மாயமான்...
கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது.
புத்தகத்தில் மொத்தம் 17 கதைகள்... எல்லாமே கிராமத்து வாழ்வை, மனிதர்களை, அவர்களின் மனங்களை நம் கண் முன்னே நிறுத்தும் கதைகள். வட்டார வழக்கில் எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். அந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர, வாசிக்கும் மற்றவர்களுக்குப் பல வார்த்தைகள் புதிதாய் இருக்கும்... சிலவை சுத்தமாகப் புரியாது. அப்படி இருந்தும் தன் கரிசல் மண்ணின் வட்டார வழக்கில் மக்களின் மனதை வென்ற முன்னத்தி ஏர் கி.ரா என்றால் மிகையாகாது.
மதுரைத் தமிழ் எனச் சினிமாவில் கொலையாய் கொல்லும் மதுரைத் தமிழை அந்தப் பகுதி மக்கள் பேசும் போது கேட்டுப் பாருங்கள் அப்போது புரியும் அதன் இனிமை... அப்படித்தான் ஒவ்வொரு பகுதி வட்டார வழக்கும், நாம் பார்க்கும் சினிமாவில் வருவது போல் இருந்து விடுவதில்லை. சில வார்த்தைகளை அந்தப் பகுதி மக்கள் நீட்டி முழக்கி பேசும்போது கிடைக்கும் சுவை அலாதியாது. கி.ராவின் எழுத்தில் ஒவ்வொரு கதையிலும் நாம் அந்தச் சுவையை உணரவும் ரசிக்கவும் முடியும்.
'கிராமம் என்னும் அலகு இந்தியச் சமூகக் கட்டமைப்பின் அணு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றை அச்சுப் பிசகாமல் அப்படியே நாம் இப்போதும் இந்தியக் கிராமங்களில் பார்க்கலாம்' என்று சொல்லியிருப்பார் கோசாம்பி என்னும் வரலாற்று ஆசிரியர். பொருட்களை விடுங்கள். 90-களில் ஊரில் பேச்சு வழக்கில் இருந்த பல பொருட்களின் பெயர்கள் இப்போது யாருக்கும் தெரிவதில்லை. நான் எனது கதை ஒன்றில் போகணி (டம்ளர்), குலுதாளி (மாட்டுக்குத் தண்ணீர் வைக்கும் தொட்டி) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியிருந்த போது பலர் அந்தப் பொருட்களின் பெயரைச் சொன்னதற்காகவே என்னிடம் பேசினார்கள். சிலர் இதெல்லாம் என்ன என்பதாய் கேட்டார்கள். பலவற்றை மறந்து விட்டோம்.
இங்கே கி.ரா. காட்டும் மனிதர்கள் எதார்த்தமானவர்கள்... வாஞ்சை மனசுக்குச் சொந்தக்காரர்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமான மனிதரையும் கரிசல் மண்ணின் வாழ்வையும் நம்முன்னே நிறுத்துகிறது. முதல் கதையான 'கதவு' நாம் பால்யத்தில் அதன் மீது நின்று ஆடியதையும் , கதவை ஆட்டாதே வீட்டில் சண்டை வரும் என்று பெரியவர்கள் சொன்னதையும், அப்படி ஒரு கதவை நிலையில் இருந்து கழட்டி எடுத்து விட்டால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் இரு குழந்தைகளின் வழியே காட்டியது.
மாயமான் கதையானது அரசாங்கம் கிணறு வெட்டப் பணம் கொடுக்கும் என்பதை நம்பி இறங்கி, செட்டியார் ஒருத்தர் என்ன ஆனார் என்பதைச் சொன்னாலும் இன்றும் அரசு உதவியின் மூலம் செய்யலாமென என இறங்கி அரசு அலுவலர்களுக்கு அழுதே சோர்ந்து போகும் மக்களைக் கண் முன்னே காட்டியது.
இங்கே ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த கொரோனா கட்டுப்பாட்டுக்கு இடையில் சில மாதங்களுக்கு முன் நடக்க வேண்டிய எங்க அக்கா மகளின் திருமணம் நாளை நடக்க விருக்கிறது. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்து லாக்டவுனால் தள்ளிப் போன திருமணம் எல்லாரையும் அழைக்கவில்லை என்றாலும் முக்கிய உறவுகளான சிலரையாவது அழைக்க வேண்டிய சூழல். கிராமத்து வீட்டில் வைத்துச் செய்வது கடினம் என்பதால் அருகிலிருக்கும் கடைகள், பள்ளிகள் இருக்கும் சிறிய ஊரில் சின்னதாய் ஒரு செட்டிய வீட்டில் (இப்போது அது திருமண மண்டபம் - எங்கள் பகுதியில் பல செட்டிய வீடுகள் திருமண மண்டபங்களாகி வருடங்கள் பலவாகிவிட்டன) நடத்துகிறார்கள். இதற்கு காவல்துறை அனுமதி வேண்டும் என்பதால் அவர்களிடம் கேட்டதற்கு அவர் கேட்ட லஞ்சம் என்ன தெரியுமா..?
மண்டபத்துக்கு எதிரே இருக்கும் காவல் நிலையத்தில் இருக்கும் எல்லாருக்குமான முதல் நாள் மாமவிருந்து, மறுநாள் காலை, மதியம் சாப்பாடு அங்கு வந்து சேர வேண்டும் எனபதுதான். சாப்பாடு போடுவதற்கு யாரும் தயங்க மாட்டார்கள். மண்டபத்தில் திருமணத்தன்று அந்த வேலைகளில் திரிவார்களா... இல்லை இவர்களுக்குச் சாப்பாடு தூக்கிட்டுத் திரிவாங்களா.. அருகில்தானே இருக்கு நாமே போய் சாப்பிட்டுக்கலாமே என்ற சிந்தனை கூட இல்லாத மனிதர்கள்... இவர்கள் அங்கு வந்து சாப்பிட்டால் தன்மானம் போயிரும்... ஆனால் இப்படி வாங்கிக் கொள்வதால் அது காக்கப்படும் என்ற எண்ணம். இவர்களுக்கு பணியில் சேரும்போதே எப்படி வாங்கிப் பாக்கெட்டையும் வயிற்றையும் நிரப்பலாம் எனச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள் போல... அது ஒரு பயிற்சியாகவும் இருக்கும் போல. அப்படித்தான் செட்டியார் அரசு அதிகாரிகளால் அதிகம் பாதிக்கப்படாவிட்டாலும் கிணறு வெட்ட மேலும் பணம் வாங்கிய வகையில் எல்லாம் இழந்து நிற்கிறார்.
கோமதி பேசுவது பெண்மை கலந்த எல்லாராலும் கேலியாகப் பார்க்கப்படும் ஆண் உருவில் இருக்கும் பெண் மனம் கொண்ட ஒருவரைப் பற்றி. அவர் மேல் பாசம் வைக்கும் ஒரு பெண் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் செல்ல, வீட்டுக்கு வேலைக்குப் போன இடத்தில் அவளின் அண்ணனைத் தன் ராஜகுமாரனாய் நினைத்து அதனால் அவள் அடையும் துயரத்தைச் சொல்லும் கதை.
இப்படித்தான் கன்னிமை பேசும் நாச்சியாரம்மா, பேதையின் பேச்சி, ஜீவனில் வாழும் அங்குப்பிள்ளை, சந்தோஷத்தின் முன்னையன், கறிவேப்பிலைகளில் வரும் கிழத்தம்பதிகள், விளைவின் பாவய்யா, வேட்டியின் தூங்கா நாயக்கர், கனிவு காட்டும் மல்லம்மா, குருபூஜை செய்யும் சிவகாமி ஆச்சி, நிலை நிறுத்தலில் வரும் மாசானம், கண்ணீர் காட்டும் மாடத்தி, கரிசல்காட்டில் ஒரு சம்சாரியில் வரும் துரைசாமி நாயக்கர் என எல்லாருமே கரிசல் மண்ணில் வாழ்கிறார்கள். நாம் அவர்களுக்கு அருகே அமர்ந்து அவர்களின் வாழ்வை, படும் பாட்டை பார்த்து ரசிக்கிறோம், மகிழ்கிறோம், வேதனைப்படுகிறோம், கண்ணீர் சிந்துகிறோம். இதையெல்லாம் செய்வது கி.ராவின் வசீகரிக்கும் வட்டார எழுத்து.
இதுபோக ரசித்துப் படிக்க 'புறப்பாடு', கனவில் காணும் கொடூரத்தை பதைபதைப்புடன் வாசிக்க 'வந்தது' என நிறையக் கதைகள் இருக்கின்றன.
கி.ராவின் இறப்பின் போதுதான் அவரின் மூலம் எங்கிருந்து வந்தது எனச் சிலர் பதியக் கண்டேன். அவரின் பரம்பரை எங்கோ முளைத்திருக்கட்டும்... அவர் முளைத்தது கரிசல்காட்டில்தானே. நாம் இருக்கும்வரை யாரையும் எதுவும் சொல்ல மாட்டோம்... கொண்டாடக்கூடச் செய்வோம், இறந்தபின்தான் ஆராய்ச்சியைத் தொடங்கி எல்லாத்தையும் அவிழ்த்து விடுவோம். தொ.ப இறந்த போது அவர் சார்ந்த சமூகம் அவரின் பேருக்குப் பின்னே சாதியைப் போட்டதுக்குப் பொங்கியவர்கள்தான் நாம். எங்க பக்கம் எல்லாம் சில சாதிகளில் பேருக்குப் பின் அதைப் போடத்தான் செய்கிறார்கள். இப்போது திருமணப் பத்திரிக்கையில் சாதி இல்லாமல் எந்தப் பத்திரிக்கை இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவெளி என்றால் பொங்கல் பலமாத்தான் இருக்கும். இறப்பில் மட்டுமல்ல ஒருவரின் வெற்றியின் பின்னே அவரின் சாதியைத் தேடி போற்றவும் தூற்றவும் செய்யும் மனிதர்கள்தான் நாம்.
கி.ரா.வின் இறப்புக்குப் பின் பேசியவர்கள் அவரின் கதை மாந்தர்களின் பெயர்களை வைத்து கதைகள் வந்தபோதே பொங்கி இருக்கலாமே. எல்லாமே அப்படியான, விஜயநகரத்துப் பேர்கள்தான்... ஏன் பொங்க வைக்கவில்லை..?
அச்சு அசலான கிராமத்து வாழ்க்கையை, கரிசல் மண்ணின் வாழ்வாதாரத்தை, அது சுமக்கும் நாட்டார் பாடல்களை என எல்லாத்தையும் கலந்து கொடுத்திருக்கும் 'மாயமான்' மிகச் சிறப்பான சிறுகதைத் தொகுப்பு.
'கி.ராஜநாராயணன், ஜானகிராமன் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழந்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை' என்று சுந்தர ராமசாமி சொல்லியிருப்பது மறுக்கமுடியாத உண்மை.
வாசித்துப் பாருங்கள் வித்தியாசமான அனுபவத்தை உணரமுடியும்.
----------------------------------------------------
மாயமான்
(தமிழ் கிளாசிக் சிறுகதைகள்)
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
தொகுப்பு : சபரிநாதன்
காலச்சுவடு பதிப்பகம்
----------------------------------------------------
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
அன்பின் குமார்,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜானகி ராமன், ஐயா ராஜ நாராயணன்
பற்றிய சொற்கள் தான் என்னை அவர்களை மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது.
நான் அறிந்த உண்மை விவசாயி பண்பட்ட மாமேதை நம் ஐயா ராஜ நாராயணன்.
அவர் கதைகளை நீங்கள்
பதிவாகச் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது.
இந்தப் புத்தகங்களை எங்கே வாசிக்கிறீர்கள்.
நானும் வேறு ஊரில் இருப்பதால் எப்படி வாங்கிப் படிப்பது என்று தெரியவில்லை.
இப்போதைக்கு இந்தியப் பயணம் இல்லாத நிலையில்
நிறைய புத்தகங்கள் வாங்கும் ஆசை மட்டும் குறையவில்லை.
இந்த விமரிசனத்துக்கு மிக நன்றி மா.
அருமையான ஆழ்ந்த விமர்சனம் குமார்...
மதிப்புக்குரிய வல்லிசிம்ஹன் அவர்களுக்கு,
தங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி.
இங்கும் (அபுதாபி) புத்தகம் கிடைப்பது அரிது. சில நண்பர்கள் ஊருக்குப் போகும் போதோ, அல்லது அவர்களின் நண்பர்கள் மூலமாக ஊரில் இருந்து வாங்கி வரும்போதோ வாசிக்கக் கிடைக்கும். அப்படி வாசிப்பதுதான்.
மேலும் எனக்கு பிடிஎப்பாக நிறைய புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும் நண்பர்கள் மூலமாக. அலுவலகத்துக்குப் பேருந்துப் பயணம் 35-40 நிமிடங்கள், இந்த நேரத்தில் காலை, மாலை ஒரு மணி நேரம் வாசிக்க முடியும். மேலும் அறையில் சில நேரங்களில் விடுமுறை நாட்களில் வாசிப்பதுண்டு.
நன்றி.
அன்பின் தன்பாலன் அண்ணா.
நலமா?
தங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான விமர்சனம்
அவசியம் படிப்பேன்
நன்றி
கருத்துரையிடுக