மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 நவம்பர், 2022

பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா

 பாலைவன பரமபதம் வெளியீட்டு விழா நிகழ்வுப் பகிர்வு -

சென்ற சனிக்கிழமை (19/11/2022) இரவு துபை பின் ஷபீப் மாலில் இருக்கும் ஃபரா உணவகக் கூட்ட அரங்கில் சகோதரி சிவசங்கரி வசந்த்தின் முதல் நாவலான 'பாலைவன பரமபதம்' வெளியீட்டு  நிகழ்வு நடைபெற்றது. அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய இந்நிகழ்வு எப்பவும் போல் மகிழ்வாகவும் சிறப்பாகவும் நடந்தது.


இரவு ஏழரை மணி - எட்டு மணி ஆயிருச்சு - விழாவுக்கு நாங்கள் - நான், பால்கரசு, இராஜாராம் - மாலை நாலு மணிக்கெல்லாம் இங்கிருந்து - அபுதாபி - கிளம்பினோம். எப்பவும் போல் நிறைய விஷயங்களைப் பேசியபடி பயணித்து இடையில் வரிசையில் நின்று டீ வாங்கிக் குடித்துவிட்டு ஏழு மணிக்கெல்லாம் விழா நிகழிடத்தை அடைந்த போது சகோதரி ஜெஸிலாவும் பாலாஜி அண்ணனும் எங்களை வரவேற்றார்கள்.

நண்பர்கள் ஒவ்வொருவராய் விழா அரங்கிற்கு வந்து கொண்டிருக்க, அவர்கள் வரும் முன்னரே உணவுகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டு இருவர் பாதுகாப்பாக வேறு நின்று கொண்டிருந்தார்கள்.புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு முன் எப்பவும் போல் எங்களின் அரட்டைக் கச்சேரி நிகழ்ந்து கொண்டிருக்க, எழுத்தாளர் சிவசங்கரி குடும்பத்தினர் வருகைக்குப் பின் அபுதாபியில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர்கள் வந்து சேர, அமீரக எழுத்தாளர் குழும வரலாற்றில் முதல் முறையாக எங்கள் குழும புதிய உறுப்பினர் கலைஞன் நாஷ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களைக் கார் பார்க்கிங்கில் இருந்து வீடியோ எடுத்தபடி அழைத்து வந்தார்.

அபுதாபி செட்டிநாடு உணவக உரிமையாளரும் தொழிலதிபருமான திருமதி. உமா புகழேந்தி, இந்தியத் தூதரக அதிகாரி, மதிப்பிற்குரிய திருமிகு. காளிமுத்து, குழந்தைகள் இருதய அறுவைச் சிகைச்சை நிபுணர் மதிப்பிற்குரிய மருத்துவர் பெனடிக்ட் ராஜ் மற்றும் எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்.

விழாவினை எங்கள் குழுமத்தின் தலைவர் ஆசிப் மீரான் அண்ணன் அவர்கள் தனது காந்தக் குரலால் தொகுத்து வழங்கினார். புத்தகம் குறித்துப் பேசி, எழுத்தாளரை வாழ்த்த வந்த குழம உறுப்பினர்களை அழைக்கும் போது அவர்களைக் குறித்த விபரம் சொல்லி அழைத்து, அவர்கள் பேசி முடித்ததும் எப்பவும் போல் அவர்கள் பேசியதில் இருந்து சின்னதாய் ஒரு திரியை எடுத்து அதை நகைச்சுவைச் சரமாக்கி, விழாவினை சிறப்பாக நடத்திக் கொண்டு சென்றார்.

தமிழ்தாய் வாழ்த்தை எழுத்தாளர் சிவசங்கரியின் மகள் பூர்ணிகா பாட, அவருடன் அனைவரும் இணைந்து கொண்டோம். அதன்பின் சந்தியா தண்டபாணி அவர்கள் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர் உமா புகழேந்தி அவர்களின் கணவர் தொழிலதிபர் புகழேந்தியும் விழாவுக்கு வந்திருந்தார். சந்தியாவிடமிருந்து மைக்கை வாங்கிய பாலாஜி அண்ணன் திரு. புகழேந்தி மற்றும் இன்னும் சிலரையும் வரவேற்றார்.

சமீப காலமாக எங்களின் துவக்க ஆட்டக்காரராய் சசி அண்ணன் களம் இறங்குவதில்லை, இடையில் வந்தால்தான் சூர்யகுமார் யாதவைப் போல அடித்து ஆடலாம்  என்று முடிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வில் துவக்க ஆட்டக்காரராக சகோதரர்  பிலால் அலியார் இறங்கி, எழுத்தாளரையும் எழுத்தையும் பத்திப் பேச இருக்கவே இருக்கு புத்தக விமர்சனக் கூட்டமிருக்கு என்பதால் இங்கே எங்கள் குழுமத்தின் பணியையும் அதன் மூலமாக நாங்கள் அடைந்திருக்கும் இடத்தையும் பற்றிப் பேசியே ஆகவேண்டுமெனச் சொல்லி விரிவாகவும் விரைவாகவும் பேசி முடித்தார்.

அவருக்குப் பின்  பேச வந்த சுரேஷ் அண்ணன் புத்தகத்தை வேறு படித்து விட்டு வந்திருந்தார் என்பதால் அவர் மைக்கைப் பிடித்ததும் எழுத்தாளர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார், ஏன்னா எங்க அண்ணன் விமர்சனக் கூட்டம் என அடித்தாடி விடுவாரோ என்ற பயம்தான் காரணம். இருப்பினும் நாவல் பேசிய கொரோனாவின் கோரத்தையும் அதில் எங்க குழும உறுப்பினர்களும் அமீரக சமூக சேவகர்களுமான பிர்தோஷ் பாஷா, கௌசர் பைக் இருவரையும் கதாபாத்திரமாக்கி இருப்பதையும் சொல்லி, கொரோனா மக்களை என்னபாடு படுத்தியது என்பதையும் சொல்லி, புத்தகத்தில் குறைகள் இல்லாமல் இல்லை அடுத்த புத்தகத்தில் பிழைகள் களைய வேண்டும், விரிவாக விமர்சனக் கூட்டத்தில் பேசலாம் என்று சொல்லி, இடையிடையே ஆங்கில புத்தக மேற்கோள்களைச் சுட்டிக் காட்டிச் சிறப்பாகப் பேசினார்.

சசி அண்ணன் கலரூட்டப்பட்ட குறுந்தாடியுடனும் குறுஞ்சிரிப்புடனும் பேச வந்தார். புத்தகம் பேசியிருக்கும் விஷயத்தையும், கிட்டத்தட்ட 20 விழுதுகளை ஒன்றாக்கி ஒரு திரியில் கொண்டு வந்து முடித்திருப்பதையும் சொல்லி, மனிதர்களைக் குறிப்பாக இரத்த சொந்தங்களைக் கூட ஒருவரை ஒருவர் அருகில் வர விடாமல் பார்க்காமல் வைத்திருந்த கொடுமையை நம் தலைமுறை அனுபவித்தது என்று சொன்னார். இவரும் ஆங்கில மேற்கோள்களைப் பயன்படுத்தியதுடன் ஆங்கிலக் கவிதையும் சொல்லி, அதன் விளக்கத்தையும் சொன்னார். மேலும் நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை அர்ச்சனை செய்வது போல் - அத்தனை கதாபாத்திரங்கள் - வரிசையாகச் சொல்லி, 'எவ்வளவு விலை உயர்ந்த கேமராவாக இருந்தாலும் புன்னகை நம் முகத்தில்தானே இருந்து வரவேண்டும்', 'பணம் நிறையச் சம்பாதிப்பவர்கள் பணக்காரர்களா?' என்ற வசனங்கள் எல்லாம் அமைதியாய் இருக்கும் சிவசங்கரிக்குள் இருந்து வந்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது என்றும் சொன்னார்.


எங்களின் கேமராக் கவிஞர் சுபஹான் அண்ணன் தனது கேமராவை ஆசிப் அண்ணன் வசம் ஒப்படைத்து விட்டு மைக்கைப் பிடித்தார். எனக்கு ரொம்பப் பேச வராது  - அவர் இருக்கும் இடத்தைச் சிரிக்க வைக்கும் கதைகள் சொல்வதில் கில்லாடி என்பதை நாங்கள் அறிவோம் - என்று சொல்லிவிட்டு, கொரோனாவின் பாதிப்பும் இழப்பும் எல்லாருக்கும் இருந்தது எனக்கும் இருந்தது என்று ஆரம்பித்தார். எழுத்தாளர் வட்டார வழக்கிலோ பொது மொழியிலோ எழுதாமல் சாதாரணமாகப் பேசுவதைப் போல் எழுதியிருந்தாலும் தொடர்ந்து வாசிக்க வைத்த எழுத்துக்கு வாழ்த்துகள் என்றதுடன் ஒரு சிலர் அங்கே மரம் இருந்தது, அதில் அது இருந்தது, இங்கே இது இருந்ததுன்னு வர்ணனையில் கொல்வானுங்க... இன்னும் சிலரோ செய்திகளைச் சொல்றேன்னு நம்மளைக் கொன்னு எடுத்துருவானுங்க இவங்க அப்படியெல்லாம் பண்ணாததே சிறப்பு. அதுவும் கொரோனாவின் பாதிப்புக்களுடன் நமது நண்பர்களையும் கதாபாத்திரமாக்கி எழுதியிருப்பது அருமை. நாலு பேர் இருந்த இடத்தில் இருவர் மாஸ்க் போடாமல் இருக்க, அவர்களிடம் மாஸ்க்கைப் போடுங்க என்று சொன்னதுக்கு எனக்கெல்லாம் கொரோனா வராது எனக் கெத்தாக ஒருவன் காலரைத் தூக்கி விட, உனக்கு வராது ஆனா எனக்கு வந்திருந்து இப்பத்தான் ஆஸ்பத்திரியில இருந்து வர்றேன் அதனாலதான் சொன்னேன் என்று சொன்னதும் கண்ணுவரைக்கும் மாஸ்க்கை மாட்டினானுங்க எனச் சொல்லி உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்ததாகச் சகோதரி ஜெஸிலா பானு அவர்கள் பேச வந்தார், தான் எழுத வந்த புதிதில் கவிஞர் அறிவுமதி அவர்கள் நீ எழுதணும்ன்னு நினைச்சா தினமும் ரெண்டு பக்கமாச்சும் எழுது, அதை ரெண்டு நாள் கழித்து எடுத்துப் படித்துப் பார். பிடித்திருந்தால் வைத்துக் கொள் என்று சொன்னதாகச் சொல்லி, அதை இன்று வரை கடைபிடிக்கிறேன் என்றும் சொன்னார். சிறுகதை எழுத்தாளர் என்றாலும் இதுவரை நாவல் எழுதுவது சிரமம் என்பதால் அந்தப் பக்கம் போகமல் இருந்தேன் இப்பச் சிவசங்கரி நாவல் எழுதியதைப் பார்த்ததும் எனக்கும் எழுதும் ஆசை வந்துவிட்டது என்றார். மேலும் ஒரு பத்தியில் ஒரு வார்த்தை மறுபடியும் வரக்கூடாது அதை மாற்றி மாற்றி எழுதப் பழகிக்க வேண்டும் என்றும் ஒரு நாவலில் பெரும்பாலானோர் இருநூறு வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்ப பயன்படுத்தியிருப்பார்கள் இங்கே சிவசங்கரி நூறு வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன் அதையெல்லாம் அடுத்த நாவலில் களைந்து நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொன்னார்.

எழுத்தாளர் நசீமா ரசாக் பேசும் போது சிவசங்கரி வகுப்பறையில் - இருவரும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர் பா.ராகவனின் மாணவிகள் மற்றும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் - ரொம்பவே அமைதி, இதை எப்படி எழுதலாம் எனக் கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லி அடுத்தநாளே கட்டுரையைத் தயாராய் வைத்திருப்பார். எப்படி சிவசங்கரி என்றால் எப்படியோ எழுதிட்டேன் எனக்கே தெரியலை என்று சிரிப்பார் என்று சொன்னதுடன் சிவசங்கரியின் முதல் புத்தக வெளியீடு எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம், தொடர்ந்து எழுதுங்க சிவசங்கரி எனச் சொல்லி அமர்ந்தார். 

அவரைத் தொடர்ந்து பேச வந்த சகோதரர் பிரதோஷ் பாஷா, கொரோனா காலத்தில் நாங்கள் செய்த சேவைகளுக்கெல்லாம் அபுதாபி, துபை இந்தியத் தூதரக அதிகாரிகள் மிகவும் உதவியாக இருந்தார்கள் என்றும் என்னால் மட்டும் எந்த நிகழ்வும் நடந்துவிடவில்லை எனக்கு எல்லாருமே உதவினார்கள் அதனால் என்னால் கேட்டவர்களுக்கெல்லாம் உதவ முடிந்தது. என்னைப் பற்றியும் கொசர் பற்றியும் இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதியிருப்பது பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை ரொம்ப மகிழ்வாக இருக்கிறது என்றும் சொல்லி, அண்ணாச்சிதான் என்னைப் பற்றி எழுதி எல்லாப் பக்கமும் கொண்டு சென்றார் அவருக்கு நன்றி என முடித்துக் கொண்டார்.

சகோதர் முகைதீன் பாட்ஷா பேச வரும்போது பசி நேரம் பார்த்துக்கப்பா என்ற குரல்கள் வந்தாலும் - மைக்கைப் பிடித்தால் விரிவாக பேசுவார் என்றாலும் அதில் விபரங்கள் அதிகமிருக்கும் - தான் பேச நினைத்ததை மிகச் சரியாகப் பேசினார். நாவல் எழுதிய சிவசங்கரி 2019ம் வருடத்தில் - நான் வருடத்தைச் சரியாகக் குறிப்பிட்டு இருக்கேனான்னு தெரியலை - இந்தக் குழுமத்தில் இணைந்த போது இப்படியொரு குரல் பதிவு போட்டிருந்தார் எனக் குரல் பதிவின் சாராம்சத்தைச் சொன்னார். 

மேலும் சிவசங்கரி ரொம்ப அமைதியாக இருப்பார், நிறைய விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு இன்று எழுத்தாளராய் ஆகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அதுவும் ஒரு பேரிடர் காலத்தை நாவலாக்கியதுடன் நமது நண்பர்களையும் அதில் உலாவ விட்டிருப்பது சிறப்பு என்றும் சுரேஷ் அண்ணன் வீட்டுக் கொலுவிற்குச் சென்றபோது பிரியாணி டப்பாவில் சட்னி வந்ததைக் கூட அவர் ஒரு கட்டுரை ஆக்கினார் என்றும் சொல்லி, அவர் மெட்ராஸ் பேப்பரில் இதுவரை 19 கட்டுரைகள் - இங்கும் நான் சொல்லிய எண்ணிக்கை மாறலாம் - எழுதியிருக்கிறார் அதுவும் புத்தகமாக வேண்டும் என்று வாழ்த்திவிட்டுப் பசி என்று சொன்னவர்களைப் பாசப்பார்வை பார்த்து அமர்ந்தார்.

அடுத்துப் பேச வந்த கேலக்ஸி பதிப்பக உரிமையாளர் அண்ணன் பாலாஜி பாஸ்கரன் அவர்கள், பசி நேரம்ன்னு தம்பி பாட்ஷா பேச வர்றப்பவே சொன்னேன் என்றாலும் சில விஷயங்களைப் பேசித்தான் ஆக வேண்டும் எனச் சொல்லி, சகோதரர் கௌசர் கொரோனா காலத்தில் செய்த உதவிகளை, பசியில் வெட்டவெளியில் இறந்து கிடந்தவரை அடக்கம் செய்ததை, உணவு இருப்பிடம் இல்லாதவர்களுக்கு அதெல்லாம் செய்து கொடுத்ததை, அரபி சரளமாகப் பேசுவதால் கொரோனாவின் தீவிர ஆட்டத்தின் போது 'PP' உடை தரித்து அரபி போலீசாரிடம் விபரம் சொல்லி, அடித்து ஆடும் வெயிலில் வீதி வீதியாகச் சாப்பாடு கொண்டு போனதை எல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசினார். அதேபோல் ஊருக்குச் செல்ல முடியாமல் இருந்தவருக்கு ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்து, அவர் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிச் செல்லப் பணமும் ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் கொரோனா மட்டுமில்லாது மிகச் சிக்கலான வேலைகளையும் சவாலான செயல்களையும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி பிரதோஷ் பாஷா செய்வதையும் சொன்னார்.

மேலும் ,  தனது நெருங்கிய நண்பன் கொரனோவில் இறந்தபோது அவரின் இறுதிக் காரியத்தை தனது போனில் நேரலையாக அவரின் குடும்பத்துக்குக் காட்டியதையும் அவர்களின் அழுகுரல்கள் எதிர்முனையில் இருந்து தன்னைச் சுற்றி எழும்போது அவருக்கு நேர்ந்த துன்ப அனுபவத்தையும் சொன்னபோது உணர்ச்சி வசப்பட்டார். தும்மினால் ஆயுசு நூறு என்று சொன்னது போய் தும்மினால் தள்ளிப் போ எனச் சொல்ல வைத்ததுடன் எல்லாரையும் பயத்துடன் பார்க்க வைத்த கொரோனா காலத்தை நாவலாக்கியதுடன் கௌசர், பிர்தோஷ் இருவரையும் இதில் நாயகர்களாக ஆக்கி இருப்பதையும் சொல்லி சிவசங்கரியை வாழ்த்தினார்.

அதேபோல் நமக்கெல்லாம் ரெண்டு மூணு முறை தொடர்ந்து அழைப்பு வந்தாலே கடுப்பாவோம், எனது தம்பிங்க - பாஷா, கௌசர் - ரெண்டு பேரும் இரவு பகல் பாராமல் எந்த நேரத்தில் போன் வந்தாலும் எடுத்துப் பேசுறானுங்க... அதுவே பெரிய விஷயம். இப்படியான சேவைகள் செய்ய மனம் வேண்டும். அது இவர்களிடம் அதிகம் இருக்கிறது என்றார்.

பசியோடிருக்கோம் என்று சொன்னாலும் விரிவாகப் பேசிய பாலாஜி அண்ணன் காளிமுத்து ஐயா போனை எடுத்துப் பார்க்கவும் இந்தா அய்யா கூட போனை நோண்ட ஆரம்பிச்சிட்டார், இதுக்குமேல பேசக்கூடாது எனச் சொல்ல, அரங்கம் சிரிப்பால் நிரம்பியது.

பின்னர் மேடையில் புத்தக வெளியீடு  நிகழ்ந்தது. தனது முதல் புத்தகம் சிறப்பான முறையில் அரங்கேறும் போது மகிழ்வைத் தாண்டி ஒரு பதட்டமும் பரவசமும் இருக்குமே அப்படியான் ஒரு நிலையில் சிவசங்கரி இருந்தார் என்றால் வசந்தோ அதைவிட சற்று கூடுதலான பதட்டத்துடன் இருந்தார். இது போன்ற மகிழ்வான தருணம் இனி அடுத்தடுத்துக் கிடைத்தாலும் இப்படியான ஒரு மகிழ்வு கிடைப்பது முதல் முறைதானே. வாழ்த்துகள் சிவசங்கரி.

புத்தக வெளியீட்டுக்குப் பின் பேச வந்த திருமதி. உமா புகழேந்தி, நான் அதிகம் வாசிக்கமாட்டேன். இந்தக் குழுமத்தைப் பார்த்ததும் எனக்கும் வாசிக்கும் ஆர்வம் வந்துவிட்டது இனி வாசிப்பேன் என்றதுடன் இனி இந்தக் குழும விழாக்களில் நானும் கலந்து கொள்ள முயற்சிப்பேன் என்றும் சொன்னார். மேலும் ஆசிப் அண்ணனின் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார் ஒரு ரசிகையாக. இதென்னய்யா குரல் என்று சொன்னால்தான் யோசிக்கணும் இதல்லவா குரல் என்று சொல்வதை நாங்களெல்லாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிவிட்டோம், எங்க எல்லாருக்கும் பிடித்த குரல் அது. 

ஆசிப் அண்ணனைப் பற்றி அவர் பேசிக் கொண்டே போக, பக்கத்தில் இருந்து பரமபதம் பற்றி பேச வந்துவிட்டு பரமபிதாவைப் பற்றிப் பேசுகிறாரே என்ற குரல் ஒன்று வந்தது. ஆசிப் அண்ணன் ரொம்பவே வெட்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.

அடுத்துப் பேச வந்த மருத்துவர் திரு. பெனடிக்ட் ராஜ், நான் தமிழ் அதிகம் பேசுவதில்லை என்றாலும் தமிழைப் பேசுவது தவறில்லையே என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார். அதிகமாக புத்தகம் வாசிக்கமாட்டேன், அதற்கான நேரமும் இல்லை என்றாலும் சிவசங்கரி கொடுத்துச் சென்ற இந்த இரண்டு நாளில் நாப்பது பக்கங்களை வாசித்திருக்கிறேன். கொரோனாவின் போது ஊரில் இருந்தேன். ஹைதராபாத்துக்கு அறுவைச் சிகிச்சைக்காக அடிக்கடி செல்ல வேண்டிய சூழல், எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் காரில்தான் பயணிக்க வேண்டும் அங்கு சென்றதும் என்னைத் தனியே வைத்திருந்து அறுவைச் சிகிச்சை செய்யும் நேரத்தில் மட்டுமே அழைத்துச் செல்வார்கள், அங்கு முடித்து வீட்டுக்கு வந்தால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை கடினமான நிலமை தெரியுமா..? எனக் கொரோனா குறித்து தனது அனுபவங்களைச் சொன்னார்.

மேலும் தன்னுடன் பணி புரிபவர்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் எங்களை எல்லாம் இணைக்கும் ஒரே மொழி ஆங்கிலம்தான் என்று சொன்னதுடன் இன்னும் நிறையப் பேசினார். கொரோனா காலகட்டத்தை இனி வரும் சந்ததிக்குக் கடத்த இது போன்ற முயற்சிகள் செய்தே ஆக வேண்டும். ஒரு நாவலில் தனது நண்பர்கள் செய்த உதவிகளையும் இதில் தொகுத்திருப்பது சிறப்பு. எழுத்தாளருக்கு வாழ்த்துகள் என்று சொன்னார்.

அடுத்துப் பேச வந்த தூதரக அதிகாரி திரு. காளிமுத்து தனது கணீர்க்குரலில் உரையை ஆரம்பித்தார். இங்கு இப்படி ஒரு அமைப்பு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் வரும் காலங்களில் இந்த அரங்கமே நிறையுமளவுக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் இந்தக் குழுமத்தில் இணைய வேண்டும் எனவும் சொன்னார். தான் ஊரில் இருந்த, நெருக்கடி மிகுந்த தெரு வெறிச்சோடி இருந்ததையும், மருத்துவமனையில் இருந்த உறவினரைப் பார்க்க சென்னையில் இருந்து நண்பர் வந்ததையும் இவர் ஏன் இங்கு வருகிறார் என்ற எண்ணம் தனக்குள் எழுந்ததையும் லேசான காய்ச்சலுக்கு அந்த நண்பர் கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு அதன் முடிவு வரும்வரை வீட்டிற்குள் வராமல் காரிலேயே அமர்ந்து கொண்டிருந்ததையும் சொல்லி, இதனால் எவ்வளவு இழப்புக்கள் இதையெல்லாம் ஆவணமாக்குதல் என்பது சிறப்பு. நம் தலைமுறைக்குப் பின் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் இதையெல்லாம் வாசிப்பவர்களுக்கு இந்த நோயின் தீவிரமும் அதனால் பட்ட கஷ்டங்களும் தெரிய வரும். அதுபோக சமூக சேவை செய்தவர்களையும் இதில் சொல்லியிருப்பது இன்னும் சிறப்பு என்றார்.

மேலும் தான் நிறைய நிகழ்வுகளுக்குச் செல்வதாகவும் அங்கெல்லாம் இப்படியானதொரு மகிழ்வான தருணங்கள் அமைவதில்லை என்றும் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது யாருக்கு அமீரகம் சுதந்திரம் கொடுத்திருக்கிறது என்ற கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது என்றும் அதன் நீட்சியாய் இங்கே இருப்பவர்களை, எழுத்தாளர்களைப் பார்க்கும்போது பெண்களுக்கு அமீரகம் அதிக சுதந்திரம் கொடுத்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன் என்றும் சொன்னார். ஒரு பெண் எழுத்தாளர் முதல் நாவலேயே ஆவணமாய் எழுதியிருப்பது மகிழ்ச்சி, இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.

ஆசிப் அண்ணன் சிவசங்கரியின் புத்தகம் குறித்துச் சொல்லும் போது எங்கள் குழுமத்தில் இணைந்து ஒரு ஓரமாக அமர்ந்திருந்த சிவசங்கரி இன்று இப்போது இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை அடைய அவர் நிறைய உழைத்திருக்கிறார். எதைப்படிக்கலாம் அண்ணாச்சி என என்னைக் கேட்டுப் படித்ததுடன் இந்தச் சமூகத்தையும் அவர் உள்வாங்கிப் படித்திருக்கிறார் என்று சொன்னார்.

எழுத்தாளர் சிவசங்கரி பேச வந்தபோது பதட்டமாய் ஆரம்பித்து பின்னர் சகஜநிலைக்கு மாறினார். தான் ஒவ்வொரு அத்தியாயம் எழுதியதும் தனது கணவரும், மகளும் வாசித்து இது சரியில்லை, அது சரியில்லை என்றெல்லாம் சொல்லித் தன்னைச் செதுக்கினார்கள் என்றும், இந்தக் குழுமத்தைப் பற்றி அறிந்து அதில் இணைந்து கொள்ளலாமா என்று கேட்டு அன்றே ஷார்ஜாவில் நடந்த நிகழ்வுக்கு வர முடிவு செய்து தனது கணவரிடம் சொன்னதும் நான் கூட்டிப் போறேன் எனக் கூட்ட ஆரம்பித்து இன்று வரை தன்னைக் கூட்டி வருவதையும், அவரும் குழுமத்தில் இணைந்து கொண்டதையும் சொல்லி அவருக்கு நன்றி கூறினார். 

மேலும் இந்த நாவலை எழுதி ஆசிப் அண்ணனுக்கு அனுப்பிய போது பாஷா மற்றும் கௌசர் பெயர்களை பயன்படுத்தலாமா எனக் கேட்டதற்கு பயன்படுத்துங்கள் என்று சொன்னதையும், அதன்பின் அவர்கள் இருவரிடமும் அனுமதி பெற்று கற்பனைப் பெயர் வைக்காமல் அவர்கள் பெயரையே கதாபாத்திரத்துக்கு வைத்ததையும் சொல்லி, அவர்கள் பெயர் வைக்க முடியாதென்றால் தான் வேறொரு நாவல்தான் எழுதியிருப்பேன் என்றும் இந்த நாவலை எழுதாமலேயே விட்டிருப்பேன் என்றும் சொன்னார்.

தொடர்ந்து பேசிய அவர் குழந்தைகள் வளர்ப்பு பற்றியும் பேசியதுடன் கேலக்ஸி பதிப்பக்கத்தின் பாலாஜி அண்ணன் தனக்கு எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுத்ததைச் சொல்லி, புத்தகம் தொடர்பான அனைத்து வேலைகளையும் எந்தவித சுணக்கமும் இன்றி - தான்தான் அவர்கள் அனுப்பும் செய்திகளைப் படிக்க, பதில் அனுப்ப நேரம் எடுத்துக் கொண்டதாகச் சொன்னார் -  ஒருங்கிணைத்த அமீனா முகம்மதுவுக்கும், தான் ஒருமுறை மட்டுமே சொன்னதை உள்வாங்கி, கதையின் பேசுபொருளை மனதில் கொண்டு மிக அருமையான அட்டைப்படத்தைச் சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்த சாலிஹாவுக்கும் கேலக்ஸி பதிப்பகத்துக்கும் தனது நன்றியைச் சொல்லி தனது ஏற்புரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக நன்றியுரை சொல்ல வந்த வசந்த், முதல் முறையாக மேடையில் மைக் பிடித்துப் பேசுகிறேன். நான் புத்தகமே படிக்கமாட்டேன், கல்லூரியிலும் அப்படித்தான் எனச் சொல்லி எல்லாரையும் சிரிக்க வைத்து, இந்தக் குழுமத்தில் இணைந்தபின் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் எனச் சொல்லி, தனது மனைவி உள்பட எல்லாருக்கும் நன்றி கூறினார். அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நினைவுப் பரிசை தனது மனைவியும் எழுத்தாளருமான சிவசங்கரிக்கு அவர் வழங்கியது அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். தனது மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயைப் போல் எழுத்தாளராய் தன் முன்னே நிற்கும் மனைவியை பிரபலங்கள் வாழ்த்தும் போது அவருக்கு எல்லா வகையிலும் தான் உதவியாய், உற்ற துணையாய், நண்பனாய் இருந்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சி அவருக்குள் இருந்திருக்கும், இருந்திருக்க வேண்டும். 

விழா முடிந்தபின் வசந்த் என்னைக் கட்டிக் கொண்டு உங்களுக்குப் போன் பண்ணிச் சொல்லலை... உங்கள் சூழல் தெரியும் என்றாலும் நீங்க வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைச்சேன். அதைத்தான் ராஜாராமிடம் போனில் சொன்னேன். நீங்க வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்றார் உணர்ச்சிப் பெருக்குடன். சில விஷயங்கள் மனசுக்கு உகந்ததாக இல்லை என்றாலும் அவர்கள் என் மீது கொண்ட அன்பு எனக்குத் தெரியும் என்பதால்தான் நான் சென்றேன் என்பதே உண்மை. செல்லவில்லை என்றால் நல்ல ஒரு விழாவைத் தவறவிட்டிருப்பேன்.

அதன்பின் போட்டோ எடுத்தல், உரையாடல்கள், அருமையான உணவு என மகிழ்ச்சியான தருணங்களைக் கொடுத்த அன்றைய தினத்தினைச் சுமந்தபடி நாங்கள் எங்கள் இருப்பிடத்தை அடைந்த போது ஒரு மணியைத் தொட்டிருந்தது.

விழாவில் சில... 

* தூதரக அதிகாரி ஐயா காளிமுத்து அவர்களிடம் போனில் பேசியபோது 'யாருங்க நீங்க?' எனக் கேட்டதாக ஆசிப் அண்ணன் சொல்ல, அதற்குப் பதிலளிக்கும் விதமாக 'நான் அப்படியெல்லாம் சொல்லலைங்க... நம்பர் மட்டும் வந்ததால் நீங்க யாருங்க என்று கேட்டேன்' எனச் சொன்னதும் ஆசிப் அண்ணன் 'நான் சும்மா ஜாலியாத்தான் சொன்னேன்' எனச் சொன்னதும் நாங்க எப்பவும் அப்படித்தான் என்பதாய் குழும உறுப்பினர்கள் சிரித்தார்கள்.

* சகோதரி ஜெஸிலா அறிவுமதி அண்ணனின் அறிவுரை பற்றிச் சொன்னதற்குப் பதிலாய், 'என்னிடமும் அதையே சொன்னார்... அதான் நான் எழுதி எழுதி அப்பப்ப கிழிச்சிப் போட்டுடுறேன்' என்று ஆசிப் அண்ணன் சொல்ல, தமிழ் இலக்கிய உலகத்தைக் காப்பாத்திட்டார் என்றார் சுரேஷ் அண்ணன்.

* சகோதரர் பிலால் பேசும்போது திரு.சிவசங்கரி என்று சொன்னதற்கு, அரசியல்வாதி பிலால் அவர்கள் பெண்களுக்கும் சம உரிமை என்பதைப் பற்றி பேசுபவர் என்பதால் இங்கே எல்லாருக்கும் திரு போட்டுவிட்டார் என்றார் ஆசிப் அண்ணன்.

* சிவசங்கரியின் புத்தகத்தை வாசித்துவிட்டு அவரின் புத்தக விமர்சனக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்வேன் என்று திருமதி. உமா சொன்னதற்கு, இங்கதான் நாங்க இப்படி ஆனா புத்தக விமர்சனத்தில் ஆஹா ஓஹோவெல்லாம் இருக்காது. அடிச்சித் துவைச்சிருவோம் அப்படிச் செய்வதைத்தான் விரும்புவோம் அதுதான் எங்கள் குழுமத்தின் தனிச்சிறப்பு. எழுத்தாளர் தனது அடுத்த புத்தகத்தில் என்ன செய்யலாம் என்பதற்கான அறிவுரையாகத்தான் அது இருக்கும் என்றார்.

* அரங்கு நிறைய உறுப்பினர்கள் சேர வேண்டும் என்று காளிமுத்து ஐயா சொன்னதற்கு, எங்கள் குழுமத்தில் இப்ப நாற்பது பேருக்கு மேல் இருக்கிறோம். இந்த குழுமத்தில் குப்பை கொட்ட எல்லாராலும் முடியாது என்பதுடன் ஆட்கள் அதிகமானால் விழாக்களை நிகழ்த்த அரங்கம் தேடுவது முதல் செலவுகள் மற்றும் அனுமதி என நிறையச் சிக்கல்கள் வரும் என்று ஆசிப் அண்ணா விளக்கம் கொடுத்தார்.

* சாப்பிடும் போது எங்களுக்கு எதிரே சாப்பிட்ட தம்பி, எங்களுக்குக் கம்பெனி கொடுக்கவாவது சாப்பாடு எடுத்துக்கிட்டு வாங்க என்று சொல்லியும் எடுத்து வந்த கொஞ்சமே கொஞ்சம் சோத்தில் பாதியை வைத்து விட்டு சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். நாங்க வயிறார சாப்பிட்டு முடித்தோம்.

* சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அது இருக்கு, இது இருக்கு என்பதுடன் நிறுத்தாமல் அவை குறித்த கதைகளையும் சொல்லி எங்களைச் சிரிக்க வைத்து புரையேற வைத்து மகிழ்ந்தார் சுபஹான் அண்ணன்.

* நானும் பால்கரசும் அன்று நள்ளிரவில் ஷாபியாவில் குடித்த டீ குறித்தான கதையை இங்கு எழுதாமல் தனியாகத்தான் எழுத வேண்டும். ராஜாராம் எங்களுடன் இருந்திருந்தால் ருவைஸ் எலுமிச்சை டீ நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை பார்த்திருப்போம்.

இன்னும் சில மகிழ்வான நிகழ்வுகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவித்தோம், குறிப்பாக எனக்கு மன அழுத்தத்தில் இருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்த உணர்வு. 

பாலாஜி அண்ணனின் கேலக்ஸி பதிப்பகம் வெளியிட்ட ஆறாவது புத்தகம் இது. கேலக்ஸியின் வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் பாலாஜி அண்ணா. தொடரட்டும் உங்கள் கேலக்ஸியின் வெற்றிப் பயணம்.

அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் நடத்திய இவ்விழாவிற்காக அரங்கையும், இரவு உணவையும் FJ Tours & Travels உரிமையாளர் ரியாஸ் அகமத் அவர்கள். இரண்டுமே சிறப்பு. வாழ்த்துகள்.

எப்பவும் போல் சுபஹான் அண்ணா போட்டோக்களை எடுத்து அன்று நள்ளிரவே பகிர்ந்து கொண்டார், எப்பவும் போல் எல்லாம் சிறப்பாய் இருந்தது. சகோதரர் அகமத் ஜாயிதும் போட்டோக்கள் எடுத்தார்.

எப்பவும் விழா முடிந்த மறுநாள் எழுதி விடுவேன்... கடந்த ஒன்பது மாதமாக எழுதுவது குறைவு என்பதைவிட எழுதும் எண்ணமே வரவில்லை என்பதே உண்மை. ஏதாவது எழுதுவோம் என அமர்ந்தால் கூட ஒரு பாராவுக்கு மேல் நகர்வதில்லை. உன் மன இறுக்கம் குறைய எழுது என நண்பர்கள் சொன்னாலும் ஏனோ என்னால் எழுத முடியவில்லை என்பதே உண்மை. இந்தக் கட்டுரை கூட எழுத நினைத்து தள்ளித்தள்ளிப் போய் இன்றுதான் முடிந்திருக்கிறது. பேசியவர்கள் இன்னும் நிறையப் பேசியிருக்கக் கூடும் என் மனநிலைக்கு, எனக்குத் தெரிந்தவற்றை மட்டுமே எழுதியிருக்கிறேன். எழுதியவை ஓரளவுக்குச் சரியாக இருக்குமென நம்புகிறேன்.

நன்றி.

-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மன அழுத்தம் முழுமையாக தீரட்டும் குமார்...

KILLERGEE Devakottai சொன்னது…

வாழ்த்துகள் எழுதுவதை நிறுத்த வேண்டாம் இயன்றவரையில்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

வெளியீட்டு விழா நிகழ்வுகள் அனைத்தையும் விரிவாகத் தந்தீர்கள்!