மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 ஜனவரி, 2017

மனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை

வாழ்க்கை....

பள்ளிக் காலத்தில் மனசுக்குள் சந்தோஷம் மட்டுமே குடி கொண்டிருக்க ஏதுமறியா வண்ணத்துப் பூச்சியாய் வாழ்க்கை பயணப்பட்டது. பெரிய ஊதாப் பை, அது நிறைய புத்தகம் அதோடு மதிய சாப்பாட்டுக்கான தட்டு... இப்ப பசங்க டிபன் பாக்ஸ் எடுத்துப் போகவே சங்கட்டப்படுறாங்க... அன்னைக்கு தட்டுத் தூக்க வருத்தப்பட்டதில்லை... அதுவும் மதியத்துக்கு மேல் மழை வரும் என்றால் கிராமத்துப் பிள்ளைங்களுக்கு விடுமுறை, அப்போது ரமணனும் இல்லை தூர்தர்சன் தவிர மற்ற தொலைக்காட்சிகளும் கிராமங்களுக்குள் எட்டிப் பார்க்கவும் இல்லை... அதனால் லேசான மழை காற்று அடித்தாலே சனி மூலையில இருண்டுக்கிட்டு வருது கிராமத்துப் பிள்ளைங்க போகலாம் என்ற எங்க தலைமை ஆசிரியரின் ஒலை வகுப்பறைக்கு வர, காத்திருந்தவர்கள் கணப் பொழுதில் மழை வந்தால் புத்தகம் நனையும் என்பதால் பள்ளியில் வைத்து விட்டு தட்டை மட்டும் தலையில் கவிழ்த்துக் கொண்டு ரெண்டு கிலோ மீட்டருக்கு ஆனந்த நடை... மறுநாள் தட்டோடு பள்ளிக்குப் பயணம்... அதுவும் மழை இல்லை என்றால்தான்... லேசான மழை என்றாலும் அன்றும் விடுமுறைதான். இப்ப யாராச்சும் போவாங்க... ஏன் நானே தட்டைத் தூக்கிட்டுப் போவேனா தெரியலை... நமக்கு வெட்கமெல்லாம் இல்லைங்கிறது வேற விஷயம். என்ன இருந்தாலும் அது சந்தோஷத்தைச் சுமந்த சுகமான வயசு... அதுவும்  ஒன்பதாம் வகுப்புக்கு தே பிரித்தோ போகும் வரைதான்... அங்கும் ஜாலியான வாழ்க்கைப் பயணம்தான்... என்ன சாப்பாடு டிபன் பாக்சில் கொண்டு போனேன் அவ்வளவே...

இப்ப எதுக்கு தம்பி இதெல்லாம்ன்னு யோசிக்கிறீங்களா... இருங்க சொல்றேன்... எதுக்குமே படிப்படியா ஏறித்தான் போகணும்..

கல்லூரிக் காலம் அது கனவுகளைச் சுமந்த பருவம்.. நல்ல நட்புக்கள், அருமையான வழிகாட்டி என எனக்கு சற்றல்ல நிறைய மாற்றத்தையும் வாழ்வின் பக்கங்களை எப்படி அணுக வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது. இதைப் பற்றி நிறைய பதிவுகளில் நிறைவாய் பேசிட்டேன்.. நட்புக்களுடன் இணைந்து 'மனசு' கையெழுத்துப் பிரதி, அதற்கான உழைப்பு... மாலை நேரங்களின் ஐயா வீட்டில் எங்களின் அரட்டை... மூன்றாண்டுகள் எங்கள் வீட்டில் இருந்ததை விட, சாப்பிட்டதை விட ஐயா வீட்டில்தான் அதிகம்... ஞாயிற்றுக் கிழமை கூட அங்குதான்... மதியம் பத்துப் பதினைந்து பேருக்கு சாப்பாடு... ஐயாவும் அம்மாவும் சைவம்... நாங்க அசைவம்... எங்களுக்காக கறி வாங்கி வந்து சமைப்பார்கள்... இப்படி ஒரு வாழ்க்கை யாருக்கு அமையும் சொல்லுங்க... சந்தோஷமாகச் சொல்வேன் எனக்கு ஐயாவும் அம்மாவும் இன்னொரு பெற்றோர்... இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில அம்மாக்களுக்கும் மகனாய் இந்த நாட்களில் இருந்து இன்று வரை...என் வாழ்க்கை மிகுந்த அன்பின் பிடிக்குள் ரசனையாய் நகர்கிறது.

சரி... கல்லூரிக்கு பொயிட்டே... காதல் கீதல்ன்னு போயிடாதே... சொல்ல வந்ததைச் சொல்லு அப்படின்னுதானே 'மனசு'க்குள்ள நினைக்கிறீங்க... இருங்க சொல்றேன்...

அப்புறம் அமைந்த வாழ்க்கை... ரொம்பப் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை... கணிப்பொறி ஆசிரியனாய் ஆரம்பித்து அங்கும் இங்கும் ஓடி.. இதில் என்ன விசேசம் என்றால் இனி கம்ப்யூட்டர் பக்கமே போகக் கூடாது வேற எதாவது ஒரு வேலைக்குப் போயிடணும்ன்னு முயன்றால் மீண்டும் கணிப்பொறியோடுதான் குப்பை கொட்டுவேன்... அங்கங்கு சுற்றி, முருகனுடன் கணிப்பொறி மையம் ஆரம்பித்து கல்லூரியிலும் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த நேரத்தில் வீட்டில் திருமணத்துக்கான பேச்சு எழுந்தது. உருப்படியா ஒரு வேலை இல்லை கல்யாணமா என்ற கேள்விகள் வீட்டில் எழுந்தன... இருப்பினும் வாழ்க்கை திருமணம் என்ற பக்கத்துக்குள் எப்படியோ அடி எடுத்து வைத்துவிட்டது. தனி ஒருவனாய் இருந்தவனை நம்பி ஒரு உயிர், அதுவும் சில நாளிலேயே நீ நள்ளிரவுல கூட வருவே... தேவகோட்டை பக்கமே வீடு புடிச்சி இருந்திரு என்று வீட்டில் சொல்ல, ஒரு சிறிய செட்டிய வீட்டில் செட்டில் ஆனோம். 

பள்ளிக் கூடத்தில் ஆரம்பித்து நிச்சயித்த திருமணம் வரைக்கும் வந்துட்டே... இனி குழந்தை குட்டியின்னு ஆரம்பிச்சி எங்கப்பா போயி முடிக்கப் போறேன்னு தோணியிருக்குமே.... இருங்க சொல்றேன்...

என்னோட வாழ்க்கையில் இணைந்து தட்டுத் தடுமாறி வாழ்க்கை வண்டி ஒட்டிய ஆரம்ப நாட்களில் எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணையாய் இருந்து என்னை உயிர்ப்பித்தவர் அவர்தான்... சோதனைகளின் சோர்வில் துவழும் பொதெல்லாம் எல்லாம் சரியாகும் விடுங்க என்ற நம்பிக்கை விதை விதைத்தவர் அவர்தான்... நான் இங்கு வந்த பின்னர் வீடு கட்டும் பணியை தேவகோட்டையில் ஆரம்பித்த போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஸ்கூட்டியில் தினம் தினம் சென்று வீட்டு வேலையை பார்த்து வந்தவர் அவர்தான்.  எங்க ஊரில் திருவிழாவுக்கு முன்னர் சின்னதாக ஒரு வீடு கட்ட வேண்டிய சூழல் வந்த போது தானே பொருட்கள் வாங்கிக் கொடுத்து இரவு பகல் பாராமல் தேவகோட்டைக்கும் எங்க ஊருக்குமா அலைந்து திரிந்து எங்களுக்கான வீட்டை பார்த்துப் பார்த்துச் செதுக்கியவர் அவர்தான்... என் வாழ்வில் இணைந்து பெரிதாக எதையும் அனுபவிக்காமல் தான் கொண்டு வந்த நகைகளை எல்லாம் வீட்டுப் பணிகளுக்காக வங்கியில் வைத்து விட்டு புன்னகையோடு வாழ்பவர் அவர்... எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்வதால் என்னைப் போல் (நான் அந்தளவுக்கு உதவி செய்வதில்லைதான் இருப்பினும் எனக்கு நட்பு வட்டம்தான் அதிகம்) அவருக்கும் உறவுகள் அதிகம்... என்ன கஷ்டம் இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்து விடுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

நட்புக்கள் எல்லாம் ஒட்டி நிற்க, எங்க ரத்த உறவுகள் எட்டியே நிற்கிறார்கள்... எல்லாருக்கும் நல்லதுதான் செய்யுறோம்... யாரையும் நான் பிரிச்சிப் பார்ப்பதில்லை... அது என்னவோ நமக்கிட்ட விலகியே இருங்காங்களே ஏன் என்று அவர் கேட்கும் போது அவர்களுக்கு புரியும் போது வருவார்கள் விட்டுத் தள்ளு என்று சொல்லி நகர்ந்தாலும்... ஏன் அவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.. சரி விடுங்க... எங்கெங்கோ பயணித்த என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் ஆக்கி, என்னை ஆட்கொண்டவரைப் பற்றி பேசும் போது இதெல்லாம் எதற்கு... 

என்னது... என்ன சொல்ல வந்தேன்னு புரிஞ்சிக்கிட்டீங்களா..? ம்... ஆமாங்க அதுதான்...

நாங்க ஆதர்ஷ தம்பதிகள்ன்னு சொல்லமாட்டேன்... சின்னச் சின்ன சண்டைகள் இல்லாத வாழ்க்கை சலிப்பாயிரும் இல்லையா... அப்படி சின்னச் சின்ன சண்டைகள் வந்து மறைந்தாலும் இருவருக்குமான நேச முடிச்சி ரொம்பப் பலமானது என்பதால் ஆத்மார்த்த தம்பதிகல் நாங்கள் என்பேன். 

என்னில் பாதி... என் வாழ்க்கைத் துணை மட்டுமல்ல... வாழ்வின் வழித்துணை... என் அன்பு மனைவிக்கு இன்று பிறந்தநாள்.... உங்களோட வாழ்த்துக்களும் ஆசிகளும் அவருக்கு கிடைக்கட்டும்...

இந்த நாளில் இறைவனிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... என்னை வழி நடத்த அவருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைக் கொடு... எட்டாண்டுகளாக பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பதை விடுத்து நாங்க நாலு பேரும் ஒரு கூட்டுக்குள் வாழும் வழி செய் என்பதே... நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ம்மா...



Image result for பிறந்தநாள் வாழ்த்து

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 2 ஜனவரி, 2017

மனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்

'இந்த  எழுத்தால் என்ன சாதித்தாய்..?' என்ற கேள்வியை எனக்குள் எப்போது எழுப்பினாலும் கிடைக்கும் விடையானது ஒன்றுதான்... அது நல்ல நட்புக்களை முகம் தெரிந்தோ... தெரியாமலோ... குடும்ப உறவாகவோ... இணைய உறவாகவோ... பெற்றிருக்கிறேன் என்பது மட்டும்தான். என் எழுத்து சமூகத்தை சீர்திருத்த வந்த எழுத்தோ அல்லது ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்த எழுத்தோ அல்ல... சாதாரண கிராமத்தானின் எழுத்து இது அவ்வளவே. கல்லூரிக் காலத்தில் 'நீங்களும் எழுதலாமே' என்ற இரண்டு வார்த்தை என் பேராசானிடமிருந்து வந்தபோது அடுத்த நாளே விளையாட்டாய் எழுதிக் கொண்டு போய்க் கொடுத்த காதல் கதைதான் எழுத்துக்கான முதல் சுழி. 'என்னய்யா காதல் கதை... வயசு அப்படி'ன்னு சொல்லாம அதையும் திருத்தி... 'நல்லாயிருக்கு' என்ற ஒற்றை வார்த்தை அவரின் வாயில் இருந்து உதிர்ந்ததில் கனிந்ததுதான் இந்த எழுத்து... அந்த வார்த்தை கொடுத்த தெம்புதான் 'பெரிய எழுத்தாளன்' என்ற கனவில் எழுத வைத்தது. கல்லூரியில் படிக்கும் போது முதல் கவிதை 'தாமரை'யில் வெளிவர. பொன்னீலன் அண்ணாச்சியின் வாழ்த்து ஒன்று ஐயா முகவரிக்கு தாமரை இதழுடன் வந்தது. அப்படி ஆரம்பித்த எழுத்தில் எங்கள் மண்ணின் மக்களையும் வாழ்க்கையையும் வைத்து எழுத ஆரம்பித்தது என்னோட மூணாவது இன்னிங்க்ஸில்தான்... ஆம் முதல் இன்னிங்க்ஸ் கல்லூரிக் காலத்தில் கவிதை, ஹைக்கூ என அதில்தான் அதிகம் பயணித்தது. கதைகளும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் எல்லாமே ஆஹா... ஒஹோவெல்லாம் இல்லை. இரண்டாவது இன்னிங்க்ஸ் திருமணத்திற்குப் பின்னர், ஸ்ருதி பிறந்த பின்தான்... சென்னையில் பத்திரிக்கையில் இருந்தபோது கவிதைகளும் ஹைக்கூவும் எழுதினாலும் கதைகளின் பின்னே அதிகமாய் நகர்ந்தது... மூன்றாவது இன்னிங்க்ஸில்தான் சொல்லிக் கொள்ளும்படியான வட்டார வழக்கிலான கதைகள் அதிகம் எழுத ஆரம்பித்தது... எழுதவும் நேரம் கிடைத்தது... மனசு என்ற வலைப்பூவும் வசமானது. தற்போது பத்திரிக்கைகளில் வெளி வருவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடியாத சூழல் என்றாலும் இணைய இதழ்களில் அதிகம் எழுத  முடிகிறது.

இப்ப எதுக்கு பழைய புராணம் அப்படின்னுதானே கேக்குறீங்க...? என்னைக்குமே பழைய குப்பைகளைக் கிளறினால் நிறைய விஷயங்களை அறிய முடியும்... அதைப் பற்றித்தான் பேசப்போறோம்... அதுக்கு முன்னால நான் முதல் பாராவில் சொன்னது போல்  ஒவ்வொருத்தருக்குமான எழுத்து ஏதோ ஒரு வகையில் ஆரம்பித்திருக்கும். சிலர் தொடர்ந்து எழுதலாம் பலர் என்னைப் போல் மூணு நாலு இன்னிங்க்ஸாக எழுதி வரலாம். சில நல்ல எழுத்தாளர்கள் காலத்தின் பிடியில் காணாமலும் போயிருக்கலாம்... எப்படியிருந்தாலும் ஒவ்வொருவருக்குமான எழுத்து வித்தியாசனமானது. அந்த வகையில் திண்டுக்கல் தனபாலன் அண்ணா அவர்கள் பாடல்கள், விளக்கங்கள், திருக்குறள், தொழில் நுட்பம் எனக் கலக்கினால் ஜெயக்குமார் ஐயா அவர்கள் சொல்ல வந்ததை மிக அழகாக வார்த்தைக் கோர்வையில் வித்தியாசமாய் நகர்த்துவார். கில்லர்ஜி அண்ணன் அவர்கள் சிவசம்போவை வைத்து சிரிப்பாகவும் சீரியஸாகவும் எழுதினால் தமிழும் அழகுமாய் முத்து நிலவன் ஐயா எழுதுவார். வாழ்க்கைக் கதைகளில் நம்மை வசப்படுத்துவது நிஷா அக்கா என்றால் முத்துக்களில் சிரிப்பார் மனோ அம்மா, எழுத்தையும் காதலிக்க வைப்பது தேவா அண்ணன் என்றால் நிறைவாய் எழுவார்கள் தில்லையகத்து துளசி சாரும் கீதா மேடமும்... எல்லாரையும் கவரும் பதிவுகளால் நம்மை எங்கள் பிளாக் ஈர்க்கும் என்றால் திரைக்கதையாய் விரிப்பார் குடந்தை சரவணன் அண்ணன். நண்பன் தமிழ்க்காதலன் கவிதைகளில் கலக்கினால் தம்பி தினேஷ் அதே கவிதைகளால் வார்த்தையில் விளையாடுவான். இப்படி ஒவ்வொருத்தரையும் சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் பல பதிவுகள் எழுத வேண்டும். எனவே இங்கு சொன்னவர்கள் என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளாமல்  நான் விரும்பி வாசிக்கும் என்னை வாசிக்கும் அனைவரின் எழுத்துக்களுமே மிகச் சிறப்பானவைதான்...

எழுத்து வரமாய் அமைந்த பலரில்  எந்தப் பதிவு என்றாலும் விரிவாய்... புள்ளி விபரங்களை வைத்து அது ஆன்மீகமாய் இருந்தாலும் அரசியலாய் இருந்தாலும் வாழ்வியலாய் இருந்தாலும் அசத்தலான மிக நீண்ட பகிர்வைக் கொடுக்கக் கூடியவர் ஜோதிஜி அண்ணன் அவர்கள்... இவரின் எழுத்துக்கள் எல்லாரையும் வசீகரிக்கும். நீண்ட பதிவாய் நிறைவாய் எழுதுவார்... எதையும் ஊறுகாயாக தொடமாட்டார்... ஆதி முதல் அந்தம் வரை அலசி விடுவார். இவர் எங்க பக்கத்து ஊர்க்காரர் என்பதில் எனக்குச் சந்தோஷம்... வட்டார வழக்கில் எழுதுகிறானே இவன் என என்னை நேசிப்பதில் அவருக்குச் சந்தோசம். இப்ப என்ன ஜோதிஜி அண்ணனுக்கு ஐஸ் அப்படின்னு நினைக்காதீங்க... பழைய குப்பைகளை கிளற வைத்தவர் அவர்தான்... அதைக் கிளறக் கிளற ஆஹா... என்ன சுவை... என்ன ரசனையான எழுத்து.

Image result for ஜோதிஜி திருப்பூர்

எப்பவுமே குப்பைகளைக் கிளறினால் கோமேதகம் கிடைக்கும் என்பார்கள்... கிராமங்களில் குப்பை குழி, குப்பை மேடு என ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் வீட்டுக் குப்பைகள். மாட்டு ஆட்டு சாணிகள் என கொட்டி வைத்து விவசாய நேரத்தில் வயலில் அள்ளிக் கொண்டு போய் தூவிவிட்டு உரமாக்குவார்கள். சிலர் வயலில் ஒரு ஒரத்தில் கொட்டி வைத்திருப்பார்கள். அந்தக் குப்பைகளைக் கிளறித்தான் கோழிகள் தங்களுக்கான இரைகளைப் பொறுக்கும். ஏன் நானெல்லாம் கோழி குஞ்சி பொறித்ததும் கரையான் அள்ளப் போகும்பொது குப்பைக் குழிகளைத்தான் தேடிச் செல்வேன். அங்குதான் அதிகம் கரையான் இருக்கும்.. அதுவும் மாட்டெருவுக்குள்ளும், கதிர் அறுத்து நெல் தூற்றியது போக கருக்காய் என்று சொல்லப்படுகிற குப்பைக்குள்ளும் குவிந்து கிடக்கும். அதை வாளி நிறைய அள்ளி வந்து கோழிக் குஞ்சிக்கு போடுவதுண்டு. பள்ளியின் அருகில் இருக்கும் வாரச் சந்தையில் திங்கள்கிழமை மதியம் சுற்றிச் சுற்றி தேடி சில்லறைக்காசு பொறுக்கிய அனுபவம் நிறைய உண்டு. எனவே பழைய குப்பை என்று ஒதுக்கித் தள்ளாமல் அதையும் ஆராய்ந்தால் நிறையப் பெற முடியும்... நிறைவாகவும் பெற முடியும். அப்படியான ஒரு தொகுப்புத்தான் ஜோதிஜி அண்ணனின் 'பழைய குப்பைகள்'.

சின்ன வயதில் நிறைய பேப்பர்களையும் நடிகர், நடிகையர் படங்களையும் வெட்டி எடுத்து சேர்த்து வைக்கும் பழக்கம் எனக்கு உண்டு. பிடித்த கதைகள் என்றால் கூட வெட்டி சேர்த்து வைப்பேன்... ஆனால் அரசியல் விவகாரங்களை எல்லாம் சேர்த்து வைப்பதில்லை... அரசியலுக்கும் நமக்கும் வெகுதூரமாய் இருந்த காலம் அது. கல்லூரியில் படிக்கும் போது கூட என் பங்காளி திருநாவுக்கரசையும் முத்தரசு பாண்டியனையும் கோர்த்து விட்டு விட்டு அவர்களின் விவாதத்தை ரசித்தபடி நானும் ராம்கியும் சைக்கிளிலும் நவநீ, அண்ணாத்துரை, ஆதி என மற்ற பங்காளிகளும் மாப்பிள்ளைகளும் எங்கள் தோளில் கைபோட்டபடி நடந்தும் பயணிப்பதுண்டு.... மூன்றாண்டுகள் தினமும் காலை மாலை என காரசார விவாதம் நிகழ்ந்தும் முடிவில்லாமலேயே முடிந்து போனது கல்லூரி வாழ்க்கை... ஜோதி அண்ணா அரசியலையும் கரைத்துக் குடித்தவர் என்பதை அவரின் அரசியல் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். அவரும் நம்மைப் போல குப்பை சேர்ப்பவர்தான்... அதுவும் அரசியல் குப்பைகள்... அந்தத் தலைவர் அன்று பேசியதில் ஆச்சர்யப்பட்டும் வெட்டி வைத்ததை, இன்று எடுத்துப் பார்க்கும் போது இவரா இப்படிப் பேசியிருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்... அதிர்ச்சி அடைந்திருக்கிறேன் என்று ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆக மொத்தம் நாம் சேர்த்த குப்பைகளை மீண்டும் கிளறும் சந்தர்ப்பம் வாய்த்தால் ஆச்சர்யப்பட... ஆனந்தப்பட... அதிசயப்பட வைக்கின்றன அல்லவா?

என்னோட வட்டார வழக்கில் இருந்து எழுத்து வழக்குக்கு மாறி... இருங்க இங்க என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிக்கிறேனே... நானெல்லாம் வட்டாரத்தில் இருந்து மாறவே இல்லை இன்னும் காட்டானாய்த்தான் என்பது வேறு விஷயம்... எனக்கெல்லாம் ரத்தம், நாடி, நரம்பு எல்லாத்துலயும் பரியன் வயல் கிராமத்து மண்ணு மொத்தமாப் பாஞ்சிருச்சு... இன்னும் கிராமத்தானாய்த்தான்... அதுதான் சுகமாவும் சந்தோஷமாவும் இருக்கு... ஜோதி அண்ணனிடம் முதல்முறை பேசும்போதே அந்த சுகத்தை அடைந்தேன்... சரி விஷயத்து வருவோம்... அதாவது எழுத்து வழக்குக்கு மாறி, இணைய எழுத்தாளனாய் பரிணமிக்க அவருக்கு 40 பதிவு தேவைப்பட்டது என்று சொல்லும் முதல் கட்டுரையான 'நான்'னில் ஆரம்பிக்கும் எழுத்து கல்லூரிக்காலம், இரயில்வே நிலையத்தில் படித்தது, பால்ய நண்பன் இன்று எப்படி நடக்கிறான், சாதீயத்தின் விளைவு, ஆன்மீகம், அரசியல் என இருபது கிளைகளில் அற்புதமாய் பயணிக்கிறது. அதுவும் தன் காதலியின் பெயரோடு தன் பெயரையும் எழுதிய ரயில்வே நிலையத்து மரம் இன்னும் நிற்கிறது என்றாலும் அவள் பெயர் மறைந்து தன் பெயர் மட்டும் இருக்க, அதற்குக் கீழே குழந்தைகள் தங்களது பெயரைப் பதித்தார்கள் என்று சொல்லும் போது எத்தனை அன்போடு பிரிந்து போன காதலியைச் சுமந்தாலும் நமக்கென குட்டித் தேவதைகள்... அவர் பாணியில் தேவியர் வந்துவிட்டால் காதலி மறைந்து தேவியரைச் சுமக்க ஆரம்பித்து விடுவோம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. அதே போல் ஐடிஐ படித்த நண்பனை இந்த வேலைக்கு நீங்களெல்லாம் சரி வரமாட்டீங்க என அவரின் பூணூலைப் பார்த்து ஒதுக்கும் சமூகத்தால் அவன் இறந்தவர்களுக்கு காரியம் பார்க்கிறான் என்று சொல்லும் போது இன்று அவனின் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு யார் சாவார் என்று காத்திருக்கிறான் என்பதாய் முடிப்பதில் சாதிப் பொங்கலில் சமத்துவ சக்கரை எப்படி தூக்கலாய் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பழைய குப்பைகளை இரண்டு முறை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி வாசித்தபோது நிறைய அறிய முடிந்தது... எல்லாமே வாழ்வியலைப் பேசும் கட்டுரைகள்... அவை அவர் கடந்து சென்ற போது நிகழ்ந்தவை என்பதைவிட, நாம் ஒவ்வொருவரும் கடந்து செல்பவைதான்.. இந்தப் புத்தாண்டின் முதல் நாளில் 'பழைய குப்பைகள்' மின்னூலாய் வந்திருக்கிறது.  புத்தகம் போடணும்.. அதுவும் கவிதைக்கு ஒன்று... கதைக்கு ஒன்று... நாவலுக்கு ஒன்று.. கட்டுரைக்கு ஒன்று... என நாமெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது 2013 ஆம் ஆண்டில் 'ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்' என்ற முதல் மின்னூலை வெளியிட்டவர் இந்த மூன்றாண்டுகளில் இன்று வெளியான 'பழைய குப்பைகள்' வரை எட்டு மின்னூல்களை வெளியிட்டிருக்கிறார். இந்த மின்னூலுக்கு முந்தைய மின்னூல் வரை 1,64,000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஆச்சர்யம் என்பதைவிட அவரின் எழுத்துக்கான் அத்தாட்சி என்றே சொல்லலாம்.  அவரின் அனைத்து மின்னூல்களுக்கான இணைப்பு அவரின் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாசித்தால் அந்த எழுத்து உங்களை அடித்துச் சென்று ஆச்சர்யப்பட வைக்கும்.


ஜோதி அண்ணாவின் வலைப்பூ : தேவியர் இல்லம்

பழைய குப்பைகள் மின்னூல் வாசிக்க :  பழைய குப்பைகள்

பழைய குப்பைகள் வசீகரிக்குமா என்றால் ஆம் வசீகரிக்கும் என்பதுடன் வாசிப்பவரை வசமிழக்க வைக்கும் என்றும் சொல்லலாம்.

கடைசியாக ஒன்று அவரின் டாலர் நகரம் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை... ஊருக்குப் போகும் போது திருப்பூர் செல்வது என்பது கடினமே... இந்த முறை எப்படியும் வாங்கி வாசிக்கணும். ஆனாலும் அது குறித்து திண்டுக்கல் தனபாலன் அண்ணா பேசும்போது சொன்னது 'என் மாமனார் டாலர் நகரம் புத்தகத்தில் இருந்து குறிப்புக்கள் எடுத்து மேடைகளில் பேசியதாய் ஜோதிஜி அவர்களிடம் சொன்னார் என்றார். அப்ப அது எப்படியான பொக்கிஷமாய் இருக்கணும்.. அதேபோல்தான் எல்லா மின்னூல்களும்... அவசியம் வாசிங்க...

என்னங்க... பதிவு ரொம்பப் பெரிசா இருக்கா? மூணு நாலு பதிவு ஒண்ணு சேர்ந்தாத்தான் அவரோட ஒரு பதிவு... அதனால அவரைப் பற்றி அவருக்கான பகிர்வு என்பதால் நீளமாத்தான் எழுதணும் இல்லையா...

இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள் அண்ணா...
-'பரிவை' சே.குமார்.

சனி, 31 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : சுய டைரிக் குறிப்பு

து இந்த வருடத்தில் நிகழ்ந்தவைகளின் தொகுப்பாக எழுதப்படும் பகிர்வே... ஜோதிஜி அண்ணனைப் போல் வருடா வருடம் விரிவாக, அலசி ஆராய்ந்து எல்லாம் எழுத நம்மால் முடியாது... நாம பட்டதும் பெற்றதும் என்னன்னு கொஞ்சம் எழுதி வச்சுப்போமேன்னு வருட முடிவில் ஏதாவது கிறுக்கி வைக்கிறது போல இந்த வருட முடிவிலும் சில...

Image result for new year gif file

2016... வருட ஆரம்பத்தில் எங்கள் ஊரில் வீடு வேண்டும் என்பதற்காக கையில் காசில்லாத நிலையில் வீட்டை ஆரம்பித்து அப்படி இப்படி புரட்டி வீட்டைக் கட்டி மே மாதம் பால்காய்ச்சினோம். ஏதோ ஒரு விதத்தில் விரயமாகும் என்றார்கள் வீட்டைக் கட்டியதால் கடனாகி நின்றாலும் வீடு நமக்கானதே என்ற நிம்மதி.

2016...  சில நல்ல நிகழ்வுகள் நடந்தன என்றாலும் நிறைய பிரச்சினைகள், கஷ்டங்களைச் சுமந்து பயணித்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு அப்போதைய நிவாரணியாய் ஏதாவது ஒரு மாற்று அமைந்து தற்காத்துக் கொண்டே வந்தது.

2016...  கச்சா எண்ணெய் விலை குறைவுப் பிரச்சினையால் எங்க வேலைகள் எல்லாம் தடைபட்டதால் வருடத்தின் இறுதியில் சில மாதங்களாய் அலுவலகத்தில் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய சூழல்... ஊருக்குச் செல்லச் சொல்லி விட, முடியாது என சண்டையிட்ட காரணத்தால் மலையாளிகள் ஊருக்குச் செல்ல, என்னை மட்டும் போக வேண்டாம் என்று சொன்னார்கள்... இன்னும் எந்த ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை.

2016... தமிழ்வாசி மூலமாக பொன்னியின் செல்வன் வாசிக்க ஆரம்பித்து வரலாற்றுப் புதினங்களில் அதிகம் பயணிக்க ஆரம்பித்தேன். நிறைய வாசிக்க முடிந்தது.

2016... வருத்தங்கள் கவலைகள் சூழ இருக்கும் தினங்களில் எல்லாம் ஆறுதலாய் காயத்ரி அக்கா, நிஷா அக்கா, நண்பன் தமிழ்க்காதலன், குடந்தை சரவணன் அண்ணன் என நட்புக்கள் எல்லாம் சரியாகும் என ஆறுதலாய் நின்றார்கள்.

2016... பதிவுக் காப்பியின் காரணமாக மனசு தளத்தில் சிறுகதைகள், எழுதிக் கொண்டிருந்த தொடர்கதை எல்லாம் நிறுத்திவிட்டு மனசு பேசுகிறது நிறைய எழுத ஆரம்பித்தேன்.

2016... 2015-ல் பாக்யா மக்கள் மனசு பகுதிக்கு எழுத ஆரம்பித்து இந்த வருடத்தில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து தொடர்ந்து எனது கருத்து வந்து கொண்டிருக்கிறது.

2016... நிறைய சிறுகதைப் போட்டிகளில் ஒரு சில காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் எனது கதைகள் ஏதோ ஒரு பரிசைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2016... ஸ்ரீராம் அண்ணா அவர்களின் எங்கள் பிளாக் வலைத்தளத்தில் கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது கதையான ஹரிணியும் வெளிவந்தது.

2016... எனக்கு இங்கு ஆறுதலாக இருந்த கில்லர்ஜி அண்ணன் அவர்கள் குடும்பச் சூழல் காரணமாக வேலையை விட்டுவிட்டு தேவகோட்டைக்குச் சென்று விட, வருத்தங்கள் நிரம்பிய நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது.

2016... திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுடன் போனில் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பை வருட இறுதி கொடுத்தது.

2016... ஆரம்பத்தில் இருந்த கஷ்டங்கள் கவலைகளை விட வருடத்தின் இறுதியில் கஷ்டத்தை இன்னும் இறுக்கமாய் அளித்து நகர்ந்தது.

2016...அகல் மின்னிதழில் அதிக கட்டுரைகள் எழுதும் வாய்ப்பை அதன் ஆசிரியர் திரு. கணேஷ் (சத்யா) அவர்கள் வழங்கினார்.

2016... நிஷா அக்கா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் என்னைக் குறித்தும் சொல்லியிருந்தது இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. மகிழ்ச்சி.

2016... 2013-ல் இருந்து புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, அதற்கான முயற்சியில் இறங்க நினைக்கும் போது எதாவது ஒரு பிரச்சினை முன் வந்து பூதகரமாக, முயற்சி முயற்சியாகவே இந்த வருடம் வரை பயணித்துக் கொண்டிருக்கிறது.

2016... என் கதை புத்தகமாகவில்லை என்றாலும் என் எழுத்து சகோதரர் ஒருவரின் புத்தகத்தில் இணைந்திருக்கிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு.

2016... பல கவலைகளை மறக்க வைத்தது எங்கள் விஷாலின் குறும்புச் செயல்கள்.

2016... என் மனைவி தனது கைவண்ணத்தில் வரைந்த கோலங்களுக்காகவே 'சிநேகிதி' என்ற தளத்தை ஆரம்பித்தார்.

2016... வட்டார வழக்கில் எழுது... அது உனக்கு நல்லா வருது என ஜோதிஜி அண்ணாவுடன் பேசும் போது குறிப்பிட்டார். மிகச் சிறந்த எழுத்தாளர், கருத்தோடு புள்ளி விவரங்களை வைத்து எழுதுவதில் நிபுணர் அவர் என்பதை அனைவரும் அறிவோம்... அப்படிப்பட்டவரின் பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி.

2016... குடும்பத்தைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில் நிறைய வலிகளைக் கொடுத்த ஆண்டு இது. மொத்தத்தில் இந்த ஆண்டில் கற்றது அதிகம் என்றாலும் பெற்றது குறைவுதான்... அதிலும் பட்ட கஷ்டங்கள் பட்டை தீட்டின என்று எடுத்துக் கொண்டாலும் அதிக கஷ்டம் அயற்சியை உண்டாக்கியது என்பதே உண்மை.

நாளையும் எப்பவும் போல்தான் விடியும் என்றாலும்... அந்த விடியல் எல்லோருடைய கனவுகளையும் நனவாக்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : பழைய பன்னீரு

Image result for சசிகலாவுடன் பன்னீர்

த்திரியன் படத்தில்  விஜயகாந்தைப் பார்த்து திலகன் அவர்கள் 'பன்னீர் செல்வம் நீ பழைய பன்னீர்செல்வமா வரணும்... வருவே...' அப்படின்னு சொல்வார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக முதல்வரான பன்னீர்செல்வம் அவர்கள் பழைய பன்னீர்செல்வமாக இல்லாமல் புதிய பன்னீர்செல்வமாக மலர்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் அதிகமாகவே இருந்தது. மன்னார்குடி மாபியா கையில் சொத்துக்கள் செல்வதை மக்கள் விரும்பவில்லை என்றாலும் அதற்காகத்தானே இத்தனை கபட நாடகங்கள் நடந்தேறியது என்பதை அறிந்தே இருந்தார்கள்.. சோற்றுக்குள் பூசனிக்காயை மறைப்பது போல் மறைக்க நினைத்தாலும் உலகுக்கே தெரிந்த விசயம் அது... சொத்துக்கள் போகட்டும் ஆனால் கட்சி அந்தம்மா கையில் போகக்கூடாது என்பதில் மட்டும் மக்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள்... இன்று வரை இருக்கிறார்கள். நாளை எப்படியோ... பணம் பத்தும் செய்யும். நேற்று வரை முழுக்க முழுக்க பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று பொதுமக்களும் சமூக வலைத்தள அன்பர்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன..?

மரணம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளுடன் ஜெயலலிதா என்னும் உறவுகளற்ற மனுஷியின் உடல் மெரீனாவில் புதைக்கப்பட்ட பின்னர், சசிகலாவின் நடை உடை பாவனை எல்லாமே அவரைப் போல் மாறியதைப் பார்த்தபோதே நாமெல்லாம் இரும்பு மனுஷி என்று புகழ்ந்த ஜெ.யின் ரிமோட் முழுக்க முழுக்க இவரின் கையில்தான் இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர  முடிந்தது. ஜெ.யின் சாவில் மர்மம் இருக்கு... அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இப்போது ஆளாளுக்கு கூவினாலும் இனி என்ன ஆகப் போகிறது..? கோடிகளை அடித்த கேடிகளை பேச விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, தன் மந்த நிலையைத்தான் தொடருமே தவிர ரகசியத்தை வெளியிட முன் வராது... சாமானியனை வதைக்கும் மோடி பணக்காரர்களிடம் சரண்டர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... சமீபத்திய நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. டாக்டரிடம் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்று சொல்வார்கள்... அது சாதாரண மக்களுக்குத்தான்... டாக்டருக்கும் வக்கீலுக்கும் அல்ல என்பதை டாக்டர் ரெட்டி அன் கோ நன்றாக நிரூபித்திருக்கிறார்கள்... பணம் பத்தும் செய்யும் என்றால் ஜெ. விசயத்தில் பணம் பத்தாயிரம் செய்திருக்கிறது.

சரி பன்னீருக்கு வருவோம்... இரண்டு முறை  தற்காலிகமாக இருந்தவர் இந்த முறை நிரந்தர முதல்வராக வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவரின் நடவடிக்கைகளும் பாராட்டும்படியாகத்தான் இருந்தது... பொன்னையன், தம்பித்துரையைப் போல் காலில் விழுந்து கிடக்காமல் பழைய பன்னீர் புதிய பன்னீராக மாறிவிட்டார் என்று நினைக்கத் தோன்றியது அதெல்லாம் எதுவரை... 'மாண்புமிகு சின்ன அம்மா' என வளைந்து நிற்கும் வரை.. ஆம் தன் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் இன்னும் சம்பாதித்துக் கொள்ளவும் இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதை அவரும் உணர்ந்து கொள்ள, ஒரு மிகப்பெரிய கட்சி இன்று அழிவின் பாதையை நோக்கி சதி(சி)கலா கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சொத்து சுகத்துக்காக மானத்தை எப்பவும் காற்றில் பறக்க விடுபவன் நான் என்பதை நிரூபித்திருக்கிறார். 

தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும்... சின்ன புரட்சித் தலைவர்... சிங்கமே சீறி வா... உன் பின்னே நாங்கள் இருக்கிறோம்... என்று எழுச்சி பெற்ற தமிழினத்தை தன் வாழ்நாள் கூழைக்கும்பிடு மூலம் கேவலப்படுத்திவிட்டார் இந்த மனிதர்... என்னைக்குமே நான் பழைய பன்னீர் செல்வம்தான்... புதிதாய் பிறந்து வா என்று நீங்கள் சொன்னாலும் நான் மாற மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். நாளை முதல்வர் பதவியைக் கொடுத்துவிட்டு சசிகலாவின் கார் போகும் போது ரோட்டைத் தொட்டுக் கும்பிடுவார்... அவருக்கு சொத்து பத்து முக்கியம் அடிப்படைத் தொண்டனும் அப்பாவித் தமிழன் அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார்... அவர் மட்டுமல்ல எல்லா அல்லக்கைகளும் அப்படியே.

சசிகலா ஆளக்கூடாதா... அவரும் தமிழச்சிதானே என்று பொங்குகிறார் இங்கு நண்பர் ஒருவர்... ஆளட்டுமே... யார் வேண்டாம் என்றது... ஒரு திறமைசாலியாய் இருந்து... உண்மையான தோழியாய் இருந்து... ஜெவின் மரண முடிச்சுக்களை அவிழ்த்து... மக்களைச் சந்தித்து... தன்னாலும் சிறப்பான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நல்ல மனுஷியாய் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.. ஆனால் பண ஆசையும் பதவி வெறியும் பிடித்த ஒரு பெண், ஜெயலலிதா என்ன செய்தாரோ அதையே செய்ய நினைக்கும் ஒரு பெண், எப்படி மக்கள் மனதில் இடம் பெற முடியும்... கூன் பாண்டியர்களை வைத்து அரியணை ஏறுவார் என்பதில் சந்தேகமே இல்லை... டீக்கடைக்காரர் பிரதமராக இருக்கும் நாட்டில்... வீடியோக்கடைக்காரி முதல்வர் ஆவதில் தப்பு ஏதும் இல்லையே...  ஆனாலும் எதுவுமே அறியாத... இந்த இடத்தில் இப்படிச் சொல்வது தவறுதான்... ஏனென்றால் கொள்ளைகளை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்... ஜெயலலிதாவையே அடக்கி ஆண்டவர் எனும் போது எதுவுமே அறியாத என்ற சொல் தவறுதான்... இருந்தாலும் ஒரு நாட்டை நிர்வகிக்கும் திறமை இல்லாத ஒரு மனுசியை கூன் பாண்டியர்கள் ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால் மக்கள்..?

அதிமுகவின் அஸ்தமனத்துக்கான தீர்மானம்தான் சசியை தேர்ந்தெடுத்தது... ஆனாலும் சசி முதல்வராக நம்மை ஆளும் நிலமை வரக்கூடாது என்றால் அவர் நிற்கக்கூடிய தொகுதி மக்கள் பணத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்... பணம் மக்களை விலைக்கு வாங்கிவிடும் என்ற நினைப்புத்தான் தமிழகத்தின் தலையெழுத்து இனி கேள்விக்குறியாகிவிடும் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. என்ன செய்ய... கொள்ளை அடித்தவன் அரசை மிரட்டுறான்... அவன் பேசுவதைப் பார்த்தால் மீண்டும் அவனுக்கு சாமரம் வீசிவார்களோ என்றுதான் தோன்றுகிறது. அரசின் மௌனமும் அதைத்தான் சொல்கிறது. நடப்பவை எல்லாம் மன்னார்குடிக்கு சாதகம்தான் என்ற நிலையில் வருந்திப் பயனில்லை என்றாலும் தமிழகம் இன்னுமொரு பீகார் ஆகாமல் இருந்தால் சரி...

ஆமா தையில முதல்வர் பதவி ஏற்பாருன்னு சொன்னானுங்க... இப்ப அடுத்த வாரம்ன்னு சொல்றானுங்க... பன்னீரு... நீங்க இன்னும் பழைய பன்னீராவே இருக்கீங்களே... மாறுவீர்கள்... வீறு கொண்டு எழுவீர்கள் என்று நாங்கள் நம்பியதும்... அதைச் செய்தார் ... இதைச் செய்தார்... என இணைய இதழ்கள் வரிந்து கட்டி எழுதியதும் கானல் நீராய் போய்விட்டதே...  என்ன செய்வது பணம் காக்க நீங்கள் சொன்ன 'மாண்புமிகு சின்ன அம்மா' உங்களுக்கு வாழ்வு.... தமிழனுக்கு இழுக்கு.

நக்கிப் பிழைப்பதற்கு நரகலைத் தின்பது மேல்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 28 டிசம்பர், 2016

நாய்க்கு வாழ்க்கைப்பட்டா... (பரிசு பெற்ற கதை)

சிற்றிதழ் உலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசை பகிர்ந்து கொண்ட கதை... போட்டியை சிறப்பாக நடத்திய திரு. கிருஷ் ராமதாஸ் அவர்களுக்கும் கதைகளை வாசித்து மதிப்பெண்கள் கொடுத்த நடுவர்களுக்கும் நன்றி.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த எழுத்தாளர்களுக்கும் , கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சரி அப்படியே பிரதிலிபி - ஒரே ஒரு ஊர்ல சிறுகதைப் போட்டியில் களத்தில் இருக்கும் 'நிழல் தேடும் உறவுகள்' கதையை வாசித்து உங்க மதிப்பெண்ணையும் மறக்காமல் கொடுங்கள்.. நன்றி.


****
நாய்க்கு வாழ்க்கைப்பட்டா...

"எங்க போகணும்?"

"கல்துறைக்கு..."

"கல்துறைக்கா...? எத்தனை மணிக்கு...?"
"
ஆறுமணிக்கு..."

"சரி... அங்க போயி..."

"நீ ஆட்டோவுல போ... ஆட்டோ ஏறும் போது நம்பரைக் குறிச்சி எங்கிட்ட சொல்லிடு... கல்குறிச்சி அஞ்சு லைட்டுக்கிட்ட போனியன்னா ஆட்டோ நம்பரை வச்சி அவங்க உன்னை பிக்கப் பண்ணிப்பாங்க..."

"அவங்கன்னா... எத்தனை பேர்...?"

"செய்யிற வேலையில எல்லாம் துருவித் துருவி கேட்பே... யாரா இருந்தா என்ன... போனமா... வந்தமான்னு இல்லாமா... சும்மா..."

"உனக்கு என்ன இம்புட்டு கோபம் வருது... அவங்கன்னா எத்தனை பேர்... போனமா வந்தமான்னு இருக்கணுமின்னாலும் நாளைக்கும் நான் தொழிலுக்குப் போகணும்... ரெண்டு பேருன்னா ஓகே... அதுக்கு மேலன்னா என்னால முடியாது... தேவிதான் அதுக்கு சரியா வருவா... நீ அவளைக் கூப்பிடு..."

"ஏய் இந்தா... அவளைக் கூப்பிடத் தெரியாமயா உன்னைக் கூப்பிடுறாக... அவங்க இப்படித்தான் வேணுமின்னு கேட்டாங்க... நீயும் ராதாவுந்தான் சரியா வருவீங்கன்னு தோணுச்சு... ராதா இப்போ மாரியாயி மில் ஓனர் கூட ஊட்டியில... அதான் உன்னைக் கூப்பிட்டேன்..."


Image result for lADY ART

"ஓ... இது இது இப்படி இருக்கணும்ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்களா... சரிதான்... ஆமா... மொத்தம் எத்தனை பேர்ன்னு சொல்லு..."

"நாலு பேர்..."

"நாலா... என்ன விளையாடுறியா...? என்னைய என்ன மிஷின்னு நினைச்சியா...?"

"ச்ச்சீய் கத்தாதே... சொளையா பன்னெண்டு ஆயிரம் கொடுத்திருக்கானுங்க... உனக்கு எவன் கொடுப்பான் இம்புட்டு... மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டாயிரம் கிடைக்கும்... இன்னைக்கு ஒரு ராத்திரிக்கு உனக்கு ஆறாயிரம்... சொளையா வருது வேணாங்கிறே... நாலு பேருதான்... சின்னப்பசங்கதான்... சரியா வரும்..."

"ஆறாயிரம் கிடைக்கிறது சரிதான்... ஒரு வாரத்துக்காசு ஒரு நாள்ல... ஆனா சின்னப் பசங்கன்னா... காலேசு பசங்களா...?"

"இங்க பாரு.. நீ அங்க போ... அவனுக கூப்பிடுற எடத்துக்குப் போ... என்ன விரும்புறானுகளோ அப்படி நடந்துக்க... விடியக்காலத்துல ஆட்டோவுக்கு போனது வர்றதுக்குன்னு காசு வாங்கிக்கிட்டு முடிஞ்சா காலைச் சாப்பாட்டுக்கும் வாங்கிக்கிட்டு வந்து சேரு... எல்லா விவரமும் தெரிஞ்சாத்தான் போவிங்களாக்கும்... ஏன் போன வாரம் எழுபது வயசுக் கெழவன் கூட மூணு நாள் இருந்துட்டு வரலை..."

"இங்க பாரு அது வேற... இது வேற... பசங்கன்னா காலேசு பசங்களா சொல்லு...."

"நீ என்ன நொய்யி நொய்யின்னுக்கிட்டு... ஸ்கூல் பசங்கடி... போதுமா..."

"ஸ்கூல் பசங்களா...? இவனுகதான் அளவு சொல்லிக் கேட்டானுங்களா...? எனக்கு அந்த ஆறாயிரம் வேண்டாம்... நான் போகலை... வேற யாராச்சும் பாரு..."

"ஏய்... எவனா இருந்த நமக்கென்ன... நமக்கு வேண்டியது பணம்... இப்ப வேற யாராச்சும் பாருன்னா... பார்ட்டிக்கிட்ட மொத்த பணமும் வாங்கிட்டேன்... இன்னும் மூணு மணி நேரத்துல நீ கல்துறையில இருக்கணும்... இன்னைக்கு நீ போகலைன்னா இனி உன்னைய எப்பவும் கூப்பிடமாட்டேன் தெரிஞ்சிக்க..."

"என்ன மிரட்டுறியா...? நான் உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஸ்கூல் பசங்கன்னா என்னைக் கூப்பிடாதேன்னு... என்னோட மகன மாதிரி இருப்பானுங்க... புரிஞ்சிக்க... அவனுக கூட எப்படி... எனக்கும் மனசு இருக்கு... உடம்பை விக்கிறவள்ன்னா மரத்துப் போனவன்னு நினைச்சி வச்சிருக்கே நீ... காலேசு பசங்க கூட இருக்குறதுக்கே வெந்து சாவேன் தெரியுமா... ஸ்கூல் பசங்க... சை... போனதடவை இப்படித்தான் மிரட்டி அனுப்பினே... ப்ளீஸ் சின்னப்பசங்களோட வாழ்க்கை நல்ல பாதையில் பயணிக்கட்டும் இதில் வேண்டாம்... ஒரு தடவை விழுந்துட்டா அப்புறம் எழவே மாட்டானுங்க..."

"எனக்கு நீ கிளாசெடுக்குறியா தே... எவனா இருந்தா உனக்கென்ன... நாளைக்கு காலையில உன்னோட அக்கவுண்ட்ல காசு ஏறிடும்... அவனுக ஆசைய உங்கிட்ட தீத்துக்கப் போறானுங்க... படுக்குற தொழில்ல இவங்கிட்ட படுக்கமாட்டேன் அவனுக்கிட்ட படுக்கமாட்டேன்னு பத்தினி வேம் போடுறே... நாய் வேம் போட்டா குரைச்சித்தான்டி ஆகணும்... கிளம்பிப் போய்க்கிட்டே இரு.."

"பத்தினி வேமா... அதான் பாழுங்கிணத்துல விழ வச்சிருச்சே வாழ்க்கை... இனி எங்கிட்டு பத்தினி வேம் போடுறது... பசங்க வேண்டான்னுதான் சொல்றேன்... எனக்கு எம்மவனை ஒத்த வயசுல்ல பசங்க கூட இருக்க விருப்பமில்லை... ஆறாயிரம் இல்லை ஆறு லெட்சம் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்... நாய் வேம் போட்டாலும் நானும் மனுசிதான்... நீ எனக்கு தொழில் கொடுக்கலைன்னா ஒண்ணும் குடி முழுகிடாது... எனக்குன்னு வர்ற கஸ்டமர் வரத்தான் செய்வாங்க... முதல்ல அந்த பயலுககிட்ட காசை திருப்பிக் கொடுத்துட்டு நாலு உதை கொடுத்துட்டு வா... காசு கிடைக்கிதுங்கிறதுக்காக நரகலைத் திங்காதே... உனக்கும் பசங்க இருக்கானுங்க..." பொரிந்து தள்ளிவிட்டு போனை வைத்தாள் அவள்.

                                                                                                                                                                 -'பரிவை' சே.குமார்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மனசின் பக்கம் : பாகிஸ்தான் வண்ணச் சிநேகிதி

Image result for abu dhabi transport
லுவலகத்திற்கு பேருந்தில் செல்வதில் சில சுவராஸ்யமான சம்பவங்களைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் நாம் மனபாரத்துடன் வரும்போது அதைக் குறைக்கும் விதமாக சிரிக்க வைக்கும் நிகழ்வுகளும் பல நேரங்களில் வேதனையைக் கூட்டும் நிகழ்வுகளும் நடந்தாலும் எல்லாம் சுவராஸ்யமானவைதான்... கடந்த வாரத்தில் ஒருநாள் ஐந்தாம் நம்பர் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன். பேருந்துக்குள் இருக்கைகள் நிறைந்து சிலர் நின்று கொண்டிருக்க, அடுத்த நிறுத்தத்தில் போனில் பேசியபடி ஒரு வயதான பாகிஸ்தானி ஏறினார். வேண்டுமென்றே மிகவும் சப்தமாக பேச ஆரம்பிக்க, அங்கிருந்த மலையாளிகள், ஆந்திராக்காரன் என சிலர் சப்தத்தைக் குறை இது பேருந்து என்று சொல்ல, உடனே நான் அப்படித்தான் பேசுவேன்... பேருந்துக்குள்ள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருன்னு கேட்டதும் இல்லாம போலீசுக்கு போன் பண்ணுறேன்... அவங்க வரட்டும் கேட்போம் எனச் சொல்லியபடி போனில் சில நம்பர்களை அழுத்தி, இன்னும் சப்தமாக 'என்னைப் பேசக்கூடாதுன்னு சொல்றானுங்க... எனக்கு பேச உரிமையில்லையா... போன் வந்தா என்ன செய்யிறது...' அப்படி இப்படின்னு கோபமில்லாமல் உரக்க பேசியபடி, அந்த நபர்களுடன் அவ்வப்போது முட்டியபடி ஒரு அரைமணி நேரம் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நிறுத்தத்தில் மலையாளி இருவர் இறங்க, 'ஏய் எங்க போறே... போலீசைக் கூப்பிட்டிருக்கேன்... வா...வா அடுத்த நிறுத்தத்தில் இறங்குவோம்' என்று சொல்லி விரட்ட, அவர்கள் சிரித்துக் கொண்டே சென்று விட, தலைவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் போது 'போலீசுக்கிட்ட சொல்லிட்டேன்... யாரும் இறங்கக்கூடாது... வந்து பேசுவாங்க... என்ன சரியா.. எனக்கு வேலை இருக்கு வரட்டா' அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே பொயிட்டார். அந்த அரைமணி நேரத்துக்கு மேல மனுசன் கோபமே இல்லாம விவாதம் பண்ணிக் கொண்டு, சும்மா போனை காதில் வைத்துக் கொண்டு 'இங்க பாரு... என்னை பேச வேண்டான்னு சொல்றாங்க', 'பொது கழிப்பிடத்துக்குப் போனாக்கூட என்னைய சிறுநீர் கழிக்காதேன்னு சொல்வாங்க போல' அப்படி இப்படின்னு ரொம்பச் ஜாலியா பேசி எல்லாரையும் சிரிக்க வச்சிக்கிட்டே வந்தார்.

Image result for புத்தகம்

ன்பின் அண்ணன் கனவுப்பிரியன் அவர்கள் இரண்டு புத்தகங்கள் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் எதுவும் புத்தகம் குறித்துச் சொல்லவில்லை... நமக்கு கோபம் எவ்வளவுக்கு எவ்வளவு வருதோ அதே மாதிரி ஒரு சில விசயங்களில் பொறுமையும் ரொம்ப அதிகம் என்பதை இங்கு சொல்லி விட வேண்டும்... அதுவும் வாசிப்பு என்றால் ரொம்பப் பொறுமை... இரண்டு புத்தகத்தையும் வாசித்தேன். ஒரு புத்தகம் பொள்ளாச்சியில இருந்து புளியம்பட்டி போயி மறுபடிக்கும் பொள்ள்ச்சிக்கு சூரிய வம்சத்துல டிக்கெட் கேக்குற கதைதான்... எங்கே பயணிக்குது... எப்படி நகருதுன்னு கடைசி வரை புரியலை... பின் நவீனத்துவமாம்... என்னமோ போடா மாதவான்னு வாசிச்சி முடிச்சிட்டு அடுத்ததை எடுத்தேன்... தலைப்பெல்லாம் சூப்பர்... ஒரு நாவல்ல மூணு நாலு கதை பயணிக்குது... எல்லாக் கதையிலும் போதை மட்டுமே ஒன்றாய்.... மற்றபடி எந்தக் கதையும் எதோடும் இறுதிவரை சேரலை...இது பின் நவீனத்துவமான்னு தெரியலை... ஆனா எப்படியும் எழுதலாம் என்பதற்கு உதாரணம் இது... ரெண்டு புத்தகத்துக்குமான தொடர்பு 'காமம்'. இவ்வளவு மோசமா இளம் எழுத்தாளர்கள் அதைக் கையாள வேண்டிய அவசியம் என்னன்னு தெரியலை... காமம் கலந்து எழுதலாம் தப்பில்லை... ஆனால் காமமே எழுத்தாய் பக்கமெல்லாம் விரவிக் கிடக்கு... அதிலும் ஒருத்தர் சில மதங்களை வைத்து எழுதியிருக்கிறார்.... ஆனாலும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரிஞ்சது... பிரபல எழுத்தாளர்களின் ஆதரவிருந்தால் இது போன்ற கதைகள் உலக எழுத்து என்று சிலாகிக்கப்படும். 


விஞர் கல்யாண்ஜி என்ற எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதை நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பதில் மிகுந்த சந்தோஷம். ஒரு மண் சார்ந்த எழுத்தை, அந்த வழக்கில் இருந்து வெளியில் வராது எழுதி, அதற்குள் நம்மை இழுக்கும் சூட்சமத்தை வைத்து எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரின் முகநூல் பக்கத்தில் பூக்களின் வாசத்தை அழகாய் பகிர்வார் தினம் தினமும்... சாகித்ய அகாதெமி வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.

ம்ம சிறுகதை ஒன்று 'பிரதிலிபி - ஒரே ஒரு ஊர்ல' சிறுகதைப் போட்டியில் இருக்கு. சில பல காரணங்களால் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாதென முடிவு செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மின்னஞ்சல் அனுப்பியதும் நம்மளையும் நம்பி(!?) கூப்பிடுறாங்களேன்னு எழுதி அனுப்பிடுவேன்... இப்பவும் அங்கு வரிசைப் படுத்தியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது முதலில் தெரியும் மூன்று வரிசையில் இருக்கும் கதைகள் மட்டுமே அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது. பின்னால் செல்லச் செல்ல கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதைதான்... ராஜா இதுவரைக்கும் சாப்பிடாத பழம் கொண்டு வரச் சொல்லி அன்னாசிப் பழம் கொண்டாந்தவன் வாயில் வைத்து திணித்து வாய் கிழிந்த போதும் சிரிக்க, ஏன்டான்னு கேட்டா எனக்கே இந்த நிலைன்னா பின்னால ஒருத்தன் பலாப்பழத்தோட நிக்கிறானே அவனை நினைச்சி சிரிச்சேன்னு சொல்வானே அந்தக் கதைதான் என்னோட கதைக்கு ஏதோ சில பார்வைன்னா கடைசி கடைசியா இருக்கவங்களை எல்லாம் யாருமே சீண்டலை.... வாசகர் பார்வையின் அடிப்படையில் தேர்வு என்பது சரியான முறை அல்ல... அதை 'நேசம் சுமந்த வானம்பாடி'-யில் உணர்ந்தேன். இருந்தாலும் நமக்கு ஒரு கதை எழுத சந்தர்ப்பம் அவ்வளவே... வாசிங்க... பிடிச்சிருந்தா மதிப்பெண்ணும் முடிந்தால் கருத்தும் இடுங்க.... அது பரிசுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.... தனிப்பட்ட முறையில் எனக்கு அது குறித்தான கருத்துக்கள் வந்தது அதுதான் சந்தோஷம்... அதற்கான இணைப்பு கீழே...


ன் மனைவி மிக அழகாக படம் வரைவார்... அவர் போடும் கோலங்கள் கண்ணைக் கவரும்... அதுவும் மார்கழி மாதம் என்றால் இரவு மூன்று மணிக்கே எழுந்து கோலம் போட்டுக் கலர் கொடுத்து வாசலை அலங்கரித்து விடுவார். ஊரில் நான் இருக்கும் போது இரவு மூணு மணிக்கு எழுந்திருக்கக் கூடாது எனக் கத்துவேன். இப்ப விஷால் கத்துவான்... அப்படியும் கோலம் போடுவதை விடுவதில்லை... அதில் ஒரு தனிப்பட்ட ஆர்வம்.... அவங்க சென்ற ஆண்டு போட்ட கோலங்களை எல்லாம் பதிவாக்கினேன்... அதை பலர் பதிவாக்கி புள்ளிக் கோலங்கள் என்னும் இணையதளத்திலும் போட்டுட்டாங்க... ஆஹா நாம சுட்ட வடையை எவனோ சுட்டுட்டானேன்னு எனக்கு ஒரு வலைப்பூ வேண்டும் என்று கேட்க, தயார் செய்து  கொடுக்க, தான் போட்ட கோலங்களைப் பதிகிறார். நீங்களும் பாருங்க... உங்க கருத்தைச் சொல்லுங்க...

மனசின் பக்கத்தில் நிறைய எழுத ஆசைதான்... இருப்பினும் பதிவின் நீளம் கருதி....  மற்றொரு பதிவில் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.