நமக்கு ஒரு சிறு விசயத்தைக் கற்றுக் கொடுப்பவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கற்றுக் கொடுத்ததன் மூலம் அவரும் ஆசிரியரே... அப்படியான ஆசிரியர் பலரை இப்பொழுது வரை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் மகன் விஷால் பல நேரங்களில் நல் ஆசிரியனாய்த்தான் இருக்கிறான். அவனின் புரிதல்களும் பேச்சுக்களும் சில நேரங்களில் வியக்க வைக்கும்... பல நேரங்களில் கற்றுக் கொடுக்கும்.
முருகானந்தாவில் எட்டாவது வரை... எந்த ஆசிரியரைச் சொல்வது...? யாரை விடுவது..? எங்க ஊரில் 80% பேர் அந்தப் பள்ளியில்தான் படித்திருக்கிறோம்... ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் பள்ளி என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்... கண்டிப்பாக மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைங்க புத்தகப்பையை தலைமை ஆசிரியர் அறையில் வைத்து விட்டுக் கிளம்புங்க என்று சொன்னதால் மட்டுமல்ல... அதையும் தாண்டி ஏதோ ஒரு இணக்கமான காரணமே அந்தப் பள்ளியில் படிக்க வைத்தது எனலாம்.
பெரும்பாலும் எந்த ஆசிரியரும் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை... எங்க பெரியண்ணன் பேருதான் எல்லாருக்கும் ஞாபகத்தில் இருக்கும்... அதனால் 'கண்ணன் தம்பி' என்றோ 'கண்ணா' என்றோதான் அழைப்பார்கள். சிலரோ நீ 'இராஜேஸ்வரி' தம்பிதானே என பெரியக்கா பேரைச் சொல்லிக் கேட்பார்கள். குமார் என்று கூப்பிட்டது குறைவுதான்.
முதன் முதலில் அ,ஆ சொல்லிக் கொடுத்த மரியம்மை டீச்சர், நாலாவதில் பள்ளியில் விழுந்து கை ஒடித்த போது தன்னாலான சிறு மருத்துவம் பார்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பாப்பாத்தி டீச்சர், இப்பவும் பார்க்க நேர்ந்தால் 'கண்ணா நல்லாயிருக்கியா..?' எனக்கேட்கும் ஆறாவது வகுப்பாசிரியர் பிச்சைக்குட்டி சார், நாங்கள் படித்து முடித்து கணிப்பொறி மையம் வைத்த போது வந்து வாழ்த்தி, பள்ளி ஆண்டு விழாவில் என்னையும் முருகனையும் மேடை ஏற்றி என் பிள்ளைகள் எனச் சொன்ன மறைந்த சுந்தரமூர்த்தி சார், தலைமையாசிரியராய் இருந்த முருகன் சார், சுப்புலெட்சுமி டீச்சர், இன்றும் தம்பி என அழைக்கும் மீனாம்பிகை டீச்சர் எனப் பலரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதன் பின் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது முதல் பனிரெண்டு வரை... அங்கு எத்தனை ஆசிரியர்... எல்லாருமே பசங்களுக்காகவே வேலை பார்த்தவர்கள்... சிறப்பான ஆசிரியர்கள்... வகுப்பில் இருக்கும் கண்டிப்பு, அதை விட்டு வெளியில் வரும்போது தோழமையாகிவிடும். பள்ளியை விட்டு வெளியில் வந்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்த போது அன்று வகுப்பாசிரியர்களாக இருந்த சவரிமுத்து ஐயா, அருள்சாமி ஐயா, தாசரதி ஐயா என எல்லாருமே தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தியதை எல்லாம் மறக்கவே முடியாது. தாசரதி ஐயா வீட்டுக்குப் போனால் 'செல்லங்களா...' என அணைத்துக் கொள்வார். என் பிள்ளைங்க வந்திருக்காங்க என அம்மாவிடம் சொல்லி மகிழ்வார். அதேபோல் சவரிமுத்து ஐயா வீடு நம்ம வீடுதான்... அடுப்படி வரை அனுமதி தேவையில்லை... நீங்க வருவீங்கன்னுதான் உங்கம்மா அந்த மாம்பழத்தை மரத்துலயே போட்டு வச்சிருந்தாங்க... என அதைப் பிடிங்கிக் கழுவிக் கொண்டு வந்து கொடுப்பார் சவரிமுத்து ஐயா... இப்பவும் என் மனைவியிடம் 'மருமகளே... தம்பி எப்படி இருக்காக... எப்ப வருவாக...' என்று கேட்க மறப்பதில்லை. சாப்பிட்டுத்தான் போகணும்... போய் என்ன பண்ணப் போறீங்க என மல்லுக்கு நின்று சாப்பிட வைப்பார் அருள்சாமி ஐயா... இவர்கள் கொடுத்த அன்புதான் இன்னும் என்னை வழி நடத்தி வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.
கல்லூரிக்குப் போன பின் எங்கள் துறை ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை... அதிகம் பேசுவதில்லை என்றாலும் ஏனோ எல்லா ஆசிரியர்களும் ரொம்பப் பிடிக்கும். எங்க கே.வி.எஸ். சார் மறக்கவே முடியாதவர்... பள்ளிப் படிப்பெல்லாம் தமிழில்தான் என்பதால் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடமெடுத்தபோது ஏதோ ஒரு புதிய உலகத்துக்குள் போனது போலிருந்தது. அதுவும் எங்க கே.வி.எஸ். சாரின் ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இருக்கும்... எங்கள் துறையில் ஆங்கிலத்தில்தான் பாடமெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். எங்களின் முகத்தில் தோன்றிய வினாக்குறிகளை வைத்தே, ஆங்கிலமெல்லாம் சுலபம்தான்... அதெல்லாம் இங்கயிருந்து வெளிய போகும்போது அருமையாப் பேச, எழுத வந்திரும் என்றவர் எங்களை முதல் செமஸ்டரையே ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டுமெனச் சொன்னார். அதிலும் குறிப்பாக எங்கள் பத்துப்பேரை எழுதியே ஆகவேண்டும் என்றார்... தத்தித்தத்தி நடக்கும் குழந்தையாகத்தான் முதல் செமஸ்டரை எழுதினோம்... எல்லாவற்றிலும் கிடைத்த நல்ல மதிப்பெண்களே எங்களை அடுத்தடுத்த செமஸ்டர்களில் ஆங்கிலத்தில் எழுத ஓட வைத்தது.
நான்கு செமஸ்டர் வரை வகுப்பில் முதல் மாணவனாய் இருந்து... அஞ்சாவது செமஸ்டரில் மேஜர் பேப்பரில் அரியர் விழுந்த போது, மார்க்கை வாசிக்கும் போது நல்லாத்தானே எழுதினே... என்னாச்சு எனக் கேட்டதுடன் எனக்காக மறு கூட்டலுக்குப் பணம் கட்டி, அதற்கான ரிசல்ட் வராத நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு என்னுடன் வந்து அங்கிருந்த அலுவலகர்களிடம் பேசி, விரைவாக அனுப்பித்தாருங்கள்... பிள்ளையோட படிப்பு... இது அவனுக்கு இறுதியாண்டு எனச் சொன்னவர் கே.வி.எஸ்.சார்... இப்படி ஆசிரியர் கிடைக்க கொடுத்து வைத்திருக்காத்தானே வேண்டும்... அப்போதும் இப்போதும் எப்போதும் நான் கொடுத்து வைத்தவனே. மறு கூட்டல் ரிசல்ட் வரும் முன்னே அடுத்த செமஸ்டரே வந்துவிட, பணம் கட்டிடலாம்... அது வந்தாப் பாத்துக்கலாம் என்றார்... பரிட்சையும் எழுதி, ரிசல்ட் வரும் போதுதான் மறு கூட்டலும் வந்தது... அரியர்ஸ் எழுதியதில் அவர்கள் மறு கூட்டலில் போட்டதைவிட 20 மதிப்பெண் கூடுதல் வேறு... அவரிடம் போய்க் கேட்டபோது அதுல கொறச்சித்தானே போட்டிருக்காங்க... அதத் தூக்கிப் போடு என்றார். மேல்ப்படிப்பு இதைப்படி என வீட்டுக்கு வரவழைத்துச் சொல்லிக் கொடுத்து நுழைவுத்தேர்வுக்கு அனுப்பினார்... அதில் வெற்றியும் பெற்றுச் சேர்ந்து சில காரணங்களால் தொடர முடியாமல் போன போது ரொம்ப வருத்தப்பட்டார். அதன்பின் அங்கும் இங்கும் ஓடி... சில வருட இடைவெளிக்குப் பின்னரே எம்.சி.ஏ. சேர்ந்தேன்... அப்போது மகிழ்ந்தார்.
கே.வி.எஸ். சார் மட்டுமல்ல... எங்கள் முதல்வராய் இருந்த எங்கள் துறைத் தலைவர் சீனிவாசன் சார், மாணவர்களுக்கு மிகவும் பிடித்த வெங்கடாசலம் சார்... அமலசேவியர் சார், இவர் உழைப்பால் எப்படி உயர முடியும் என்பதையும்... மற்றவரை நம்பி எப்படி வீழ்ச்சி அடைய முடியும் என்பதையும் எங்களுக்குக் காட்டியவர்... வீழ்ச்சியில் இருந்து மீண்டும் வந்தவர்... இவர்தான் எட்டு நல்ல நம்பர் என எங்களுக்கு விளக்கம் கொடுத்தவர்... அவரின் ஸ்கூட்டார் எண்... 0440. அடுத்ததாக எங்கள் ஆசிரியர்களிடம் படித்து, அதே துறையில் பணிபுரிந்த சேவியர் சார்... மேலும் மற்ற துறை ஆசிரியர்கள் என எல்லாருமே எங்களை ஏதோ ஒரு விதத்தில் மெருகேற்றியவர்கள்தான்.
இவர்களை எல்லாம் கடந்து 'என் பிள்ளை'யென கல்லூரி விழாவில் சொல்லி, என் திருமணத்திலும் 'என் பிள்ளை' இவன் எனச் சொல்லி, இன்று வரை தன் மகனாகப் பார்க்கும் பழனி ஐயா... இவரைப் பற்றி சில பத்திகளில் சொல்லிவிட முடியாது... படிக்கும் காலத்தில் வருடாவருடம் புதிது புதிதாய் மாணவ, மாணவிகள் வரும் வேடந்தாங்கல் அவர்கள் குடியிருந்த 'தேவிபவனம்'. அந்த வேடந்தாங்கலில் உறவாய் நிலைத்து நின்ற பலரில் நானும் ஒருவன்... ஏனோ என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்... அப்போதிருந்து இப்போது வரை அதே நேசம்... எனக்கு மருத்துவம் பார்க்க வாராவாரம் காரைக்குடிக்கு கூட்டிப் போனவர்... ஆசிரியர்களே அப்பாக்களாக மாறி எனக்காக அலைந்ததெல்லாம் மறக்க முடியாது... மறந்தால் மனுசனுமில்லை.
ஐயா வீடு இன்று வரை நம்ம வீடுதான்... தேவி பவனத்தில் நாங்க போட்ட ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமில்லை... அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, ஐயா சைவம் என்பதால் மட்டனோ சிக்கனோ செய்யாத வீட்டில் எங்களுக்காகத்தான் முதன் முதலில் மட்டன், சிக்கன் குழம்பு வைத்தார்கள் அம்மா... எல்லாருக்கும் காபியோ டீயோ... எனக்கு மட்டும் தம்பி காபி டீ குடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாராம் ஐயா சொன்னாங்க எனத் தனியாக பால் வரும்... இப்பவும் அதே. ஐயாவின் உறவால் அண்ணனும் தங்கையும் கிடைத்தார்கள்... அவர்களின் அன்பும் இன்று வரை தொடர்கிறது.
இந்த முறை ஊருக்குப் போனபோது எதிர்சேவை பற்றிப் பேசியதை விட 'வேரும் விழுதுகளும்' வாசித்ததை, அது கொடுத்த தாக்கத்தைப் பற்றித்தான் அதிகம் பேசினார். அங்கு வந்திருந்த அவரின் நண்பர்களிடம் 'குமாருக்கு நல்லா எழுதவரும்... எழுத்தில் சாதித்திருக்க வேண்டியவர்... குடும்பச் சூழல்... வாழ்க்கைப் போராட்டம்... அவரை எழுத விடாமல் பண்ணிருச்சு... குமாரோட எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்' எனச் சொல்லி தோளோடு அணைத்துக் கொண்டார். இதைவிட வேறென்ன சாதிக்க வேண்டும்... கல்லூரி முடித்து கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் என் மீதான அன்பு எப்போதும் போலிருப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் பேரானந்தமும் வேறு எதில் கிடைத்து விடப் போகிறது..? என் மகனுடன் தாத்தாவாய் வம்பிழுத்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்ததில் கிடைத்த சந்தோஷம் வேறெதில் கிடைத்து விடும்..? எப்பவும் போல் அதே அன்பு... அதே நேசம்... அது மட்டுமே அவர்களின் காலடி நோக்கி என்னை நகர்த்திச் செல்கிறது. என்னை எழுத்தாளனாக்கி சந்தோசப்பட்ட அந்த மனிதர்தான் என்னை இதுவரை பழசை மறக்காத மனிதனாகவும் வாழ வைத்திருக்கிறார்.
ஓரு பேராசிரியர்... மகனுக்கு நல்வழிகாட்டும் மனிதர் என்ற எண்ணத்தில் எங்கப்பா (ஐயாவைவிட மூத்தவர்) சைக்கிளில் இருந்து இறங்கி தோளிலிருக்கும் துண்டை மரியாதை நிமித்தம் எடுத்து வணக்கம் சொல்வதை அன்று முதல் இப்போது வரை கடைபிடிக்கிறார். 'அண்ணனுக்கு என்னை விட வயசு அதிகம்... குமார்தானே என் மாணவன்... ஆனா அவரு இறங்கி... துண்டெடுத்து... வணக்கம் சொல்லும் போது எனக்கு என்னமோ போலிருக்கும்... ' என இந்த முறைகூட என் முன்னே தன் நண்பர்களிடம் சொன்னார். இந்தக் குணம் எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை... அது எங்க ஐயா வழி எங்களுக்குள்ளும் நிறைந்தே இருக்கிறது... எப்போதும் அப்படியே இருக்கட்டும்.
எங்க குடும்பத்தில் சித்தப்பாக்கள் (அப்பாவின் தம்பியும் சின்னம்மாவின் கணவரும்) ஆசிரியர்களே... நானும் கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கிறேன்... இப்பவும் ஊரில் பலருக்கு வாத்தியார்தான்...
என்னைச் செதுக்கிய, செதுக்கிக் கொண்டிருக்கிற ஆசிரியர்களுக்கும்... ஆசிரியர்களாக இருக்கும் என் நண்பர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் குமார்... பாராட்டுகள்... வாழ்த்துகள்...
குரு போல இருந்தவர்களை மறக்க முடியாது... பலரை நினைக்க வைத்து விட்டீர்கள்...
இந்நன்னாளில் ஆசிரியர்களைப் போற்றும் பதிவு அருமை
சரியான நாளில் சரியான பகிர்வு.
உங்களுக்கும் உங்கள் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கருத்துரையிடுக