மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 27 ஜனவரி, 2022

சினிமா விமர்சனம் : மதுரம் (மலையாளம்)

துரம்

மலையாளத்தில் மதுரம் என்றால் இனிப்பு... படம் முழுவதும் அப்படி ஒரு சுவைதான் நிரவிக் கிடக்கிறது.

இங்கே சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன ஆனால் நாம் அதையெல்லாம் சொல்ல நினைக்காமல் இன்னமும் சாதிக்குள்ளும் ரவுடியிசத்துக்குள்ளும் சுற்றிக் கொண்டிருக்கிறோம். அப்படியொரு சகதிக்குள் அதிகம் சிக்காமல் சின்னச்சின்னக் கதைகளைக் கூட அற்புதமான படைப்பாகக் கொடுப்பதில் மலையாளிகள் எப்போதும் முன்னோடிதான் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார்கள். 'அ(க)ண்டா'க்களுக்கு ஆரவாரம் இருக்கும் தெலுங்கில் கூட இப்போது 'சியாம் சிங்க ராய்' போன்ற படங்களை எடுக்க ஆரம்பித்திருப்பது ஆறுதலான விஷயம். 

சரி நாம் மதுரத்துக்குள் போவோம்.


ஒரு அரசு மருத்துவனையின் உள்நோயாளிகளுக்கு உதவியாய் இருக்கும் உறவுகள் தங்கியிருப்பதற்கென இருக்கும் ஒரு நீண்ட காத்திருப்போர் அறைதான் கதையின் களம். அரசு மருத்துவமனை, நோயாளிகள், அவர்களுடன் வந்திருப்போர் தங்குமிடம் இதை வைத்து என்னய்யா கதை சொல்லிவிட முடியும் என்று யோசிக்கும் போதே அந்த இடத்தில் விதவிதமான சிறுகதைகள் நமக்கு முன்னே காட்சிகளாய் விரிய ஆரம்பிக்கின்றன.

காதலியின் பிறந்தநாளுக்கு இரவில் யாருக்கும் தெரியாமல் பிரியாணி கொண்டு வந்து கொடுத்து வாழ்த்துச் சொல்லும் போதே இது ஜோஜூவுக்கான களம் என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. மலையாள சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் என்றால் ஜோஜூ தனி ரகம். அந்த உடம்பை வைத்துக் கொண்டு மனிதர் ஆட்டம் காட்டிவிடுவார். நாயாட்டுவில் ஆட்ய ஆட்டத்தைவிட இதில் இன்னும் அதிகமாகவே அடித்து ஆடியிருக்கிறார். நெற்றியில் புரளும் முடியும் அவரின் சிரிப்பு அப்படியே நம்மை ஈர்த்துக் கொள்கிறது.

தன் காதல் மனைவிக்கு உடல் நலமில்லாமல் ஒன்பது மாதங்களுக்கு மேலாக அந்த மருத்துவமனையில் இருப்பதால் அங்கு வேலை செய்வோர், அருகிருக்கும் டீக்கடை, அந்த அறைக்கு வந்து தங்கிச் செல்வோர் என எல்லோரிடமும் மனிதாபிமானத்துடன் கூடிய அன்பு. அதேபோல் அவரும் எல்லாருக்கும் பிடித்த மனிதராய் ஆகிப் போகிறார். தனது வலியை யாரிடமும் இறக்கி வைக்காமல் மற்றவர் வலிக்கு மருந்திடும் மனிதராய் சிரித்த முகத்துடன் வலம் வருகிறார்.

அந்த அறைக்குள் அக்காவின் அறுவைச் சிகிச்சைக்காக அவளின் குழந்தையுடன் தங்கியிருக்கும் பெண், அப்பாவைப் பார்த்துக் கொள்வதற்காக வசதியற்ற அறையில் தங்குவதாய் வருந்தி பின்னர் எல்லாருடனும் பழகி, அந்தப் பெண்ணையும் காதலிக்க ஆரம்பிக்கும் இளைஞன், நாற்பது வருட திருமண வாழ்க்கையில் எனச் சொல்லிக் கொண்டே எல்லாருக்கும் வாழ்வின் அர்த்தத்தைப் புரிய வைக்கும் மனைவியின் மூட்டு அறுவைச் சிகிச்சைக்காக வந்திருக்கும் முதியவர், அம்மாவுக்காக அங்கு வந்திருக்கும், காதல் மனைவியை விவாகரத்துச் செய்ய நினைத்திருக்கும் புதிதாய் திருமணமானவன், அங்கு அடிக்கடி வரும் அவனின் மனைவி இப்படி நிறைய கதாபாத்திரங்களை வைத்து அவர்களுடன் ஜோஜூவின் நட்பும் அதனால் ஏற்படும் நிகழ்வுகளும் என அழகாகக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

கப்பலில் சமையல் வேலைக்கு எனப் போனால் பல மாதங்களுக்குப் பின்னே கரை இறங்கும் யாருமற்ற சாபு(ஜோஜூ)வுக்கு ஆறுதலாகவும் அவ்வப்போது பண உதவி செய்பவராகவும், அவன் மீது நேசமுள்ளவருமாக இருக்கும் ஹோட்டல் முதலாளியும் (ஜாஃபர் இடுக்கி), அங்கு வேலை செய்பவர்களும் தான் அவனின் உலகம், விடுப்பில் வந்ததும் அங்கு பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதுடன் சமையலுக்குச் சின்னச் சின்ன உதவிகள் செய்து கொண்டு இருக்கிறான்.

அப்படி ஒரு முறை கப்பலில் இருந்து வந்தபோது பின்பகுதியில் விறகுகளுக்கு இடையே அமர்ந்து பிரியாணி சாப்பிடும் சித்ராவைப் (ஸ்ருதி ராமச்சந்திரன்)  பார்த்து, முதலாளியிடம் விசாரிக்க, அவளைப் பற்றிய விபரங்களைச் சொல்கிறார், ஜோஜூவுக்குள் சித்ரா பிரியாணியின் வாசமாய் இறங்கிக் கொள்(ல்)கிறாள். 

அதன் பின்  தினமும் அவவளுக்காகவே அங்கு காத்திருந்து, பிரியாணி பரிமாறி, தானே பிரியாணி செய்தும் கொடுத்து, அதன் மூலம் நட்பைப் பலப்படுத்தி, அதைக் காதலாக்கி, மனைவியாகவும் ஆக்கிக் கொள்ள, அவளின் ஆசையோ பல மாதங்கள் கடலுக்குள் போவதற்குப் பதில் என்னுடனே இருக்க வேண்டும்... எனக்கு எல்லாம் செய்து தர வேண்டும் என்பதாய் இருக்கிறது. அதன் பின்னான நிகழ்வுகளே அவனை மனைவிக்காக அந்த மருத்துவமனையில் காத்திருக்க வைக்கிறது.

இப்படித்தான் தபால்காரராய் இருந்து காதலித்துக் கைபிடித்த தன் காதல் மனைவியின் மூட்டுவலி அறுவைச் சிகிச்சைக்காக வந்திருக்கும் இந்திரன்ஸின் காதல் கதையும் இருக்கிறது என்றாலும் அது திரையில் விரிக்கப்படவில்லை. அவர் போகிற போக்கில் செல்லிச் செல்லும் கதையை ஜோஜூவையும் சித்ராவையும் அந்த ஹோட்டலையும் எடுத்துவிட்டு இந்திரன்ஸையும் அவரின் மனைவியையும் கடிதத்தையும் வைத்து கற்பனையாய் காட்சிப்படுத்திப் பார்த்து நம்மால் ரசிக்க முடிகிறது. காதலே ரசனையானதுதானே.

விவகாரத்து செய்வதே முடிவு என்ற நிலையில் கெவினும் (அர்ஜூன் அசோகன்) மற்றும் ஜெர்ரியும் (நிகிலா விமல்) ஒரே வீட்டுக்குள் தனித்தனித் தீவாய் வாழ்கிறார்கள். அவளின் உடமைகள் எதுவும் என்னுடையதில் லேசாகக் கூட உரசக் கூடாது எனத் தனக்குள்ளேயே பூட்டுப் போட்டு வைத்திருப்பவனின் மனநிலையும் இவனை விட்டுப் போகக்கூடாது என மனதளவில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளின் மனநிலையும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது, அவர்களுக்குள் நிகழும் மாற்றங்கள் கூட ஜோஜூவின் வாழ்வை ஒட்டியே நடக்கின்றன. அவர்களின் வாழ்க்கை இறுதியில் என்ன ஆனது என்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப் பல கதைகளுக்கு இடையே பிரியாணியும், மீன் பொரித்தலும் என இனிப்பின் சுவையுடன் படம் பார்க்கும் நமக்கு பசியையும் கிளறிவிடுகிறார்கள். மலையாளிகளின் சாம்பார் சுவையில்லாமல் இருந்தாலும் பிரியாணிகளில் ரசனை மிக்கவர்கள் அவர்கள், இதில் பிரியாணி ஒரு கதாபாத்திரமாகவே மாறி நம் நாவில் உமிழ்நீரை பெருக்கெடுக்க வைத்துவிடுகிறது.

'இந்த மாதிரிச் சமயத்துல நாம பொண்டாண்டிகளுக்கு வேலை செய்யுறது நமக்குக் கிடைத்த பாக்கியம்டா... இதை நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்... இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... ஏன்னா ரொம்ப வருஷமா நம்ம துணிகளை அவங்கதானே துவைக்கிறாங்க...' என்று மனைவியின் சேலையைக் காயப் போட்டுக்கொண்டே இந்திரன்ஸ் சொல்ல, 'எனக்கு கல்யாணம் பண்ணினதுமே அந்த பாக்கியம் கிடைச்சுடுச்சு' என்று ஜோஜூ சொல்லும்போது அவர்களின் காதல் எத்தனை அன்பானது என்பதை உணரலாம்.

அதேபோல் 'இதற்கு மேல் இங்கு வைத்திருப்பதால் எந்தப் பலனும் இல்லை' என்று மருத்துவர் (லால்) சொன்னதும், அதுவரை அந்த மருத்துவமனைக்குள் சிரித்த முகமாய் வலம் வந்த ஜோஜூ கோபப்படுவதும் மருத்துவரிடம் கோபமாய் போய் பேச ஆரம்பித்தபின் நடப்பு நிலமையைப் புரிந்து கொண்டு பேசிவிட்டு வருவதும் நம்மைக் கலங்கடிக்கும் என்றால் அதன்பின் மனைவியைப் பார்க்கப் போய் ’உன்னையப் பார்க்க வர்ற அந்தச் சில நிமிடங்களுக்கு அனுமதி வாங்கணும், அப்படி வந்தாலும் அதிகபட்சம் அஞ்சு நிமிஷம்தான் பார்க்கமுடியும். இனி அப்படியில்ல... உன்னைய எந்த தடையும் இல்லாம நான் பார்க்கலாம், நாம எல்லா நேரமும் காதலுடன் வாழப்போறோம்’ எனச் சொல்லி மனைவியை அந்த மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லுமிடத்தில் அவள் எப்படியான நோயில் / நிலையில் இருக்கிறாள் என்பதையும் தன் காதல் மனைவியின் மீதான அந்தக் கணவனின் எந்த எல்லைக்குள்ளும் அடக்க முடியாத அன்பையும் பார்த்தபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அந்த இடம் எல்லாரையும் கலங்க வைத்துவிடும்.

ஸ்ருதி, நிகிலா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் ஸ்ருதி பிரியாணி சாப்பிடும் போது கண்களை உருட்டிச் சிரிக்கும் போது விழும் கன்னக்குழி அவ்வளவு அழகு. இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கும் இந்திரன்ஸ் முதல் அந்த நர்ஸ் வரை அனைவரும் அவரவரின் இயல்பான நடிப்பைக் கொடுத்திருப்பது சிறப்பு.

கொஞ்சம் அசந்தாலும் டாக்குமெண்டரியை விட மோசமானதாக அமைந்து விடலாம் என்ற கதைக்களத்தைக் கையில் எடுத்து, இதில் என்னத்தைச் சொல்லிவிட முடியும் என்ற நம் எண்ணத்தை உடைத்து நம்மையும் அவர்களுக்கு அருகில், அதே அறையில் படுக்க வைத்து ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு, அவர்களுக்காக வருந்தி, அவர்களுடன் சிரித்து, அவர்களுடன் உண்டு, உறங்கி ரசிக்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார்கள். மதுரம் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

படம் முழுவதும் நிரம்பி நிற்பது ஜோஜூவோட அன்புதான்... மதுரம் கூடிப்போனால் சுவை போய்விடும்தானே இதில் மதுரத்தை அளவோடுதான் நிரப்பியிருக்கிறார்கள். சுவையில் எந்தக் குறையும் இல்லை.

அரசு மருத்துவமனையில் மனிதாபிமனத்துடன் அன்போடு பார்ப்பார்கள் என்பதையும், மருத்துவமனை என்பது மோசமான அனுபவங்களையே அதிகமாகக் கொடுக்கும் இடம் என்ற நம் எண்ணத்தை, அடித்து உடைத்து அங்கும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதையும் காட்டியதற்கு இயக்குநர் அகமது கபீருக்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துகள்.

ஜித்தினின் ஒளிப்பதிவு அத்தனை அழகு, ஹேஷாம் அப்துல் வாகாப் மற்றும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்கள். 'பரிமித நேரம்' என்னும் பாடல் எல்லோரையும் ஈர்த்துக் கொள்ளும். அதேபோல் மதுரத்துக்கு மதுரம் சேர்ப்பது பின்னணி இசைதான் என்றால் மிகையில்லை, ஆர்ப்பாட்டமில்லா ஆரவாரம்... அழகு.

இந்தப் படத்தை அப்பு பத்து பாப்பு படக்கம்பெனியின் பெயரில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சிஜோ வடக்கன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள் வரிசையில் மதுரத்துக்கு முக்கிய இடம் உண்டு.

பார்க்காதவர்கள் பார்த்து ரசியுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

YouTube இல் கிடைத்தால் பார்க்கிறேன். அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்த்து விடுகிறோம் குமார்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் விமர்சனமே சொல்லிவிட்டது.

புது படமோ? வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கிறேன்

கீதா