மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 செப்டம்பர், 2015

கண்ணனின் காலடி...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்


ப்போதும் கையால்
கண்ணனின் பாதம்
வரையும் அம்மா...

தத்தி நடக்கும்
குட்டிக் கண்ணனின்
காலடியைப் பதியலாமென
அரிசி மாவில் அழகாய்
நனைத்து விட்டாள்....

மீண்டும் மீண்டும்
நனைக்கிறான்
நடக்கிறான்...

வீடெங்கும் கண்ணன்
வருவதும் போவதுமாய்
இருக்க...

நிறைந்து கிடக்கின்றன
கண்ணனின் காலடிச்
சுவடுகள்

கழுவி எடுப்பது
அம்மா வேலை
என்றாலும்
கண்ணனின்
காலடி அழகில்
சொக்கித்தான்
போகிறாள்...!


*************************
*************************

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஜிப்பா ஜிமிக்கி

முதல்லயே சொல்லிக்கிறேன்... ஒரு படத்தோட பாடலுக்காக நான் பதிவெல்லாம் இதுவரை எழுதியதில்லை. சினிமா விமர்சனமே எப்பவாவது என்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே எழுதுவேன். ஒரு சினிமாவை பிரிச்சி மேயும் அளவுக்கு எனக்கு அதிம் ஞானம் இல்லை... அப்படியிருக்க பாட்டுக்காக பதிவெழுதி... அந்த வரியை இப்படி மாற்றியிருக்கலாம்... இந்த இடத்தில் கிட்டாருக்குப் பதில் ட்ரம்ஸே போட்டிருக்கலாம்ன்னு எல்லாம் கருத்துச் சொல்லும் அளவுக்கு நமக்கு இசை ஞானம் இல்லை...

சேனைத்தமிழ் உலா

அப்புறம் எதுக்குய்யா இப்ப எழுதுறேன்னு நீங்க கேட்கலாம்... சேனைத்தமிழ் உலான்னு ஒர் இணையப் பக்கம் இருக்கு, அந்தப் பக்கமா நான் ஒதுங்குனது ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தப்போ காயத்ரி அக்கா சொல்லித்தான்... ஒதுங்கினேன்... பரிசும் வாங்கினேன்... அதெல்லாம் மேட்டர் இல்லை... என்ன மேட்டர்ன்னா.... அங்க ஒரு நட்பு வட்டம்... மிகச் சிறந்த உறவுகளின் உன்னத இணைப்பு அந்த உலா... 

அங்க போற வரைக்கும் நிஷா(ந்தி) அக்காவைத் தெரியது. அவர் பதிவரும் இல்லை...  ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரது கருத்துக்களே ஒரு பெரிய பதிவாகத்தான் இருக்கும்... அங்கு வரும் எல்லோரையும் கருத்துக்களால் கவர்பவர் அவர். எனது பதிவுகளைப் பலர் வாசித்தாலும் வரும் பத்துப் பதினைந்து கருத்துக்களை எழுதுபவர்களை மட்டுமே அறிவேன். சேனையில் வாசிக்கும் நண்பர்களை எல்லாம் நான் அறியேன். அங்கு சென்றதும் அவர் எனது எழுத்துக்களின் ரொம்ப நாள் வாசகி என்பதை அறிந்த போது இரட்டிப்புச் சந்தோஷம் எனக்கு... இப்போ எனக்கு ஒரு அன்பான அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் பாருங்கள்.... அப்படி ஒரு அழகான உறவுகளைக் கொடுக்கும் இடம்தான் சேனைத்தமிழ் உலா.

இயக்குநர் ரா,ராஜசேகர்
சரி என்ன சொல்ல வாறேன்னுதானே கேக்குறீங்க... சேனையின் உறுப்பினர் ரா.ராஜசேகர்தான் நான் சொல்லப் போற ஜிப்பா ஜிமிக்கி படத்தின் இயக்குநராம்... இவருக்கு இது முதல் படம்... அந்தப் படத்தின் பாடல்கள் வெளியானதும் நிஷா அக்கா அதன் யூடிப் இணைப்பை பகிர்ந்து சேனையில் பாடல்களைக் கேட்டு கருத்திடும்படி செய்திருந்தார். நானும் சென்றேன்... அங்க கொஞ்சம்... இங்க கொஞ்சமாப் பாட்டைக் கேட்டுட்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். எனக்கு அப்ப அவர் அங்கு உறுப்பினர் என்றெல்லாம் தெரியாது. அக்காவுடன் முகநூல் அரட்டையில் இருந்த போது தம்பி ஜிப்பா ஜிமிக்கி படத்தோட இயக்குநர் நம்ம சேனை உறுப்பினர், அவரோட படப்பாடல்கள் குறித்து உனக்கிட்ட இருந்து ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன் என்றார். எல்லாம் எழுதுறோம்... நட்புக்காக... நானும் அவரும் இதுவரை ஒரு வரி கருத்துக்கூட இட்டுக் கொண்டதில்லை என்றாலும் சேனையின் உறுப்பினர் என்ற போது நமக்கும் நட்புத்தானே என்பதால் சரி அக்கா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.

ஜிப்பா ஜிமிக்கின்னு டைட்டில் வச்சிட்டு கீழே 'ஜிகுஜிகுன்னு' அப்படின்னு போட்டிருக்காரு... ஜிப்பாங்கிறது ஆண்கள் போடுறது... கிராமங்களில் ஜிப்பா போட்டுக்கிட்டு போனா ஏய் ஜிப்பா போட்ட மைனருன்னு கேலி கூட பண்ணுவாங்க... ஜிமிக்கி பொண்ணுங்க போடுவாங்க... ரெண்டுமே ஜிகுஜிகுன்னுதான் இருக்கும்... அதுவும் திருவிழா நேரங்களில் பாவாடை தாவணியில் பெண்கள் ஜிமிக்கி போட்டு வரும் அழகே தனிதான்...  அதைப் பார்த்தால் ஐய்யோ.. ஐய்யோன்னு மனசு பரவசப்படும்... ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்.  இப்ப பாவாடை தாவணியே இல்லை... கொஞ்ச நாள் கழித்து பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாட்டு பாடுனா பாவாடை தாவணின்னா என்னன்னு கேப்பாங்க... பிளாஸ்டிக் கம்மல் வந்து ஜிமிக்கியும் போயே போச்சு...


ஜிப்பா ஜிமிக்கி ஒரு வித்தியாசமான காதல் கதை என்பதை இதன் பாடல்கள் சொல்லாமல் சொல்கின்றன. படத்தின் பாடல் வெளியீட்டில் படத்தின் கதை குறித்து இயக்குநர் ராஜசேகர் சொல்லும் போது 'மிக நெருங்கிய இரண்டு நண்பர்கள் தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் இது அவர்களின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே இருவரும் ஒரு பயணம் மேற்கொண்டு திருமணம் செய்யாமல் தப்பிக்க ஒரு காரணத்தை கண்டு பிடிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி மேற்கொண்ட பயணத்தில் பிரிந்தார்களா... அல்லது சேர்ந்தார்களா...' என்பதை  படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

அவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஒரு கட்டத்தில் காதலாகி... பின்னர் பிரிவாகி... மீண்டும் இணையும் போல்தான் பாடல்கள் இருக்கின்றன. இப்ப படத்தின் கதை குறித்து பேச, படம் இன்னும் வெளியாகவில்லை என்பதால் பாடல்கள் குறித்துப் பார்க்கலாம். படத்தின் பாடல்களுக்கு இசை ரனிப் என்ற புதிய இசை அமைப்பாளர். நமக்கெல்லாம் அறிமுகமான இசையமைப்பாளர் தீனாவின் சகோதரர் இவர் என்பது கூடுதல் செய்தி. படத்தின் இயக்குநரும் சேனையின் உறுப்பினருமான ரா.ராஜசேகர் அவர்கள் மாலை முரசு பத்திரிக்கையில் பணியாற்றியவர் என்பதும் கூடுதல் செய்திதான். நானும் தினமணியில் இருந்தவன்தான்... அப்ப சினிமாவுக்கு வருவியான்னு கேக்ககூடாது... வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வர்றதுக்கே அரபிக்கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு... இதுல சினிமாவுக்கா... சரித்தான் போங்க...

படத்தில் பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருப்பது மிகச் சிறப்பு... பாடல் வரிகளை எழுதியிருப்பவர் மோகன்ராஜன், இவர் சினிமாவுக்கு புதியவர் போல தெரிகிறது. என்னோட நண்பன் தமிழ்க்காதல்ன்னு ஒருத்தன் இருக்கான். நல்ல கவிஞன்... ரெண்டு மூணு பேருக்கிட்ட பாட்டெழுதிக் காட்டி அவங்க ரசனைக்கு எழுத மறுத்து வாய்ப்புக்கள் இழந்தவன்... அவனுக்கும் இதுபோல் வாய்ப்பு வந்தால் நல்ல பாடல்களைக் கேட்கலாம்... வருமா?. 


அடித்து நொறுக்கி காதுகளைக் கிழிக்காத இசையும், வரிகளில் வரும் வார்த்தைகளை எல்லாம் கேட்கும்படி எழுதப்பட்ட பாடல்களும், நல்ல உச்சரிப்போடு பிசிறில்லாமல் பாடிய பாடகர்களும்  என முக்கனிச் சுவையும் ஒன்றாக கிடைப்பதென்பது இன்றைய தமிழ்ச்சினிமாவில் அரிதாகிவிட்டது. இசை இருந்தால் வரிகள் சொதப்பல்... வரிகள் நல்லா இருந்தால் பாடியவர் பாதி எழுத்தை மென்று முணுங்கி துப்பும் பரிதாபம்... இல்லையென்றால் வரியும் பாடியவரும் கலக்கலாய் செய்ய இசை ரணகளமாகிவிடும். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை முக்கனிச் சுவையையும் சரி சமமாகக் கொடுத்து கேட்கும் காதுகளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறாரகள்.

'வண்டாள மரத்துக்காடு...' என்று ஆரம்பிக்கும் முதல் பாடல்  ஆட்டம் போட வைக்கும் வரிகளை அள்ளிக் கொண்டு வருகிறது. 

'ஏ சிப்பா போட்ட மைனரு... 
சிமிக்கி போட்ட பெண்டிரு...
சேர்ந்து நின்னா கலக்குது... 
ஜிகுஜிகுன்னு ஜொலிக்குது...' 
என்று சும்மா கலக்கலாக இருக்கிறது. 

அடுத்து வரும் பாடலின் வரிகளை வைத்தே இது காதல் பாடல்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். பாடலின் வரிகள் அழகிய கவிதையைக் கொடுத்து நம்மையும் பரவசப்பட வைக்கிறதே தவிர, இசையும் பாடகர்களும் நம்மை படுகொலை செய்யவில்லை... அழகான வரிகள்... பாடலே ஒரு கவிதையாய்.... இது ஆண் பெண் இருவரும் பாடும் பாடல்... 'கண்கள் நுனியில் காதல் வந்து மோதிச் சாய்க்கிறதே...' என்ற வரிதான் எத்தனை கவித்துவமாய் இருக்கிறது... இதே போல் எல்லா வரிகளும்....

'ஹையோ... ஹையோ...
பரவசப் படுகொலையே...
இது பரவசப் படுகொலையே...
கண்கள் திறக்கலை
தேகம் அசையலை
பேசத் தெரியலை அன்பே...'

அடுத்த பாடல் குத்துப் பாடல் வகை... தியேட்டரில் ஆட வைக்கும் பாடல்... தமிழ் சினிமாவில் புதிதாக வரும் இயக்குநர்கள் கூட குத்துப்பாடல்  என்னும் வலைக்குள் விழத்தான் செய்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாடல் இது. புதியவர்கள் இன்னும் சிறப்பாய் சிந்திக்க வேண்டும்... குத்துப்பாடல் என்னும் வட்டத்தை உடைத்து வர வேண்டும். மலையாளத்தில் நல்ல கதைகளுடன் இளையவர்கள் வர ஆரம்பித்திருக்கும் வேலையில் வித்தியாசமாய்ப் பண்ணினாலும் அடுத்தவனைப் போல் அதே குத்துப்பாடல் நாலு சண்டை என்ற வட்டத்துக்குள் தமிழக இளம் இயக்குநர்கள் விழுவது வருத்தமான விஷயம்..குத்துப் பாடல்தான் ஆனாலும் வரிகள் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கும் பிடிக்கும்.

'அல்லாடும் வாழ்க்கையிலே
பொல்லாத சோகமில்லை...
........
டோலாரே டோலாரே
டோலாக்கு டோலுடா...
.......
ஏய்... ஐலே... ஐலே... ஐலலலே...லே...'


அடுத்த பாடலும் நல்லா இருக்கு... இது கொஞ்சம் அடிகலந்த பாடல்...  இது ஒரு விழாவில் பாடுவது போல் இருக்கிறது. ஒருவேளை திருமண நிச்சயமாகக்கூட இருக்கலாம்.. இதிலும் வரிகள் நல்லா இருக்கு. என்னடா இப்படி எல்லாத்தையும் ஆஹா ஓஹோன்னு சொல்றானேன்னு நினைக்காதீங்க... இது சும்மா சொல்வது இல்லை... வெறும் வாய் வார்த்தை இல்லை... இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன்... உண்மையிலேயே வரிகள் அருமை... கவிஞருக்கு மனசின் வாழ்த்துக்கள்.

'தணனனான... தணனனான
தண்னனான... தாணானன்னா...
.................
வெண்ணிலா போல் ஒரு
தேவதைக் கண்கள்...
ஆஆஆஆயிரம் பேசியதே...'

இது நம்ம ஏ.ஆர்.ரகுமான் வகைப்பாடல் மெதுவான வரிகளும் பரபரப்பான வரிகளும் கலந்த பாடல் வித்தியாசமான ராப் வகை... ஆரம்பத்தில் சொல்லும் வார்த்தைகளை என்னால் புரிஞ்சிக்க முடியலை வாய், கழுத்து, கண்ணு, காதுன்னு எல்லாம் சொல்றாங்க... ரொம்ப வேகமா பாடுறாங்க... 

'ரசவாச்சியே... ரசவாச்சியே...
ரசவாச்சியே... ரசவாச்சியே வாச்சியே...
இருவாச்சியே... இருவாச்சியே
இருவாச்சியே... இருவாச்சியே... வாச்சியே...'


அடுத்தது பிரிவின் வலி சொல்லும் பாடல், நாயகன் நாயகி பிரிவைப் பற்றி ஒருவர் வருத்தமுற்று பாடுவதுபோல் தெரிகிறது பாடலின் வரிகளைக் கேட்கும் போது... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

'ஐய்யோ... ஐய்யோ... ஐய்ய்ய்யோஓஓஓஓஓ....
நெஞ்சு கொதிக்குதே...
விம்மி வெதும்புதே
செஞ்ச பாவம் என்னதானோ...'

அடுத்ததும் ஒரு குத்துப் பாடல் ரகம்தான்... மியூசிக்கும் அடித்து ஆடுகிறது... கேட்கும் நமக்கும் பரபரன்னு இருக்கு என்பதே உண்மை. இதுவும் ஆட வைக்கும்.

'பரபரன்னு இழுக்குதய்யா...
பளபளன்னு சிரிக்கிதய்யா...
சிலுசிலுன்னு சிலுக்குதய்யா...
ஏங் கிளையில் வந்து இலை பறிக்கிறியே...
தேன் தேன் துளியா நீ மழை அடிக்கிறியே...'

அப்புறம் இன்னொரு பாட்டு, அதுவும் கேட்க நல்லாத்தான் இருக்கு. இது காதல் டூயட்டா அல்லது வேறு மாதிரியான்னு தெரியலை. ஆனா உறுத்தாத இசையால நல்லாயிருக்கு.

என்னானதோ எல்லாம் இங்கே...
கொண்டாடுதோ நெஞ்சம் இங்கே... 


ஜி.வி. திவாகர் தயாரித்திருக்கிறார். அவரோட மகன் கிரிஷ் திவாகரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகியாக குஷ்பு பிரசாத் என்பவரை அறிமுகம் செய்கிறார்கள்.  ஆடுகளம் நரேன், மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல் நடராஜனிடம் உதவியாளராக இருந்த சரவணன் நடராஜன் இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கலக்கலாகச் செய்திருக்கிறார் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தளவுக்கு உண்மை என்பது படம் வந்தால்தான் தெரியும்.

பாடல்கள் அருமையா வந்திருக்கு... இவனுக்கு இவள் அல்லது இவளுக்கு இவன்னு சொந்தங்களில் பேசி வைத்து கட்டுவது இன்னும் எங்கள் பக்கமெல்லாம் வழக்கத்தில்தான் இருக்கு, அது போல ஒரு கதைதான்... அதில் இருந்து விடுபட ஒரு பயணம்... காதல்.... மோதல்... மீண்டும் சேரல் என்பது போல்தான் கதை இருக்கும் என்று தெரிகிறது. இது தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் ரகம்தான்.  புதிய முயற்சிகளோடு இறங்கலாம். எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது.

பெரும்பாலும் பாடல்கள் கேட்கும் போது அருமையாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் சொதப்பி விடுவார்கள். இங்கே புதிய இயக்குநர் எப்படிச் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. சேரனைப் போல் படத்தின் கதையோடு பாடல்களையும், பாடல் காட்சிகள் கூட கதை சொல்லும் வித்தையையும் புதியவர்கள் யாருமே பயன்படுத்துவதில்லை. எல்லோருமே அந்தப் பக்கம் போக பயப்படுகிறார்கள். சேனையின் உறவு, நண்பர் புதிய இயக்குநர் அதிலிருந்து மாறுபட்டு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை... பிடிப்பாரா பார்க்கலாம். ஜிப்பா ஜிமிக்கி ஜெயித்தால் ரா.ராஜசேகர் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். பார்ப்போம்.



பாடல்களை நீங்களும் கேளுங்கள்... உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பரை வாழ்த்துங்கள்.... அவரும் வளரட்டும்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 29 ஆகஸ்ட், 2015

வலைப்பதிவர் திருவிழா - 2015

ன்று தமிழ் வலைப்பூக்களின் வண்ணத் தேர் இணையத்தின் மூலமாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. முகமறியாத மனிதர்களை இணைக்கும் பாலமாக எழுத்து இருக்கிறது. எத்தனையோ விதமான எழுத்துக்களை வாசித்து சந்தோஷிக்கும் ஒரு இடமாக, ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் பாலமாக இருகிறது வலைப்பூக்கள். இந்த வலைப்பூக்களில் எழுதும் எண்ணற்ற எழுத்தாளர்கள் உறவுகளாய் ஒன்றிக் கிடக்கிறார்கள். எத்தனையோ உறவுகளையும் நட்புக்களையும் கொடுக்கும் வலைப்பூ உலகில் தமிழ் வலைப்பூக்களே முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழனாய்...  தமிழ் வலைப்பதிவராய்... இணைய எழுத்தாளராய் வாழ்வது கூட ஒரு வரம்தான்.

சரி விஷயத்துக்கு வருவோம்... இன்று சாதிக்கொரு கட்சி... வீதிக்கொரு கட்சி என்று ஆகிவிட்ட தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மாநாடு நடத்திக் கட்சி நடத்தும் காட்சிகளைக் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் முன்னே கடந்த சில வருடங்களாக வலைப்பதிவர்கள் மாநாடு என்ற ஒன்றை நடத்தி இது என்ன மாநாடு... இவர்கள் யார்... என்று சிந்திக்க வைத்தவர்கள் நம் வலைப்பதிவர்கள்.  தலைநகர் சென்னையில் தொடங்கி... சங்கம் வளர்த்த மதுரைக்கு வந்து... நான்காம் ஆண்டு பதிவர் திருவிழாவிற்காக கலைக்கோட்டையாம் புதுக்கோட்டையில் மையம் கொண்டிருக்கிறது.

வலைப்பதிவர்களில் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் எல்லாருமே கணினித் தமிழச்சங்கம், முழு நிலா முற்றம் என எப்போதுமே ஒன்றிணைந்து மிக அழகாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு என்று போனவருடம் மதுரையில் சொன்னதில் இருந்தே அவர்கள் அதற்கான பணியில் இறங்கிவிட்டார்கள். இவர்களை எல்லாம் வழிநடத்தும் திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் புதுகை வலைப்பதிவர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைமை. இவர் எழுத்தாளர், வலைப்பதிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகம் காட்டுபவர். அவரின் தலைமையில் விழாவிற்கான வேலையை விரைந்து செய்து வருகிறார்கள்.

மதுரை விழாவிற்கு ஓடியாடி வேலை பார்த்த சீனா ஐயாவுக்கு உதவியாய் இருந்தவர்களில் குறிப்பாக திண்டுக்கல் தனபாலன் அண்ணாவைச் சொல்லலாம். ஏனென்றால் வலையுலகில் வலைச்சித்தர் என்று பெயர் எடுத்து வைத்திருக்கும் இவர், வலையுலக படைப்பாளிக்களுக்கு வலைப்பூ சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். அதேபோல் வலைப்பதிவர் மாநாடு என்றால் முன்நின்று வேலை பார்ப்பதிலும் இவருக்கு நிகர் இவர்தான். இப்போது புதுக்கோட்டை விழாவிற்குக்கூட நிறைய மெனக்கெடல்களுடன் அழகான பகிர்வுகள்... தொழில் நுட்ப உதவிகள் என அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 50 பேருக்கு மேல் வருவதாக பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான விவரக் குறிப்புக்களை தனபாலன் அண்ணா தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் வலைப்பதிவர் மாநாடு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கென்றே புதிய வலைப்பூவை தயார் செய்திருக்கிறார்கள். விழாவில் பதிவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றை அனைவருக்கும் கொடுக்க இருக்கிறார்கள். இதற்கான விவரங்களையும் சேகரிக்கிறார்கள்... இதில் விழாவுக்கு வருபவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் விவரக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான பதிவும் நடந்து கொண்டிருக்கிறது.

4வது தமிழ் வலைப்பதிவர் திருவிழா குறித்த விவரங்களை முத்து நிலவன் ஐயா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, தேவதா தமிழ் கீதா அக்கா உள்ளிட்ட பலர் தங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றைப் படித்தால் விவரம் அறிந்து கொள்ளலாம். விழாவை வெற்றிகரமாக நடத்த வலைப்பதிவர்களின் அன்பளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

-------------------------------------------------------

விழா இடம்... நாள்...

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
பீ வெல் மருத்துவமனை எதிரில்
பழைய பேருந்து நிலையம் அருகில்
ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை

அக்டோபர், 11 - 2015
ஞாயிற்றுக் கிழமை.

-------------------------------------------------------

விழாவில் பதிவர் கையேடு வழங்குவதுடன் ஜெயக்குமார் ஐயா, விமலன் அண்ணா ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப் படுவதாகவும் பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தற்போதுவரை வெளியிடப்பட்டிருக்கிற பதிவுகள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டில் இன்னும் பலரும் இணையலாம் என்றே தோன்றுகிறது.


விழா குறித்த விவரம் அறிய விழாவுக்காகவே தயார் செய்யப்பட்ட வலைப்பக்கம் செல்ல...
வலைப்பதிவர் சந்திப்பு-2015 

விழா குறித்த் நிறைவான விவரங்களை அறிய திரு. முத்து நிலவன் ஐயா அவர்களின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்...
வளரும் கவிதை 

விழா விவரங்கள், பதிவு செய்தோர் விவரம், பணம் அனுப்பியோர் விவரம் என எல்லாமே உடனுக்குடன் புள்ளி விவரமாக அறிய் திரு. தனபாலன் அண்ணா அவர்களின் வலைப்பூவுக்குச் செல்லுங்கள்...
திண்டுக்கல் தனபாலன்

லைப்பதிவர் கையேட்டில் உங்கள் விவரங்களும் இடம்பெற bloggersmeet2015@gmail.com என்ற மின்னலுக்கு உங்கள் விவரங்களை புகைப்படத்துடன் அனுப்பி வையுங்கள்.

வலைப்பதிவர் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக...

திண்டுக்கல் தனபாலன்

விழா சிறக்க வாழ்த்துக்கள்... நாங்கள்தான் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை... ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தளவு கலந்து கொள்ள முயற்சியுங்கள்... விழா வெற்றி விழாவாகட்டும்... நாமும் கோட்டையைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்பதைப் பறை சாற்றுவோம்... இது அந்தக் கோட்டையை அல்ல... தமிழ் எழுத்தாளர்களாய்... உலகம் போற்றும் வலைப்பதிவர்களாய்... வெற்றிக் கோட்டையைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்று சொல்ல வந்தேன்....

சரிங்க... நம்ம தனபாலன் அண்ணன் எந்த ஊர்ல இருந்து எத்தனை பேர் வர்றாங்கன்னு விவரமெல்லாம்  போட்டிருக்காரு.. எங்கெங்கோ இருந்தெல்லாம் வர்றாங்க... ஆனா தேவகோட்டை, காரைக்குடியில் இருந்து இதுவரை ஒரு பதிவர்கூட பெயர் கொடுக்கவில்லை. நிறையப் பேர் எழுதுறாங்க... ஆனா எல்லாரும் வெளியூர்களில் இருப்பார்களோ என்னவோ தெரியலை.... எது எப்படியோ கலந்து கொள்வோர் பட்டியியல் நம் ஊர் பெயரும் வரவேண்டும் நண்பர்களே... முயற்சியுங்கள்.... 

தேவகோட்டைப் பதிவர்கள் எல்லாம் வெளிநாடு வாழ் பதிவர்களாகிவிட்டோம் என்று நினைக்கிறேன்... வருவது குறித்து இன்னும் சரியான முடிவு கிடைக்காத சூழல்... எங்கள் ஆசை அண்ணன்... மீசை மன்னன்... தேவகோட்டை கில்லர்ஜி எல்லாருடைய சார்பாகவும் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.... :).

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்....
வலைப்பதிவர் மாநாடு சிறக்கட்டும்...
வாழ்க தமிழ்... வளர்க நம் தமிழ்...

இந்தப் பாட்டையும் கேட்டுட்டுப் போங்க...


நட்புடன்....
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அப்பாவா இப்படி..!

ப்பா அம்மாவிடம் சொன்னதைக் கேட்டதும் வருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் உடனே எழுந்து போனால் சரியா வராது என்று நினைத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மனசுக்குள் மட்டும் எப்படி இப்படி என்ற எண்ணம் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருந்தது.

இது நடக்கக்கூடிய காரியமா...? இது எப்படி சாத்தியமானது..? அப்படியா... இப்படியா... என எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு எப்படி நடந்திருக்கும் என்ற விடை மட்டும் தெரியவில்லை. அதற்கான விடை தெரியவில்லை என்றால் மண்டைக்குள் எழும் அப்படி இப்படியான கேள்விகளால் மூளை சிதறிவிடும் போல் இருந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸிற்காக வடிவேலு காமெடி பார்க்க ஆரம்பித்தான். அதில் இவன் அதுக்கு சரிவரமாட்டான் என்ற காமெடி ஓடிக்கொண்டிருக்க எதுக்கு சரிவரமாட்டான்னு வடிவேலு தெரிஞ்சிக்க அலைஞ்சிக்கிட்டுருந்தாரு... அதைப் பார்த்ததும் இது எப்படி நடந்திருக்குமென மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான்.

நம்ம அப்பா எப்ப சிம்புவோட அப்பாவா மாறுனாருன்னு யோசிச்சான்... நீங்க டிஆர்ன்னு நெனச்சா அது தப்பு... என்னா அவரு ரொம்பக் கூவுறாரு... இவரு கூவவே மாட்டாரு... எதையும் கமுக்கமாத்தான் செய்வாரு... ஆனா இவனைத் திட்டுறதை மட்டும் பக்கத்து வீட்டு நந்தினிக்கு கேக்குற மாதிரித்தான் திட்டுவாரு... அதுவும் கரெக்டா அவ காலேசுக்குப் போகும்போது வாசல்ல நின்னு அத்தனை மாட்டையும் கூப்பிடுவாரு. .. இவனுக்கு அவ மேல ஒரு இது... அவளுக்கும் இவன் மேல கொஞ்சம் இது இருக்குங்கிறதை பார்வையும்... சிரிப்பும் சொல்லும்... இருந்தாலும் சொல்லவோ கேக்கவோ பயம்... என்னைக்காச்சும் ஒரு நாள் சொல்லிப்பான்... சரி விடுங்க... இது காதல் கதையில்லையே... எதுக்கு நாம அவன் காதல் பின்னால போகணும்... இங்க சிம்பு அப்பான்னு இவன் சொன்னது வாலு படத்துல சிம்புவுக்கு வர்ற அப்பா... ரொம்ப எதார்த்தவாதி... பையனைத் திட்டாத ஒரு நல்ல அப்பா... அப்பா அந்தப் படத்தைப் பார்த்துட்டு மாறிட்டாரோன்னு நினைச்சிக்கிட்டான். இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்பக் கம்மியேன்னு அவன் மனசு சொல்லிச்சு... காரணம் அப்பாவுக்கு சினிமா பிடிக்காது.


டிவியிலும் மனசு ஓடலை... எல்லாரையும் சிரிக்க வைக்கிற வடிவேலுவே அவனுக்கு போரடிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு சானலாக மாற்றினான். 'ஏன்டா இப்படி மாத்திக்கிட்டே இருக்கே... கொஞ்ச நேரம் ஜோக் வையிடா'ன்னு கத்திய தங்கையை எப்போதும் கொலை வெறியோடு பார்ப்பவன், இன்று கொள்ளை அன்போடு பார்த்தான்.... சிநேகமாய் சிரித்தான்... 'ம்க்கும்.. இது இப்ப சிரிக்கும் அப்புறம் அடிக்கும் பேசாம எந்திரிச்சிப் போயிடலாம்' என்று எழுந்தவளை கையைப் பிடித்து இழுத்தான். என்னடா ரொம்ப பாசம் வழியுது என்றாள் பார்வையால்... 'அப்பா சொல்றது நிஜமாடி' கண்கள் விரியக் கேட்டான். 'எங்கிட்டே கேக்குறே... அப்பா அங்கதான் நிக்கிறாரு அவருகிட்ட கேளு... நீ ஒரு தண்டம்... அவரு ஒரு...' அதுக்கு மேல பேசாமல்   படக்கென்று எழுந்து சென்றாள் .அவளுக்கு இன்று அப்பா மேல் தனிப்பட்ட முறையில் கோபம்... எது கேட்டாலும் படிக்கிற புள்ளைக்கு எதுக்குன்னு திட்டுவாரு... ஆனா இன்று அவர் செய்த காரியம்... படிக்காத எருமைக்கு.... அதான்  அப்பாவை '.......' என்று சொல்ல வைத்தது.

எப்படி என்று யோசிக்கவெல்லாம் நேரமில்லை... எது எப்படியோ நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். இனி... அதாவது இன்று முதல் நடப்பவை நல்லதாக அமையட்டும் என்று நினைத்தபடி அப்பா அம்மாவை விட்டு நகரும் வரை காத்திருந்து அவசரமாக எழுந்து அவளிடம் ஓடினான். ' எப்படிம்மா...?அவரு சொல்றது உண்மைதானா...?'என்று அவளின் தோள் சாய்ந்து கேட்டான். 'ரொம்பக்  கொஞ்சாதே அவரு சொன்னது கேட்டுச்சுல்ல... உனக்கு கேக்கணுமின்னுதானே சத்தமாச் சொன்னாரு.... எங்கிட்ட வந்து உண்மையா பொய்யான்னு விசாரிக்கிறே?' என்று அவனைச் சீண்டினாள்.

'அப்பா.... அதுவும் நம்ம அப்பாவா... ஹிட்லராவுல்ல இருந்தாரு... எப்படி இப்படி மாறினாரு... எனக்குப் புரியவேயில்லை... அவருக்கிட்ட எப்பம்மா நான் பேசியிருக்கேன்...  இல்ல அவருதான் எப்ப எங்கிட்ட நல்லாப் பேசியிருக்காரு... என்னைய பாத்தாலே அவருக்கு உள்ளுக்குள்ள எரிச்சல்  எடுக்குது... நானா படிக்க மாட்டேன்னு சொன்னேன்... அது எங்கிட்ட வரலையின்னு சொல்லிருச்சு... சரி போன்னு விட்டுட்டேன்...  வேலைக்குப் போ... வேலைக்குப் போன்னா... சிம் கார்டு மாதிரி வீதி வீதியா போட்டு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரின்னு வேலையை விக்கிறானுகளா என்ன... போயி புரூப் கொடுத்து வாங்கிக்கிட்டு வர, நானுந்தான் அலையிறேன்...  கிடைக்கலை...' விஜபி தனுஷ் மாதிரி முகபாவனையை வைத்துக் கொண்டு பேசினான்.

'அப்பா... தம்பி... ராசா... உங்கப்பாரு முகம் கால் கழுவிட்டு சோபாவுல வந்து உக்காந்து டிவி பாக்குறாரு... நான் அவருக்கு காபி கொடுக்கணும்... நீ வேணுமின்னா அவருக்கிட்டே போயி கேளு' என்று அம்மா ஜகா வாங்க, 'ஆமா நா போயிக் கேட்டா கழுவிக் கழுவி ஊத்துவாரு... எனக்குத் தேவை பாரு...' என்று அகன்றாலும் இது எப்படி... அப்பாவா இப்படி... என்ற கேள்வி மட்டும் தொண்டைக்குள் தொக்கி நின்றது.

அப்போது வாசலில் சத்தம் கேட்டதும் எல்லோரும் எழ, முதல் ஆளாய் ஓடினான். அங்கே அப்பா அவனுக்காக வாங்கிய பைக்கை ஷோரும் பையன் ஓட்டி வந்து நிறுத்தினான். மாலை போட்டு பொட்டு வைத்திருந்த வண்டியைப் பார்த்ததும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை... 'என்னடா கலரு பிடிச்சிருக்கா...?' என்று பின்னாலிருந்து கேட்ட அப்பாவின் வாயில் முதன் முதலாக 'தண்டச் சோறு... முண்டம்... தறுதலை... வெட்டிப்பய... ஊருசுத்தி... ' எல்லாம் வரவில்லை... அப்பாவிடம் நிறைய மாற்றம்... எப்படி இது நடந்தது...? என்ற கேள்வி எழ, இனி எதுக்கு அதெல்லாம் எப்படியோ நடந்திருச்சு... என்று கேள்வியை அடக்கி ஆச்சர்யக்குறியாக்கி அப்பாவை ஒரு பார்வை பார்த்து மீண்டும் வண்டிக்கு திரும்பினான். மனசு மட்டும் வண்டியில் கை வைக்கத் துடித்தது, ஆனால் அவரு பாட்டுக்கு அர்ச்சனையை ஆரம்பிச்சிட்டான்னு யோசிச்சு பேசாமல் நின்னான்.

 சாவி நீட்டிய பையனிடம் காசு கொடுத்தபடி' தம்பிக்கிட்ட கொடுப்பா' என்றவர், 'போயி சாமிய கும்பிட்டுட்டு வா' என்றார். ஓடிப்போய் தீபாவளி அன்று பலகாரம் சுட்டதும் சாமிக்கிட்ட வச்சி கும்பிடு என்று அம்மா சொல்லும் போது வேகமாகப் போயி சாமிக்கு முன்னாடி வச்சிம் வைக்காமலும் விபூதியை பூசிக்கிட்டு வாய்க்குள் வைக்கும் அதே வேலையை படபடவென செய்து விட்டு வண்டிக்கு ஓடியாந்தான். அவனது பரபரப்பு அவர்களுக்கு இதழோரத்தில் சிரிப்பை வரவைத்தது.

'வண்டியை எடுத்துக்கிட்டு சுத்தாமா...இனியாச்சும் ஒரு வேலை தேடிக்கச் சொல்லு... அவனுக்கு பின்னால பொட்டப்புள்ள ஒண்ணு இருக்குங்கிற நினைப்பு இருக்கட்டும்...' என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கண்டுக்காமல் தங்கையை தேடினான்... முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து குரூரமாய் சிரித்தபடி எல்லாம் மறந்து பறக்கலானான்... எதிரே அதே புன்னகையில் நந்தினி... அவளைப் பார்க்கும் வரை அவனது அப்பா ஹீரோவாகத் தெரிய, பார்த்த பின் வருண் ஹீரோவானான்.

-----------------

(இது முதலில் கவிதையாய்த்தான் உருவானது. கவிதையை அப்படியே கதையாக மாற்றுவோமே என்ற முயற்சியில் கவிதையில் விதை எடுத்து கதை ஆக்கியாச்சு... என்ன அங்கங்கே மானே தேனே பொன்மானே போடுற மாதிரி நந்தினி, அம்மா, தங்கை கதாபாத்திரங்கள் இணைத்தாச்சு... கவிதையில் அப்பா வாங்கி வந்ததைப் பற்றி உண்மையா என்று மகன் யோசிப்பதாய் எழுதி கடையில் வாசலில் ஸ்கூட்டர் என்று எழுதியிருந்தேன்...)

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்

ணக்கம் உறவுகளே...!

ரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம்... அதனால் உங்கள் பதிவுகளை எல்லாம் இன்றில்லாவிட்டாலும் நாளை என்ற நிலையில் வாசித்து விடுகிறேன். ஆனால் கருத்து இடுவது ரொம்ப குறைந்து விட்டது. காரணம் அலுவலகத்தில் இருந்து வந்து சமைத்துச் சாப்பிட்டு பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் படுத்துக் கொண்டே வாசிப்பதாலும் மற்றவர்கள் உறங்கும் காரணத்தால் லைட் ஆப் செய்து விடுவதால் கருத்து இடுவதில் சிரமமாகி விடுகிறது. மற்றபடி உங்கள் பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார விடுமுறையில் கண்டிப்பாக வாசிக்கும் பதிவுகளுக்கு கருத்து இட்டுவிடுவேன். கொஞ்ச நாள்தான்... பின்னர் எல்லாம் சரியாகும் என்ற  நம்பிக்கை இருக்கிறது.

கைச்சுவையில் வைகைப்புயல் வடிவேலு களத்தில் இல்லாததால் விஜயகாந்தை வைத்து பெரிய காமெடி தர்பாரே முகநூலில் நடக்கிறது. இது அம்மாவுக்காக சிலர் செய்யும் செயல் என்று கூட என் நண்பர் என்னிடம் வாதிட்டார். விஜயகாந்த் நின்றால்... உக்கார்ந்தால்... சிரித்தால்... முறைத்தால்... என எல்லாமே நகைச்சுவையாகிறது. ஒரு மனிதரை கேலி பண்ணும் சுதந்திரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதே ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைக்குள் குரல் கொடுத்த ஒரே ஆம்பளை விஜயகாந்த்தான்.... தன்னால் முடிந்த நல்ல செயல்களை செய்பவரும் விஜயகாந்த்தான்... தான் செய்ததை வெளியில் சொல்லாதவரும் அவர்தான்... ஆனால் சமீபகாலமாக தனது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் அவருக்காக தமிழில் டைப் செய்யும் நபர், விஜயகாந்த் செய்த செயல்களைப் பதியும் போது நான் இன்று இவருக்கு இவ்வளவு கொடுத்தேன் என்று  எழுதி வைக்கிறார். இங்கே நான் என்பது விஜயகாந்தைக் குறிக்கும்... ஒரு கை செய்வது மற்றொரு கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லுவாங்க.... ஆனால் இங்கு 'நான்...' 'நான்...' என்ற பெருமையே தலை தூக்கி நிற்கிறது. அதை மாற்றினால் நல்லது. சரி விஷயத்துக்கு வருவோம். விஜயகாந்த்  அரசியலில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். தனி மனிதராப் பாருங்கள்.... எதற்காக அவர் மீது அப்படி ஒரு வன்மம்... விஜயகாந்த் பிறந்தநாள் அன்று ஒரு பெரிய கட்டுரை எழுதலாம் என்று நினைத்து வேலைச் சோர்வினால் முடியாமல் போக இங்கு ஒரு பாராவிற்குள் சுருக்கியிருக்கிறேன். என்னடா இவன் விஜயகாந்துக்கு சொம்பு தூக்குறானேன்னு நினைக்காதீங்க... அரசியல்வாதியாய் நான் விஜயகாந்தைப் பார்க்கவில்லை... காரணம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று நினைத்தாலும் அங்கும் மாமன் மச்சான்தானே இருக்கானுங்க.... சரி விடுங்க... கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஒரு நடிகனாய்... நல்ல மனிதனாய்... எனக்குப் பிடிக்கும்... அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



ரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.... ஒரு நல்ல நடிகராய் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். குறைந்த செலவில் தானே படத்தை எடுத்து பாடல்களும் பாடி வெளியிட்டிருக்கிறார்.  ஆனால் அழுத்தமில்லாத கதையோட்டமும்.... உப்புச்சப்பில்லாத பாத்திரப் படைப்புக்களும் படத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு அயற்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் வளர்ந்து வரும் போது நல்ல பாத்திரங்களை எடுத்து செய்ய நினைப்போர் மத்தியில் இரண்டு கதாநாயகர்கள் கதை... இது போன்ற வீணாப்போன கதைகளை எடுத்து நடிப்பதைவிட அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்களில் நடித்தால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இல்லையேல் அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள்தான் என சிவகார்த்திகேயர்கள் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். மாற்றங்கள் செய்து மீண்டும் மலர்வாரா பார்ப்போம்.

ம்மா அம்மான்னு நம்ம டவுசர் ராஜன் மதுரையில கூவியிருக்காரு கூவு எப்பா நம்மளாலே பாக்க முடியலை... எல்லாருக்கும் ஒரு அம்மா... ஆனா தமிழகத்துல இருக்க ஆறுகோடி மக்களுக்கும் அம்மாவாம் மக்கள் முதல்வர்.... அப்துல்கலாம் அவர்களின் இறுதி அஞ்சலிக்குக் கூட போகாத அம்மா ஒருவாரம் அரசு அலுவல்களை எல்லாம் அஞ்சலிக்காக நிறுத்திவைத்தாராம்...  சசிபெருமாள் ஐயா, டிராபிக் இராமசாமி ஐயா, இளங்கோவன், விஜயகாந்த், குஷ்பு என எல்லாரையும் கேவலமாகப் பேசுகிறார். கொடுத்த காசுக்கு நல்லா கூவியிருக்காரு.. ஆனா சினிமாவில் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக... அம்மாவுக்காக ஒரு தனிப் பாடல் என நடித்தவர் இன்று கேடுகெட்ட அரசியலுக்காக அம்மாவைப் புகழ்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன்... பல அம்மாக்களின் மனம் கவர்ந்த நாயகன்... இவ்வளவு கேவலமாக... எல்லாம் அரசியல்... இதை வேற அம்மா புகழ் பாடும் தினமலர் 'மதுரையில் ராமராஜன் டமால் டுமீல்' அப்படின்னு போட்டு விடியோ பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். என்ன டமால் டூமீலு.... இவனுக கலாம் ஐயா செத்தப்பவே 'காலமானார் கலாம்' அப்படின்னு போட்டவனுங்கதானே.... என்ன இருந்தாலும் எனக்கு கிராமத்து ராஜாவான ராமராஜனை ரொம்பப் பிடிக்கும். இப்ப இல்லைங்க நாயகனாய் ஜொலித்த காலத்தில்.... அதே மாதிரி அம்மாவையும் ரொம்பப் பிடிக்கும்... ஆமா என்னைப் பெற்ற அம்மாவையும்... என்னை மகனாகப் பார்த்த அம்மாக்களையும்...

வேரும் விழுதுகளும் தொடர்கதையை 33 அத்தியாயங்களோடு முடித்து விட்டேன். இன்னும் இழுக்கலாம்... கலையாத கனவுகள் போல் நீண்டு கொண்டே போய்விடுமோ என்பதால் சரியான சமயத்தில் முடித்தேன். முதல் தொடருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை பேராசியர்களும். பெருந்தகைகளும், அம்மாக்களும் அக்காள் தங்கைகளும், அண்ணன் தம்பிகளும், தோழர் தோழிகளும் வாசித்து கருத்துச் சொல்லியிருந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தக் கதையை புத்தகமாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. எனது நலம் விரும்பும் அண்ணன் ஒருவர் வாசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்... அவரின் மனதை எனது கதை கவர்ந்தால் புத்தகம் ஆக்கும் எண்ணத்தை பூர்த்தி செய்யலாம். பார்ப்போம்... சகோதரி மேனகா அவர்கள் க்ரைம் தொடர் எழுதுங்கள் என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். சரி ஒரு குறுநாவல் எழுதலாம் என்று யோசித்தால் கொலை செய்யவே வரமாட்டேங்குது... :( எப்படி சஸ்பென்ஸாக் கதை எழுதுறது... ரொம்பக் கஷ்டம்... இப்போதைக்கு தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை... பார்க்கலாம். சொல்ல மறந்துட்டேனே... என்னை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி.

ல்கி சிறுகதைப் போட்டிக்கு குறுநாவல் எழுத எண்ணம்.... ஆனால் இன்னும் ஒன்றும் தோன்றவில்லை... எதாவது வித்தியாசமான கரு தோன்றினால் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். நீங்களும் எழுதுங்கள் நண்பர்களே...

ன்னைச் சகோதரனாகப் பாவிக்கும் சகோதரிகளில் 'தம்பி எப்படியிருக்கே?' என்று விசாரித்துக் கொண்டே இருக்கும் காயத்ரி அக்காவைப் போல் சேனைத் தமிழ் உலா என்ற இணையப் பக்கத்தின் மூலமாக எனக்கு அறிமுகமாகி... (அவருக்கு என்னை அதற்கு முன்னே எனது எழுத்துக்கள் மூலமாகத் தெரியும் என்பதை பின்னர்தான் சொன்னார்) இன்று இரவு பத்து, பதினோரு மணிக்கெல்லாம் முகநூலில் இருந்தால் 'தம்பி என்ன பண்ணுறே...? மருமக்கள் நலமா?' என இலங்கைத் தமிழில் டைப்பும் அன்பு அக்கா நிஷா அவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் திருமண நாள்... திருமண நாளுக்கு முன்னர்  அக்காவுக்கு கையில் சிறிய காயம்... காயம் குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அக்காவின் திருமண நாளுக்கு... இந்தச் சந்தோஷம் என்றும் தொடரட்டும் என வாழ்த்துவோம். 

ண்பர் ஆவியின் தலைவாரி பூச்சூடி என்ற குறும்படத்தைப் பற்றி தில்லையகத்து துளசி சார் தனது பதிவில் சொல்லியிருந்தார். உடனே அதிகாலை முதல் வேலையாக படத்தைப் பார்த்தேன். அஞ்சரை நிமிடங்கள் ஓடும் படம். இருவரை வைத்து எடுத்திருக்கிறார். மிக நல்லதொரு கருத்து அதுக்கு ஆவிக்கு ஒரு சபாஷ். அம்மாவாக வரும் சகோதரி அனன்யா மகாதேவன் சிறப்பா செய்திருக்கிறார்கள்.  பேசுவதற்கு முன்னரே வரும் ஆங்கில சப்டைட்டில்... மொபைலை கையில் எடுத்த பின்னரே ரிங்க் ஆவது... பின்னணி இசையும் இன்னும் சரிபார்த்திருக்கலாம்.... என்ற எண்ணங்களை எனக்குள் விதைத்தது. என்னடா இவன் குறை சொல்றானேன்னு நினைக்காதீங்க... குறை அல்ல... ஒரு நல்ல கரு... அழகான படப்படிப்பு... எல்லாம் இருந்தும் இதுபோன்ற சின்ன விஷயங்கள் கொஞ்சமாய் சொதப்பிவிடுகின்றன... எனக்குப் பிடிச்சிருக்கு... நீங்களும் பாருங்கள்.


கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பாட்டுக் கேட்கலாம்... எவ்வளவு அருமையா இருக்கு பாருங்க...


மனசின் பக்கம் மீண்டும் மலரும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முயற்சியின் முடிவில்...


து நடந்திருக்கக் கூடாதுதான்
ஆனால் நடந்துவிட்டது...

தொடரும் முயற்சிகள் எல்லாமே
தோல்வியின் பிடியில்...

அப்படியிருந்தும் துவளவில்லை
முயற்சிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டேதான் இருந்தது...

இருப்பினும் மனதில் மட்டும்
அது நடந்திருக்க கூடாதென்ற
எண்ணம் வட்டமிட்டுக் 
கொண்டுதானிருந்தது...

மீண்டும் மீண்டும் எகிறினாலும்
ஏனோ எட்டமுடியவில்லை...

மற்றவர்களின் கிண்டல்களை
மனதுக்குள் செல்ல விடவில்லை
முயற்சியின் வேகம்...

'முயன்றால் முடியும்...'  என்ற 
தாயின் கூவல் இன்னும்
உத்வேகத்தைக் கொடுத்தது...

முயற்சிகள் எல்லாம் 
முடிவில் பூஜ்ஜியமாய்...
விடாது தொடரும்
முயற்சிக்கு இறுதியில்
வெற்றி கிடைக்கலாம்...

எதிர்மறையாகும் போது
பரிதவிக்கும் தாயின் கரம் 
எளிதாக தூக்கியும் விடலாம்...

எது எப்படியோ...
வீழும் போதெல்லாம்
விரிக்கும் சிறகுகளில்
விண்ணைத் தொடும் வேகம்...

வெற்றியைச் சுவைக்கும்
வேகத்தில் சிறகை விரித்தது
தவறுதலாய் குழிக்குள் 
விழுந்த கோழிக்குஞ்சு..!
-'பரிவை' சே.குமார்