நேற்றைய மாலையைச் சிறப்பாக்கியது அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் ‘கானல்’ காணொளி வழியாக நிகழ்த்தப்பட்ட எழுத்தாளர் தெரிசை சிவாவின் ‘திமில்’ சிறுகதை தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம்.
சிவாவின் முதல் தொகுப்பான ‘குட்டிக்கோரா’ பற்றிப் பேசி, திமில் சென்னைப்
புத்தகக் கண்காட்சியில் வெளியானதைச் சொல்லி, துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி நாட்
அவுட் பேட்ஸ்மேனாக அடித்து ஆடிய சசியின் இடத்தில் சில கூட்டங்களாக இறங்க
ஆரம்பித்து தற்போது துவக்க ஆட்டக்காரராய் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் சுரேஷ்தான்
இன்றும் முதலில் களமிறக்கப்படுகிறார் என்று சொல்லி திமிலை அடித்து ஆடக் களம்
அமைத்துக் கொடுத்தார் ஆசிப் அண்ணன்.
சுரேஷ் பாபு:
நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வேன் என்பதை நேரடியாகச் சொல்லாமல், இங்க
பாருங்கப்பா நான் எந்தக் குறிப்பும் எடுக்கலை... இப்படித்தான் பேசணுமின்னு எல்லாம்
முடிவு செய்து வைக்கவில்லை... பேசுவேன்... ரொம்ப நேரமான மாதிரித் தெரிந்தால்...
ஆமா தெரிந்தால் மட்டுமே கண்ணக் காட்டுங்க முடிச்சிக்கிறேன்... இல்லேன்னா களத்தில்
நின்னுக்கிட்டேதான் இருப்பேன் என்று சொல்லி விட்டு ஆட ஆரம்பித்தார்.... சுரேஷ்
அண்ணன் எப்பக் கட்டை வைத்து ஆடியிருக்கிறார்... எப்பவுமே பவுலருக்கு எதிரான
அடிதானே.
நான் சிவாவின் குட்டிக்கோரா வாசிக்கும் முன்னரே அவரின் ‘அண்டி’
வாசித்திருக்கிறேன்... அருமையான கதை... எனக்கு ரொம்பப் பிடிக்கும் என ஆரம்பிக்க,
சிவா முகத்தில் மகிழ்ச்சி... ஆஹா.... சுரேஷ் அண்ணன் இன்னக்கி நம்மள தூக்கி
நிறுத்திட்டாருன்னு... அப்புறம்தான் அடிக்க ஆரம்பித்தார். கதாபாத்திரங்களின்
அறிமுகத்தைப் பற்றிப் பேசி, கதாபாத்திரங்களின் பெயர்கள் மனதுக்குள் நிற்காமல்
போவதுதான் முதல் குறை என்று சொன்னார். மேலும் எனக்கு பெயர்கள் எல்லாமே மறந்து
போயிருச்சு என்பதே உண்மை என்றார்.
தொகுப்பில் இருக்கும் இடுகாட்டு மோட்சம், சுப்பாச்சி போன்ற கதைகள் எனக்கு
ரொம்பப் பிடித்த கதைகள் என்றாலும் ஒரு கதையை வாசித்ததும் அது மனதுக்குள்
சிம்மாசனம் இட்டு அமர வேண்டும் அப்படியான கதைகள் ஏனோ இந்தத் தொகுப்பில் இல்லை
என்றார். சிவாவின் எழுத்தில் நாஞ்சில் நாடனின்
வீச்சும் அவரின் பாணியும் அதிகமிருப்பதை ஒரு குறையாகச் சொல்லி, இனிமேல் அவருக்கென
ஒரு பாணி உருவாக்கி எழுத வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
கதைகள் எல்லாமே வட்டார வழக்கில் இருப்பது குறித்துப் பேசும்போது வட்டார
வழக்கில் தவறில்லை... கதாபாத்திரங்கள் பேசுவது சிறப்பு... எழுத்தாளனும் அதே வட்டார
வழக்கில் பேசுவது என்பது கதையின் சுவராஸ்யத்தைக் கெடுக்கும். என்றான், வந்தான் என
பொதுவான வார்த்தைகளை அப்படியேதான் எழுத வேண்டும் என்றார். மேலும் ஆங்கில
வார்த்தைக் கலப்பு, எழுத்துப்பிழை குறித்து நான் பேச விரும்பவில்லை என்றதுடன்
உள்ளுக்குள் நிற்காத கதாபாத்திரங்களே இத்தொகுப்பின் முக்கியமான குறையாக நான்
கருதுகிறேன்... என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
இவருக்குப் பதிலளிக்கும் விதமாக வட்டார வழக்கில் எழுதுவதென்பது இன்று
நிறையப் பேரிடம் இருக்கிறது. நாஞ்சில் நாடனின் பாதிப்பு என்பதைத்தான் சிவாவின்
பலமாகவும் அதே சமயம் பலவீனமாகவும் நான் பார்க்கிறேன் என்று சொன்ன ஆசிப் அண்ணன், அடுத்து
சசி அண்ணனைக் களமிறக்கினார்.
சசிகுமார்:
சிவாவின் ‘திமில்’ புத்தகத்தை அவர் பார்க்கும் முன் சென்னைப் புத்தகக்
கண்காட்சியில் நான் முதலில் பார்த்துவிட்டேன். அதன் வாசத்தை எழுத்தாளன்
சுவாசிக்கும் முன் நான் சுவாசித்தேன் என்பது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி என
ஆரம்பித்தார்.
தசாவதாரம் பல்ராம் நாயுடு பற்றி இவர் பதினேழு மொழிகளைத் தெலுங்கில்
பேசுவார் என ராகவன் சொல்லும் வசனத்தைச் சொல்லி, வட்டார வழக்கே சிவாவின் பலமும்
பலவீனமும் என்பதை நான் உணர்கிறேன்
என்றார். கிராமத்து வாழ்க்கையைப் பேசும்போது வட்டார வழக்கில் எழுதுதல்
சிறப்பு... எப்புவுமே சிவாவின் கட்டுமானம் (இஞ்சினியருக்கு கட்டுமானம் பிடிக்காதா
என்ன) எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும் சொல்லி, சுப்பாச்சி கதையில் டெஸ்ட்
டியூப் பேபி பற்றி பேசும் இரு கிராமத்துக் கிழவிகளின் வசனம் எனக்கு ரொம்பப்
பிடிக்கும் நீங்களும் வாசிங்க என்றார் மகிழ்வாய்.
கூடப்பிறப்பு கதை குறித்துப் பேசும் போது அதில் 45வது பக்கத்தில் எப்படி
கருவுற்றாள் என்பதை அவள் சொல்வதைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லிச்
சிரித்தார். சன்னல் கதை நாஞ்சில்,
குருமூர்த்தி, குருசாமி போன்றவர்களை ஞாபகத்தில் நிறுத்தியது என்றும் பகடியுடன்
அரசியலும் பேசியது சிவன் சொத்து என்றும் இடுகாட்டு மோட்சத்தில் நேற்றுத்தானே
வாழைப்பழம் சாப்பிட்டார் என்றதும் ஏன் வாழைப்பழம் சாப்பிட்டவன் சாகக் கூடாதா என்று
திருப்பிக் கேட்கப்படுவதையும் சிலாகித்தார். இப்படி ஒவ்வொரு கதையாக ரொம்ப
மகிழ்வோடு பேசியவர் பாலகுமாரன் எழுதிய நடிகனுக்கும் ரிப்போர்ட்டருக்கும் இடையில்
நடக்கும் கதையொன்றைச் சொல்லி, சுரேஷ் சொன்ன நாஞ்சில் நாடனின் பாதிப்பில் இருந்து
மீள வேண்டும் என்பதில் தானும் உடன்படுவதாகச் சொன்னார்.
2400 சிகரங்கள் இருக்கின்ற இமயமலையில் மூன்றே மூன்று எவரெஸ்ட்தான்
இருக்கிறது. அது போல எந்த ஒரு சிறுகதை தொகுப்பிலும் எல்லாக் கதைகளும் சிறப்பாக
இருப்பதில்லை... மூன்றோ நான்கோதான் சிறப்பாக இருக்கும். அப்படித்தான் திமிலும்
என்று சொல்லி என்னைப் பொறுத்தவரை நாஞ்சில் மொழிதான் நிறையும் குறையும் என்றதுடன்
நாஞ்சில் நாடனின் பின்னால் போன சைக்கிளை தன் போக்கில் திருப்பிக் கொள்ள
வேண்டும்... முயல்குட்டி, திரட்சி போன்ற பழைய வசனங்களை விட்டுவிடலாம்... அதிகக்
குறை சொல்ல முடியாத நல்லதொரு தொகுப்பு திமில் என முடித்துக் கொண்டார்.
சிவசங்கரி:
சுப்பாச்சி முன்னரே படித்த ஞாபகம் என்றார்.... ஆம் சிவா சுப்பாச்சியையும்
பொன்னுலட்சுமியையும் முகநூலில் பகிர்ந்திருந்தார். இடுகாட்டு மோட்சம் தனக்கு
ரொம்பப் பிடித்தது என்றதுடன் சில கதைகளை வாசித்ததும் நம்மைச் சிந்திக்க வைக்கும்.
நாம் அவரிடம் இதைக் கேட்டோமா... இதை அவருக்குச் செய்திருக்கலாமோ என்றெல்லாம்
சிந்திக்க வைக்கும். இப்போக் கூட கொரோனா காலத்தில் அவரிடம் இதைக் கேட்டோமா...
அவருக்கு இதைச் செய்தோமா என்றெல்லாம் சிந்திப்பேன்... நல்ல எழுத்து ஆனாலும் சில
வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்... அப்படித் தவிர்த்திருந்தால் இந்தா இதை வாசி என
என் பெண்ணிடம் கொடுத்திருப்பேன்... ஆனால் இப்போது கொடுக்க முடியாதே என்றார். ரொம்ப
அதிகமாகப் பேசவில்லை என்றாலும் பேசியவரை சிறப்பாகப் பேசினார்.
பாலாஜி:
மதுரை மொழியுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசும் பாலாஜி அண்ணன் எடுத்துக்
கொண்ட கதை இடுகாட்டு மோட்சம்.... மனுசன் கதையைப் பற்றிப் பேசியதைவிட சிரித்துக்
கொண்டேயிருந்தார். இறுதியில் பேசிய ஜெஸிலா இடுகாட்டு மோட்சம் பற்றிப் பேசிய பாலாஜி
சிரித்துக் கொண்டேதானே இருந்திருப்பார் என்றார். அப்படித்தான்யா போச்சு... எனக்கு
அவரின் காரில் போகும் போது சுடலைமாடன் கதையைப் பற்றிப் பேசியதுதான் ஞாபகத்தில்
வந்தது. வட்டார மொழி என்றால் மனுசன்
ரசிச்சி விழுந்து மகிழ்கிறார். நாம் ஜெயிக்கும் போதெல்லாம் இதே மகிழ்வோடு
வாழ்த்தவும் தவறுவதில்லை... நம் வெற்றியைத் தன் வெற்றியாக நினைக்கும் மனங்களில்
இவரும் ஒருவர்.
எங்க ஐயா மழைக் கருக்கல் இருந்தால் வானம் பார்த்து எக்கண்டமும் நல்ல மழ
இருக்கு என்பார். அதேபோல அன்றைய மழை தமிழகம் முழுவதும் நல்லாவே பேஞ்சிருக்கும்
என்று சொல்லி, மழையில் நடக்கும் இறப்பு குறித்தான கதையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
அதிகாலையில் இரு பிரிவினர் குழாய் ரேடியோவில் போட்டி போட்டுக் கொண்டு பாடல்
போடுவதைப் பற்றிச் சிரிக்கச் சிரிக்கப் பேசி, குன்றத்துல குமரனுக்கு
கொண்டாட்டத்துக்கு எதிராக போடப்படும் இயேசு ராஜா பாடலைச் சொல்லிச் சிரித்து, உருகிச்
சொல்லுங்கள் குமரனின் பெயரை என ரமணி அம்மாள் உரக்கச் சொல்வதில் உறக்கம் கலைந்து
எழுவதையும் சொல்லி இறந்தவரைக் குழிக்குள் வைப்பது வரை சிரித்தபடியே பேசினார்.
நாஞ்சில் வழக்கு, நாஞ்சில் நாடன் குறித்த பேச்சுக்கள் தேவையற்றது. இப்படி
எழுதாதே... இதை எழுதாதே... இப்படி எழுது... இதை மாற்று என்றெல்லாம் ஏன்ய்யா
சொல்றீங்க... நாஞ்சில் மொழி பேசி வளர்ந்தவன் மதுரை வழக்கில் எழுத முடியுமா...?
அவனுக போக்குல எழுதட்டுமே..? என சற்றே வேகமாய் ஒரு பிடிபிடித்தார்... இப்பச் சிரிக்கலை...
சீரியஸாய்த்தான் சொன்னார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாய் இங்க யாரும் நாஞ்சில் மொழியில் எழுதாதே
என்றெல்லாம் சொல்லவில்லை மேலும் மதுரை வழக்கு என்பது எல்லாருக்கும் புரியம்...
நாஞ்சில் புரிவது சிரமம்... அதில் மலையாளக் கலப்பும் இருக்கும் என்பதை விரிவாய்
விளக்கிய ஆசிப் அண்ணன் அடுத்து அழைத்தது அரசியலை மெல்ல உள்ளே சொருகிப் பேசும்
பிலால் அலியார் அவர்களை.
பிலால்:
திமில் என்னும் தலைப்பு வைத்து விட்டு புத்தகத்தில் திமில் என்ற கதையே
இல்லையே அது ஏன் என்பதை எழுத்தாளர்தான் விளக்க வேண்டுமென ஆரம்பித்தார்.
அரசியல்வாதிகள் என்றால் இணையமும் பயப்படும் போல... ஆரம்பத்தில் சொன்னது போல இழுக்க
ஆரம்பித்து... ஆனாலும் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். உங்க இணையம் சரியில்லை எனச்
சொல்லி அவரை நிறுத்தினார் ஆசிப் அண்ணன். இணையம் சரியானதும் மீண்டும் பேச
ஆரம்பித்தார் ஆரம்பத்தில் இருந்து... இதுக்கு ராஜாராம் போட்டிருந்த ‘இதுவரைக்கும்
கேக்கலையா’ என்ற நாகேஷ் மீம்ஸ் சத்தம் போட்டுச் சிரிக்க வைத்தது.
கூடப்பிறப்பு கதையில் தங்கப்பன் பிள்ளை பற்றிப் பேசிய போது ஒரு
குறிப்பிட்ட வயதுக்குப் பின் கர்ப்பம் தரிப்பதை இந்தச் சமூகம் எப்படிப்
பார்க்கும்... அதுவும் ஆணை விடுத்து அந்தப் பெண்ணை எப்படிக் கேள்வி கேட்கும்
என்பதையெல்லாம் சொல்லி, நாம் சமூகத்துக்கான வாழ்க்கைதான் வாழ்கிறோமே தவிர நமக்கான
வாழ்க்கையை வாழவில்லை... சமூகத்தின் கேலிக்கு ஆளாகப் போகிறோமே என்ற பயத்துடன்தான்
வாழ்க்கிறோம் என்றார்... அதுதானே உண்மை... சுற்றம் என்ன சொல்லுமோ என்ற எண்ணமே நம்
ஒவ்வொரு நிகழ்வின் பின்னே எழும் மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கும்தானே.
அடுத்து சிவன் சொத்து கதை பற்றிப் பேசும்போது சிவன் சொத்து குலநாசம்
என்றாலும் இன்று தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றது
இன்னும் வாய்ப்பேச்சு அளவிலேயே நிற்பது எதனால்... அதற்கு யார் காரணம் என்ற
அரசியலுக்குள் சென்று நீயும் அந்த மந்திரத்தைப் படிச்சிக்க உன்னையும் அர்ச்சகர்
ஆக்கிடுறேன் எனச் சொல்லப்படுவதை நீயும் படிடா என்று சொல்வது எனக்கு ரொம்பப்
பிடித்திருந்தது என்றார்.
மேலும் ஜெர்மன் அறிஞரின் மேற்கோளைச் சொல்லி... என்ன மேற்கோள்ன்னு மறந்து
போச்சுங்க... திடீர்ன்னு ஜெர்மன், லண்டன்னு எல்லாம் பயணிச்சிடுறாங்க... அப்புடியே
நம்ம யுகபாரதி அண்ணன் சொன்ன முன்னத்தி ஏருக்கு வந்து தன் விமர்சனத்தை முடித்துக்
கொண்டார்.
சமூகம் சார்ந்து... கழகம் சார்ந்து... கலகமாய் பேசும் பிலால் இன்றும் அப்படியே பேசியிருக்கிறார் என்ற ஆசிப் அண்ணன் கேமராவும் புத்தகங்களும் பூவைகளுமாய் கடற்கரையோரமாய் படம் பிடித்துக் கொண்டு திரிந்து விட்டு காரில் அமர்ந்திருந்த சுபான் அண்ணாச்சியை பேச அழைத்தார்.
சுபான்:
சுந்தர ராமசாமியிடம் கீராவின் எழுத்து கொடுக்கப்பட்ட போது வட்டார
வழக்கில் இருந்த கதையை இதென்ன... இதெல்லாம் ஒரு எழுத்தா என்பதாய் தூக்கிப்
போட்டதையும் அப்போதெல்லாம் சுந்தரத் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற எழுதப்படாத
சட்டம் இருந்தது அதை உடைத்தது கீராவின் வட்டார வழக்கு என்பதையும் சொன்னார்.
மேலும் குமரி மாவட்டத்து மொழிநடை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஏன்னா
எங்கப்பா பிறந்தது அங்குதான் என்று சொல்லி, சிவாவின் குட்டிக்கோரா எனக்கு ரொம்பப்
பிடித்த சிறுகதை தொகுப்பு... பவாவுடன் பேசும் போது கூட இதை நான் சொல்லி, சில கதைகளைப்
படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்தேன்... திமில் வம்சியில் வருவதற்கு நானும் ஒரு
காரணம் எனச் சொன்னார்.
ஆனந்த விகடனில் முப்பது வருடங்களுக்கு முன் சுபா எழுதிய கதையினை நினைவு
கூர்ந்து அத்துடன் இடுகாட்டு மோட்சம், முத்தம் கதைகளைப் பற்றிப் பேசி, எனக்குப்
பேச வராது (இதுக்கு மேல என்ன பேச) அதனால இத்தோட முடிச்சிக்கிறேன்னு சொல்லிட்டார்.
நீங்க பேசியது பெரிய விஷயம்... யூசுப்போட கடற்காகத்துக்குப் பின் திமிலுக்குத்தான்
பேசியிருக்கீங்க எனச் சொன்ன ஆசிப் அண்ணன், அடுத்து வாழ்த்துரை வழங்க (புத்தகம்
கிடைக்காததால் விமர்சனம் செய்ய முடியாததால்) ஹேமாவை அழைத்தார்.
ஹேமா:
நாஞ்சில் மொழி எனக்கும் பிடிக்கும்... நான் நாஞ்சில் மருமகள் என்று
சொன்னார். சிவாவின் துட்டி வீடு என்னும் கதையை தான் படித்ததாகவும் திருமணமான
புதிதில் மாமியார் துட்டி வீட்டுக்குச் சென்று வந்ததைப் பற்றிச் சொல்லும் போது
துட்டி என்றால் என்னவெனப் புரியாமல் கணவனின் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் சொன்னார்.
துட்டி வீடு கதையில் சொல்லப்படும் நகைச்சுவைகள் தனக்குச் சிரிப்பை உண்டாக்கவில்லை
என்றதுடன் கலவியல் விஷயத்தில் என்ன நகைச்சுவை இருந்து விடப்போகிறது என்றும்
கேட்டார். புத்தகம் கையில் கிடைத்ததும் வாசித்து முகநூலிலோ அல்லது வேறொரு
சந்தர்ப்பத்திலோ கண்டிப்பாக எழுதவோ பேசவோ செய்வேன் என்றார்.
எல்லாருமே அடித்து ஆடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது பால்கரசு பக்கம்
பக்கமாக எழுதி வைத்திருக்கும் நீங்களாவது அடித்து ஆடுவீர்கள் என்று
எதிர்பார்க்கிறேன் என்றழைத்தார் ஆசிப் அண்ணன்.
பால்கரசு:
புத்தகத்தை துபையில் இருந்து கொடுத்து அனுப்பியதுடன் வாங்கி வைத்து
விட்டுப் படிக்காமல் இருந்தவனை படிய்யா எனச் சொல்லி வாசிக்க வைத்ததற்காக பாலாஜி
அண்ணனுக்கு நன்றி சொல்லி, குட்டிக்கோரா கொடுத்த தாக்கத்தினைச் சுமந்தபடி திமிலை
வாசிக்க ஆரம்பித்ததாகச் சொன்னார். திமில் என்றதும் மாடு, கொம்பு, ஜல்லிக்கட்டு என
யோசித்து மதுரைக்காரன் பார்த்து வளர்ந்த ஜல்லிக்கட்டை நாஞ்சில் நாட்டுக்காரர்
எப்படிச் சொல்லியிருப்பார் என யோசித்தேன்... ஆனால் திமில் என்ற பெயரில் கதை
தொகுப்பில் கதையே இல்லை என்றார்.
சுப்பாச்சி கதை குறித்தான பார்வையில் சமூக அக்கறையுடன் எழுத்தாளன்
மட்டுமே சிந்திக்க முடியும்... அவனால் மட்டுமே எல்லாவிதமான எழுத்திலும் ஜொலிக்க
முடியும் என்றார். மேலும் பேதலிப்பு கதையில் மனநிலை பாதித்த பெண் அம்மாவைக் கொன்று
விட்டு ரத்தக் கறையுடன் வந்து இருப்பதைப் பற்றியும் நிறையப் பேசினார்.
இடுகாட்டு மோட்சம் பற்றிப் பேசும் போது தங்கள் ஊரில் பெரும் மழைநாளில்
இறந்த ஒரு கிழவியைப் புதைக்க குழி தோண்ட முடியாமல் சுடுகாட்டில் நிறைந்து நின்ற
தண்ணிக்குள் சிறியதாய் நோண்டி, கல்லைக் கட்டி இறக்கி வைத்து மேலே மண்ணள்ளிப்
போட்டு மெழுகி வைத்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
அப்படியே கூடப்பிறப்புவில் இருக்கும் கிராமத்து வாழ்க்கைக்குள் பயணித்து
ஜன்னலில் முதியவருக்குக் கட்டி வைத்த பெண்ணைப் போல் கிராமங்களில் நிறையப்
பெண்களுக்கு வாழ்க்கை அமையத்தான் செய்கிறது... எல்லாமே வறுமையால்தான் என வருந்தி,
சிவன் சொத்தில் இருக்கும் அரசியல் பார்வையை வியந்து, விரிவாகப் பேசினார்.
இவரும் இறுதியில் சுரேஷைப் பிடித்துக் கொண்டார்... நாஞ்சில் நாடன் மாதிரி
என்பதை ஏற்க முடியாது... சிவா பிறந்து
வளர்ந்த மண், அவரின் மக்கள்... அதை எழுதாதே என்று எப்படிச் சொல்லலாம்.... அந்த
வாழ்க்கையை யார் பதிவு செய்வது..? இப்படி எழுதாதே அப்படி எழுதாதே என்றால்
மலையாளத்திலா எழுத முடியும்...? (ஆசிப் அண்ணன் எப்படி மலையாளத்தைச் சொல்லலாம் எனக்
கேட்கவேயில்லை... மலையாளக் கரையோரத்தை வைத்து சுபான் அண்ணாச்சி எடுத்த
போட்டோக்களால் மறந்து விட்டார் போல)
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிதிலமான சுவருக்கு வெள்ளையடித்தால்
எப்படியிருக்குமோ அப்படித்தான் தோன்றுகிறது... தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை என
நான் வாழ்ந்த வாழ்க்கையை அதன் மண்ணோடும் மனத்தோடும் சொல்வதே சிறப்பு... சிவா
அதைத்தான் செய்கிறார்... அதையே செய்யட்டும் என்பதாய் ஒரு வீச்சு வீசினார். அப்போது
சிவா முகநூலில் பகிர்ந்த குளத்தில் குளிக்கும் போது மீன் கடிக்கும் கதையைப்
பற்றிச் சொல்லி, அதையெல்லாம் அனுபவித்தவனே எழுத முடியும் என்றார்.
இவ்வளவும் பேசி முடிச்சிட்டு எனக்கு கோர்வையாகவும் நிறையவும் பேச
வராது... இத்தோட முடிச்சிக்கிறேன்னு சொன்னாரே பார்க்கலாம்... இதுவே கொஞ்சம்ன்னா
இன்னமும் பேசியிருந்தா.... டெஸ்ட் மேட்ச்தான்... சிறப்பாகப் பேசினார்....
பனிரெண்டு கிலோ மீட்டர் ஓட்டம் ஆளை தனுஷ் மாதிரி ஆக்கி வைத்திருக்கிறது என நான்
சொல்லவில்லை பிலால் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். விமர்சனம் துள்ளலாய் வர அதுவும்
காரணமாய் இருந்திருக்கலாம்.
கோர்வையாப் பேச வராதுன்னு சொல்லிட்டு அடிச்சி ஆடி நாட் அவுட் பேட்ஸ்மேனா
நின்னுட்டீங்க பால்கரசுன்னு சொன்ன ஆசிப் அண்ணன் இறுதியாக விமர்சனத்தை வைக்க
அழைத்தது ஜெஸிலாவை...
ஜெஸிலா:
நான் வேலையின் காரணமாக இன்று நிகழ்வை முழுவதுமாய் கவனிக்கவில்லை...
இப்போது விமர்சனமாய் வைக்காமல் சிவாவுடன் பேசுவது போலவே சொல்கிறேன் என்று
ஆரம்பித்தார்.
குட்டிக்கோரா விமர்சனக் கூட்டத்தில் சொன்னதுதான்... அடுத்த தொகுப்பு மீது
அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அதை நீங்க நிறைவேற்றவில்லை என்பதே என் எண்ணம் சிவா
என்றதுடன் சுப்பாச்சி நல்ல கதை என்றாலும் அது இப்படிப் போய் முடியும் என
நினைத்தால் அது சாதாரணமான முடிவையே எட்டுகிறது. இப்படித்தான் எல்லாக் கதைகளும்
இருக்கின்றன. உங்க கதைகள் எல்லாமே ஒரு விரிவான பார்வையில் ஆரம்பித்து கதாபாத்திர அறிமுகத்துக்குள்
நுழைந்து, என்ன சொல்ல வந்தீங்களோ அதை கொஞ்சமாய்ச் சொல்லி, ஒரே பாணியில் முடிந்து
விடுகின்றன.
மேலும் இதில் கனமான விசயங்கள் நிறைந்த கதைகள் இருந்தாலும் முடிவு
இப்படிப் பயணிக்கும் என நாம் ஒரு முன்முடிவுடன் வாசிக்க ஆரம்பிக்கும் போது
சாதாரணமாய் சப்பென முடிந்து விடுகிறது.
கூடப்பிறப்பில் கர்ப்பமுற்ற பெண் குறித்துப் பேசுவதாகட்டும் இடுகாட்டு மோட்சமாகட்டும்
எல்லாமே நல்லாயிருந்தது என்றாலும் மேலே சொன்ன டெம்ப்ளெட்டுக்குள் சிக்கி
விடுகின்றன.
இடுகாட்டு மோட்சத்தை பாலாஜி பேசும் போது வேலை காரணமாக பார்க்கவில்லை...
அவர் சிரித்துக் கொண்டேதான் இருந்திருப்பார்... அப்படித்தான் கதை
சொல்லியிருப்பீர்கள். உங்க மொழிநடை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... கிராமத்து
வாழ்க்கையில் இப்படியெல்லாம் இருந்திருக்கும் என்பதை உங்களைப் போன்றோரின் கதைகள்
வழிதான் தெரிந்து கொள்வேன்.
இந்தப் புத்தகத்தில் புதிதாய் எதுவும் இல்லை... நீங்களே 2000க்கு முன்
எழுதிய கதைகள்ன்னு சொல்லிட்டீங்க....குட்டிக்கோராவுக்கு முன் எழுதிய கதைகள்
என்பதால் அப்படியிருக்கலாம்... அடுத்த தொகுப்பு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று
நினைக்கிறேன். கதை பட்டறை எதிலும் கலந்து கொண்டு அப்படித்தான் எழுத வேண்டுமென
முடிவு எதுவும் செய்திருக்கிறீர்களா...? என்ற கேள்வியுடன் முடித்துக் கொண்டார்.
வேறு யாரும் பேசுகிறீர்களா...? எனக் கேட்ட ஆசிப் அண்ணன் சுடர்விழி
மற்றும் ராஜாராமிடம் குறிப்பிட்டுக் கேட்டபோது இருவருமே புத்தகம் கிடைக்கவில்லை
அதனால் வாசிக்கவில்லை என்று சொல்ல, பாலாஜி அண்ணன் பாருய்யா பால்கரசு நாம எல்லாரும்
படிங்கன்னு புத்தகம் கொடுத்தா, இப்ப வேண்டாம் வேலையா இருக்கோம்ன்னு நமக்கிட்ட
சொல்லிட்டு ஆசிப் அண்ணனுக்கிட்ட புத்தகம் கிடைக்கலைன்னு போட்டுக் கொடுக்கிறதை...
சூதனமா இருக்கணும்ய்யா என்று சொன்னார்.
ஆசிப்:
புத்தகத்தில் வாசிக்கும் விதமான எழுத்தின் அளவு இருந்த போதும் வரிகளுக்கு
இடையே இடைவெளிகள், பிழைகள் இருப்பது பின்னடைவுதான் என்று சொல்லி ஆசிப் அண்ணன் எப்பவும்
போல் விரிவாகத் தன் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தார்.
நாஞ்சில் நாடனின் வழக்குமொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அதே சமயம்
அ.முத்துலிங்கத்தையும் ரொம்பவே பிடிக்கும். இவர்களைப் பிடித்த எனக்கு ஆசானைப்
பிடிக்காமல் போனது ஏன்னு தெரியலை. நாஞ்சிலின் இடலாக்குடி ராஜாவின் சாயல் அண்டி
கதையில் இருக்கும் என்று சொன்னார். மேலும் முத்தம் மிகச் செம்மையான கதை... கதையின்
போக்கில் முடிவு இப்படித்தான் இருக்கும் என உணர முடிந்தாலும் சிறப்பான கதை அது
என்று சொன்னபோது பாரிஸில் வைத்து முத்தம் கொடுக்க நினைக்கும் கணவனுக்கு எதிர்பாராமல்
அதே இடத்தில் மனைவி முத்தம் கொடுக்கும் கதை ஒன்றையும் நினைவில் இருந்து மீட்டுப்
பகிர்ந்தார்.
மேலும் மலையாளத்தில் திலகன், மோகன்லால், ஸ்ரீவித்யா நடித்த படம் ஒன்றின்
சாயல் கூடப்பிறப்பின் கதை என்று சொன்னார்.
யூசுப் தனக்குத் தெரிந்த விபரங்களை எல்லாம் கதையில் கொண்டு வர
நினைப்பார்... சிவா தன் மொழியை கதையில் கொண்டு வருகிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு
பாணி என்றார்.
முத்தம் கதை குறித்துப் பேசும் போது குருதிப்புனல் படத்தில் கமல்
கவுதமிக்கு முத்தம் கொடுக்க முயல்வதும் பையன் அந்தப் பக்கம் வர, கௌதமி விலகிச்
செல்ல, என்ன இப்ப அப்பன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கிறான் என்பதை நாளை
சாட்டிலைட்டில் பார்த்துத் தெரிந்து கொள்ளப் போகிறான் என்று சொல்வார். சடங்கு என்னும் கதையில் இதைத்தான் முழுக்க
முழுக்க விரிவாய் எழுதியிருப்பார் அதன் ஆசிரியர் (எஸ்.ரா எனச் சொன்னதாக நினைவு)
என்றும் சொன்னார்.
மேலும் சசி சொன்னது போல் பழைய வார்த்தைகள்... பயன்படுத்த வேண்டிய
இடத்தில் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும்... பழசு புதுசு என்றெல்லாம் சொல்ல
முடியாது. ஜெஸிலா சொன்னது போல் ஒரே மாதிரியாகப் பயணிப்பதை எதிர்காலத்தில் மாற்றிக்
கொள்ளலாம். தேவையில்லாத கதைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும் என்று இன்னும் விரிவாகப் பேசியவர், எல்லாருக்கும் ஆறு நிமிடம்
கொடுத்துட்டு இந்தாளு மட்டும் அறுபது நிமிடம் பேசுறான்னு சண்டைக்கு வரப்போறானுக
முடிச்சிக்கிறேன் என்று சொன்னார்.
விமர்சிக்க வேண்டிய திமிலை விட்டு விட்டு தன்னைத் தொடர்ந்து பவுண்டரிக்கு
அடித்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டுமென மீண்டும் தனக்கு
சில நிமிடங்கள் ஒதுக்கக் கேட்டு களத்தில் இறங்கிய சுரேஷ் அண்ணன், ஒரு எழுத்தாளனை
இதை எழுது... இதை எழுதாதே எனச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை... இங்கு நான்
சொன்னது அறிவுரையோ விமர்சனமோ இல்லை... சிவாவுக்கென தனிப்பாணியைப் பின்பற்ற
வேண்டும் என்ற ஆசைதான். இங்கு பேசியவர்கள் எல்லாருமே விகடன், குமுதம் மனப்பான்மையில்
பேசியது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எழுத்தாளனின் எழுத்துக்கு அறிவுரை
தேவையில்லை... நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று
சொன்னார்.
அடுத்து ஏற்புரைக்கு களமிறங்கும்படி சிவாவை அழைத்தார் ஆசிப் அண்ணன்.
சிவா:
யோவ் என்னய்யா அடிச்சி ஆடுவீங்கன்னு பார்த்தா ரெய்னா இல்லாத சென்னை சூப்பர் கிங்க்ஸ் மாதிரி தட்டித் தட்டி விட்டுட்டுப் பொயிட்டீங்க.... திமிலை பிடித்து அடக்குங்கள் என்றால் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல திமிலை விட்டு துவக்க ஆட்டக்காரரை துவட்டி எடுக்கிறீர்களே என்பதாய் மந்தகாசப் புன்னகையுடன் ஆரம்பித்தார் திமிலின் ஆசிரியர் சிவா.
வாசகர்களின் விமர்சனத்தை விட எழுத்தாளர்கள் விமர்சனத்தை என்
புத்தகத்துக்கான நான் பெற்றது எனக்கு நிறைவான தருணம் எனத் தன் மகிழ்ச்சியைப்
பகிர்ந்து கொண்டவர், நீ என்ன ஆகணும்ன்னு
நினைக்கிறாயோ அதை நோக்கிப் பயணப்படு, அப்படியான ஆட்களுடன் பயணப்படு என்று
சொல்வார்கள்... அப்படித்தான் நான் உங்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
என்றார்.
நாஞ்சில் நாடன் சாயல் என்னிடம் ஏன் வருகிறது என்றால் என்னோட நிலம்,
என்னோட மொழி அதை விடுத்து நான் வெளியில் வரணும்ன்னு நினைத்தால் மண்டையில இருக்க
கொண்டையை மறைக்க முயற்சிக்கும் நிலையில்தான் இருக்க முடியுமே தவிர என்னால்
அதிலிருந்து வெளியில் வரமுடியாது.
மேலும் இப்போது எழுதும் வரலாற்று நாவலில் இலங்கைப் பேச்சு பேசும் ஒரு
பெண்ணின் கதாபாத்திரம்... அதற்கான மெனக்கெடலில் எனக்கு மொழி பெரும் சிரமமாகவே
இருக்கிறது. என் மண்ணின் பேச்சு உள்ளே படக்கென வந்து விழுந்து விடுகிறது. நாஞ்சில் நாடனிம் மாமிசப் படைப்பு என்னை
ரொம்பக் கவர்ந்த புத்தகம்.... அது என் அப்பாவின் வாழ்வியலைப் பேசும் கதை...
அதிலிருந்து நான் எப்படி நகர முடியும்..?
அண்டி எழுதிய பின் அதை வாசித்த எனக்குப் பாடமெடுத்த ஆசிரியர் என்னிடம் இடலாக்குடி
ராஜாவை ஒத்திருப்பதாகச் சொன்ன பின்னரே நான் அந்தக் கதையையே வாசித்தேன்...
ஏறக்குறைய அதே சாயல்தான். கதைப்
பட்டறைக்குப் போனீர்களா என ஜெஸிலா கேட்டார்கள்... அப்படி எதுவுமில்லை... எனக்கென
ஒரு பாணி அவ்வளவே... ஒரு கதை எப்படி உருவாகிறது என்றால் நான் பார்த்த ஒன்றில்
இருந்துதான் என் கதை தொடங்குகிறது என்பதே உண்மை. எப்பவுமே எதிர்வினைக் குழப்பம்
என்பது தொடரத்தான் செய்கிறது.
என் கதையை வாசித்த தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர் ஒருவர் குப்பை என்றார்
அதே கதையை வாசித்த ஜெர்மனி வாசகி தன் இறந்து போன கணவனைக் குறித்து என்னிடம்
பேசினார். அவருக்குள் அவரின் கடந்த காலத்தை தட்டி எழுப்பியிருக்கிறது என் எழுத்து.
ஒரே மாதிரியான எழுத்து, ஆபாச வார்த்தைகள் குறித்தெல்லாம் நிறையப்
பேசினார். ஹாலையும் பாத்ரூமையும் அப்படிச் சொல்வதுதான் சிறப்பு... அதை மாற்றிச்
சொன்னால் சிறப்பில்லை. பிதாமகன் படத்தில் கழுத்தைக் கடித்துக் கொள்வதாய் பாலா
காட்சி அமைத்திருப்பார்... அவன் எத்தனை கொடுரமானவனாய் இருந்திருக்கிறான் என்பதைச்
சொல்ல அதுதான் சரி... அதை மாற்றி எடுத்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. பருவ
வயதை அடைய வேண்டிய தருணத்தில் அடையவில்லை என்றால் ஏதோ குறைபாடு என ஆஸ்பத்திரியில்
காட்டச் சொல்வார்கள்... நான் ஆபாசமாக எழுதவில்லை... இருப்பதையே சொல்கிறேன். ஹேமா
துட்டி வீடு பற்றிப் பேசினார்கள்... அந்தக் காமரசப் பேச்சுக்கள் எனக்கு சிரிப்பை
வரவைக்கவில்லை என்றார்கள். இப்போதும் எங்க ஊரில் ஒரு தாத்தா இருக்கிறார்... எதைப்
பேசினாலும் அவர் பாலியல் நகைச்சுவையுடன்தான் பேசுவார்.
கதையின் முடிவை அதன் கதாபாத்திரம்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர
எழுத்தாளன் இல்லை... நான் என் கதைகளை முடிவை கதாபாத்திரத்தை வைத்துத்தான்
தீர்மானிக்கிறேன். முத்தம் கதையை ஆசிப்
அண்ணனுக்கு அனுப்பிய போது அவர் வாசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே முடிவு
இப்படித்தான் இருக்கும் என முடிவு செய்து விட்டுத்தான் வாசிக்க ஆரம்பித்தேன்...
அதுதான் முடிவாய் இருந்தது என்றார்.
சுமையில் மாமியார் மருமகன் உறவைக் கொச்சைப்படுத்துவதற்கு அவர்கள்
எடுக்கும் முடிவை இரண்டு விதமாக எழுதியிருந்தேன்... ஒரு முடிவில் இருவரும் ஊரறிய
திருமணம் செய்து கொண்டு, வீட்டுக்குள் அம்மா மகனாக வாழ்வதாய் எழுதியிருந்தேன்...
ஆனால் பெண்ணியப் போராளிகளை நினைத்தே இப்போது புத்தகத்தில் இருக்கும் முடிவை
வைத்தேன்.
அதேபோல்தான் மனைவியைக் குண்டு எனச் சொல்லும் கணவன் கதையும்... இவர்கள்
ஆணாதிக்கவாதிகள் அல்ல... வீட்டுக்குள் மனைவியைக் குறை சொல்லும் மனிதர்கள்...
இவனைத் திருத்த இவனின் ஆசிரியர் சொல்வதாய் இருக்க வேண்டுமெனத்தான் அப்படி
எழுதினேன். கொரோனாவுக்கு முன் கல்லூரி நண்பர்களின் கெட் டூ கெதரில் கலந்து
கொண்டோம். அங்கு வந்த பெண்கள் எல்லாருமே தங்களின் இருமடங்கில் இருந்தார்கள்.
சிலிண்டர் பேக்டரிக்குள் வந்துட்டோமெனப் பேசிச் சிரித்தோம். எல்லாரும் அதை பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒரு பெண் மட்டும் மேடையில் ஏறி எங்களைக்
கிழித்துத் தொங்கவிட்டு விட்டாள் என்றார்.
திமில் என்பது பேதலிப்பு கதையின் தலைப்பாய்த்தான் இருந்தது... அதன்
பின்னேதான் பேதலிப்பு என மாற்றினோம்... புத்தகத்தின் தலைப்பையும் கூட பேதலிப்பு என
வைக்க நினைத்து பின் திமிலே இருக்கட்டும் என முடிவெடுத்தோம். இன்று மானுடர்கள் நினைவுத் திமிலுடந்தானே
அலைகிறார்கள் என்றும் சொன்னார்.
வாசகர்களைத் திருப்திப்படுத்தும் எழுத்துத்தான் நிற்கும்... என்னால்
முடிந்தளவு அப்படியே எழுதுகிறேன்....
குறைவான பக்கத்தின் காரணமாகவே நாலு கதைகள் கூடுதலாய்ச் சேர்ந்து பதினாறு
கதைகள் ஆக்கினோம். எல்லாருமே மூன்று
நான்கு கதைகள் சிறப்பு என்றீர்கள்... என்னைப் பொறுத்தவரை அப்படிக் கூட எதுவுமில்லை
என்றுதான் சொல்வேன். குட்டிக்கோராவுக்கு முன் எழுதியவை... இன்னும் திருத்தி
எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. அடுத்த பதிப்புக்கு எழுத்துப் பிழைகள்
திருத்திக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.
குட்டிக்கோராவை ஒரு தமிழாசிரியரிடம் கொடுத்து பிழை திருத்தம் செய்துமே
அதில் பிழைகள் இருந்தது. திமிலில் இன்னும்
கூடுதல் பிழைகள்... இனி அடுத்த தொகுப்புக்களுக்கு நானே பிழைதிருத்தம் செய்து கொடுத்து
விடலாம் என்றிருக்கிறேன் என்று இன்னும் விரிவாகப் பேசினார்.
ஒரு நல்லதொரு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்த முடிந்தது.
-‘பரிவை’ சே.குமார்.
4 எண்ணங்கள்:
நல்லதொரு நிகழ்வு.
சிறப்பான நிகழ்வு
நடந்த நிகழ்வு கண் முன்னே... அருமை...
அருமையான பதிவு
கருத்துரையிடுக