நேரில் சந்தித்ததில்லை... போனில் பேசிக் கொண்டதில்லை... ஆனாலும் என் பதிவுகளில் கருத்துச் சொல்வார்... அவரின் இழப்பு வலையுலகுக்கு பேரிழப்பு... புலவர் சா. இராமானுசம் ஐயா😭 அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கொரோனாவினால் வீட்டிலிருந்து வேலை பார்க்க ஆரம்பித்து நாலு மாதங்களாகிவிட்டது. வீட்டிலிருந்து வேலை என்பது முதுகு வலியைக் கொடுத்தாலும் பல விதத்தில் நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. வீட்டில் இருந்து பார்ப்பதில் வேலைப்பளூ அதிகமெனிலும் கொஞ்சம் ஆசுவாசமாய் ஓய்வெடுத்துக் கொள்ள முடிகிறது... மதியம் சூடாய் சமைத்துச் சாப்பிட முடிகிறது. இது போக நல்ல கதைகளையும், ஒரு சில நல்ல உரையாடல்களையும் வாசிக்கவும் கேட்கவும் முடிகிறது.
சில நாட்கள் முன் எதார்த்தமாக திரு. ஜம்புலிங்க ஐயா பகிர்ந்த ஜூம் லைவ்விற்குள் போனால் பாரதிதாசன் யுனிவர்ச்சிட்டியின் பேராசிரியை மணிமேகலை அவர்கள் டாக்டர் பட்ட ஆய்வு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆய்வு செய்ய வரும் மாணவ, மாணவிகளிடம் பணம் பறிப்பது, நாங்களே உங்கள் ஆய்வைச் செய்து தருகிறோம் இவ்வளவு பணம் கொடுங்கள் என ஏஜென்சி கம்பெனிகள் முன் வருவது, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் என நிறையப் பேசினார்... அதுவும் நிறைவாக. சிறப்பானதொரு நிகழ்வு... உண்மையில் அவ்வுரை கேட்டதில் பேரின்பமும் பெருமகிழ்வும்.
அந்த நிகழ்வில் பெரம்பலூர் பக்கம் ஒரு கிராமத்தில்.. அகரம் என்று சொன்ன ஞாபகம்... பெண்கள் வயதுக்கு வந்தாலும்... மாதவிடாய் நேரத்திலும் ஊருக்கு வெளியே கட்டப்பட்டிருக்கும் குடிசையில்தான் தங்க வேண்டும் என்பது இப்போதும் நடைமுறை என்றார்... இந்தக் காலத்திலும் இப்படியொரு சட்டதிட்டங்களா என ஆச்சர்யமாக இருந்தாலும் அதிர்ச்சியே மனம் நிறைத்தது. அதுவும் இன்றைய இளைஞர்களும் பெண்களும் அதை விரும்பவில்லை என்றாலும் ஊர்க் கட்டுப்பாடு என்பதில் பெருசுகள் தளர்வை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் சொன்னார். மேலும் அந்த ஊர் பெண்கள் திருமணம் ஆகிப் போகும் போது மகிழ்வோடு போவார்கள் என்றும் அந்த ஊருக்குத் திருமணம் செய்து வரும் பெண்கள் வருத்தத்துடன் வருவார்கள் என்றும் அதற்குக் காரணம் தனிமைப்படும் குடிலே என்றும் சொன்னார்.
இதேபோல் கிருத்திகா தரன் நடத்தும் அருகாமை ஆளுமைகள்... தொடர்ந்து எண்பது நாட்களுக்கு மேல் நகர்த்திச் செல்லுதல் என்பது பெரிய விஷயம்.. தினம் தினம் ஒரு ஆளுமை... அந்த நிகழ்வை அவர் எடுத்துச் செல்லும் விதம் சிறப்பானது... நேர்த்தியானது... காலையில் கண்டிப்பாக பார்க்கும் நிகழ்ச்சியில் அதுவும் ஒன்றாய் மாறிப் போயிருக்கிறது.
கொரோனா நிறைய சிறுகதைகளை வாசிக்கக் கொடுக்கிறது... அதுவும் யாவரும், வாசகசாலை, கனலி, கும்க்கி, தமிழினி என இணைய இதழ்கள் போட்டி போட்டுக் கொண்டு கதைகளைப் பகிர்கின்றன. யாவரும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதைகளேயே தேர்ந்தெடுப்பதாய் தெரிகிறது... அல்லது அவர்களின் தேர்வு முறை அப்படியானதாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணனின் தழும்பு போன்ற கதைகளும் இடையிடையே பகிரப்படுகின்றன... மற்ற தளங்கள் இதிலிருந்து மாறுபட்டு கலந்து கட்டி கதைகளைப் பகிர்கின்றன.
நண்பர் ஸ்ரீனிவாசனின் 'தழும்பு', வித்தியாசமான களத்தில் கருப்பட்டிச் சுவையுடன் நம் முன்னே கடை விரிக்கிறது. கோவில் விழாக் காட்சிகள்... விழாக் கடைகள்... கூட்டமென நம்மை திருவிழாக் காண அழைத்துச் செல்கிறது. அசுரத்தனமான எழுத்து அது... ஆச்சர்யப்பட வைத்தது.
அகர முதல்வனின் 'பிலாக்கணம் பூக்கும் தாழி', யாவருமில்... வாசித்து வியந்து போன கதைகளில் ஒன்று... வித்தியாசமான களம்... வித்தியாசமான நடை..
இதேபோல் கும்க்கியில் எழுத்தாளர் லதா சரவணன் எழுதிய 'தீபா...வலி', யைச் சொல்லலாம்... காமம்... பாலியல் தொந்தரவுகள் பற்றி பெண்கள் பேசினால் ஒரு விதப் பார்வையை அவர்கள் மீது செலுத்தி, இதெல்லாம் பேசலாமா என்று அடித்துப் போடும் உலகில் தைரியமாய் அக்களத்தைச் சமீபத்தில் பல பெண்கள் கையில் எடுத்திருப்பது ஆரோக்கியமானது. அவ்வகையில் தீபா...வலி சிறப்பான கதை.
எழுத்தாளர் கரன் கார்க்கி வாசகசாலையில் எழுதியிருக்கும் 'அலங்காரக் குளத்தில் இருபத்தி மூன்று அல்லிகள்', என்னும் சிறுகதை... கொஞ்சம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய மொழிநடை என்றாலும்... குறுநாவலைப் போல் நீண்டாலும் வாசிக்க வேண்டிய கதை.
இதே வாசகசாலையில் எழுத்தாளர் ஜா.தீபா எழுதியிருக்கும் 'வாடைக் காற்று', வாசிக்க வாசிக்க தென்றல் காற்றாய் நகரும் எழுத்து. தீபாவின் எழுத்து எனக்கு எப்பவும் பிடித்தமான ஒன்று... ஜோடனைகளைச் சுமக்காத சாமானியனின் எழுத்தாய் நகரும் கதைக்களங்களை அவர் தேடிப்பிடித்து எழுதி வருவது சிறப்பு.
இதேபோல் விஜய் வேல்துரை எழுதியிருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை', இப்படித்தான் முடிவு இருக்கும் என்பது கதையின் ஆரம்பத்திலேயே உங்களுக்குத் தெரியவந்தால் கூட ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி கண்டிப்பாக கிடைக்கும்.
இக்கதைகள் எல்லாமே ஒரு விதத்தில் வலி நிறைந்த வாழ்க்கையை நமக்குள் செலுத்தும் கதைகள்தான்... அப்ப ரொம்ப ஜாலியா ஒரு கதை வாசிக்கலாம்ன்னு நெனச்சா... கும்க்கியில் பால கணேஷ் அண்ணன் எழுதிய 'நாகேஷின் ஏசியும் எம் என் நம்பியாரும்', வாசிங்க... ரசிப்பீங்க.
இன்னும் நிறையக் கதைகளைச் சொல்லலாம்... இதை வாசிங்க பின்னர் பார்க்கலாம் மற்ற கதைகளை.
ரொம்ப நாளைக்கு அப்புறம் இரு சிறுகதை எழுதினேன்... யாவரும் போட்டிக்கென ஒன்று... மற்றொன்று எழுத வேண்டுமென நீண்ட நாட்களாய் நினைத்திருந்த 'கரகாட்டக்காரி'. இரண்டுமே மனசுக்குப் பிடித்திருந்தது.
வேறெதுவும் எழுதவில்லை... உலகமே கோர்னாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் நான் புவனாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதென்னமோ தெரியல... என்னோட கதை நாயகியின் பெயர் புவனா என்றமைவது எதார்த்தமாய் நிகழ்ந்து விடுகிறது. ஒரு நாவல் எழுதலாமென ஆரம்பித்து, மெல்ல நகர்ந்தவனை புவனா இழுத்துச் செல்கிறாள்... 220 பக்கங்கள் எழுதுவதென்பதெல்லாம் என்னால் இப்போது சாத்தியமில்லை என்றாலும் எழுதியிருக்கிறேன்... அரைக்கிணறுக்கு மேல் நாவலில் நகர்ந்துவிட்டேன்... இன்னும் கொஞ்சம்தான்... இந்நாவல் எழுத ஆரம்பித்ததில் ஒரே ஒரு மகிழ்ச்சி, தினமும் நாலு பக்கமாவது எழுதிவிடுகிறேன்... புவனா அழகியாய் இருப்பாள் என நம்புவோமாக.
-'பரிவை' சே,குமார்.
4 எண்ணங்கள்:
புலவர் சா. இராமானுசம் ஐயா அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியது, அவர் வீட்டில் இரு நாட்கள் தங்கியது என பல எண்ணங்கள்... மறக்கவே முடியாத பல நிகழ்வுகள்... ஆழ்ந்த இரங்கல்...
திரு. முத்துநிலவன் ஐயா, திரு. ஜம்புலிங்கம் ஐயா, நண்பர் நீச்சல்காரன் என பலரும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பல அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்... காணொளியாகவும் மாற்றி இணைப்பை தந்து விடுவதால், அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது...
நீங்களும் பதிவில் இணைப்புகளை கொடுத்துள்ளீர்கள்... தனியே bookmark செய்து கொண்டேன்...
புலவர் ஐயாவின் இழப்பு - வருத்தம் தந்தது. பதிவர் சந்திப்பில் ஒரு முறையும், அவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். நல்ல மனிதர்.
கதைகள், காணொளி நிகழ்வுகள் என அனைத்தும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
புலவர் ஐயாவை நீண்ட நாட்களாகக் காணோமே என்று அவ்வப்போது நினைத்துக் கொண்டதுண்டு. அவர் ஒருமுறை பதிவில் உடல்நலமில்லை என்று போட்டதாகவும் நினைவு. அதுவும் நீண்ட நாட்களுக்கு முன்னால். அவர் மறைவு வருத்தத்துக்குரிய செய்தி.
நல்லதொரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்.
கருத்துரையிடுக