மனசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு... இதோ சில பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
முதல்ல சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய என் தம்பி 'கலியுகம்' தினேஷ், 'அதீத' பாசம் கொண்ட அண்ணன் திரு. எல்.கே மற்றும் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய என் அக்கா சுசிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
***
கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்த உள்ளனர். மொத்தம் 1001 கவிஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி 72 மணி நேர தொடர் கவியரங்கமாக நடக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 9,10,11 தேதிகளில் கற்பகம் பல்கலைக்கழக அரங்கில் நடக்க இருக்கும் இந்த கவிரங்கத்தில் பங்கேற்கும் கவிஞர்களுக்கு, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கவியரங்கத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 28 வரிகளுக்கு மிகாமல் 3 கவிதைகள், புகைப்படம் மற்றும் சுய முகவரியிட்ட உறையுடன், இம்மாத இறுதிக்குள்,
தலைவர்
கோவைத் தமிழ்ச் சங்கம்
63, பாரதிதாசன் நகர்
ராமநாதபுரம்
கோவை-45 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
நேரடியாக கவிதைகள் அனுப்ப முடியாதவர்கள் நண்பர் இதயச்சாரல்..! தமிழ்க்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர் கோவை தமிழ்ச்சங்க தலைவருக்கு அனுப்பிவிடுவார்.
அவரின் மின்னஞ்சல் : thamizhkkaathalan@gmail.com
என்ன நண்பர்களே... கின்னஸ் கவியரங்கில் 1001ல் நாமும் ஒருவராக இருக்கலாமே... எடுங்கள் பேனாவை... எழுதுங்கள் கவிதைகளை... நம் தமிழ் மொழி வளர்ப்போம்.
குறிப்பு : வெளிநாட்டில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களது பெயருடன் நண்பர்களால் வாசிக்கப்படும்.
இதுதான் தலைப்பு என்றில்லை... என்ன கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதைகளையே அனுப்பலாம். இதற்கென தனியாக எழுத வேண்டும் என்றில்லை.
இதுதான் தலைப்பு என்றில்லை... என்ன கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதைகளையே அனுப்பலாம். இதற்கென தனியாக எழுத வேண்டும் என்றில்லை.
***
நேற்று அலுவலகத்திற்கு வந்ததும் என் மனைவியிடம் இருந்து பதட்டமான போன் கால் ஒன்று வந்தது. பாப்பா போன பள்ளிக்கூடப் பேருந்து விபத்தில் மாட்டிவிட்டதாம். பிள்ளைகளுக்கு ஒன்றும் இல்லையாம் என்று சொன்னதுடன் காரைக்குடியில் இருக்கும் பள்ளியின் ஹாஸ்டலில் தங்க வைத்திருப்பதாக் சொல்லி, போய் பார்த்து வருகிறேன் என்று சொன்னதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. என்னாச்சோ... ஏதாச்சோ என்ற பதட்டம்.
அண்ணனுக்கு போன் பண்ணி விவரம் சொல்ல, அவர் ஊருக்கு போன் செய்து விசாரித்து பயப்படும்படி ஒண்ணுமில்லை என்று சொன்னதும்தான் நிம்மதியாச்சு... பிறகு என் மகளைக் கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த என் மனைவி மீண்டும் என்னுடன் பேசினார்.
அப்போது பாப்பா போன பேருந்துக்கு முன்னால் போன அதே பள்ளிப் பேருந்துதான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இவர்கள் சென்ற பேருந்து விபத்தின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் ஹாஸ்டலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பேருந்து மீது மோதிய டூவீலர்க்காரர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்திருக்கிறார். சம்பவ இடத்திலேயே அவரும் அவரது ஒரு குழந்தையும் உயிர் இழந்துவிட்டனர். இன்னொரு குழந்தை கவலைக்கிடமாக இருக்கிறதாம். அவர் தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சொல்லப்படுகிறதாம். (விபத்தைப் பார்த்தவர்கள் அவர் மீதுதான் தவறு என்று சொல்கிறார்களாம்).
அவர் தண்ணி அடித்திருந்தால் அவர் இழந்து அவரது உயிரை மட்டுமல்ல இரண்டு மாணிக்கங்களை அல்லவா? இதற்கு பள்ளி நிர்வாகம் என்ன செய்யப் போகிறது தெரியவில்லை. ஒரு அப்பனாக என் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு மனிதனாக மலர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் கனவு கலைக்கப் பட்டுவிட்டதே நினைத்து மனசு வலிக்கிறது. இன்னொரு சோகம் என்னவென்றால் அம்மா இல்லையென்றும் சொல்கிறார்களாம், உண்மையா என்று தெரியவில்லை. குடிகார அப்பனால் (அவன் குடித்திருந்தால்...) குடும்பமே சிதைந்துவிட்டதே.
பள்ளி நிர்வாகம் சரியான முறையில் குழந்தைகளுக்கான பேருந்து வசதியை செய்யாததே விபத்துக்கான காரணம். ஒழுங்கான முறையில் டிரைவர்களை நடத்தாததால் அடிக்கடி மாறும் டிரைவர்கள், அனுபவமில்லாத இளைஞர்கள் டிரைவர்களாக இருப்பது, தனியாரிடம் பிள்ளைகளை ஏற்றிவர கமிஷன் முறையில் ஒப்பந்தம் வைத்துள்ளது என நிறைய தவறுகள் அவர்களிடம் இருக்கிறது. இது தொடரும் பட்சத்தில்... நினைக்கவே பயமாக இருக்கிறது.
கடந்த மாதங்களில் பேருந்து இல்லையென எங்கள் ஏரியாவில் இருந்து 15, 20 மாணவர்களை ஒரு ஆம்னி வேனில் புளி மூட்டை போல அடைத்து கொண்டு சென்று அவர்கள் ஹாஸ்டலில் இருந்து வேறு வண்டிக்கு மாற்றி அனுப்பினர். என் மனைவி பள்ளி நிர்வாகியிடம் சண்டையிட்டு பிள்ளையை அனுப்ப முடியாது என்று சொன்னது போல் மற்ற தாய்மாரும் சண்டை போட்டிருப்பார்கள் போல... மீண்டும் பேருந்து விட்டார்கள். இன்று இரண்டு உயிர்களைப் பலி வாங்கிய விபத்து இன்னும் கோரமாகியிருந்தால் என்ன செய்வது?
இனியாவது பள்ளி நிர்வாகம் யோசிக்குமா?
விபத்தைப் பார்த்த என் மகளுக்கு காய்ச்சல் வந்தாச்சு. மருத்துவரிடம் போய் வந்தும் இன்னும் சரியாகவில்லை. இன்று பள்ளி செல்லவில்லை.
***
நம்ம மைந்தரைப் பத்தி சுசி அக்கா, ராமலக்ஷ்மி அக்கா மற்றும் சகோதரி அமைதிச்சாரல் பகிர சொல்லியிருந்தாங்க... என்னத்தைங்க பகிர்றது... தினமும் நடக்கும் கூத்துக்களையா... சரி இந்தக் கூத்தை மட்டும் கேளுங்க...
மதுரைக்கு அவங்க ஐயா வீட்டுக்கு போனப்போ ம.தி.மு.க காரங்க பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வந்திருக்காங்க... பயபுள்ள மனசுக்குள்ள அவங்க கோஷம் சட்டுன்னு புகுந்துக்கிச்சு... அப்புறம் யாரு வந்தாலும் இவரு மழலைத் தமிழ்ல 'போடுங்கம்மா ஓட்டு... பம்பரத்தைப் பாத்துன்னு...' சொல்லியிருக்காரு... இது காரைக்குடிக்கு வந்ததும் தொடர்ந்திருக்கு... பேப்பரை கிழிச்சு எல்லாரு வீட்டுலயும் போயி போட்டு 'போடுங்கம்மா....' வாசகத்தை கத்திக்கிட்டு இருந்திருக்காரு. தினமும் ஸ்கைப்பில் என்னிடம் பேசும் போது இதை சொல்லுவார்.
எங்க தெருவுக்கு பம்பரத்துக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கு ஒரு கூட்டம்... இவரு வாசல்ல நின்னுக்கிட்டு 'அம்மா வந்துட்டாய்ங்கம்மா... வந்துட்டாய்ங்கன்னு' கத்தியிருக்காரு... அவங்க யாருடா வந்திருக்கான்னு கேட்க , இவரு 'போடுங்கம்மா ஓட்டு... பம்பரத்தைப் பாத்துன்னு...' கத்திட்டாரு... வந்தவங்க பம்பரமா... ரொம்ப சந்தோசப்பட்டு இவர தூக்கி உம்மா கொடுத்து இவர சொல்லச் சொல்லி வேட்பாளரோட மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டாங்களாம்.
ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா? - இது அவங்க அம்மாவோட கேள்வி.
ரெண்டு மூணு நாளக்கி முன்னால படியில இருந்து விழுந்து கால்ல அடிபட்டிருக்கு... ரெண்டு நாள் நடக்காம இருந்த சின்னத்துரை இப்ப வீக்கத்தோட நொண்டிக்கிட்டே வீதிவுலா வாறாராம்.
சரிங்க... இது போதுங்க இப்போ... மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம்... மீண்டும் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.
22 எண்ணங்கள்:
மனசு ரொம்ப நிறைவா இருக்குங்க ...
கலந்து கொள்ளப் போகும் கவிஞர்களுஜ்க்கு முன் கூட்டியே வாழ்த்துகள்.
மைந்தர் பெரிய ஆளாத்தான் வருவாரு!
ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா? - இது அவங்க அம்மாவோட கேள்வி.?????
கவிதை எழுதுங்க மக்கா, நாமளும் தமிழ் வளர்ப்போம்!!!!
ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா? - இது அவங்க அம்மாவோட கேள்வி.//
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ஹி ஹி....
தமிழ்மணத்தில் இருந்து நான் வெளியேறியதால் தமிழ்மணம் ஓட்டு இல்லை.
கின்னஸ் முயற்சிக்கு புதிதாக எழுதி அனுப்ப வேண்டுமா... அல்லது நாம் ஏற்கனவே எழுதியிருக்கும் கவிதைகளை அனுப்பலாமா... அப்படி புதிதாக எழுதி அனுப்ப வேண்டுமென்றால் குறிப்பிட்ட, கருத்து, தலைப்பு ஏதும் இருக்கிறதா..
தெளிவு படுத்துங்கள் நண்பரே...
------------
விபத்து : எத்தனை எங்கேயும் எப்போதும் வந்தாலும் திருந்தாதவர்களை என்ன சொல்ல...
-----------------
மைந்தர் : சிறு குழந்தைகள் மனதில் ஆழமாகவே சில விஷயங்கள் பதிந்து விடும்... :))
வாங்க கோவை நேரம் அவர்களே...
உங்கள் முதல் வருகை என் மனசுக்கும் நிறைவாய் இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் ஆசிர்வாதம் அவர்களுக்கு கிடைக்கட்டும்.
வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா..
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. யாரோ இணைத்திருக்கிறார்கள்.
வாங்க ராஜா...
உங்கள் வினாவுக்கான விடையை பதிவில் இணைத்தாச்சு. புதிதாக எழுத இதுதான் தலைப்பு என்று இல்லை. பதிந்ததையே அனுப்பலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கின்னஸ் சாதனை அருமையான முயற்சி.
உங்க குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
அவர்கள் உடல் நலன் விரைவில் தேற இறைவனை வேண்டுகிறேன்.
அன்பு நண்பர் குமார்,
கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நானும் பங்குபெற முயற்சிக்கிறேன்.
எம்மொழியாம் தமிழின் புகழ் வளர்ப்போம்.
நன்றி.
கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
குமார் உங்கள் பெண் விபத்தில்லாமல் தப்பித்தது படித்து மன நிறைவடைந்தேன் இந்த விசயத்தில் நீங்கள் என்ன மன கஷ்டம் அடைந்திருப்பீர்கள் என்று உணர்கிறேன்
மைந்தன் ரொம்ப சுட்டி போல வாழ்த்துக்கள்
//ஒரு அப்பனாக என் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு மனிதனாக மலர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் கனவு கலைக்கப் பட்டுவிட்டதே நினைத்து மனசு வலிக்கிறது.//
போராடிக் கொண்டிருக்கும் குழந்தை நல்லவிதமாக பிழைத்து வரப் பிரார்த்திப்போம்.
//ரொம்ப சந்தோசப்பட்டு இவர தூக்கி உம்மா கொடுத்து இவர சொல்லச் சொல்லி வேட்பாளரோட மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டாங்களாம்.//
குழந்தையைக் கொஞ்சிவிட்டு காரியத்திலும் கண்ணாகவே இருந்திருக்கிறார்கள்:)!
கவியரங்கம் பகிர்வு நன்று.
எனக்கும் யாரோ தவறுதலாக அழைப்பு அனுப்பியிருந்தார்கள் தலைவரே... 72 மணிநேர தொடர் கவிதை மழையாமே... யப்பா நம்மளால முடியாதுப்பா சாமீ...
உங்கள் கவிதைகளை நிச்சயம் அனுப்புங்க,விபத்து பற்றிய பகிர்வு வருந்தத்தக்கது,போடுங்கம்மா ஓட்டு பம்பரத்தை பார்த்து,தங்கள் மகன் கண்ணுக்குள் வந்து செல்கிறார்.
கவியரங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்..
குமரின் ’மன’சை இப்போதான் முதல்ல பாக்கறேன்! கவியரங்க முயற்சி வெற்றிக்கனி கொடுக்க வாழ்த்துகள்!
நல்ல பதிவு. பஸ்களில் குழந்தைகளை அடைத்து, எந்த வித பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்காமல் செல்வது கண்டிக்கத்தக்கது. சீட் பெல்ட் இருந்தால் நிறைய இழப்புகளைத் தவிர்க்கலாம். குட்டி அரசியல்வாதிக்கு வாழ்த்துக்கள்.
கவியரங்க அறிவித்தலுக்கு நன்றி குமார் !
கலந்து கொள்ளப் போகும் கவிஞர்களுஜ்க்கு முன் கூட்டியே வாழ்த்துகள்.
////பள்ளி நிர்வாகம் சரியான முறையில் குழந்தைகளுக்கான பேருந்து வசதியை செய்யாததே விபத்துக்கான காரணம்.///
இப்படியான ஒரு சம்பவம் சில நாட்களன் முன்னர் எமது ஊரிலும் இடம் பெற்றது சகோதரா...
கவிதைக்கான களம் மிகவும் நன்று..
குடிப்பழக்கத்தால் எத்தனை விபத்துகள் நடந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டாங்களா??? பாவம் பிஞ்சுகள்.
உங்க பையருக்கு அமோகமான எதிர்காலம் இருக்குது
:-)))
கருத்துரையிடுக