மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 12 மே, 2021

'வீரியமாய் கிளைக்கட்டும் மண்ணின் செடி' - தேவா சுப்பையா

'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பு 2020-ல் வெளியாகியிருந்தாலும் இப்போதும் நண்பர்கள் படித்துக் கருத்திடுவது மகிழ்வைத் தருகிறது. சமீபத்தில் எழுத்தாளர், கவிஞர் சிவமணி எழுதியிருந்தார். இப்போது எழுத்தாளர், கவிஞர், வலைப்பதிவர், நடிகர் எனப் பன்முகங்கள் கொண்ட, எங்கள் மண்ணின் மைந்தர் தேவா சுப்பையா அண்ணன் எழுதியிருக்கிறார்.

அவர் பிடித்ததாய்ச் சொல்லும் மூணு கதைகளும், இப்படியெல்லாம் எழுதியது நீயா இதெல்லாம் வேண்டாம்ய்யா எனச் சொல்லும் இரண்டு கதைகளும் எனத் தொகுப்பில் உள்ள பன்ரெண்டு கதைகளுமே ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் கவர்ந்திருந்தது. மனத்தேடல் கதையெல்லாம் ஏய்யா எழுதுனே என்கிறார் இவர்... மனத்தேடல் ஒவ்வொருவருடைய முதல் காதலையும் மனசுக்குள் நிறுத்தும் எனச் சிலாகித்து என்னிடம் பேசியும் தன் விமர்சனத்தில் எழுதியும் இருந்தார் சிவமணி.

வீராப்பு முதல் எதிர்சேவை வரை ஒவ்வொருவரையும் ஒவ்வொன்று கவர்ந்தது என்பதை ஆரம்பத்தில் இருந்து தேவா அண்ணன் வரை வந்த விமர்சனங்களை வைத்து அறிந்து கொண்டேன்... அண்ணன் சொல்லியிருப்பது போல் என் எழுத்தை மண்ணோடுதான் பிணைத்துக் கொண்டுள்ளேன்... அப்படியே தொடர்வேன்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 'தீபாவளிக் கனவு'. சாதாரணக் கதையாகத்தான் எழுதினேன்... வீராப்பு, நினைவின் ஆணிவேர், எதிர்சேவை என மனங்கவர்ந்த கதைகளுடன் இதை ஒப்பிட்டது கிடையாது... ஆனால் ஒரு சிறுமியின் ஆசை நிராசை ஆனதன் வலி அந்தக் கதைக்குள் இருக்கும்... அதனால்தான் விமர்சித்த அனைவரையும் அந்தக் கதை கவர்ந்துள்ளது. அதற்க்கு தேவா அண்ணனும் விதிவிலக்கல்ல என்பதை அவரின் விமர்சனத்தில் சொல்லியிருக்கிறார்.

நாவல் எழுதச் சொல்லியிருக்கிறார்... வேரும் விழுதுகளும் மண்ணின் மனிதர்களைத்தான் பேசியிருக்கிறது.

விமர்சனத்தின் இறுதியில் அவர் 'நூலகத்திலிருந்து எழுத வந்தவர்களல்ல நாம்வெறுங்காலோடு ஓடி வயக்காட்டில் அப்பனுக்குச் சோறு கொடுத்து பீச்சிய பாலை பண்ணைக்குத் தந்துகுத்திய கத்தாழம் முள்ளை தரையோடு வைத்து தேய்த்து விட்டு எழுத வந்தவர்கள்; இன்னும் வீரியமாய் எழுந்து கிளைக்கட்டும் என் மண்ணின் செடி.' எனச் சொல்லியிருக்கிறார்.

உண்மை... எப்போதும் நூலகத்துக்குள் நுழைந்து அறிவுப்பசி போக்கிக் கொண்டதில்லை... கல்லூரியில் படிக்கும் போதுதான் எழுத முயற்சித்தது... சில பத்திரிக்கைகள் கொடுத்த போதை தொடர்ந்து எழுதச் சொன்னது... 'வயல்ல உரம் போடணும்... இப்ப என்ன கிறுக்கிக்கிட்டு இங்க உக்காந்திருக்கே' என அப்பா கத்தினாலும் எழுத்து தொடர்ந்தது கூடவே விவசாய வேலைகளும்தான்.

அழகான, ஆழமான விமர்சனத்துக்கு நன்றிண்ணா... வேரும் விழுதுகளுக்கும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.

*************************



னிரென்டு கதைகளில் மூன்று கதைகள் பிடித்திருந்தது. மூன்றையும் இப்படியாய் தரவரிசைப்படுத்த என்னால் முடிந்தது.

1) அப்பாவின் நாற்காலி
2) வெள்ளாடும் செம்மறியாடும்
3) தீபாவளிக் கனவு
அடர்த்தியான மொழியும், நேரடியான விவரிப்புகளும் கதை முடியும் போது தீக்குச்சியை கிழித்தது போல கண நேர பரவசமும் இந்த மூன்று கதையிலும் மேற்சொன்ன வரிசையில் நடந்தன. அப்பாவின்... என்ற அடைமொழியோடு நிறைய நோஸ்டாலஜியாக் கதைகளை வாசித்திருந்ததால் கொஞ்சம் அலுப்போடுதான் துவங்கினேன். நீர்த்துப் போகாதபடிக்கு கதையில் மொழியும் சம்வங்களும் விவரணைகளுமிருந்ததால் வாசிக்கப் பிடித்திருந்தது. அதுவும் அப்பாவோட கைலி, அப்பாவோட தட்டு, அப்பாவோட தம்ளர், அப்பாவோட சீப்பு, அப்பாவோட செருப்பு, அப்பாவோட சைக்கிள் என்று அப்பாக்களை வீடு நிறைய கண்டு வளர்ந்தவர்கள் நாம், மறுபடியும் குமார் அதைக் கதையில் சொல்லும் போது எல்லோருக்குள்ளும் எல்லோரின் அப்பாவும் வந்து செல்வதை தவிர்க்க இயலாது.
பல காலக்கட்டங்களில் எழுதிய கதைகள் தொகுப்பில் இருப்பதால் அப்பாவின் நாற்காலியை எழுதியவர்தானா மனத்தேடல், என்னுயிர் நீதானே போன்ற கதைகளையும் எழுதினாரா என்ற ஐயம் தோன்றுகிறது.
வட்டார மொழியில் எழுதப்பட்ட வெள்ளாடும் செம்மறியாடும் கதை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் க்ளாசிக் வரிசையில் சேர்ந்திருக்கும். எனக்குத் தெரிந்து சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்கள் நிலப்பரப்பினை மையப்படுத்தி மிகப்பெரிய அளவில் பெருங்கதையாடல்கள் நிகழவேயில்லை. இந்தக்கதையில் ஒரு சிறு துளியால் தொண்டையை நனைக்க முயன்றிருக்கிறார் எழுத்தாளர். காளையார்கோயில் பக்கம் கண்ணமங்கலம் என்று அந்தப் பெண் சொல்லுமிடத்தில் வானம்பார்த்த பூமியின் பிரதிநிதியான என் கண்கள் கலங்கின.
கண்களை கலங்க வைக்கும் கதையல்ல ஆனாலும் என் செம்மண் சரளைக்காட்டிலிருந்து எழும்பி வந்த குரல் அல்லவா அது. எல்லா மாவட்டங்களிலும் செழிப்பாய் மிக அதிக அளவில் எழுத்தாளர்கள் வந்து தங்கள் நிலத்தையும், அதன் வரலாற்றையும், மக்களின் வாழ்வையும் எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கையில் என் சிவகங்கை மாவட்டத்திலிருந்து அதிகம் பேர் எழுத வரமுடியாததற்குக் காரணம் நிறைய இருக்கிறது.
புன்செய்க் காட்டில் தண்ணீர் இல்லாமல் வெற்று உழவு உழுது, விதைகளை விதைத்து விட்டு வானம் பார்த்துக் கொண்டிருப்பவனின் அப்போதைய தேவை நிலம் நனைத்துச் செல்லும் ஒரு சிறு மழை. வயலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவனுக்கு பேனாவும் பேப்பரும் காத தூரம்தானே....
தேவகோட்டையென்று சொன்னாலும் பரியன்வயல் இன்னமும் வெறொரு நூற்றாண்டு நினைவுகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்துதானே இந்த அப்பாவின் நாற்காலி பிரம்மிக்க வைக்கிறது.
தீபாவளிக் கனவு முன்பே வாசித்திருக்கிறேன். அவ்வளவு கனவுகளோடு தீபாவளிக் கொண்டாடக் காத்திருந்தவளின் சந்தோஷம் சடக்கென்று உடைந்து போகையில் கூடவே நமக்கும் மனது சோர்ந்துதான் போகிறது. ஒரு முரண் நியாத்தோடு வந்தால் என்ன செய்ய முடியும், என்ற கேள்விதான் கதையின் மையப்புள்ளி.
தம்பி் நித்யா குமார்ரின் இந்த முதல் புத்தகத்தில் எழுதியிருக்கும் நிறைய கதைகள் இணையத்தில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பரிசு வென்ற கதைகள்தானென்றாலும்..
போயல போட்டீல்ல அப்புறம் என்னத்துக்கு உனக்கு டீ...என்பன போன்ற சொல்லாடல்களோடு சிவகங்கை மாவட்டத்தின் மண் வாசம் நிறைந்த நிறைய கதைகளை குறிப்பாய் நாவல்களை எழுத வேண்டும் என்பதே என் ஆவல். இன்னும் நிறைய நிறைய வாசித்து செம்மையாகி இன்னும் பல படைப்புகள் படைக்க மனமாற வாழ்த்துகிறேன்..
நூலகத்திலிருந்து எழுத வந்தவர்களல்ல நாம்வெறுங்காலோடு ஓடி வயக்காட்டில் அப்பனுக்குச் சோறு கொடுத்து பீச்சிய பாலை பண்ணைக்குத் தந்துகுத்திய கத்தாழம் முள்ளை தரையோடு வைத்து தேய்த்து விட்டு எழுத வந்தவர்கள்; இன்னும் வீரியமாய் எழுந்து கிளைக்கட்டும் என் மண்ணின் செடி.
ப்ரியங்களுடன்
தேவா சுப்பையா..
மே' 11' 2021.

                                                                                                                                                                                                                  -'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துகள் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள் பாராட்டுகள் குமார்!

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

பாராட்டுகளும், வாழ்த்துகளும்.