முதல்ல நம்ம கதையை சொல்லிட்டு அப்புறம் மத்ததுக்கு போகலாம். கடந்த பத்து,பதினைந்து நாளாக அலுவலகத்தில் கூடுதல் வேலைங்க. காலையில ஏழு மணியில் இருந்து மதியம் 3மணி வரை எனக்கு அபுதாபி (Abu Dhabi) - அலைன் (Al Ain) சாலையில் இருக்கும் பனியாஸ் (Baniyas) என்ற இடத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை. அந்த அரசு அலுவலகம் பாலைவனத்தின் ஓரத்தில் இருக்கிறது.... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்தான்... அதன் நடுவே வகிடுடெடுத்தது போல் செல்லும் சாலைகள். வெயில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும். அங்கு வேலை முடிந்ததும் எங்கள் அலுவலகம் வர வேண்டும் அங்கு ஒமானில் (Oman) முடிக்க வேண்டிய புராஜெக்ட் ஒன்றை மாலை 6.30 மணி வரை செய்ய வேண்டும். அதன்பின் அலுவலகத்தில் இருந்து அறைக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேரும் போது இரவு 7.30 மணியாகிவிடுகிறது.. பின்னர் அன்று இரவுக்கான சமையலை ஆரம்பித்து முடிக்க 9.30 மணியாகிவிடும். அதன்பின் குளித்து சாப்பிட்டு சிறிது நேரம் எதாவது பார்த்து படுக்க 11.30 மணியாகிவிடுகிறது.... கணிப்பொறியை ஆன் செய்ய மனசு நினைத்தாலும் உடம்பு மறுக்கிறது.
இந்தக் கதைய ஏன் இப்ப நான் சொன்னேன்னா... எல்லாருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா... ஆரும் பின்னூட்டம் போடலை ஓட்டுப் போடலை ஆட்சி அமைக்கன்னு நம்ம மேல காண்டாயிடக் கூடாதுன்னுதான் பிரச்சனைய வெலாவாரியா சொல்லிப்புட்டோம்... சரியா...?
***
நேற்றைய ஏர்டெல் சாம்பியன் கோப்பைக்கான போட்டியில் நம்ம சென்னை அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. குழு உணர்வுடன் விளையாண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். டோனி சொன்னது போல் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது தெரியாது. இருந்தாலும் இவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே அணியில் (இதே அணியாக இருந்தால் நல்லது) விளையாட வேண்டும் என்பதே என் எண்ணம்.
***
இளையராசாவுக்கு தேசிய விருது நான்காவது முறையாக கிடைத்துள்ளது எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தையும் அளவில்லா ஆனந்தத்தையும் கொடுத்ததை அனைவரின் பதிவிலும் கண்டேன். விருது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ராசா, அதே அடக்கத்துடன் நல்ல இசைக்கு கிடைத்த விருது என்று சொன்னார். ஆம் அவர் கொடுத்த இசை, கொடுக்கிற இசை எல்லாமே நம் காதுகளில் தங்கிச் செல்லவில்லை... அங்கேயே தங்கி விடுகின்றன... எத்தனை வருடங்கள் ஆனாலும் ராசா ராஜாதான்.
***
காமன் வெல்த் விளையாட்டு தொடங்குவதற்குப் முன்னர் தினம் ஒரு வருந்தத்தக்க் செய்தி வந்து கொண்டிருப்பது இந்தியர்களான நம் மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. ஊழல் பெருச்சாளிகள் இன்னும் அதே புன்னகையுடந்தான் வலம் வருகிறார்கள். அவர்தம் மக்களுக்கு சொத்து சேர்த்தார்களே தவிர இந்தியர்களின் மானத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை அந்தப் புன்னகையே சொல்கிறது. ஜென்மங்களுக்கு இன்னும் அரசியலில் வாய்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.இப்படிப்பட்ட ஜென்மங்களை வைத்துத்தான் அரசையே நடத்த முடியும்... நடத்துகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே...
***
எனது மச்சானின் (அப்பாவின் தங்கை மகன்) 21/2 வயது குழந்தைக்கு பிளட் கான்சராம். இந்த சம்பவத்தை கேள்விப் பட்டத்தும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மிகுந்த வேதனையை கொடுத்தது. உடம்பு முடியவில்லை என்று ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் வீட்டிலேயே வைத்து இருந்திருக்கிறார்கள். இந்த மனிதர்களை என்ன சொல்வது? குழந்தை நடக்காமல், பேசாமல் போகவும் மதுரைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். டாக்டர்கள் இவர்களை சத்தம் போட்டதுடன் சிகிச்சையை ஆரம்பித்து இருக்கிறார்கள். வெள்ளை அணுக்கள் செலுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் தற்போது குழந்தை ஓரளவு தேறியிருப்பதாகவும் சொன்னார்கள். இரண்டு வருடத்திற்கு சிகிச்சை பெற வேண்டும் என்றும் காய்ச்சலை குழந்தையிடம் அண்டவே விடக்கூடாதென்றும் அப்படியே காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் சொன்னதாக சொன்னார்கள். எது எப்படியோ... காசு பணம் கரைந்தாலும் அந்தப் பிஞ்சு நல்லாயிருக்கணும். அந்த குழந்தைக்காக நீங்களும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.
***
சன் டிவியில் ஒலிபரப்பாகும் ' 'நாதஸ்வரம்' நாடகம் மிகவும் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. செட்டிநாட்டுப் பூமியின் காரைக்குடிதான் கதைக்களம். எங்கள் மக்களின் பேச்சு வழக்கு, நடை உடை பாவனைகள் எல்லாத்தையும் அப்படியே காட்டியிருக்கிறார் காரைக்குடிகாரரான மெட்டி ஓலி' திருமுருகன். மௌலி மற்றும் பூவிலங்கு மோகனின பண்பட்ட நடிப்புடன் திருமுருகன் மற்றும் நாசரின் நடிப்பு பட்டறையில் பயிற்சியளிக்கப்பட்ட புதுமுகங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். 'மெட்டி ஓலி' போல் நாதஸ்வரமும் எல்லா மெகாத்தொடர்களை பின்னுக்கு தள்ளிவிட்டது என்பதே உண்மை,
***
இந்த வாரம் பார்த்த படங்கள் குறித்து சில வரிகள்...
பாஸ் என்கிற பாஸ்கரன் - இரண்டரை மணி நேரம் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் படம்... நகைச்சுவையில் கதையை தேனில் கலந்த பலாச்சுளை போல் கொடுத்துள்ளார் இயக்குநர். வாழ்த்துக்கள்... படம் சூப்பர்..!
துரோகி - பார்த்து முடித்ததும் இதற்காக இரண்டரை மணி நேரத்தை... என்று கவலைப்பட வைக்கும் படம். சுமார் ரகம் என்று சொல்ல முடியாத குப்பை.
***
நண்பர் பரிசல்காரன் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளார். சில குறிப்புக்களைக் கொடுத்து அதை கதைக்குள் கையாளா வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார். இந்த வித்தியாசமான் சிறுகதைப் போட்டிக்கு நானும் சிறுகதை என்று ஒன்றை அனுப்பியுள்ளேன். அதை எனது சென்ற பதிவில் பகிர்ந்தேன். அந்த கதையையும், நண்பர் பரிசல்காரனின் சிறுகதை குறித்த பகிர்வையும் படிக்க கீழே கொடுத்துள்ள லிங்கை சுட்டுங்கள்.
(பதிவின் முடிவில் நண்பர் பரிசல்காரன் அவர்களின் பகிர்வுக்கான லிங்க் உள்ளது.)
மீண்டும் அடுத்த மனசின் பக்கத்தில் வேறு தகவல்களுடன்...
-'பரிவை' சே.குமார்.
26 எண்ணங்கள்:
நல்ல அலசல்
நல்ல அலசல்...
குழந்தைக்காக நானும் பிரார்த்திக்கிறேன்..
குழந்தை விரைவில் நலம்பெற என் பிரார்த்தனைகள்...
Nice collection of thoughts.
My sincere wishes for the little one to get well soon.
நம்ம சென்னை வென்றதற்கு முதல்ல பெரிரிரிரிய விசில் பதிவு அருமை... கான்சர் ஒரு நெருடல்...
என்னது? இப்ப எல்லோரும் என்னை மாதிரியே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. வேலைகள் இருந்தா பரவாயில்லை. எல்லாம் முடிச்சு, பாஸ்கிட்ட நல்ல பெயர், கூடுதல் சம்பளம் வாங்கிட்டு வந்து, மெதுவா கமன்ட் போடுங்க. சரியா?
குழந்தை நல்லபடியாக தேறி வர கடவுளை வேண்டுகிறேன்.
ராசாக்கு வாழ்த்துக்கள்.
காமன்வெல்த் - ஊழல் , இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு பெரிய மானம் போற காரியம் அல்ல. இன்னும் சுருட்டி, ஏப்பம் விட காத்திருப்பார்கள்.
எல்லாமே அருமையா இருக்கு, குமார்.
3 வருடமாக ஐபிஎல்-ல் ஒவ்வொரு அணியிலும் அந்தந்த வீரர்கள் என மைண்ட்செட் ஆகி விட்டது. வேறு நபர்கள் என்றால் ஏதோ போல் இருக்கும்!
இனிய தோழா, உங்கள் மச்சானுக்கு உடல் நலம் வெகு விரைவில் குணமடைய இறையை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்லியவுடன் மனம் கனத்துப் போனது. நம்முடைய ஆரோக்கியம் விலைப் பேசப் படும் சமூகத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நல்ல பிரார்த்தனைக்கு நிச்சயமாய் நல்ல பலன் உண்டு. நம்புவோம். விரைவில் குணமடைவார்.
நல்ல பகிர்வு. குழந்தை குணமாக பிரார்த்திக்கிறேன்.
போட்டிக் கதைக்கு ஒரு வித்தியாசமான பதிவு.
வெற்றிக்கு வாழ்த்துகள் குமார்.
வாங்க தியா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க திரு.வெறும்பய...
கண்டிப்பாக பிரார்த்தியுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
கண்டிப்பாக விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தீபா மேடம்...
நம் எல்லாருடைய பிரார்த்தனையும் அந்த பிஞ்சுக்கு வாழ்க்கையை அளிக்கட்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ம.தி.சுதா...
ஆமா... நல்ல பாடல் அது.
குழு உணர்வுக்கு கிடைத்த வெற்றி....
வாழ்த்துக்கள்.
மச்சானின் குழந்தைக்கு கான்சர் என்பது வருந்தத்தக்க விஷயம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
எங்க கம்பெனியில கூடுதல் சம்பளமா? கேக்க நல்லாயிருக்குங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சம்பளம் கூட்டியது. இதுவரை இல்லை.... கேட்டால் எங்க கம்பெனிக்கு மட்டும் இன்னும் பொருளாதார நெருக்கடி இருக்கு.
லெபனானி கம்பெனி.... அவர்களுக்கு எல்லா சலுகைகளும் உண்டு கேட்டால் அவர்கள் லெபனான் சட்டதிட்டங்களின்படி வேலையில் சேர்ந்ததாக சொல்வார்கள். நமக்கு UAE சட்டதிட்டம். அதிலும் UAE-ல் வருடம் ஒருமுறை நாட்டிற்கு செல்ல டிக்கெட் உண்டு. எங்களுக்கு அதுவும் இல்லை. என்ன செய்ய பொழப்புக்காக வந்தாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க் எல்.கே...
ஆமா... அதான் உண்மை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்க்காதலன்...
மச்சானுக்கு அல்ல மச்சானின் மகளுக்கு... கண்டிப்பாக பிரார்த்தியுங்கள்.
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
வாங்க அம்பிகாக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக நம் பிரார்த்தனை பிள்ளையைக் காக்கட்டும்.
வாங்க ஹேமா...
ஆமா... நாமளும் களத்துல இருக்கோமுனு அடிக்கடி காட்டிக்கனுமில்ல....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களின் கடின உழைப்பினூடே தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
மச்சானின் குழந்தை கண்டிப்பாக குண்மடையும், விரைவில். நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அனைத்து குறிப்புக்களும் நன்று!
வாங்க நிஜாம்...
நாளை முதல் காலை 7 மணி முதல் 9 மணி வரை வேலைங்க... முதுகுவலி வந்தாச்சு.... என்ன செய்ய? காசுக்காக வந்தாச்சு... என்ன செய்வது அவன் சொல்வதை கேக்க வேண்டியதுதானே நம்ம நிலமை...
மச்சானின் குழந்தை நம் அனைவரின் பிரார்த்தனையில் கண்டிப்பாக குணமடையும் நண்பரே....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல தொகுப்பு,குழந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.வேலைப்பளுவிலும் பதிவுலகை தொடர்பு வைத்திருப்பது நல்லது தான்,மனசு லேசாகிவிடும்.
குழந்தைக்கு என் ப்ரார்த்தனைகளும்.
எல்லா அலசல்களும் மிக நன்றாக இருந்தன!
இந்த பாலைவன நாட்டில் இத்தகைய வேலைக்கெடுபிடிகளும் ஓய்வின்மையும் அறிந்த விஷயங்கள்தான்! 24 மணி நேரமும் எப்படி ஓடுகின்றன என்பதுதான் புரியாத விஷயம்.
நானும் கொஞ்ச நாட்களாக ‘நாதஸ்வரத்தை’ ரசித்துப்பார்க்க ஆரம்பித்து விட்டேன்! இயல்பான பேச்சும் எளிமையான ஆரவாரமில்லாத நடிப்பும்தான் காரணம்!!
ரொம்பவும் வியாபாரமாகி விட்ட கிரிக்கெட் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. டிக்கட்டெல்லாம் வாங்கிக் கொண்டு, சாப்பாட்டுப்பொட்டலங்களை கட்டி எடுத்துக்கொண்டு தவறாது சென்ற ஷார்ஜா கிரிக்கெட் தொடர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!!
இந்த வயதில் ப்ளட் கான்ஸரால் அவதியுறும் அந்தக் குழந்தையை நினைத்தால் மனம் கனமாகிறது! அதிக கஷ்டமின்றி குழந்தை குணமாக வேண்டும்!
வாங்க ஆசியா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வேலைப்பளூவிலும் பதிவுல நட்பால்தான் நீங்கள் சொல்வது போல் மனசுக்கு இதம் கிடைக்கிறது. என்ன ஒரே வருத்தம்... எப்படியோ பதிவு போட்டாலும் நண்பர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டமிட முடியாத நிலமை.
எல்லாருடைய பிரார்த்தனையும் இறைவனுக்கு கேட்கட்டும்.
வாங்க வித்யா...
உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான் நாளும் பொழுதும் ஓடுகிறது தெரியவில்லை.
இப்பல்லாம் அலுவலக வேலை முடிந்து இரவு 9 மணிக்கு திரும்பினாலும் நெட்டில் பார்த்துவிட்டுதான் படுக்கிறேன். அந்தளவுக்கு நாதஸ்வரம் கவர்ந்தாச்சு....
கிரிக்கெட் இப்ப சூதாட்ட சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டதம்மா. இருந்தாலும் நான் ரெய்னாவின் ரசிகன்.
உங்களைப் போன்றோரின் பிரார்த்தனையால் குழந்தை விரைவில் குணமடையும் என்பது உண்மை.
கருத்துரையிடுக