சனி, 25 ஜூன், 2011

உலர்ந்த புன்னகை... உலராத காதல்...



காய்ந்த கண்மாய்க்குள்
காலாற நடந்த போது
தண்ணீர் தூக்கும் உன்
உருவம் கானல் நீராய்..!

பாலத்தில் படுத்து
பால் நிலா பார்த்தபோது
நிலவில் ஊடே உன்
உருவம் கலைந்த மேகமாய்...!

கோயில் சுவற்றில் வரைந்த
ஓவியங்களை வியந்து
பார்த்த கண்ணுக்குள் உன்
உருவம் வரையாத ஓவியமாய்...!

இன்னும் என்னுள்
இறக்காத உன் நினைவுகள்...
அடிக்கடி அழ வைக்கின்றன...

அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?

உன்னை கேட்க நினைத்து
உயிருக்குள் புதைத்தேன்...
நினைவுகளை விதையாக்கி
நித்தம் விதைக்கிறேன்...

இழந்த காதலை
இதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்...

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 ஜூன், 2011

உறவுகள் சுகந்தானே...



வணக்கம். எல்லாரும் நலம்தானே..? சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. உடல் நலம் மற்றும் சில காரணங்களால் நீண்ட விடுமுறை. நலம் விசாரித்த நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடல் நலம் தொடர்பாக ஊருக்குப் போய் வந்த நிலையில் மனம் எதிலும் நாட்டமின்றி இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று எழுதி வந்த நான் இனி அடிக்கடி எழுதுவேன் என்று தோன்றவில்லை... அப்படி ஒரு எண்ணமும் எனக்குள் உதிக்கவில்லை. எனவே இனி இடைவெளியின் பின்னணியில் இயன்றவரை தொடருவேன். விரைவில் வருகிறேன்... எனது படைப்புடன்...



நட்புடன்,

சே.குமார்.