மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 6 பிப்ரவரி, 2017

மனசின் பக்கம் : ஒரு வாழ்த்தும் கொஞ்சம் பேச்சும்

ன்று நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு பிறந்தநாள் என்பதை முகநூலில் நண்பர்களின் பதிவுகள் மூலமாக அறிந்தேன். கோவை ஆவியுடன் அவ்வளவாக பழக்கம் இல்லை என்றாலும் நம்ம குடந்தை சரவணன் அண்ணனின் குறும்படங்கள், துளசி சாரின் குறும்படங்கள் மற்றும் ஆவி எடுத்த குறும்படம் மூலமாக அறிவேன். அவரின் தளத்தை அவ்வப்போது வாசிப்பேன். என் தளத்தில் எப்போதாவது அவர் கருத்து இடுவதுண்டு. நண்பர் ஆவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சென்ற வார நிகழ்வுகள் மனசுக்கு இதமானதாக இல்லை... அறை மாறியதும் அதன் முன்னும் பின்னுமான நிகழ்வுகளும் பல உண்மைகளைப் புரிய வைத்தாலும் மன வருத்தத்தையே கொடுத்தது. பணமும் சொத்துமே பிரதானம் என்று எண்ணம் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அப்படிப்பட்ட முகங்களை அறிந்தேதான் இருந்தேன் என்றாலும் முற்றிலுமாக அறியும் பாக்கியம் கிட்டியதில் மகிழ்ச்சியே. புதிய அறை பழைய அறையைப் போன்று விசாலமானதாக இல்லாவிட்டாலும் புறாக்கூட்டுக்குள் வாழ்வது போல் தோன்றினாலும் இருப்பவர்களின் மனம் விசாலமாய்... அதுதானே வேண்டும்.  ஏழு வருடங்களுக்கு மேலாக பெரும்பாலும் சமையல் நானே என்று இருந்த நிலை போய்... நான் வருவதற்குள் சமையல் முடிந்து விடுகிறது. ஊருக்குப் பேச, வாசிக்க என நேரம் என்னிடம் மிச்சமாய்... சனிக்கிழமை மட்டுமே நான் சமைக்க வேண்டும்... மனநிலையின் போக்கினால்தான் பதிவுகளை வாசித்தபோதும் கருத்துக்கள் இடவில்லை. இனி எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

'என்னைப் பற்றி நான்' பகிர ஆரம்பிக்கும் போது ரொம்ப யோசனை... காரணம் முதல் வாரம் எனக்கு ஸ்ரீராம் அண்ணா மட்டுமே கொடுத்திருந்தார்கள். நான் அதட்டி உருட்டி வாங்கும் நட்புக்கள் எல்லாம் கொஞ்சம் நாள் கழித்துத் தருகிறோம் என்று ஜகா வாங்கிவிட, எங்கே ஸ்ரீராம் அண்ணாவின் பதிவுடன் என்னைப் பற்றி நான் சில வாரங்கள் தடை பட்டுவிடுமோ என்று கூட யோசித்தேன். என்ன ஆனாலும் பரவாயில்லை ஆரம்பித்து விடலாம் என்ற முனைப்போடு முதல் வாரம் பதிந்துவிட்டு சகோதரி கிரேஸ், செல்வக்குமார் அண்ணா மற்றும் சிலரிடம் பதிவு கேட்க, செல்வக்குமார் அண்ணன் உடனே அனுப்பித்தர, அன்று இரவே சகோதரி கிரேஸூம் அனுப்ப... மூன்று வாரம் பிரச்சினை இல்லை என்று நினைத்து நகர, இப்போ கைவசம் இன்னும் மூன்று பிரபலங்களின் கட்டுரைகள்... என்னைப் பற்றி நான் நீண்ட தொடராய் பயணிக்கும் என்ற நம்பிக்கை ஆலம் விழுதாய் மனதுக்குள் வளர்ந்து கிடக்கு. நன்றி உறவுகளே.

ங்கு செம குளிர்... ஊட்டி கொடைக்கானலில் இருப்பது போல் இருக்கிறது. கடந்த வெள்ளியும் சனியும் ரொம்ப மோசமாய்... இதுவரை குளிருக்காக ஸ்வெட்டர் எல்லாம் வாங்கவில்லை. இந்த வருடம் வாங்கும் எண்ணம் இல்லை என்றாலும் பஸ்ஸை விட்டு இறங்கி அறை வந்து சேர்வதற்குள் உடம்பு ஆடுவதுடன் மழை நேரத்தில் பல் தாளம்போடுமே அதுமாதிரி தாளம் போட ஆரம்பிச்சிடுது.... அப்பப்பா எட்டு வருடத்தில் காணாத குளிர். வெள்ளியன்று காற்றும் குளிரும்.... என்னுடன் வேலை செய்யும் மலையாளியின் பெரியப்பா பையனும் மற்றும் இருவரும் அந்தக் குளிர் காற்றில் மதாம் என்ற இடத்துக்கு காரில் பயணித்திருக்கிறார்கள். சிட்டிக்குள்ளேயே அடித்து தூள் பறத்திய காற்றும் குளிரும் பாலைவனப் பகுதியிலா விட்டு வைக்கும். இவர்கள் மதாம் என்ற இடத்தை அடைய பத்து நிமிடம் இருக்கும் போது மணல் காற்றில் சிக்கிய கார், ரோட்டின் நடு தடுப்புச் சுவரைத்  தாண்டி அடுத்த பக்கம் போய்விட எதிர் திசையில் வந்த கார் மோதி மிகப்பெரிய விபத்து... இருவருக்கு லேசான காயம் என்றாலும் நண்பரின் சகோதரருக்கே பலத்த அடி....  மற்றவர்களை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை இவரை மட்டும் ஹெலிகாப்டரில் துபாய்க்கு அனுப்பிவிட,  இவர்கள் அங்கும் இங்கும் அலைந்து காவல்துறையிடம் கேட்டு விவரம் அறிந்து சென்ற போது அவருக்கு வயிற்றில் ஆபரேசன் முடிந்திருக்கிறது.  இப்ப அவர் ஹோமாவில்... வேகம் விவேகம் அல்ல... அதுவும் மணல்காற்று வீசும் பகுதியில் மெதுவாகச் சென்றிருக்க வேண்டும்... எது எப்படியோ அவர் மீண்டும் நினைவு திரும்ப வேண்டும்.

சிகலா முதல்வர் ஆவதை நாமெல்லாம் கருத்துப் பதிந்து தடுத்துவிட முடியாதுதான். அதிமுக எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் அவர்தான் முதல்வர் என்பது எங்கள் முடிவு இதை யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்கிறார். அப்ப வாக்களித்த நாமெல்லாம் அவர்களுக்கு செல்லாக்காசு... ஏன்னா பணத்துக்கு விலை போயிட்டோமே... தமிழச்சி ஆளணும்ன்னு சொல்றவன் எல்லாரும் பன்னீர் தமிழன் என்பதை மறந்துட்டானுங்க... என்ன ஒரு விந்தை... திட்டமிட்டு காய் நகர்த்தி இன்று தமிழர்களை ஆளத்துடித்து அதையும் அடைந்து விட்ட சசிகலாவால் தமிழனுக்கு என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது... ஊழல்வாதிகள் எல்லாம் சொம்பு தூக்குவது எதற்காக.. எல்லாம் சம்பாரிக்கவே... அதிமுக அழியும் என்று தெரிந்தும் இதைச் செய்வது இருக்கும் வரை சம்பாரித்துக் கொள்வோம் என்பதால்தான்... எது எப்படியோ இனிமேலாவது காசுக்கு விலை போகாமல் யோசித்துச் செயல்படுவோம். 
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

மனசின் பக்கம் : உறவுகள் முதல் உறைவிடம் வரை

'தேவியர் இல்லம்' ஜோதிஜி அண்ணாவின் விருப்பத்துக்கு இணங்க அவரின் பழைய குப்பைகள் குறித்தான எனது பார்வையை, அதை மின்னூலாக்கும் முன்னர் அணிந்துரை என்ற பெயரில் எழுதச் சொன்னார். அதெல்லாம் நமக்கு சரிவராது  என்பதுடன் அவரது படைப்புக் குறித்து விரிவாய், விளக்கமாய் எழுத தமிழ் இளங்கோ ஐயா போன்றோர் இருக்க நானெல்லாம் எழுதுவதா என்ற யோசனையும் இருந்தது என்றாலும் மிகச் சிறந்த படைப்பாளியின் விருப்பம், திடீரெனக் கேட்கிறார் அண்ணன் என்பதால் பழைய குப்பைகளை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து என் மனக்குப்பைகளைக் கிளறி ஏதோ எழுதி அனுப்பினேன். அண்ணனிடம் இருந்து வந்த பதில் 'நல்லா வந்திருக்கு... பயன்படுத்திக் கொள்கிறேன்' என்பது மட்டுமே. பழைய குப்பைகள் மின்னூலாகியதும் அது குறித்து என் தளத்திலும் ஒரு பதிவு போட்டேன். (அந்தப் பதிவை வாசிக்க நினைத்தால்.. வசீகரிக்கும் பழைய குப்பைகள்) தற்போது அண்ணன் அவர்கள் ஒவ்வொருவரின் அணிந்துரையாக தளத்தில் பதிய ஆரம்பித்திருக்கிறார்கள். என் அணிந்துரை ஜனவரி-17-ல் பதியப்பட, நானோ சல்லிக்கட்டுக் காளையாய் முகநூல், வாட்ஸ்-அப் என துள்ளிக்கிட்டு திரிந்ததால் கவனிக்கலை... மூன்று நாட்களுக்குப் பிறகே பார்த்தேன். ஒவ்வொரு அணிந்துரையும் ஜோதி அண்ணாவின் மிகச் சிறந்த தலைப்பும் அதற்கேற்ற படமுமாம் மிக அழகாக பதியப்பட்டது. பெரும்பாலான நட்புக்கள் அங்கு வாசித்திருப்பீர்கள். வாசிக்காத நட்புக்களுக்காக இணைப்பு கீழே...


'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா மற்ற பதிவர்களின் பதிவை தங்கள் தளத்தில் பதிந்து வருவதில் வலையுலகின் முன்னோடி என்பதை நாம் அறிவோம். கேட்டு வாங்கிப் போடும் கதை, சமையல் குறிப்புக்கள் என கலக்குபவர் 2017-ல் சக பதிவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற சின்னச் சின்ன ஆசைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என பலருக்கு அனுப்பி பதில் வாங்கிப் பதிந்து வருகிறார். அதில் அடியேனும் ஒருவன். எனது கருத்துக்கள் நான் விரும்பி வாசிக்கும் வெங்கட் அண்ணா மற்றும் ரஞ்சனி நாராயணன் அம்மாவின் பதில்களோடு என் பதிலும் சென்ற வாரத்தில் வெளியாகி இருந்தது. அந்த சின்னச் சின்ன ஆசைகளை கிட்டத்தட்ட எல்லாரும் எங்கள் பிளாக்கில் வாசித்திருப்பீர்கள்... அப்படி வாசிக்காதவங்க வாசிக்க இணைப்பு கீழே...

சின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 

- பதிவுலக நண்பர்களின் கருத்துகள்


'சும்மா' தேனம்மை அக்காவுக்கு கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது என்பதை தனது பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். போட்டி முடிவுகள் குறித்த விவரம் அறிய இணைப்பு கீழே...

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி - 2016 முடிவுகள்



'சந்தித்ததும் சிந்தித்ததும்' வெங்கட் நாகராஜ் அண்ணா பயணங்கள் குறித்தான பகிர்வின் மூலமாக நம்மையும் அந்த இடத்துக்கே அழைத்துச் செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் அவர் பகிர்ந்து கொள்ளும் போட்டோக்கள் அழகு என்றால் அப்படி ஒரு அழகாக இருக்கும். அப்படிப்பட்ட போட்டோக்கள் சிலவற்றைக் கொடுத்து இதற்கு உங்களால் கவிதை எழுத முடியுமா என அழைப்பு விடுத்திருக்கிறார். உங்கள் கவிதைகள் வெற்றி பெறும் பட்சத்தில் அவற்றை எல்லாம் தொகுத்து மின்னூலாக்க இருக்கிறாராம். இதற்கான அறிவிப்பை ஒரு பதிவாக தந்திருக்கிறார்... எடுங்கள் பேனாவை... பேனா எடுத்து கவிதை எழுதிய காலமெல்லாம் மலையேறிப் போச்சுல்ல... தட்டுங்கள் கணிப்பொறியில்... அனுப்புங்கள் அண்ணனுக்கு... தேர்வு பெறும் கவிதைகளில் ஒன்றாய் உங்கள் கவிதையும் இருக்கட்டும். அந்தப் பதிவை வாசித்து விவரம் அறிய இணைப்பு கீழே...


'திண்டுக்கல் தனபாலன்' தளத்தின் அண்ணன் தனபாலன் அவர்களிடம் புதுகைக் கவிஞரும் 'நான் ஒன்று சொல்வேன்' என கவிதை, கட்டுரை என களமிறங்கி அடித்து ஆடுபவருமான மீரா செல்வக்குமார் அண்ணன் பிடிஎப் கோப்பை எப்படி இணைப்பது எனக் கேட்க, அதற்கென வலைச்சித்தரின் பாணியில் மிகச் சிறப்பான பகிர்வு, அதில் நம்ம வெங்கட் அண்ணாவின் 'ஏரிகள் நகரம் நைனிதால்' என்னும் மின்னூலையும் இணைத்துக் காட்டியிருக்கிறார். எல்லாரும் அறிய வேண்டிய மிகச் சிறப்பான பகிர்வு. வலையுலகில் தனபாலன் அண்ணா வாசிக்காத பதிவுகளும் அவரின் பதிவை வாசிக்காத பதிவர்களும் இருப்பதற்கு வாய்ப்பு கம்மிதான் என்றாலும் இங்கும் பகிர்கிறேன் விட்டுப் போனவர்களுக்காக... அந்த பகிர்வுக்கான இணைப்பு கீழே....


'மனசு' குமார்... அட நாந்தாங்க.. 'பரிவை' சே.குமார்ன்னு எழுத ஆரம்பிச்சி, இப்ப நண்பர்கள் மத்தியில் 'பரிவை' போயி 'மனசு' குமார் ஆயாச்சு. இப்ப எதுக்கு 'மனசு' குமார்ன்னு ஆரம்பிச்சிருக்கேன்னு யோசிக்காதீங்க... வரிசையா வலைப்பதிவு பெயர்களை வைத்து எழுதியாச்சு... அப்ப நம்ம கதையைச் சொல்லும் போதும் வலைப்பூ பேரோட சொல்வோமே... சரி விஷயத்துக்கு வருவோம்.... சில காரணங்களால் எட்டு வருடங்கள் உறவுகளுடன் இருந்த அறையை விடுத்து அதன் அருகில் அபுதாபி வந்த ஆரம்பகாலத்தில் என்னுடன் இருந்த நண்பர் தங்கியிருக்கும் அறைக்கு மாறிவிட்டேன். முன்பு இருந்தது போல் மிகப்பெரிய அறையில்லை... சிறிய அறைதான்.... இருப்பினும் மனநிறைவையும் நிம்மதியையும் தருகிறது. இங்கு நாம் எப்படியிருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்... அதையும் கெடுப்பது போல் சில விஷயங்கள் இன்றல்ல நேற்றல்ல இங்கு வந்தது முதலே நடந்து கொண்டுதான் இருந்தது எல்லாவற்றையும் உறவின் மீது வைத்த உன்னதமான அன்பினால்  கடந்து வந்தேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதால் தனித்திரு என்ற முடிவெடுக்க வைத்து விட்டது. அறை மாறியாச்சு... வாழ்க்கைப் பாதையும் மாறட்டும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 1 பிப்ரவரி, 2017

3. என்னைப் பற்றி நான் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

கோதரி. கிரேஸ் அவர்களை வலைத்தளம் மூலமாகவே அறிவேன். இவர் எழுதிய 'துளிர் விடும் விதைகள்' மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அது குறித்தான நூல் விமர்சனப் பார்வையை என் தளத்தில் எழுதினேன். அதற்கான இணைப்பு 'துளிர் விடும் விதைகள்'

அதன் பின் ஒருவருக்கு ஒருவர் பதிவுகளில் கருத்துப் பரிமாறிக் கொள்வோம். ஆங்கில வழிக் கல்வி பயின்றிருந்தாலும் தமிழ் மீதான காதலால் மிகச் சிறப்பாக கவிதைகள் எழுதுவார்.  சங்கத் தமிழை எளிய தமிழில் புதுக்கவிதையாகவும் எளிய ஆங்கிலக் கவிதையாகவும் எழுதும் முயற்சியில் இருப்பதாக இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'பாட்டன் காட்டைத் தேடி'க்கான முன்னுரையில் திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி.

'என்னைப் பற்றி நான்' பகுதிக்கு தங்களின் கட்டுரை வேண்டும் என்று கேட்டவுடன் அடுத்த நாளே அனுப்பிக் கொடுத்தார். அவரைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை அவரின் எழுத்தில் வாசியுங்கள்...

நன்றி.


ணக்கம் வலைத்தள நண்பர்களே!  

‘மனசு' தளத்தில் வலைத்தள நட்புகளின் மனங்களையும் திறக்க ஒரு வழி செய்துள்ள குமார் சகோவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களில் சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம், பலருக்குத்  தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுடன் அறிமுகப்படுத்திக்கொள்ள சகோ கொடுத்துள்ள இந்த வாய்ப்பிற்கு மகிழ்கிறேன், நன்றி.

தேன் மதுரத் தமிழ் எனும் வலைத்தளத்தில் எழுதிவருகிறேன். அதனால் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் ஆகிப்போனேன். என் முழுப்பெயர் கிரேஸ் பிரதிபா. கணவர் மற்றும் இருமகன்களுடன் தற்போது வசிப்பது அட்லாண்டாவில். இராமநாதபுரத்தைப் பூர்விகமாகக்  கொண்ட நான்  வளர்ந்தது படித்தது  எல்லாம் கொடைக்கானலிலும் மதுரையிலும். 

பெங்களூருவில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றிய நான் குழந்தைகளுக்காகப் பணி துறந்து வீட்டில் இருக்கத் துவங்கியதும் 2008இல் இருந்து வலைத்தளத்தில் எழுதத்துவங்கினேன். ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்தாலும் தமிழ் மேல் எப்பொழுதும் தீராக்காதல் உண்டு. டைரியிலும் கிடைக்கும் காகிதத்திலும் எழுதிப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த என்னை வலைத்தளத்தில் எழுதத் தூண்டியது என் கணவர்தான். முதலில் ஆங்கிலத்தளத்தில் இருமொழிகளிலும் எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் 2012இல் தமிழில் தனியாக வலைத்தளம் திறந்து எழுதத்துவங்கினேன், தமிழ் இலக்கியத்தை அதிகமாகப்  பகிரவேண்டும் என்பதே அதன் நோக்கம். தமிழ் தளத்தின் மூலம் பல நண்பர்களையும் பெற்றேன். குறிப்பிட்டுச் சொல்ல ஆசைப்பட்டாலும் பலர் இருக்கின்றார்கள், ஒருவரையும் விட்டுவிடக்கூடாது என்று அதைச் செய்யவில்லை.

என் முதல் கவிதைத் தொகுப்பான ’துளிர் விடும் விதைகள்'  2014இல் மதுரையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்டது. அதற்கு வளரி இதழ் வழங்கும் 'கவிப்பேராசான் மீரா' விருது 2015இல், என் அன்புத்தோழி மு.கீதா அவர்களின் ‘விழி தூவிய விதைகள்' தொகுப்புடன் சேர்ந்து  கிடைத்தது  பேருவகையும் பெருமையும்..! 

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், அறிவியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் என்று என்னால் இயன்ற அளவிற்குத் தமிழில் பல விசயங்களைத் தருவது எனக்கு மகிழ்ச்சி. கவிதைகள், இலக்கியம் என்று துவங்கிப் பல விதமாக விசாலமடைந்துவிட்டது என் தளம். நண்பர்களின் அன்பும் ஊக்கமுமே அதற்குக் காரணம்.

சங்க இலக்கியப் பாடல்களை எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலகெல்லாம் அறியத்தருவது  என் ஆசை. இங்கு நான் பழகும் மற்ற நாட்டு நட்புகளிடம் தமிழ் பற்றிப் பெருமை பேசாமலிருக்க என்னால் முடியாது.

என்னுடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு ‘பாட்டன் காட்டைத் தேடி' ஜனவரி 2017இல் வந்திருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

அன்பின் வாழ்த்துகளுடன்,
வி.கிரேஸ்  பிரதிபா 
http://thaenmaduratamil.blogspot.com
http://sangamliteratureinenglish.blogspot.com


குறிப்பு : எனக்குத் தெரிந்த எல்லாரிடமும் வாங்க எண்ணம், முதல் கட்டமாக சிலரிடம் கேட்டிருக்கிறேன். அந்தச் சிலரில் வெகு சிலரே அனுப்பியிருக்கிறார்கள். மற்றவர்கள் முடிந்தவரை விரைவில் அனுப்புங்கள் உறவுகளே. மின்னஞ்சலிலும் முகநூலிலும் பிடிக்க முடிந்தவர்களை விட இவற்றில் பிடிக்க முடியாமல் பலர் இருக்கலாம்... தங்களைப் பற்றி பலரும் அறியத் தரலாம் என்று விரும்பினால் என் மின்னஞ்சல் முகவரியான 'kumar006@gmail.com' என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

சனி, 28 ஜனவரி, 2017

மனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு

ண்பன் தமிழ்வாசியுடன் முகப்புத்தகத்தில் இணைந்து இன்று மூன்றாம் வருடமாம்... அதற்கு முன்னரே வலைச்சரம் மூலமாக எங்கள் நட்பு ஆரம்பித்திருந்தது... ஆனாலும் வந்தியத்தேவனை வாசிக்க வைத்த போதுதான் இன்னும் இறுக்கமானது. அவர் நிறைய புதினங்களை வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி, முகநூலில் பேசி, வாசித்த புதினத்தைப் பற்றி முகநூலில் கிறுக்கி, அங்கு தினேஷ், நிஷா அக்கா, கணேஷ்பாலா அண்ணன் எனக் கூடி விவாதித்து இப்படியாக நம்மை நிறைய வாசிக்க வைத்தார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தோஷம்.

Image result for ராஜமுத்திரை

பல நேரங்களில் மனச்சுமைக்கு மருந்தாய் இந்த வாசிப்பு இருந்திருக்கிறது... இப்பவும் இருக்கிறது. சில பல காரணிகளால் மிகுந்த சோர்வு, எழுத்தில் நாட்டமில்லாத மனம், சல்லிக்கட்டு போராட்டம் என கடந்த சில வாரங்கள் கடந்தாலும் பேருந்தில் அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து சாண்டில்யனின் ராஜமுத்திரையை வாசித்து முடித்து அதன் பின் கல்கியின் குமாரர் எழுதிய ரவிகுலதிலகன் வாசித்து தற்போது விக்கிரமனின் சோழ இளவரசன் கனவு வாசித்துக் கொண்டிருக்கிறேன்,

ராஜ முத்திரை பாண்டியர்களின் கதைக் களம்... வீரபாண்டியனுக்கும் சேரன் வீரரவிக்கும் நடக்கும் பிரச்சினைகளே கதைக்களம்...  இதில் மதுரை மன்னனும் வீரபாண்டியனின் அண்ணனுமான ஜடாவர்மன் சாதாரண மன்னனாக சேரனின் முன் நின்று சக்கரவர்த்தியாக திரும்புவதாய் கதை சுபம் பெறுகிறது. அவரின் மகள் முத்துக்குமரியை கடத்திச் சென்று சிறை வைக்கிறான் வீரரவி, முத்தை மட்டுமல்ல முத்துக் குமாரியையும் கவர்வதே அவனுக்கு எமனாகிறது. இலங்கை மன்னன் வீரரவிக்கு உதவியாய் இருக்கிறான் என்ற போதிலும் அவனின் மைந்தனும் இளவரசனுமான இந்திரபானு  வீரபாண்டியனின் மீது கொண்ட பற்றுதலால் அவனின் படைத்தளபதியாய் பயணித்து முத்துக்குமரியை காதலித்து அவளுக்காக சேரநாட்டில் பரதப்பட்டன் என்னும் துறவி (வீரரவி மதிக்கும் குரு) உதவியால் முகம் மாற்றி... வேவு பார்த்து...  சிறைப்பட்டு... முத்துக்குமாரியை மீட்டு வீரபாண்டியனுக்கு போரில் உதவி பரலியைக் கைப்பற்றி, பரலியின் நிர்வாகத்தோடு முத்துக்குமரியையும் மன்னனின் அனுமதியுடன் கரம்பிடிக்கிறான்.

படைத்தலைவன் மகளாக வந்து வீரபாண்டியனுக்கு உதவப் போய் வீரரவியிடம் மாட்டி அதிலிருந்து தப்பி, வீரபாண்டியனுக்கு காதலியாய்... படைத்தலைவியாய்... மனைவியாய்... இரண்டு போரில் துணை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து பரலி நோக்கிச் செல்லும் போது கர்ப்பிணியான காரணத்தால் போருக்கு வரவேண்டாம் என மீண்டும் கோட்டைக்குத் திருப்பி அனுப்புவதால் கோபம் கொண்டு தனியே குதிரையில் பயணிக்கும் இளநங்கை இறுதியில் வெற்றிவாகை சூடிவரும் கணவனுடன் கொஞ்சி மகிழ்கிறாள். வீரபாண்டியனுக்கு இளநங்கை மற்றும் இந்திரபானு உதவியுடன் மிகப்பெரிய உதவியாய் மலைசாதிப் பெண் குறிஞ்சி இருக்கிறாள். மருத்துவம் தெரிந்த அவள் அவனுக்காக ஒற்றன் வேலை பார்க்கிறாள்.வீரரவியிடம் வேலைக்குச் சேர்ந்து ஒற்றறிகிறாள்.  எங்கே தன் கணவனைக் கொத்திப் போய் விடுவாளோ  என்று இவள் மீது இளநங்கைக்கு வெறுப்பு... இருந்தாலும் குறிஞ்சி முத்துக்குமரியின் பணிப்பெண்ணாக பரலியில் தங்கிவிட இவளுக்கு மகிழ்ச்சி.

ராஜமுத்திரை கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும். சாண்டியல்யனுக்கே உரிய போர்த் தந்திரக் காட்சிகள் இதிலும் அழகிய விவரணைகளுடன்... இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வு நம்ம ஜல்லிக்கட்டு போல் செண்டு வெளிக்களியாட்டம்... இதைப்பற்றி 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் தனிப்பதிவே எழுதியிருந்தார். அர்த்தச் சந்திர வடிவம் கொண்ட செண்டு வெளிக்குள் வீரர்கள் குதிரையில் இறங்கி சுற்றி வந்தபடி பாண்டிய மீன் கொடியின் மீது (எதாவது இரு இலக்கு இருந்திருக்கும்... இது பாண்டியருக்கும் சேரருக்குமான மோதல் கதை என்பதால் பாண்டியக் கொடி என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்) வேலெறிவார்கள்... அதில் வென்றால் பின்னர் அதன் எதிர்த்திசையில் இருக்கும் பாண்டிய முத்திரை மீது வேலெறிவார்கள். வேல் குறி தவறும் பட்சத்தில் இன்னும் சில வீரர்கள் இறங்க, தோற்றவர்களுக்கும் ஜெயித்தவர்களுக்கும் செண்டு வெளிக்குள் சண்டை போட, மாடு முட்டி ரத்தம் சிந்தும் வீரர்களை தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பது போல் இவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பார்களாம்.

Image result for ரவிகுல திலகன்

ராஜமுத்திரைக்குப் பின் வாசித்தது  கல்கி இராஜேந்திரனின் ரவிகுலதிலகன், விஜயாலயச் சோழனின் வரலாற்றைப் பேசியது... பல்லவர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த சோழர்களின் ராஜ்ஜியத்தை பேரரசாக்க விரும்பும் இராசகேசரி குமாரங்குசன் தன் மகன் விஜயாலயனை மிகுந்த வீரம் மிக்கவனாக வளர்க்கிறான். பதின்ம வயதில் ஒரு தீ விபத்து ஏற்பட மக்களைக் காக்க அனுப்புகிறான்... விஜயாலயனின் அன்னையோ அதை எதிர்க்கிறாள்... தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் போது ஒரு சிறுமியையும் சிறுவனையும் காப்பாற்றி அவர்களின் அன்னையை காப்பாற்றச் செல்லும் போது தீயால் தாக்கப்படு தலைமுடி இழந்து ஒரு பக்க கண்ணையும் இழக்கிறான். அவனுக்கு தஞ்சையை ஆளும் முத்தரையர் மகள் உத்தமசீலி மீது ஆசை, அவளோ இவனை வெறுக்கிறாள். அந்தக் கோபம், சிற்றரசான சோழ அரசை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற வெறி என பல்லவர்களுக்குத் தெரியாமல் வீரர்களை தயார் செய்து தஞ்சையைப் பிடிக்கிறான்... அவனுக்கு உதவியாய் காட்டுவாசிப் பெண்ணும் மருத்துவச்சியுமான குவளை இருக்கிறாள். உத்தமசீலியை கரம் பிடிக்கும் முன்னர் குறிஞ்சியை விரும்புகிறான். ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உத்தமசீலி இறப்பதுடன் கதை முடிகிறது.

அதன் தொடர்ச்சியாய் தாத்தாவின் கனவின்படி தஞ்சையைப் பிடித்து அதில் கோட்டை கட்டி, பல்லவனுக்குப் பிடித்த மன்னனாக வாழும் விஜயாலயனின் மகன் ஆதித்தன் பல்லவர்களை எதிர்த்து தங்கள் அரசை பேரரசாக நிர்மாணிக்க முயலும் கதைத்தான் விக்கிரமன் எழுதியிருக்கும் சோழ இளவரசன் கனவு... பல்லவநாட்டைப் பற்றி நேரில் பார்த்து அறிய நண்பன் விக்கியண்ணனுடன் செல்லும் ஆதித்தனுக்கு இளங்கோபிச்சி என்னும் மனைவி இருக்கிறாள்... இருந்தும் நடனப்பெண், சிற்பி மகள், பல்லவ இளவரசி என சாண்டில்யன் கதை போல் ஒரே பெண்கள் மயம்... பல்லவ நாட்டைப் பற்றி அறிந்து அவர்கள் மீது போர்தொடுத்து ஆதித்தன் வென்றானா...? தாத்தாவின் கனவுப்படி, தந்தையின் ஆசைப்படி சோழ பேரரசை கட்டமைத்தானா...? என இப்போதுதான் ஆவலோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.

-'பரிவை' சே.குமார்,

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அனிதாவை வாழ்த்துவோம்

னிதா ராஜ்...

எண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வந்தவர்... (கவனிங்க) ஆமா இப்ப எழுதுவதில்லை. சிங்கப்பூரில் இருக்கும் போது எண்ணச் சிதறல்களை எல்லாம் எண்ண ஓவியமாய் பகிர்ந்து கொண்டவர். குட்டிக் குட்டியாய்... அழகாய்... அருமையாய்... கருத்துள்ளதாய் பதிவுகள் எழுதுவார். ஸ்கைப் மூலமாக அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரை வைத்து உலகம் முழுவதும் இருக்கும் நட்புக்களை இணைத்து வாராவாரம் வகுப்பெடுக்க வைத்தவர். நானும் சில வாரங்கள் அந்த ஜோதியில் இணைந்திருந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி. இவரின் கதைகள் மிகவும் அருமையானவை... ஆனால் அதிகம் கதைகள் எழுதுவதில்லை... சின்னச் சின்னதாய் நம்மைக் கவரும் கவிதைகள்தான் இவரின் ஸ்பெஷல்.

'வலைச்சர ஆசிரியராய்' ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பில் எழுதிய போது முதல் பதிவான அவரைப் பற்றிய அறிமுகத்தில்....

”ஸ்ங்கீத் ராஜ் அம்மா நான்”. இதை சொல்லிக்கொள்வதில் அத்தனைப் ஆனந்தம் எனக்கு. எனது முழு உலகம் அவனை சுற்றி மற்றுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்புறம்  ஒரு புத்தகப் புழு. பசியே எடுக்காது புத்தகத்தை கையில் கொடுத்துவிட்டால் போதும். பரிட்சைக்கு முன்னால் கூட நாவல் படிச்சுட்டு போகற ஆளு நான்…  எதிர் கேள்வி கேட்டே பொழப்ப ஓட்டும் ஆள்... சோம்பேறித்தனத்தால் நிறைய எழுதாமல் விட்ட ஜீவன் நண்பர்களைப் பாடாய் படுத்தும் இராட்சசி(”கொடூர“ சேர்த்துக்க சொல்லி  மனுதாக்கல் பண்ணியதை தள்ளுபடி செய்துட்டேன்) இப்படி என்னைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நன்றாக தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ”பாவம் மோகன்”...

என்பதாய்த் தொடரும்... இதில் மோகன் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முழுப்பதிவும் படிக்க வலைச்சரம் போங்க. இங்க முழுப்பதிவும் போட்டா நான் எழுத நினைத்ததை எழுத முடியாமப் போயிடும்.

நண்பன் தமிழ்காதலன் மற்றும் காயத்ரி அக்கா மூலமாக என்னை அறிந்து இணைய அரட்டையில்தான் தொடர்பில் வந்தார். குமார் என்று அழைத்து தன் அன்பை.... பாசத்தை... நேசத்தை... முதல்நாளே எனக்குத் தெரிய வைத்தவர். வலைச்சரத்தில் நண்பர்களுக்கான பதிவில் அவர் என்னை தனது அண்ணனாகச் சொல்லியிருப்பார். இதைவிட வேறென்ன வேண்டும் இந்த எழுத்துக்கு... சொல்லுங்க... உலகம் முழுவது உறவுகளால் நிரப்பி வைத்திருக்கிறது அல்லவா இது.

சிங்கப்பூரில் இருக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் சொல்லியிருப்பது போல் பெரிய சோம்பேறிதான்... முகநூலில் எழுதிய மௌனச் சிதறல்களை எல்லாம் தொகுத்துத் தரச் சொன்னார்... நானும் ரொம்பப் பொறுமையாத் தொகுத்துக் கொடுத்தேன். புத்தகமாகக் கொண்டு வரணும் குமார் என்று சொன்னார்... சொன்ன ஆண்டு 2013. பாத்துக்கங்க... என்னோடு சேர்றவங்க எல்லாம் என்னைப் போலவே சோம்பேறியாவே இருக்காங்க அதுதான் ஏன்னு தெரியலை... நிஷா அக்கா போன்ற சிலர் இதில் விதிவிலக்கு. சிங்கப்பூரில் இருந்து  சென்னைக்கு சென்ற பின்னர் முகநூலிலும் வலையிலும் அதிகம் காண முடிவதில்லை. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகநூலில் ஒரு பகிர்வு பார்த்தேன்.

சிங்கப்பூரில் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த போது எனது கதையையும் ஒரு முறை அதில் பிரசுரித்தார். எனது கதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பல கதைகள் குறித்து பெரிய விவாதமே செய்திருக்கிறார். சிறந்த படைப்பாளி என்பதைவிட மிகச் சிறந்த படிப்பாளி... எதாவது வாசித்துக் கொண்டே இருப்பார்... அப்பல்லாம் நான் புத்தக வாசிப்பின் பக்கமே செல்வதில்லை. அதை வாசித்தேன்... இதை வாசித்தேன் என்று சொல்லி, நீங்களும் வாசிங்க என இணைய முகவரி எல்லாம் அனுப்புவார்... நான் அதெல்லாம் வாசிப்பதில்லை என்பதைத் சொல்லியா தெரியவேண்டும். அதேபோல் இப்பவும் வாசிப்பில்தான் இருப்பார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னை வந்தியத்தேவன் மூலம் வாசிப்பிற்குள் அழைத்து வந்தவர் சகோதரர் தமிழ்வாசி. இப்ப நிறைய வாசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது.

ஈரோடு கதிர் அண்ணன் அவர்களின் 'அப்பா' சிறுகதையை தனது குரலில் கதைக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்தில் மிக அழகாக ஒலிப்பதிவு செய்திருப்பார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப அருமையா இருக்கு என்ற போது உங்களது கருத்தப் பசு கதை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதையும் ஒருநாள் ஒலிப்பதிவு செய்து அனுப்புறேன்னு சொன்னார்.... சொன்னார்தான்... அதிகமில்லை ஒரு ஐந்து வருடத்துக்குள்தான் இருக்கும்... இன்னும் ஆவலாய்த்தான் இருக்கிறேன். அனுப்பத்தான் காணோம்.

இப்ப எப்பவாவது முகநூலில் பதிவு போடுவார்... லைக் பண்ணுவதுடன் சரி... சிங்கையில் இருக்கும் போது நிகழ்ந்த விவாதங்கள் எல்லாம் இல்லை என்றாலும்...  தற்போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் ... இன்னும் அன்புத் தங்கையாய் என் மனசுக்குள்... நானும் அண்ணனாய் அவர் மனசுக்குள் இருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இன்று அந்த அன்புத் தங்கை அனிதா ராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்.

என் இனிய வாழ்த்துக்களுடன்... உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அவருக்குச் சொல்லுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

அனிதாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும்... அது மீண்டும் எழுதுங்கள் என்பதே...


சாதாரணமானது கூட அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது
                                                                 -அனிதா ராஜ்

வாழ்க வளமுடன் நலமுடன்....
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 ஜனவரி, 2017

2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் அன்பு அண்ணன் கவிஞர் மீரா செல்வக்குமார்  அவர்கள். இவர் 'நான் ஒன்று சொல்வேன்' என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவர் 'அன்பின் சக்தி' என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகள் தன் மகளுக்கு எழுதுவதாய் சமூகம் குறித்து இன்றைய நிலை குறித்து மிக அழகாய், அருமையாய் இருக்கும். மிகச் சிறந்த கவிஞர்... அருமையான சிந்தனையாளர்... அவருடன் ஒரு முறை பேசியிருக்கிறேன். புதுக்கோடைக்கு எப்ப வருவீங்க என்று கேட்கும் நட்புக்களில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி நாம் அறிய அவர் தருவது என்ன... பார்ப்போம் வாங்க...



"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

து ஆலைத்தொழிலாளர்கள் நிறைந்திருந்த காலனியின் பூமி..

தமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும்..பஞ்சம் பிழைக்க வந்தேறிய ஒரு ஈச்சம்புதர்களின் முன்னால் காடு..

மதுரையை பூர்வீகமாக கொண்ட ஒரு கும்பல் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்து சேர்ந்தது 80 ஆண்டுகளுக்கு முன்னால்...

ஆலை அடிக்கடி சீக்குப்பிடிக்க ஆரம்பித்த 1970 களில் நான் ஒரு குடும்பத்தின் மூத்தவனாக பிறந்தேன்...

அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள் பிறக்குமளவுக்கு பொழுது போக்கும்,அறிவும் இருந்த நாட்கள்..

உள்ளூரின் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி என கல்விக்கடன் கழிந்தது..

ஆலை என்றால் சங்கம் இல்லாமலா?

வழுவழு தாளில் சோவியத் நாட்டின் புத்தகங்களில் படம்பார்க்க நுழைந்த கால்கள்...வாசிக்கவும் ஆரம்பித்த நாள்கள்.

பள்ளி முடிந்ததும் வேலைக்கான தேடல்..

ஒரு பெட்ரோல் நிலையத்தில் 6 ரூபாய் தினக்கூலி..

பில் போட அழைத்துச் சென்றவர்கள்..ஒரு துடைப்பத்தை கையில் கொடுத்து வீதியே கூட்டச்சொன்னார்கள்..

பெட்ரோல் நிலையத்தில் ஆரம்பித்த அம்பானிக்கனவு அம்போவென ஒரு நாள் முடிந்தது..

பண்டக சாலையொன்றில் வேலையிருக்கிறது எனச்சொல்லி கொஞ்ச நாள் அவர் கடையில் வேலை பார்க்க சொன்னார் ஒரு பெரியவர்..

சம்பள உயர்வு 8 ரூபாயானது..

காலையில் 100 லாட்டரி சீட்டு கொடுப்பார்கள் பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி சத்தம்போட்டு விற்கவேண்டும்..விற்றுமுடியவில்லை எனில் முதலாளி முறைப்பார்..சில நாள் சம்பளம் குறைப்பார்..

இந்த கோடைகாலத்தில் நான் என் துணையை சந்தித்தேன்..

அழகாகவும், ஆசிரியையாகவும் ஆகிவிட்டிருந்தார். என் ஆசை அவரை ஹெலிகாப்டர் வைத்தாலும் எட்ட முடியாத அளவில் தான் இருந்தது..

1986 களில் கலை இலக்கிய பெருமன்ற  மாதாந்திர கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார் என்ற துப்பு கிடைத்ததும்..சில வரிகளை கவிதை என்ற பேரில் எழுதிக்கொண்டு நல்ல கைலியை கட்டிக்கொண்டு காலையிலேயே போய்விடுவேன்.

கூட்டம் முழுவதும் ஒரு சொப்பன உலகில் உலவினானும் சம்பளம் கிடைக்காத சோகமும் இருக்கும்..

முக்கியமாய் என் வரிகளை சிலாகிக்கும் சில இதயங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

வாழ்க்கைக்கான தேடலை விட என் துணையை அடைய வேண்டும் என்ற ஆவலாதியில் 21 ரூபாயுடன் வெளிநாடு போகும் உற்சாகத்தில் திருப்பூர் போய்விட்டேன்..

எனக்கான நேரம் எனக்கு முன்னே அங்கே சென்று காத்திருந்து என்னை கைபிடித்து அழைத்துப்போய் ஒரு பிரிண்டிங் ஆலையில் விட்டது..

வாரம் 50 ரூபாய் சம்பளம்.அதற்குள்ளே சாப்பாடு..எல்லாம்..

கண்ணின் அவளை பார்த்துவிட்ட நாள்களில் என்னை நரகத்துக்கு அனுப்பி வேலை செய்யச்சொல்லியிருந்தாலும் பார்த்திருப்பேன்.

முழுக்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு சாயம் கலக்கச்சொல்வார்கள். சரியான நிறம் எடுக்கும் அவரின் மூடுக்கேற்ப சில சமயம் ஐந்து நிமிடத்திலும் பல நாள்கள் பலமணி நேரங்களும் கை கலக்கிக்கொண்டிருக்கும். 

ஒரு வருடம் கழித்து ஒரு கம்பெனியில் கணக்கப்பிள்ளை என அழைத்து டீவாங்கித்தரும் வேலை...சம்பளம் 75 ரூபாய் வாரத்திற்கு..

சக்கையாய் விழும் இரவெல்லாம் கனவுகளில் காதலிக்க ஆரம்பித்து விடுவேன்..

இடையில் காதலி 5 புத்தகங்கள் போட்டு ஹெலிகாப்டர் தூரத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தார்..

நான் இன்லேண்ட் கடிதம் 10 எழுதினால் ஒரு அஞ்சலட்டையில் நன்றி என ஒரு பதில் வரும்.. அவர் நூல் வெளியிடும் நாள்களை நான் ஊருக்கு வரும் நாளாய் அமைத்துக்கொண்டு கம்பீரமாய் வந்து தலைகாட்டிவிட்டு கிளம்பி வருடம் முழுவதும் வைத்து சாப்பிடுவேன்.

நாள்கள் ஓடிய வேகத்தில் நான் சூப்பர்வைசர் ஆகி என் தம்பிகள், குடும்பம் என எல்லாரையும் திருப்பூர் அழைத்துச்சென்று விட்டேன்..

ஒரு தம்பி கணினி பயின்றான்...மற்ற தம்பி வேலைக்குப்போனான்..

குடும்பம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்த வேளையில் தம்பி நல்ல பழக்கங்களை மேம்படுத்தி ஒரு நிலைக்கு வந்துவிட்டான்..

வெறுமென விசாரிப்புகளாய் இருந்த என் கடிதங்களில் நான் என்னை உறுத்தாத அளவுக்கு வெளிப்படுத்தும் அளவில் வளர்ந்திருந்தேன்..

அவரை சந்தித்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேவகணத்தில் என் நேசத்தை சொன்னேன்..

மறுத்து..பின் நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்த அந்த நிமிடங்களின் நினைவு எப்போதும் மறக்க முடியாது.

அப்புறம் என்ன போராட்டம் தான்...

வீட்டில் மறுப்பு...திருமண எதிர்ப்பு எல்லாம் கடந்து கைபிடித்த நாளும் வந்தது..

தம்பி ஒரு திரைப்பட தயாரிப்பாளனாகி விட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் மணமுடித்து விட்டார்கள்.

கடைசி தம்பி மாதம் 2 லட்சம் தரும் கணினிப் பணியில் இருக்கிறான்..

தங்கை சி.ஏ.முடித்து விட்டார்.

இரண்டு பெண்கள் எங்கள் தோளுக்கு வளர்ந்து விட்டார்கள்..

எழுத்துகளை கிட்டத்தட்ட மறந்திருந்த வேளைகளில் முத்துநிலவன் அய்யாவின் தொடர்ந்த தூண்டுதலால் எழுத ஆரம்பித்தேன்.

வலைப்பூவில் எழுத எழுத என் நட்புகள் விரிய ஆரம்பித்தது.

நான் உண்டு என் வேலை உண்டென உருண்ட நேரங்களை மாற்றிவிட்டது அன்பின் வலிமை.

முன்பு சில நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளனாய் போகும் போது எந்த அடையாளமுமில்லாத ஒரு ரசிகனாய் இருந்து வந்த என்னை, இப்போதெல்லாம் சிலரேனும் பார்த்து முறுவலிக்கிறார்கள்.

பரிசோதனையாய் சிலர் விழாக்களில் பங்குபெறவும் வைக்கிறார்கள்..

**மிக நீளமாய் எழுத வைத்திருந்த என் இதயக்குளத்தில் எறியப்பட்ட கற்களை சின்ன தூண்டில் மூலம் வளையங்களை ஏற்படுத்தி இருக்கிறார் .பரிவை.சே.குமார்.

சொல்வதற்கும்..வெல்வதற்கும் ஆலோசனைகள் ஏதுமில்லை என்னிடம்..

பிடித்தமான ஒரு குறள் உண்டு..

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

முடியாதென எதையும் நினைக்காதீர்கள்... எல்லாம் முடியும்..

அன்புடன்..
மீரா செல்வக்குமார்.
www.naanselva.blogspot.com

செல்வக்குமார் அண்ணன் அவர்களின் 'என்னைப் பற்றி நான்' வாழ்க்கையை எதார்த்தமாய் பேசியது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மனசுக்குள் சுழலவைத்தது.

நன்றி செல்வக்குமார் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.