கல்லூரி நட்பென்பது அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியதல்ல... அது புரிதலுடன் கூடிய நட்பென்பதால் இப்போது வரை அந்த மூன்றாண்டுகளில் துறைக்குள், துறை தாண்டிய நட்பில் என்னென்ன செய்தோம் என்பதும் யார்யார் நம் நண்பர்களாய் இருந்தார்கள் என்பதும் நியாபகத்தில் உண்டு.
எல்லாருடைய நினைவும் எப்போதும் உண்டு, ஊருக்குப் போனால் கண்டிப்பாக இந்த ஊர் போகவேண்டும் இவனைப் போய் பார்க்க வேண்டும் என்றெல்லாம் பெரிய எண்ணமிருக்கும் ஆனால் ஊர் போய் இறங்கியவுடன் இருக்கும் ஒரு மாதத்தில் செய்ய வேண்டியவை எனக் குவிந்து கிடக்கும் வேலைக்கு ஊடே, எங்கே ஊர் சுற்றக் கிளம்பிட்டீங்க என்ற கேள்விக்கனைக்குள் எல்லாமே அடங்கிப் போக ஒவ்வொரு முறையும் யாரையும் சந்திக்காமலேயே வந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது.
எனது கல்லூரி நண்பர்களில் எல்லாருமே மிகவும் நெருக்கம் என்றாலும் அதிலும் ஒருவன் இன்னும் நெருக்கமாய் இருப்பான் அல்லவா..? அப்படித்தான் என் நண்பன் அண்ணாத்துரை, இராம்நகரில் தங்கிப் படித்தான். பெரும்பாலான பகல் நேரத்தில் அவனுடைய அறையில் இருப்பதும், மாலை ஐயா வீட்டில் என்பது எப்போதும் தொடரும் செயலாய்... ஐயா வீட்டுக்கு அவன் வருவதில்லை.
ஊருக்குப் போய்விட்டு வந்தால் விளைந்தது என நிறைய வரும். மதியம் சாப்பிடப் போக என் சைக்கிள்தான் எடுத்துச் செல்வான். சில நேரங்கள் ஏதாவது அசைவம் சமைத்திருந்தால் வாடா உனக்காகத்தான் செஞ்சேன் எனச் சொல்லி என்னையும் இழுத்துச் செல்வான், இல்லையேல் மாலை என்னை அறையில் விட்டுட்டுப் போ எனச்சொல்லி சைக்கிளை வாங்கி ஓட்டுவான். அங்கு போனதும் உனக்காகத்தான் செஞ்சேன் நீ சாப்பிட வரமாட்டேனுட்டே... இந்தா கொஞ்சம் சாப்பிட்டுப் போ என நிற்பான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனின் அறை நண்பனும் எங்கள் தோழனுமான சேவியர் சோறு போட்டு எடுத்து வந்து விடுவான்.
நட்பின் இறுக்கம் அதிகமான போது அது குடும்ப உறவாகிப் போனது. விடுமுறை தினங்களில் எங்கள் வீடு, பரிட்சை நாட்களில் பெரியநாயகி அம்மன் கோவிலில் படிப்பு, இரவு அவன் அறையிலோ அல்லது எங்கள் வீட்டிலோ இருந்து படிப்பதென மாறிப்போனது. அதன்பின் ஒரு வார விடுமுறை எல்லாம் கிடைக்கும் போது (அடிக்கடி ஸ்டிரைக்... ஐடிசி என விடுமுறைக்கு அப்போது பஞ்சமில்லை) அவனுடைய ஊருக்குப் போய் அவன் வீட்டில் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என உறவுகளுடன் உண்டு உறங்கி அது ஒரு கனாக்காலம்.
காளையார்கோவிலில் அவன் வேலை பார்த்தபோது தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமலேயே இருந்தது. வழக்கறிஞர் நவநீத மாப்பிள்ளையும் அங்குதான் இருக்கிறான் என்றாலும் ஒருமுறை அவனுடன் பேசும்போது - அதன் பின் அவனுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை, நம்பர் மாற்றிவிட்டான் போல - அண்ணாத்துரை பற்றி கேட்டதற்கு இங்குதான் இருக்கிறான் நம்பர் வாங்கித்தாரேன்டா என்றான். தொடர்பு அற்றுப் போனதால் அதுவும் கைகூடவில்லை.
சென்ற வாரத்தில் மனைவிக்கு போனில் அழைத்து நான் குமாரோட நண்பன். என்னை அவனுக்கு ஞாபகமிருக்காது ஆனா அவனை எனக்குப் பார்க்கணும், பேசணும். நான் தேவகோட்டை யூனியன் ஆபீசிற்கு மாற்றலாகி வந்து ஒன்னறை வருடமாச்சு. வந்தது முதல் அவனைப் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் உங்க ஊருக்குப் போற களப்பணியாளர்களிடம் சொல்லி, உங்க நம்பர் வாங்கி வரச்சொன்னேன். அவங்க வாங்கிட்டு வந்தாங்கன்னு சொல்லிப் பேசியிருக்கிறான். முடிந்தால் அவனைப் பேசச் சொல்லுங்க என்றும் சொல்ல, நம்ம வீட்டில் அவருக்கு உடனே பேசுங்க... அவரு உங்க மேல அவ்வளவு பாசமாயிருக்காருன்னு சொல்லி நம்பர் தந்தாங்க.
போனடித்து 'டேய் அண்ணாத்துரை' என்றதும் அடேய் நீ என்னைய மறக்கலடா, மறந்திருப்பேன்னு நினைச்சேன் என்றான். அதெப்படி மறக்க முடியும் எல்லாமும் ஞாபகம் இருக்கும் போது அந்த வயதில் எனக்காக சாப்பாடு செய்து அழைத்துப் போய் கொஞ்சம் சாப்பிடுடா எனப் பிடிவாதம் பிடித்து, இருவர் குடும்பத்திலும் பிள்ளைகளாய் மாறி, அப்பாக்கள் இங்கும் அங்கும் போய் தங்கி வரும் அளவுக்கு உறவான நட்பு இது அவ்வளவு எளிதில் மறக்குமா என்ன... நான் எப்போதும் எதையும் அவ்வளவு எளிதில் மறப்பதில்லை. அதுவும் ஒருமுறை சந்தித்ததுதான் என்றாலும் அந்த நட்பை என்றும் என்னுள் இருந்து வெளியில் விடுவதேயில்லை.
இன்று சற்று முன் மனசு கையெழுத்துப் பிரதியை கல்லூரியில் எங்களுடன் சேர்ந்து நடத்திய சுபஸ்ரீ காற்றுவெளி கட்டுரை குறித்து முகநூல் அரட்டையில் உரையாடும் போது நீ எல்லாத்தையும் ஞாபகம் வைத்திருக்கிறாய் எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்றார். நான் என்னை மதித்தவர்களையும் மிதித்தவர்களையும், பார்த்து கேட்டு வளர்ந்தவற்றையும், குடும்பம் அனுபவித்த கஷ்டங்களையும் எப்போதும் மறப்பதில்லை. ரேசன் அரிசி சாப்பாடும், அம்மாவிடம் காசில்லாத வறுமையும் என்றும் என்னைவிட்டு விலகியதில்லை. அதை யாரிடமும் மறைத்துப் பேச நான் நினைத்ததுமில்லை. இன்றும் எனக்கு கஞ்சிதான் வேண்டும் என்பதை என் அம்மாவும் மனைவியும் அறிவார்கள். நான் எப்போதும் மாறுவதில்லை... மாற்றங்களை என்னுள் கொண்டு செல்வதும் இல்லை. அப்படியிருக்க பின் எப்படி என் நண்பனை மறப்பேன்..?
நீண்ட பேச்சு... அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டுமென ஸ்ரீலங்கா கேம்ப் வரைக்கும் போனேன்டா, அப்புறம் வழி தெரியலை. அக்கா ஊருப்பக்கம் போகும் போது அக்காவைப் பார்க்கணும்ன்னு நினைச்சு ஊருக்கு வழி கேட்டா, அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது சார்ன்னு சொல்லிட்டாங்க என எல்லாரையும் விசாரித்தான். உன்னைய எப்படியும் பார்க்கணும், பேசணும் ஊருக்கு வந்ததும் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வர்றே என அத்தனை மகிழ்வாய் பேசினான். பிள்ளைகள் போட்டோ அனுப்பி நீ அனுப்புடா என்று சொல்லும் முன் உன்னைய பாக்கணும்டா, இப்ப எப்புடி இருக்கேன்னு பார்க்க படம் அனுப்புடா என்றான்.
அப்பா - அம்மா படம் கேட்டு வாங்கிப் பார்த்து ரொம்ப கெரக்கமாயிருக்காங்க என்றான். வயசாயிருச்சுல்ல என்று சொல்லிவிட்டு அவனின் அம்மா அப்பா குறித்து கேட்டபோது அப்பா இறந்து பத்து வருசமாச்சுடா என்றான். எனக்கு தேவகோட்டையில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் என ஒரு மூட்டையை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்தே எங்கள் ஊருக்கு வந்து, அட ஏண்ணே நடந்து வந்தீங்க, அண்ணாத்துரையைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமுல்ல என்ற அப்பாவிடம் நம்ம வீட்டுக்கு எப்புடி வந்தா என்ன எனச் சிரித்த அந்த முகம் என் மனதில் வந்து போனது. அப்பா உங்க ஆசீர்வாதம் எங்களுக்கு எப்பவும் இருக்கட்டும்.
நட்புக்கு எப்போதும் உயிர் இருந்து கொண்டே இருக்கும். அது அவ்வளவு எளிதில் மரித்துவிடாது. என்றேனும் மீண்டும் துளிர்க்கும். அப்படித்தான் துளிர்த்திருக்கிறது.
நல்லாயிருடா நண்பா... இனி நம் இறுதிவரை நட்போடிருப்போம்.
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
தொடர்பே இல்லாமல் இருந்தாலும், உண்மையான நட்பு விட்டு விலகுவதில்லை. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் குமார். பாராட்டுகள்.
நட்பின் விழைவு... மனதில் குழைவு..
ஆழ்ந்து படித்து ரசித்தேன். டேய்......என்று அழைப்பதும், அழைக்கப்படுவதும் மறக்கமுடியாதது. கும்பகோணத்தில் இளமைக்கால நண்பர்கள் இன்னும் அப்படியே அழைக்கின்றனர். மனதை நெருடிய பதிவு.
ஆகா... இந்த மகிழ்வே சிறப்பு...
மகிழ்வான செய்தி
நல்ல நட்புக் கெட்டதாக
வரலாறு இல்லையே!
கருத்துரையிடுக