சில நாட்களுக்கு முன் உலகின் உயர்ந்த கட்டிடமான ப(பு)ர்ஸ் துபாய் (இப்ப ப(பு)ர்ஸ் கலீபா - BURJ KHALIFA) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 6000க்கும் மேற்பட்ட வி.ஐ.பிக்கள் முன்னிலையில் திறப்புவிழாக் கண்டது. இது குறித்து வலை நண்பர்கள் பலர் பதிவு எழுதி இருக்கிறார்கள்.
நம்ம கட்டுரை அது குறித்து மட்டுமல்ல, ஒரு நாள் துபாய் பயணம் குறித்த சில தகவல்கள் பற்றிய கட்டுரை இது. நேற்று (வெள்ளி) விடுமுறை தினம் என்பதால் காலையில் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு காலை சாப்பிட ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போது வாரவாரம் செய்யும் உப்புமா மனதிற்குள் வந்து மிரட்டியது. எனக்கு உப்புமா என்றால் 'உப்பு'மாதான். எனவே அறையில் இருந்த மக்ரூணியை (நம்ம சேமியா போல் பெரிய சைஸ்) தயார் செய்தேன்.
அப்போது அண்ணாவிடம் இருந்து போன் துபாய் கோவிலுக்குப் போக வேண்டும் ரெடியாகு என்றார். வேகமாக சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களை சாப்பிடச் சொல்லிவிட்டு அவசரமாக அறையிலிருந்து இறங்கினேன்.
சிறிது நேரத்தில் அண்ணா குடும்பம் அவர்களது காரில் வந்தது அவர்களுடன் நான் ஏறிக்கொண்டேன். மற்றொரு நண்பரின் காரில் விசிட்டில் வந்திருக்கும் இலங்கை நண்பரின் குடும்பம் வர துபாய் நோக்கி பயணித்தோம்.
காலை 12 மணிக்கு கோவிலுக்கு சென்றோம். துபாயில் இருக்கும் சிவன் கோவில், இது ஒரு கட்டிடத்தில்தான் இருக்கிறது. கோபுரங்கள் உயர்ந்த கோவில் அல்ல. நாங்கள் சாமி கும்பிட சென்றபோது அங்கே ஐயப்ப குரு பூஜை நடந்தது. அதில் சில நிமிடங்கள் இருந்து தீபம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
ஐயப்ப பூஜை காரணமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் கொடுத்தார்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தேரா துபாய் செல்லும் படகில் ஒரு திர்ஹாம் கொடுத்து பயணம் செய்து சந்தோஷப்பட்டனர் இலங்கை நண்பரின் குடும்பத்தினர்.
ஐயப்ப பூஜை காரணமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் கொடுத்தார்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தேரா துபாய் செல்லும் படகில் ஒரு திர்ஹாம் கொடுத்து பயணம் செய்து சந்தோஷப்பட்டனர் இலங்கை நண்பரின் குடும்பத்தினர்.
பின் அங்கிருந்தி கிளம்பி திருமணத்திற்காக இந்தியா செல்ல இருக்கும் நண்பரை பார்த்து வாழ்த்துச் சொல்வதற்காக கராமா சென்றோம். அவரை பார்த்துவிட்டு கிளம்ப நினைத்தபோது அவர் சாப்பிட்டுவிட்டுதான் போகணும் என்று கட்டாயப்படுத்த அஞ்சப்பரில் பிரியாணி சாப்பிட்டோம்.
அங்கிருந்து கிளம்பி துபாய் மால் போகலாம் என்று வந்தால் வரும்வழியில் நிதிமையம் அருகில் வந்தபோது துபாய் மெட் ரோ இரயிலில் பயணித்துப் பார்க்கும் ஆசை வந்தது. உடனே பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க அமைக்கப்பட்டிருக்கும் நடை மேடை (முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அழகாக அமைக்கப் பட்டிருக்கிறது) மூலம் ஸ்டேசனை அடைந்தோம். அங்கிருந்து விமான நிலையம் சென்று திரும்ப நுழைவுச்சீட்டு வாங்கி இரயிலில் ஏறினோம்.
இயக்குவதற்கு மனித சக்தி இல்லாமல் தானே இயங்கும் இரயில் அது. துபாயின் சுற்றுவட்டாரத்தை பார்த்தபடி பயணிக்கும் அருமையான பயணம். விமான நிலையத்தில் இறங்கி சுற்றிவிட்டு மீண்டும் திரும்பினோம்.
நேராக துபாய் மால்... அதற்கு அருகில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ப(பு)ர்ஸ் கலீபா. அருகில் சென்று ரசித்தோம்... அண்ணாந்து பார்த்தால் அப்பா...... தலை சுத்துது போங்க. அருகில் இருக்கும் வானளாவிய கட்டிடங்களெல்லாம் புழுக்களாய். அய்யோ... கொள்ளை அழகு.
அந்த அழகை கொள்ளை கொள்ளும் விதமாக அதற்கு எதிரே நீர் நிறைத்து சிறிய குளம்போல் அமைத்து அதில் அழகான நீரூற்று (நல்ல தமிழில் இப்படி சொல்லலாமா...? சொல்லுங்களேன்-Water Foundain) அமைத்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒருமுறை பாடல் ஒன்று ரம்மியமாய் ஒழிக்க இயக்கப்படுகிறது. அப்போது தண்ணீர் உயரக்கிளம்பி நடனமிடுவது கண்கொள்ளாக்காட்சி. இதை ரசிக்க கூட்டமாய் பல்வேறு மொழி பேசும் மக்கள். நாங்கள் வர மனமில்லாமல் மூன்று முறை ரசித்தோம் என்றால் பாருங்களேன்.
ப(பு)ர்ஸ் கலீபாவுக்கு எதிரே அழகிய ஓட்டல் ஒன்று அலங்கார விளக்கின் ஒளியில் அப்ஸரசாக காட்சியளித்தது என்னைக் மிகவும் கவர்ந்தது.
ஒருவழியாக துபாய் மாலுக்குள் நுழைந்தோம். மி........கப் பெ........ரிய மால், நேரமின்மை காரணமாக ராட்சஸ மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீனை மட்டும் ரசித்துவிட்டு கிளம்பினோம்.
அபுதாபி சாலையை பிடித்து வரும்போது மின்னொளியில் பொருளாதார சிக்கலில் சிக்கித்தவித்தாலும் அழகிய மின்னொளியில் அழகாய்தான் இருந்தது துபாய். விரைவில் சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அபுதாபி எல்கையை அடைந்த போது தாய்வீட்டிற்கு திரும்பும் புதுமணப்பெண் போல் மனசுக்குள் மகிழ்ச்சி.அபுதாபி சாலையில் இருக்கும் அட்நாக் பெட் ரோல் பங்கில் சாப்பிட்டுவிட்டு அண்ணா குடும்பமும் இலங்கை நண்பர் குடும்பமும் ஒரு காரில் பயணிக்க, நானும் அறை நண்பரும் குளிர் காற்றை அனுபவித்தபடி அறைக்கு திரும்பும்போது இரவு 11மணியாகியிருந்தது.
குறிப்பு: ப(பு)ர்ஸ் எதற்காக என்றால் சிலர் பர்ஸ் கலீபா என்றும் சிலர் புர்ஸ் கலிபா என்றும் அழைப்பதால் எது சரி என்ற விவாதம் வரவேண்டாமே என்பதால்தான்.
-சே.குமார்
3 எண்ணங்கள்:
நல்ல அனுபவம்!
புர்ஜி கலீபா பக்கத்திலும் கோவில் இருக்கா
பர்துபையில்தான் பார்த்துள்ளேன் அழகிய புறாக்கள் கடலில் மேல்புறத்தில் அணிவகுப்போடு பறக்கும்.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குசும்பன்.
பர்துபையில்தான் கோவில் உள்ளது நண்பரே. கட்டுரையில் புர்ஜ் துபையில் கோவில் இருப்பதாக எழுதவில்லை. கோவிலுக்கு பொயிட்டு வரும்போது பார்த்தது குறித்த கட்டுரைதான் இது.
தங்களது வருகைக்கும் நல்ல பின்னூட்டத்திற்கும் நன்றி அன்புடன் மலிக்கா. (உங்களது வருகையை எனது நண்பர்களின் தளத்தில் அதிகம் பார்த்திருக்கிறேன். என் தளத்தில் முதல்முறை என்று நினைக்கிறேன். தொடர்ந்து தங்கள் வளமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் - நட்புடன் குமார்.எஸ்)
கருத்துரையிடுக