மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஜூலை, 2010

வறுமை


கானல் நீராய் கனவுகள்
வானவில்லாய் எண்ணங்கள்
மழை மேகமாய் கற்பனைகள்
அமாவாசையாய் ஆசைகள்
இருந்தும் பயன்...?

தூரத்து நட்சத்திரமாய்
பொருளாதாரம்...
வானத்து நிலவாய்
வளர்ந்து தேயும் வாழ்க்கை..!

-----------

ஊரெங்கும் கொண்டாட்டம்...
அம்மனுக்கு ஆராட்டு...
அதே நாளில் கிறிஸ்தவர்
பகுதியிலும் விழா...
அது மட்டுமா?
முஸ்ஸீம்களின் சந்தனக்கூடு...
எங்கு பார்த்தாலும்
விழாக்காலம்...
நாங்கள் மட்டும்
எச்சில் இலைக்காக
ஏங்கியபடி...!

(இந்தக் கவிதை நான் தேவகோட்டை கல்லூரியில் வேலை பார்த்தபோது இதயா மகளிர் கல்லூரியில் வெளிவந்து கொண்டிருக்கும் இதய வீணை முத்திங்கள் இதழில் வெளியானது)

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 29 ஜூலை, 2010

மனசைப் பாதித்த சில...



பாலைவன வாழ்க்கையில் பெற்றதும் இழந்ததும் என்று மனோ சாமிநாதன் அம்மா அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார்கள் (படிக்க : பகுதி-1 , பகுதி-2.) அவர்களது கட்டுரையில் எல்லாமே இங்கு நடந்த, நடந்து கொண்டிருக்கிறவைகளைத்தான் அதில் தெரிவித்திருந்தார். அதன் தாக்கமாக நானும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் எங்களால் சார் என்று அழைக்கப்படும் நாங்கள் மிகவும் மதிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த இஞ்சினியர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த சோகம் யாருக்குமே நிகழக்கூடாது என்பதே என் வேண்டுதல்...

அது....

அவர் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பாலைவன பூமியில் இருக்கிறார். இடையிடையே குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்திருந்திருக்கிறார். நான் இங்கு வந்த பிறகு ஒருமுறை குடும்பத்தை கொண்டு வந்து வைத்திருந்தார். அவருக்கு ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரண்டு பிள்ளைகள். இருவரையும் நல்லா படிக்கவைத்து வேலைக்கும் போகிறார்கள்.

அவரது பெண்ணுக்கு 23 வயது இருக்கும். இவர் ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் மகளுக்கு நகைகள் வாங்கிக் கொண்டு போவார். ஊருக்குப் போனால் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்ற வேண்டும் என்கிற பட்டுப்புடவைகளை வாங்கி கொடுத்து மகிழ்வார்.

சில தினங்களுக்கு முன் எங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக எங்கள் அறைக்கு வந்திருந்து பிரியாணி செய்து சாப்பிட்டு சந்தோஷமாக கழித்தார். மறு நாள் காலை அவர் கிளம்பும்போது ஊரில் இருந்து போன் வந்துள்ளது. மகளுக்கு உடலநிலை சரியில்லை என்று சொல்லி சாதாரண காய்ச்சல்தான் என்றதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்கு கிளம்பி இருக்கிறார். நிலமை சீரியஸ் என்று சில மணி நேரங்களில் மகன் போன் செய்யவும் அண்ணாவிடம் போனில் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு மருத்துவமனையில் குளுக்கோஸ் போடுவதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் மகன் போன் செய்ய, அவரும் அலுவலக வேலையில் ஐக்கியமாகிவிட்டார். இரவு அண்ணன் போன் செய்ய, காய்ச்சல் கொஞ்சம் சிவியராத்தான் இருக்காம். குளுக்கோஸ் போய்க்கிட்டு இருக்காம் என்றதும் அண்ணா நீங்க உடனே ஊருக்கு போங்கள் என்றார். அதற்கு இல்லப்பா இப்பதான் பொயிட்டு வந்தேன் சாதாரண காய்ச்சல்தானாம் சரியாயிடும் என்றார்.

'அன்று இரவு அவர் யாருக்காக இத்தனை வருடங்கள் இந்த பாலைவன பூமியில் சம்பாதித்தாரோ அந்த தங்கம்... அவரது இதயம்... நினைவில்லாத நிலையிலேயே மரணித்து விட்டாள். தங்கக் கிளியாக வளர்த்த தந்தை முதல் நாள் சென்றிருந்தால் தனது ஆசை மகளுடன் எதாவது பேசியிருக்க்கலாம். ஆனால் அவள் இறந்த பிறகு சென்ற தந்தைக்கு அவளின் உயிறற்ற உடலுக்கு கடன் செய்வதுமட்டுமே மிஞ்சியது. இதை விட கொடுமை என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?



இந்த சம்பவம் குறித்து நான் தற்பொழுது செல்லும் கவர்மெண்ட் அலுவலகத்தில் தமிழ் நண்பருடன் பேசும்போது, அவர் சொன்ன தகவல் என்னை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அது...

அவர் இங்குள்ள கிளினிங் கம்பெனிக்கு வேலைக்கு வந்து ஆறு மாதத்தில் அப்பா இறந்துவிட இரவெல்லாம் அழுது காலையில் கம்பெனியில் கேட்டபோது, ' கிளினிங் கம்பெனியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் விடுப்பு வழங்கப்படும். வந்த ஆறுமாதத்தில் எப்படி விடுமுறை கிட்டும்' என்று எதேதோ பேசி, நீ போய் என்ன செய்யப் போறே என்று அவரை விடவில்லையாம். இந்த தகவலை அவர் சொன்னபோது அவரது கண்களில் கண்ணீர் அணை கட்டியதை நான் பார்த்தேன்.

இங்கு படித்தவர்கள் அலுவலகங்களில் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கலாம். படிக்காமல் கட்டிட வேலைகளுக்கு வருவோர் அடிக்கும் வெயிலில் நாப்பது, அம்பது மாடி கட்டிடங்களில் வேலை செய்து குறைந்த சம்பளத்தை வாங்கி அதற்குள் இங்கும் செலவு செய்து, ஊருக்கும் அனுப்பி அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.

இதில் இன்னொன்று இங்குள்ள நண்பர்கள் வார விடுமுறை என்றாலே எதோ தண்ணி அடிப்பதற்காகவே விடுவது போல் காலையில் இருந்து இரவுவரை பாட்டிலுடன் தான் குடும்பம் நடத்துகிறார்கள். தண்ணியடித்துவிட்டு இவர்கள் அடிக்கும் லூட்டியை ஊரில் இருக்கும் இவர்களது குடும்பம் அறிய வாய்ப்பில்லை.

முன்னர் தங்கியிருந்த் கட்டிடத்தில் நாங்கள் இருந்த பிளாட்டில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் குடி குடி என்று இருந்து மோசமான நிலைக்குப் போய் மருத்துவமனையில் காண்பித்தும் குடியை நிறுத்தாததால் ஒரு நாள் காலை பாத்ரூமிற்குள் சென்றவர் அட்டாக்கில் அதற்குள்ளேயே இறந்துவிட, போலீஸ் வந்து பாத்ரூம் கதவை அறுத்து எடுத்தது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஆறே மாதம்... அதுவும் காதல் திருமணம். இவரது குடியால் இறந்தது இவரென்றால்... இருந்தும் அழிந்தது அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையல்லவா?

என்னடா இவன் ஒரே சோகமாக அடுக்குகிறானே என்று நினைக்காதீர்கள் நண்பர்களே... பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு.

இத்தனையும் கடந்து சம்பாதித்து ஊரில் உள்ளாவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

நண்பர் புலவன் புலிகேசி போபால் குறித்த பதிவுகளுக்காக போபால் என்ற வலைப்பூ ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் யார் வேண்டுமானாலும் போபால் கொடுமைகள் குறித்து எழுதலாம். அந்த வலைப்பூ படிக்க இங்கே சொடுக்கவும். வலைப்பூ குறித்த நண்பரின் விளக்கம் இங்கே.


-'பரிவை' சே.குமார்.



செவ்வாய், 27 ஜூலை, 2010

பேரம்

(Thanks : Google)


"ம்பா... பழம் என்ன வெல..?"

"வெலயக்கேட்டு வாங்கப் போறியா பெரிசு... காலையில வந்து கடுப்பேத்தாதே..."

"என்னப்பா... காலையில வர்ற யாவாரத்துக்கிட்ட இப்புடி பேசுறியே நீ யாவரம் பாத்து கிழிச்சியல்ல"

"சரி... என்ன வெல வேணும் உனக்கு"

"பழ விலைதான் கேப்பாங்க... அப்புறம் பழக்கடைக்கு வந்துட்டு ஆடு வெலயாக் கேப்பாங்க"

"நல்லா பேசுற பெரிசு... பொத்தாம் பொதுவுல பழ வெல கேட்டா எதை சொல்ல... ம்... சரி... ஆப்பிள் அறுவது, ஆரஞ்சு முப்பது, திராட்சை இருபத்தி அஞ்சு, வாழப்பழம் டஜன் பதினெட்டு, சாத்துக்குடி நாப்பது..."

"இருப்பா...அடுக்கிக்கிட்டே போறே... நாப்பத்தஞ்சு ரூபான்னு ஆப்பிள்ல ஒரு கிலோ போடுப்பா"

"என்னது நாப்பத்தஞ்சா... அட போ பெரிசு, காலையில வந்து கழுத்தறுக்காம... எனக்கு அடக்கமே அம்பத்தஞ்சாகுது. அறுபதுக்கு குறைஞ்சு இல்ல"

"ஏம்ப்பு விக்கத்தானே வச்சிருக்கே... நான் கேக்குறது சரியின்னு படலைன்னா நீ கொடுக்கிறவிலைய சொல்லு அதை விட்டுட்டு..."

"பெரிசு அடக்கம் அம்பத்தஞ்சு அதுக்கு வேணா தாரேன். எனக்கு லாபம் இல்லாட்டாலும் பரவாயில்லை"

"ஆமா... நீ கூட லாபம் இல்லாம கொடுப்பே... அம்பதுன்னு போடுப்பா..."

"இல்ல பெரிசு... முத கிராக்கி தட்டிபோனா அப்புறம் எல்லாமே தட்டிப்போகும்... அம்பத்தி மூணுன்னு போடுறேன்..."

"சரி போடு... ம் அந்த பழத்தைப் போடு. இது வேணா அடிபட்டிருக்கு பாரு. நல்லதா போடு"

"எம் பெரிசு எங்க அடிபட்டிருக்கு... சும்மா ஏம்ப்பு.?"

"காசு கொடுத்துதானே வாங்குறோம்... சும்மாவா தாரே"

"அது சரி..."

"இன்னொரு பழம் ஒண்ணு போடுப்பா..."

"நிறுவையெல்லாம் கரெக்டா இருக்கும்ப்பு... வேணும்மா பக்கத்து கடையில கொடுத்து அளந்து பார்த்துக்க"

"ஆமா இதுக்காக நான் அவன் கடைக்கு போறேன். அட ஏம்ப்பு நீ வேற..."

"இந்தாங்க அம்பத்தி மூணு கொடுங்க"

"இருப்பு... முப்பதுன்னு சாத்துக்குடி ஒரு கிலோ குடு"

"சும்மா போ பெரிசு... இதுக்கு காசை குடுத்துட்டு அடுத்த கடையில வாங்கிக்க"

"ஆமா உங்கடையில ஆப்பிளு வாங்கிட்டு அடுத்த கடைக்கு போறேன்... எவ்வளவுன்னா கொடுப்பே..."

"முப்பத்தஞ்சுன்னு போட்டு வாங்கிக்க"

"சரி கொடு..."

"பாரு இதுலயும் அடிபட்டதை கொடுக்கப் பாக்குறே... நல்லதா போடுப்பா"

"ஏம் பெரிசு லேசா அடிபட்டதெல்லாம் வேண்டான்னா நான் எப்படி யாவாரம் பண்றது?"

"அதுக்கு நாந்தே கெடச்சனா... எவனாவது கிராமத்துல இருந்து முழங்காலுக்கு எத்திக்கட்டின வேட்டியும் வெத்து உடம்புமா வருவான் அவன் தலையில கட்டு..."

"அட இங்க பார்ரா பெரிசுக்கு லொல்லை... நீங்க எங்க இருந்து வாரீங்க... அமெரிக்காவுல இருந்தா... நீயும் பட்டிகாடுதானே... அப்புறம் என் இப்புடி அள்ளிவிடுறே..."

"என்ன பண்ண கிராமத்தான்னா ஏமாத்திடுவீங்கள்ல"

"சரிதான்... சரியான ஆளுதான். இந்தா புடி..."

"அப்புடியே வாழப்பழம் ஒரு டசன் கொடு"

"அப்பு இதுல கொறைக்க முடியாது... பதினெட்டுனா தர்றேன்... இல்லேன்னா இதுக்கு மட்டும் காச கொடு"

"அட ஒரு ரெண்டு ரூபா கம்மி பண்ணி கொடுப்பா..."

"அதானே பாத்தேன்... அது எப்புடி அதே வெலக்கு வாங்குவே... என்னாகுறது உன்னோட தீர்மானம்... சரி புடி இன்னைக்கு காலையில உங்கிட்ட மாட்டணுமுனு இருந்திருக்கு...ம்... அம்பத்தி மூணும் ஒரு முப்பத்தஞ்சும் எம்பத்தெட்டு... இது ஒரு பதினாரு... அப்பு நூத்தி நாலு கொடுப்பு..."

"இந்தா.."

"என்ன நூறு ரூபா கொடுக்கிறே... நாலு ரூபா கொடு"

"அட ரவுண்டா வச்சுக்கப்பா..."

"என்ன பெரிசு உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு... அட காலையில வதைய வாங்காம கொடு பெரிசு... அதான் எல்லாத்துலயும் கொறச்சு கொடுத்தாச்சுல்ல"

"என்னப்பா ஒண்ணோட... சில்லறயில்லப்பா"

"எவ்வளவுக்கு வேணும் நான் தர்றேன் கொடு..."

"விடமாட்டியே... சரி இந்தா ரெண்டு ரூபாதான் இருக்கு"

"அதுல ரெண்டு ரூபா குறைச்சாத்தான் ம்னசு ஆறும்போல... "

"வாரேம்பா..."

"வராதே...நல்ல நேரத்துல கடைய திறந்திருக்கேன். இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேனோ நாளைக்கும் தேடிப்போயி முழிக்கணும்"

"என்னப்பா முணங்குறே..."

"ஒண்ணுமில்லே"



"ம்பா மல்லிகைப்பூ என்னப்பா வெல"

"அடுத்து மாமூவா... மாட்டுனேடி மாமூ"

"ஏம்ப்பா... அடுத்த கடையில சாமான் வாங்கும்போது நீ ஏன் பேசுறே. உங்கடையில யாவாரத்தைப் பாரு?"

"சரி பெரிசு... நீ ஆரம்பி"

"நூரு பத்து ரூபாயா? அடேயப்பா அநியாய வெலயா இருக்கே... மதுர மாட்டுத்தாவணியில நூரு ரெண்டு ரூவாக்குத்தாரான்..."

"சரி பெரிசு... இந்தா கண்ணப்பா கிளம்புது ஏறி முப்பது ரூபாக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு படம் போடுவான் பாத்துக்கிட்டு போனா மதுரயில கொண்டே எறக்கிவிடுவான். நூறு ரெண்டு ரூபாக்கி வாங்கிக்கிட்டு வரலாம்"

"அடேங்கப்பா... எ உனக்கு இம்புட்டு கோவம்? விக்கிறான்னுதானே சொன்னே... உன்னைய கொடுக்கச் சொல்லலையே... கட்டுற வெலைக்கு கொடு..."

"அப்பு பத்து ரூபாதான்... உனக்கு எவ்வளவு வேணும் ஐநூறா... ஆயிரமா..? சொல்லு பாத்துப் போட்டுத்தாரேன்..."

"முதல்ல நீ வெலயச் சொல்லு"

"எட்டு ரூபான்னு தாரேன்..."

"சரி நூறு கொடுப்பா..."

"இதுக்குத்தான் இப்புடி பேரம் பேசினே... விளங்கிடும் போ..." என்றபடி மல்லிகைப்பூ கன்னியை எண்ண,

"நல்லா எண்ணுப்பு... பேசிக்கிட்டே கன்னிய விட்டுறப் போற. ரெண்டு கன்னி சேத்து வெட்டுப்பா"

"அப்பு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கா எண்ணுற எனக்கு கணக்குச் சொல்லித்தரியா? இந்தா எட்டு ரூபா எடு"

"இந்தாப்பா..."

"எங்ககிட்ட பேரம் பேசுங்க... பெரிய கடைக்குப் போயி சாமான் வாங்கும்போது போட்டிருக்க வெல கொடுத்து வாங்குவீங்க. அப்ப இப்புடி பேரம் பேச மாட்டிங்க. அவன் தரமாட்டான்னு தெரியும்"

"வாரேம்பா..."

"ம்..."

"மாமூ... வலுவான கிழடுதான். அதான் வீட்டுல இதை அனுப்பியிருக்காங்க."

"ஆமா... எல்லாத்துலயும் ரெண்டு ரூபாயாவது லாபம் பாக்காம பெரிசு விடலை பாத்தியா"


றுநாள்...

தனது சைக்கிளில் தோட்டத்தில் பறித்த காய்கறிகளை கட்டிக்கொண்டு வியாபாரத்துக்கு கிளம்பினார் பேரம்.

"பெரியவரே... கத்திரிக்காய் என்ன வெல"

"கிலோ பதினஞ்சும்மா"

"பதினஞ்சா... அரைக்கிலோ வேணும் வெலய பாத்துப் போட்டுக் கொடுங்க..."

"எத்தனை கிலோ வாங்கினாலும் அஞ்சு பைசா கூட கொறச்சுத் தரமாட்டேன். இது மூட்டைக் கத்திரி இல்ல... தோட்டத்துல காலையில பறிச்சு கொண்டு வாரேம்மா. கடக்காரங்கிட்ட காஞ்சு போன கத்திரிக்காயை இருவது ரூவா கொடுத்து வாங்குவீங்க... இது எப்புடியிருக்கு பாரு.... ஒரே வெலதான் வேணுமின்னா வாங்கு"

"சரி போடுங்க... அஞ்சு பைசா கூட கொறக்க மாட்டிங்களே" என்றபடி காயை வாங்க, 'கத்திரிக்காய், வெண்டைக்காய்... " என்று கத்தியபடி சைக்கிளை மிதித்தார் கறார் பேரம்.
 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

பயணம் எதுவரை..?


ஏதோ நினைவில் எங்கோ பயணம்...
போகுமிடம் மனதில் இல்லை...
திரும்பி வரும் எண்ணம்
இதுவரை எழவேயில்லை..!

இலக்கில்லா இந்தப் பயணம்
எதுவரை போகும்..?

வாழ்வின் எல்லை வரையிலா..?
வயதின் முதிர்ச்சி வரையிலா..?
தெரியாமலே பயணம்...

எப்படிப்பட்ட பாதை
என்பது தெரியாது..!

எங்கே போய் எங்கே முடியும்
என்பது தெரியாது...

இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...

இதுவரை பயணித்தோரின்
வழித்தடத்தில் பயணம்...

நாளைய பயணத்தில்
எத்தனை வழித்துணை....
என்பதறியா பயணம்..!

நாளை பய(ண)த்தில் நான்...?

-'பரிவை' சே.குமார்

வியாழன், 22 ஜூலை, 2010

புறையோடிய சாதி வேர்

சுந்தரம் தாத்தான்னா சிறுசுகளுக்கெல்லாம் ரொம்ப பயம்... அவரு பீடியும் பிடிப்பாரு... பொடியும் போடுவாரு... அவரு கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துப் பிடிச்சு பொடியை எடுத்து மூக்குல வச்சி 'சர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்னு' ஒரு உறிஞ்சு உறிஞ்சிட்டு கைய உதறப்ப பக்கத்துல இருக்க ஆளுங்க தும்ம, அவரு மட்டும் எதுவுமே நடக்காதது போல முகத்தை வச்சுக்கிட்டு மூக்கை தேச்சுக்கிட்டு இருப்பாரு.

பசங்களுக்கு அவருகிட்ட என்ன பயமுன்னா தம் அடிச்சிட்டு கண்ணுக்குள்ள புகை வருது பாருன்னு சொல்லி, ஆன்னு பாக்கும்போது கால்ல சுட்டு விட்டுடுவாரு... இல்லேன்னா பொடியை எடுத்து மூக்குல வச்சு விட்டுடுவாரு. அதனால சின்ன பசங்க அவரை கண்டாலே அய்யோ ரவுடித் தாத்தா வாராருன்னு ஒடிடுங்க...

ஆனா பாருங்க, பசங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டாலும் குணத்துல அவரு கர்ணன். யாருக்காச்சும் ஒண்ணுன்னா அவரால முடிஞ்ச உதவியை செய்வாரு. அவருக்கிட்ட உதவி பெற்றவங்கதான் அதிகம். அதனால பசங்க மத்தியில் மூக்குப் பொடி தாத்தா மோசமான்ன தாத்தான்னு பேரெடுத்தாலும் ஊருக்குள்ள புண்ணியவான்னு பேரெடுத்து வச்சிருக்காரு.

காலையில ஒரு பத்துமணி இருக்கும் வெயிலுக்கு தலையில துண்டப் போட்டுக்கிட்டு மாமரத்தடியில கூடி இருக்கும் அவர் வயதொத்த மனிதர்களுடன் மனம்விட்டு பேச போய்க் கொண்டிருந்தார். தெருமுனை திரும்பும் போது மேலத்தெருவில் இருந்து இரைச்சல் கேட்டது. யாருக்கும் என்னாச்சோ என்னவோ தெரியலையே என்று பதறியபடி மேலத்தெருவுக்குள் நுழைந்தவர், ஏகாம்பரம் யாரையோ மயிரு... மட்டைன்னு சரமாரியாக பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். அவர் அருகில் போகவும் 'ஐய்யய்யோ... மூக்குப்பொடி தாத்தா..' என்று சிறுசுகள் பயந்து ஓட, கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனார். ஏகாம்பரம் ஏக வசனத்தில் பேச, அவருக்கு பதில் சொல்லும் விதமாக சோனையன் பேசிக் கொண்டிருந்தான்.

"ஏய் சோனையா... என்னடா மரியாதை இல்லாம வாய்க்கு வாய் பேசிக்கிட்டு..."

"வாங்க ஐயா... நீங்களே இந்த அநியாயத்தை கேளுங்க...என்னோட வயல்ல ஐயாவோட மாடு தினமும் வந்து மேஞ்சு பயிரை எல்லாம் பாழாக்கிடுது... அதை வந்து சொன்னதுக்குதான் வாயில வராத வார்த்தை எல்லாம் சொல்லி திட்டுறாரு..."

"என்ன ஏகாம்பரம்... அவன் கஷ்டப்பட்டு வெள்ளாமை பண்ணிக்கிட்டு இருக்கான்... வயல்ல மாடு அழிக்கிதுன்னா சரி இனிமே வராதுன்னு சொல்ல வேண்டியதுதானே... அதுக்கு எதுக்கு மசுரு... மட்டைன்னு..."

"வாங்க... நீங்க நாயம் பொழக்க வந்துருக்கீங்களோ...?"

"இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்படி கோபப்படுறே...?"

"பின்ன என்னப்பு... உங்களைப் பார்த்து சின்னப் பயலுக பயப்படுறாங்கன்னா எல்லாரும் பயப்படணுமா...?"

"நான் உன்னைய பயப்படுன்னு சொல்லலை... வெள்ளாமை யாரு உட்டா இருந்தா என்ன... இப்ப பொதி கட்டுற பருவம்... இந்த சமயத்துல மாடு அழிச்சா என்னப்பா மிஞ்சும்... அவனும் பிள்ளை குட்டிக்காரன் அதை நம்பித்தானே இருக்கான்... இனிமே மாட்டை அவுக்கும் போது பின்னால ஆள் போகச்சொல்லு... இல்லே தரிசு வயல்ல கொண்டு போய் முளக்குச்சியடிச்சு கட்டிப் போட்டு மேய விடு..."

"யோவ் பெரிய மனுசன்னு பாக்கிறேன்... இல்ல மரியாதை கெட்டுடும்... ஒரு பர நாய்க்கு ஏந்துக்கிட்டு சாதிக்காரனுக்கே புத்தி சொல்றீங்களோ...? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க போதும்..."

"என்னப்பா... சாதியெல்லாம் இழுத்துக்கிட்டு... இப்ப என்ன சொன்னேன்னு இவ்வளவு கோபப்படுறே...?"

"ஐயா நீங்க விடுங்கய்யா.... எனக்கா நீங்க எதுக்கு கேவலப்பட்ட பேச்சு வாங்குறீங்க... நான் பார்த்துக்கிறேன்... நீங்க போங்க..."

"என்னடா பாக்கப் போறே... உன் சாதிப்பயலுக ஊருக்குள்ள இருக்க முடியாது..."

"என்னப்பா... சாதி சாதியின்னு பேசுறே... ஒண்ணாமண்ணா இருக்கிற ஊருக்குள்ள மாட்டுப் பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்கிடுவே போல இருக்கே..."

"யோவ் போய்யா அங்கிட்டு... எனக்கு சொல்ல வந்துட்டாக... எதாவது பேசினா சாதிக்காரன்னு பார்க்க மாட்டேன்... வயசுக்கு மரியாதை கொடுத்தா ஒதுங்கிப் போகாம..."

இதுக்கு மேல் நின்றால் மரியாதை இருக்காது என்பதால் பேசாமல் வெளியேறினார்.

மாமரத்துக்கு போக மனமின்றி மீண்டும் வீட்டிற்கே திரும்பினார்.



"ன்னப்பா... உடனே திரும்பிட்டிங்க..."

"மனசு சரியில்லைம்மா..."

"என்னப்பா ஆச்சு...உடம்புக்கு முடியலையா?"

"இல்லைம்மா... நம்ம ஏகாம்பரம், சோனையனுக்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருந்தான். தட்டிக்கேட்க போன என்னைய என்னென்னமோ பேசிட்டாம்மா..."

"ஏம்ப்பா அவரைப் பத்திதான் தெரியுமே... உங்களுக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை..."

"ஏம்மா... வெள்ளாமை பாதிக்குதுன்னு சொன்னான் மனசு கேக்கலை நாயமாத்தான் பேசினேன்... அதுக்குப் போயி..."

"சரி விடுங்கப்பா... மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க..."

வீட்டிற்குள் நுழையும் போதே...

"என்ன மாமா... ஏகாம்பரத்துக்கிட்ட சண்டைக்குப் போனீங்களாமே..?"

"இ... இல்ல... மாப்ளே... வயல்ல மாடு மேஞ்சுடுச்சின்னு சொல்ல வந்த சோனையனை வாய்க்கு வந்தபடி திட்டினான்... அதை கேட்டதுக்கு என்னென்னமோ பேசிட்டான்."

"அந்த ...... நாய்க்கு நீங்க வக்காலாத்து வாங்கினீங்களா..? உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..."

"........."

"ஏங்க அவரு என்னென்ன பேசியிருக்காரு தெரியுமா... அவரு சொன்னதை கேட்டுக்கிட்டு வந்ததும் வராததுமாக..."

"நீ சும்மா இருடி... அவரு நம்ம சாதி... அவருக்கு சப்போர்ட்டா பேசினா நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா வருவாரு... அந்த சாதிக்காரப் பயலுகளுக்கு சப்போர்ட் பண்ணி நமக்கு என்னத்துக்கு ஆகப்போகுது..."

"மாப்ளே... நீங்களும் சாதி சாதின்னு பேசுறீங்க... உங்க சாதி உங்களுக்கு என்னங்க பண்ணுச்சு சொல்லுங்க... சாதிக்காரன்னு சொல்லி ஒருத்தனை எம்.எல்.ஏவா ஆக்கி சட்டசபைக்கு அனுப்புனீங்களே... அவனை அதுக்கு அப்புறம் பாத்தீங்களா... ரிசர்வ் தொகுதின்னு சொல்லி இப்ப சொன்னீங்களே ...... நாய் அதுல இருந்து ஒருத்தனை பிரசிடெண்ட ஆக்கினோம்... அவன் நம்ம மேல உள்ள மரியாதையில ஊருக்கு ரோடு, தண்ணி வசதி எல்லாம் செய்து தரலை... ஏன் முடிவெட்டுறவன் அடுத்த சாதிக்காரன் தான் அவன் கிட்ட சாதிபாத்து போகாம இருங்கலே... சடை புடிச்சிடும் சடை... உங்க சாதிக்காரன் வந்து வெட்டிவிடுவானா...? இல்ல வெள்ளையும் சொள்ளையுமா வண்டியில போறியளே... அதுக்கு யார் காரணம் நம்ம சாதிக்காரனா இல்லையே... அதுவும் வேற சாதிக்காரன் தானே... இவ்வளவு ஏன் நீங்க வட்டிக்கு கொடுத்து வாங்கி நிலம் நீச்சியின்னு வசதியோட இருக்கீங்களே... அதுக்கு காரணம் உங்க சாதிக்காரனா இல்லயே... இப்ப சொன்னீங்களே... அந்த சாதிக்காரன் தான் உங்ககிட்ட வட்டிக்கு வாங்கி உங்களை வாழவைக்கிறான்... எல்லாத்துக்கும் மேல நம்ம ஊருல யார் செத்தாலும் ஏதோ சோனையன் மாதிரி ஆளுங்க இருக்கறதால குழி வெட்டுறதுல இருந்து குழிக்குள்ள எறக்குறதுவரை பார்க்கிறாங்க... இப்ப சின்னபசங்கள்ளாம் வெளியில போயாச்சி... இன்னும் சில காலத்துல குழிக்குள்ள இறக்குறதுக்கே காசு கொடுத்து ஆளைப்புடிக்க அலையணும்... அதை மனசுல வச்சுக்கங்க... சும்மா சாதி சாதியின்னு பேசாதீங்க... சாதி ஒண்ணும் சாப்பாடு போடாது... நாம வாழ எதாவது ஒரு சாதிக்காரன் எதாவது ஒரு வகையில நமக்கு உதவியா இருப்பான். அதை புரிஞ்சுக்குங்க."

"சும்மா... பிரசங்கம் பண்ணாதீங்க... எனக்கு என் சாதிதான் முக்கியம்..."

"உங்களை திருத்த முடியாது... நீங்களா திருந்துற நாள் சீக்கிரம் வரும்" என்றபடி வெளியேறினார்.

மாமரத்தடியில் போய் அமர்ந்தவர் அங்கே சாதிப்பாகுபாடு இன்றி சந்தோசமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து 'அறியாப் பருவத்தில் கூட்டாஞ்சோறு... அறிஞ்ச உடனே தனிக்குடித்தனம்... ம்...' என்று நினைத்தவர் லேசாக சிரித்துக் கொண்டார்

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 20 ஜூலை, 2010

சிறு பூக்கள்...


பிரியாணியில் கோழி...
மிச்சத்தை கொத்திப்
பார்த்தது குஞ்சு..!

-----
நாடு காக்க வேண்டுதல்
பிள்ளையாரிடம்...
காணாமல் போனது சிலை..!

-----

சந்தோஷமாய்
பறந்து பார்த்தது
குருவிக்குஞ்சு...
கன்னிப் ப்யணம்..!

-----

நெருக்கத்தில் புழுக்கமாய்
நெஞ்சுக்குள் மறக்க
முடியாத காதலி..!

-----

மங்கள நிகழ்ச்சி
வாசலில் கட்டப்பட்டது...
வெட்டப்பட்ட வாழை..!

-'பரிவை' சே.குமார்.




எனது முந்தைய ஹைக்கூ கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும். கிறுக்கல்கள்.