மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : விநாயகரும் ஆசிரியரும்...

விநாயகர் சதுர்த்தி...

கிராமத்து வாழ்க்கையில் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, கார்த்திகைக்கு இருக்கும் ஒரு பரபரப்பு... சந்தோஷம் விநாயகர் சதுர்த்தி போன்றவைகளுக்கு இருந்ததில்லை. விநாயகர் சதுர்த்தி என்பது நம்ம கலைஞரும் கலைஞர் டிவியும் சொல்வது போல் ஒரு விடுமுறை தினமே.... கண்மாயில் ஆட்டம் போடவும்... மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசவுமாக நிறைவடையும் ஒரு விடுமுறைநாள்... பிள்ளையார் என்பவரே எங்கள் ஊரில் இல்லாத காலம் அது.... இப்ப எங்க ஊர் அம்மன் கோவிலில் பிள்ளையார், முருகன் இருவருக்கும் சன்னதி வைத்தாச்சு. பிள்ளையார் என்பவர் வீட்டுப் பொங்கலின் போது சாணியில் அடிப்பாகம் தட்டையாக... ஒரு கூம்பு போல செய்து அதன் உச்சியில் அருகம்புல்லை வைத்து தேங்காய் உடைத்து வைத்து... வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து... கும்பிடுபவராகத்தான் இருந்தார். அவருக்கு அருகம்புல் புடுங்கப் போறதுக்கு வரும்பாருங்க கோபம்... அதுவும் தூர்தர்ஷனா இருந்த வரை கோபம் அதிகம் வருவதில்லை... சன் டிவிக்கள் வந்த பின்னர்தான் கோபம் அதிகம்... நிகழ்ச்சி போயிரும்ல்ல...

அதேபோல் பிள்ளையார் மற்றொரு இடத்தில் பிடிப்போம்.... நெல் அடித்து தூற்றும் போது அதுவரைக்கும் அடித்துக் கொண்டிருந்த காற்று சுத்தமாக நின்று போகும் அல்லது ஒரு திசையில் அல்லாது சுற்றிச் சுற்றி அடிக்கும்... 'காத்துக்காரன் செத்துப்பொயிட்டான் காத்து வா... காத்து வா'ன்னு கத்திப் பார்த்து விசில் அடித்துப் பார்த்தும் சில நேரங்கள் காற்று அம்மா மாதிரி வாய் திறக்காமல் இருந்துவிடும். உடனே அப்பா பிணையல் மாடுகள் போட்ட சாணியை எடுத்து பிள்ளையார் பிடித்து சனி மூலையில் வைக்கோல் கொஞ்சம் போட்டு அதன் மீது வைக்கச் சொல்வார்... அதன் முன்னே கொஞ்சம் நெல்லை வைத்து கடகாப் பொட்டியை வைத்து மூடி விடுவோம். பிள்ளையாருக்கு வேர்க்கணுமில்ல... என்னதான் வேர்த்தாலும் நம்ம பன்னீர் மாதிரி பிள்ளையார் பெட்டிக்குள்ள சுருண்டு உக்காந்துக்குவார்... காற்றோ அம்மா மாதிரி... பிள்ளையாரோ பன்னீர் மாதிரி... நாமதான் தலையில நெல்லைச் சுமந்துக்கிட்டும்... கையில சொளகை வைத்துக் கொண்டும்... கன்னத்தில் கையை வைத்துக் கொண்டும்... காத்துக் கொண்டிருப்போம்... அப்பவும் நாம மக்கள்தானே...

திருமணத்திற்குப் பின் பிள்ளையாராய்.... இருங்க எழுத்து மாறிடுச்சு... சொல்ல வந்ததை சொல்லிடுறேன்... பிள்ளையாரை வைத்து சாமி கும்பிட்டு குளத்தில் கரைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டாச்சு.... இப்ப வீட்டில் விநாயகர் சதுர்த்தி உண்டு. இந்த முறை இரண்டு பிள்ளையார் வாங்கணும் என்று நேற்றே மைனர் சொல்லிட்டார்... இந்த வீட்டுக்கு ஒண்ணு... கிராமத்திலிருக்கும் வீட்டுக்கு ஒண்ணு என்று... பிள்ளையாரைக் கரைப்பதில்தான் பிள்ளைக்கு எவ்வளவு சந்தோஷம்.

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


Image result for பிள்ளையார் பட்டி விநாயகர்


சிரியர் தினம்...

எத்தனை ஆசிரியர்கள்... எவ்வளவு அன்பு.... அந்த அன்பில் திளைத்ததால்தான் இன்று எழுத்து வசப்பட்டிருக்கிறது. ரொம்ப சின்னப்பயலா இருக்கான்.... இந்த வருசமும் ஒண்ணாவதுலயே போடுங்க என்ற அம்மாவின் பேச்சுக்கு 'அவனை எதுக்கு ஒண்ணாப்புல போடணும்... நல்லாப் படிக்கிறபிள்ளை... நாந்தான் ரெண்டாவதுக்கும் டீச்சர்... அவன் எங்கிட்டே இருக்கட்டும்' என்று சொல்லி அணைத்துக் கொண்ட மறைந்த ஆசிரியை... அம்மா... மரியம்மையில் தொடங்கி... கன்ணா என்றழைத்த பிச்சைக்குட்டி வாத்தியார், ராஜமாணிக்கம் வாத்தியார், பிச்சம்மை ஆசிரியை, சுப்புலெட்சுமி ஆசிரியை, பாப்பாத்தி ஆசிரியை மறைந்த சுந்தரவாத்தியார், கண்ணன் தம்பிதானேடா என்று உரிமையோடு அழைக்கும் தமிழாசிரியை விஜி, தலைமையாசிரியர் முருகன் சார் உள்ளிட்ட இன்னும் சில இதயங்களால் நிரம்பிய முருகானந்தாவில் எட்டாவது வரை படித்து முடித்த போதுதான் வெளியுலகம் கொஞ்சமேனும் தெரிய ஆரம்பித்தது.

தே பிரித்தோ வந்த போது அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா உள்ளிட்ட நிறைய அன்புள்ளங்களால் தழைத்து.... சேவுகன் அண்ணாமலைக் கல்லூரிக்குள் புகுந்து பேராசியர்கள் கே.வி.எஸ், அமல சேவியர், வெங்கடாசலம், சீனிவாசன், சேவியர், திருவடி, திண்ணப்பன், ஆறுமுக ஐயா, தேனப்பன் ஐயா, எம்.எஸ். சார், சந்திரமோகன் சார், விஜயன் சார் என எல்லாத் துறை ஆசிரியர்களுடனும் இணக்கமாகி, எங்கள் பேராசான்... ஆசிரியராய்... தந்தையாய்... என்னுள்ளே இருக்கும் எங்க பழனி இராகுலதாசன் ஐயாவின் அன்பில் நனைந்து எழுத்தாளனுக்கான பிள்ளையார் சுழி போட்டது... பத்திரிக்கைகளில் எழுதியது.... வலைப்பூ வந்தபோது இங்கும் பல ஆசிரியர்களின் அன்பில் நனைவது... நானும் கணிப்பொறி ஆசிரியனாய்.... படித்த கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியனாய் பணியாற்றியவன்தான்...

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

(பேராசான்.... மு.பழனி இராகுலதாசன்)


கப்பலோட்டிய தமிழனையும் அன்னை தெரசாவையும் நினைவில் நிறுத்துவோம்..

-'பரிவை' சே.குமார்.

சனி, 3 செப்டம்பர், 2016

திண்ணைப் பேச்சு காணாமல் போச்சு

Image result for திண்ணை

'மோடு ஒழுகுதுன்னே...
மழக்கி முன்னால பிரிச்சி
கட்ட வேண்டியதுதானே...'

'மூத்தவன் போனு கீனு
பண்ணுனானா..?
நல்லாயிருக்கானாமா...?'

'இருளாயி மவன் எவளோ
ஒருத்திய இழுத்துக்கிட்டு
ஓடிட்டானாமே தெரியுமா...'

'கொக்காளி... மாதவமுட்டு
மாடு ரெண்டு பர்லாங்கு
விட்டுட்டு வந்துச்சுய்யா...
என்ன வேகம்...?'

'ராசாத்தி மவ அப்பிடி
இப்பிடி திரியிறாளாமே...
ஒரு மாதிரி பேச்சு
அடிபட்டுகிட்டு இருக்கு...'

'சரச பொண்ணு பாத்துட்டுப்
போனாவளே... புடிச்சிருக்காமா..?
சீதனம் ரொம்ப எதிர்பாக்குறாகளா...?'

'என்ன எளவோ தெரியல..
மாம்பிஞ்சாக் கொட்டுது...'

'ரெண்டு நாளா மாடு கழியிதப்பா..
மருந்து கொடுத்தும் நிக்கல...
ஊசிதான் போடணுமோ...?'

'சாயக்குடியில வள்ளிதிருமணம்
வச்சிருந்தாங்க...
கரூர் இந்திராவும்
நாகலிங்கமும் தர்க்கம்
பண்ணியிருக்காவ பாரு...
அந்தப் பொம்பளதாய்யா வள்ளிக்கி...'

'சைக்கிளு வேற பஞ்சராக் கெடக்கு..
பஞ்சரு பாக்கலாம்ன்னு பாத்தா...
சொலுசன் இல்ல...
மாப்ளக்கிட்ட இருக்குமா...'

'மாரியத்தா கோவிலு
வெளக்கு எரியலப்பு...
பீசு போச்சு போல...
டவுனுக்குப் போனா
ஒண்ணு வாங்கியாந்து
போடுங்க காசு நாந்தாறேன்'

'கரகாட்டக்காரி துர்கா
வந்தா ஒரு கூட்டம் கூடுதய்யா...'

'வெவசாய கடன
தள்ளுபடி செய்வானா..?'

'தீவாளிக்கி ரெண்டு
வேட்டி வாங்கணுமப்பா...
நமுத்துப் போச்சு...'

எதார்த்தங்களோடும்
எள்ளல்களோடும்
நிறைந்து கிடந்த
கோவில் திண்ணை...

இப்போ பேசவும் ஆளில்லாமல்
கேட்கவும் ஆளில்லாமல்
வெறுமை சுமந்து
பொலிவிழந்து கிடக்கு...

மனிதர்கள் இல்லாத
அம்மன் கோவில்
ஊமையாகிப் போச்சு...
ஆமா இப்ப ஊருகூட
ஊனமாகிப் போச்சு...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

நல்ல எழுத்தை விதைப்போம்...நண்பனுக்குப் பதில்

ண்பன் தமிழ்க்காதலனின் கடிதத்துக்கு முகநூலில் நான் கொடுத்த பதில் கடிதம் இங்கே...

ன்பின் நண்பா...  கவிஞர் தமிழ்க்காதலா... கவிதைகளை நேசித்து எழுதும் பண்பாளனிடமிருந்து எனக்கென ஒரு கடிதம்... அது எனக்கான கடிதம் மட்டுமல்ல... நானும் எழுத்தாளன் என்று என்னைப் போல் திரியும் எல்லாருக்குமான கடிதம்... கடிதத்தின் ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து வாசித்து உள்வாங்கிக் கொண்டேன்.
வரிக்கு வரி உண்மையை எடுத்துச் சொன்ன கடிதத்தை  நீ ஆரம்பித்திருப்பது என்னவோ எனக்கான கடிதமாகத்தான்... அதிலிருக்கும் கருத்துக்களை பொதுவில்தான் வைத்திருந்தாய்... எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு இணையத்தில் சுழலும் நாம் அனைவருமே ஏற்றுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்... கதையோ கவிதையோ அல்லது கட்டுரையோ... அந்தச் சூழல்... அப்போதைய பரபரப்பு...  முதலியவையே அதில் முதன்மையாக நிற்கின்றன என்பதை நாம் அறியலாம். செய்திகளின் பரபரப்பே நம்மை எழுதத் தூண்டுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒரிசா நிகழ்வை கட்டுரையாகவோ, கவிதையாகவோ ஆக்கியோர் எத்தனை பேர் என்பதை நாம் அறிவோம்... இந்த நிகழ்வை மட்டுமல்ல... ஒவ்வொரு நிகழ்வின் போதும் நாம் வார்த்தைகளை வசமாக்கி அள்ளித் தெளிக்கிறோம். இவை காலங்கடந்து நிற்கப்போவதில்லை என்றாலும் அன்றைய தினத்தில் இவைதானே முன்னணியில் நிற்கின்றன.
'வரலாறுகளை கதைகளில் கொண்டு வா' என நம் எழுத்து சம்பந்தமான விவாதங்களில் எல்லாம் கடந்த சில வருடங்களாக நீயும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய்...  எதார்த்தங்களை எழுத்தில் கொண்டு வர முடிந்த என்னால் ஏனோ வரலாறுகளை எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை... சில சமயங்களில் அதை முயற்சித்துப் பார்த்து தோற்றும் போயிருக்கிறேன். ஒருவேளை வரலாறுகளை கரைத்துக் குடிக்க வேண்டுமோ..? அப்படி என்றால் என்னால் முடியும் என்ற  நம்பிக்கையில்லை... வரலாறுகளின் வாசிப்பு எனக்கு வேப்பெண்ணெய்யாக கசக்கிறது என்றாலும் சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் வாசித்தேன்... அது ஒரு அருமையான அனுபவம்... அந்த வாசிப்பின் ஈர்ப்பில் உடையார் ஆரம்பித்தேன்... ஏனோ ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறேன்.
படிக்கும் காலத்தில் வாசிப்பு என்பது மனம் நிறைந்த சுவாசிப்பாக இருந்தது... வாசிப்பது ஏகாந்த அனுபவத்தைக் கொடுத்தது. லெனின், மார்க்ஸ் என ஐயாவின் வீட்டில் இருந்து எடுத்து வாசித்த புத்தகங்கள் எத்தனை... எத்தனை... எடுப்பதும் வாசிப்பதும் அங்கு எனக்கு கிடைத்த வரம்... எதையும் எடுத்து வாசிக்கலாம்... இன்று வரை தடையில்லை எனினும் வாசிப்பு கல்லூரிப் படிப்போடு காணாமல் போனதுதான் ஆச்சர்யம். அன்று அது தவிர வேறு வேலை இல்லை... அதனால் வாசிப்பின் மீது ஒரு காதல் இருந்தது ஆனால் இன்றோ வேலைப்பளுவும் குடும்ப பிரச்சினைகளும் வாசிப்பை எட்டிக்காயாக ஆக்கிவிட்டிருக்கிறது. வாசிப்பின் மீதான காதல் வசமிழந்து விட்டது. அப்படியிருந்தும் இப்போதும் சில நல்ல கதைகளை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து உண்டு. என்னதான் இருந்தாலும் புத்தக வாசனையுடன் வாசிப்பதில் இருக்கும் சுகமும் மணமும் செல்போனில் தள்ளித்தள்ளி வாசிப்பதில் இல்லைதானே...
உனக்கொன்று தெரியுமா..? நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து எழுதவில்லை... கல்லூரியில் படிக்கும் போது எழுத்தில் ஆர்வம் உண்டாகி கதைகள், கவிதைகள் எழுத ஆரம்பித்து எங்கள் ஐயாவின் ஆசியுடன் தாமரையில் முதல் கவிதை வெளிவந்து பொன்னீலன் ஐயாவின் பாராட்டுக் கடிதமும், கலை இலக்கியப் பெருமன்ற விழாவிற்கு வந்த போது நேரடி வாழ்த்தும் என்னைத் தொடந்து எழுதத் தூண்டியது என்பதே உண்மை. அதன்பின் ஒருசில பத்திரிக்கைகளில் வரவும் என்னவோ சாதித்து விட்டதைப் போல நிறைய கிறுக்கித்தள்ள ஆரம்பித்து வீட்டில் திட்டு வாங்கியது தனிக்கதை.
கல்லூரி முடித்த பின்னர் எழுதுவதை விட்டு விட்டு வாழ்க்கைத் தேடலுக்கான ஓட்டம்... அந்த ஓட்டத்தில் எழுத்து எங்கே போனதென்றே தெரியவில்லை... திருமணமாகி, மகள் பிறந்த பின்னர்தான் மீண்டும் விட்ட எழுத்தை விரட்டிப் பிடித்தேன். அதுவும் சென்னையில் எழுத்துத்துறையில் பணி கிடைத்த காரணத்தால்தான் இல்லையேல் எழுத்துப் போனது போனதுதான்... வாழ்க்கை நகர்த்தலில் வரவுக்கும் செலவுக்கும் சண்டை வர, ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வரவு-செலவு சண்டையை சீர் செய்யும் என சிந்தையில் அள்ளித் தெளித்த உறவுகளால் மனமேயின்றி விமானம் ஏறினேன். குடும்பத்தை விட்டு வந்த போது எழுத்தை இறக்கி வைத்து விட்டுத்தான் வந்தேன். வெளிநாடு சில சந்தோஷங்களையும் பல இன்னல்களையுமே கொடுத்தது... கொடுத்துக் கொண்டிருக்கிறது... உள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில் உடலளவிலும் பாதிப்புக்களை கொடுத்த வாழ்க்கை இது என்பதை நீ அறிவாய்தானே...
பல நாள் வலிகளைச் சுமந்த மனசுக்கு எழுத்து இதமாக இருக்குமென பத்திரிக்கை நண்பனின் வழி காட்டலின் பேரில் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாம் முறையாக விட்டொழித்த எழுத்தை மீண்டும் பிடித்தேன்... நிறைய எழுத நேரமும் கிடைத்தது... களமும் கிடைத்தது. பிறந்த மண்ணின் மனிதர்களை கதை மாந்தர்களாக்கி வாழ்க்கைக் கதைகளைப் பேசினேன்... பலருக்கும் பிடிக்கும் எழுத்தாய் ஆகிப்போனதில் மீண்டும் தாமரைக் கவிதையால் குஷியானது போல் மனசு சந்தோஷமாகி எழுத்தை சுவாசிக்க ஆரம்பித்து இப்போதும் அதன் பின்னே தொடந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லைதான்.... காரணம் என்னவென்றால் இன்று எதார்த்தத்தை கதைகளாக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட அன்று எப்படி எழுதினாலும் பத்திரிக்கையில் வருதே என்ற நினைப்பு கொடுத்த சந்தோஷம்தான் அதிகம். நம்ம ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு பத்திரிக்கையில் எழுத வாய்ப்புத் தேடி வருகிறது ஆனால் இங்கிருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதுவதென்பது கடினமான காரியம்தான் என்பதால் இப்போது அது குறித்து யோசிப்பதில்லை. உனக்கொன்று தெரியுமா...? எனது இன்றைய கதைகளோடு அன்றைய கதைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கே சிரிப்பு வருவதுண்டு... எத்தனை அபத்தமாய் எழுதியிருக்கிறேன் தெரியுமா...? இருப்பினும் அவற்றில் நல்ல கதைகளும் சில உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.  இன்றைய வாழ்வியல் எதார்த்தங்கள் அன்றைய கதைகளில் இல்லை... காதலும் சோகமுமே சொக்கி நின்றன என்பதை உணர முடிகிறது. அப்போது அப்படியான கதைகளில்தான் நாட்டம் இருந்திருக்கிறது. பத்திரிக்கைகளும் அப்படிக் கதைகளுக்கே கதவு திறந்தன என்பதுதானே உண்மை.
நீ சொல்வது எவ்வளவு உண்மை பார்... எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து செல்கிறோம்...  ஒரு செடியை அழித்து விட்டு நகர்கிறோம் என்றால் ஒரு மூலிகையை இழந்து விட்டோம் என்று அர்த்தம் என்று சொல்லியிருக்கிறாய்... ஆம் அது எத்தனை உண்மை... நமக்குத் தெரிந்து எவ்வளவு விஷயங்களை இழந்தோம்... விவசாயத்தைக் கூட இழந்து தவிக்கிறது எங்கள் பூமி. ஆடு, மாடு, கோழி, நாய் என கட்டிப் புரண்டு வாழ்ந்த வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோமே... அவ்வளவு ஏன்... இன்று உறவுகளைக் கூட இழந்துவிட்டுத்தான் நிற்கிறோம் என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கமுடியும் சொல்லு.
நம் தலைமுறையேனும் சிலவற்றையாவது அனுபவித்து மகிழ்ந்தோம் என்பதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதுதானே... கோழிக்குண்டு... கில்லி... மரக்குரங்கு... கண்டுபிடிச்சு... கோகோ... கபடி.. சில்லுநொண்டி... பம்பரம்... ஓடிப்பிடித்து என இன்னும் இன்னுமாய் நிறையக் கூடி விளையாண்டோம். அப்போது நம் சக உறவுகளுடனும் தோழர்களுடனும் நமக்கு ஒட்டுதல் இருந்தது... நேசம் இருந்தது... அதில்  ஒரு உயிர்ப்பு இருந்தது ஆனால் இன்றைய தலைமுறை... நம் வாரிசுகள்... எல்லாவற்றையும் தொலைத்து விட்டுத்தானே நிற்கிறார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பற்றிக்கூட அறியாமல்தானே வளர்கிறார்கள். இன்றைய தலைமுறை இணையத்தின் இறுக்கத்துக்குள் சிக்கி எல்லாம் இழந்து விட்டார்கள் பார்த்தாயா...அன்று நாம் மரப்பாச்சிகளை வைத்து விளையாண்டோம்... இன்றோ நம் அடுத்த தலைமுறையை மரப்பாச்சி ஆக்கி வைத்திருக்கிறோம். வேறென்ன சொல்ல...? இழந்தவற்றைப் பற்றித்தான் என் தளத்தில் கிராமத்து நினைவுகளாய் வார்த்து வைத்திருந்தேன் என்பது உனக்குத் தெரியும்.
நிறைய விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது... நிறைவாய் எழுத வேண்டும்... நிச்சயமாய் எழுதுவேன்... ஆனால் அதற்கும் கால அவகாசம் வேண்டுமல்லவா... கை சூப்பும் குழந்தையை திடீரென கையைப் பிடித்து நிப்பாட்டினால் அது நிறுத்திவிடுமா என்ன... மெல்ல மெல்ல அதன் கை சூப்பும் எண்ணத்தைத் தகர்த்த பின்தானே முழு வெற்றி கிடைக்கும். அதேபோல் பால் குடிக்கும் குழந்தை எப்பவும் தன் மார்பில் வாயை வைத்து இழுத்துக் கொண்டே இருக்கிறது என்பதற்காக அதிரடி முடிவையா அம்மா எடுக்கிறாள்..? இல்லையே... தன் மார்க்காம்பில் கசப்பான ஒன்றைத் தடவி வைத்து... அதில் வாய் வைத்தால் கசக்கும் என்ற எண்ணத்தை அந்தக் குழந்தைக்குள் விதைத்து மெல்ல மெல்ல அந்தக் குழந்தையை தன் மார்பின் மீது கவனம் செலுத்துவதை தவிர்க்க வைக்கிறாள்... அதேபோல்தான் வரலாறுகளையும் இழந்தவைகளையும் மெல்ல மெல்ல நாம் எழுதும் நிதர்சனங்களோடு இணைத்து எழுதப் பழகி... வரலாறுகளையும் நம் வாழ்க்கையையும் நிறைவாய் எழுதுவோம்... நம் எழுத்து இப்போது போல் பயணிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்... அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் மெருகேற்றி காலங்கள் கடந்து நிலைத்து நிற்கும் என்பது உண்மை நண்பா.
உன் எழுத்தை நாலைந்து முறை வாசித்தேன்... வாசித்தது முடித்ததும்  நாம் எழுதும் எதார்த்தங்கள் மட்டுமே நம்மை எழுத்தாளனாய் முன்னிறுத்துமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்... கண்டிப்பாக நிறுத்தாது என்பதை உணர்ந்து சிரித்துக் கொண்டேன்.  இந்த எழுத்து இன்னும் எத்தனை காலத்துக்கு தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறாய்...? ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் இது மீண்டும் தன்னை நிறுத்திக்கொள்ளும் என்பதே உண்மை.
நீ நிறைய விசயங்களைப் பேசியிருந்தாய்... அதுவும் நிறைவாய்... நீ அதிகம் வாசிப்பவன்... எழுத்தைச் சுவாசிப்பவன்... தமிழுக்கு உன் வாழ்வை அர்ப்பணித்து அதன் பின்னே நடப்பவன். உன் அளவுக்கு என்னால் பேசவோ எழுதவோ முடியாது... என் பாதை வேறு... அதிக வாசிப்பனுபவமெல்லாம் இல்லாதவன். வாழ்ந்த மண்ணில் பார்த்தவைகளையும் அனுபவித்தவைகளையும் எழுதும் ஒரு சாதாரணமானவன். உன் அளவுக்கு எழுத எழுத்துத் திறமை மட்டுமின்றி எடுத்துக்காட்டுக்களைச் சொல்லும் புத்தியும் வேண்டுமல்லவா...? நீ எழுதியதில் பத்து சதவிகிதம் கூட என் எழுத்தில் இருக்காதுதான்... இருந்து உன் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுத வேண்டிய நாகரீகத்தின் பேரில்தான் இதைக் கிறுக்கியிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொள்வாய் என்று தெரியும்.
கல்கியும் சாண்டில்யனும் பாலகுமாரனும் சுஜாதாவும் கி.ராவும் ஜெயகாந்தனும் தாங்கள் எழுதிய எதார்த்தாக் கதைகளால் பேசப்படவில்லையே... அதையும் தாண்டி காலத்தால் அழியாத எழுத்துக்களைக் கொடுத்ததாலேயே எப்பவும் பேசப்படுபவர்களாக இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் எதார்த்தங்களைப் பேசி இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறார்கள்.. அவர்களின் எதார்த்தங்கள் எளிமையையும் வாழ்க்கையையும் கண் முன்னே நிறுத்தின என்றாலும் ஒரு சிலரைப் போல புகழ் என்னும் இடத்தை நோக்கி நகராமல் குடத்தில் இட்ட விளக்காய்த்தான் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்று இணையம் விரிக்கும் கடையில் புற்றீசலாய் எழுத்தாளர்கள் வந்து கொண்டிருப்பது சந்தோஷமே என்றாலும் நீ சொல்வது போல் எழுதும் எழுத்தாளர்களை அதில் தேடித்தானே கண்டு பிடிக்க முடியும். உன் எண்ணப்படி எல்லாரும் எழுதுவார்கள் என்று சொல்ல முடியாது... ஆனாலும் சிலர் எழுதுவார்கள் அந்தச் சிலரில் நாமும் இருப்போம் நண்பா... அப்படியான எழுத்தால் நாம் சாதிக்கும் காலம் விரைவில் வரும் நண்பா... நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல அல்லது விட்டுச் செல்ல என்று சிந்திக்காமல் நமக்கு சரஸ்வதி கொடுத்த எழுத்துத் திறமையால் நல்ல எழுத்தை விதைத்துச் செல்வோம்...
 நன்றி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

எழுத்தை ஆயுதமாக்கு... நண்பனின் கடிதம்

ன் அன்புத் தோழன் கவிஞர்... பேச்சாளர்... முற்போக்கு சிந்தனைவாதி... தமிழ்க்காதலன் முகநூலில் எழுதிய கடிதம்... இது எனக்கானது மட்டுமல்ல... எழுதும் நம் அனைவருக்குமான கடிதம்... வாசியுங்கள்... எழுத்தின் வலிமையை உணர்வீர்கள்...

தயம்நிறை அன்பில் நெகிழும் அன்புத் தோழனே, இனிய பரிவை.சே.குமார், அன்பானவற்றை பண்பான எழுத்தில் தரும் படைப்பாளியே, நல்ல எழுத்தை இரசமாக்கித்தரும் வலிமை கொண்டவன் தான் சிறந்த படைப்பாளியாகிறான். எழுதுவது கலை, எழுத்து சாகா வரம் பெற்ற சாதனம். உலகம் இன்று அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உயிர்களை ஆளும் வலிமையும் எழுத்துக்கு உண்டு. எண்ணங்களை ஓவியமாக்கும் அழகு எழுத்து. உயிரின் உயில் வடிவம் எழுத்து. நன்மைக்கும், தீமைக்கும் பொதுவானவற்றில் எழுத்தும் ஒன்று.
அத்தனை வலிமையான எழுத்தை இன்று நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்? எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எழுத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பேச்சுக்கும் எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பேசுகிற எல்லாவற்றையும் நாம் எழுதுவதில்லை. எழுதுகிற அல்லது இதுவரை எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நாம் பேசுகிறோமா என்றால் அதுவும் இல்லை. ஆனால் எதை எழுத வேண்டும் என்பதில், என்ன எழுத வேண்டும் என்பதில், ஏன் எழுத வேண்டும் என்பதில் ஒரு தெளிவு அவசியமாகிறது. அதனால்தான் எழுத தொடங்கும் முன்பு எல்லோரிடமும் ஒரு சின்ன தயக்கமும், தடுமாற்றமும் வருகிறது.
அறிவை ஆயுதமாக்கும் குணத்தைப் போலவே, மனிதனுக்கு எழுத்தையும் ஆயுதமாக்க தெரிந்திருக்கிறது. ஆயுதங்கள் எப்போதும் ஏதோ ஒன்றை காப்பாற்ற அல்லது காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் ஒன்றை தடுப்பது அல்லது அழிப்பது என்பதற்கான படைப்புகள். எனவே, எழுத்தும் ஓர் ஆயுதமாகிறது. இதை நீ நன்கு கவனிக்க வேண்டும். பயன்படுத்துபவன் யார் என்பதை பொறுத்து, கருவிகளின் விளைவுகள் அமைகிறது. அதனால்தான் எழுத்தில் பல விடயங்களை மறைமுகமாகவும், பல சமயம் எழுதியதை மறைத்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
அடுத்த தலைமுறைக்கு தெரியவும் வேண்டும், அதே சமயம் தகுதியற்ற, தீமைகளை விளைவிக்க கூடியவர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமும் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இன்றைய சமூகம் இந்த நிலைகளில் இருந்து நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. யாரும், எதையும் எழுதுவதற்கான களமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. எண்ணிப்பார். பனை ஓலைகள், சில தாவர இலைகள், கரும்பாறைகள் இவைகள்தான் எழுதும் பொருட்கள் என்றிருந்தால் நாமெல்லாம் இப்போது எப்படி எழுதி இருப்போம்..? நம்மில் எத்தனைப் பேர் எழுத்தாளர்களாக பரிணமித்திருப்பார்கள்..? யோசித்துப்பார். நீ எழுதும் நிலையை எட்டியது எப்படி..? காலம் நம்மை எப்படிப்பட்ட இடத்தில் நிறுத்தி இருக்கிறது. இத்தனை வசதிகளும், வாய்ப்பும் இன்றைக்கு மனித அனுபவத்தாலும், முயற்சியாலும் கிடைத்திருக்கிறது. அதை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம்..? அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழுகிற ஒவ்வொரு தலைமுறையும், நமக்கு முன் வாழ்ந்து போன முன்னோர்களுக்கு கடன்பட்டவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
நமக்கும் நமக்குப்பின் வரும் தலைமுறைக்கும் நாம் எதை விட்டுச்செல்ல வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அதை எழுத்தாக்கித்தர வேண்டும். தலைமுறைகளை கடந்து நிற்கும்படியான எழுத்தைப் படைத்திருக்கிறோமா என்கிற கேள்வி எழ வேண்டும். படைக்கும்போதே அந்த எழுத்தின் காலம் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது சரி. ஆனால் நிற்கும் எழுத்துக்களை கவனி. எத்தன்மையுடையவை சிறந்தது என்பது எளிதில் விளங்கும். எந்த வடிவத்தில் கொடுக்கிறோம் என்பதல்ல விடயம், என்ன கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். உனக்கே தெரியும். பல நல்ல பழக்கமும், ஒழுக்கமும் கூட சொல்லிகொடுக்கப்படாததாலும், சொன்ன விதம் அடுத்த தலைமுறைகளுக்கு புரியாததாலும், இன்றைக்கு நாம் இழந்து நிற்கும் உன்னதங்கள் ஏராளம். நமக்கு அதுபற்றியே எதுவும் தெரியாது என்பது மிகப்பெரிய கொடுமை. நமது அறியாமையும், மூடநம்பிக்கையும் எல்லாவற்றுக்கும் காரணமாகிறது.
மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்.
எத்தனை ஆயிரம் விலங்குகள், தாவரங்கள் அழிந்துபோய் விட்டன. அவற்றை பற்றிய அறிவு நமக்கு இன்று இல்லை. ஒரு சிறு இலையை கூட உருவாக்க முடியாத நம்மால், எத்தனை உயிரினங்கள் தொடர்ந்து அழிந்துக்கொண்டிருக்கிறது இந்த பூமியில். ஒரு செடி அழிந்தால், மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையை நாம் அழிக்கிறோம் என்று பொருள். இப்படி அவை அழிய அழிய, மனிதனுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கைப் பெருகும் என்பது எத்தனை பேருக்கு சிந்திக்க தோன்றும்.
ஒரு விலங்கினம் அழிய, அதன் தொடர்ச்சியாய் எத்தனை உயிரினம் தானே அழியும் என்கிற விடயத்தை நம்மவர்களுக்கு புரியும்படி யார் சொல்வது…? உயிரியல் அடிப்படை அறிவை படித்தவர்கள் பின்பற்றுவதில்லை. அதன் விளைவை இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். மனிதனின் தவறான செயல்பாடுகளால், ஏற்படும் பின்விளைவுகளை தொடர்ந்து கவனித்து, எது சரி, எது தவறு என்கிற உண்மையை சொல்லுவது யார் என்ற கேள்வி முன் நிற்கிறது.
பொழுதுபோக்குக்கு எழுத்தில் இடம் கொடுக்கலாம். தொடர்ந்து அதையே செய்வதற்கு இந்த பிறவி எதற்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது. எழுத்தாற்றல் உடையவர்கள் இந்த பூமிக்கும், அதன் மேல் உயிர்வாழும் உயிரினங்களுக்கும் செய்ய வேண்டியது ஏராளம் உண்டு. நீ அதை நோக்கித் திரும்புவாய் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
உண்மையைத் தேடும் தமிழ்க்காதலன். 

கடிதத்தை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதித்த நட்புக்கு நன்றி.

நண்பனின் வலைப்பூ : இதயச்சாரல்..!

முகநூல் முகவரி : தமிழ்க்காதலன்
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சினிமா : 'மக்கா கலக்கலப்பா' தர்மதுரை

ருத்துவம் படித்து கிராமத்து ஜனங்களுக்குத்தான் வைத்தியம் பார்ப்பேன் என்ற கொள்கை உடைய தர்மதுரை (விஜய் சேதுபதி), அரசு மருத்துவமனையில் பணி புரியும் போது தமிழ்ச்செல்வியை (ஐஸ்வர்யா) சந்தித்து, பிறருக்கும் உதவி செய்யும் குணமும் வெள்ளந்தியான பேச்சும் கவர, அவள் மீது காதலாகி, வீட்டில் சொல்லி பெண் பார்த்து நிச்சயம் பண்ணிய பிறகு, அவள் ஏழைக்குடும்பம் என்பதாலேயே வட்டிக்கு கொடுத்து... ஏலச்சீட்டு நடத்தி ஊருக்குள் பொழப்பு நடத்தும் விஜய் சேதுபதியின் சகோதரர்கள் ஐம்பது பவுனும் அஞ்சு லெட்சமும் வரதட்சணையாக கேட்டு மிரட்ட, அது ஐஸ்வர்யாவின் தற்கொலையில் முடிகிறது. அவர்களைப் பலி வாங்குவேன்... விஷத்தைக் குடித்து சாகும் வரைக்கும் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு மருத்துவத் தொழிலை மறந்து குடிகாரனாகி... உடன்பிறப்புக்களுக்கு எதிராகி... அடிவாங்கி... அறைக்குள் அடைத்து வைக்கப்படும் வி.சே அங்கிருந்து தப்பும் போது காட்சிகள் விரிகின்றன. 

Image result for தர்மதுரை

படம் ஆரம்பிப்பது குடிகார வி.சேயின் அடாவடி காட்சிகளில்தான்... அதைத் தொடர்ந்து சீயானின் இறப்பில் ஒரு குத்துப் பாட்டு... மக்க கலங்குதப்பா... குத்துன்னா குத்து செம குத்து... வி.சேக்கு சொல்லவா வேண்டும்... சிக்ஸர் அடித்திருக்கிறார்.

வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் வி.சே... தவறுதலாக ஏலச்சீட்டு பணம் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, ஊரில் பூகம்பம் வெடிக்கிறது. அதன் பின் அவரின் சகோதரர்கள் போலீஸில் இருந்து சஸ்பெண்ட் ஆன சித்தப்பாவுடன் சேர்ந்து கஞ்சாக் கருப்பையும் பிடித்து வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். ஆனால் கல்லூரி வரை தேடிச் செல்லும் அதன்பின்  தேடுதலை விட்டுவிட்டு போலீசுக்கு போகிறார்கள்.

கல்லூரி வாழ்க்கை, கிராமத்துக் காதல், தமன்னாவுடனான வாழ்க்கை என்று மூன்று கட்டமாக நகரும் கதையின் ஆரம்பம் இரண்டாவது கட்டத்தின் இறுதி என்றாலும் ஊரை விட்டு ஓடும் வி.சே,  பேருந்தில் பயணிக்கும் போது சொல்வதாய் விரிகிறது மதுரை மருத்துவக் கல்லூரி வாழ்க்கை... அவர் செல்லமாக அழைக்கும் பக்கிகளாக தமன்னா, சிருஷ்டி டாங்கே... மாணவர்கள் விரும்பும் பேராசிரியர் காமராஜாக ராஜேஸ்... எதிர்த்துக் கொண்டு நிற்கும் சக மாணவன் அன்வர்,.. அவர்களுக்குள் அடிதடி.. வி.சேயை விரும்பும் சிருஷ்டி... தன் காதலை மறைத்து வைத்திருக்கும் தமன்னா... என கதை விரிகிறது... இது இடைவேளை நீள்கிறது.

கல்லூரிக்கு வந்து அங்கு தோழியரின் முகவரி வாங்கி அவர்களைத் தேடிச் செல்ல, சிருஷ்டியின் வீட்டில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு அங்கிருந்து தமன்னாவைத் தேடிச் செல்ல, குடிகாரனாய் வி.சேயைப் பார்த்து வருந்தி யாருமில்லாத தன்னுடன் தங்க வைத்திருக்கிறார்.

தமன்னாவிடம் சொல்வதாய் நகர்கிறது கிராமத்து வாழ்வும்... ஐஸ்வர்யாவுடனான காதலும்... நிச்சயிக்கப்பட்ட திருமணம்... சகோதரர்களின் வரதட்சணை ஆசை... காதலியின் மறைவு... என எல்லாம் சொல்கிறார்.

Image result for தர்மதுரை ஐஸ்வர்யா

குடியில் இருந்து அவரை மீட்டெடுத்து மீண்டும் மனிதராக்கும் தமன்னாவுடனான வாழ்க்கை கதையின் இறுதிப் பகுதியாக நகர்கிறது. பெங்களூரில் இருக்கிறான் என்று சொன்ன கணவன், உண்மையில் அவளுடன் சேர்ந்து வாழவில்லை என்பதும் இருவரும் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதும்  விவாகரத்து கிடைத்த அன்று தமன்னாவுடன் நீதிமன்றத்துக்குச் செல்லும் போதுதான் தெரிகிறது. அங்கு தன் முன்னாள் கணவரிடம் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொல்வதுடன், விவாகரத்துக்கான காரணத்தையும் வி.சேயிடம் சொல்கிறார். அவனின் கேடுகெட்ட செயலை அறிந்து துடிக்கும் வி.சே நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் கணவனை அடித்து உதைக்கிறார்.

'காலேஜ்ல படிக்கும் போது என்னை விரும்பினாய்தானே..?' என்று கேட்கும் போது ஒரு புன்னகையில் மறைத்து நகர்ந்தாலும்... 'உன்னை நான் தமிழ்ச்செல்வியாக பார்க்கிறேன்' என்று சொன்னபோது அங்கிருந்து ஒரு பதட்டத்துடன் நகரும் தமன்னா, அன்று இரவு படுக்கையை பகிர்ந்து கொண்ட பின்னர் 'இப்பத்தான்டா ரொம்ப பாதுகாப்பா உணர்றேன்' என்று சொல்லுமிடத்தில் அவர்களின் காதல் வாழ்கிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டே சின்ன கிளினிக் ஆரம்பித்து சந்தோஷமாக நாட்களை நகர்த்த, அவர்களைத் தேடி வரும் கண் தெரியாத காமராஜ் ஆசிரியர், சேர்ந்து வாழ்வதென்பது நம் கலாச்சாரத்துக்கு சரியானது அல்ல என்று சொல்லி, விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். 

அவர்களுடன் படித்த ஒருவன் புரபஸர் காமராஜ் நம்பர் கொடுத்தார் என போன் செய்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, வி.சே பணத்தை எடுத்துக் கொண்டு வந்ததையும்... அவரின் சகோதரர்கள் தேடி அலைவதையும் சொல்ல, தமன்னா அது குறித்துக் கேட்க, அப்போதுதான் வி.சே விவரம் தெரிய வருகிறது. யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சொல்லுபவரிடம் நீதான் போகணும்... நான் நல்லாயிருக்கேன்னு அவங்களுக்கு காட்டணும்... உன் அம்மாவை இங்க கூட்டியாரணும்... நம்ம குழந்தையை அவங்க கையில கொடுக்கணுமின்னு நினைக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார்... அங்கு சென்ற வி.சேக்கு நடந்தது என்ன..? மீண்டும் திரும்பி தமன்னாவிடம் வந்தாரா...? என்பதே படத்தின் முடிவு.

கன்னங்குழி விழ சிரிக்கும் சிருஷ்டியும்... கண்களாலேயே பேசும் ஐஸ்வர்யாவும் அடித்து ஆடியிருக்கிறார்கள் என்று சந்தோஷம் படும் நேரத்தில் அனாயாசமான நடிப்பால் அவர்களை பின் தள்ளி முன்னே நிற்பவர் தமன்னா... பாந்தமான பண்பட்ட நடிப்பு... அவரின் கதாபாத்திரம் எல்லாருக்கும் நிச்சயம் பிடித்துப் போகும்.

மகனுக்காக வருந்தும் தாய் ராதிகா, எங்கே பசும்பொன் ராதிகா ஆகிடுவாரோன்னு பயப்பட வைத்தாலும் மகனை கொல்வதற்காக ஏற்பாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து அவன் தப்பிச் செல்ல இட்லிக்குள் சிறிய ரம்பத்தை வைத்துக் கொடுத்து தப்ப வைக்கும் போதும்... பணத்தை எடுத்தது தர்மதுரைதான் அவன் மீது எப்ப.ஐ.ஆர். போடுங்க என்று மகன்கள் சொல்லுமிடத்தில் போலீஸ் ஸ்டேசனில் சும்மா அடிச்சி ஆடும்போதும் அருமையான ஆத்தாதான்னு நிரூபிச்சிட்டாரு.

கம்பவுண்டராக கஞ்சா கருப்பு, வி.சேயுடன் அவருக்கு முதல் படம்ன்னு நினைக்கிறேன். வி.சேயுடன் அவர் அடிக்கும் லூட்டியை விட, அவரைத் தேடிச் செல்லும் சகோதரர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் செம... மக்கா கலங்குதப்பா பாட்டில் சார் அது கரண்ட் பில் கட்ட வச்சிருந்த காசு என பாவாடையைக் கட்டிக்கொண்டு சொல்லியபடி வந்து நிறைவாய் செய்திருக்கிறார். அக்காவின் கணவராக வீட்டோட மாப்பிள்ளையாக வரும் அந்த கட்டை மனிதர் நல்லா நடித்திருக்கிறார். அக்கா, அண்ணன், தம்பிகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். மந்திரம் போடுகிறேன் என்று சொல்லி ஜீபூம்பா பண்ணும் அக்கா மகள் கலக்கல்.

பாடல்கள் வைரமுத்து... இசை யுவன் சங்கர் ராஜா... பாடல்களும் பின்னணி இசையும் கலக்கல். ஆண்டிப்பட்டி கணவாய்... கிராமத்து மெலோடி. பாடலும் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் அழகு. கேமரா தேனியின் அழகை உள்வாங்கி இருப்பதுடன் ஊட்டியிலும் அழகாய் பயணித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநர் சீனு இராமசாமி இயக்கியிருக்கிறார். தாரை தப்பட்டையில் வில்லான வந்து கலக்கிய சுரேஷ் தயாரித்திருக்கிறார். குத்துப்பாட்டில் ஒரு குத்தும் போட்டுப் போகிறார்.

Image result for தர்மதுரை


ஐஸ்வர்யாவைக் கொன்றார்கள் ஓகே... ஏற்றுக் கொள்ளலாம்... கதையை நகர்த்த ஒரு முடிச்சு வேண்டுமல்லாவா... ஆனால் சிருஷ்டியை எதற்காக...? வி.சேயை சிருஷ்டி காதலிப்பது எதற்காக...? என் வீட்டில் வந்து பேசுன்னு சொல்றதோட போவதற்குப் பெயர் காதலா...? அப்புறம் எதற்காக தண்ணி போட்டு விட்டு அந்த அலம்பல் எல்லாம்...? தான் காதலிக்கும் ஒருவனின் தொடர்பு எண் இல்லாமல் போகுமா..? சிருஷ்டியை தோழியாகவே காட்டியிருக்கலாமே...ஏன் காதல் போர்வை..? சாதாரண கல்லூரிகளிலேயே ஆட்டோகிராப் எல்லாம் இருக்கும் போது... மருத்துவக் கல்லூரியில் அப்படியெல்லாம் இல்லையா என்ன...?  சிருஷ்டி காதலிப்பதாய்ச் சொன்னதால்தான் தமன்னா சொல்லாமல் நெஞ்சுக்குள் பூட்டி வைக்கிறாரோ...? மனதில் நினைத்தவனுடன் வாழத்தான் கணவனை கெட்டவன் ஆக்கிவிட்டார்களோ...? இந்தக் காலத்தில் அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன், இணையம் என எதிலும் தொடர்பில் இல்லாமலா இருப்பார்கள்..? எட்டு லட்சத்தை பேக்கில் வைத்துக் கொண்டு போனவன் அதை எடுத்துப் பார்க்கவே இல்லையா...? மெடிக்கல் புத்தகம் என்றல்லவா நினைத்தேன் என்று இறுதியில் சொல்வதாய் ஒரு வசனம்... சரிதான்... கொண்டு வந்த மெடிக்கல் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கவே இல்லையா...? என ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பாமல் இல்லை... அது எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வி.சே - தமன்னா இணைந்து வாழ ஆரம்பிக்கும் இடைவேளைக்குப் பின்னர் விரியும் காட்சிகளால் அதுவரை தத்தளித்த படகு... கவிழாமல் ஆழ் கடலுக்குள் அழகாய் பயணித்திருக்கிறது.

மெடிக்கல் கல்லூரி காட்சிகள் அதிக நீளமாக இருந்தாலும்... சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும்... இடைவேளை பின்னான காட்சிகளால் தர்மதுரை ஜெயித்திருக்கிறது.  அன்வர் எதிரியாய் வருவானோ என்று பயம் இருந்தது என்னவோ உண்மை... காரணம் கதாபாத்திரத்தின் பெயர்தான்... கண்டிப்பாக வில்லனாக்கி வேடிக்கை பார்ப்பார்கள்தானே... ஆனால் இதில் அவன் வி.சேக்கு உதவி செய்கிறான்... அதுவும் மிகவும் முக்கியமான உதவி... அதேபோல் முனியாண்டி காமராஜ்மேல் உள்ள பற்றுதலால் பேரை காமராஜ் என்று வைத்துக் கொண்டது... தண்டட்டி போட்ட கிழவிகள் ஆட்டெழும்பை கடித்து இழுப்பது... சேர்ந்து வாழ்தல் நம் பண்பாடு இல்லை என்பதைச் சொன்னது என பல இடங்களில் இயக்குநரைப் பாராட்டலாம். மதுரையை மையமாகக் கொண்ட கதை அடி தடி வெட்டுக்குத்து என்றில்லாமல் மதுரையின் மணத்தோடு ஊட்டிக் குளிரில் இதமாய்ப் பயணிக்கிறது.

சீனு ராமசாமியும் வி.சேயும் இணையும் மூணாவது படம்... மிக அருமையாக செய்திருக்கிறார்கள்... வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை கலக்கல்.  சுகுமாரின் கேமரா கவிதையாய் நகர்கிறது.

மக்க கலங்குதப்பா செம குத்து என்றால் ஆண்டிப்பட்டி கணவாய் சோ சுவீட் மெலோடி... செம... தினமும் நாலைந்து முறை ஓடிக் கொண்டிருக்கிறது செல்பேசி திரையில்... நீங்களும் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

சனி, 27 ஆகஸ்ட், 2016

அரசனின் 'இண்ட முள்ளு'


ண்ட முள்ளு...

சகோதரர் சே.அரசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. காராமுள்ளு, சூறாமுள்ளு, கருவமுள்ளு, இலந்தமுள்ளு, காக்காமுள்ளு இப்படி நிறைய முள்ளைப் பார்த்து குத்துவாங்கி வளர்ந்திருக்கிறோம்... இது இண்டமுள்ளு... புது வார்த்தை... 'தான் படர்ந்திருக்கும் பரப்பினைக் கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது.' அப்படின்னு தன்னோட அணிந்துரையில் கவிஞர் சி.கருணாகரசு சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது இது இலந்தை முள்ளோ அல்லது சூறா முள்ளோதான் என்று நினைத்திருந்தேன்... அவைதான் கடந்து செல்வோரை கொத்தாக பிடித்துக் கொள்ளும். ஆனால் நேற்று அரசன் முகநூலில் பகிர்ந்த படத்தைப் பார்த்தபோது அதுபோன்ற ஒரு முள்ளை பார்த்த ஞாபகம்... அதன் கிளைகளில் எல்லாம் சூறா முள்ளைப் போல் கொக்கி கொக்கியாக இருக்கும்... ஆனா எங்க பக்கம் அதற்கு என்ன பேருன்னுதான் ஞாபகத்தில் வரவில்லை... சரி இப்ப முள் ஆராய்ச்சி எதற்கு இண்டமுள்ளின் பின்னே பயணிப்போம்.

கதைக்களமாய் தான் பிறந்த 'உகந்த நாயகன் குடிக்காடு' மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் அங்கு வாழ்ந்த, வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அந்த மக்களின் சந்தோசம், துக்கம், வலி, வேதனை,ஏமாற்றம். சூழ்ச்சி, வஞ்சகம், காமம் என எல்லாம் சுமந்து நிற்கிறது.

பெருஞ்சொம, தூவானம், சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காற்று என மொத்தம் ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில்... கதைகள் நவரசம்... பெரும்பாலான கதைகள் சோகம் சுமந்து நிற்கின்றன. மண்ணின் மணத்தோடு மண்ணின் மாந்தர்களைக் கதையின் நாயக, நாயகிகளாக ஆக்கும் போது சுகத்தைவிட துக்கமே தூக்கலாக இருக்கும் என்பதே உண்மை. 

நான் எழுதும் கதைகள் கூட பெரும்பாலும் சோகம் சுமந்தே காணப்படும். 'நீங்க எப்பவுமே நெகட்டிவாத்தான் சிந்திக்கிறீங்க... பாஸிட்டிவ்வா சிந்திங்க...' அப்படின்னு ஒரு வலைத்தள நட்பு என்னுடன் நீண்ட விவாதமே... ஏன் சண்டையே போட்டார்... சண்டையின் இறுதியில் 'உன்னோட சிந்தனையில் துருப் பிடித்திருக்கிறது' என்றும் அன்பாய்ச் சொன்னார். எப்படித்தான் சிந்தித்தாலும் விவசாயத்தின் வேர் அறுந்து போன ஊரில் விழுதுகள் நகரங்களில் கிளைவிட்ட பின்னர் அந்த விழுதுகளைச் சுமந்த வேர்கள் மட்டும் அந்த வீணாகிப் போன பூமியை விட்டு வெளியே வரப்பிடிக்காமல்... அந்த மண்ணின் மீதான தீராக்காதலை சுமந்து தவிப்பதை கதையாக்கும் போது சுகங்களைவிட சோகமே தொக்கி நிற்கும்... அந்த வகைக் கதைகளை அரசன் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

'இந்த இண்டமுள் கொஞ்சமேனும் உங்களை தைத்தால் அதுவே நான் கொண்ட முயற்சிக்கு வெற்றி' என்று ஆசிரியர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். கொஞ்சமேனும் அல்ல ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமாக தைக்கின்றன. இதுவே எழுத்தாளரின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. நடைமுறை வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்கில் சொல்வதென்பது எளிதன்று... அப்படியிருக்க மிகச் சரளமாக பேச்சுவழக்கை கையாண்டிருக்கிறார். எவன் ஒருவன் தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் என்றென்றும் மாறாத காதல் கொண்டிருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த மண்ணின் மைந்தர்களை கதை மாந்தர்களாக மட்டுமின்றி அந்த மண்ணின் வாசத்தையும் வாசிப்பவர் மீது இறக்கி தான் பிறந்த மண்ணை எல்லார் மனதிலும் வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அரசனுக்கு கிடைத்திருப்பது தவம்... அவரின் எழுத்துக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஒன்பது கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தவிர, எல்லாமே சாவைப் பேசுகிறது... பல கதைகள் காமத்தை மையப்படுத்துகிறது... பெரும்பாலும் உடல்சார்ந்த எல்லை மீறல்கள்... அவை சர்வசாதாரணமாக... அதுவும் இருவரும் விரும்பியே நடக்கின்றன... இதில் ஆண் பெண் வேற்றுமை எல்லாம் இல்லை... சாந்தி, மருதன், பார்வதி, நாராயணன், சங்கர், ராமன், லதா என எல்லாருமே இதில் திளைக்கிறார்கள். காமம் சார்ந்து எழுதுவது என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்... அதை மிகச் சரியாக ஆசிரியர் கையாண்டிருந்தாலும் அந்த மண்ணில் அவர் சொல்வது போல 'புழங்குவது' என்பது சர்வ சாதாரணம் போல என்று தோன்ற வைத்து விடுகிறது. மனிதர்கள் மீது இரக்கம் வர வேண்டிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. 

திரு.பெருமாள் முருகன் தன்னோட மாதொரு பாகனில் முழுக்க முழுக்க காமத்தையே மையப்படுத்தியிருப்பார்... பேசக் கூசும் வார்த்தைகளையெல்லாம் அள்ளி விதைத்திருப்பார்... அது உண்மை பேசும் கதை... அப்படித்தான் எழுத முடியும் இதிலென்ன தப்பு என்று அவருக்கு வக்காலத்து வாங்க சிலரும்... இதை அவர் வீட்டு பெண்கள் படித்திருப்பார்களா..? எனச் சிலரும் மோதிக்கொள்ள நேர்ந்ததை நாம் அறிவோம்... நல்ல எழுத்தாளர்.... மாதொருபாகன் பிரச்சினையால் எழுத்துக்கு தடா போட்டு விலகியிருந்து தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். அவர் வளர்ந்த எழுத்தாளர்.. நம் அரசனோ வளரும் எழுத்தாளர்... காமம் கலந்து எல்லாராலும் எழுத முடியாது... எதார்த்தம் பேசும் கதைகளில் இதெல்லாம் சகஜம் என்றாலும் அது இல்லாத வாழ்க்கை எதார்த்தத்தை இன்னும் நிறையப் பேசலாமே என்பது என் எண்ணம். இது அரசனுக்குத்  தவறாகத் தெரிந்தால் மன்னிக்கவும்.

மேலும் நம் நட்பில் ஒரு சிலருக்கு நான் சொல்வது தவறாகத் தெரியலாம்... எழுத்தாளன் காதலையும் காமத்தையும் எழுத வேண்டும்... இதில் என்ன தவறிருக்கிறது என்றும் வாதிடலாம். இந்தக் கதைகளின் போக்கில் இவை தவறில்லை என்பது உண்மைதான்... சரியான கதைக்களம்தான்...  சமீபத்தில் ஒரு போட்டிக்காக சிறுகதை எழுதினேன்... அந்தக் கதையை அந்தத்தளத்தில் படித்த, என் எழுத்துக்களை நேசிக்கும் சகோதரி ஒருத்தர் 'நல்லாயில்லைப்பா' என்று ஆரம்பித்து 'நீங்க சொல்லியிருக்கும் உறவுமுறை... வேண்டாம்ப்பா... இப்படி எழுதாதீங்க' என்றார். எங்க பகுதியில் நான் பார்த்த ஒரு நிகழ்வுதான் என்று சொன்ன போதும் 'உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை... இப்படியெல்லாம் எழுதாதீங்க' என்றவர் 'அந்த உறவுமுறை எப்படிப்பட்டது தெரியுமா..? அது தப்புச் செய்யுமா..?' என்றெல்லாம் பேசினார். இதை ஏன் சொல்றேன்னா... ஆஹா... அருமை... சூப்பர்.... அப்படியே கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே காட்டிட்டார் என்று சொல்லிக் கொண்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை.... சில உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைப்பதாலேயே இங்கு எழுதியிருக்கிறேன்... அரசன் என் சகோதரன் என்ற முறையில் இன்னும் சிறப்பான கதைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலான கருத்துத்தான் இது. நல்ல எழுத்தாளனுக்கு எல்லாத் தரப்பிலும் வாசகர்கள் அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்.

கிராமத்து வாழ்க்கையில் காமம் தவிர்த்து எத்தனையோ இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக் கதையை நட்பு, நேசம், பாசம், காதல், வன்மம் என எத்தனையோ விதத்தில் பேசலாம்... இதிலிருக்கும் கதைகளில் காமம் நிரம்பியிருப்பதால் கிராமம் என்றாலே இப்படித்தானோ என எண்ண வைத்துவிடும் என்பதே என் பயம். இருப்பினும் மிக அழகாக, மிகவும் யோசித்துச் செதுக்கப்பட்ட கதைகளுக்காக அரசனை கட்டிப்பிடித்து வாழ்த்தலாம்... அதில் தவறொன்றும் இல்லை. சொல்ல வந்த வாழ்க்கையை கண் முன்னே காட்டிச் செல்லும் எழுத்து எல்லாருக்கும் அமைவதில்லை... அது அரசனுக்கு கை வந்திருக்கிறது... அதற்காகவே அவரின் கரங்களை இறுகப்பற்றி வாழ்த்தலாம்.

கிராமத்து பேச்சு வழக்கு என்பதை கதையில் மிகச் சரியாக கையாண்டிருக்கும் அரசன்... அந்த மனிதர்கள் பேசும் போது மட்டுமல்லாமல் தான் அவர்கள் குறித்துச் சொல்லும் போதும் அப்படியே எழுதியிருப்பது மற்றவர்களின் எழுத்துக்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பெயர்களை கிராமத்து மனிதர்கள் அழைக்கும் போது பாஞ்சால, அஞ்சல என்று அழைத்தாளும் கதையில் அவர்கள் பேசுவதாகவோ, அவர்கள் குறித்து நாம் சொல்வதாகவோ எழுதும் போது பாஞ்சாலி, அஞ்சலை என்றுதான் பெரும்பாலும் எழுதுவது  வழக்கம். ஆனால் இண்டமுள்ளில் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கு... இதுவும் வித்தியாசமாய்... அருமையாய்... வாசிக்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திச் செல்கிறது... நல்லாத்தானிருக்கு அரசன்... வாழ்த்துக்கள்.

புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்... கண்டிப்பாக வட தமிழகத்தின் கிராமத்து வாழ்க்கைக்குள் நீந்திச் சுகம் பெறுவீர்கள்... வாழ்வியல் பேசும் அருமையான கதைகள்... மனம் கனக்கச் செய்யும் கதைகள்... இப்படியான வாழ்க்கையைத்தானே தினம் தினம் கிராமங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர வைக்கும் கதைகள்...

வாழ்த்துக்கள் அரசன்... மிகச் சிறந்த எழுத்தாளருக்கான சிம்மாசனம் உங்களுக்காக காத்திருக்கிறது. அடுத்த தொகுப்பை விரைவில் கொண்டு வாங்க. உங்கள் தந்தை சேகர் அவர்களும் தாய் வளர்மதி அவர்களும் உங்கள் துணைவியார் சகோதரி கலையரசி அவர்களும் உங்கள் வளர்ச்சி கண்டு சந்தோஷம் அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள். 

புத்தக வடிவமைப்பு : பால கணேஷ் அண்ணா... அருமையாகச் செய்திருக்கிறார். அரசன் வளர்மதி பதிப்பகத்தின் மூலமாக சொந்தமாக வெளியிட்டிருக்கிறார். 160 பக்கங்கள்... விலையோ 100 ரூபாய்தான்.

ஒரே ஒரு குறைதான்... பொருளடக்கம் என்ற பக்கத்தை மறந்துவிட்டார்கள்.

(இதுதான் இண்டமுள்ளு... அரசனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்...  உங்கள் பார்வைக்காக)
கதைகளைக் குறித்து ஒன்றுமே சொல்லலையின்னு நினைக்காதீங்க... எல்லாக் கதைதளும் அருமையான கதைகள்... வாசிக்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள். நேரம் கிடைத்தால் மற்றொரு பகிர்வில் கதைகள் குறித்துப் பேசுவோம்...  இல்லை கதைகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்துதான் படிப்போம் என்றால் கொஞ்சமல்ல... பல எழுத்தாளர்களின் பார்வையில் இண்டமுள்ளுவைப் பற்றிநிறைவாய்த் தெரிந்து கொள்ள 'இண்டமுள்ளு' முகநூல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

அரசனோட வலைப்பூ : கரைசேரா அலை
-'பரிவை' சே.குமார்.