மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : பார்வதி டீச்சரும் கறுப்பியும்

சில கதைகள் மனசுக்கு இதமாய் அமைந்து விடும்... அப்படிதான் அமைந்தது சமீபத்தில் ஒரு மின்னிதழுக்காக எழுதிய 'பார்வதி டீச்சர்'. எப்பவுமே ஏழு பக்கத்துக்கு மேலே போகாதவாறுதான் எனது சிறுகதைகள் இருக்கும். யாவரும் போட்டிக்காக எழுதிய கதை மட்டுமே அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்காக பத்துப் பக்கம் வந்தது. இன்னொரு கதை கொஞ்சம் பெரிதாக எழுத நினைத்து எழுதியதால் பத்துப் பக்கத்தைத் தாண்டியது.

parvathi teacher

பார்வதி டீச்சரைப் பொறுத்தவரை கதையின் போக்கே பதினேழு பக்கங்கள் இழுத்துப் போய்விட்டது. அதுவும் முதலில் கதையின் இடையில் வரும் பகுதிதான் கதையின் ஆரம்பமாக இருந்தது. டீச்சர் பற்றிய நினைவுகள் பின்னால் வந்தது. முடிவு கூட வேறு மாதிரித்தான் எழுதியிருந்தேன். முடிவில் அவ்வளவு திருப்தியில்லாமல் இருந்தது இந்தக் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றபடி எழுதியதை அப்படியேதான் வைத்திருப்பேன்.

இந்தக் கதையில் மாற்றம் செய்ய நினைத்த போதுதான் பின்னால் இருந்த டீச்சர் நினைவுகளை முன்னால் மாற்றி, கதையின் முடிவை எப்பவும் போல் சோகமாக ஆக்கி வைத்திருந்தேன். அதன்பின் இரண்டு முடிவையும் ஒன்றாக்கி கதையை அனுப்பிக் கொடுத்தேன்.

பார்வதி டீச்சரின் கதையாய் பயணித்து அதன் முடிவில் டீச்சருக்கான கதை இல்லை இது என்பதைச் சொல்லிச் செல்லும் கதையாக அமைந்தது. யாருக்காக எழுதினேனோ அவர்கள் தளத்தில் நீளக்கதை என்று சொன்னதால், தசரதனுடன் பேசும் போது கதை குறித்துச் சொல்ல, உடனே அனுப்புங்க என வாங்கிப் போட்டார்.

இதற்கு முன்பு போட்ட மூன்று கதைகளை விட இந்தக் கதையை அதிகமானோர் வாசிப்பதுடன் நிறையப் பேர் கதை குறித்தும் பேசியது மகிழ்ச்சியே. பார்வதி டீச்சரைப் போல் மற்றொரு கதை எப்போது அமையும் என்று தெரியாது... இது எப்படியோ அமைந்தது... உங்களால் முடிந்தால் வாசித்துக் கருத்துச் சொல்லுங்க... இணைப்பு கீழே.

பார்வதி டீச்சர்

இணையத்தில் முதல் தொடர் எழுதுவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை... அதுவும் கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாகவே நிகழ்ந்திருக்கிறது. ஆம் 'கறுப்பி'க்கும் தசரதனே வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

karuppi

கறுப்பி பேசும் களம் புதிது... பார்த்தது, கேட்டது என பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்து எழுதப்பட்ட கதை... மூன்று பெண்களின் பக்கமாய் நின்று பேசும் கதை... இதில் காமம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்... இதுவரை கிராமத்து மனிதர்களை மட்டுமே கதாபாத்திரமாக்கி எழுதியவன், முதல் முறை பாதிக்கப்பட்ட மூன்று பெண்களை வைத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கறுப்பியைத் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க... ஒரு அத்தியாயம் வாசித்ததுடன் நீ பெண்களைக் கேவலப்படுத்தி விட்டாயென முடிவெடுத்து விடாதீர்கள்... முன்முடிவு என்பது சரியானதல்ல... அந்தக் கதை பேசும் அரசியல் என்ன என்பதை முழுவதும் படித்த பின் சொல்லுங்கள்... என்ன தவறென்றாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

கறுப்பியை வாசிக்க இணைப்பு கீழே...

 கறுப்பி

ரெண்டு கதயையும் வாசிங்க... கறுப்பிக்கு உங்க ஆதரவை அங்கும்... கருத்துக்களை இங்கும் சொல்லுங்க... அமேசானில் போட்டிருக்கும் நாவலையும் கவிதையையும் முடிந்தால் வாசிங்க... தயவு செய்து முதல் பத்தியை வாசித்ததும் நீ படிச்சவந்தானே இப்படி எழுதியிருக்கேன்னு முடிவு பண்ணிடாதீங்க... கதை என்ன சொல்ல வருது, சொன்னுச்சுங்கிறது கண்டிப்பாக இறுதி அத்தியாயத்தில்தான் தெரிய வரும் என்பதால்தான் சொல்கிறேன்.

அப்பத்தா பாத்திரத்தை விட அயோக்கியமான பாத்திரம் கண்ணனின் அப்பா என்பது நெருஞ்சியும் குறிஞ்சியும் முழுவதும் படித்தவர்களுக்குத் தெரியும்... என் கதைகள் எப்போதும் சாதியை மதத்தையோ தூக்கிச் சுமக்காது. மனிதர்களின் உணர்வுகளை மட்டுமே அது கொண்டாடும் என்பதை என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்திருப்பீர்கள்... உணர்ந்திருக்கிறீர்கள். கறுப்பி கூட அப்படியான உணர்வைத்தான் தூக்கிச் சுமந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி...

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறப்பான முயற்சி
பாராட்டுகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களின் முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// ஆதரவை அங்கும்... கருத்துக்களை இங்கும் //

நெகிழ்வாய் தொடர்கிறேன்... ஆனால் :-

அங்கு கருத்துரைப் பெட்டி ஏனோ இல்லை... ஒரு Rating Gadget-வது வைத்திருக்கலாம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். மாலையில் வாசிக்கிறேன்.

Tamil சொன்னது…

Nice article, good information and write about more articles about it.
Keep it up
success tips in tamil