதான் உறவுகள்.எல்லாம் நிறைறே எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் இனிய ஐயா - கரந்தை ஜெயகுமார் அவர்கள் சொல்வது உண்மையே..
//மனைவி குழந்தைகளை விட்டுப் பிரிந்து இருப்பதென்பத எளிதான செயல் அல்ல//
மீண்டும் இணையத்தில் இணைந்திருக்க - வேதனைகள் மெல்ல மெல்ல மாறும்..
காத்திருக்கிறேன்...
ஆவலுடன்...
919944345233
குடும்பநினைவை தாங்கி செல்லும் மனம் கனக்கத்தான் செய்யும்.
அழைத்து செல்லுங்கள், அல்லது இங்கு வந்து அவர்களுடன் இருங்களேன். குழந்தைகள் வளரும் போது தந்தை உடன் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி அந்த குழந்தைகளுக்கு.
எல்லோரும் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்.
நானும் மூன்று வார கால சுற்று பயணம்முடிந்த பின் பிறகு வலைப் பக்கம் வந்துள்ளேன் ...தொடர்வோம் நண்பரே !
த ம4
தியாகமும் கடமையும் தான் இந்த வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளவும் குமார். மற்றது எல்லாம் சும்மா. மனதை தேற்றிக் கொள்ளவும்.
நினைவுகள்.....
தொடர்ந்து சந்திப்போம்.
நீங்கள் தமிழகத்தில் இருக்கும்போது நானும் இருந்தேன். உங்களைப் போலவே சில பணிகளில் மூழ்கிவிட்டதால் பேச முடியவில்லை...
கொஞ்சம் வேலைப்பளு காரணமாக,இந்தப் பகிர்வு தென்படவில்லை.இப்போது .........
கருத்துரையிடுக